என் சரித்திரம்/63 சிவலோகம் திறந்தது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தலை | தலைப்பு =<big><font color="green">..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:43, 5 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

63. ‘சிவலோகம் திறந்தது’


யுவ வருஷம் கார்த்திகை மாத ஆரம்பத்தில் (நவம்பர் 1875) என் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் பாடம் நடைபெற்றது. அவருடைய அசௌக்கியத்தால் ஒரு நாளைக்கு முப்பது பாடல்களே பாடங் கேட்க இயன்றது. தக்க வைத்தியர்கள் கவனித்து வந்தனர். சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதேயன்றி நோயைப் போக்குவதற்கு உபயோகப்படவில்லை. காலபலம் கை கூடவில்லை. குமாரசாமித் தம்பிரான் அவர் செய்யும் பூஜையைத் தாமே செய்து பிரசாதம் அளித்து வந்தார்.

ஆசிரியரது உடல் தளர்ந்தாலும் அவருடைய குணச்சிறப்பு வேறுபடவில்லை. அத்தளர்ச்சியில் அவரது அறிவும் அன்பும் மரியாதையும் பெருந்தன்மையும் சிறப்பாகப் புலப்பட்டன.

நோயின் கடுமை


அப்பாழும் நோய் ஆசிரியர் உடம்பில் உள்ள பலத்தை வரவரக் குறைத்துவந்தது; தளர்ச்சியையும் அதிகப்படுத்தியது. பாடஞ் சொல்வது நின்றது. படுத்த படுக்கையாகவே இருக்கத் தொடங்கினார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை இடைவிடாது உடனிருந்து சவேரிநாத பிள்ளை செய்துவந்தார். நானும் என்னால் இயன்றவற்றைச் செய்துவந்தேன்.

சிறியதாயார் செய்த உதவி


என் சிறியதாயார் மிக நன்றாகச் சமையல் செய்வார். அவர் செய்தளிக்கும் உணவுவகைகளின் ருசிகண்ட நான் ஆசிரியருக்கு விருப்பமான வியஞ்சனங்களைச் செய்வித்துக்கொண்டு சென்று அவருக்கு அளிப்பேன். அவரோடு பழகியதனால் அவருக்கு இன்ன இன்ன வியஞ்சனங்களில் பிரியம் உள்ளதென்பதை நான் அறிந்திருந்தேன். என் வேண்டுகோளுக்கிணங்கி என் சிறியதாயார் நான் வேண்டியவற்றை அன்புடன் செய்துதருவார். ஆசிரியர் அவற்றை உண்டு மிக்க திருப்தியை அடைவார். அவர் உண்டு மகிழ்வதை அறிந்து நானும் ஆறுதல் பெறுவேன்.

ஆசிரியர் பெரிய பிரயாணத்திற்கு சித்தமாகிறாரென்ற குறிப்பு யாவருக்கும் தெரிந்துவிட்டது. அவருடைய குமாரரும் மனைவியாரும் மாயூரத்திலிருந்து திருவாவடுதுறைக்கு வந்தனர்.

தாய் தந்தையார் வரவு


அக்காலத்தில் என் தாய், தந்தையார் கொள்ளிடத்திற்கு வடகரையிலுள்ள வேப்பூரில் இருந்து வந்தனர். உடையார்பாளையம் ஜமீன்தாரின் மைத்துனரும் கல்லையென்னும் ஊரில் இருந்தவருமான முத்துசாமி நயினார் என்பவர் என் தகப்பனாரை ஆதரித்து வந்தார். பிள்ளையவர்களின் தேக அசௌக்கியத்தை நான் என் தந்தையாருக்கு ஒரு கடிதமூலம் தெரிவித்தேன். அதைக் கண்டவுடன் அவர் என் அன்னையாரையும் அழைத்துக்கொணடு திருவாவடுதுறை வந்து என் சிறியதாயார் வீட்டில் ஜாகை வைத்துக்கொண்டு தங்கியிருந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் என்பால் வைத்துள்ள அன்பினால் நான் எந்தப் பொருளை எந்தச் சமயம் கேட்டாலும் மடத்து அதிகாரிகள் வழங்கி வந்தனர். அதனால் என் தாய் தந்தையருக்கு வேண்டியவை யாதொரு சிரமுமில்லாமல் கிடைத்தன.

பொன்மொழிகள்


ஆசிரியர் பாடஞ் சொல்வதை நிறுத்திவிட்டாலும் நாங்கள் ஏதேனும் சந்தேகம் கேட்கும்போது அதை விளக்குவார். அவருக்குப் பிரியமான நூல்களைப் படிக்கச்சொல்லிக் கேட்டுவந்தார். நானே படித்து வந்தேன்.

ஆசிரியர் படுக்கையிற் படுத்துக்கொண்டிருப்பார். அவரருகில் அமர்ந்து சவேரிநாத பிள்ளை கால் கைகளைத் தடவிக்கொடுத்துக்கொண்டே இருப்பார். நான் அருகில் உட்கார்ந்து தேவாரத்தையோ திருவாசகத்தையோ ஆசிரியர் காதில்படும்படி படிப்பேன். வேறு மாணாக்கர்களும் ஆசிரியரைப் பார்க்க வரும் அன்பர்களும் சுற்றிலும் இருப்பார்கள். எல்லோருடைய கண்களும் ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தும்.

தேவாரம் படித்து வரும்போதே இடையே எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகும்; அதை ஆசிரியரிடம் கேட்பேன். அவர் சில வார்த்தைகளால் விளக்குவார். இடையிடையே நிறுத்தி நிறுத்திச் சொல்லி விளக்குவார். தேவாரத்திலும் திருவாசகத்திலும் நெடுங்காலமாக ஆராய்ச்சி செய்தவராதலின் நான் சந்தேகம் கேட்கும்போது அவர் கூறும் விடை பெரிய புதையலைப் போலத் தோற்றும். விஷயத்தின் பெருமை மாத்திரம் அதற்குக் காரணமன்று. எல்லாம் ஒடுங்கிய நிலையிலும் தமிழுணர்வு ஒடுங்காமல் ஆசிரியர் சொல்வனவாதலின் அவை அதிக மதிப்புடையனவாயின. “ஆசிரியர் கடைசிக்காலத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை” என்ற ஞாபகம் உள்ளே இருந்தமையால் அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் கருத்தூன்றிக் கவனித்துக் கேட்டேன். அப்படிக் கேட்கும் ஒவ்வொரு சமயத்திலும் எதிர்கால ஞாபகம்வந்து துன்புறுத்தும். “இத்தகைய பொன்மொழிகளைக் கேட்க முடியாமற்போகும் காலம் சமீபித்துவிட்டதே.” என்ற எண்ணத்தை எவ்வளவு முயன்றும் மாற்ற முடியவில்லை.

‘நுந்து கன்று’


மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும் பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக் காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விஷயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்துவந்தேன். இலக்கியச் சுவையோடு, சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை உருகச்செய்யும் பத்திச்சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டுவரும்போது இடையே கண்ணீர்விடுவார். அந்தத் தெய்விகநூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமைபெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில் இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள் விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”
என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டுகொண்டவண்ணம் தம்மையும் ஆண்டுகொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர் உள்ளத்தே எழுந்ததுபோலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவபெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்துகொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது. அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

தேசிகர் விசாரித்தல்


திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் குருபூஜை தை மாதத்தில் வந்தது. ஆலயத்தில் உத்ஸவமும் ஆரம்பமாயிற்று. மடத்திலும் ஆலயத்திலும் சேர்ந்தாற்போல் ஒரே காலத்தில் உத்ஸவங்கள் நடந்தன. வழக்கம்போல வெளியூர்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள். தம்பிரான்களும் வித்துவான்களும் பிரபுக்களும் கூடியிருந்தனர். வந்தவர்களிற் பெரும்பாலோர் பிள்ளையவர்கள் நிலையை அறிந்து சிந்தைகலங்கித் தியங்கினர். எல்லோரும் அவருடைய குணநலங்களை நினைந்து உருகினர். “இனி இவருக்குப் பின் இவரைப்போல் யாரைப் பார்க்கப் போகிறோம்?” என்ற கருத்தே எல்லோருக்கும் உண்டாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர் குருபூஜை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்கு அமைதி இல்லை. அடிக்கடி பிள்ளையவர்களது தேக நிலையை விசாரித்துக்கொண்டே இருந்தார். “இப்பொழுது எப்படி இருக்கிறது? ஏதாவது ஆகாரம் சென்றதா? ஞாபகம் இருக்கிறதா? பேசுகிறார்களா? பேசினால் தெரிந்துகொள்ளுகிறார்களா?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். தை மாதம் 20-ஆம் தேதி (31-1-1876) அன்று ஆசிரியருக்குத் தேகத்தளர்ச்சி அதிகமாயிற்று. நானும் சவேரிநாத பிள்ளையும் ஒன்றும் தோன்றாமல் சிறிதுசிறிதாகப் பால் கொடுத்துவந்தோம். இரவில் கோயிலிலிருந்து ஸ்ரீ கோமுத்தீசுவரர் எழுந்தருளினார். நான் சுவாமி தரிசனம் செய்யப் போனபோது கோபுரவாயிலில் சுவாமியுடன் வந்த சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்கள் நிலையைப் பற்றி விசாரித்தார்; எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. துக்கம் பொங்கிவந்தது. “இப்போது அவர்களால் பேச முடியவில்லை; நாம் ஏதாவது சொன்னால் தெரிந்துகொள்ளுகிறார்கள். சிறிது சிறிதாகப் பாலைக் கொடுத்துவருகிறோம்” என்று தடுமாறிக்கொண்டே சொன்னேன். அவர் கேட்டுச் சிறிது மயங்கி நின்றார். “இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் ஜீவித்திருக்கிறார்களென்றால் ஆதீனத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும் ஸ்ரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!” என்று வருந்திவிட்டு, “போய்க் கவனித்துக்கொள்ளும்” என்று விடைகொடுத்தனுப்பினார். நான் பிள்ளையவர்களிடம் சென்றேன்.

மறைவு


அடிக்கடி ஆசிரியருக்கு ஞாபகம் தவறியது. நள்ளிரவுக்குமேல் நெடுநேரம் பிரக்ஞை இழந்திருந்தார். பிறகு விழித்துப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்தார். அக்குறிப்பு, திருவாசகமென்று சொன்னதாகப் புலப்படுத்தியது. நான் திருவாசகத்தை எடுத்து அடைக்கலப்பத்தை வாசித்து வந்தேன். சிவபெருமான் திருவடியில் அடைக்கலம் புகுவதற்கு என் ஆசிரியர் தகுதியுடையவரே. அவர் கண்ணை மூடிக்கொண்டே இருந்தார். திருவாசகச் செய்யுள் அவர் காதின்வழியே உள்ளத்துள் புகுந்து இன்பத்தை விளைவித்திருக்க வேண்டும். அந்த இன்பம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை உண்டாக்கியது.

அவர் நெற்றியில் விபூதியை நிறைய ஒருவர் இட்டனர். சவேரிநாத பிள்ளை அவரைத் தமது மார்பில் சார்த்திக்கொண்டார். அடைக்கலப்பத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அவரது தேகத்தில் உள்ளங்கால் முதல் உச்சி வரையில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. மூடியிருந்த கண்களில் வலக்கண் திறந்தது. அவ்வளவுதான். சிவலோகத்தில் அதே சமயத்தில் அந்த நல்லுயிர் புகுவதற்கு வாயிலும் திறந்ததுபோலும்! அவர் மூச்சு நின்றபோதுதான் அவருடைய தமிழ் உணர்ச்சி நின்றது. திருவாசகம் என் கையிலிருந்து நழுவியது. கண்ணிலிருந்து நீரருவி புறப்பட்டது.

அன்பர் வருத்தம்


அங்கிருந்தவர்களில் சிலர் அரற்றினார்கள். சிலர் துக்கம் தாங்கமாட்டாமல் வாயைப் பொத்திக்கொண்டனர். நான் ஒன்றும் தோன்றாமல் என் ஆசிரியரின் புனித உடலையும் அமைதி தவழ்ந்த முகத்தையும் எனக்கு ஆதரவோடு பாடஞ் சொல்லிய திருவாயையும் அன்புப் பார்வையில் என்னைத் தழுவிய கண்களையும் பார்த்துப் பார்த்து விம்மினேன். “இப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி பொய்யாக இருக்கக் கூடாதா? பிள்ளையவர்கள் மீண்டும் வாய்திறந்து பேசக்கூடாதா!” என்ற எண்ணத்தோடு பார்க்கையில் அவர் கண்கள் இமைப்பதுபோலவே தோற்றும்; வாய் அசைவதுபோலத் தெரியும்; மூச்சுவிடுவதுபோலக் கண்ணிற்படும். அடுத்த நிமிஷமே எல்லாம் வெறும் தோற்றமாகிவிடும்; பிரமையினால் விளையும் காட்சிகளாக முடியும்.

ஆசிரியருடைய குமாரரும் மனைவியாரும் அங்கே இருந்தனர். வேறு பல அன்பர்களும் கூடியிருந்தனர். ஆசிரியர் மறைந்த செய்தி உடனே எங்கும் பரவிவிட்டது. சுப்பிரமணிய தேசிகர் விஷயத்தை அறிந்து வருந்தினார். அவருக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.

மறுநாள்


விடிந்தது; இருண்டிருந்த எங்கள் மனத்திற்கு விடிவு இல்லை. பலர் வந்துவந்து ஆசிரியர் திருமேனியைப் பார்த்துப் பார்த்துப் புலம்பிவிட்டுச் சென்றனர். ஆதீன ஞானாசிரியர் சமாதியுற்ற திருநாட்கொண்டாட்டத்திற் கலந்துகொண்டு இன்பம் அனுபவிக்க வந்தவர்களிற் பலர் ஆதீனத் தமிழாசிரியர் மறைந்தசெய்தி கேட்டுத் துன்பக்கடலில் ஆழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் மேலே நடக்க வேண்டிய காரியங்களுக்குரிய ஏற்பாடுகளைச் செவ்வனே செய்யலானார். பல ஊர்களிலிருந்து அபிஷேகஸ்தர்கள் வந்தனர்.

அந்நல்லுடலை ருத்திரபூமிக்கு எடுத்துச் சென்றபோது நான் கண்ட காட்சியும் கேட்ட வார்த்தைகளும் இன்று நினைத்தாலும் உள்ளத்தைக் கலக்குகின்றன. எல்லோரும் வாய்விட்டுக் கதறிவிட்டார்கள். அவரது புலமைத்திறத்தைச் சொல்லி வருந்துவாரும் அவரது கவித்துவத்தைப் பாராட்டி உருகுவாரும் மாணாக்கர்கள்பால் அவர் வைத்திருந்த அன்பை எடுத்துரைத்துத் துயருறுவாரும் அவர் குண விசேஷங்களை விரித்துப் புலம்புவாருமாக எங்கே பார்த்தாலும் ஜனங்கள் நிரம்பிவிட்டனர்.

அபிஷேகஸ்தர்கள் அப்போது திருவாசகம் சொல்லிக்கொண்டு போனார்கள். அதைக் கேட்ட என் தந்தையார், “இனிமேல் திருவாசகத்துக்கு உரை சொல்பவர்கள் இவர்களைப்போல் யார் பிறக்கப் போகிறார்கள்?” என்று சொல்லி வருந்தினார். ஆசிரியர் தம் கடைசி நாட்களில் கடைசி நிமிஷம் வரையில் திருவாசகத்தில் ஒன்றியிருந்ததை அறிந்தவனாதலின் அவ்வார்த்தைகளைக் கேட்டபோது என் உள்ளமும் உயிரும் நடுங்கின.

பல பேருடைய அறிவுக்கும் கண்ணுக்கும் காதுக்கும் இன்பந் தந்து வாழ்ந்திருந்த ஆசிரியர் திருவுடலம் அக்கினிபகவானால் அங்கீகரிக்கப் பெற்றது. சிதம்பரம் பிள்ளை தம் தந்தையாரது உத்தரக்கிரியைகளைச் செய்தார். எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி வரையில் ஆயிற்று. பின்பு யாவரும் நீராடித் திரும்பினர். நானும் என் ஆசிரியரை அப்பால் பாராத நிலையிலே விட்டுவிட்டு ஸ்நானம் செய்துவந்தேன்.

ஊர் முழுவதும் ஒளி இழந்திருந்தது.