அணியும் மணியும்/அணியும் மணியும்

4. அணியும் மணியும்

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலமைமிக்கு விளங்கும் கவிகள் பல இயற்றிய சான்றோர்கள் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தையும், மணியெனத் திகழும் மணிமேகலையையும், அள்ளக் குறையா அழகுமிகு சிந்தாமணியையும், வான்புகழ் அளிக்கும் வள்ளுவத்தையும், கற்பனைமிகு இராமகாதையையும் பிறவற்றையும் ஈந்து இலக்கியவளத்தை மிகுதிப்படுத்தி அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் நளவெண்பா இயற்றி, மங்காப் புகழ் பெற்ற கவிகளுள் புகழேந்தியும் ஒருவர் எனில், அது மிகையாகாது.

புகழேந்தியின் கவிதை நலனையும் பாவினிமையையும் அணியழகையும் கற்பனைத்திறனையும் உணர்வார் அவர் உண்மையில் புகழ் ஏந்தற்குரியர் என ஒருப்பட்டு அந்த இலக்கியத்தின் பெருமையைப் பாராட்டுவர். வடமொழி வான்மீகத்தைத் தென்மொழியில் தெள்ளு தீஞ்சுவைக் கவிகளாக அணிபட இயற்றி அழியாப் புகழ் பெற்ற கம்பரைப் போலவே வடமொழிப் பாரதக் கதையின் கிளைக்கதைகளுள் ஒன்றாகிய நளசரிதத்தைத் தமிழில் நளவெண்பா என்ற பெயரால் ஒரு காவியமாக்கி, அதில் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளை, இன்பமும் துன்பமும் மிடைந்துவர, உவகையும் அவலமும் தங்கி அமையச் செப்பலோசை செவிக்கினிமை செய்ய வெண்பா என்னும் ஒண்பாவால் சிறப்பித்து அமைத்த பெருமை புகழேந்தியைச் சாரும்.

மற்றைய காவியங்களைப் போலவே, இந்நூலும், காண்டங்கள் என்னும் பிரிவுகளைப் பெறுவதோடு, இன்பமும் துன்பமும் மாறிமாறி வர, இன்ப முடிவைக் கொள்ளும் இன்பியல் காவியம்போல, இன்பத்தில் தொடங்கி இடையறாத் துன்பத்தில் தொடர்ந்து இறுதியில் இன்பத்தில் முடியும் கதையமைப்பைப் பெற்று, இன்பியல் காவியமாக அமைந்திருக்கிறது. பாரதக் கதையின் கிளைக்கதையாக இஃது அமைந்திருப்பினும், கதையமைப்பில் அம் முதற்கதையோடு பெரும்பாலும் ஒத்து விளங்குகிறது. சூதாடி நாடும் பொருளும் இழந்து காடு நோக்கிச் சென்ற பாண்டவர்களைப் போலவே, நாடும் பொருளும் சூதில் இழந்து காடு நோக்கிச் செல்லும் காதலனின் வாழ்வைச் சித்திரிக்கிறது. காரிருளில் காதலியைக் கானகத்தே கைவிட்ட காதலினின் துன்பவாழ்வை நம் கண்முன் அப்படியே நிறுத்தும் ஆற்றலுடையது இஃது எனலாம்.

சொல்லும் திறனறிந்து கல்லும் உருகக் கவிசெய்யும் கவிஞர்கள் கற்பனையில் பறந்து ஒப்பனை மிக்க உவமைகளையும் உருவகங்களையும் எடுத்தாளும்போது, அக்கவிகள் பொன்னினும் ஒளிர்ந்து, மலரினும் மணந்து பண்ணினும் இசைந்து, தேனினும் இனித்து, வானினும் உயர்ந்து வண்புகழ் பெறுகின்றன. புகழேந்தி எதைச்சொன்னாலும் அணிநயம் படவும் கற்பனைத்திறன் மிகவும் சொல்லும் திறனை அவர் ஒண்பாவில் காண்கின்றோம். நாட்டின் நலனைச் சொன்னாலும், அன்னத்தின் மென்னடையைக் கிளர்ந்ததாலும், காதலிருவர் சந்திப்பைச் சித்திரித்தாலும், அந்திநேரத்தை அழகுபடக் கூறினாலும், மெல்லியலாளின் ஒல்கிய நடையைச் சொல்லிச் சிறப்பித்தாலும், மங்கையொருத்தியின் செங்கையைச் சுட்டினாலும், பிரிந்த உள்ளத்தை விளங்கக் காட்டினாலும், பிரிந்தவரைச் சந்தித்த மகிழ்ச்சியைத் தெரிவித்தாலும், எங்கும் அணியழகும் கற்பனைத் திறனும்படச் சொல்லுந் திறனை அவர்பால் கண்கின்றோம்.



காவியத்திற்குக் கதை உயிரென்றால், கவிதை அதை இயக்கும் உடல் எனலாம். அவ்வுடலை அழகுபடுத்தும் அணி கவிஞன் எடுத்தாளும் உவமை உருவகம் போன்ற அணிகள் எனக் கூறலாம். அவ்வணியை ஒளிரச்செய்யும் மணிகள் புலவனின் கற்பனைத்திறன் எனலாம். மகளிர் அணியும் அணி மணிகளால் சிறப்புறுவதைப் போலக் கவிஞர் ஆளும் அணிகள் அவர்தம் கற்பனைத் திறத்தால் பொலிவு பெறுகின்றன. சொல்லுவதை வெறும் அணியழகுபட மட்டும் சொல்லுவதில் கவிஞனுக்குச் சிறப்பு ஏற்படுவதில்லை. அதனோடு, புலவன் தன் கற்பனையையமைத்துப் புதுமையாகவும் சுவையாகவும் கூறுவதில்தான் பாடல்கள் அழகும் சுவையும் பெறுகின்றன. அத்தகைய பண்பை நளவெண்பாவில் பல இடங்களில் நாம் காணலாம்.

நாட்டின் நலத்தைப் பாட்டில் காட்டும்பொழுது அவர்தம் கற்பனையில் ஒறு புதுமை காணப்படுகிறது. கம்பர் அயோத்தி நகரத்தில் வறுமையின்மையால் வண்மை இல்லை என்றும், செறுநர் இன்மையால் திண்மை இல்லை என்றும் சொல்கிறார். அவ்வாறு சொல்வதில் ஒரு புதுமை காணப்படுகிறது. அதைப் போலவே புகழேந்தியும் நாட்டுச் சிறப்டைக் கூறும் பொழுது ஒரு புதுமையைப் புகுத்தி அழகுபடக் கூறுகின்றார்.

அந்நாட்டில் எந்த வகையான கொடுமையும் ஏற்படுவது இல்லையென்றும், அதனால் மக்கள் எவ்வகையாலும் சோர்வு கொள்வதில்லை என்றும், அவர்கள் வாய்திறந்து அரற்றக் காரணமில்லையென்றும், நீதியில் வளைவு இல்லையென்றும் சொல்ல வந்தவர். அவ்வாறு கூறாமல் வேறு வகையாகக் கூறுவது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது. "வளைவு என்பது வில்லிலேதான் உண்டு, சோர்வு என்பது கூந்தலிலேதான் உண்டு; அரற்றுதல் என்பது சிலம்பிலேதான் உண்டு' என்று கூறி, அவர் கற்பனையாற்றலைக் காட்டி அவற்றை அழகுபடக் கூறுவதைக் காண்கின்றோம். 

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட்டு அரற்றுவன
–15

என்று அவர் கூறுகின்றார்.

அன்னத்தின் மென்னடையையும் அதன் வண்ணத்தின் அழகையும் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார். அன்னத்தின் வெண்ணிறமும், அதன் தாளின் செந்நிறமும், சோலையின் பசுமை நிறமும் அவர் சொல்வன்மையால் கிழியில் தீட்டிய ஓவியமாக உருப்பெறுகின்றன. அன்னத்தின் வெண்ணிறத்தால் சோலையின் பசுமை நிறம் மாறிவிட்டது என்பதும், அதன் தாளின் செந்நிறத்தால் பொய்கைத்தலம் சிவந்துவிட்டது என்பதும் கற்பனை நயமாக அமைந்துள்ளன.

நீள்நிறத்தால் சோலை நிறம்பெயர நீடியதன்
தாள் நிறத்தால் பொய்கைத் தலம் சிவப்ப
–30

எனக்காட்டி, அன்னப்புள் அங்குத் தோன்றியதாக அவர் கூறுகின்றார்.

காதலிருவரின் சந்திப்பைக் கவின்படக் கூறிய உயர்வு கம்பரைச் சாரும் என்பது, இராமனும் சீதையும் முதன் முதலில் சந்தித்த சந்திப்பையும் அவர்கள் நோக்கிய நோக்கையும் புலப்படுத்தும் இடத்தில் விளங்குகிறது.

பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்

என்று. இதயம் கவரும் தொடரால் கூறிக் கற்போரின் உள்ளத்தைக் கவர்ந்த கம்பரின் கற்பனை, இராமாயணத்தில் அழியா இடம் பெற்றுவிட்டது. புகழேந்தியின் கற்பனையில் ஒரு புதுமை காணப்படுகிறது. கருங்குவளையில் செந்தாமரையும், செந்தாமரையில் கருங்குவளையும் பூத்த வியத்தகு காட்சி அவர்கள் காட்சியில் நிகழ்ந்தது எனக் கூறித் தம் கற்பனையின் மாட்சியைப் புலப்படுத்துகின்றார்

கருங்குவளை போன்ற அவள் கரிய விழிகளைச் செந்தாமரை போன்ற செவ்வரி பரந்த அவன் விழிகள் சந்தித்தன என்று கூறுகின்றார். காதலர்க்கே உரிய பொது நோக்காக அவர்கள் எதிர் எதிராக நோக்கிய அந் நோக்குகளைக் கூறும்போழுது, கண்களுக்கு அமைக்கும் உவமைகளில் அவர் இக் கற்பனையை ஏற்றிக் கூறுகின்றார்.

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது - 88

என்பது அவர் அமைத்த சொற் சித்திரமாகும்.

அந்திப் பொழுது வந்து சேர்ந்ததை வெற்றி விருதுகளோடு உலவும் அரசர்க்குரிய செய்திகளாகக் கூறுவதில் அவர் கற்பனை சிறந்து விளங்குகிறது ‘மல்லிகையாகிய வெண்சங்கை வண்டு வாய்வைத்து ஊதிமுழக்கஞ் செய்ய, மன்மதன் மலரம்புகளைத் தன் கரும்பு வில்லிலே தொடுத்து எங்கும் பரப்பி மெய்க்காவலாளனாக அமைய, முல்லையாகிய மென்மாலையை அணிந்துகொண்டு, மாலையாகிய் அந்திப் பொழுது மெல்ல நடந்தது’ என்று அந்திநேரம் வந்து சேரும் நிலையை அழகுபடக் கூறுகின்றார். மல்லிகையில் வண்டு மொய்ப்பதும், முகைகள் அவிழ்ந்து மலர்களாக ஆவதும், முல்லை மலர்வதும் ஆகிய காட்சிகளைக் கொண்டு மாலைப்பொழுது மறையும் அந்திப் பொழுதின் அழகைத் திறம்படத் தீட்டுவதில் அவர் கற்பனை சிறந்துள்ளது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு

வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்

மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது - 156

என்று அந்திப் பொழுதுக்கு அரசரின் வெற்றிச் செயல் கூறப்பட்டு, இக் காட்சி கற்பனையழகோடு விளங்குகிறது.

வீமன் மடந்தையாகிய தமயந்தி, கையில் மாலை ஏந்தி மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் அன்னமென மென்னடை நடந்து சென்றாள். மண்டபத்தில் வீற்றிருந்த மாபெரு மன்னர்கள், விழித்த கண் மூடாமல் வேல் விழியாளை நோக்கி இருந்தனர். இதுவே அங்கு நடந்த நிகழ்ச்சியாகும். இச் செய்தியினைச் சொல்வதில் புலவரின் கற்பனைச் சிறப்பு அமைந்திருக்கும் அழகு அச் செய்தியில் சுவையை ஊட்டிக் கவிதையைக் கவினுறச் செய்கிறது.

அன்னத்தைப் போல அணிநடை நடந்து அரசர் வீற்றிருக்கும் அவையில் தமயந்தி அமைதியாகச் செல்கிறாள். அப்பொழுது அவள் அழகில் தம் அறிவு மயங்கி அவள் பொன்னிற மேனியின் பொலிவில் தம் மனத்தைப் பறிகொடுத்த அவர்கள், விழித்த கண்களை மூடவே இல்லை என்கிறார். அதனால் அந்த மண்டபம் தாமரையே பூத்துக் கிடந்தது போலக் காட்சி அளித்தது என்கிறார். அத் தாமரை பூத்த தனி மண்டபத்தில் வெள்ளைநிறச் சிறையன்னம் செய்யதாளால் அசைந்து நடந்து செங்கமலப் பொய்கை நோக்கிச் செல்வதைப் போல வெள்ளிய ஆடையும், ஒள்ளிய மேனியும், சிவந்த வல்லி தீட்டிய தாளும் உடைய தமயந்தி சென்றாள் என்று கூறுகிறார்.

விழித்த கண்களைத் தாமரைக்கு உவமைப்படுத்துவதால், அம் மண்டபம் தாமரைப் பொய்கை போல இருந்தது என்றும், அங்கு அவள் நடந்து சென்றது அன்னம் செல்வதுபோல இருந்தது என்றும் உணர்த்தி அவர் தம் கற்பனையாற்றலை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.

மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்கள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று - 138

அன்னப் பறவை தனக்கேயுரிய தாமரைப் பொய்கையில் அஞ்சாமல் மென்னடை நடந்து செல்வது போல நடந்து சென்ற அவள் நடையழகு அரசர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது என்பதை ‘மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபம்’ என்ற தொடரில் அமைத்துக் காட்டியிருப்பது போற்றற்குரியது.

மங்கையொருத்தியின் செங்கையை மலர் ஒன்றுக்கு உவமைப்படுத்துவதோடு அமையாமல், மலரென மருளும் வண்டு அவளைச் சுற்றுவதாக அமைக்கும் காட்சியில் கற்பனைச் சிறப்பும் நகைச்சுவையும் அமைந்திருக்கின்றன. நளன் திருமணமான பிறகு தமயந்தியோடு நகரில் உள்ள சோலைவளம் காண மாலைவேளை செல்கிறான். அங்கே அவன் பல அழகிய காட்சிகளை அவளுக்குக் காட்டிச் செல்கிறான். அக் காட்சிகளில் ஒன்றாக இஃது அமைகிறது. மங்கையொருத்தி அங்கு மலர் கொய்து கொண்டிருக்கிறாள். அவள் ஒளிபெற்ற முகத்தை வண்டு ஒன்று கண்டு, அவ்வழகு பொலியும் முகத்தை வண்ணமிகு தாமரையெனக் கருதி முகத்தில் மொய்க்கத் தொடங்குகிறது. அவள் அவ்வண்டைத் தன் முகத்தில் அணுகாவண்ணம் தன் கை விரலால் விலக்குகிறாள். அக் கைவிரல்களைக் காந்தள் மலரெனக் கருதி அவளை விடாமல் மீண்டும் அவள் கரங்களைச் சுற்றி வட்டமிடுகின்றது. அவள் அஞ்சி நடுங்கி வியர்க்கிறாள். இஃது அவர் அமைக்கும் கற்பனைச் சித்திரம்.

காந்தள் போன்றது கைவிரல் என்றும், தாமரை போன்றது முகம் என்றும் கூறுவதோடமையாமல், அவற்றை மலர்கள் என வண்டுகள் மருள்வதாகக் கூறுவதில் அவர் கற்பனைச் சிறப்பு அமைந்திருக்கிறது.

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கய மென்றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து - 198

வண்டு தொடர்ந்து தரும் தொல்லையைக் கண்டு அவள் அஞ்சி வியர்த்துவிட்டாள் என்று கூறுவது நகைச்சுவையைத் தருகிறது.

தமயந்தியைப் பிரிந்து தனி வழி செல்லும் நளன் வழியில் தீயினியிடத்து அகப்பட்ட கார்க்கோடன் என்ற பாம்பை அதனினின்று காப்பாற்றிவிடுகிறான். அக் கார்க்கோடன் கொடுத்த சாபத்தால் நீலநிறம் பெற்று உருத்திரிந்து அவளைப் பிரிந்துவிட்ட பிரிவால் மனம் திரிந்து குழம்பிச் செல்கிறான். அவளைப் பிரிந்த ஆற்றாமையால் மனங்கலங்கி இன்னது செய்வது என்று தெரியாமல் திகைக்கிறான். வழியில் அவளைத் தனியே விட்ட தவற்றிற்காக மனம் வருந்துகிறான்.

மரக்கிளையொன்றில் நாரையொன்று உட்கார்ந்து கொண்டிருக்கிறது. பேசத்தெரியாத அதனிடம் பேசித் தன் துன்பத்தைக் குறைக்க முயல்கிறான். “திருநாடன் பொன்னை உறக்கத்தே நீத்து வந்துவிட்ட எனக்கு ஒன்றும் கூறாதிருக்கின்றாயே” என்று மனம் நொந்து பதில் சொல்லத் தெரியாத அப்பறவையிடம் பேசிக் கலங்குகிறான். ஆண் வண்டு ஒன்று புன்னைமரத்தில் அமர்ந்து அதன் பூவைக் கோதிக் கன்னிப்பெடை வண்டு உண்ணும்வரை காத்திருக்கும் அன்புச் செயலைக் கண்டு உள்ளம் அழிகிறான். காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்டுவந்த செயல் கொடுமை மிக்கது என உணர்கிறான். இவ்வாறு அவன் உள்ளத்தில் தோன்றும் குழப்பத்தையும் நெஞ்சில் வெடிக்கும் எரிமலை போன்ற பிரிவுத் துன்பத்தையும் சொல்லும் பொழுது, புலவரின் கற்பனை மிகவும் உயர்ந்துவிடுகிறது என்று கூறலாம். பேசாத நண்டோடும் கேளாத கடலோடும் அவனைப் பேச வைக்கின்றார்.

கடற்கரையோரமாக நளன் சென்று கொண்டிருக்கிறான். கரையோரத்தில் நண்டுகள் அவன் வருவதைக் கண்டு அஞ்சி ஓடித் தம் வளையில் ஒளிந்துகொள்கின்றன. அவற்றைப் பார்த்து, ‘நண்டே நீ ஏன் ஒளிகின்றாய்? காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவா ஓடி ஒளிகிறாய்? பசையற்ற நெஞ்சோடு பரிதவிக்க விட்டுச் சென்ற மாபாதகன் என்றெண்ணி என்னைப் பார்க்க வெறுக்கிறாயோ?” என்று கூறும் கற்பனை, இலக்கியத்தில் அழியா இடம் பெறுகிறது.

காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ-ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை? —354

“நண்டே என்னைக் கண்டு ஓடி ஒளிப்பது ஏன்?” என்று மிக உருக்கமாகக் கேட்கிறான். தன் செயலின் கொடுமையைக் “காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட” என்ற தொடரில் மெல்ல மெல்ல மிகுவித்துச் சொல்வதைக் காண்கிறோம்.

கரையில் நண்டோடு பேசுவதாகக் கூறும் கற்பனை அதனோடு அமையவில்லை. கடலை நோக்கித் திரும்பிப் பார்க்கிறான். கடலின் அலைகள் எழுந்து விழுந்து புரண்டு உருண்டு ஓவென ஒலித்து அலைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறான். தன் உடல் நீலநிறம் பெற்று இருப்பதைப் போலக் கடல் நீரிலும் நீலநிறம் இருப்பதைக் காண்கிறான். “நீயும் என்னைப் போலத் தீயவர்க்கு உதவிசெய்து நிறம் கெட்டாயோ?” என்று கேட்கிறான். நீயும் என்னைப்போல உன் காதலியை இரவில் தவிக்கவிட்டு வந்தாயோ? அதனால்தான் இன்னது செய்வது என்று தெரியாமல் போகிறாய்; வருகிறாய்; புரண்டு விழுந்து இரங்கி வருந்துகிறாய். நாவும் வாயும் குழற நடுங்குகிறாயோ” என்று கேட்கிறான்.

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கலியே! மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று —356

என்று, தனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் கடலின் அலைகளில் காணும் அழகு, புலவரின் கற்பனைச் சிறப்பைக் காட்டுகிறது. நாவாய் என்பதற்கு மரக்கலம் என்று மற்றொரு பொருளும் அமையச் சிலேடையணி சிறக்க அமைந்திருப்பது சொல் நயத்தை உண்டாக்குகிறது.

நளன் தமயந்தியோடு தன் நாடு திரும்பிச் சூதால் இழந்த உரிமையை மறு சூதாடி வென்று நாட்டாட்சியைப் பெற்ற நிலைமையில் மக்கள் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லும் பொழுது, தக்க உவமைகளை எடுத்தாள்வதும் அவற்றைக் கூறும் முறையும் சிறப்பாக அமைந்துள்ளன. “பார் பெற்று மாதோடு திரும்பிய நளனைக் கண்ட மக்களின் மகிழ்ச்சியைத் தக்க உவமையால் எப்படிக் கூறுவேன்?” என்று சொல்லும் சிறப்பு அழகாக அமைந்திருக்கிறது.

கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாள்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ — பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்? — 425

என்று கூறுகின்றார்.
புகழேந்தியின் புகழுக்கு அவர் எடுத்துக்கொண்ட கதை மட்டும் காரணமன்று. கம்பர் தம் கற்பனைத்திறத்தால் இராம-கதையைச் சிறப்பித்ததைப் போலப் புகழேந்தியும் வடமொழிக் கதையைத் தமிழில் இனிய வெண்பாவால் இன்னோசைபட இயற்றி அணியும் கற்பனையும் சிறக்கக் காவியத்தை அமைத்துள்ளார் என்பது அறியக் கிடக்கிறது.