ஔவையார் தனிப்பாடல்கள்/பழக்கமும் குணமும்!

6. பழக்கமும் குணமும்!

நிலைமையைச் சோழன் உணர்ந்தான். எனினும், புண்பட்ட கம்பரின் உள்ளத்தைச் சிறிதேனும் மாற்றுதற்கும் விரும்பினான். அதனால், மேலும் சிறிது அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.

'கம்பநாடரின் இராமாயணப் பெருமையை நம்மால் மறக்கவே முடியவில்லை.கம்பர் பிறவிக்கவிஞர் என்ற பெருமைக்கு உரியவர். ஔவையார் சொல்வதில் உண்மை இருந்தாலும், அவர் கம்பரின்மீது வேண்டுமென்றே குறை காண்கின்றனர். அந்தக் குறை கம்பர்பால் இல்லை என்பதனை நாமும் அறிவோம்; நம் நாடும் அறியும்' என்றான்.

'கம்பரைப் பிறவிக் கவிஞர்' என்று சொன்னது, பிறரை அவரினும் தாழ்ந்தவர் என்று கூறியதுபோல எதிரொலித்தது. அதனால் அந்த நினைவை மாற்றவும், சோழனுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும் ஔவையார் கருதினார்.

அதனால், உலகியல் உண்மைகளாக விளங்கும் சில செய்திகளை எடுத்து உரைப்பவரும் ஆயினார்.

சிறந்த சித்திரக்காரன் ஒருவனைப் போற்றுகின்றோம். அவனுடைய ஆற்றல் அவனுடைய தளராத கைப்பயிற்சியினாலே வந்தது. அந்தப் பயிற்சிக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தால் மேலும் பலர் சிறந்த சித்திரக்காரர்களாக ஆகியிருப்பர்.

செந்தமிழ் வல்லார் சிலரைக் காண்கிறோம். முறையான தமிழ்ப்பயிற்சி அளித்தால், நாட்டிலே செந்தமிழ் வல்லார்கள் திரளானபேர் உருவாகி விடுவார்கள்.

சிறந்த கல்வி ஞானம் உள்ளவர்கள் என்கின்றோம். அந்த ஞானம் மனத்தை ஒன்றின்பால் உறுதிபெற நிறுத்திப் பழகிய பழக்கத்தால் அமைந்ததாகும். அந்த மனப்பழக்கம் பலருக்கும் ஏற்பட வழிசெய்தால், அவர்களிலும் மிகப்பலர் ஏற்படுவர்.

சிலருடைய நடைகள் நமக்குச் சிறப்பாகத் தோன்றும். அது அவர்கள் நாள்தோறும் நடந்து வருகிற ஒழுகலாற்றின் பழக்கத்தால் அமைந்தனவாகும்.

இவையெல்லாம், இப்படிப் பழக்கத்தாலும் வாழும் சூழ்நிலையாலும் வந்தமைவனவாம்.இவற்றைப் பிறவிக்குணமாகக் கொள்ளுதல் பொருந்தாது. ஆனால், பிறவிக் குணமாக ஏதும் கிடையாதோ என்று கேட்டால், உண்டு; அவை நட்பு, தயை, கொடை முதலியன.

பிறரோடு நட்புடையவராகவும், பிறர்பால் இரக்கங் கொள்ளுகிறவராகவும், பிறருக்குக் கொடுத்து உதவுகிற மனமுள்ளவராகவும் ஒருவர் விளங்கினால், 'அவரை பிறவியிலே திருவுடையார்' என்று போற்றலாம்.

இந்தக் கருத்துகளை அழகிய வெண்பா வடிவில் அமைத்துப் பாடினார் ஔவையார்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

"சித்திரம் எழுதும் ஆற்றல் கைப்பழக்கத்தால் அமைவது. செந்தமிழின் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் வருவது. சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச் செல்வம் மனப் பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது நடையில் திறமையைத் தருவதாகிறது. ஆனால் நட்பும், இரக்க குணமும், கொடுக்கும் இயல்புமோ பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்” என்பது இதன் பொருள்.

இது, கம்பரின் புலமையினைப் பழக்கத்தால் படிந்தது எனக் கூறியும், பிறவிக் குணங்களான நட்பு, தயை, கொடை முதலியன அவர்பால் காணப்படாதவை எனச் சுட்டிப் பழித்ததாகவும் அமைந்தது.

இதனால், இந்த விவாதம் மேலும் சிறிது சூடுபிடித்துத் தொடரலாயிற்று.