ஔவையார் தனிப்பாடல்கள்/நல்காத செல்வம்!
9. நல்காத செல்வம்!
செல்வம் சிலரிடம் தானாகவே சேருகின்றது. பலரிடம் முயற்சியின் அளவாலே தொழில் பெரிதானாலும்கூடச் செல்வம் மிகுதியாக வந்து சேர்வது இல்லை. செல்வத்தின் இத்தகைய நிலையினை நம் முன்னோர்கள் உணர்ந்தவர்கள்.
இதனால், செல்வம் சேர்வது பிறருக்குக் கொடுத்து அவரையும் நல்வாழ்வினராகச் செய்வதற்கே என்பதனை அவர்கள் வற்புறுத்தினர். கொடுக்கும் பண்பு சிறந்த மனிதப் பண்பாகவும் ஆயிற்று. கொடுப்பவரினும், மேம்பட்ட வள்ளல்களாகப் பலர் இருந்தனர்.கொடையினால் நாட்டின்கண் பரவுகின்ற புகழையும் அதனால் தமக்கு உயர்கின்ற பேற்றையும் கருதி, கொடுக்கும் குணமற்ற சிலரும்கூடக் கொடுக்கும் வழக்கம் உடையவராக மாறினர்.
சோழன் கொடையின் மரபினை அறியாதவன் அல்லன். மரபினை அறிந்ததுடன் அதனைப் பேணி நிகழ்த்தியும் சிறப்புப் பெற்றிருந்தான். எனினும், ஒருநாள் அவனுக்கு ஓர் ஐயம் எழலாயிற்று. அருகிலிருந்த ஔவையாரிடம் அதற்கு விளக்கமும் கேட்கலானான்.
"அம்மையே! வாழ்வில் இச்சை உடையவர்கள் மனிதர்கள். அவர்கட்குப் பொருளினால் பயன் உண்டாகும். அவர்கட்குப் பொருளை வழங்குவதும் தகுதியுடையதாகிறது. ஆனால், சிவனடியார்கள் சிலரும் வந்து பொருள் கேட்கின்றனரே? உலக இச்சையை ஒழித்து இறையின்பத்திலே திளைக்கும் அவர்கட்குப் பொருள் வழங்குவது முறையா? அந்தப் பொருள் அவர்களுடைய சிவ ஒழுக்கத்தையே மாற்றிவிடாதா?" என்றான்.
சோழனின் அறிவுநுட்பம் ஔவையாரைச் சிந்திக்க வைத்தது. அவர் விளக்கம் கூறலானார்.
“மன்னவ! செல்வத்தைச் சிவனடியார்க்கு வழங்க வேண்டுமோ என்கிறாய்? அவர்கள் அதனைச் சிவகாரியங்களாகிற பொது நன்மைக்கு உதவுகிறவற்றிலேதான் செலவிடுவர். அதனால், அவருக்கு அளிக்கும் கொடை அளவற்ற பலருக்கும் அளித்த கொடையாகிப் பரந்த புகழினை நினக்குத் தருகிறது. இதனை எண்ணினால், அவருக்கு மனமுவந்து வாரி வழங்குதலே செய்ய வேண்டியதாகும் என்பேன் யான்.
அவருக்கு வழங்காத செல்வங்கள் வேறு என்ன வகைக்குப் பயனாகப் போகின்றன? பில்லி சூனியக்காரர்களுக்குப் பயன்படலாம். பேயூட்டுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். பரத்தையர்கட்கு வழங்கி அவரைக் கூடி இன்புற்றுக் கெடலாம். வீண் செலவுகள் செய்யலாம். கொள்ளைக்காரர்களுக்கு விருந்தாகலாம். மனத்தை மயக்கும் கள்ளுக்கு விலையாகத் தரலாம். அல்லது பகை அரசரால் எடுத்துக் கொள்ளப்பட்டும் போகலாம். கள்ளருக்குக் கவர்ந்து போவதற்கும், நெருப்பிற்கு உணவாவதற்கும் கிடைக்கலாம்.
இவற்றால் ஆகும் சிறப்பென்ன? அதனால், இவற்றிற் பாழாகிற பணத்தை தடுத்து "நம்பன் அடியவர்க்கு நல்குவதே சிறப்புடைய செயலாகும்.”ஔவையாரின் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. சோழனும் மகிழ்ந்து அவரைப் போற்றினான்.
நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்.
“நம் பெருமானான சிவனின் அடியவர்களுக்கு மனமுவந்து வழங்காத செல்வங்கள், சூனிய வித்தைகட்கும், பேய் வழிபாடுகட்கும், பரத்தையர்களுக்குக் கொடுத்தற்கும், வீண் செயல்களுக்கும், கொள்ளை கொடுத்தற்கும், மதுவுக்கும், பகை அரசரால் பறிமுதல் செய்யப்படுவதற்கும், அவனுடைய சாவுச் செலவிற்கும், கள்வரால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்குமே உரியவாகும்” என்பது பொருள்.
அடியார் உலக நலம் கருதுபவர். உலகம் உய்வதற்குப் பாடுபடும் உயர்ந்தோருக்கு உதவுவது மிக உயர்வுடையதாகும் என்பது கருத்து.
சிறந்த செயலைச் செய்பவர்க்கு உதவாதவர்களின் மனநிலை இழிந்ததாகவே இருக்கும். அதனால்தான் அவர்களின் செல்வம் பல வழிகளிலும் பாழாகும் என்கிறார்.
சிவ காரியங்களுக்குப் பயன்படுத்தாத செல்வம் அவகாரியங்களிலே வீணாகிக் கரையும் என்பதும் இது.