ஔவையார் தனிப்பாடல்கள்/பண்டுபோல் நிற்க!
10. பண்டுபோல் நிற்க!
இந்நாளில், ஒருவன் இரண்டு மனைவியரை மணஞ்செய்து கொள்ளல் இயலாது. சட்டப்படி இது தடை செய்யப்பட்டுவிட்டது. முன்காலத்தில் அப்படியில்லை. இரண்டு மூன்று மனைவியரை ஒருவன் மணந்து கொள்வது என்பது மிகவும் சாதாரண நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.
அக் காலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. கட்டுடல் கொண்ட காளையர்கள் பலர் போர்க்களத்தில் வீழ்ந்துபட்டனர்.
இதனால் பெண்கள் மிகப் பெருக்கமாக இருந்தனர். ஒருவனுக்கு இருவர் மூவர் என்பதும், அதனால் சமுதாயத்தின் மரபாகவே விளங்கிற்று.
அந்த நாளிலே, ஒரு குறவன் இரண்டு மனைவியரை மணந்து கொண்டிருந்தான். மூத்தவட்குக் குழந்தையில்லாமற் போனதே இரண்டாமவளை அவன் மணந்ததற்குக் காரணமாக இருந்தது. அவளுக்கும் குழந்தை பிறக்கவில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் தீராத பகைகொண்டு சண்டையிட்டு வந்தனர்.
அவன் ஒரு பலா மரத்தை மிகவும் பேணி வளர்த்து வந்தான். பலாவும் செழித்து வளர்ந்து காய்களும் கனிகளுமாக விளங்கிற்று. அவனுக்கு அளவற்ற பெருமை!
அவன் மனைவியர்களுள் இளையவள், ஒரு நாள் மூத்தாளை ஒழிக்க எண்ணமிட்டாள். பலாவை வெட்டிவிட்டுப் பழியை மூத்தவள்மீது சுமத்தினால், தன் கணவனே அவளை அடித்து விரட்டி விடுவான் என்ற கரவான எண்ணம் அவளிடம் உருவாயிற்று. அவன் வெளியே சென்றிருந்தபோது, அவளுடைய மூத்தாளும் வீட்டில் இல்லாத வேளையில், அவள் தன் எண்ணத்தைச் சுலபமாக நிறைவேற்றி விட்டாள்.
குறவன் திரும்பி வந்தான். பலாவின் நிலையைக் கண்டு கொதித்தான். சூதுக்காரி, தன் மாற்றாள்மீது பழி சுமத்தினாள். அவன் சினங்கொண்டான். அவளைக் கொன்றுவிடுவதாகச் சீறினான்.
அவள் எதிரேயே வந்து கொண்டிருந்தாள். பலாவின் கதியும், தன் கணவனின் சினமும், தன் மாற்றாளின் வஞ்சமும் அவளுக்குப் புரிந்தது. நடுக்கத்துடன் கணவனருகே மெல்ல வந்தாள். குறவன் அவள்மீது பாய்ந்து, எதுவும் கேளாமலே அவளை அடித்து வதைக்கத் தொடங்கினான். அவள் அடி தாங்காமல் கதறினாள்.
அந்தக் கதறலை அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஔவையார் கேள்வியுற்றார். அவ்விடத்துக்கு விரைந்தார். குறவனின் கொடுமைச் செயல் அவரை மிகவும் வாட்டிற்று. மாற்றாளின் முகம் அவளுடைய சூதினைப் பறைசாற்றியதனையும் அவர் கண்டார்.
"இவளை ஏனப்பா, பாவம் இப்படிப் போட்டு அடிக்கிறாய்? இவளோ ஏதும் அறியாதவளாக இருக்கிறாளே? இவளை அடிப்பதை விட்டு விடு" என்றார்.
"ஆசையோடு வளர்த்த பலாவை அநியாயமாக இவள் வெட்டிவிட்டாள். இவளையும் இப்போதே கொன்றுவிடப் போகிறேன்” என்றான் அவன், மிகுந்த சீற்றத்துடன்.
"கொன்றால் பலா பழையபடி ஆகிவிடுமா?" என்றார் ஔவையார். "கொல்லாவிட்டால் பலா வந்துவிடுமா?" என்றான் அவன். “வரும்” என்று கூறினார் ஔவையார். இறைவனை வேண்டிப் பாடினார். அந்தப் பாடல் இது.கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டுபோல் நிற்கப் பணி.
"கூர்மையான அரிவாளினாலே வெட்டப்பெற்ற வளைந்த இந்தப் பலா மரமானது, ஓர் இலை துளிர்த்ததாகிப்பின் கிளைகள் விட்டதாகிப் பின் உயரிய மரமும் ஆகிப்,பின் சிறந்த வண்டு போலத் தோன்றும் கொட்டையாய்ப் பின் வன்மையான காயாகிப் பின் பழமும் ஆகி, முன் நின்றதுபோல முழுப் பலா மரமாகவே நிற்பதாக” என்பது பொருள்.