திருவாசகம்/அச்சோ பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"(தில்லையில் அருளியது) மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:11, 14 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

(தில்லையில் அருளியது)


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு

அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே

மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்

தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்

ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை

எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்

சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்

அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.


பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு

நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்

உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று

அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.


வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்

கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்

பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து

அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்

பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி

உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை

ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்

காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை

மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்

ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை

மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்

அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ

ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை

அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.


படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்

குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்

நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா

அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.


பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி

வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை

சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட

ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.


திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவாசகம்/அச்சோ_பதிகம்&oldid=16949" இலிருந்து மீள்விக்கப்பட்டது