சிலம்பொலி/அத்தியாயம் 1
இளங்கோ அடிகளுக்கு மறதியா?
மதுரையில், மாதரி இல்லத்தில், தான் ஆக்கிப் படைத்த உணவுண்டு, சிலம்பு விற்கப் புறப்பட்ட கோவலனைத் தழுவி, அவன் முடியில் சூடியிருந்த மலரைத் தன் கூந்தலில் அணிந்து கொண்டு, காலையில் வழி அனுப்பி வைத்த கண்ணகி, அன்று மாலையில் வந்து நிற்கும் தன்னைக் காண மாட்டா நிலையில், புண்ணிலிருந்து செங்குருதி சொட்டச் சொட்டக் கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கணவன் உடலைக் கண்ணுற்ற கொடுமையைப் படம் பிடித்துக் காட்டும். சிலப்பதிகார வரிகள் இவை:
“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன் மேற்
கொண்டாள், தழீஇக் கொழுநன்பால், காலைவாய்;
புண்தாழ் குருதி புறம்சோர, மாலைவாய்
கண்டாள், அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்!”
சிலம்பு: 19: ஊர்சூழ்வரி: 35-38
இவ்வரிகளுக்குக், “காலைப் பொழுதின் கண், ஆயர் பாடியிடத்தே, தன் கணவனைத் தழீஇ, அதற்குக் கைம்மாறாக, அவனுடைய வண்டொலிக்கும் குஞ்சியின் மாலையை வாங்கித் தன் வார்குழல் மேல் கொண்ட கண்ணகி, மாலைப் பொழுதின் கண்ணே, அவன் மெய்யின் புண்ணின்றும் குதிக்கின்ற குருதிப் புனல் இடமெல்லாம் நனைப்ப, அவன் தன்னைக் காணாத துயரத்தைத்தான் கண்டாள்” என அடியார்க்கு நல்லாரும் “காலைவாய்த் தழீஇக் கொண்டாள்; கொழுநன் குருதி புறஞ்சோரத் தன்னை அவன் காணாது கிடக்கின்ற கடுந்துயரத்தினை மாலைவாய்க் கண்டாள்” என அடியார்க்கு நல்லார் காலத்துக்கும் முற்பட்டவரான அரும்பத உரைகாரரும் விளக்கம் அளித்திருப்பதன் மூலம், “கொலையுண்டு கிடக்கும் கோவலனைக் கண்ணகி கண்ட மாலை, கோவலன் காலையில் தன்பால் விடை கொண்டு சென்ற அன்றைய மாலையில்தான்” என்பதே அவ்விரு உரையாசிரியர்களின் கருத்தாம் என்பது தெளிவாகிறது.
திரு.ம.பொ.சி. அவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். தம்முடைய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாகிய “சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற நூலில், மூன்றாம் பதிப்பு, பக்கம் 123இல் இடம் பெற்றிருக்கும் “இளங்கோவின் மறதி” என்ற கட்டுரையில், பக்கம்: 124இல் “ஆம்; ஒரு நாள் காலைப் பொழுதில், தன் கணவனைத் தழுவி, அவன் சிலம்பு விற்று வர விடை கொடுத்தனுப்பிய கண்ணகி, அன்று மாலையில், தான் கண்டும் அவன் தன்னைக் காண முடியாது மாண்டு கிடப்பதைக் கண்டு, கடுந்துயர் கொண்டாள் என்றே பழைய உரையாசிரியர் இருவரும் ஒத்த கருத்தினராக உரைப்பாராயினர்” எனக் கூறியிருப்பது காண்க.
ஆனால், அவ்வாறு கூறிய அவர், அதே பக்கத்தில், “அவர்களுடைய உரைகள் மூலத்திற்கு ஒத்ததாகவே இருக்கின்றன. ஆனால், காலப் போக்கினை ஆராய்ந்து பார்க்குமிடத்து, மூலத்திலேயே முரண்பாடு இருக்கக் காண்கிறோம்” என்றும் கூறி, இளங்கோவடிகள் மீதான குற்றச்சாட்டினை மெல்லத் தொடங்கி வைத்துள்ளார்.
அவ்வாறு பையத் தொடங்கிய குற்றச்சாட்டினை, "அந்த மகாகவியும் ‘மறதி’ என்னும் குறைபாட்டிற்கு இரையாகி விட்டாரோ என்று ஐயுறத்தக்க வகையில் ஒரு சிக்கல் சிலப்பதிகாரத்தில் காணக் கிடக்கிறது" [பக்கம் 123] என்றும், "இளங்கோவடிகள் பெரும் புகழ் பெற்ற மகாகவியாக இருந்தும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், அவருக்கும் மறதி ஏற்பட்டது போலும்” [பக்கம்: 131] என்றும் கூறி, இளங்கோ அடிகள் கூற்றில் ஐயுற்றது போல, அடக்கவுணர்வோடு குற்றம் சாட்டி வைத்தார்.
இவ்வாறு இரண்டாங் கட்டத்தில் ஐயவுணர்வோடும் அடக்கவுணர்வோடும் குற்றம் சாட்டியவர், 142, 143ஆம் பக்கங்களில், “மாதரி இல்லத்தில் புகுந்த மறுநாள், கண்ணகி கோவலனுக்கு உணவு சமைத்துப் படைத்தாள் என்பதும், உணவை உண்டு முடித்ததுமே, கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து சென்றான் என்பதும், அன்று மாலையே கோவலன் கொலையுண்டான் என்பதும், அன்றிரவெல்லாம் கோவலன் வாராமையால், கண்ணகி உள்ளம் வெதும்பி, உறக்கம் இன்றி வருந்தினாள் என்பதும், மறுநாள் காலையில், உற்பாதங்களைக் கண்ட அச்சத்தால் ஆய்ச்சியர் குரவைக் கூத்து நடத்தினர் என்பதும், அக்கூத்தின் முடிவில்தான், கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகிக்குக் கிடைத்தது என்பதும், அதனை அறிந்ததுமே, அவள் கோவலன் கொலையுண்ட இடம் சென்று, அவனுடைய உடலைக் கண்டாள் என்பதும், உறுதி செய்யப் படுகின்றன” என்றும், பக்கம் : 124இல் “கண்ணகியிடம் விடை பெற்றுச் சென்ற அன்றே கோவலன் வெட்டுண்டான். ஆயினும், அன்று மாலையே கண்ணகி கொலைக் களத்தில் அவனைக் காணவில்லை; மறுநாள் மாலைதான் காண்கிறாள். ஆகவே, ஒரு நாள் காலையில் கோவலனுக்கு விடை கொடுத்து அனுப்பியவள், அன்று மாலையே அவனைப் பிணமாகக் கண்டாள் என்று இளங்கோ அடிகள் கூறுவது மறதியின் பாற்பட்டதே” என்ற முடிவான தீர்ப்பினை வழங்கி விட்டார்.
அவ்வாறு முடிவான தீர்ப்பினை வழங்கி விட்ட திரு. ம.பொ.சி. அவர்கள் (பக்கம் : 142) தம் குற்றச்சாட்டிற்கு வலுவேற்ற, சான்று ஒன்றினையும் தேடிப் பெற்றுக் காட்டியுள்ளார்—டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் வெளியிட்டுள்ள “இரட்டைக் காப்பியங்கள்” என்ற நூலில். “முதல் நாள் மாலை கோவலன் இறந்தான்; மறுநாள் காலை, கண்ணகி அத்துயரச் செய்தியை அறிந்தனள் என்பது தெளிவு. அறிந்த பின் அலறிப் பதறிக் கொலையிடம் விரைகின்றாள். ஆனால், காலையில் கணவனைத் தழுவி வழியனுப்பியவள், மாலையில் அவன் தன்னைக் காணாத நிலையில்தான் கண்டாள் எனக் கூறிக் கண்ணகியின் அழுகைப் பெருக்கையும், அவலப் பெருக்கையும் காட்டுவதற்காக, இவ்வொரு நாளை ஆசிரியன் பலியிடுகின்றான்” என திரு. வ. சுப. மாணிக்கம் அவர்கள் கூறுவதைக் காட்டுவதே இந்த வலுவான சான்று.
இதனால், கோவலன் உணவுண்டு சென்றதும், கொலையுண்டதும், ஆய்ச்சியர் குரவை ஆடியதும், கொலையுண்ட கணவனைக் கண்ணகி கண்டதும் ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நாள் நிகழ்ச்சிகள் ஆகா; கோவலன் உணவுண்டு சென்றதும், கொலையுண்டதும் ஒரு நாள் நிகழ்ச்சிகள்; ஆய்ச்சியர் குரவை ஆடியதும், கொலையுண்ட கணவனைக் கண்ணகி கண்டதும், மறுநாள் நிகழ்ச்சிகள் என்ற கருத்துக் கொண்டுள்ளார் திரு. ம.பொ.சி. என்பது தெரிகிறது. நிற்க.
ஒரு நாள் காலை கணவனை வழியனுப்பி வைத்த கண்ணகி, கொலையுண்டு கிடந்த கணவனை மறுநாள் மாலைதான் கண்டாள் என்ற தம் முடிவிற்கு மேலும் அரண் தேட, அதே சிலப்பதிகாரத்தில் வரும் இரு சொற்றொடர்களின் துணையை வேறு நாடியுள்ளார்.
“சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற தம் நூலின் 130-131 ஆம் பக்கங்களில், “காலையில் போனார்; மாலையில் வந்தார்” என்று கூறினால், அது ஒரு நாளுக்கு உரிய காலையையும், மாலையையுமே குறிப்பதாகக் கொள்வது உலக வழக்கு. சிலப்பதிகாரத்திலே, தன்னைப் பிரிந்து சென்ற கோவலன், வயந்தமாலை வசம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தை வாங்க மறுத்ததைக் கேட்ட மாதவி, ‘மாலை வாரார் ஆயினும், மாணிழை! காலைகாண்டுவம்’ (சிலம்பு : 8, வேனிற்காதை : 115-116) என்று கூறுகிறாள். இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், ‘இம்மாலைப் பொழுதினில் வருவார்; வாரார் ஆயின் காலைப் பொழுதில் ஈண்டு நாம் காண்போம் எனச் சொன்னாள்’ என்கிறார். இவரும் மாலை நேரத்தை அடுத்து வரும் காலைப் பொழுதையே குறிப்பிடுகின்றார்” என அவர் கூறியிருப்பது காண்க.
"மாலை வாரார் ஆயினும், காலை காண்டுவம்”
இதே போல், மாலையை அடுத்துக் காலை வருவதை உணர்த்தும் வரிகள் குறுந்தொகையிலும் புறநானூற்றிலும் வந்துள்ளன.
"மாலை பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலைவந்த காந்தள் முழுமுதல்”
இது குறுந்தொகை (361). மாலைப் பொழுதில் மலையிடையே மழை பொழிய, அம்மழை நீர் ஒன்று திரண்டு பெரு வெள்ளமாய்ப் பாய்ந்தோடி வருங்கால், அவ்வெள்ளம் அடித்துக் கொணரும் காந்தள் மலரைத் தலைமகள் கைக்கொண்டு மகிழ்ந்ததைக் கூறும் இப்பாட்டில் மாலையை அடுத்து வரும் காலை, இடையில் ஓர் இரவு நின்று கழிய வந்த காலைதான்.
அதே போல்,
"மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி”
என்ற புறநானூற்றுப் பாட்டில் (149) வரும் காலையும் மாலைக்குப் பின், ஓர் இரவு இடை வந்து கழிய வந்த காலையையே குறிக்கும். இதற்குச் சிறிது விளக்கம் தேவை. கண்டீரக்கோ பெருநள்ளி என்ற கொடை. வள்ளலைப் பாடிய புலவர் வன்பரணர், தன்னைப் பண்ணிசைத்துப் பாராட்டும் பாணர்க்கு, நள்ளி வாரி வாரி வழங்கி விடுவதால்,அப்பாணர் மெய்ம்மறந்து போக, அதனால், அவர்கள் காலையில் வாசிக்க வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் வாசிக்க வேண்டிய செவ்வழிப் பண்ணைக் காலையிலுமாக, முறை மாறி இசைப்பாராயினர் எனக் கூறுவதன் மூலம், அவன் புகழ் பாடும். இப்புறநானூற்றுப் பாட்டால், பாணர் கால முறை மாறிப் பாடிய நிலையை எடுத்துக் கூறியுள்ளார். ஆகவே, இப்பாட்டில் வரும் காலையும், மாலைக்குப் பின் ஒர் இரவு இடை வந்து கழிந்து போகப் பின்னர் வந்த காலையையே குறிக்கும். “மாலைவாரார் ஆயினும், காலை காண்டுவம்” என வரும் சிலப்பதிகாரத் தொடரும் அத்தகையதே.
மாதவி பாடிய கானல் வரிப் பாடல் கேட்டு, "மாயப் பொய்காட்டும் மாயத்தாள், வேறுஒன்றின்பால் மனம் வைத்துப் பாடினாள்” என அவளைப் பழித்து விட்டு, ஏவலாளர் சூழ்ந்து வரக் கோவலன் போய்விட்டானாகத் தனித்து மனைபுக்க மாதவி, பிரிவுத் துயர் மறக்க, யாழ் எடுத்துப் பல்வேறு இசைக் கருவிகளை எழுப்பியும் துயர் தணியாதாகத் தன் துயர்க் கொடுமைகளையெல்லாம், பண்ணிப் பண்ணி எழுதிய கடிதத்தை வசந்தமாலை கைக் கொடுத்து, அதைக் கொண்டு போய்க் கோவலன் பால் அளித்து, அவனைக் கொணர்க எனப் பணித்து அனுப்ப, அது பெற்ற வசந்தமாலை, கூலமறுகிற்குச் சென்று, கோவலன் பால் நீட்ட, அவன் மாதவியை ஆடல் மகள் எனப் பழித்து, நீட்டிய கடிதத்தினை வாங்கவும் மறுத்து விட்டானாக, வசந்தமாலை மாதவி பால் மீண்டு, நடந்தது கூறக் கேட்ட நிலையில், மாதவி கூறிய, “மாலை வாரார் ஆயினும் காலை காண்டுவம்” என்ற கூற்றில், மாலை முன்வர, அடிகளார் பாடியிருக்கும் நிலை வேறு. ஆங்கு மாலை முன் நிற்கிறது; காலை பின் நிற்கிறது; அந்நிலை வேறு.
ஆனால், ஆயர்பாடியில், கோவலனைத் தழுவி, அவன் முடியில் சூடியிருந்த மலரைத் தன் கூந்தவில் அணிந்து கொண்டு, காலையில் வழியனுப்பிய கண்ணகி வந்து நிற்கும் தன்னையும் காண மாட்டா நிலையில், புண்ணிலிருந்து செங்குருதி சொட்டச் சொட்டக் கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கோவலனை, “மாலை யில் கண்டாள்” என்ற இளங்கோவடிகளார் கூற்றில், காலை முன் வர, அதைத் தொடர்ந்து மாலை வர, அடிகளார் பாடியிருக்கும் நிலை வேறு. ஈண்டு, காலை முன் நிற்கிறது; மாலை பின் நிற்கிறது; இந்நிலை வேறு.
கோவலன் பிரிவால் வருந்திய மாதவி, தன் மன அமைதிக்காக, “மாலை வாராராயினும், காலை காண்டுவம்” எனக் கூறிய போது, அவள் குறிப்பிடும் காலை, கோவலன் பிரிந்த மாலையைத் தொடர்ந்து வந்த இரவு கழிய வந்துற்ற மறு நாள் காலை ஆகும். இதைக் குறுந்தொகை, புறநானூற்றுப் பாக்கள் இரண்டின் மூலம் விளக்கியுள்ளேன்.
ஆனால், காலையில் வழி அனுப்பியவள், மாலையில் இறந்து கிடக்கும் கோவலனைக் கண்டாள், என இளங்கோ அடிகள் கூறும் கூற்றில் வரும் காலையும் மாலையும், ஒரு நாள் காலையும், அன்றைய மாலையுமே அல்லாது, ஒரு நாள் காலையும், மறுநாள் மாலையும் ஆகாது. ஒரு நாள் காலையையும், அன்றைய மாலையையும் குறிக்கும் வகையில், காலை, மாலை ஆகிய சொற்கள் இடம் பெற்றிருக்கும் வரிகள் குறுந்தொகைப் பாடல்கள் இரண்டிலும், ஐங்குறு நூற்றுப் பாடல் ஒன்றிலும், புறநானூற்றுப் பாடல்கள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு :
“காலையும் பகலும், கையறு மாலையும்”
“காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லகம் நயந்து”
—குறுந்தொகை 32: 347.
“நாரை
காலை இருந்து மாலை சேக்கும்
தென்கடல்.”
—ஐங்குறு நூறு : 157
“காலை அந்தியும், மாலை அந்தியும்!”
“இல்லாகியரோ, காலை, மாலை.”
—புறநானூறு : 34; 232
ஆக, எடுத்துக் காட்டிய சான்றுகளால் கானல் வரி முடிவில், மாலை வாரார் ஆயினும், காலை காண்டுவம் என்ற மாதவி கூற்றில், மாலையை அடுத்துக் காலை வந்துள்ளமைக்கு ஈடாக, காலை கோவலனுக்கு வழி கொடுத்து அனுப்பிய கண்ணகி, மாலை, அவன் கொலையுண்டு கிடப்பதைக் கண்டாள் என்ற இளங்கோவடிகளார் கூற்றில், காலையை அடுத்து மாலை வந்துளதைக் காட்டியிருப்பது பொருந்தாது என்பது உறுதியாகிறது. நிற்க,
இனிக் “கோவலன் உணவுண்டு சென்றதும், கொலையுண்டதும் ஒரு நாள் நிகழ்ச்சிகள். ஆய்ச்சியர் குரவை ஆடியதும், கொலையுண்ட கணவனைக் கண்ணகி கண்டதும் மறுநாள் நிகழ்ச்சிகள்” என்ற ம.பொ.சி. அவர்களின் முடிவு பற்றிய ஆய்வினை மேற்கொள்வாம்.
கோவலன் உணவு உண்டு சென்றதும், கொலையுண்டதும் ஒரு நாள் நிகழ்ச்சிகள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை; ஆனால், அன்று அவை நிகழ்ந்த நேரங்கள் குறித்து ம.பொ.சி. அவர்கள் கூறும் கருத்து, வினாவிற்கு உரியது.
கோவலன் உணவு உண்ட நேரம் எது? “பொழுது விடிந்து கெடுநேரத்திற்குப் பின்பு, கிட்டத் தட்டப் பகல் நேரத்தில்தான் கண்ணகி படைத்த உணவைக் கோவலன் உண்டிருக்க வேண்டும்”
என்கிறார் ம. பொ. சி.
[பக்கம் : 140]
அடியார்க்கு நல்லார், “நாள்வழிப் படூஉம் அடிசில்” (சிலம்பு : 16 : 19) என்ற தொடருக்குப் “பகற் போதே உண்ணும் அடிசில்” எனக் கூறும் உரையும், “நண் பகற். போதே நடுங்கு நோய் கைம்மிகும்” (சிலம்பு : 18 : 16) என்பதற்குக் “கோவலன் போன போதே தன் நெஞ்சு கலங்குதலால் நண்பகற் போதே என்றாள்” என அளிக்கும் விளக்க உரைகளே, ம.பொ.சி. அவர்களை, அம்முடிவிற்கு வரச் செய்திருக்க வேண்டும்.
சிலப்பதிகாரத் திறனாய்வு மேற்கொள்வார், அது மேற்கொள்வதன் முன்னர்,.
“சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியாது அளிமின் நீர்எனக் கூற
இடைக்குல மடந்தையர் இயல்பில் குன்றா
மடைக்கலம் தன்னொடு மாண்புடை மரபின்
கோளிப்பாகல் கொழுங்கனித் திரள்காய்;
வாள்வரிக் கொடுங்காய்; மாதுளம் பசுங்காய்,
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி அரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே! கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப், பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது, செங்கண் சேந்தன;
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி முட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற்கு ஆக்கி”
[சிலம்பு : 16:18-34] என்ற இத்தொடர்களில் ஆளப்பட்டிருக்கும் சில சொற்றொடர்களையும், சொற்களையும், அச்சொற்களின் பொருளையும், வினைச் சொற்கள் அடுத்தடுத்து ஆளப்பட்டிருக்கும் நிலையினையும் கூர்ந்து நோக்குதல் வேண்டும்.
அடிசில் ஆக்குதற்கு வேண்டிய பொருள்களை அளிக்குமாறு பணிக்கும் மாதரி, “அளிமின்” என ஆணை இடுவதற்கு முன்பு, “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என விருந்தினரின் இயல்பைக் கூறியுள்ளாள். “அடிசில்” என வாளா கூறாது. “நாள்வழிப் படூஉம் அடிசில்” எனச் சிறப்பித்தும், அது போலவே “அளிமின்” என்று மட்டும் கூறாது, “நெடியாது அளிமின்” என விரைவு ஏற்றியும் கூறியுள்ளாள்; ஏன்?
சாவக நோன்பிகள் இரவு உண்ண மாட்டார்கள். . “சாவக நோன்பிகள் ஆதலின் இரவு உண்ணார் என்பது“ என்ற அரும்பத உரையாசிரியர் விளக்கமும் காண்க.
[கோவலனும், கண்ணகியும், மாதரி இல்லத்தில் புகுந்த அன்று இரவு, உணவு உட்கொள்ளவில்லை என்பதை, திரு. ம.பொ.சி. அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். “மாதரி இல்லத்தில் புகுந்த அன்று இரவு, கோவலனும் கண்ணகியும் உணவு கொள்ளவில்லை“ [பக்கம்: 126] என அவர் கூறியிருப்பது காண்க.]
இரவு உண்ணா நோன்பு மேற்கொள்பவர், நோன்பு முடித்து, உணவு உண்ணும் நேரம் பொதுவாகக் காலை நேரமே ஆகும். வைகுண்ட ஏகாதசி, மாசி சிவராத்திரி கந்தர் சஷ்டி, போன்ற நாட்களில் இரவு உண்ணா விரதம் இருப்பவர், விரதம் முடித்து உண்பது, மறுநாள் விடியற்காலையில்தான் என்பது இன்றும் வழக்கமாதல் அறிக. இதை உணர்ந்தவள் மாதரி; ஆகவேதான், இரவு உண்ணா விரதம் உடையவன் கோவலன் என, வந்திருப்போன் இயல்பைக் கூறி, அவன் உண்ணுவதற்கேற்ப ஆக்கும் உணவு காலைப் போதிலேயே ஆக்கப்படுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்த வெறும் அடிசில் என்னாது, “நாள் வழிப்படூஉம் அடிசில்” என்றாள்.
நாள் என்னும் சொல் விடியற்போது எனும் பொருள் உடையதாகும்; “நாள் இரை”—காலை உணவு [குறுந்தொகை: 364; ஐங்குறுநூறு: 63:111, அகநானூறு: 63, புறநானூறு : 283], “நாள் மேயல் ஆகும்”—விடியற் போதில் மேயும் [ஐங்குறு நூறு: 95], “நாள் அணி”—காலை அணி [பரிபாடல்: 9:20; 10:114], “நாள் ஞாயிறு”—காலை ஞாயிறு [களவழி நாற்பது: 1.] ஆகிய தொடர்களில் நாள் எனும் சொல், விடியற் போதை உணர்த்தி நிற்றல் காண்க. “நாளங்காடி” எனும் சொல் காலைக் கடை வீதியை உணர்த்துவதும் அறிக.
ஆகவே “நாள் வழிப்படூஉம் அடிசில்” என்பதற்கு விடியற் போதில் உண்ணும் உணவு என்பதே பொருளாம். அடியார்க்கு நல்லாரும் “பகற் பொழுதே உண்ணும் உணவு” என்று தான் கூறினாரே ஒழிய, “நண்பகற் போதில் உண்ணும் உணவு” எனக் கூறவில்லை. ஞாயிறு தோன்றி, அது மறையும் வரையுள்ள பொழுதெல்லாம் பகல்தான்.
ம.பொ.சி. அவர்கள் கருத்துப்படி, கோவலன் இரவில் உண்ணப் போவது இல்லை; மறுநாள்தான் உண்ணப் போகிறான். மறுநாள் நண்பகற் போதில்தான் உண்ணப் போகிறான் என்றால், அடிசில் ஆக்குதற்கு வேண்டும் பொருள்களை மறுநாள் காலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் மாதரி, “நெடியாது அளிமின்”— அதாவது, காலம் தாழ்த்தாது இப்போதே கொடுத்து விடுங்கள் எனப் பணிக்கிறாள். ஏன்?
விடியற்காலையில் உண்பதற்காம் உணவைச் சமைக்க வேண்டுமாயின், அதற்குத் தேவைப்படும் பொருள்களை, முந்திய நாள் இரவே ஈட்டி வைப்பதுதான் முறையாகும். இது உணர்ந்தவள் மாதரி. ஆகவேதான் “அளிமின்” என ஆணையிட்ட அப்போதே, [அப்பொருள்கள்.] அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, “அளிமின்” என வாளா கூறாது, “நெடியாது அளிமின்”—அதாவது காலம் தாழ்த்தாது, இப்போதே அளிமின் எனக் கூறினாள். மாதரியின் ஆணை வழி நடக்கும் ஆயர் மகளிர், அவற்றை அப்போதே அளிக்காது மறுநாளா அளித்திருப்பர்? இருக்காது; அப்போதே அளித்திருப்பர். இதுதான் உண்மை. அவ்வாறாகவும், ம.பொ.சி. அவர்கள், “மறுநாள் முற்பகல் மாதரி கூளித்த பண்டங்கள்” எனக் கூறுவது பொருந்தாது.
“சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்று தொடங்கி, “நெடியாது அளிமின் நீர் எனக் கூற” என முடியும் பகுதிக்கு உரை எழுதி முடித்து, அட்டிற்காம் பொருள்களை ஆயர் மகளிர் அளித்ததை உணர்த்தும் “இடைக்குல மடந்தையர்” என்று தொடங்கிக் “கொள்கெனக் கொடுப்ப” என முடியும் பகுதிக்கு உரை எழுதத் தொடங்குவதற்கு முன்னர், இரண்டிற்கும் இடையில் “இத்துணையும் கூறியது, இவர்கள் சென்ற அன்றிரவு செய்தனவும் மேற் செய்வனவும்; இனி மற்றை நாளைச் செய்தி கூறுகிறார்” [சிலம்பு 16: 18-21 உரை விளக்கம்] எனஅளிக்கும் அடியார்க்கு நல்லாரின் தவறான விளக்கமே ம.பொ.சி. அவர்களை அடி சறுக்க வைத்திருக்க வேண்டும். அடியார்க்கு நல்லார் கூறும் அவ்வுரை விளக்கம், இளங்கோவடிகளாரின் உள்ளம் உணராது கூறிய தவறான விளக்கமே ஆம்.
சிலப்பதிகாரப் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அடியார்க்கு நல்லார் உரையே துணையாகும் என்றாலும், அவ்வுரையும் சிற்சில இடங்களில் தடம் புரண்டு ஓடியுளது என்பதை மறைப்பதற்கில்லை. ம.பொ.சி. அவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். “உழையோர் இல்லா ஒரு தனி கண்டு” என்ற தொடருக்கு, “ஆய்ச்சியர் எல்லாம் குரவையாடச் சென்றமை தோன்ற” என்று அடியார்க்கு நல்லார் உரை கூறினார் என்றால், அதனை மூலத்திற்குப் பொருந்தா உரை என்றே கொள்ள வேண்டும்” [பக்கம்: 137] என அவர்கள் கூறியிருப்பது காண்க.
“நீட்டித்து இராது நீ போ” எனக் கௌந்தி அடிகளின் ஆணையிற் கண்ட விரைவினை உணர்ந்த மாதரி, கண்ணகியோடு மனை புகுந்த அடுத்த கணமே, அவர்கள் இருத்தற்கேற்ற இடம் அளிப்பது, கண்ணகிக்கு நீராட்டி விடுவது, தன் மகள் ஐயையைத் துணையாக அளிப்பது, கோவலன் சாவக நோன்பி என்பதறிந்து, நாள் வழிப்படும் அடிசில் ஆக்குதற்கு வேண்டும். பொருட்களை “நெடியாது அளிமின்” என ஆணையிடுவது ஆயர் மகளிரும் அவற்றை அப்போதே அளிப்பது, அவை கொண்ட கண்ணகி அட்டில் தொழிலை அட்டியின்றித் தொடங்குவது ஆகிய இந்நிகழ்ச்சிகள் விரைந்து நடைபெறுதல் வேண்டும் என்ற உணர்வோடு, இளங்கோவடிகளார் சொற்களை ஆண்டிருக்கும் விரைவு, அடியார்க்கு நல்லார் உரைக்கு ஆதரவு அளிப்பதாக இல்லை. அட்டில் ஆக்குவதற்காம் பொருட்களை அளிப்பது அன்றிரவே முடிந்து விட்டது. அட்டில் ஆக்குவது மட்டுமே மறுநாள் நடைபெற்றது. அதுவும், ம.பொ.சி. கூறுவது போல், “பொழுது விடிந்து நெடுநேரத்திற்குப் பின்பு, கிட்டத்தட்டப் பகல் நேரத்தில்” [பக்கம்: 139] அன்று; மாறாக, விடியற் காலத்திலேயே நடந்து முடிந்து விட்டது.
பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பெயரும் மாதரியைக் கௌந்தி அடிகள் கண்டது.—ஞாயிற்றின் ஒளிக் கதிர் மறையும் நேரம். அதன் பின்னர்க் கண்ணகி சுற்ற நலன், கோவலன் குடிப் பெருமை, அடைக்கலப் பொருள் ஏற்று ஆவன செய்தலால் ஆகும் அறப்பயன் ஆகியவற்றை விளக்கச் சிறிது காலம் கழிந்திருக்கும். அதன் பின்னர், “நீட்டித்திராது நீ போ” என்பதற்கேற்ப, எவ்வளவுதான் விரைவு காட்டியிருந்தாலும், அவ்விருவரையும் உடன் கொண்டு, மதில் கடந்து, ஆயர்பாடி அடைதல், ஆங்கு அவர்கள் இருத்தற்கேற்ற மனையைத் தேர்ந்து, அதை ஏற்புடையதாகத் துப்புரவு செய்து தருதல், கண்ணகியை நீராட்டி ஒப்பனை செய்து பாராட்டல், தன் மகள் ஐயையையும், பிறரையும் அழைத்து அறிமுகம் ஆக்குதல், பின்னர் அட்டிலுக்கு ஆவன அளிமின் எனப் பணித்தல், அப்பணி ஏற்று ஆயர் மகளிர் அவற்றைத் திரட்டித் தருதல் ஆகிய இந்நிகழ்ச்சிகளை எவ்வளவு விரைவாகச் செய்து முடித்தாலும், முடிக்க இரவில் நெடு நேரம் ஆகியிருக்கும். நள்ளிரவைத் தாண்டியிருக்கவும் கூடும். அத்துணை நேரம் கடந்த பின்னர் விடியற் போதில் உண்ணற்காம் உணவினைச் சமைக்க வேண்டின், உணவுத் தொழிலை உறங்காதே மேற்கொள்வது இன்றியமையாதது. அதற்கேற்பவே, கண்ணகியும் அட்டில் தொழிலை அப்போதே தொடங்கி விடியற் போதில் முடித்து விட்டாள்.ஆயர் மகளிர் கொடுத்ததைக் கூறும், “கோல் வளைமாதே! கொள்கெனக் கொடுப்ப” என்ற தொடரை அடுத்து வேறு எதையும் கூறாது, கை விரல் சிவக்கக் காய் அரியத் தொடங்கிய கண்ணகி செயலை விளக்கும் “மெல் விரல் சிவப்ப” எனத் தொடங்கும் தொடரை அமைத்திருக்கும் இளங்கோவடிகளாரின் விரைவு, உணவுப் பொருட்களைக் கொடுத்த அக்கணமே கண்ணகி அட்டில் தொழிலைத் தொடங்கி விட்டாள் என்ற கருத்திற்கு அரண் செய்து நிற்றல் அறிக.
கோவலன், ஆயர் பாடியை விட்டுக் காலைப் பொழுதிலேயே புறப்பட்டு விட்டான் என்பதை உறுதி செய்யும் வலுவான அகச் சான்று ஒன்றும் சிலப்பதிகாரத்திலேயே உளது. கோவலர் இல்லம் நீங்கிக் கோவலன் தெருவில் அடியிட்டதும், கொல்லேறு ஒன்று எதிர்த்ததாகவும், அதைத் தீ நிமித்தமாகக் கொள்ளுதல் வணிகர் குலத்தில் வழக்கமில்லையாகவே, அதைப் பொருட்படுத்தாதே போய் விட்டான்—“பல்லான் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற்செல்வோன், இமிலேறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் தன்குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்” (சிலம்பு: கொலை: 100-10l) என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
பொதுவாக, ஆயர்கள் தம் கறவைகளையும், காளைகளையும் கட்டவிழ்த்துக் காடு போக விடுவது காலைப் பொழுதில் நிகழுமே அல்லாது, நண்பகற் போதில் நிகழ்வது இல்லை. கோவலன் சென்ற போது, கட்டவிழ்த்து விடப்பட்ட காளையொன்று, அவனை எதிர்த்தது என்றால், சென்ற நேரம் காலைப் பொழுதே ஆதல் வேண்டும்.கோவலன் காலைப் பொழுதிலேயே புறப்பட்டு விட்டான் என்பதை வணிக மக்களின் நடைமுறைப் பழக்கம் ஒன்றும் உறுதி செய்கிறது. தங்கள் வாணிக நிலையம் செல்லும் வணிகப் பெருமக்கள் காலை உணவு உண்டு, காலைப் போதில் செல்வதே நடைமுறை வழக்கமாம். நண்பகல் வரை, மனையில் வாளாக் கிடந்து, நண்பகல் உணவுண்டு, அதன் பின்னரே செல்வர் என்பது வழக்கமாகாது.
இது வரை கூறியவற்றால், அட்டிற்காம் பொருள்களை ஆய்ச்சியர் இரவே அளிக்க, அட்டில் தொழிலைக் கண்ணகி விடியற் போதே முடிக்க, கோவலன் உணவுண்டு, சிலம்பு விற்கக் காலைப் போதிலேயே புறப்பட்டு விட்டான் என்பதே உறுதி செய்யப்படும்.
கோவலன் கொலையுண்டது எப்போது? “கண்ணகியிடம் விடை பெற்றுச் சென்ற, அன்று மாலையே கொலையுண்டான்” [பக்கம். 143]. “குரவை நிகழ்ந்த முந்திய நாள் மாலையிலேயே கோவலன் கொலையுண்டான்” [பக்கம். 125] எனக் கூறி, கோவலன் கொலையுண்டது மாலையில் என்ற முடிவிற்கு வந்த ம.பொ.சி. தம்முடைய முடிவிற்கான அகச்சான்று எதுவும் காட்டினாரல்லர்.
கொலையுண்ட கோவலனைக் கண்ணகி கண்டது மாலையில் என்பதற்கான அகச்சான்றுதான் இருக்கிறதேயொழிய, கொலையுண்டது மாலையில் என்பதற்கான அகச்சான்று எதுவும் இல்லை. மாறாக, நிகழ்ச்சிகளை நிரலே வைத்து நோக்கும் போது, கோவலன் கொலையுண்டது நண்பகற் போதில் என்பது தெளிவாகப் புலப்படும்.கோவலன் முந்திய நாளே மதுரை சென்று பொன் வணிகர் வீதி, பொற்கொல்லர் வீதிகளை அறிந்து வந்தவனாதலின், பொற்கொல்லனைத் தேடி அலைவதில் காலம் செலவிடத் தேவையில்லை. அதனால்தான் கடைவீதியுள் நுழைந்தவுடனே, “பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி” (சிலம்பு : 2 : 110) பொற்கொல்லனை அடையாளம் கண்டு, “காவலன் தேவிக்கு ஆவதே காற்கணி, நீ விலையிடுதற்கு ஆதியோ?” [சிலம்பு: 26 : 111-112] எனக் கேட்டு, அவன்பால் சிலம்பைக் கொடுத்து விட்டான்.
தான் செய்த களவு, அரசனுக்குத் தெரிந்து விடுமுன்னரே, கோவலனைக் குற்றவாளியாக்கிக் கொன்று விட வேண்டும் என்பதில் விரைவு காட்டினான் பொற்கொல்லன். கோப்பெருந்தேவி கோயிலுக்குச் செல்லும் மன்னவன் அரசவை திரும்பும் வரை காத்திருக்கவும் விரும்பவில்லை; கோப்பெருந்தேவியின் கோயில் வாயிலுக்கே சென்று விட்டான். அது போலவே, கோவலன் தோற்றப் பொலிவு கண்டு, இவன் கள்வன் ஆகான் என்ற காவலன் ஐயத்தைப் போக்குவதிலும் விரைவு காட்டினான்.
“கோயில் சிலம்பு கொண்ட கள்வன் என் சிறுகுடில் அகத்துளான்” எனப் பொற்கொல்லன் கூறக் கேட்ட அளவே, கோப்பெருந்தேவியின் ஊடலைத் தணிக்க வேண்டும் என்ற வேட்கை மிகுதியால், பொற்கொல்லன் கூறியதன் உண்மை அன்மைகளை ஆராய எண்ணாதே, ஊர் காப்பாளரைக் கூவிக், “கொன்று சிலம்பு கொணர்க” என ஆணை பிறப்பிப்பதில் மன்னனும் விரைவு காட்டினான்.
ஆகவே, கோவலன் பொற்கொல்லனைக் கண்டதும், பொற்கொல்லன் அரசனைக் கண்டதும், அரசன் ஆணை பிறப்பித்ததும், கல்லாக் களிமகன் கோவலனை வெட்டி வீழ்த்தியதும் ஆகிய இந்நிகழ்ச்சிகள், மிக மிக விரைவாக, சில நாழிகைக்குள் நடந்து முடிந்திருக்க வேண்டும். மாலை வரை சென்றிருக்காது. நண்பகற் போதிற்குள்ளாகவே முடிந்திருக்கும்.
பொதுவாக, அரசவை கூடுவது காலைப் பொழுதில். அதனால்தான் அது, “நாளவை” [புறம் : 54 : 3], “நாள் மகிழ் இருக்கை” [புறம்: 29:5], “நாளிருக்கை” [சிலம்பு: 23:56, மதுரைக்காஞ்சி: 525], “நாளோலக்கம்” என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. குடையொடு கோல் வீழ்தல் போலும் தீக்கனாக் கண்டு, வருவதோர் துன்பம் உண்டு என அஞ்சிய கோப்பெருந்தேவி, அத்தீக்கனாத் திறம் உரைக்க அவை புகுந்த போதே, அரசன் அரிமான் ஏந்திய அமளி மிசை இருந்தான் என இளங்கோவடிகளார் கூறியுள்ளார்; அரசவை கூடியிருந்த காலம் காலைப் பொழுதாம் என்பது இதனாலும் உறுதி செய்யப்படும். அரசவை காலைப் போதில் கூடி, அரசியல் பற்றிய அலுவல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ஆடல், பாடல் நிகழ்வது வழக்கமாகும். ஆடல், பாடல் கண்டும், கேட்டும் இன்புற்றுப் பாண்டியன் மெய்ம் மறந்திருப்பது கண்டு, ஊடல் கொண்டு, அரசவை நீங்கித் தன் மனை சென்று விட்ட கோப்பெருந்தேவியின் சினம் தவிர்ப்பான் வேண்டி, மன்னவன் அவள் மனை நோக்கி விரையும் நிலையில், பொற்கொல்லன் மன்னனைக் கண்டான் என்பதால், அது நிகழ்ந்த காலம் நண்பகலுக்கு முந்தியதாதலே வேண்டும். அந்நேரத்தில் மன்னனைக் கண்ட பொற்கொல்லன், கோவலன் மீது குற்றம் சாட்டலும், அது கேட்டு அரசன் ஆணை பிறப்பித்தலும், ஆணையேற்றுக் காவலருடன் பொற்கொல்லன் தன் மனை புகுதலும், காவலர் மறுத்தலும், பொற்கொல்லன் கள்வர் இயல்பு கூறலும், இறுதியாக ஒருவன் கோவலன் மீது வெள்வாள் வீசலும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, விரைந்து நடைபெறக் கோவலன் கொலையுண்டு வீழ்ந்தது நண்பகற் போதிற்குச் சற்று முன்பாகவே முடிவுற்றிருக்க வேண்டும்.
கோவலன் கொலை முதல் நாள் நிகழ, ஆய்ச்சியர் குரவை மறு நாள் நிகழ்ந்தது எனக் கொள்வதா? இரண்டையும் ஒரு நாள் நிகழ்ச்சிகளாகவே கொள்வதா?
கோவலன் கொலை முதல் நாள் நிகழ்ச்சி. குரவை மறு நாள் நிகழ்ச்சி என்ற முடிவு கொண்டுள்ளார் ம.பொ.சி. “ஆய்ச்சியர் இல்லத்திலே கோவலன் உணவு கொண்டான் என்றால், தயிரோ, மோரோ இல்லாமலா உணவை உண்டிருப்பான்? குடப்பால் உறையாத நிலையில், கோவலன் உண்ணுவதற்குத் தயிரோ, மோரோ கிடைத்திருக்குமா?” [பக்கம்: 137] இவை ம.பொ.சி. அவர்களின் வினா.
பால் தோயவில்லை; நெய் உருகவில்லை; ஆகவே பாலும், நெய்யும் குரவை ஆடிய அன்று கொடுத்திருக்க முடியாது; ஆனால், அவை கொடுக்கப்பட்டதாக இளங்கோவடிகளார் கூறியுள்ளார். “சாலி அரிசி தம்பால் பயன்” [சிலம்பு: 16:27] ஆகவே, பால் தோயாத, நெய் உருகாத நாளாகிய குரவை நிகழ்ந்த அன்று, கோவலன் உணவு உண்டிருக்க இயலாது. அதற்கு முந்திய நாளே உண்டிருக்க வேண்டும் என்பது ம.பொ.சி. அவர்கள் வாதம்.
உணவிற்காம் பொருள்களை, முந்திய நாள் இரவே கொடுத்து விட்டார்கள் என்பதற்கு மாறாக, உணவு, ஆக்கிப் படைத்த அன்று கொடுத்தார்கள் என்றும், உணவுண்டது விடியற் காலையில் என்பதற்கு மாறாக, நண்பகற் போதில் என்றும் கொண்ட கருத்துக் குழப்பமே இதற்குக் காரணம். குரவை ஆடிய அன்றைய பால்தான் உறையவில்லை; நெய்தான் உருகவில்லை; அதற்கு முந்திய நாள் பால் உறையவில்லை; நெய் உருகவில்லை எனக் கூறப்படவில்லை. உணவிற்காம் பொருள்களை முந்திய நாள் இரவே கொடுத்து விட்டார்கள். அவை கொண்டு ஆக்கிய உணவை விடியற் காலையிலேயே உண்டான் என்று கொண்டால், பால் உறையாத போது, நெய் உருகாத போது, தயிரும், நெய்யும் எவ்வாறு தந்திருக்க இயலும் என்ற வினா எழுதற்கே இடமில்லாமல் போகும்.
கோவலன் முதல் நாள் உணவுண்டு சென்று கொலையுண்டு போனான்; மறு நாள் பால் உறையாமை முதலாம் உற்பாதம் கண்டு ஆய்ச்சியர் குரவை ஆடினர் என்று கொள்வதில், இயற்கை நியதிக்கு ஒவ்வாத ஒரு முரண்பாடு இடம் பெறுவதை ம.பொ.சி. உணர்ந்திலர் போலும்.
உற்பாதங்கள், வர இருக்கும் கேட்டினை உணர்த்த முன்கூட்டி நிகழ்வது இயற்கையேயல்லாது, கேடு வந்து விட்ட பின்னர் நிகழ்வது இயற்கை அன்று. புகார் நகரத்தில் கண்ணகி கண்ட தீக்கனவும், புறஞ்சேரியில் கோவலன் கண்ட தீக்கனவும் கொலை நிகழ்ச்சிக்கு முன் நிகழ்ச்சிகளாதல் அறிக. அது போலவே, பாண்டிமாதேவி கண்ட தீக்கனவும், பாண்டியன் உயிர் இழந்து வீழ்தற்கு முன் நிகழ்ச்சி ஆதலும் அறிக. “பாண்டி மாதேவி முன்னாள் இரவில், தான் கண்ட தீய கனவினை அரசர்க்கு உணர்த்த எண்ணி, அரசவை புகுந்தாள்” [பக்கம்: 128] எனக் கூறுவதன் மூலம், திரு. ம.பொ.சி. அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்.யானைக் கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசன் இறந்த போது, வருந்திப் பாடிய, கூடலூர்க் கிழார் என்ற புலவர், “வானத்திலிருந்து விண்மீன் ஒன்று வீழ்ந்தது. அது கண்டு, யாருக்கு என்ன கேடு நேருமோ என அஞ்சியிருந்தோம். ஏழாம் நாள் வந்தது. அந்தோ! இரும்பொறை இறந்து போனான்—”
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே;
அதுகண்டு,யாமும், பிறரும் பல்வேறு இரவலர்
அஞ்சினம், ஏழுநாள் வந்தன்று, இன்றோ
மேலோர் உலகம் எய்தினன்!”
—புறம்:229
எனக் கூறுவதிலிருந்தும், வரவிருக்கும் கேட்டினை அறிவிக்க உற்பாதங்கள் முன் நிகழுமே யல்லாது கேடு வந்துற்ற பின்னர் நிகழ்வதில்லை என்பது உறுதி செய்யப்படும். ஆகவே, பால் உறையாமை முதலாம் உற்பாதங்களையும், அவை கண்டு மேற்கொண்ட குரவைக் கூத்தையும், கோவலன் கொலைக்கு முந்திய நிகழ்ச்சிகளாகக் கொள்வதே முறை. .
குடப்பால் உறையாமை கண்ட மாதரி கூறுவதாக வரும் உரைப்பாட்டு மடையிலும், கருப்பத்திலும் நிகழ்ந்து விட்ட நிகழ்ச்சியை உணர்த்தும் வகையில், “வந்தது ஒன்று உண்டு“, “வந்ததோர் துன்பம் உண்டு” என இறந்த காலம் குறித்து வாராமல், நிகழவிருக்கும் நிகழ்ச்சியை உணர்த்தும் வகையில், “வருவது ஒன்று உண்டு, வருவதோர் துன்பம் உண்டு” [சிலம்பு:17: உரைப்பாட்டு மடை] என எதிர் காலம் குறித்தே வந்திருக்கும் தொடர்களும், மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்து நிற்கின்றன.“குடத்துப்பால் உறையவில்லை; உறியிலிட்ட வெண்ணெய் உருகாமலே நிற்கும் என்ற காரணத்தால், வரக் கூடிய துன்பம் ஒன்றுண்டு என ஐயுற்றல்லவா ஆய்ச்சியர் குரவைக் கூத்து நிகழ்த்தி, வரவிருக்கும் துன்பத்தைத் தவிர்க்கத் திருமாலை வழிபடுகின்றனர்?” [பக்கம் : 137] எனக் கூறி, மேற்கூறிய கருத்தை ஓரிடத்தில் ஏற்றுக் கொள்ளும் ம.பொ.சி.யார், “குரவை நிகழ்ந்த முந்திய நாள் மாலையிலேயே கோவலன் கொலையுண்டு விட்டான்” [பக்கம்:125] எனக் கூறிப் பிறிதோரிடத்தில் குழப்புவது ஏனோ?
தான் படைத்த உணவுண்டு, காலையில் தன்னிடம் விடை பெற்றுச் சென்ற கணவனின் உயிரற்ற உடலைக் கண்ணகி மறு நாள் மாலைதான் கண்டாள் என்றால், அந்த ஒரு நாளில் அவள் நிலை என்ன? அது பற்றி இளங்கோவடிகளார் யாதும் கூறவில்லையே ஏன்? என்ற வினா எழல் இயல்பே.
“கோவலன் விடை பெற்றுச் சென்ற பின்னர், அவன் கொலையுண்ட செய்தி அறியா நிலையிலேயே கண்ணகி ஒரு இரவை மாதரி இல்லத்தில் கழித்தாள்” [பக்கம்: 123] என்கிறார் ம.பொ.சி.
புகார் நகர் நீங்கி, மதுரைக்குப் புறப்பட்ட அந்நாள் தொட்டுக் கண்ணகி கோவலனை ஓர் இரவும் பிரிந்து இருந்தவள் அல்லள். அங்ங்னமாகக் கோவலனைச் சிலம்பு விற்கப் போக விட்டு, ஒரு நாள் பகல், இரவு, மறு நாள் பிற்பகல் வரையும் பிரிந்திருந்தாளாகக் கூறுவதும், அதுவும் கணவன் கொலையுற்றதைக் குறிப்பால் அறிந்து கொள்ளும் வரை பிரிவுத் துயர் உறாது இருந்தாளாகக் கூறுவதும் அறவே பொருந்தா.ம.பொ.சி. அவர்களும் இதை உணராமல் இல்லை. கோவலன் கொலையுண்ட மறு நாள்தான், கண்ணகி அவன் உடலைக் கண்டாள் என்ற தம் வாதத்திற்குத் தடையாகக், “குரவைக் கூத்துக்கு முதல் நாள் மாலையிலேயே கோவலன் கொலையுண்டான் என்றால், அன்றிரவில் பிரிந்து சென்ற கோவலன் வரக் காணாமைக்கு வருந்தாமல், அமைதியாகக் கழித்திருப்பாளா கண்ணகி? கழித்திருப்பாள் என்று நம்புவது கண்ணகியின் கற்புக்கு இழுக்குக் கற்பிப்பது ஆகாதா? என்றெல்லாம் கேட்கப் படுகிறது” [பக்கம் 135] எனக் கூறி விட்டு, அதற்கு விடையாக, “கோவலன் தன்னைப் பிரிந்து சென்ற நாளில்—குரவைக் கூத்து நிகழ்வதற்கு முதல் நாளில்—இரவில், கண்ணகி உள்ளம் குலைந்தாள்; மனம் வருந்தி வெதும்பினாள்” [பக்கம் 135] என்று கூறி, அதற்கு ஆதாரமாக,
“காதலற் காண்கிலேன்; கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே;
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்,
ஏதிலார் சொன்னது எவன்?வாழி யோ!தோழி!
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே;
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்,
மன்பதை சொன்னது எவன்?வாழி யோ!தோழி!
தஞ்சமோ தோழி!தலைவன் வரக் காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே;
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்?வாழி யோ!தோழி!“”
என்ற இப்பாக்களைக் காட்டி, “”இங்கு ஒர் இரவு கோவலன் வரத் தவறியமைக்கு, அந்த இரவில் அவள் அடைந்த மனத்துயரம் அவளாலேயே விளக்கப்படுகிறது அன்றோ?” [பக்கம்: 136] என்ற வினா எழுப்பி முடித்துள்ளார்.
எடுத்துக் காட்டிய பாக்கள் மூன்றும், குரவை முடிவில் ஊர் அரவம் கேட்டு வந்த ஆயர் முதுமகள் ஏதும் சொல்லாடா நிலை கண்டு, கண்ணகி கலங்கிக் கூறியவை. இவை, குரவைக் கூத்து நிகழ்வதற்கு முற்பட்ட காலத்தில் முந்திய நாள் இரவில் கண்ணகி உற்ற துயரை உணர்த்துவனவாயின், “நோய் கைம்மிகும்”, “நெஞ்சு உயிர்க்கும்”, “நெஞ்சு அலவும்” என வந்திருக்கும் வினைச் சொற்கள் எல்லாம்,“நோய் கைம் மிகுந்தது”, “நெஞ்சு உயிர்த்தது”, “நெஞ்சு அலவுற்றது” என இறந்த காலம் உணர்த்துவனவாகயிருத்தல் வேண்டும். ஆனால், அவை அனைத்தும் நிகழ் கால வினைச் சொற்களாகவே வந்துள்ளன.
மேலும், அவ்வினைச் சொற்கள், நோய் கைம்மிகுதலும், நெஞ்சு உயிர்த்தலும், அலவுறுதலும், மயங்குதலும் ஆகிய அவ்வினைகள், நிகழ் கால நிகழ்ச்சிகள் என்பதை மட்டும் உணரத்தான் துணை புரிகின்றனவே. ஒழிய, அவை இரவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளா? பகலில் விளைந்த வினைகளா என்பதை உணரத் துணை புரியவில்லை. ஆகவே, கோவலனைப் பிரிந்திருந்த, குரவை நிகழ்வதற்கு முந்திய நாள் இரவில் கண்ணகி பிரிவாற்றாது வருந்தினாள் என்பதற்கு, இப்பாக்கள் சான்றாக மாட்டா.
கோவலனைப் பிரிந்து, கண்ணகி இரவில் வருந்திப் புலம்பினாள் என்பதற்குச் சான்று பகரும் செய்யுள் எதுவும் சிலப்பதிகாரத்தில் இல்லை. கோவலனைப் பிரிந்த இரவு இருந்திருந்தால் அல்லவோ, அவ்விரவில் கண்ணகி உற்ற பிரிவுத் துயரை இளங்கோ அடிகளார் பாடியிருப்பர்? கோவலனைப் பிரிந்த இரவே இல்லை; ஆகவே, அவ்விரவில், அவள் உற்ற துயரைப் பாட வேண்டிய நிலை இளங்கோவடிகளார்க்கு வாய்க்கவில்லை.
“கோவலன் கொலையுண்ட செய்தியைத் தெளிவாக அறியு முன்னரே, அதனை அறிவிக்கும் நோக்குடன் தன் எதிரே வந்து திகைத்து நிற்கும் ஆய்ச்சியைப் பார்த்து வாய் விட்டு அரற்றி, அழுகின்றாள் கண்ணகி” (பக்கம்: 138) எனக் கூறி, இச்செய்யுட்களில் வெளிப்படும் கண்ணகி துயரம், குரவை முடிவில் அவள் உற்ற துயரமே என உறுதிப் படுத்தும் ம.பொ.சி., அடுத்த வாக்கியத்தில், இவற்றைக் கோவலனைப் பிரிந்திருந்த முந்திய இரவில் கண்ணகி உற்ற துயரத்தைக் குறிப்பதாகக் கொண்டு மயங்குவது ஏனோ?
மேலே கூறிய பாக்கள், கோவலன் மதுரை சென்ற பிறகு, தனித்திருந்த இரவில் [பக்கம்: 135] கண்ணகி உற்ற துயரைக் குறிக்கின்றன என ஒரிடத்திலும், குரவை முடிவில், [பக்கம் : 136] கோவலன் கொலையுண்டதைக் குறிப்பால் அறிந்து கொண்ட நிலையில், கண்ணகி உற்ற துயரைக் குறிப்பதாக மற்றோரிடத்திலும் கூறும் ம.பொ.சி. அவர்கள், “நண்பகற்போதே நடுக்கு நோய் கைம்மிகும்; அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு அன்றே” என்ற வரிகளும், அவற்றிற்குக், “கோவலன் போன போதே தன் நெஞ்சு கலங்குதலால், நண்பகற் போதே என்றாள்” என அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையும், கோவலன் சிலம்பு விற்கச் சென்றது முற்பகல் நேரம் என்பதனை உறுதிப்படுத்தும்” [பக்கம் : 138] எனக் கூறி, இப்பாக்கள் கோவலன் விடைபெற்றுச் சென்ற போது, கண்ணகி கலங்கிய கலக்கத்தை உணர்த்துவனவாகவும் கொண்டு மேலும் குழம்பியுள்ளார்.புறஞ்சேரியில் இருந்த போது, மாநகர் காணக் கோவலன் சென்ற போது, கண்ணகி கலங்கவில்லை; காலை முரசம் கனை குரல் எழுப்பச் சென்றவன், மாலைதான் திரும்பினான்; என்றாலும் கலங்கவில்லை. காரணம் வாழும் வகை காணவே செல்கிறான் என்பதால், புதிய இடத்திற்கு முதன் முறையாகச் சென்ற போதே கலங்காதவள், அறிந்த இடத்திற்குச் செல்லும் போது, அதுவும், இவள் கணவன் தந்தை பெயரைக் கேட்ட அளவே, கிடைத்தற்கரிய விருந்தினனாக மதித்துத் தம்மை வரவேற்றுக் கடிமனைப் படுத்தும் நல்லோர் எனக் கௌந்தி அடிகளால், தன் காது கேட்க மாதரியிடம் கூறப்பட்டவர் இடத்திற்குச் செல்லும் போது, அதுவும், சிலம்பு விற்றுப் புது வாழ்வு காணும் முயற்சி மேற்கொண்டு செல்லும் போது கலங்குவதற்குக் காரணமே இல்லை. அவ்வாறாகவும், “கோவலன் போன போதே தன் நெஞ்சு கலங்குதலால் நண்பகற் போதே என்றாள்” என அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. “நண்பகற். போதே நடுங்கும்” என்ற தொடர், நடுங்கிய நேரம், நண்பகற் போது என்பதை மட்டும் உணரத்தான் துணை புரிகிறதே அல்லாது, “கோவலன் போன போதே கலங்கினள்” என்பதை உணர்த்த அத்தொடரில் இடம் இல்லை.
மேலும், ஊர் அரவம் கேட்டு வந்து சொல்லாடாது நின்ற மாதரியைப் பார்த்துக் கலங்கிப் புலம்பும் கண்ணகி, “காதலற் காண்கிலேன்” என்ற காரணத்தைத் தொடக்கத்தில் கூறி விட்டுத்தான் “கலங்கி நோய் கைம்மிகும்” என்று கலங்குவதைக் கூறியுள்ளாள். அது போலவே, அடுத்து வரும் பாக்களிலும், “அன்பனைக் காணாது அலவும்,” “தலைவன் வரக் காணேன்” என வரும் தொடர்கள், சென்ற கணவன் வரக் காணாமையால் கண்ணகி கலங்கினாள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. ஆகவே, கண்ணகி கோவலனுக்கு விடை கொடுத்து அனுப்பிய போது கலங்கவில்லை. கொலைச் செய்தியைக் குறிப்பால் அறிந்து கொண்ட நண்பகற் போதிலேயே கலங்கினாள் என உணர்க.
கோவலன் கொலையுண்டது, பொற்கொல்லன் சிறுகுடிலை அடுத்திருந்த ஒரு தேவ கோட்டம். அது மதுரை மாநகரில், பெருவாணிகம் நிகழும், மக்கள் நடமாட்டம் மிக்க இடமாதல் வேண்டும். மேலும், மதுரை ஒரு பெருநகரமாதலின் அங்குக் கம்பலை மாக்கள் பெருகியிருப்பர் என்பதில் ஐயம் இல்லை. கம்பலை மாக்களாவார், “வேறு சில காட்சி கண்டு திரியுமவர்” என்கிறார் அடியார்க்கு நல்லார். கோவலன் உடலை அக்கம்பலை மாக்களே கண்ணகிக்குக் காட்டினர். “கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட, செம்பொற் கொடியனையாள் கண்டாள்” என்கிறார் இளங்கோவடிகளார். மேலும் கொலைச் செய்தியை இளங்கோவடிகளார் “ஊர் அரவம்” என்கிறார். அரவம் என்றால் பேரொலி என்பது பொருளாம். ஆகவே, கொலைப் பேச்சு மக்கள் அனைவராலும் பேசப்பட்டது எனத் தெரிகிறது. ஆகவே, கம்பலை மாக்கள் நிறைந்த ஒரு மாநகரத்தில், மக்கள் நடமாட்டம் மிக்க ஓரிடத்தில், நிகழ்ந்து விட்ட ஒரு கொலை நிகழ்ச்சி, இது நிகழ்ந்த சிறு பொழுதிற்கெல்லாம் நகர் முழுதும் பரவியிருக்கும். அங்ஙனமாக, அன்று பகலும், இரவும் தெரியாதிருந்தது; மறுநாள் பிற்பகல், நண்பகற் போதில்தான் தெரிந்தது என்பது நம்பக் கூடாத ஒன்று.
ஆயர்பாடி விட்டுப் புறப்பட்ட கோவலன், தாதெரு மன்றம் கழித்து, மாதர் வீதி மறுகிடை போய், பீடிகைத் தெருவில் அடியிட்டதும், பொற்கொல்லனைக் கண்டு கொண்டான். ஆகவே, பொற்கொல்லன் சிறுகுடில் இருந்த இடம், ஆயர்பாடிக்கு வெகு தொலைவில் இருந்திருக்காது. அண்மையிலேயே இருந்திருக்க வேண்டும். அதனால்தான், கோவலன் கொலைச் செய்தி விரைந்து பரவ, குரவை முடிவில் நெடுமால் அடியேத்தத் துறை படியப் போன மாதரி, அச்செய்தி கேட்டு விரைந்தோடி வந்தாள்.
வந்த மாதரி கலக்க மிகுதியாலும், துணிவு இல்லாமையாலும், தன் வாய்ப்பட, வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், ஊரார் பேசிக் கொள்வதைக் குறிப்பால் உணர்த்தி விட்டாள். அதனால்தான் கண்ணகிக்கு ஐயமும், அதைத் தொடர்ந்து அந்நண்பகற்போதில் கலக்கமும் பெருக, “ஏதிலார் சொன்னது என்ன?”, “மன்பதை சொன்னது என்ன?”, “எஞ்சலார் சொன்னது என்ன?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்து நின்றாள். இனியும் மறைத்துப் பயனில்லை என்பதால், மாதரி நிகழ்ந்ததைக் கூறி விட்டாள். ஆக, குரவை ஆட்டமும், கோவலன் கொலையும் ஒரு நாள் நிகழ்ச்சிகளே என்பது இதனாலும் உறுதி செய்யப்படுகிறது. ::
கோவலன் கொலையுண்ட மறுநாள் மாலையில் தான் கண்ணகி கோவலனைக் கண்டாள் என்று கொண்டு விட்டதனால், “கண்ணகி காணும்போது, இரத்தம் கொப்புளித்திருக்க முடியாது; ஆனால், ஆசிரியர் அவ்வாறு கூறியது, வரலாற்று ஆசிரியர்கள் மனப்போக்கில் அன்று; கற்பனைத் திறம் படைத்த கவிஞனுடைய உளப் போக்கில் ஆகும்” [பக்கம் : 141] எனக் கூறி, இளங்கோவடிகளின் வரலாற்று அறிவிற்கு மாசு கற்பிக்க முனைந்துள்ளார் ம.பொ.சி.
கோவலன் நண்பகற் போதில் கொலையுண்ண, அன்று மாலையே, கண்ணகி அவனைக் கண்டதனால்தான் குருதி கொப்புளிக்கும் நிலையில் காண முடிந்தது. கண்ணகி காணும் போது, வாள் பாய்ந்த புண்ணிலிருந்து குருதி கொப்புளித்துக் கொண்டிருந்தது உண்மை. கண்ணகி “புண் தாழ்குருதி புறஞ்சோரக்” (சிலம்பு: 19:37) கண்டாள் எனப் பாடித் தம் வாயால் கூறியதோடல்லாமல் “புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ” (சிலம்பு: 19:48) என அக்காட்சியைக் கண்டு புலம்பியதாகப் பாடிக், கண்ணகி வாயாலும் கூறியுள்ளார். ஆகவே, கோவலன் கொலையுண்ட அன்று மாலையே, கண்ணகி அவன் உடலைக் கண்டாள் என்பதும், அதன் தொடர்பாக ஆய்ச்சியர் குரவை நிகழ்ந்த அன்றே கொலையும் நடைபெற்றது என்பதும், இதனாலும் உறுதி செய்யப்படும்.
கோவலன் சாவக நோன்பியாதல் அறிந்து அடிசிற் பொருள்களை ஆயர் மகளிர் அன்றிரவே அளிக்க, அவை கொண்டு, கண்ணகி, விடியற் போதிலேயே உணவாக்கிப் படைக்க, அது உண்டு கோவலனும், காலையிலேயே விடை பெற்றுச் செல்ல, மாதரியும் மற்றவரும் அக்காட்சி கண்டு மகிழ்ந்திருந்த நிலையில், காலை முரசம் இயம்ப, அது கேட்டு மாதரி நெய்ம்முறை உணர்ந்து, அது மேற்கொள்ள முனைந்தவள், பால் உறையாமை கண்டு, கேடு வரும் என அஞ்சி, அது தீரக் குரவை ஆடப் பணித்தாள்.
குரவை ஆட்டத்தைக் காலையிலேயே தொடங்கி விட்டாலும், ஆடவும், பாடவும் வல்ல ஆயர் மகளிரைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களை ஆடரங்கில் நிற்க வேண்டிய நிலைகளில் நிற்க வைக்கவும், பின்னர்க் கூத்தின் ஒரு கூறும் விடாதபடி, முழுமையாக ஆடியும், பாடியும் முடிக்க நண்பகற் போது ஆகியிருத்தல் கூடும்.
ஆயர் பாடியில் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கோவலன் பொற்கொல்லனைக் கண்டு, சிலம்பு விற்க வேண்டலும், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, கோவலனைக் கள்வன் எனக் கூறலும், அரசன் ஆணை பிறப்பித்தலும் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று, இறுதியில் கோவலன் கொலை செய்யப்படுதல் குரவை முடிவிற்குச் சற்று முன்னாக நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
இவ்வாறு கொள்வதால், கோவலன் உணவுண்டு சென்று கொலையுண்டு போதலும், ஆய்ச்சியர் குரவை ஆடலும், கண்ணகி கொலையுண்ட கணவனைக் காணலும் ஆகிய இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நாள் நிகழ்ச்சிகளே என்பதற்குத் தடையாகக் கூறக் கூடியது எதுவும் இல்லை என்பதும், அதனால், காலையில் கணவனைத் தழுவி, அவன் முடி மாலையைத் தன் கூந்தலில் சூட்டிக் கொண்டவள், அன்று மாலையே கணவனின் கொலையுண்ட உடலைக் கண்டாள்.
“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால், காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறம்சோர மாலைவாய்க்
கண்டாள், அவன்தன்னைக் காணாக் கடுந்துயரம்”