ஔவையார் தனிப்பாடல்கள்/பழம் தந்த பனந்துண்டம்!

28. பழம் தந்த பனந்துண்டம்!

திருமணத்திற்கு வந்திருந்த மூவேந்தர்களும், தம் பகைமையை மறந்து அங்கே கூடியிருந்தனர். தமிழ்க் காத்த பாரியின் மக்களுடைய திருமணம். தமிழகம் ஒருங்கே கொண்டாடிய ஒப்பற்ற பெருவிழாவாக அமைந்தது.

ஔவையாரின் தெய்விக சக்தியினைக் கண்ட அவர்கள், தம்முடைய அகந்தையையும், தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளையும் மறந்துவிட்டனர். பாரியின் மக்களைத் தங்கள் மக்களாகவே பாவித்து வாழ்த்தினர். பரிசுகள் பலவும் வழங்கிப் பாராட்டினர்.

தம் படை வலுவாலும், தம் பொருள் வளத்தாலும் சாதிக்க முடியாத செயலை, ஔவையாரின் தெய்வத் தமிழ் சாதித்த செவ்வியை அவர்கள் கண்டனர். அவர்களுக்கு, ஔவையாரின் மீதிருந்த பெருமதிப்பும் அந்த அளவிற்கு உயர்ந்தது.

மாலையில், அங்கு ஒருபுறமாக மூவேந்தரும் உலவியபடி இருந்தனர். அங்கு கிடந்த ஒரு பனந்துண்டத்தில் களைப்பாறுவதற்கு அவர்கள் அமர்ந்தனர். அப்போது, அம் மூவேந்தர்களுள் ஒருவன்,

"பனந்துண்டம் உட்கார உதவியது. பனம்பழமும் கிடைத்தால் உண்ணலாம் அல்லவா?" என்றான்.

"பனம்பழத்திற்கு உரிய காலம் அல்லதே இது” என்றான் மற்றொருவன்.

மூன்றாமவன், ஔவையாரின் முகத்தை நோக்கினான். அவன் தமிழ் வீற்றிருக்கும் மதுரைக் கோமான் பாண்டியன்.

அவன் முகக் குறிப்பை ஔவையார் அறிந்து கொண்டார். அவர் வாய் தமிழால் மணக்கத் தொடங்கியது.

திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக்கு அறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்துக்
கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பைவிட்டு
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே!

"பனந்துண்டமே! சந்திர வட்டக் குடையினை உடைய சேரனும், சோழனும், பாண்டியனும் பாரி மகளிர்க்கு அறுகிட்டு வாழ்த்துதற் பொருட்டாக, அவர்தம் மணப் பந்தலிலேயும் வந்து நின்றார்கள். அவர்கள் தின்று உவக்குமாறு -

வெண்சங்கினைப் போன்ற குருத்தினைத் தோற்றுவித்துப், பச்சோலைகள் சலசலக்க விளங்கி, மணம் நாறும் குறத்தியின் குவிந்த முலைகளைப் போலக் குரும்பைவிட்டு, நுங்குக் கண்களும் முற்றி, அடிக்கண் கருப்பாகி, நுனிப்பகுதி செந்நிறம் பெற்று, ஒவ்வொருவர் பங்குக்கு மும்மூன்று பழங்களாக நீ தந்திட வேண்டும்” என்பது பொருள்.

அவர் வேண்டியபடியே பனந்துண்டம் நிமிர்ந்து நின்று மரமாகிப் பழங்களைத் தந்தது. மூவேந்தரும் கண்டு மெய்மறந்து நின்றனர். அவர்கள் உள்ளம் ஔவையாரின் தெய்வீக ஆற்றலை எண்ணி வியந்து கொண்டிருந்தது.