சிலம்பொலி/அத்தியாயம் 10
மாதவி, கோவலன் அன்புக்கு ஏங்கியவளே யல்லாது, அவன் மாநிதியைக் கருத்தில் கொண்டவள் அல்லள்!
மாதவியின் குறிக்கோள் எல்லாம், தன் உறவு கொள்ள விரும்புவான் கொண்டு வந்து கொட்டும் பொற்குவியல் மீதேயல்லாது, அவன் காட்டும் அன்பின் மீது அன்று, எனக் குற்றம் சாட்டி, அதற்கு ஆதாரமாக அரசன் முன் ஆடிப் பெற்ற மாலைக்கு ஆயிரத்து எட்டுக் கழஞ்சு பொன் விலை வைத்து, அதை வாங்கத் தக்கவரே, அவளை அடையத் தக்கவர் எனக் கூறி, நகரத்துச் செல்வக் குடியில் பிறந்த இளைஞர்கள் திரியும் தெருவில் கொண்டு போய் விற்க முனைந்த செயலைச் சான்றாகக் காட்டுவர்
“நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை;
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த”
—சிலம்பு: அரங்கேற்று காதை: 164-169
அவ்வாறு விலை கூறி விற்க முனைந்தது உண்மை; ஆனால், அது செய்தவள், மாதவி அல்லள்; மாறாகப் பரத்தையர் தொழில் மூலம் பொருள் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட அவள் தாய் சித்திராபதி.
மேலும் மாதவி, கோவலன் காட்டும் அன்பில் நாட்டம் உடையவளே அல்லாது, அவன் கொண்டு வந்து கொட்டும் பொருளில் நாட்டம் உடையவள் அல்லள் என்பதை உறுதி செய்யும் வலுவான அகச்சான்று, மணிமேகலைக் காப்பியத்தில் உளது.
மாதவி காதலனாம் கோவலன், மாநிலம் முழுதாளும் மன்னன் நிகர் மாநிதிக் கிழவன் மகனேயாயினும், அவன் மன்னன் அல்லன். ஆனால், அம்மாதவி ஈன்ற மணிமேகலைபால் மனதைப் பறி கொடுத்தவன், மாநிலம் முழுதாளும் மன்னன் மகன். இதை மாதவி அறிவாள். அவ்வுண்மையை அவளுக்கு, அவள் தோழி வசந்தமாலை அறிவித்திருந்தாள். மன்னன் மகன், தன் மீது தணியாக் காதல் கொண்டுள்ளான் என்பதைத், தன் தாய்க்கு, வசந்தமாலை அறிவித்ததை, மணிமேகலை தன் காதுகளாலேயே கேட்டறிந்துள்ளாள். -
“சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என
வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள்
கிளந்த மாற்றம் கேட்டேன்.”
என, அவளே கூறுவது காண்க. [மணிமேகலை: 4 பனிக் கரை புக்க காதை: 79-82] .
மகள் மீது, மன்னன் மகனே மனதைப் பறி கொடுத்துள்ளான்; அவனுக்குத் துணை நிற்க, தன் தாய் சித்திராபதியும் முனைந்துள்ளாள். இந்நிலையில் தன் மனையில், பொன் கொழிப்பதே மாதவியின் குறிக்கோளாய் இருந்திருக்குமாயின், தாயின் முயற்சிக்குப் பச்சைக் கொடி . காட்டியிருப்பாள் மாதவி. ஆனால், அவள் அது செய்திலள். மாறாக—“மகள் மணிமேகலை,
அருந்தவப் படுத்தல் அல்லது, யாவதும்
திருந்தாச் செய்கைத் தீந்தொழில் படாஅள்,
சித்திரா பதிக்கும் செப்பு நீ”
எனக் கூறியதோடு (மணிமேகலை: ஊரவர் உரைத்த: காதை: 55-71) நில்லாமல், மணிமேகலையைப் பரத்தையர் ஒழுக்கத்திற்குப் பலியாக்காது, அவள் கூந்தலை, அதில் சூட்டிய மாலையோடு மழித்துப் புத்தன் நெறியில் புகுத்துவதும் செய்து முடித்தாள்.
“மணிமேகலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித தானம் புரிந்து அறங்கொள்ளவும்”
—சிலம்பு : நீர்ப்படைக் காதை:105-108