ஔவையார் தனிப்பாடல்கள்/பூனை கண்ட கிளி

7. பூனை கண்ட கிளி

சோழ மன்னனின் நிலைமையோ தர்மசங்கடமாயிற்று. ஔவையாரின் பேச்சிலே உண்மை ஒலிப்பதை அவனும் அறிவான். எனினும், கம்பரை அவர் அடியோடு மட்டந்தட்டி வருவதனை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதனால் அவரை எதிர்க்கவும் மனமில்லை.

"பொறுமையே வடிவானவர்' என நாடு போற்றும் பெரும் புலவரான ஔவையார், இப்படிக் கம்பரை வம்புக்கு இழுப்பதானால், அந்த அளவுக்குக் கம்பரின் பேச்சோ, செயலோ அவருள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி இருக்கவேண்டும் எனவும் அரசன் உணர்ந்தான்.

அவைக்கண் இருந்த பிற புலவர் பெருமக்களும் ஏதும் பேசாராய் வாளா இருந்தனர். அவர்களின் மௌன நிலை, அவர்களும் ஔவையாரின் கருத்தை ஆதரிப்பதாகக் காட்டியது. கூத்தர் இயல்பாகவே கம்பரை விரும்பாதவர். அவர் முகத்திற் படர்ந்த புன்சிரிப்பு பிற புலவர்களுக்கும் புரிந்திருந்தது.

நிலைமையை மேலும் வளர்க்க விரும்பாத சோழன், இறுதியாகக் "கம்பரை வெல்பவர் யார்?" என்றான், ஒரு சவால் போல.

அஃது, ஔவையாரை மீண்டும் சினம் கொள்ளத் தூண்டுவது போலவே இருந்தது.

"சோழனே! கிளி வளர்ப்பார்கள் பெண்கள். அதற்குப்பாலும் பழமும் வைத்துப் பேசவும் கற்றுக் கொடுப்பார்கள். அதுவும் ஒன்றிரண்டு சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும்.

அந்த ஒன்றிரண்டு சொற்களைப் பேசத் தெரிந்ததும் அதற்கு அளவுகடந்த மகிழ்ச்சி பிறந்துவிடும். தனக்கு எல்லாமே தெரிந்துவிட்டதுபோலத் தன் அறியாமையை உணராமல் வெட்கமின்றிப் பேசிக் கொண்டே இருக்கும்.

ஆனால் அவ்விடத்தே பெரிய பூனையொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். கிளியின் பேச்சு அறவே நின்றுவிடும். தன் நிலைமை அப்போதுதான் அதற்கு வெளிப்படும். தன் பேச்சு பூனையைக் கொண்டு வந்தது என்பதும் புரியும். உடனே, தன் இயல்பான தன்மை தோன்றக்'கீச்சுக் கீச்சு' என்று உயிருக்குப் பயந்து கதறத் தொடங்கிவிடும்.

கல்வியின் சிறப்பு என்பது அடக்கத்திலேதான் இருக்கிறது. இதனை அறியாமல் சிலர் மனம் விரும்பியபடி எல்லாம் பேசுகின்றனர். அது அவர் அறியாமையைத்தான் காட்டும்."கற்றோர் அவை முன்னர் பணிவு வேண்டும். பணிவின்றி வாய் திறந்தால் வருவது இழிவுதான். இதனை அறிந்து கொள்க" என்றனர் அவர்.

கம்பர் அயர்ந்து போயினர். தம் புகழ்மயக்கமே ஔவையாரைக் கொணர்ந்து தம்மை இழித்துப் பேசச் செய்தது என்று உணர்ந்தனர். சோழன் மௌனியானான். அவையோ ஆரவாரித்தது. ஔவையாரைப் போற்றியது.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

"கற்ற பெரியோரைக் காணாவிடத்தில் அரைகுறை அறிவுடையோர் தாம் விரும்பியபடியெல்லாம் கூச்சல் இடலாம். ஆனால், படித்தவர்கள் முன்பாகப் பணிவின்றி எவருமே தம் வாயைத் திறத்தல் பொருந்தாது. வெட்கமின்றிப் பேசிக் கொண்டேயிருக்கும் கிளியானது, பெரிதான பூனை அந்தப் பக்கமாக வந்தால், தன் பேச்சை மறந்து உயிருக்கு நடுங்கிக் கீச்சுக்கீச்சென்று கதறும். ஆன்றோர் அவையிடத்து, அறியாமல் பேசும் செருக்குடையவர் கதியும், அந்தக் கிளியைப் போன்றது தான்” என்பது பொருள்.