கண்ணாயிரத்தின் உலகம்/கண்ணாயிரத்தின் உலகம்
கண்ணாயிரத்தின் உலகம் !
(நாடகம்)
'ஒரே உலகம்' என்பது நேர்த்தியான ஒரு குறிக்கோள்.
பற்பல நாடுகள் கொண்ட பூபாகம் ஒரே அமைப்பாக இருக்கிறது என்பதல்ல 'ஒரே உலகம்' என்ற குறிக்கோளின் பொருள். பற்பல நாடுகள் உள்ளன என்பதாலேயே, பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகள், அவை காரணமாக மாச்சரியங்கள், மோதுதல்கள், ஆதிக்கங்கள், அவதிகள், அழிவுகள் நெளிகின்றன. இதனால் ஒரே அமைப்பாக உள்ள உலகம், 'ஒரே உலகம்' என்ற நேர்த்தியான நிலை அடையவில்லை.
வெள்ளை உலகம்; கருப்பு உலகம்; மாநிற உலகம்; மஞ்சள் நிற உலகம் என்று நிறம் காரணமாக, ஒரே அமைப்பாக உள்ள பூபாகம், பல்வேறு உலகங்களாக இருந்திடக் காண்கிறோம்.
இஸ்லாமிய உலகம்; கிருத்தவ உலகம்; பௌத்த உலகம்; இந்து உலகம்; ஆதிமத உலகம் என்று மத அடிப்படையில் பல உலகங்கள் உள்ளன என்று உணருகிறோம்.
மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று இருபெரும் பிரிவுகளாக உலகம் இருப்பதாகவும், இந்தப் பிரிவு ஒவ்வொன்றும் தனித்தனி உலகம் என்றும் கூறுகின்றனர். காரணமும் காட்டுகின்றனர்..படித்தோர் உலகு என்றும், பாமரர் உலகு என்றும் இந்த ஒரே உலகில், இருவேறு உலகம் உள்ளன என்கிறார்கள்; மறுப்பதற்கில்லை.
நாகரீக உலகம், கர்னாடக உலகம் என்ற இரு உலகு கொண்டது இந்த ஒரே உலகம் என்கிறார்கள். அதிலும் உண்மை இருந்திடக் காண்கிறோம்.
இவற்றினைப் பற்றி எண்ணிடும்போது, உலகம் என்று நாம் நிலப்பரப்பை மட்டுமே கருதிக் கொள்வதிலே முழுப் பொருத்தம் இல்லை என்பதும், நிலைமைகளும் நினைப்புகளும் எவ்வகையிலே உள்ளன எனபதனைக் கொண்டு இந்தப் பெரிய நிலப்பரப்பிலே பலவிதமான உலகம் உள்ளன என்பதைக் கண்டறிவதே பொருத்தமானது என்பதும் விளக்கமாகிறது.
நிலைமைகளையும் நினைப்புகளையும் கண்டறிந்து பல்வேறு வகையான உலகங்கள் இந்த ஒரே உலகில் இருப்பதனை அறிந்திட முடிகிறது என்பதனை உணரும்போது. ஒவ்வொருவரும் தத்தமது நினைப்பு, நிலைமை ஆகியவற்றினுக்கு ஏற்ற விதத்தில், தமக்கு உரிய 'உலகை' உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதும் தெளிவாகிறது.
அதனால்தான் வள்ளுவர் 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு' என்று கூறி, நல்ல உலகை நல்லவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்ற கருத்தினை வழங்கிச் சென்றார்.
ஒவ்வொருவரும் தமது உயர்ந்த எண்ணத்தாலும், சீரிய முயற்சியாலும் ஒரு நல்லுலகம் அமைத்துக் கொள்ளலாம் என்பது போலவே, சிலரோ—பலரோ உருவாக்கிடும் உலகம் வேறு சிலருக்கோ பலருக்கோ 'இடம்' ஆகிவிடுகிறது.
ஆதிக்க வெறிகொண்ட வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நாட்டினையே அடிமைகளைப் பிடித்திடும் வேட்டைக் காடு ஆக்கினர்; அதிலே கிடைத்த செல்வத்தைக் கொண்டு தமக்குப் பளபளப்பான ஒரு பகட்டு உலகம் அமைத்துக் கொண்டனர்.வெள்ளையருக்கு ஒரு 'பகட்டு உலகம்' அமைந்ததன் காரணமாகவே, ஆப்பிரிக்கரின் உலகம், 'இருட்டு உலகம்' என்ற நிலையினைப் பெற்றது. பெற்ற பிறகு அதனையே சுட்டிக்காட்டி, பகட்டு உலகினர், இருட்டு உலகினரைக் கேலி செய்திடலாயினர்.
இதுபோல, 'உலகுகளை' உருவாக்கியுள்ளனர். இருள் உலகினை மட்டுமல்ல; ஒளி உலகினையும்.
இத்தனை விதமான உலகுகள் இருந்திடின்,பகைப்புயல் அவ்வப்போது கிளம்பிப் பாழ்படுத்தும் இந்த நிலை மாறுபட்டு, 'ஒரே உலகம்' அமைந்திட வேண்டும் என்றார் வெண்டல் விஸ்க்கி எனும் ஒரு அமெரிக்கத் தலைவர்.
'ஒரே உலகம்' அமையவில்லை; அமைந்திடும் என்பதற்கான அறிகுறிகளும் பளிச்செனத் தெரிந்திடக்காணோம். எனினும் 'ஒரே உலகம்' என்பது நேர்த்தியான ஒரு குறிக்கோள் என்பதனை எவரும் மறுத்திட முனையக் காணோம். அந்த அளவு நல்லுணர்வு வெற்றி பெற்றிருக்கிறது.
சிலர், தமது உலகினைத் தாமாக அமைத்துக் கொள்கின்றனர்; வேறு சிலர், அமைக்கப்படும் உலகிலே இடம் பெற்றவராகிவிடுகின்றனர்; அந்த உலகின் இயல்புகளுக்கேற்ப அவர்தம் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.
அதிலிருந்து விடுபடவோ அல்லது அந்த இயல்பினை மாற்றிடவோ முயற்சி மேற்கொள்பவர்களும் உண்டு. அந்த இயல்போடு தம்மை இணைத்துக் கொண்டு விடுபவர்களும் உண்டு.
கண்ணாயிரம், தன் உலகிலே தன்னை வேறுபடுத்த முடியாத அளவு பிணைத்துக் கொண்டவனும் அல்லன்; அந்த உலகின் இயல்பு பிடிக்காமல், எதிர்த்திடக் கிளம்பினவனுமல்லன்; அந்த உலகிலே சுவை கண்டவன், ஆனால் சுவை போதும் என்ற நிலையில் தன்னை இறுக்கிக்கொண்டவனல்லன். விவரிக்க முடியாத ஒரு குமுறல். அவன் உள்ளத்தில் அவ்வப்போது எழும்பிற்று; வளரவில்லை; ஆற்றல் பெற்றிடவில்லை.கண்ணாயிரம் தனக்கென ஏற்பட்டிருந்த உலக இயல்புடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தால், மனதிலே சிக்கல், சங்கடம் ஏற்பட்டிருக்காது. வாழ்க்கை ஒரு சுவைமிகு விருந்தாகியிருக்கும். அல்லது அவன், தன் உலகின் போக்கிலே வெறுப்படைந்து, அதனைவிட்டு விடுபடவோ, அல்லது அதனை உடைத்திடவோ முயற்சி எடுத்துக் கொண்டிருப்பின், முள்ளும், கல்லும் நிரம்பிய பாதையில் நடந்திட வேண்டி வந்திருக்கும். முள் தைத்திடும், குருதி கசிந்திடும், ஆனால் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி மலர்ந்திருக்கும். கண்ணாயிரமோ, இந்த இருமுறைகளில், எந்த ஒன்றிலேயும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; இருமுறைகளுக்கு ஏற்ற இரு வேறு துறைகளிலும் அவன் இடம் பெற்றிருந்தான்; எதை விடுவது, எதைக் கொள்வது என்பதிலே உறுதி பிறந்திடவில்லை. செல்லுமிடம் எதுவென்ற தெளிவின்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தான். கரும்பையும் கண்டான்; கசப்பையும் கண்டான்; ஆடிப்பாடிடவும் செய்தான்; ஆயாசமடைந்திடவும் செய்தான்.
கண்ணாயிரம் தனக்கென ஒரு உலகினை உருவாக்கிக்கொள்ளவில்லை; தந்தை உருவாக்கி வைத்திருந்த உலகில், 'சுகபோக உலகில்' இடம் பெற்றான். ஆனால் அதிலே இருந்துகொண்டே அவன் வேறு உலகம் பற்றிய நாட்டம் கொண்டிடலானான். இக்கட்டான நிலை என்பது மட்டுமல்ல, கண்ணாயிரம் 'இரு உலக வாசியானான்'-அதுபற்றிய விளக்கக் கதையே நாடக வடிவில் தரப்படுகிறது.
கண்ணாயிரம் இருவேறு உலகில் உந்தப்பட்டும், உறைவிடம் பெற்றும் அலைந்தது மட்டுமே, இங்கு காணக் கிடைக்கும். கடைசியாக அவன் எந்த உலகுக்குத் தன்னை உரியவனாக்கிக் கொண்டான் என்பது கூறப்படவில்லை.
கண்ணாயிரத்தின் உலகம், ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை மேற்கொள்ளத்தக்க இயல்பினைப் பெற்றிடத் துணை செய்யவில்லை என்பதும், இதிலிருந்து பெறத்தக்க பாடங்களில் ஒன்று என்று கூறலாம்.கரத்தில் சிக்கிய யாழின் நரம்புகளை, இசை முறையும் பயிற்சியும் பெறாதவன் தடவிடும்போது இன்னொலியும் கிடைத்திடும்; வெற்றொலியும் எழும்பிடும்; வேதனை தரத்தக்க ஒலியும் பிறந்திடுமல்லவா!
கண்ணாயிரத்தின் உலகிலே அதுபோலத்தான்.
இனி, கண்ணாயிரத்தின் உலகினைக் காணச் செல்வோம்.
காட்சி—1.
இடம்: சீமானின் மாளிகை—மாடி அறை.
நிலைமை: அறைக் கதவு மூடப்பட்டிருக்கிறது; தாளிடப்படவில்லை. ஏதோ சினிமாப் பாடலொலி வெளியே உலவுகிறது. இடையே 'சீட்டி' அடிக்கும் சத்தமும் கேட்கிறது. அறையின் வெளிப்பக்கம் உட்கார்ந்து கொண்டு ஒரு வேலையாள் பூட்சுகளுக்குப் 'பாலீஷ்' போட்டுக் கொண்டிருக்கிறான். 'பூட்ஸ்' வாலிபர்களுக்கேற்ற நவநாகரீகமானதாகவும் ஏற்கெனவே மெருகுள்ளதாகவும் இருக்கிறது.
இளை.: (வேலையாளைப் பார்த்து அகம்பாவமற்ற—ஆனால், மேல் நிலையில் உள்ளவன் என்பதை நினைவு படுத்தும் விதமான குரலில்)டே, இடியட்! வேலை முடிந்ததா...
வேலை.: (பழக்கப்பட்டுப்போயுள்ள பணிவுடன்)ஆமாங்க...இளை.: (சிகரெட் பற்றவைத்துக் கொண்டே) நல்லா .. துடைச்சியா?
வேலை.: ஆமாங்க...
இளை.: எதை?
வேலை.: பூட்சை..
இளை.: மடயா! முதலிலே உன் அழுக்குக் கையை துடைத்துக்கிட்டயா?
வேலை.: (இளைஞன் வேடிக்கையாகப் பேசுவதை உணர்ந்து, ஒரு அசட்டுச் சிரிப்புடன்) ஓ! கைகளைச் சுத்தமாக்கிக்கிட்டு, பிறகுதாங்க இந்த வேலைக்கு வந்தேன்.
[இளைஞன் புன்னகை காட்டிவிட்டு, அறைக்கு உள்ளே செல்கிறான், கதவை மூடிக்கொண்டு. அறைக் கதவு சரியாக மூடப்படாததால், உள்ளே இளைஞன், மேனாட்டு உடை அணிந்துகொள்வதும், நிலக்கண்ணாடி முன்பு நின்று சரி செய்து கொள்வதும் வேலையாளுக்குத் தெரிகிறது. பலமுறை கண்டிருப்பதாலும், அந்தஸ்துக்கு ஏற்ற அலங்காரம் இருக்கும்—இருக்க வேண்டியதுதான் என்ற இயல்புள்ளவன் என்பதாலும், வேலையாளின் பார்வையில் வெறுப்போ, அலட்சியமோ தென்படவில்லை. 'கண்ணாயிரம்! கண்ணு!' என்று கூப்பிட்டுக்கொண்டே, நடுத்தர வயதைக் கடந்து, மூதாட்டி என்ற கட்டம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தோற்றமுள்ள மாது அறையை நோக்கி வரக் காண்கிறான். ஓரளவு மூடப்பட்டிருக்கும் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு மாது உள்ளே நுழைந்தபடி...]
மாது.: கண்ணாயிரம்! டே, கண்ணு!புறப்பட்டாச்சா!... வீடு வந்து அரைமணி நேரம் கூட ஆகல்லே; மறுபடியும் வெளியே! ஏண்டா, கண்ணாயிரம்! உனக்கு எதுக்காகடப்பா இந்த வீண் அலைச்சல்? வீடு இருக்கு, அரண்மனைபோல; தோட்டமிருக்கு, நந்தவனம்போல; சொத்து இருக்கு, சுகம்தர; நிம்மதியா வீட்டிலே இருக்கக்கூடாதா...
கண்.: நாம, நம்ம நிம்மதியை மட்டும் கவனித்துக் கொண்டா போதுமா?... ஊருக்கு உபகாரம் செய்ய உழேக்கறதுதான் உத்தமர்கள் கடமைன்னு நீயே சொல்லி இருக்கியே அத்தே! இப்ப நான் என்ன, உல்லாசத்துக்காகவா ஊர் சுத்தப் போறேன்?...
மாது: என்ன வேலையோ, என்ன கடமையோ! பலபேர் என்னைக் கேட்கறாங்க. ஏன் அன்னபூரணி கண்ணாயிரம் இப்படி அலையறதுன்னு. ஒவ்வொரு நாளுமா வேலை இருக்கும் உனக்கு...
கண்.: இன்னும் ஒரு பத்துநாள், இப்படி அப்படித் திரும்பக்கூட நேரம் கிடையாது. நடன விழா ஏற்பாடு. விழா எதுக்காக? ஏழைப் பிள்ளைகளைப் படிக்கவைக்க!...
அன்ன.: நல்ல காரியந்தான்! உங்க அப்பாவிடம் சொல்லி, ஒரு ஆயிரம் ஐநூறு வாங்கிக் கொடுத்துவிடு...தர்ம காரியம்... வேண்டாம்னா சொல்வேன்? நீ எதுக்காக அலையவேணும்?
கண்.: (சிறிதளவு குறும்புத்தனத்துடன்) யாரிடம்? அப்பாவைக் கேட்டா? நல்லா கொடுப்பாரே! பணம்னு கேட்ட உடனேதான் அப்பா முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்குமே!அன்ன.: நீ வீண் செலவு செய்துவிடுவே என்கிற பயந்தான். நல்ல காரியத்துக்குன்னு கேட்டா, தராமலா போவான்? நீ நாட்டியக்காரக் கூட்டத்திலே சேர்ந்து, ஆடிப்பாடிக்கிட்டு நீ உன் அந்தஸ்தைக் கெடுத்துக் கொள்வாயோ என்கிற பயம்தான்!
கண்.: அப்பா பக்கமாத்தானே நீங்க பேசுவீங்க...நான் இப்படி ஊருக்காக உழைக்கறதாலேதான் ஒரு நூறு பேராவது நம்ம குடும்பத்தைப்பத்தி நல்லபடியாப் பேசுறாங்க! ஏழைப் பிள்ளைகளுக்கு நிதி ஒரு ஐம்பதாயிரமாவது சேர்த்தாகணும்னு நான் படாதபாடு படறேன்...நீ ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாயே, நான் ஊரைச் சுத்தறேன்னு...
சிங்.: ஏன் ஊர் சுற்றித் திரியமாட்டான்? ஏதாவது வித்துவிசனம், கவலை கஷ்டம் இருந்தாத்தானே! காளைமாடு போலச் சுத்தறான், கட்டறுந்த காளை போல. இருப்பது பாழாகாமப் பார்த்துக்கொள்ளத்தான் நான் ஒருத்தன் இருக்கிறேனே! அவனுக்கென்ன? அவன் உண்டு, நண்பர்கள் உண்டு, செலவுக்குக் கொட்டிக் கொடுக்க நான்தான் இருக்கிறேனே, ஒரு மடயன்...
சிங்.: தெரியுமே எனக்கு, இவன் ஈடுபட்டிருக்கிற நல்ல காரியம்... அக்கா! நாட்டியக்காரி வீட்டிலே இவனுக்கு என்ன வேலை? என்ன வேலைன்னு கேளேன்...
கண்.: (தைரியத்தைத் தருவித்துக்கொண்டு) அடே அப்பா! பெரிய தப்பு கண்டுபிடித்துவிட்டாரு... நாட்யக்காரி வீட்லே போனது வேலையத்து அல்ல. ஏழைப் பிள்ளைகள் உதவிக்காக விழா நடத்தறமே... அதிலே நாட்டியமாட ஏற்பாடு செய்யப் போயிருந்தேன்.
அன்.: (அன்பாக) நீ ஏண்டா போகணும்? ஒரு ஆளை அனுப்பி கேட்டனுப்பறது...
கண்.: (விளக்கம் அளிக்கும் முறையில்) வேறே ஆளை அனுப்பி இருந்தா... ரூபா ஆயிரமல்லவா கேட்டிருப்பாங்க. நானே போனதாலேதான், 'தம்பி, தம்பி! நீ வீடேறி வந்த பிறகு பணத்தைப் பத்தின பேச்சே கிடையாது, என்ன விருப்பமோ, கொடு'ன்னு சொல்லி இருக்காங்க...
அன்.: பார்த்தியாடா தம்பி! அதனாலேதான் போயிருக்கான் கண்ணாயிரம்..
சிங்.: (குத்தலாக) இவன் முகத்தைப் பார்த்ததும் பணமே வேண்டாம்னு சொல்லிவிட்டாங்க...ஏண்டாப்பா! அப்படித்தானே?
கண்.: (விளக்கம் தருகிற முறையில்) எனக்காகன்னு சொன்னனா? எல்லாம் அப்பா பேரைச் சொன்னதும் 'சரி சரி'ன்னு ஒத்துக்கொண்டாங்க. (குத்தலாக) நாட்டியமாடற பொண்ணோட அம்மா, நான் அப்பா பேரைச் சொன்னதும், 'அவர் மகனா நீ! அவரோட மகனா!' என்று கேட்டுப் பூரித்துப் போனாங்க...!
கண்.: (குத்தலாக) என்னைக் கேட்டா? அப்பாவை அல்லவா கேட்கவேணும். அப்பா முன்னே எல்லாம் வருஷா வருஷம் நவராத்திரி உற்சவம் நடத்துவாராமே! அப்போதெல்லாம் அந்த அம்மாவோட கச்சேரிதான் ஏற்பாடு செய்வாராம்...
சிங்.: (சலிப்படைவது போலாகி) சரிடா! போதும், உன்னோட விளக்கம், விவரம், வியாக்யானம்...
கண்.: அந்த அம்மாகூடச் சொன்னாங்க..."உங்க அப்பா உற்சவம்தான் நடத்தி வந்தாரு, பல பேர் செய்தது போல. நீ பரவாயில்லே; ஊருக்கு உபகாரம் செய்றே'ன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க...
சிங்.: படுவா, படுவா!...பேராசைக்காரக்கழுதே!
அன்.:யாருடா தம்பி, அவ?
சிங்.: அட, என்னத்துக்காக அக்கா! நீ வேறே விஷயம் தெரியாம கிளறிக் கிளறிக் கேட்கறே?
சரி, இந்தத் தடவையோட நிறுத்திக்கொள்ளு, உன்னோட நாட்டிய ஏற்பாட்டை எல்லாம்...தெரியும் எனக்கு...நானும் நவராத்திரி உற்சவத்துக்குக் கச்சேரிகள் ஏற்பாடு செய்தவன்தான். எனக்கும் தெரியும் எல்லாம்!...ஆமாம்...இதோடு விட்டுத்தொலை...போதும்.
வந்தவர்.: நம்ம தம்பி, வியாபாரத்தைக் கவனிக்கிறதில்லே போலிருக்குதுங்களே...
சிங்.: இல்லிங்க...அவனோட போக்கே ஒரு தனிவிதமா...
வந்த.: அதைத்தான் சொல்றேன்...பாட்டு, கூத்து, நாட்டியம், நாடகம் இப்படி...
சிங்.: (கோபம் காட்டியபடி) ஆடிக் கெட்டுப் போகிறான் என் மகன்னு பேசும் விவரம் தெரியாததுங்க...
அவன் நல்ல காரியத்துக்காக, ஏழைப் பிள்ளைகளுக்காக விழா நடத்தறான்...நாமதான் பணமோ பணம்னு அலையறோம். அவன் அப்படி இல்லய்யா...ஊருக்கு உபகாரம் செய்யணும் என்கிற நோக்கம் இருக்குது..நல்லதுதானே அது...
பணமா பெரிசு...கூடவேவா...கொண்டுகிட்டுப் போயிடப் போறோம், மூட்டை கட்டி? பத்துப் பேருக்கு உபகாரம் செய்து நல்ல பேர் எடுக்கணுமய்யா! ஏதோ நமக்கெல்லாம் அந்த நினைப்பும் இல்லே—நேரமும் இல்லே. மகனாவது ஊருக்கு உபகாரம் செய்கிறானேன்னு எனக்கு மகிழ்ச்சி.
வந்த.: அதுசரிங்க...ஆமாங்க...
சிங்.: அதனாலேதான் நானும் அவன் நாலுகாசு செலவழித்தாலும் பரவாயில்லேன்னு இருக்கறேன்... கேட்டதைத் தட்டாது கொடுக்கிறேன்...குணம் வளரணும் இதோ பாருங்க...பணம் சேரச்சேர ஊருக்கு உபகாரம் செய்யணும்! உமக்கெங்கே அதெல்லாம் பிடிக்கப்போவுது....
வந்த.: அப்படிச் சொல்லிவிடலாமுங்களா...ஏதோ என் சக்தியானுசாரம் நானும் செய்துகிட்டுத்தான் வர்றேன்...இந்த வருஷம் செல்லியம்மன் கோவில் சேவற் காவடி உற்சவச் செலவு பூரா...நான்தானுங்க..
சிங்.: அதைச் செய்வே...'தாயே! என்னை மன்னித்துவிடு. பாவத்தைக் கழுவிவிடு'ன்னு; அதுவும், ஒருவிதமான வியாபாரம்தான்யா...இதோ பாரப்பா...அதிலே எல்லாம் பலன் இல்லே...இதோ நம்ம மகன் ஈடுபட்டு இருக்கிற காரியம் இருக்கு பாரு, அதுதான் சிலாக்கியமானது.
வந்த.: உண்மைதானுங்க! ஏழை-எளியவங்களோட கண்ணைத் திறந்து வைக்கறது புண்ய காரியந்தானுங்க.
சிங்.: அப்படிப்பட்ட காரியத்துக்குக் கொடுங்களேன் ஒரு ஆயிரம்..
வந்த.: (திடுக்கிட்டு) ஒரு ஆயிரமுங்களா...
சிங்.: (கேலிச்சிரிப்புடன்) சொன்ன உடனே முகமே மறிவிட்டதே...சரிய்யா! இந்தா, இதோ பாரு...
உமக்கு இஷ்டமானதைக் கொடும்.
[வந்தவர் தயக்கமடைகிறார். கொண்டு சமாளித்துக் 500 ரூபாய் என்று கையெழுத்துப் போடுகிறார். குறிப்பேட்டை மரியாதையாக சிங்காரவேலரிடம் தருகிறார்.]சிங் : சபிச்சிக் கொட்டாதய்யா...இது சிங்காரவேலு வீட்டுக்கு அல்ல; ஏழைகளுக்கு. சரி! வந்த விஷயத்தைக் கவனிக்காமலே—என்னன்னு கேட்காமலே இருந்து விட்டேனே!...என்ன விஷயமா...வந்தீங்க?
வந்த.: ஒண்ணுமில்லிங்க...ஒரு புது வியாபாரத்தைப் பத்தி உங்களோட யோசனையைக் கேட்கலாம்னு...
சிங்.: இருக்கிற வியாபாரம் போதல்லே, புதுசா வேறே வேணுமா? சரி, ஆசை யாரை விடுது? சொல்லுங்க...என்ன வியபாரம் அது?
வந்த.: சிலோனுக்கு வெங்காய ஏற்றுமதி செய்தா...ஏதோ கொஞ்சம் கிடைக்கும்னு தெரியுது...
சிங்.: கொஞ்சம் என்னய்யா! நல்லாவே கிடைக்குது...அதனாலேதானே பேயா அலையறானுங்க பலபேர்! பர்மிட்டுக்கு...
வந்த.: நமக்கு அந்தக் கஷ்டம் இல்லிங்க...ஆறு கொடுத்து 'பர்மிட்' நம்ம பேருக்கு வருகிறபடி செய்து கிட்டேன். நம்ம சத்தார் சாயபுவோட பர்மிட்...
சிங்.: (ஒரு கணம் தீவிரமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்தவராகி, ஒரு வெடிச்சிரிப்பை உதிர்க்கிறார்) பைத்தியக்கார மனுஷன்யா நீர்! ஆசை கண்ணை மறைக்குது! சத்தார் சாயபு பர்மிட்டையா வாங்கிவிட்டீர்? ஆறும்...ரொக்கமாகவே கொடுத்தாச்சா!... போறாதவேளை...
வந்த.: என்னதுங்க என்ன சொல்றீங்க! ஆறு அதிகம்னு சொல்றிங்களா? ஆதாயம் கிடைக்கும்னு கணக்கு சொல்லுதே...
சிங்.: கூட்டல் கழித்தல் கணக்கு இலாபத்தைக் குவிச்சிக் காட்டும்யா!... யார் இல்லேன்னு சொல்றது?
வந்த.: சிரிச்சிங்களே...போறாத வேளை என்று வேறு சொன்னீங்களே...சிங்.: போறாத வேளைதான்...ஐயா! பர்மிட் இப்படித் தாறுமாறா கைமாறுவது தவறுன்னு சட்டம் சொல்லு. தெரியுதா?... உன் விஷயமாகத்தான் மோப்பம் பிடிக்கிறாங்கன்னு எனக்குத் தெரியாது! நேத்துத்தான் பெரிய அதிகாரி ஒருத்தர் வந்து தகவல் கேட்டாரு. இது விஷயமா!...நான், 'சத்தார் சாய்பு விடம் பர்மிட்டு இருக்கிறது. ஆனா... வியாபாரம் செய்யப் போதுமான பணம் இல்லே; யாருக்காவது விற்று விடுவான்'னு சொன்னேன். முன்கூட்டி என்னிடம் ஒரு பேச்சு! 'இப்படி ஒரு பர்மிட்டு இருக்குது. வாங்கட்டுமா'ன்னு கேட்டிருந்தா...நான் அதிகாரிக்கு வேறே போக்குக் காட்டி இருப்பேன். நான் என்னத்தைக் கண்டேன்? தெரிந்ததை—உண்மையைச் சொல்லிவிட்டேன். அவரு அப்பவே தந்தி கொடுத்திட்டாரே டில்லிக்கு! பர்மிட்டு பறிமுதலாயிடுமே...
வந்த.: (பதறி) பாதிப்பணம் அட்வான்சு கொடுத்து விட்டேனே...
சிங்.: பணம் கிடக்கட்டும்...ஏதாவது ரசீது ஒப்பந்தம் இதிலே கையெழுத்து உண்டா?
வந்த.: இல்லிங்க...
சிங்.: தப்பிச்சிக்கிட்டே போ! பணம் போனா போருதய்யா—கம்பி எண்ணாம இருந்தாப் போதும்; இப்பவே, சத்தாருகிட்டச் சொல்லிடு, நமக்கு வேண்டாம்யா பர்மிட்டுன்னு...
வந்த.: ஆகட்டுங்க...பர்மிட்டுக்காக நான் முயற்சி செய்தது குற்றமில்லிங்களே?
சிங்.: மூச்சு விடாதேய்யா யாரிடமும்!...அய்யோவ்! ஒரு வேலை செய்...அந்த அதிகாரி ஊரை விட்டுப் போறவரைக்கும், நீ இங்கே இல்லாமலிருந்தா...நல்லது. ஏன்னா, ஏதாவது அவன் கேட்டு, நீ எதையாவது உளறிவைத்தா...ஆபத்தாயிடும். பேசாம ஒரு நாலு நாளைக்கு வெளியூர் போய் இரு.வந்து.: காரைக்காலிலே சொந்தக்காரர் வீட்டிலே கல்யாணம்...அங்கு போய்....
சிங்.: நல்ல யோசனை...புறப்படு, புறப்படு!
டேய்! ஓடிப்போயி, சத்தார் சாயபுவை கையோட அழைச்சிக்கிட்டுவா! அவசரம், முக்கியம்னு சொல்லு ..ஊம்...
காட்சி—2.
இடம்: கடற்கரைச் சாலை.
கண்.: டிரைவர்! காரை பீச்சு ரோட்டுக்கு விடு...
டிரைவர்: (திகைத்து) பீச் ரோட்டிலேதானுங்க போய்க்கிட்டு இருக்குது வண்டி.
கண்.: (மீண்டும் டிரைவர் முதுகிலே அடித்தபடி) இடியட்? யாரை ஏமாத்தப் பார்க்கறே! இதுதான் பீச் ரோடா?
[டிரைவரை அடித்து] ஓட்டு பீச்சுக்கு! நாடியா காத்துக்கிட்டு இருப்பா.
நண்பர் : நாடியாவை வீட்டிலே விட்டுவிட்டுத்தானே பிரதர் நாம புறப்பட்டோம்...
கண்.: ஆமாம்...நாடியா ஓடியா! ஓடியா, ஓடியா! எப்படி நம்ம பாட்டு! புது ட்யூன்...டிரைவர்! ஓட்ட மாட்டே, பீச்சு பக்கம்?
டிரை.: புதுசா நான் ஒரு பீச்சு போட வேண்டியது தான்!
நண்.: நல்ல வேளை, கருப்பா! கண்ணாயிரத்தை ஜாக்ரதையாக அழைத்துக்கொண்டு போய் படுக்கவை. ஐயா கண்லே படாதபடி... [கருப்பன் கண்ணாயி ரத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு மெள்ள மாளிகையின் தோட்டப் பக்கமாக அழைத்துச்செல்கிறான்.தோட்டப் பக்கம் உள்ள படிக்கட்டு வழியாக, யாருக்கும் தெரியாமல் கண்ணாயிரத்தை அவன் அறைக்குள் அழைத்துச் சென்று, படுக்கையில் சாயச் செய்கிறான். மின் விளக்கைப் போடுகிறான் கருப்பன். போதையில் ஆள் அடையாளம் தெரியவில்லை, கண்ணாயிரத்துக்கு. எழுந்து நிற்கிறான், தள்ளாடியபடி. கருப்பனைப் பார்த்து மரியாதையாகக் கும்பிடுகிறான்.]
கண்.: (குளறியபடி) வரணும்! வரணும்! ஏது இந்தப் பக்கம்...இந்த நேரத்திலே...சௌக்கியந்தானா...குழந்தை குட்டிகளெல்லாம் சுகந்தானே.. எப்படி உங்களோட யோக க்ஷேமம்...கலியாணமெல்லாம் ஆயிட்டுதா?
[கருப்பன் திகைக்கிறான். கண்ணாயிரத்தைப் படுக்கவைக்க முயற்சிக்கிறான். சண்ணாயிரம், கருப்பனைக் கும்பிடுவதும், உட்காருவதும், குளறுவதுமாகவே இருக்கிறான்.]
கரு.: எஜமான்! நான்...நான்...கருப்பனுங்க...
கண்.: என்ன பிரதர்! நம்மை இப்படியா அவமானப் படுத்துவது? இரு பிரதர்! (என்று கூறி, அலமாரியைத் திறந்து, ஒரு பாட்டில் எடுத்துத் திறந்து டம்ளரில் ஊற்றிக் கருப்பனிடம் கொடுத்து...) சாப்பிடுங்க பிரதர் ! ஏ,ஒன்! சாப்பிடுங்க...
இதிலே என்ன பிரதர் கூச்சம்? சும்மா சாப்பிடுங்க...
நானும் இப்படித்தான் கூச்சப்பட்டேன், முதல்நாள். என்ன செய்தா தெரியுமா, மைலேடி...மைலேடி தெரியுமேல்லோ...பிரதர் நாடியா! நாடியா! ஓடியா! ஓடியா! நாடியா...(பாடுகிறான்)
காட்சி—3.
இடம்: கண்ணாயிரத்தின் அறை.
நிலைமை: சூரிய வெளிச்சம் அடிக்க ஆரம்பிக்கிறது.
[கதவு திறந்தே கிடக்கிறது. கண்ணாயிரம் அலங் கோலமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். பாட்டில் கீழே உருண்டு கிடக்கிறது. வீடு கூட்டிடும் வீராயி வருகிறாள். விளக்கை அணைத்துவிட்டு, உருண்டு கிடந்த பாட்டிலைக் கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, கதவை மூடிவிட்டுச் செல்கிறாள், வேறு வேலைகளைக் கவனிக்க.]
காட்சி—4.
இடம்: மாளிகை மாடிக் கூடம்.
நிலைமை: சிங்காரவேலர், காலைக் கடனை முடித்துவிட்டுப் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். வேலையாள், தயங்கித் தயங்கி வந்து நிற்கிறான். 'என்னடா' என்று கேட்பதுபோல் அவனைப் பார்க்கிறார்.
வேலை.: ஐயாவைப் பார்க்க வேணும்னு ஒரு பொண்ணு...
சிங்.: (வியப்படைந்து) என்னைப் பார்க்கவா...பொண்ணா..யார்டா அது?
[கூடத்தில் இருபத்தைந்து வயதுள்ள பெண், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். முகத்தில் பவுடரும், உதட்டில் சாயமும், காலில் பூட்சும் இருக்கிறது.
சிங்காரவேலரைப் பார்த்ததும், பயந்து எழுந்து நின்று கும்பிடுகிறாள்.]சிங்.: யார் நீ? யாரைப் பார்க்கணும்...
பெண்: இந்த வீட்டுக்கார ஐயாவைத்தான்!
சிங்.: அது நான்தான்...என்ன விஷயமா என்னைப் பார்க்க...
பெ.: உங்களைப் பார்க்க இல்லிங்க. இந்த வீட்டுக்கார ஐயா...வேறே ஒருவர் வாலிபமா...
சிங்.: (புன்சிரிப்புடன்) நம்ம மகன்தான்...கண்ணாயிரம்
பெ.:அவரைத்தானுங்க...அவசரமாப் பார்க்கணும்...சிங் : நீ யாரு? அவனை எப்படித் தெரியும்? அவனிடம் என்ன பேச்சு?
பெ.: (வெட்கத்துடன்) அவரோட அப்பான்னு சொல்லிவிட்டிங்க...நான் எப்படிங்க விவரமெல்லாம் சொல்றது...நான் அவரிடமே பேசிக்கொள்கிறேன்...
சிங்.: (கண்டிப்புடன்) இப்படிப்பட்ட சினேகமெல்லாம் அவனுக்கு இருக்காதே...இருக்கக் கூடாதே.
பெ: (தலை குனிந்தபடி) இரண்டு மூன்று வருஷமாகவே தெரியும்ங்க...பழக்கம் உண்டுங்க...
சிங்: நீ நாட்டியமாடுவியா?
பெ: (சிறிது குதுகலத்துடன்) ஆமாங்க...பார்த்திருக்கிறீங்களா...
சிங்: இல்லே,இல்லே! இப்பப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சரி, அவன் உன்னைப் பார்க்க மாட்டான். விஷயம் என்னான்னு என்னிடம் சொல்லு.
பெ: பார்த்தாகணும்ங்க. நேற்று இராத்திரி அவரு என் பையை எடுத்துக்கிட்டு வந்துவிட்டாரு...பணம் இருக்குது பையிலே, ஐம்பது ரூபா.
சிங்: (கோபமாக) ஏய்! என்ன கதை அளக்கற? உன்னிடமிருந்து ஐம்பது ரூபாயும் பையும் எடுத்துக் கொண்டானா? நீ எந்தக் காவாலிப் பயலிடமோ பணத்தைப் பறி கொடுத்துவிட்டு, பழியைக் கண்ணாயிரத்தின் பேர்லே போட்றே...
பெ: உங்களுக்கு ஒரு விவரமும் தெரியாதுங்க. நீங்க ஒருநிமிஷம் இங்கே வரச்சொல்லுங்களேன்...நான் பேசிக் கொள்கிறேன். பணம் இப்ப அவசரமா வேணும்...
சிங்: (ஆத்திரத்துடன்) தா! செச்சே! போ, வெளியே. பழிபோட்டுப் பணத்தைப் பறிக்கிறவளா நீ! போ வெளியே... பெ: (கோபம் பொங்கும் நிலையில்) பெரிய மனிதராச்சேன்னு மட்டுமரியாதையோடப் பேசறேன். ஒரே அடியா விரட்டறியே, என்னய்யா! குடிவெறி ராத்திரி உன் மகனுக்கு. பணப்பையைத் தூக்கிக்கிட்டு வந்துவிட்டான். அதைத் திருப்பி வாங்காம இந்த இடத்தைவிட்டு ஒரு அடி கூட நகரமாட்டேன். தெரியுதா?...
என்னமோ வீட்டுக்குள்ளே வந்துட்டாளே, என்ன வேணுமானா... செய்யலாம்னு விரட்டறியா? இப்பக் கூச்சல் போட்டுக் கும்பலைச் சேர்த்து...பார், உன்னை...
சிங்: (சிறிது பயந்து) தா! சும்மா இரு, ஆர்ப்பாட்டத்தைக் குறைச்சிக்க...அவனையே கூப்பிட்டுக் கேட்கறேன்...கண்ணாயிரம்! கண்ணாயிரம்...
சிங்: (கோபமாக) என்னடா இது? இந்தப் பொண்ணு என்னென்னமோ சொல்லுதே...
கண்: (தடுமாற்றத்துடன்) என்ன...என்ன! இங்கே ஏன் வந்தே?
பெ: (கோபம் குறையாத நிலையில்) நீ செய்துவிட்டு வந்த காரியத்துக்கு நான் வேறே எங்கே போவேன்?
சிங்: பணப்பையை எடுத்துக்கிட்டு வந்தயாமே...
கண்: (திணறியபடி) நானா!...பணப்பையையா...இந்தப் பெண்ணெ எனக்குத் தெரியாதே...
பெ: (பதறி) இவர் மகன்தானே நீ! நீ வேறே எப்படி இருப்பே? என்னைத் தெரியாதா உனக்கு?சிங்: அவன்தான் சொல்றானே, உன்னைத் தெரியாதுன்னு.
பெ: இவரோட அப்பன்தானே நீ. நீ வேறே எப்படிப் பேசுவே! மரியாதையா... பணத்தைக் கொடுத்து... அனுப்பிவையுங்க... உங்களோட உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்து போயிடுவேன்னு மட்டும் எண்ணிக் கொள்ளாதீங்க. ஊர் சிரிப்பா சிரிக்கும்! அவமானத்தைத் தாங்கமாட்டிங்க...பெரிய இடம்...தெரியுதே இலட்சணம்! என்னை வம்புக்கு இழுத்து வீணா அவமானப்படாதிங்க..
சிங்: கண்ட படி சுத்துவதாலே வருகிற வினைடா இது, வினை...
பெ: உன் யோக்கியதை தெரியுது இப்ப...அப்ப கொஞ்சினே; கெஞ்சினே...கூத்தாடினே...பாட்டு வேறே (கேலிக்குரலில்) நாடியா! ஓடியா! ஓடியா! நாடியா! பாட்டு அப்ப! இப்ப நான் அவளைப் பார்த்ததே கிடையாதே!
சிங்: (கோபத்துடன்) போதும், உன் பேச்சை நிறுத்திக்கொள்ளு. ஐம்பது ரூபாயா வேணும்?
பெ: தரனுமல்ல, இனாமல்ல: என் பையிலே இருந்த பணம்...
சிங்: (சலிப்புடன்.) போடா...போய், ஐம்பது கொண்டா, அலமாரியிலே இருக்குது.
பெ: (கண்டிப்புடன்) மேலே ஒரு அஞ்சு கொண்டு வாங்க சார், பைவாங்க...பெரிய மனிதர்களாம் பெரியா மனிதர்கள்! எதிலேன்னுதான் தெரியல்லே. நாங்க வயத்துச் சோத்துக்கு வேறே வழி இல்லாததாலே கெட்டு அலையறோம். கொட்டிக் கிடக்குதே பணம், குணம் பாரு எப்படி இருக்குதுன்னு...
சிங்: வாயை மூடிக்கிட்டுக் கிட...
பெ: (குத்தலாக) கொஞ்சம் பேசேன், கொஞ்சம் பேசேன்னு கூத்தாடினான் உன் மகன் ராத்திரி...
சிங்: கண்ணாயிரம்! நல்லா இருக்குதா, நீ செய்த காரியம்? ஊர் மெச்ச வாழற குடும்பம்டா இது...நம்மைப் பார்த்து மற்றவங்க நீதி, நியாயம், அன்பு, பண்பு - இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும். அந்த அர்த்தத்திலே தான் நம்ம இடத்தைப் பெரிய இடம்ணு ஊரார் சொல்றாங்க...நீ செய்த இந்தக் காரியம், நினைத்தாலே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்...அப்படிப்பட்ட காரியம்! யாரு செய்கிற காரியம் இதெல்லாம்? வக்குவழியத்ததுங்க கண்டபடி திரியும்: கண்டவளோடு சேர்ந்து கூத்தாடும். அதுகளுக்கு நல்லது கெட்டது தெரியாது; மான அவமானத்தைப் பத்தின அக்கரை இருக்காது; எப்படி நடந்தாலும் யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. நாம் அப்படியா? நமக்கு அடுக்குமடா கண்ணாயிரம் இப்படிப் பட்ட காரியம்?
சிங்: (ஆத்திரத்துடன்) என்னிடமே சொல்றயா அந்த அண்டப் புளுகை? ஏண்டா! என்னை என்ன ஏமாளின்னே தீர்மானித்துவிட்டாயா?
கண்: அண்டப்புளுகு—ஆகாசப் புளுகுன்னு என்ன வேணுமானாலும் சொல்லிக் கொள்ளுங்க. எனக்குத் தெரியாதுன்னு சொன்னா, மூச்சு விடாமே பேசிக் கொண்டே இருக்கிறீங்களே...
சிங்: (உருக்கமாக) ஏண்டா உனக்கு இப்படிப் புத்தி கெட்டுப்போச்சு? சிங்காரவேலன்னா, நாலு பேருக்கு உபகாரி. நம்பினவர்களைக் கெடுக்காதவன், உண்மைக்குப் பாடுபடுகிறவன் என்கிற நல்லபேர் இருக்குதடா! ஊரார் மெச்ச வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறேன்...நீ பொறந்தே, அதைக் கெடுக்க. கூசாமே —பயப்படாமே பொய் பேசறே என்னிடமே.
அன்: யார் வந்திருந்தது கீழே...?
சிங்: யாரோ பள்ளிக்கூடத்து வாத்தியாரம்மா...தர்மம் கேட்க...
கண்: என் ரிஸ்ட்வாட்சை யார் எடுத்தது?
சிங்: ரிஸ்ட்வாட்ச் காணோமா?
அன்: தங்கச் செயினாச்சே, எங்கே தொலைத்து விட்டே?கண்: (சலிப்புடன்) உம்! நான் அஞ்சு வயசு அறியாப் பாலகன், தொலைத்துவிட! உள்ளே மேஜையின் மேலே தான் வைத்திருந்தேன்...
அன்: மேஜையின் மேலே வைத்தா...எங்கே போயிருக்கும்?
அன்: அறை முழுவதும் தேடிப் பார்த்தாச்சு...
சிங்: என்னடா இது! நிஜமாத்தான் சொல்றயா?
அன்: கொழந்தை எதுக்காகப் பொய் சொல்லப் போகுது? நல்லா... கவனமிருக்குதேல்லோ...
சிங்: அறைக்குள்ளே யாரார் போனது...காலையிலே...
அன்: யாரும் இல்லையே..வீராயி போயிருந்தா.....கூட்ட.
சிங்: வீராயி போனாளா?
அன்: அவ ரொம்ப, நல்லவடா தம்பி! திருட்டு—புரட்டு கிடையாது.
சிங்: அட, சும்மா இரு. அவன்தான் சொல்றானே, மேஜை மேலே வைத்ததா...இறக்க முளைச்சிப் பறந்தா போயிடும், கைக்கடியாரம்? வீராயிதான் செய்திருக்கணும், அந்த வேலையை! எங்கே அந்தக் கழுதே?
கண்: வீட்டுக்குப் போயிருப்பா...
சிங்: (பதறி) அய்யய்யோ! ஊரைவிட்டே ஓடிடப் போகுது! வீராயி புருஷன் வேலை வெட்டி இல்லாம கிடக்கிறான். என்ன செய்வா, குடும்பச் செலவுக்கு? திருட்டுக் கை வந்துவிட்டது...
அன்: (சாந்தமாக) இருக்காதுடா தம்பி! ஏழையா இருந்தாலும், அவ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கறவ...
சிங்: (தீர்மானமாக) ஏழையாக இருந்தாலே கெட்ட புத்தி, கேடுகெட்ட நினைப்பு தன்னாலே வந்துவிடும். தரித்திரம் அதுகளைப் பிடுங்கித் திங்கறது எதனாலே...கந்தக் கேடுகெட்ட புத்தி இருக்கிறதாலே தான்...அய்யோவ் கணக்கப்பிள்ளே...
போயி... இன்ஸ்பெக்டரைப் பார்த்து, வீராயி வீட்டிலே போய்ச் சோதனை போடச் சொல்லு உடனே...
அன்: தம்பி! தம்பி! நாமே கூப்பிட்டுக் கேட்கலாம்டா...போலீசிலே பாவம், அடிச்சிடப் போறாங்க...நம்ம வீட்லே மாடா உழைக்கிறவ வீராயி.
சிங்: துளியாவது கவலை இருக்குதா பாரேன் இவனுக்கு...நானூறு ரூபா இருக்கும்...காணாமப் போயிட்டுது...கவலையத்து இருக்கிறான்.
காட்சி—5.
இருப்போர்: வீராயி, கருப்பன்.
நிலைமை: கருப்பன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனைத் தட்டி எழுப்புகிறாள் வீராயி.
வீராயி: துளியாவது கவலை இருக்குதா...இப்படியா தூக்கம் வரும்! காலங்காத்தாலே எழுந்து போயி நாலு இடம் சுத்தி பிழைப்புக்கு வழி தேடுவோம் என்கிற எண்ணம் இருக்குதா! நாய் படாத பாடு படறேன்...ஈவு இரக்கம் இருக்குதா துளியாவது?
கரு: வீடா இது? அடா, அடா, அடா! ஏண்டி இப்படி உயிரை வாங்கறே...இப்ப எந்த ரயிலுக்கு நேரமாகுதுன்னு எழுப்பித் தொலைக்கறே என்னமோ...கடியாரத்தைப் பார்த்து வேலைக்குப் போயி, காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கற உத்யோகம் கெட்டுவிடப் போகுதா?...
வீராயி: (ஆத்திரமும் கேலியும் கலந்த குரலில்) உங்களுக்கு ஏங்க வேலைவெட்டி...நான் இல்லே உழைக்க! நீங்க படுத்துத் தூங்குங்க...வித்து விசாரம் துளியாவது இருந்தா இப்படியா இருப்பிங்க...ராத்திரிக்கெல்லாம் சுத்தறது, பகலெல்லாம் படுத்துத் தூங்கறது. குடும்பம் உருப்பட்டுவிடுமேல்லோ...
கரு: ஏண்டி இப்படிச் சபிச்சிக் கொட்டறே...உன் இழவுக்காகத்தான் ஆலாப்பறந்து பார்க்கறேன்...வேலை கிடைச்சாத்தானே!! போயி...எங்காவது திருடவா, சொல்லு! அதையாவது...
வீராயி: (அழுகுரல்) என் மனசை வேகவைக்காதே!
இது என்னது?
வீட்டு: வீராயி! எப்ப வந்து கேட்டாலும் அவரு வரட்டும்னு சொல்லி நாளை ஓட்டினியே...இப்ப அவனும் இருக்கிறான்...எடு வாடகைப் பணத்தை. நானும் பொறுத்துப் பார்த்தாச்சி...இனி பணம் வாங்காமெ இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்...ஆமாம்...
கரு: (அலட்சியமாக) எவ்வளவய்யா வாடகை பாக்கி?
வீட்டு: பதினெட்டு ரூபா...
வீராயி: (திகிலுடன்) அடப் பாவி மனுஷா! இந்த வேலையும் ஆரம்பித்துவிட்டாயா? கடிகாரம் சின்ன எஜமானருடையதாச்சே!
சப்-இ: 'கரெக்டா' சொன்னார், வீராயிதான் திருடி இருப்பான்னு! சரியான சமயத்திலேதான் வந்தோம்.
வீராயி: (கலக்கத்துடன்) ஐயய்யோ! சாமி! நான் திருடலிங்க... சத்யமாச் சொல்றேன்.
சப்-இ: (மிரட்டும் குரலில்) கையும், மெய்யுமாகப் பிடிப்பட்ட பிறகுமா பொய் பேசறே...நட, ஸ்டேஷனுக்கு...
சப்-இ: ஏண்டா! முழுப் பூசணிக்காயைச் சோத்திலே மறைக்கப் பார்க்கறே...கண்ணாயிரம் ரூமிலே காலையிலே கூட்டப்போனவ வீராயிதானே?
கரு: (கண்கலக்கத்துடன்) அவ ஒரு பாவமும் அறியாதவ. இந்தக் கடியாரம், நேத்து நடுராத்திரிலே இருந்து என்னிடம் இருக்குதுங்க.
இதையும் கைக்கடியாரத்தையும் கண்ணாயிரத்தய்யாவேதானுங்க எனக்குக் கொடுத்தாரு.
சப்-இ: சன்மானம் கொடுத்தாரா உனக்கு...ராஸ்கல்! தங்கச் செயின் போட்ட கடியாரத்தை...நீ பெரிய சீமான்...உனக்கு அவர் பரிசா.. கொடுத்தாரா?
இழுத்துக் கொண்டு போ, வீராயியை...
கரு: தொடாதே! தொட்டே கையை ஒடித்துவிடுவேன். அவ உத்தமி, படாத பாடுபட்டு குடும்பத்தை நடத்திச் செல்கிற குணவதி, தான் பட்டினி கிடந்தாவது இந்தப் பாவியைக் காப்பாத்திய புண்யவதி. பிறர் சொத்துக்கு ஒருநாளும் அவ ஆசைப்படமாட்டா. உழைப்பு, உழைப்பு, உழைப்பு...என்னைக் கணவனாகக் கட்டிக்கொண்ட நாளா ஓயாத உழைப்புதான். ஒரு சுகமும் கண்டதில்லே! ஐயா! என் பேச்சிலே உங்களுக்கு நம்பிக்கையில்லையா? சரிய்யா...நம்ப வேண்டாம்...சொத்துக் கிடைச்சுப் போச்சு! திருட்டுப்பட்டத்தை ஒத்துக்கொள்ளவும் ஒரு ஆள் தானே தேவை. நான் இருக்கிறேன். இழுத்துக்கிட்டுப்போயி, அடியுங்க—உதையுங்க-ஆறுமாசம் ஜெயில்லே தள்ளுங்க. ஆனா, அந்த உத்தமியை மட்டும் ஒண்ணும் செய்யா திங்கய்யா... என்னாலே அவபட்ட கஷ்டம் போதும்யா...இந்த அவமானம் வேண்டாம்...அவளுக்கு வேண்டாமய்யா, அவளுக்கு வேண்டாம்...வீராயி: போதுமுங்க...உங்களோட மனசு தெரிஞ்சி என் மனம் பூரிச்சுப் போச்சிங்க...
ஐயா! அவர் என் பேரிலே இருக்கிற அன்பினாலே அப்படிப் பேசினார்...நான்தான்யா திருடினேன்.
கரு : (பதறி) வீராயி! வீராயி! வேண்டாம்! எனக்காக நீ செய்ததெல்லாம் போதும்...இது வேண்டாம்
வீராயி: நீங்க சும்மா இருங்க...நான்தான் திருடினேன்...நான்தான்!
இவ்விதம் ஆளுக்கொருவிதமாகப் பேசிக்கொள்கின்றனர் - கருப்பன், வீராயி நிலையிலே உள்ள எளியோர்கள்! கருப்பன் மீதோ, வீராயி மீதோ குற்றம் இருக்காது என்று கூறத் துணிவும் வரவில்லை; மனமும் எழவில்லை. இல்லாதவன் அகப்பட்டதை எடுத்துக் கொள்வான்! ஏழை திருடுவான்!!—இது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்ட உண்மை என்று ஏழையர் உலகினரே நம்பிக்கிடந்திடுவது கொடுமையினும் கொடுமை! அவர்களை அவ்விதம் நம்பும்படிச் செய்வதிலே செல்வர் உலகு வெற்றி பெற்றுவிட்டது.
இப்படித்தான் செங்கப்பன் கால் காப்பைத் திருடிவிட்டான்; போடு போடுன்னு போட்ட பிறகுதான் உண்மையை ஒப்புக் கொண்டான். காதோடு சேத்துப் பறித்துக் கொண்டானே கம்மளல, காத்தான்—போன வருஷம்.. கண்டுபிடிக்க வெகுநாளாச்சே! பாவம், கொழந்தை, அதன் கழுத்திலே இருந்த செயினை அறுத்துக்கிட்டானேல்லோ...இப்படிப் பல 'கதை'களைப் பேசிப் பேசி, ஆதாரம் தேடிக் கொண்டனர். கருப்பனும் வீராயியும் ஒரு சூழ்நிலை காரணமாக இந்தக் கதிக்கு ஆளாகிவிட்டனர் என்று எண்ணக்கூடப் பலருக்கு முடியவில்லை. கருப்பன் பதறுவதையும், வீராயி கதறுவதையும் பாசாங்கு, பசப்பு, நடிப்பு, வேஷம் என்று இப்படித்தான் கருதிக் கொண்டனர். சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டருடைய தைரியம், சுறுசுறுப்பு, கண்டிப்பு ஆகியவற்றைப் பற்றியும் பாராட்டினர்.
காட்சி—6.
இருப்போர்: சிங்காரவேலர், கணக்காளர்.
நிலைமை: சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிப் புன்னகையுடன் வருகிறார். சிங்காரவேலர், சோபாவிலிருந்து எழுந்திருக்காமலேயே, 'வாங்க' என்று மரியாதையாக அழைக்கிறார். சிங்காரவேலரிடம் கடியாரத்தைக் காட்டி, 'இதுதானே?' என்று கேட்கிறார். மகிழ்ச்சியுடன் அதைக் கையிலே வாங்கிப் பார்த்த படி கண்ணாயிரத்தைக் கூப்பிடுகிறார். கண்ணாயிரம் அங்கு வருகிறான். கடியாரத்தைத் தருகிறார்கள்.
கண்: என்னுடையதுதான்...எங்கிருந்தது?
சப்-இ: ஐயா சொன்னபடிதான்...வீராயி வீட்டிலே தான்...
சிங்: அவதான் திருடி இருக்கணும்னு எனக்குத் தெரியுமே! வேறே எப்படிப் போய்விடும்?சப்-இ: ஒரேயடியா...நான் திருடலேன்னு சொன்னா. சத்தியம்கூடச் செய்தா...
சிங்: (அலட்சியமாக) இந்த மாதிரி சத்தியமெல்லாம் அதுகளுக்குச் சக்கரைப் பொங்கலாச்சே...செம்மையாக கொடுத்தாலொழிய அதுகள் நிஜம் பேசாதே.
சப்-இ: கருப்பன், கடியாரத்தை கண்ணாயிரமே தனக்குக் கொடுத்ததாகச் சொன்னான்.
சிங்: (ஒரு சிரிப்புச் சிரித்தபடி) பாருங்களேன், அண்டப் புளுகை.
சப்-இ: (அலங்காரப் பையைக் காட்டி) இந்தப் பையைக்கூட கண்ணாயிரம் கொடுத்தாராம்!
சப்-இ: இது ஒரு நாட்டியக்காரியுடையது.
சிங்: (வக்கீல்போல விளக்கமாக) நாட்டியக்காரியுடைய பைக்கும் என் மகனுக்கும் என்ன சம்பந்தம்? வரவர நானும் பார்க்கறேனுங்க, வயத்துச் சோத்துக்கு வழியத்ததுகளெல்லாம், பழி பாவத்துக்கு அஞ்சாமத்தான் பொய் பேசுதுங்க.சப்-இ: கருப்பன், கோர்ட்டிலேயே சொல்லப் போகிறேன் இந்தப் பை விஷயம் என்று மிரட்டுகிறான்...எதை வேணுமானாலும் சொல்லு... காணாமல் போன பொருள் உன் வீட்டிலே இருந்தது...உன் மனைவி அந்த வீட்டிலே வேலை செய்கிறது...இந்த இரண்டும் போதும் எங்களுக்கு என்று சொன்னேன்.
சிங்: பய, பெட்டிப் பாம்பாகிவிட்டிருப்பான்...
சப்-இ: இல்லிங்க, நான் பை விஷயமாச் சொல்லத்தான் போகிறேன் என்கிறான்.
சிங்: (ஏதும் அறியாதவர்போல்) நம்ம வீட்டுக் கடியாரம் களவு போனதற்கும் இந்தப் பைக்கும் என்ன சம்பந்தம்? நீங்க இதை ஒரு அயிட்டமாகவே சேர்த்துக் கொள்ளத் தேவையில்லையே...
சப்-இ: இதுவும் கருப்பன் வீட்டிலேதானே கிடைச்சது? அதனாலே, இதைப்பத்தின பேச்சும் வரத்தானே செய்யும்.
சிங்: (கவலையை மறைத்தபடி) வராமலிருந்தா..! நல்லதுன்னு பார்க்கறேன்..
சப்-இ: கோர்ட்டோட விருப்பம் அதெல்லாம்...
சிங்: (சிறிது குழைவாக) நீங்க நினைச்சா இது விஷயமா கோர்ட்டிலே எந்தப் பேச்சும் கிளம்பாதபடி செய்ய முடியாதா என்ன! அது கிடக்கட்டங்க...நீங்க பசுமாடு வேணும்னு கேட்டிங்களாமே...
சப்-இ: ஒரு நூறு நூற்றைம்பது ரூபா விலையிலே வேணும்...
சிங்: நான் நாளைக்கு அனுப்பி வைக்கறேன்...
சப்-இ: (குத்தலாக) புரியுதுங்க...அதுக்கு வேறே ஆளைப்பாருங்க...நானும் வேறே பசு பார்த்துக்கொள்றேன்...அன்; என்னடா தம்பி! கிடைச்சுவிட்டதாமே...
சிங்: கிடைக்காமெ...
அன்: போகட்டும்...நமக்குப் பொருள் கிடைச்சுட்டது. போலீசுக்குச் சொல்லி வீராயியை விட்டுவிடச் சொல்லு. ஏழை...பாவம்...அவ உழைச்சித்தான் குடும்பம் நடக்கணும்...
சிங்: (கண்டிப்பான் குரலில்) உனக்கு ஒண்ணும் தெரியாதுக்கா. சும்மா இரு. ஏழையாச்சே, பாவமாச்சேன்னு பார்த்தா...திருட்டும் புரட்டும், கொள்ளையும் கொலையுந்தான் வளரும். அடக்கி வைக்காவிட்டா அதோ கதியா போகும். நம்ம சொத்து போகுது, வருது! அதுக்காகக்கூட இல்லக்கா! ஊரிலே அக்கிரமும் அநியாயமும் நடக்கவிடலாமா? தர்மம் நிலைக்குமா? ஆட்டுக்கும் அளவறிந்துதான் வால் வைத்திருக்காரு ஆண்டவன். ஆனாலும், அடே அப்பா! இந்த மாதிரி ஆசாமிகளுக்கு வரவர எவ்வளவு வாய்த்துடுக்கு, நெஞ்சழுத்தம், எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று பேசுகிற முரட்டுத்தனம் வளர்ந்திருக்குது தெரியுமோ! போறான் பார்டா பொதிமாடு மாதிரின்னு நம்மைபோல ஆளுகளைக் கண்டா...பேசறானுங்க....ஊரை அடிச்சு உலையிலே போட்டுத்தாண்டா சீமான் ஆனான் என்று நம்ம காதிலே விழுற மாதிரியாவே பேசுதுங்க...திருட்டுப் பயல்களை விட்டு வைக்கலாமா?
அன்: ஐயோ பாவம்னு இருக்குது தம்பி!சிங்: நீதி, நியாயம் இதெல்லாம் நிலைக்கணும்னா சில வேளையிலே மனசைக் கல்லாக்கிக்க வேணும் உனக்குத் தெரியாது, உலகம் போற போக்கு...
வந்தவர்: கோர்ட்டிலே நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த நாட்டியக்காரி விஷயம்...?
சிங்: நான் பார்த்துக் கொள்கிறேன்...
வந்த: தம்பியைக் கூப்பிடுங்க...சில 'பாயிண்ட்' சொல்லிவிட்டுப் போகிறேன்.
வந்த: உட்கார் தம்பி...
சிங்: சரி...சரி! உட்கார்...
வத்த: தம்பி! அந்தப் பை விஷயம் இருக்கிறதே, அதை அந்தப் பயல் பெரிசு படுத்தப் பார்க்கிறான். நாமும் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
வந்த: இந்தப் பை யாருடையது?
கண்: எனக்குத் தெரியாது.வந்த: இதை இதற்குமுன் எப்போதாவது பார்த்ததுண்டா?
கண்: இல்லை...
வந்த: நாட்டியக்காரி நாடியாவை உமக்குத் தெரியுமா?
கண்: தெரியாது...
வந்த: பார்த்ததுண்டா?
கண் : இல்லை...
வந்த: இதை நாட்டியக்காரி நாடியாவிடமிருந்து நீ பறித்துக் கொண்டதாகக் கருப்பன் கூறுகிறானே, அதற்கு என்ன சொல்கிறாய்?
கண்: பச்சைப் புளுகு!
வந்த: இந்தப் பையையும் கடியாரத்தையும் நீயே கொடுத்ததாகக் கருப்பன் கூறுகிறானே, அதற்கு என்ன சொல்கிறாய்?
கண்: அண்டப்புளுகு!
வந்த: இவ்வளவுதான்! அழுத்தந்திருத்தமாக, தயங்காமல், இப்படிக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும், பயம் துளியும் வேண்டாம். நான் அங்குதானே இருப்பேன். என்ன?
கண்: கருப்பன் கூறும் உண்மை அவ்வளவும் அண்டப் புளுகு என்று நான் சொல்ல வேண்டும்.
வந்த: (சிரித்தபடி) தம்பி வேடிக்கையாகப் பேசுதே...
சிங்: டேய்...வேடிக்கை இருக்கட்டும். அங்கே போயும் ஏதாவது உளறித் தொலைத்துவிடாதே...தெளிவாக...
கண்: அழுத்தந் திருத்தமாகச் சொல்லவேண்டும்.
சிங்: ஆமாம்...ஆமாம்!கண்: அண்டப் புளுகுகளை.. அப்பா! நாமெல்லாமா அண்டப் புளுகு பேசுவது? வயிற்றுச் சோற்றுக்கு வகையற்றவர்கள் செயல் அல்லவா அது? நீங்கள்தானே சொன்னீர்கள். (குத்தலாக) நான் பயந்தே போனேன். நமது அப்பா இவ்வளவு அருமையாக உபதேசம் செய்கிறாரே...பொய் பேசுவது தகாது என்று கூறுகிறாரே, இனி, அவர் வியாபாரம் என்ன ஆகும் என்று பயந்து போனேன். இப்போது அந்தப் பயம் போய்விட்டது...
சிங்: போதும்...போதும், உன் குறும்புத்தனம்...
கண்: பொய் பேசச் சொல்லி நீங்களே பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள். அழுத்தந்திருத்தமாகப் பொய் பேசுவது எப்படி என்று இவர் கற்றுக் கொடுக்கிறார். நல்ல உலகமப்பா இது... நல்ல உலகம்...
சிங்: நாட்டியமாடும் நாடியா பழக்கந்தானே?
அவன்: அது ஏனுங்க! வேறே புதுமுகம்...சீட்டுப் போல பலது இருக்கு.
சிங்: இதோ, பாரய்யா! நான் என்ன கேட்கிறேன், எதுக்கு என்பதைத் தெரிந்து கொள்ளாமே!...
அவன்: நல்லா தெரியுதுங்க! நாடியா கொஞ்சம் பட படன்னு பேசும்...
சிங்: கொஞ்சமென்ன! நல்லாவே (குத்தலாக) பேசறா...அவன்: அது சிலருக்குப் பிடிக்கும் பேச்சு...ஆனா நாட்டியமும் தெரியாது; நல்ல சுபாவமும் கிடையாது. நான் சொன்னேன் பாருங்க, சிட்டு, அது இந்த மாதிரி இடத்துக்குப் பொருத்தம்.
சிங்: கர்மம்! கர்மம்! நாட்டியத்துக்கு அல்ல அய்யா. இது கோர்ட் விவகாரம், அந்தப் பொண்ணு இருக்காளே, நாடியா, அவ சாட்சி சொல்லணும், நம்ம பக்கம்! முடியுமா உன்னாலே, சரிப்படுத்த...
அவன்: (யோசித்தபடி ) கொஞ்சம் கஷ்டம்தானுங்க...பிடிவாதக்காரி!
சிங்: செலவு பற்றிய கவலை வேண்டாம்.
அவன்: பார்ப்போம்ங்க...இங்கே அழைத்துக்கொண்டு வரட்டுமா...அல்லது நீங்களே அங்கே வாரிங்களா?
இங்: இரண்டும் வேண்டாம். நீயே பேசி, அதாவது, நீயே அவளுக்குப் புத்தி சொல்வதுபோலப் பேசி நம்ம பக்கம் சாட்சி சொல்ல சம்மதிக்க வைக்கணும். அதெல்லாம் பெரிய இடம். அந்த இடத்துப் பகையெல்லாம் கூடாது. பல மாதிரி தொல்லையெல்லாம் வரும். அதனாலே அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லி ஆபத்திலே மாட்டிக் கொள்ளாதே!....அவர்கள் பக்கம் சாட்சி சொன்னா பணமும் கிடைக்கும்; ஆதரவும் தருவாங்க; அப்படி இப்படின்னு சொல்லணும். ஏன்யா, இதையெல்லாமா விளக்க வேணும்? நீ என்ன, அனுபவமில்லாத ஆளா?
அவன்: கோர்ட் விவகாரமான அனுபவம் ஏதுங்க? பார்க்கிறேனுங்க, என்னாலே முடிந்ததை!
காட்சி—7.
இருப்போர்: நாடியா, மூதாட்டி.
நாடியா: வாங்கண்ணேன்! ஏது அத்தி பூத்ததுபோல்...
அவன்: வரணும் வரணும்னு! ஆனா...வெறுங்கையோட வரப்படாது பாரு, அதனாலே வரவில்லை...
நாடி: அப்படின்னா...இப்ப ஏதோ கச்சேரி கிராக்கியோட வந்திருக்கிறீங்கன்னு அர்த்தம். இல்லையா...
நாடி: என்னண்ணே, பீடிகை பலமாப் போடறிங்க...என்ன வேலை அது?
அவன்: ஒரு ஐந்து நிமிஷ வேலை...கோர்ட்டிலே சாட்சி சொல்லணும்...
நாடி: எந்த டிராமா 'காண்ராக்ட்'டரோட தகராறு?
அவன்: அடடே! இது அந்த விதமான விஷயமல்ல...பெரிய இடத்து விவகாரம்...சிங்காரவேலன்னு ஒரு சீமான்...
நாடி: ஆமாம்! தெரியும் அந்த ஆசாமி சீமான்தான். ஆனா பெரிய மனுஷன்னு சொல்லாதே...நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். எனக்குத் தெரியும்.
அவன்: உனக்குத் தெரியுமா! எப்படி?
நாடி: அது பெரிய கதை அண்ணே! இப்ப அவரு சொல்லித்தான் வந்திருக்கறியா?
அவன்: நீயாகப் போகிற மாதிரி போய்வான்னு சொல்லி என்னை அனுப்பினாரு...நாடியா! காப்பி பலகாரம் வாங்கிவரச் சொல்லேன்'....
நாடி: வேண்டாமண்ணே! காபி வேலையெல்லாம் முடிந்தது. வந்த விவரம் சொல்லு.
அவன்: விவரம் என்னிடம் சொல்லவில்லை. ஏதோ கோர்ட்டிலே கேசாம்...நீ அவருக்காக சாட்சி சொல்ல வேணுமாம்!
நாடி: என்ன கேசுன்னு உனக்குத் தெரியாது அண்ணே. தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டே. நம்மைப் போல ஒரு ஏழையைக் கெடுக்கறதுக்கு என்னை உடந்தையாக இருக்கச் சொல்றாரு. காலையிலே பூக்கடைக்காரர் விவரமா சொன்னாரு அண்ணே! நான் கோர்ட்டுக்குப் போகத்தான் போறேன், சாட்சி சொல்லத்தான் போறேன். ஆனா, உண்மையைச் சொல்லப்போறேன்...இந்த ஆள் விழுங்கிப் பக்கம் பேசமாட்டேன்...அவன்: நாடியா! அப்படிப்பட்டவர்களை விரோதிச்சிக்கக் கூடாதம்மா...நான் சொல்றதைக் கேளு.
நாடி: வேறே வேலையைப் பாரு! வகையா வந்து மாட்டிக் கொண்டாங்க. பெரிய மனுஷனுங்க சாயம் வெளுக்க வேணுமேல்லோ...விடுவனா!
அவன்: எல்லாம் நம்ம சாயமுந்தான் வெளுத்துப் போகும்!
நாடி: விட்டுத்தள்ளு அண்ணே! நம்ம சாயம் இனிமேலா வெளுக்கப் போவுது!
அவன்: என்ன வேணுமானாலும் தருவாரு...
நாடி: ஏன் தரமாட்டாரு...எங்க மாமனாரு?
அவன்: என்னது...என்னது...?
நாடி: அப்படித்தான் கோர்ட் பதறப் போகுது...கொல்லுன்னு சிரிக்கப்போகுது...அப்பொ...அந்தப் பெரிய மனுஷன் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்றதைப் பார்க்கணும்...
அவன்: பெரிய கதையே நடந்திருக்குதுபோல இருக்குதே!
நாடி: ஆமா...கோர்ட்டிலே தான் சம்பூர்ண பட்டாபிஷேகம்...(சிரிக்கிறாள்)
காட்சி—8.
இருப்போர்: சிங்காரவேலர்.
சிங்: சரி, சரி!...போ! போ! கையாலாகாதவன்...
காரை எடுக்கச் சொல்லு—பழசு—போர்டு...
காட்சி—9.
இருப்போர்: நாடியா, சிங்காரவேலர்.
நிலைமை: சிங்காரவேலர், ஒரு பழைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எதிர்ப் புறம் நின்று கொண்டிருக்கிறாள் நாடியா. அவள் பார்வையில் வெறுப்பும் அலட்சியமும் கலந்திருக்கிறது. நாடியா நின்று கொண்டிருக்கும் போக்கு, சிங்காரவேலரை எழுந்து போகலாம் என்று எடுத்துக் கூறுவது போலிருக்கிறது. அவள் போக்கைக் கண்டு சிங்காரவேலர்
சிங்: உட்கார்!
நாடி: பெரிய மனிதர்கள் இப்படிப்பட்ட இடமெல்லாம் வரக்கூடாதே...
சிங்: அப்படி ஒரு சட்டமா என்ன?
நாடி: (சலிப்புடன்) சரி, சரி! என்ன பேச வேண்டுமோ அதைப் பேசிவிட்டுப் போங்கள்.
சிங்: நாடியா? உனக்கு அன்று மூண்ட கோபம் இன்னும் தணியவில்லை...
நாடி: இன்றும் உம்முடைய ஆள்வந்து நெருப்பைக் கிளறிவிட்டுத்தான் போனான்.
சிங்: (பொய்க் கோபம் காட்டி) முட்டாள் நாடியா அவன்! என்ன சொன்னான் உன்னிடம்?
நாடி: உங்கள் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றச் சொன்னான்...பொய் சாட்சி சொல்லி...
சிங்: நினைத்தேன்...அப்படித்தான் வகையில்லாமல் பேசியிருப்பான் என்று...
நாடி: (ஆத்திரத்துடன்) பொய்சாட்சி சொல்லச் சொல்ல வில்லையா?சிங்: (அமைதியாக) சொன்னேன் நாடியா...சொன்னேன்...நானே அதைச் சொல்லத்தான் நேரில் வந்திருக்கிறேன்.
நாடி: (மேலும் ஆத்திரம் கொண்டு) முடியாது! முடியவே முடியாது! பொய்சாட்சி சொல்லி ஒரு ஏழைக் குடும்பத்துக்குக் கேடு செய்யமாட்டேன்...நான் இழிவான நிலையில்தான் இருக்கிறேன்....
சிங்: (உருக்கம் காட்டி) இழிவான நிலையில் நீ இருப்பது உன் குற்றமல்ல, சமூகம் செய்யும் குற்றம்தான்! காரணம், உன்னைக் காப்பாற்றி நல்வழிப்படுத்த என்னைப்போல ஒருவன் இருந்தால் நீ ஏன் பாவம், இந்தக் கதிக்கு ஆளாகப் போகிறாய்!
நாடி: (கேலிக் குரலில்) உருக்கமாகக்கூடப் பேசத் தெரிகிறதே!... அன்று உருட்டல் மிரட்டல் அபாரமாக இருந்தது.
சிங்: அப்போதும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றத்தான்.
நாடி: (வெறுப்படைந்து) குடும்ப கௌரவம்! நாசமாகட்டுமே, எனக்கென்ன...
சிங்: உனக்கொன்றும் இல்லை. எனக்குக்கூட அதனாலே கஷ்டமோ, நஷ்டமோ இல்லை...கருப்பன் குடும்பம் கெடக் கூடாது என்று நினைக்கிறாயே, அது சிலாக்கியமான குணம். பலருக்கு இருப்பதில்லை; அந்த இளகிய மனம் உனக்கு இருக்கிறது. ஆனால் நாடியா...கோர்ட்டிலே உன் சாட்சியத்தால் எங்கள் குடும்ப கௌரவம் பாழானால். . . ஆயிரக்கணக்கான ஏழைகளின் குடும்பம் நாசமாகிவிடும்...
நாடி: என்னய்யா, மிரட்டிப் பார்க்கிறீர்!
சிங்: குடும்ப கௌரவம் கெட்டால் தொழில் கெடும். தொழில் கெட்டால் அதை நம்பிப் பிழைக்கும் ஆயிரம் குடும்பம் வேலையின்றி அலையும்; அழியும். வா, என்னோடு நேரிலேயே பார்க்கலாம்...பயப்படாமல் வா...என் மகள் போல. . . நீ. . .நாடி: ஆ! என்ன, என்ன!...மகள் போல...மகள் போல...
சிங்: ஓஹோ! மருமகள் என்று சொல்லியிருக்க வேண்டுமா... குடும்ப கௌரவத்துக்காகத்தான் உன்னை மருமகளாக்கிக் கொள்ள முடியவில்லை...வா, நாடியா...
நாலைந்து கல் தொலைவில், சிறு காடடர்ந்த இடத்தை நோக்கி மோட்டார் செல்கிறது. 'நாடியா'வுக்கு இலேசாகத் திகில் பிறக்கிறது. காட்டிலே அடித்துப் போட்டு விட்டுவிடுவார்களோ என்ற பயம்.
தொலைவிலிருந்து ஒசை கேட்கிறது; கல்லைப் பிளப்பது போன்ற ஓசை.
சிறிது நேரத்தில், மோட்டார் ஒரு வெளியில் சென்று நிற்கிறது. கீழே இறங்குகிறார்கள் இருவரும். ஒரு புதிய கோயில் எழும்பிக் கொண்டிருக்கிறது. சிங்காரவேலர் உருக்கமாகப் பேசுகிறார்: "இந்தத் திருப்பணியிலேதானம்மா நான் ஈடுபட்டிருக்கிறேன். நெடுங்காலத்துக்கு முன்பு இது ஒரு கீர்த்தி மிக்க ஸ்தலம். காலக்கொடுமையால் இடிபாடாகி விட்டது இந்த ஆலயம். இதனைப் புதுப்பித்துக் கட்டி முடிக்க வேண்டும். ஆண்டவன் கருணையும் தயவும் இருந்தால்தான் முடியும் நாடியா! இங்குள்ள மூர்த்தியின் பெயர் அனாதை ரட்சகர் என்பது. பகவான் எடுத்த அவதாரங்கள் பத்து அல்லவா? அந்தப் பத்து அவதாரங்களிலும் செய்து முடிக்காத காரியம், ஏழைகள் படும் துயரைப் போக்காமலிருந்துவிட்டது.
அதற்காகவே பகவான் இங்கு அனாதை ரட்சகர் என்ற திருநாமத்துடன் அவதரித்தார் என்பது ஐதீகம். பழைய செப்பேடு, ஓலைச்சுவடி மூலம் இது தெரிகிறது. ஒரு புலவர் குழு தலபுராணம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. வெளியீட்டு விழாவும் விமரிசையாக நடந்திடும்.
நாடியா! இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டுவிட்டால்—இன்று சாஸ்திர முறைப்பட்ட பூஜைகள் நடக்கத் தொடங்கி விட்டால், ஏழைகளுக்கு இன்பமான வாழ்வு கிடைத்திடும்.
நோய் நொடியால் அவதிப்படுபவர்கள் இந்தத் திருக்குளத்தில் ஒன்பது வேளை மூழ்கினால் போதும்.
கண் பார்வை இழந்தவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, அதோ, அந்த மரத்தடியில் ஒரு மேடை அமைக்கப் போகிறோம்; அங்கு படுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரவில், நாக சர்ப்பம் வரும்! கண் இருக்கும் இடத்தைத் தன் நாவல் தீண்டிவிட்டுப் போகும். காலையில் குருடன் விழி பெறுவான். இதுபற்றிய கல்வெட்டே கிடைத்திருக்கிறது.
இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அற்புதம் ஆயிரம் என்று சொல்லலாம்...
இந்தக் காடு ஒரு பெரிய ஜமீன்தாருடையது. மான் வேட்டை ஆடுவதற்காக இதை வைத்துக் கொண்டிருந்தார். இரண்டு இலட்ச ரூபாய் விலைக்குக் கொடுத்திருக்கிறார். பாதிப்பணம் தந்திருக்கிறேன்; எட்டு இலட்சம் விலைக்கு மற்றொரு ஜமீன்தார் கேட்டார்; கொடுக்கவில்லை. கோயில் திருப்பணிக்கு என்றதும் கொடுத்ததைக் கொடு என்றார், புண்ணிய காரியம் என்பதால்!இது வெறும் கோயில் மட்டுமல்ல, நாடியா ! இது ஏழைகளின் சுவர்க்கம்—இங்கு அனாதை விடுதலை பள்ளிக்கூடம், தர்மசத்திரம், மருத்துவமனை...என்னென்னமோ திட்டம் என் மனதில். ஆண்டவன் அருளால் உன் உதவி கிடைத்து விட்டால், என் எண்ணம் ஈடேறிவிடும்.
மொத்தத்தில் பத்து இலட்சம் செலவிடத் திட்டம். ஆமாம், நாடியா! அவ்வளவும் என் ஒருவனாலே ஆகுமா? அதனால் இதற்குப்பல புண்ணியவான்களின் பணமும் தேவை; கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்க உதவியும் கிடைக்கிறது.
அதோ பார்! ஒரு சிற்பி, நந்தி சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறானே, அவனுக்கு மட்டும் மாதம் முன்னூறு ரூபாய். அவனுக்குத் துணையாகப் பதினெட்டு பேர்கள்.
மொத்தத்தில் இந்தத் தர்ம காரியத்தில், நாடியா! ஐநூறு பேர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெருஞ் செலவும் நான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சர்க்கார் உதவி, செல்வவான்களின் நன்கொடை, பக்தர்களின் காணிக்கை இவ்வளவும் திரண்டு கிடைத்தால் தான் இந்தக் காரியம் நடைபெறும். என் பெயர், என் குடும்பப் பெயர் மீது ஒரு துளியும் 'மாசு' விழாதிருந்தால்தான், மதிப்பு குறையாது இருந்தால்தான், இந்தப் புண்ணிய காரியம் பூர்த்தியாகும். ஒரு சிறு கறை விழுந்தாலும் போதும். சிங்காரவேலர் இப்படிப்பட்டவர்தானா அவர் மகன் கெட்ட நடத்தைக்காரன்தானா என்ற பெயர் கிளம்பினால் போதும் நாடியா! இவ்வளவும் பாழாகும். மனிதர்களின் காரியம் மட்டுமல்ல, மகேசன் காரியம்கூட நாசமாகிவிடும். குடும்ப கௌரவம் கெடக்கூடாது என்பதிலே எனக்கு ஏன் அவ்வளவு அக்கறை என்பது புரிகிறதா? மதிப்பு மங்காதிருக்கவேண்டும்; அந்த மதிப்பின் மீதுதான் நம்பிக்கை எழுகிறது; அந்த நம்பிக்கை நொறுங்கினால், இந்தத் தேவாலயமே நொறுங்கிப் போகும். உன் ஒரு வார்த்தையில் இருக்கிறது, இந்தப் புண்ய ஸ்தலத்தின் எதிர்காலம்.நாடியாவின் மனம் ஓரளவு உருகிடத் தொடங்கிற்று. ஆனால் மறுகணம் மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.
ஆலயம் இங்கு; அலங்கோலம் அங்கு—வழியில் பார்த்தோமே, பெயர் என்ன, சிங்காரபுரி! அந்த மக்கள் சேற்றிலே புரள வேண்டியது; இங்கு சந்தன அபிஷேகம் நடத்த ஏற்பாடாகிறது. அதற்கு நான், 'பொய்சாட்சி' சொல்ல வேண்டும். நியாயம் வெகுநேர்த்தி, அய்யா! வெகு நேர்த்தி என்று வேதனையை அடக்கிக் கொண்டு நாடியா கூறினாள்.
சிங்காரவேலர் திடுக்கிடவில்லை.
"உண்மையான பேச்சு. நாடியா! குப்பம் அங்கே கோலாகலம் இங்கே! இது என்ன நியாயம் என்றா கேட்கிறாய் நாடியா?
நான் சொல்ல வந்ததில் ஒரு பாதி மட்டுமே சொல்லி முடித்தேன். இந்தத் தேவாலயத் திருப்பணியுடன் இணைந்தது குப்பத்தைத் திருத்தி அமைப்பதும். பார்த்திருப்பாயே, 'சிங்காரபுரி' என்ற பெயர்ப் பலகையை. என் பெயரைச் சூட்டிவிட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். அந்தக் குப்பத்தை உண்மையிலேயே சிங்காரபுரி ஆக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தச் சிங்காரபுரிக்குத்தான் இந்தக் கோயில் வருமானம் அவ்வளவும். புரிகிறதா? தேவாலயப் பணி முடிந்தால்தான். குப்பம் சீரூராகும். பெயர் சிங்காரபுரி என்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் ஒத்துக் கொண்டால் நாடியாபுரி என்றே நான் பெயரிடுவேன்—உன் கையில்தான் இருக்கிறது அதன் எதிர் காலமும்! அந்தக் குப்பத்தார்தான் இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை உழப்போகிறார்கள்...கூலிக்கு அல்ல...குத்தகைக்கும் அல்ல...குடும்பம் ஒன்றுக்கு ஐந்து ஏக்கர், இந்தக் கோயில் நிலத்திலிருந்து" என்றார் சிங்கார வேலர்.
நாடியாவின் மனக் கண்முன், குப்பம் புது சீருராகத் தெரியலாயிற்று! குப்பை மேட்டில் புரண்டு கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளிகளில் படிக்கும் காட்சி தெரிந்தது. பள்ளம் சேறு எல்லாம் மறைந்து, வரிசை வரிசையாக வீடுகள்! வீடுகளில் விளக்கொளி—மக்கள் முகத்தில் மகிழ்ச்சி ஒளி தென்பட்டது.
நாடியா, சில ஆண்டுகள் நாடகத்தில் இருந்தவள்; ஏழையர் வாழ்வு சீர்பட வேண்டும் என்பது பற்றியே 'வசனம்' பல, பாடம் அவளுக்கு.
"உண்மையாகவா?" என்று தழதழத்த குரலில் கேட்டாள்.
சிங்காரவேலர் ஒரு வசீகரமான புன்னகையைக் காட்டியபடி தலையசைத்தார்; நாடியா தலை கவிழ்ந்துகொண்டாள்.
"நாடியா! எனக்குத் தெரியும். நீ படபடவென்று பேசுபவளே தவிர நல்ல மனம், இளகிய மனம் உனக்கு என்று. கருப்பனைப்பற்றிக் கவலைப்படாதே. மேல்கோர்ட்டில் அவனுக்காக வாதாட வேறு ஏற்பாடு செய்து விடுதலை வாங்கித் தரமுடியும். இப்போது என் குடும்பப் பெயர் காப்பாற்றப்பட வேண்டும். இத்தனை ஏழைக் குடும்பங்களின் நல்வாழ்வுக்காக. என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார். "ஆகட்டும், உங்கள் இஷ்டம்போல" என்றாள் நாடியா.
காட்சி—10
இருப்போர்: சிங்காரவேலர், கண்ணாயிரம், நாடியா, கருப்பன், வீராயி, வழக்கறிஞர்கள்.
நிலைமை: [கருப்பன் கூண்டில் நிறுத்தப் பட்டிருக்கிறான். சாட்சிக் கூண்டில் கண்ணாயிரம் நிற்கிறான்]
கண்ணாயிரம் சார்பில் வந்துள்ள வழக்கறிஞர்...
வ: (நாடியாவின் அலங்காரப் பையைக் காட்டி) இது யாருடையது என்று தெரியுமா?
கண்: (சிங்காரவேலரைப் பார்த்துவிட்டு) தெரியாது...வ: இது நாடியா என்கிற நாட்டியக்காரியுடையது. அவளிடமிருந்து இதைப் பறித்துக் கொண்டீர், கருப்பனுக்கு இதையும் கைக்கடியாரத்தையும் இனாம் கொடுத்தீர் என்று கருப்பன் கூறுகிறான். என்ன சொல்கிறீர்?
(தயக்கத்துடன் சிங்காரவேலரைப் பார்க்கிறான். அவர் வாயை அசைத்துக் காட்டுகிறார், வெறுப்புடன்)
கண்: அண்டப்புளுகு!
வ: (பையைக் காட்டி) இது உன்னுடையதா?
நா: இல்லை.
வ: கண்ணாயிரம் என்பவரை உனக்குத் தெரியுமா?
நா: தெரியாது.
வ: கண்ணாயிரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
நா: ஓ!
வ: பார்த்திருக்கிறாயா? எப்போது? எங்கே?
நா: இப்போது! இங்கே! கோர்ட்டில்...
வ: நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்த வழக்கு சம்பந்தமான சகல பிரச்சினைகளையும் சீர்தூக்கிப் பார்த்ததில், வீராயி, கருப்பன் இருவருமே குற்றவாளிகள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். வீராயிக்கு மூன்று மாத வெறுங்காவல் தண்டனையும், கருப்பனுக்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறேன்.
அண்டப்புளுகு பேசுவது, ஆளை அடிப்பது, அகப்பட்டதைத் திருடுவது போன்ற குற்றம் புரிவோர்கள், சமூக விரோதிகள். அவர்களால் நாட்டுக்கே ஆபத்து. ஆகவே, அப்படிப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை தந்தால் மட்டும் போதாது; சமூகம் அப்படிப்பட்டவர்களைக் காரித் துப்ப வேண்டும்.
காட்சி—11.
இருப்போர்: சிங்காரவேலர், அன்னபூரணி, கண்ணாயிரம்.
நிலைமை: சிங்காரவேலரும் கண்ணாயிரமும் வந்தது கண்டு அன்னபூரணி ஆவலாக வருகிறார்கள்
அன்: என்ன தம்பி ஆச்சி?
சிங்: ஆகவேண்டியது ஆச்சி...ஆறு மாசம் அந்தப் பயலுக்கு; மூன்று மாசம் அவளுக்கு!
அன்: பாவம்! போறாத வேளை! என்ன செய்வது? அதனதன் விதிப்படி நடக்குது...இரு தம்பி! காப்பி கொண்டு வர்றேன்...
கண்: (குத்தலாக) காரித்துப்ப வேண்டுமாம் அப்பா! கேட்டீர்களா, தீர்ப்பை! அண்டப்புளுகு பேசுபவர்கள் சமூக விரோதிகள். நாட்டுக்கே ஆபத்து...காரித் துப்ப வேண்டும் என்கிறார் நீதிபதி...
சிங்: (சலிப்புடன்) சரி, சரி! சும்மா விடு...போய்ப் படு...கண்: (பதறியபடி) கோழை! நான் ஓர் கோழை..அக்ரமத்துக்கு உடந்தையாக இருந்தேன்...சுயநலம், சுகபோகம் என்னைப் பிடித்தாட்டுகிறது...விடுபடமுடியவில்லை...அந்த ஏழைக் குடும்பம் என்னால் அல்லவா இந்தக் கதியாயிற்று?...அந்த நாடியா அவளுமா பச்சைப் புளுகு பேசுவது? எனக்குத்தான் கற்றுக் கொடுத்தீர்கள் வக்கீல் வைத்து...அவள்...
சிங்: (கேலிச் சிரிப்புடன்) அவளுக்கு நான் கற்றுக் கொடுத்தேன்...போடா மடப்பயலே! விவரம் தெரியாமல் போய் இப்படியெல்லாம் சிக்கிக் கொள்ளாதே!...எத்தனை காலம் நான் இருக்க முடியும், கல்லுப் பிள்ளையார்போல...புத்தியோடு நடந்துகொள்...உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியான நடவடிக்கை இருக்க வேண்டும்.
சிங்: மடப்பயலே! துணியைப் பிழிந்து போட்டுவிட்டு வரப்படாதோ...கூடத்தைச் சேறாக்கிவிட்டாயே, கடாமாடு! எதுக்காகத் தலைதெறிக்க ஓடிவந்தே?
உ: மழை நிற்கிறதா காணோமுங்க...ஒரே வெள்ளக் காடாயிருக்கு, ஊரு...
சிங்: (கேலியாக) வந்து 'குடை' பிடிக்கச் சொல்றயா, ஊராருக்கு?
உ: இல்லிங்க...நம்ம கரும்புத் தோட்டப் பக்கம் இருக்குதுங்களே...பள்ளம்...காத்தான் குட்டை ரொம்பி வழியுதுங்க...
சிங்: கல்லை மண்ணைப் போட்டு அடைக்கறது...
உ: நிற்கலிங்க...தண்ணி பொத்துக்கிட்டு வருதுங்க...கரும்புத் தோட்டம் பக்கமா..
சிங்: (பதறி) கரும்புத் தோட்டப் பக்கமா?
உ: ஆமாங்க...வெள்ளக்காடு ஆயிடுங்க கரும்புத் தோட்டம் அழிந்து விடும்ங்க...உழைப்பு அவ்வளவும் வீணாயிடும்ங்க...
சிங்: இலட்ச ரூபா அல்லவா போயிடும்...கரும்பு தரமா வந்திருக்குது. ஆலைக்காரன் அட்வான்சுகூடக் கொடுத்துவிட்டான்...உ: என்ன செய்யறதுன்னு தெரியலிங்க...ஒரே திகிலா இருக்குது...
சிங்: ஏலே...தண்ணியை வேறே பக்கம் திருப்பி விட்டால் என்ன?... கரும்புத் தோட்டப்பக்கம் கரை போடுங்க...வேறே பக்கம் இருக்கிற கரையை வெட்டி விடுங்க...
உ: செய்யலாமுங்க...ஆனா...
சிங்: ஏன், அப்பவும் தண்ணி கரும்புத் தோட்டத்துப் பக்கமாகத்தான் பாயும் என்கிறாயா?
உ : இல்லிங்க...ஒரு மணி நேரத்திலே தண்ணி முச்சூடும் வேறே பக்கம் போயிடும்...ஆனா, அந்தப் பக்கம் தான் 'குப்பம்' இருக்குதுங்க!...நம்ம பேர்லே இருக்குதுங்களே அது...
சிங்: இந்தப் பக்கம் கரும்புத் தோட்டமல்ல இருக்குது...டேய்! ஒரு பத்து ஆளைப் பிடிச்சி, கரையை வெட்டி, தண்ணியைத் திருப்பிவிடு...மளமளன்னு ஆகட்டும் வேலை...பெரிய மழை மறுபடியும் வர்றதுக்குள்ளே...சோம்பேறித்தனம் காட்டாதிங்க...பயிர் அழிஞ்சுது, அவ்வளவுதான் நீங்க...தொலைஞ்சிங்க, கூண்டோட...தெரியுதா?...ஓடு! ஓடு! கடாமாடு...குப்பத்து ஆட்களைக் கூப்பிடாதே, இந்த வேலைக்கு... தெரியுதா?
[உழவன் ஓடுகிறான்]
காத்தான் குட்டை பக்கம், உழவன் பத்து ஆட்களுடன் சென்று சிங்காரவேலர் சொன்னபடி செய்து விடுகிறான். சிங்காரபுரி என்ற குப்பம், வெள்ளக்காடாகி விடுகிறது. குப்பத்தில் ஒரே கூக்குரல்! குழந்தை குட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். வெள்ளம் 'குபுகுபு'வெனப் புகுந்து விடுகிறது; குடிசைகள் விழுகின்றன. முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு என்று வேகமாக ஏறுகிறது தண்ணீர். கால்நடைகள் தத்தளிக்கின்றன. நீந்தத் தெரிந்தவர்கள், மற்றவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். குழந்தைகள் சில பிணமாகின்றன. கூக்குரல் அதிகமாகிறது...தொலைவிலுள்ள காடு நோக்கி ஓடிவருகிறார்கள், குப்பத்து ஆட்கள். கரும்புத் தோட்டத்தில் வெள்ளம் இல்லை; அழிவு இல்லை; ஆனால் குப்பம் அழிந்துவிடுகிறது.
காட்சி—12.
இடம்: மாளிகைக் கூடம்
இருப்போர்: சிங்காரவேலர், அன்னபூரணி, கண்ணாயிரம்.
(சில நாட்களுக்குப் பிறகு)
அன்: தம்பி! வந்து போனாரே பெரிய அதிகாரி, அவரிடம் ஏன் கண்ணாயிரத்தைப் பத்தி எதுவுமே சொல்லல்லே...உனக்குத் தெரிந்தவர்களை, கண்ணுக்குச் சினேகிதம் செய்து வைத்தாதானே நல்லது...
சிங்: பெரிய அதிகாரியிடம் இவனைப்பத்திச் சொல்லணுமா...எதைக் குறித்துச் சொல்றேக்கா, எதை? (கோபமாக) வெளியே தலைகாட்ட முடியல்லே...கண்ட பய கண்டபடி பேசறான்...கூடத்தகாதவனோடெல்லாம் கூடிக்கொண்டு ஆட்டம் போடறான்...
அன்: ஏண்டா தம்பி! இல்லாததும் பொல்லாததும் சொல்றே. இப்பத்தான் கண்ணு, நாட்டியம்-பாட்டுக் கச்சேரி இதுக்கெல்லாம் போறதுகூட இல்லியே!சிங்: (வெறுப்புடன்) அந்த இழவுக்குப் போய்க் கொண்டிருந்தால்கூடப் பரவாயில்லையே !... இப்ப 'அய்யா' உலகத்தைத் திருத்தக் கிளம்பிட்டாரே, உனக்குத் தெரியாதா! உழவனுக்கே நிலம்...கொடுக்கச் சொல்றாரே!...இவங்க பாட்டன் சொத்து...பங்கு போட்டு கொடுக்கச் சொல்லி இவர் உத்திரவு போட்டு விட்டாரு...தெரியாதா உனக்கு?...குடும்ப கௌரவமே நாசமாகுது...கேவலமாப் பேசறானுங்க...
கண்: (கோபிக்காமல் மெல்லிய குரலில்) கேவலமாகப் பேசாமே வாழ்த்துவாங்களா, நம்ம செய்யிற காரியத்துக்கு.
சிங்: (கோபமாக) என்னடா சொல்றே...என்ன சொல்றே?
அன்: சும்மா இருடா, தம்பி!
சிங்: ஏண்டா முணுமுணுக்கறே! நம்மாலேதானே...குடும்ப மானமே போகுது என்கிற எண்ணம் இருந்தா...இப்படியா நடந்து கொள்வே?
கண்: என்னாலே ஒண்ணும் குடும்ப மானம் போகவில்லை...ஊரிலே கேவலமாப் பேசறவங்க...என்னைப்பத்தி எதுவும் பேசல்லே...
சிங்: அப்படின்னா...
அன்: (சலிப்புடன்) விட்டுத் தொலைடா தம்பி! கண்ணாயிரம், நீயும் ஏன் விதண்டாவாதம் பேசிக்கிட்டு இருக்கறே...
சிங்: பேசட்டும் அக்கா! பேசட்டும்னுதான் நானும் சொல்றேன்...மூடி மூடி ஏன் வைக்க வேணும்?
[வேகவேகமாகச் சென்று, கவிழ்ந்து கொண்டிருக்கும் அவன் முகத்தைத் தூக்கி நிறுத்தியபடி...]
டேய்! என்னைப் பார்த்துப் பேசு...சொல்ல..நினைக்கிறதை தைரியமாச் சொல்லேண்டா...ஊரிலே எவனாவது ஒரு வார்த்தை பேசியிருக்கிறானா என்னைப் பத்தி, கேவலமா...ஏண்டா! ஊமையா நிக்கறே...எந்தப் பயலாவது பேசுவானா...
கண்: (தன்னை விடுவித்துக் கொண்டு) எப்படிப் பேசுவான்... பேசினா...தொலைத்து விடுவீர்களே என்ற பயம். உடனே ஏவிவிட மாட்டீர்களா அடி, உதை, குத்து, வெட்டுன்னு...வியாபாரியா இருந்தா தீர்ந்தது, 'திவாலா'வான்..விவசாயியா இருந்தா பயிரிலே மாடு மேயும்; வைக்கப் போரிலே தீப்பிடிக்கும். களஞ்சியத்திலே கொள்ளை நடக்கும்...தெரியுமே, எல்லோருக்கும்..தெரிஞ்சி எவன் உங்க எதிரிலே துணிஞ்சிப் பேசுவான்...
சிங்: அக்கா! கேட்டாயா...அவன் பேசறதை கேட்டயான்னேன்...ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணுன்னு சொல்றயே...பார்த்தாயா அவன் பேசியதை. ஊரிலே ஒரு பயலும் சொல்லத் துணியாததைச் சொல்றான். ஏண்டா! காலிகளை ஏவி, கொல்லச் சொல்றேன், கொளுத்தச் சொல்றேன்...ஏண்டா! அப்படித்தானே?
அன்: எவனாவது உன்னை ஏதாவது ஏசி இருப்பான்...காதிலே விழுந்திருக்கும். அதைச் சொல்ல வேண்டிய முறை தெரியாததாலே, எப்படியோ சொல்லிவிட்டான்.
சிங்: ஓங்கி கன்னத்திலே அறையாமே அப்படிப்பட்ட கழுதையை, இங்கே வந்து என்னைக் கேவலமாப் பேசறதா? ஒரே மகனல்லவா, ஒரே மகன்! உயிருக்கு உலையா வந்திருக்கிறான். கொஞ்சமான பணமா பாழாகுது இவனாலே...
கண்: அந்தப் பணம் அப்படித்தான் பாழாகும்...
என்று ஊரிலே பேசுகிறார்கள். ஏழை வயிறு எரிய எரியச் சேர்த்த பணம்தானே! அது இப்படித்தான் பாழாகும் என்கிறார்கள்...எனக்கே கேட்க வெட்கமாக இருக்கிறது...
சிங்: இருக்காதே என் எதிரில்...வெட்டிப் போட்டு விடுவேன்...எனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்வேன். ஏழைக்காகப் பரிந்து பேசுகிறாயா, ஏழைக்காக! பெரிய மகான்! மடப்பயலே! என்னால் எத்தனை ஏழைக் குடும்பங்கள் பிழைக்கின்றன தெரியுமா? எத்தனை வீடுகளில் நான் விளக்கு ஏற்றி வைத்திருக்கிறேன் தெரியுமா, உனக்கு என்னடா தெரியும்? உல்லாச உலகில் உலவி வருகிறாய், என் பணத்தைச் செலவழித்துக்கொண்டு! இதிலே உபதேசம் வேறு செய்கிறாயா, உபதேசம்!
அன்: (செல்லமாக) அவனுக்கென்னடா தலையெழுத்து உழைக்கணும்னு.
சிங்: (கோபமாக) அக்கா! குறுக்கிட்டுப் பேசாதே!
கண்: (அமைதியாக) பேசுங்களப்பா, பேசுங்கள். இம்சைக்கு ஆளான எத்தனையோ பேர் சொல்லத்துணியாததை நான் சொல்லிவிட்டேன். கோபம் கொப்பளிக்கிறது...உங்களுக்கு...பேசுகிறீர்கள்...உங்களாலா முடியாது முடுக்காகப் பேச...பேசுங்கள்! உம்மிடம் கடன்பட்டு சொத்தை இழந்தவன் சபிக்கிறான்...உம்மை! உம்மை மட்டுமல்ல...நம்மை! காதிலோ விழுகிறது. முதலிலே கடுங்கோபந்தான் பிறந்தது எனக்கும்! உண்மை பிறகு தெரிந்தது...வெட்கமும் வேதனையும் பிய்த்துத் தின்கிறது இதயத்தை!
அன்: (விளங்காமல்) கடனைத் திருப்பி வாங்குவதிலே கண்டிப்பாக இருப்பது பெரிய பாவமாடா அப்பா! அப்படியும் எத்தனையோ பேருக்கு வட்டி தள்ளிக் கொடுத்திருக்கிறானே தம்பி!
கண்: உங்களுக்கென்ன தெரியும்? வெளுத்தது பால் உங்களுக்கு... மற்றொரு பயங்கர உண்மையைச் சொல்லட்டுமா? குப்பம் வெள்ளத்திலே மூழ்கி அழிந்ததே, மூன்று குழந்தைகள் பிணமாகி மிதந்தனவே, மக்கள் வீடிழந்து தவித்தார்களே, யாரால்...
அன்: பைத்தியக்காரப் பிள்ளையா இருக்கறியே...அந்த மக்களுக்குக் கஞ்சி வார்க்கப் பணம் கொடுத்ததே உன் அப்பா தானே...
கண்: கஞ்சி வார்த்தார் கதறிய மக்களுக்கு—கதியற்ற மக்களுக்கு, என் அப்பா! எப்படிப்பட்ட கருணை? கோயில் கட்டி அல்லவா கும்பிடவேண்டும்! என்னை நேருக்கு நேர் பார்த்துச் சொல்லச் சொல்லுங்கள்...குப்பம் அழிந்ததற்கு யார் காரணம்? கொலைபாதகத்துக்குக் காரணம் யார்? அழிவுக்குக் காரணம் யார்? கஞ்சி வார்த்த கனவானைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்...[சிங்காரவேலர் திகைத்து உட்காருகிறார்.அன்னபூரணி ஏதும் விளங்காத நிலையில் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்...கண்ணாயிரம் கோபம் மிகுதியால், சிங்காரவேலர் அருகே சென்று உரத்த குரலில்...]
கண்: என்ன பதில்? ஏன் வாயை மூடிக்கொண்டீர்?
சிங்: குப்பம் அழிந்தது யாரால் என்றுதானே கேட்கிறாய்...(குரூரமான பார்வையுடன்) என்னால் தானடா, என்னால்தான்! கரும்புத் தோட்டம் அழியக்கூடாது என்பதற்காகத்தான்...கரும்புத் தோட்டம் யாருக்காக? உனக்காக... நான் வேட்டையாடுகிறேன்; நீ விருந்து சாப்பிடுகிறாய். நான் ஊரைக் கெடுக்கிறேன் என்கிறாயே, ஆமாடா! ஆம்! நான் ஊரைக் கெடுக்கிறேன். நீ உல்லாசத்தில் புரள்கிறாய். நீயாயம் பேசுகிறாயா, நியாயம்! எப்போது பேசுகிறாய், உன் நியாயத்தை? வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிக்கொண்டு, வகை வகையான இன்பத்தைச் சுவைத்துக்கொண்டு, சீமான் மகன் என்ற அந்தஸ்தில் புரண்டு கொண்டு, தெவிட்டும் அளவு இரத்தத்தைக் குடித்துவிட்டு, இப்போது எனக்கே உபதேசம் செய்கிறாய்; போதனை செய்யும் துணிவு வருகிறது உனக்கு...
கண்: (ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட நிலையில்) அப்பா!
சிங்: (பற்களைக் கடித்தபடி) அப்பா! ஆமடா; ஆம்! அந்த ஒரு சொல்தான் நீ எனக்குத் தந்தது. அதற்காக நான் உனக்கு இந்த மாளிகையைத் தருகிறேன், மாந்தோப்பு தருகிறேன். கடைகள், வீடுகள், நகைகள், மோட்டார்கள், என் உழைப்பு முழுவதும் தருகிறேன். சிறுவிரல் அசைத்ததில்லை நீ; பெருநிதி கிடைக்கிறது உனக்கு! சின்ன மீன்களைத் தின்று தின்று பெரிய மீன் கொழுக்கிறது. அந்தப் பெரிய மீனைத் தின்பதற்கு நீ பிறந்திருக்கிறாய்! நியாயமா பேசுகிறாய், நியாயம்—என்னிடம்—நீ—இப்போது! அப்பா! புதிய மாடல் மோட்டார் வேண்டும். இப்போது இருப்பதற்கு என்ன? அது அறுபது மைல் வேகத்துக்குமேல் போகவில்லை அப்பா. ஆமைபோல் நகருகிறது. வேறே ஸ்போர்ட்ஸ் மாடல் வேண்டும். ஆகட்டும் பார்க்கலாம். ஆர்டர் கொடுத்தாகிவிட்டதப்பா! சரி, சரி,...இப்படி அல்லவா...உனக்கு வேண்டிய பொருளை எல்லாம் கேட்டுப் பெறுவாய். முட்டாளே! இது எப்படிக் கிடைத்ததென்று அப்போது யோசித்ததுண்டா? இவ்வளவு சுகபோகம்...ஏன் என்ற எண்ணம் பிறந்ததா? இவ்வளவும் நமக்குத் தருகிறாரே, நாம் அவருக்கு என்ன தருகிறோம் என்ற எண்ணம் பிறந்ததா? அதுதான் தருகிறாயே, ஒருசொல்...அப்பா! அது ஒன்றுதானே நீ தருவது? அவ்வளவுதானே உன்னால் முடிந்தது?
அவ்வளவுதான் அவனால் முடிந்தது...?
★