என் சரித்திரம்/64 அபய வார்த்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தலை | தலைப்பு =<big><font color="green">..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:57, 5 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

64. அபய வார்த்தை


அத்தியாயம்-64 அபய வார்த்தை ஆசிரியர் வியோகமடைந்த பிறகு உலகத்தில் எல்லாம் எனக்கு ஒரே மயக்கமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டேன். ஒரு வேலையும் செய்யத் தோன்றவில்லை. யாரிடமாவது ஏதேனும் பேசவும் விருப்பம் உண்டாகவில்லை. ஆசிரியர் இளமையில் இயற்றிய தியாகராச லீலை என்னும் நூலைக் கையில் வைத்துப் படித்தபடி இருந்தேன். ஆனால் என் உள்ளம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. அடிக்கடி பிள்ளையவர்களது நினைவு எழுந்து துன்புறுத்தியது. அவருடைய கற்பனை மிகவும் பாராட்டத்தக்க நிலையில் அந்நூலில் அமைந்திருந்தது. அதனைப் படிக்கப் படிக்க ஆசிரியரது பிரிவினால் உண்டான துன்பத்தின் வேகம் அதிகமாயிற்று. கண்ணீர் வீழ்த்தியபடியே படித்தேன். ஆகாரத்திலும் மனம் சொல்லவில்லை.

புதிய கலக்கம்


ஒரு மணிக்குப் பிறகு மடத்திற்குப் புறப்பட்டேன். அங்கே ஓரிடத்தில் குமாரசாமித் தம்பிரான் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு, பிள்ளையவர்களைப் பற்றியதுதான். நான் அங்கே போனவுடன் அவர் என்னைப் பார்த்து, “எல்லாரைக்காட்டிலும் உங்களுக்குத்தான் அதிகமான வருத்தம் இருக்கும்” என்றார். நான் மௌனமாக இருந்தேன். “பிள்ளையவர்கள் மடத்தில் இருந்ததனால் வெளியூர்களிலிருந்து எவ்வளவோ பேர்கள் வந்து அவர்களிடம் பாடங் கேட்டார்கள். மடத்தில் எப்போதும் மாணாக்கர்கள் கூட்டம் இருந்தது. இனிமேல் அப்படியிருக்க இடமில்லை. அவரவர் அவரவர் ஊருக்குப்போய் இருக்க வேண்டியதுதான். விசேஷகாலங்களில் இங்கே வந்து போகலாம்” என்று பின்னும் வருத்தத்தோடு அவர் சொன்னார். அவர் பேச்சிலிருந்து எனக்கு ஒரு புதிய கவலை தோன்றியது. ‘பிள்ளையவர்களோடு எப்போதும் இருந்து பாடம் கேட்டுக்கொண்டும் எழுதிக்கொண்டும் சுகமாகக் காலத்தைக் கழித்தோம். இனிமேல் நாம் என்ன செய்வது? இம்மடத்திற்கும் நமக்கும் என்ன உறவு இருக்கப் போகிறது? நம் நிலை இனி என்ன ஆகும்?” என்ற ஏக்கம் தலைப்பட்டது. “ஒரு பெருந்துணையாக விளங்கிய பிள்ளையவர்கள் மறைந்ததால் வேறு பற்றுக்கோடில்லாமல் அலைந்துதிரியும் நிலை நமக்கு வந்துவிடுமோ” என்று அஞ்சினேன்.

இக்குழப்பத்தில் அங்கே நிற்பதைவிட ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து வருவது நலமென்றெண்ணி மடத்தினுள்ளே சென்றேன். அங்கே ஒடுக்கத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அதுகாறும் என்னுள் அடங்கியிருந்த துக்கம் பொங்கவே கோவென்று கதறிவிட்டேன். என்ன முயன்றும் விம்மல் அடங்கவில்லை. அடக்க முடியாமல் எழுந்த என் வருத்தத்தைக் கண்ட தேசிகர், “வருத்தப்பட்டு என்ன செய்வது! மாற்ற முடியாத நஷ்டம் நேர்ந்துவிட்டது! நமக்கும் வருத்தம் அதிகமாக இருக்கிறது; வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். உமக்குத் தாங்க முடியவில்லை. உம்மிடத்தில் அவருக்கு இருந்த அன்பை வேறு எங்கே பார்க்க முடியும்?” என்றார்.

தேசிகர் கூறிய ஆறுதல் வார்த்தைகள்


அந்த வார்த்தைகள் என் துக்கத்தை அதிகமாகத் தூண்டிவிட்டன; பின்னும் விம்மினேன்.

“நடந்த காரியத்தை நினைத்து வருந்துவதனால் லாபம் ஒன்றும் இல்லை. பிள்ளையவர்கள் இல்லை யென்ற குறையைத் தவிர இங்கே ஒரு குறைவும் இராது. நீர் இனிமேல் கேட்க வேண்டிய பாடங்களை நம்மிடமே கேட்கலாம். புதிய மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டு எப்போதும் நம்முடைய பக்கத்திலே இருந்து வரலாம். உமக்கு யாதொரு குறையுமின்றி நாம் பார்த்துக் கொள்வோம். இந்த ஊரையே உம்முடைய ஊராக நினைத்துக் கொள்ளும். நீரும் தம்பிரான்களைப்போல மடத்துப் பிள்ளையாகவே இருந்து வரலாம். உமக்கு எந்த விதத்திலும் குறை நேராது” என்று அவர் எனக்கு ஆறுதல் கூறினார். அந்த அபய வார்த்தைகள் ‘உபசாரத்தின்பொருட்டுச் சொன்னவையல்லவென்பது எனக்குத் தெரியும்.

மெல்ல விடை பெற்றுத் திரும்பினேன். சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் பேரன்புடையவ ரென்பதை நான் நன்றாக உணர்ந்திருந்தும் குமாரசாமித் தம்பிரான் கூறிய வார்த்தைகளாலேயே கலங்கிப் போனேன். பிள்ளையவர்களுடைய அன்பில் வளர்ந்த எனக்கு மற்றவர்களது அன்பின் நிலையை அறிந்துகொள்ளச் சந்தர்ப்பமும் நேரவில்லை. பிள்ளையவர்கள் பிரிந்த பிறகு தேசிகருடைய அன்பின் சிறப்பானது தெளிவாக விளங்கத் தொடங்கியது.

கடிதங்கள்


மடத்திற்கு வந்தவர்களெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் பிள்ளையவர்களுடைய வியோகத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களோடு பேசும்போது தேசிகர் பிள்ளையவர்கள்பால் வைத்திருந்த மதிப்பு நன்றாகப் புலப்பட்டது, என்னிடமும் பலர் வந்து விசாரித்தனர்.

சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளையின்படி, பிள்ளையவர்கள் காலஞ்சென்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அன்பர்களுக்குக் கடித மூலம் தெரிவிக்கப்பட்டது. குமாரசாமித் தம்பிரான் சிலருக்குக் கடிதம் எழுதினார். சிதம்பரம் பிள்ளை பலருக்கு எழுதினார். நானும் பலருக்குக் கடிதம் எழுதினேன்.

அன்பர்கள் பலர் தங்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பதிற் கடிதங்கள் எழுதினர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலிய பலர் இரங்கற் பாடல்கள் எழுதினர். ஸ்ரீ மகா வைத்திய நாதையரும் அவர் தமையனாராகிய இராமசுவாமி ஐயரும் கடிதமும் பாடல்களும் எழுதினார்கள்.

இவ்வாறு பலர் சரமகவிகள் பாடியபோது நாமும் பாடவேண்டுமென்ற உணர்ச்சி எனக்கு உண்டாகவில்லை. அத்துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளுக்குச் சக்தி ஏது? பாட்டுக்காகத் துக்கத்திற்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சி செய்யவில்லை.

சுப்பிரமணிய தேசிகர், பிள்ளை யவர்களுக் கிருந்த கடனைத்தீர்த்து அவர் குடும்பத்திற்கு வேண்டிய சௌகரியங்களை உசிதமாகச் செய்வித்து அனுப்பினார். சிதம்பரம் பிள்ளை தம் அன்னையார் முதலியோருடன் மாயூரத்திற்குப் போய் அங்கே இருந்து வரலானார். அவர்கள் போகும் பொழுது நானும் உடன் சென்று மாயூரத்தில் இரண்டு தினங்கள் தங்கியிருந்து திருவாவடுதுறைக்கு மீண்டும் வந்தேன்.

மாயூரத்தில் வேதநாயகம் பிள்ளையைப் பார்த்தேன். பிள்ளை யவர்களுடைய பிரிவைக் குறித்து மிகவும் வருத்தமுற்று அவர்களுடைய கல்வியாற்றலை மிகவும் பாராட்டினார்.

தியாகராச செட்டியார் வருகை


பிள்ளையவர்கள் இறந்துபோன தினத்திற்கு முதல்நாள் தியாகராச செட்டியாருடைய தாயார் காலஞ் சென்றனர். அதனால் அவர் திருவாவடுதுறைக்கு வரவில்லை; கடிதம் மட்டும் எழுதினார். தம் அன்னையாருக்குரிய அபரக் கிரியைகளை எல்லாம் முடித்துவிட்டு அவர் திருவாவடுதுறைக்கு வந்தார். உடனே தேசிகரைக் கண்டு பிள்ளையவர்களைக் குறித்துப் பேசி வருத்தமுற்றார். என் மன இயல்பு தெரிந்த அவர் எனக்குப் பல படியாக ஆறுதல் கூறினார்.

என் வாழ்க்கையில் ஒரு புதிய நிலைமை ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களைப் பிரியாமல் மாணாக்கனாக இருந்த நிலை மாறிச் சுப்பிரமணிய தேசிகரிடம் மாணாக்கனாகவும் வேறு சில மாணவர்களுக்கு பாடம் சொல்லும் ஆசிரியனாகவும் அப்போது ஆனேன்.

தந்தையாரும் தேசிகரும்


என் தாய் தந்தையார் என்னுடன் என் சிறிய தாயார் வீட்டில் இருந்து வந்தனர். அவர்கள் அவ்வாறு இருந்து வருவது சுப்பிரமணிய தேசிகருக்குத் தெரியாது. ஒருமுறை புதுக்கோட்டையிலிருந்து வந்த தியாகராஜ சாஸ்திரிகள் என் தந்தையாரைக் கண்டு சங்கீத விஷயமாகச் சம்பாஷித்து மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் முன்பே பழக்கமுண்டு. கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை என் தந்தையார்பாற் கேட்ட சாஸ்திரிகள் அவற்றின் அமைப்பை மிகவும் பாராட்டினர். அப்பால் தியாகராஜ சாஸ்திரிகள் மடத்திற்குச் சென்று தேசிகரிடம் பேசி வருகையில் என் தந்தையாருடைய சிவ பக்தியையும், சிவ பூஜா விசேஷத்தையும், சங்கீத ஞானத்தையும் சிறப்பித்துச் சொன்னார், அதுகாறும் என் தந்தையாரைப்பற்றி அறிந்து கொள்ளாத தேசிகர், “அப்படியா! நமக்கு இதுவரையில் விஷயம் தெரியாதே! சாமிநாதையரும் சொல்லவில்லையே” என்று சொல்லி அங்கே நின்றிருந்த என்னைப் பார்த்தார்.

“உமக்குச் சங்கீதத்தில் பழக்கம் இருப்பதற்கு உம்முடைய தந்தையாரே காரணமாயிருக்க வேண்டும்” என்று தேசிகர் சொன்னார்.

“ஆம்”

“இவ்வளவு நாளாக உம்முடைய தகப்பனாரை இங்கே அழைத்து வரவில்லையே. அவர்கள் இதற்கு முன் இந்த ஊருக்கு வந்ததில்லையோ?”

“சிலமுறை வந்திருக்கிறார்கள். ஸந்நிதானத்திற்கு அனாவசியமான தொந்தரவை உண்டாக்கக் கூடாதென்று எண்ணினேன்”

“தொந்தரவா? இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பதில் நமக்கு எவ்வளவோ திருப்தியுண்டென்று உமக்குத் தெரியாதா?”

அன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்கு வந்து சுப்பிரமணிய தேசிகரைக் கண்டு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அது முதல் அடிக்கடி என் தந்தையார் தேசிகரிடம் போய்க் கண்டு சல்லாபம் செய்துவரத் தொடங்கினர். இவ்வழக்கத்தால் என் தந்தையாருக்குச் சுப்பிரமணிய தேசிகருடைய பெருந்தன்மையும், அறிவுத் திறமையும், உதார குணமும், வித்துவான்களிடத்தில் அவர் வைத்திருந்த பேரன்பும் விளங்கலாயின. மடத்தில் யாரேனும் சங்கீத வித்துவான் வந்து பாடினால் தேசிகர் என் தகப்பனாரை அழைத்து வரச்செய்து கேட்கச் செய்வார்.

தேசிகர் விடியற் காலத்தில் காவேரிக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு மடத்திற்குப் போவார். என் தந்தையாரும் விடியற்காலையில் ஸ்நானம் செய்பவராதலால் அவரும் எழுந்து காவேரிக்குச் சென்று ஸ்நானம் செய்து ஜபதபாதிகளை முடித்துக்கொண்டு புறப்படுவார். அவர் புறப்படும் சமயம் தேசிகரும் புறப்படும் சமயமாக இருக்கும். தேசிகருடன் என் தந்தையாரும் புறப்பட்டு ஆலயம் வரையில் வந்து விடைபெற்று வீட்டுக்கு வருவார். தேசிகர் நாள்தோறும் இராத்திரி இரண்டாம் கால தரிசனத்திற்குக் கோயிலுக்கு வருவதுண்டு. அக்காலத்தும் என் தந்தையார் மடத்திற்குச் சென்று, கூடவே கோயிலுக்கு வந்து தரிசித்து விட்டுத் தேசிகரை மடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டிற்கு வருவார். இவற்றால் தேசிகருக்கும் என் தந்தையாருக்கும் பழக்கம் அதிகமாயிற்று.

சிவபூஜைக்கு வேண்டிய பத்திர புஷ்பங்கள் மிகுதியாகக் கிடைத்தமையாலும், மற்றச் சௌகரியங்களும் குறைவின்றி இருந்தமையாலும் திருவாவடுதுறை வாசம் என் தந்தையார் மனத்துக்கு மிக்க உவப்பைத் தந்தது. தேசிகருடைய அரிய குணங்களை அறிந்து, “இம்மாதிரி இடத்தையும் மனுஷ்யர்களையும் நான் எங்கும் பார்த்ததே இல்லை” என்று விம்மிதம் அடைந்தார்.