ஔவையார் தனிப்பாடல்கள்/அழகு எது?

8. அழகு எது?

ரு சமயம்,சோழன் ஔவையாரிடம் உரையாடிக் கொண்டு இருந்தான். திடுமென அவனுக்கு ஓர் ஐயம் பிறந்தது. உலகில் அழகியவை எனக் கூறப்படுபவை யாவை? அதனை அறிந்து கொள்ள அவன் கருதினான். ஔவையாரிடம் வினவ, அவர் அழகின் உண்மையை விளக்குகின்றார்.

"ஓர் இளம்பெண் தன் நாயகனோடு கூடி வாழ்ந்து இன்புற்று மகிழ்கின்றாள். அவளுடைய கூட்டத்தினால் அவனும் நிறை வெய்துகின்றான். இறுதியில், அவள் களைத்துப் போய்ப் படுத்திருப்பாள். அப்பொழுது, இன்பக் கிளர்ச்சியிலே மலர்ந்த தளர்ச்சியும் அவள்பால் தோன்றும். அப்படித் தோன்றும் பெண்மையின் பொலிவான நிறைவான அழகு இருக்கிறதே, அதுதான் இல்வாழ்வார் போற்றும் சிறந்த அழகாகும்.

இறைவனை நாடிப் பணிந்து போற்றும் பக்தியை உடையவர், விரதங்கள் பலவற்றையும் தம்முடைய உள்ளத் தூய்மையினைக் கருதியே மேற்கொள்வார்கள். அவர்கள் அதனால் மெலிதலும் கூடும். அங்ஙனம், இளைத்துத் தோன்றுகின்ற மேனி, இறைபக்தி உடையவர் மனமுவந்து போற்றும் அழகாக விளங்கும்.

வறியவர்க்கு உதவுவது மிகச்சிறந்த பண்பாகும். உதவி உதவி ஒருவன் மிகவும் பொருள் குறைந்தவனாகவும் போயினால், அவனுடைய அந்தப் பொருள் குறைந்த நிலையும் சான்றோர்க்கு மிகமிக அழகியதாகவே தோன்றும். இஃதன்றிக் கஞ்சப் பிரபுவின் வளத்தை அவர்கள் அழகிது என்று ஒருபோதும் உரைப்பதில்லை.

வீரனுக்கு அழகு போர்க்களத்தில் தான் அடைந்த விழுப் புண்ணாக இருக்கும். கொடிய களத்தில் போர் இயற்றிப் பெற்ற வடு பெறற்கரிய பேறாகக் கருதி மதிக்கவும் படும்.வடுப்பட்ட உடல் என்னாது அதனை அழகியதாகக் கருதுவதே சான்றோர் இயல்பு.

பொது நன்மைக்காகப் போராடுகிறார்கள் சிலர். அவர்களின் போராட்டத்தில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், அவர்களுள் சிலர் களத்தில் உயிர் இழக்கின்றனர். அவர் நினைவாக அவர்களுடைய பீடும் பெயரும் பொறித்த நடுகற்கள் நிறுத்தப் பெறுகின்றன. தம் உயிரை தம்முடைய இன நன்மைக்கு ஈந்தவரின் நினைவாகிய அந் நடுகற்கள், அந்த இனத்தவர் உள்ளவரை, அவர்கட்கு மிகவும் அழகியதாகவே விளங்கும்.

இவ்வாறு அழகு அவரவர் பண்புச் செவ்வியாலேயே அமையும்."அழகெனப் பொதுப்பட்ட ஒன்றைக் கவர்ச்சி இனிமை கருதிமட்டும் கூறுதல் பொருந்தாது. இதனை அறிவாயாக" என்றனர் ஔவையார். அந்த வெண்பா இது.

சுரதந் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதந் தனில்இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்அபிரா மம்.

“நாயகனோடு கூடி இயற்றிய சுரத அநுபவத்தாலே களைத்திருக்கின்ற நாயகியும், நன்மைதரும் விரதங்களை மேற்கொண்டதனால் இளைத்த பக்தரின் மேனியும், எக்காலமும் வறியவருக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வம் இழந்து போன கொடையாளியும், கொடுமையான போரினிடத்தே பெற்ற வீரனின் வடுக்களும், பீடும் புகழும் குறித்துப் போரில் வீழ்ந்தோருக்கு நாட்டப்பெற்ற நடுகல்லும், சான்றோர் போற்றும் அழகான பொருள்களாகும்” என்பது பொருள்.

இதனால், ஒன்று அழகியதாகக் கொள்ளப்படுவது, அதனைக் கொள்பவரின் மனநிலையினை ஒட்டியும், செய்தவரின் சால்பினைக் கருதியும் அமைவதாகும் என்ற உண்மை விளங்கும்.