பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

63. இந்த அரசமைப்பின் தொடக்கநிலையின்போது, காசி இந்துப் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் என வழங்கப்பட்ட நிறுவனங்கள்; 371உ உறுப்பின்படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகம்; தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் பிற நிறுவனம் எதுவும்.
64. இந்திய அரசாங்கத்தினால் முழுவதுமாகவோ பகுதியாகவோ நிதி உதவியளிக்கப்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் அறிவியல் அல்லது தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்.

65. (அ) காவல்துறை அலுவலர்களுக்கான பயிற்சி உள்ளடங்கலாக, விழைதொழிலில், உறுதொழிலில் அல்லது தொழில் நுட்பத்தில் பயிற்சி; அல்லது
(ஆ) சிறப்புக் கல்விப்பயில்வுகளின் அல்லது ஆராய்ச்சியின் வளர்ப்பாடு; அல்லது
(இ) குற்றத்தைப் புலனாய்வு செய்வதில் அல்லது துப்பறிவதில் அறிவியல் அல்லது தொழில்நுட்ப உதவி இவற்றிற்கான ஒன்றியத்து முகமைகளும் நிறுவனங்களும்.

66. உயர் கல்விக்கான அல்லது ஆராய்ச்சிக்கான நிறுவனங்களிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தரநிலைகளை ஒருங்கிணைத்தலும் நிருணயித்தலும்.
67. தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையென நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ விளம்பப்படும் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த நினைவுச் சின்னங்களும் பதிவணங்களும் மற்றும் தொல்பொருளாய்விடங்களும் தொல்பொருள் சிதைவுகளும்.
68. இந்திய நிலஅளவைத் துறை மற்றும் புவியமைப்பியல், தாவர இயல், விலங்கியல், மானிடவியல் ஆகியவற்றிற்கான இந்திய அளவைத் துறைகள்; வானிலை ஆராய்ச்சி அமைவனங்கள்.
69. மக்கள் கணக்கெடுப்பு.
70. ஒன்றியத்து அரசுப் பணியங்கள்; அனைத்திந்தியப் பணியங்கள்; ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
71. ஒன்றியத்து ஓய்வூதியங்கள், அதாவது, இந்திய அரசாங்கத்தினாலோ இந்தியத் திரள்நிதியத்திலிருந்தோ வழங்கப்படும் ஓய்வூதியங்கள்.
72. நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும், குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் பதவிகளுக்குமான தேர்தல்கள்; தேர்தல் ஆணையம்.
73. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும்.
74. நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிற்கும், ஒவ்வோர் அவையின் உறுப்பினர்களுக்கும், குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்களும் மதிப்புரிமைகளும் காப்புரிமைகளும்; நாடாளுமன்றக் குழுக்களின் முன்பு அல்லது நாடாளுமன்றத்தால் அமர்த்தப்பெற்ற ஆணையங்களின் முன்பு சான்றளிப்பதற்காகவோ ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவோ நபர்களை வருமாறு செய்வித்தல்.
75. குடியரசுத்தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் பதவியூதியங்கள், படித்தொகைகள், மதிப்புரிமைகள் மற்றும் வாராமை விடுப்புப் பொறுத்த உரிமைகள்; ஒன்றியத்து அமைச்சர்களின் வரையூதியங்கள் மற்றும் படித்தொகைகள்; கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் வரையூதியங்கள், படித்தொகைகள், வாராமை விடுப்புப் பொறுத்த உரிமைகள் மற்றும் பிற பணி வரைக்கட்டுகள்.
76. ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகளின் தணிக்கை.
77. உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, செயலமைப்பு, அதிகாரவரம்பு, மற்றும் (அந்நீதிமன்ற அவமதிப்பு உள்ளடங்கலான) அதிகாரங்கள், அங்கு பெறப்படும் கட்டணங்கள்; உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞராகத் தொழிலாற்றுவதற்கு உரிமைகொண்டவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/267&oldid=1466539" இலிருந்து மீள்விக்கப்பட்டது