ஔவையார் தனிப்பாடல்கள்/கடகஞ் செறியாதோ?
20. கடகஞ் செறியாதோ?
மழைக்குப் புகலிடம் தந்தனர்.உடையை மாற்றி ஈர உடையை உலர்த்தவும் செய்தனர். அத்துடனும் அந்தப் பெண்கள் நிற்கவில்லை.
ஔவையாரின் பசியையும் போக்குவதற்கு முனைந்து, விரைவிலே உணவும் சமைத்தனர். அவரை உபசரித்து உண்ணவும் அழைத்தனர்.
அவரும் அமர்ந்து சூடான அந்த உணவினை உண்டு பசி தீர்ந்தார். இட்டது கீரைக்கறியும் சோறுந்தான். எனினும் அன்பின் வெள்ளம் அவற்றையே அமுதமாக்கின. அவர் மனம் பெரிதும் அவர்களுடைய அன்பில் கலந்துவிட்டது. அந்த உணவை வியந்து பாடினார்.
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ்
செறியாதோ கைக்கு.
"சூடாகவும், நறுமணம் கொண்டதாகவும், விரும்பும் அளவுக்குத் தின்பதற்குத் திகட்டாததாகவும் நெய்விட்டு அளாவிப் பசுமை நிறமுடையதான இதனைப் பொய்யாகக் கீரைக்கறி என்று சொல்லி அமுதத்தையே படைத்தார்கள். இங்ஙனம் ஆக்கிப் படைத்த இவர்களுடைய கைகள் கடகஞ் செறியப் பெற்றவை ஆகாவோ?" என்பது பொருள்.
கேழ்வரகுக் களியும் முருங்கைக் கீரையும்தான் அவர்கள் ஆக்கிப் படைத்தனர். அந்த எளிய உணவும் அவர்களுடைய அன்பின் சிறப்பால் அமுதாகத் தோன்றுகிறது ஔவையாருக்கு. அதனை வியந்ததுடன், அவர்களின் ஏழைமை தீராதோ எனவும் வாழ்த்துகின்றார். தம் வாழ்த்தை அவரே பின்னர் உண்மையாக்குவாராக நிறைவேற்றியும் மகிழ்கின்றார்.
இச்செய்யுளின் இறுதி அடி, 'கடகஞ் செறிந்த கையார்' எனவும், 'கடகஞ் செறிந்த கையால்' எனவும் வழங்கும்.