ஔவையார் தனிப்பாடல்கள்/பரமனுக்குப் பாரம்

1. பரமனுக்குப் பாரம்

ருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவர்களின் வரலாறு வியப்பான முறையிலே விளங்க வேண்டும் எனவும் எண்ணினர். இந்த எண்ணம் பற்பல புனைவுகளுக்கு மக்களைத் தூண்டின. ஒவ்வொரு பெரும்புலவரின் பிறப்பைப் பற்றியும் வழங்கி வருகின்ற புனைகதைகளுக்கும் இந்த நம்பிக்கையையே காரணமாகக் கொள்ள வேண்டும். இந்தப் புனைவுகளைக் கழித்தே அவைகளை நாம் உளங்கொள்ள வேண்டும்.

சிறந்த பெரும்புலவர்களாக ஔவையார்கள் விளங்கினர். சங்ககாலப் பெரும் புலவர்களிடையே ஒருவர் இருந்தார். கம்பர் முதலானவர்களின் காலத்தில் மற்றொருவர் இருந்தார். மற்றும் சிலர் வேறு பல காலங்களில் வாழ்ந்திருந்தனர். 'ஔவையார்' என்ற பெயரின் பொதுமையினால், அவர்கள் அனைவரும் காலப் போக்கில் ஒருவரேயாகிவிட்ட அதிசயமும் நடந்திருக்கிறது. ஔவையார் சிரஞ்சீவித்தன்மை பெற்றவர் என்ற விநோதமான நம்பிக்கையும் இதன்பின் நிலைபெறலாயிற்று.

'ஔவையார்' ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். அந்த அம்மை கலக்கமுற்றனர். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது.

அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள். அதனை அவ்விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர். ஔவையார் பிறந்த கதை இப்படி வழங்கி வருகிறது. அந்தக் குழந்தை பாடியதாக ஒரு வெண்பாவும் காணப்பெறுகின்றது. அந்த வெண்பா இதுவாகும்,

'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.'

'இங்ஙனமாகப் பிறப்பிலேயே வாழ்வுக் கதியை வகுத்துவிட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை; அவன் வகுத்த நியதி மாறுபடப் போவதும் இல்லை.'

'இந்த உண்மையை உணர்ந்தவர்கள், தன் மக்களின் வாழ்வினைக் கருதிக் கவலைப்படமாட்டார்கள். எத்துணைத் துயரம் வந்தாலும், காக்கும் பொறுப்புக் கடவுளுடையது' என்று நினைத்து, அவர்கள் மன அமைதி கொள்வார்கள்.

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.

ஔவைக் குழந்தை வெண்பாவைச் சொல்லி, 'அன்னையே! நீ நெஞ்சம் வருந்த வேண்டாம்' என்று, தன்னைப் பெற்றவளுக்குத் தேறுதலும் கூறிற்று என்பார்கள்.

"அன்னையே! என்பால் விருப்பமுடன், என் வாழ்வின்போக்கு இன்னபடியாக அமைவதாக என்று என் தலையிலே எழுதி, என்னைப் பிறப்பித்த சிவபெருமானும் செத்துப் போய் விட்டானோ? இல்லை அல்லவோ அதனால், மிகவும் கொடிய பஞ்சமே நாடெங்கும் ஏற்பட்டாலும், என்னைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கே அல்லவா! ஆகவே, நீ உன் நெஞ்சத்தே என்னைக் குறித்த எவ்வகையான, அச்சத்தையும் கொள்ளாது நிம்மதியாகச் சென்று வருக” என்பது இதன் பொருள்.

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’

என்றவாறு, இதே கருத்தினைத் திருக்குறளும் கூறும். அதனையும் இத்துடன் நோக்கிப் பொருள் உணர்தல் வேண்டும்.

'குழந்தை பாடுமா?' என்று கேட்கலாம். பாடும். அது 'பூர்வ ஞானம்' என்று சான்றோர் கூறுகின்றனர்.'சிவனன்றித் துணை இல்லை என்று அறிவுறுத்தும் சிறந்த வெண்பா இது.