சிலம்பொலி/அத்தியாயம் 11
மாதவியைக் கோவலன் மன்னித்து விட்டான்; ஆனால், கண்ணகி மன்னிக்கவில்லை! கண்ணகி தென்னவனை மன்னித்து விட்டாள்; ஆனால், மாதவியை மன்னிக்கவில்லை!
தன் கணவனை ஆராயாதே, கள்வன் எனக் குற்றம் சாட்டிக் கொன்றவன் தென்னவன்; இருந்தும் அது மன்னித்து, “தென்னவன் தீதிலன்; தேவர் கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினான்; நான் அவன் தன் மகள்” (வாழ்த்துக் காதை) என அவனைத் தந்தையாகவும் கொண்டாள் கண்ணகி.
கண்ணகியைக் “குலப்பிறப்பாட்டி” (புறஞ்சேரி இறுத்த காதை: 89) என்றும், “மாபெரும் பத்தினி” (மணிமேகலை: 2:55) என்றும் பாராட்டியவள் மாதவி. மேலும், கோவலனுக்கு நேர்ந்தது கேட்டுத் தான் துறவு பூண்டதோடு, தான் ஈன்ற மகள் மணிமேகலையைக் கண்ணகி மகளாகவே மதித்து, அதனால், அம்மகள், தன்னைப் போல் பரத்தையர் தொழில் மேற்கோடல் கூடாது என உணர்ந்து, “மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (மணி மேகலை: 2:55-57) எனத் தன் வாயால் விளங்கக் கூறித் தன் மகளையும் துறவு பூணச் செய்தவள் மாதவி. “மாதவி மடந்தை நற்றாய் தனக்கு நற்றிறறம் படர்கேன் மணிமேகலையை வான்துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணாது ஒழிக எனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்து அறங் கொள்ளவும்” (சிலம்பு 27 : 103-108) என மாடலமறையோன் செங்குட்டுவனுக்குக் கூறுவது காண்க.
கோவலன் கொலைக்குக் காரணமான தென்னவனைத் “தீதிலன்” என்று கூறிய கண்ணகி, கோவலன் கொலைக்கு மாதவி பாடிய கானல்வரியே காரணம் என மாதவி குறித்து, உலகோர் கூறும் பழியுரையை மறுத்து அவள் தீதிலள் எனக் கூறவில்லை. ஆகவே, மாதவி குற்றம் உடையவளே என வாதிடுவர் சிலர்.
ஒரு வழக்கில் தொடக்க நிலையில் உண்மைகளை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாதே, ஒரு தவறான தீர்ப்பினை வழங்கி விட்ட ஒரு நடுவர், பின்னர், உண்மையை உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை வாய்த்து விட்டதும், தான், முன்பு வழங்கிவிட்ட தவறான தீர்ப்பினை மறுத்து, நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுவது இன்றியமையாதது. அத்தகைய நிலை, சிலப்பதிகாரப் பாத்திரங்களில் மூவருக்கு ஏற்பட்டு விட்டது.
கானல்வரி பாடுங்கால், கோவலன் உள்ளத்தில் எவ்விதக் குறிப்பும் கொண்டிலன் என்பதும், மாதவி தன் உள்ளம் மகிழவே பாடினான் என்பதும், உண்மையாகவே இருக்கலாம். ஆனால், அவன் பாடிய கானல் வரிகளின் கருப் பொருள், ஒரிளம் பெண்ணின் பால் காதல் கொண்டு கருத்திழந்து நிற்கும் ஒர் இளைஞன் கூற்றாக அமைந்து விட்டது என்பதை மறுக்க இயலாது. அப்பொருள் தொனிக்கப் பாடி விட்ட அவன்,அப்பாடல் கேட்டு, மாதவி தான் பாடிய வரிப் பாடல்களில், ஒரிளைஞன் பால் காதல் கொண்டு கருத்திழந்து நிற்பாளோர் இளம் பெண்ணின் கூற்றையே கருப்பொருளாக ஏற்றிப் பாடி முடித்த நிலையில், அவளை அவ்வாறு பாடச் செய்தது தன் பாக்களின் கருப் பொருளே; அது கேட்கும் எந்தப் பெண்ணின் உள்ளத்திலும் அத்தகைய உணர்வுதான் எழும். ஆகவே, தவறு தன்னுடையதே என எண்ணித் தன் பிழைக்குத் தான் இரங்க வேண்டுவது விடுத்து, "மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்" (கானல்வரி : 52] எனச் சிந்தியாதே குற்றம் சாட்டி விட்டாள்.
அடுத்து, கானல்வரி பாடிய அன்று மாலை, மாதவி. வசந்தமாலைவழி விடுத்த அழைப்புக் கடிதத்தைக் கையால் தொடுவதும் செய்யாததன் மூலம்,அவள் முடங்கலைக் கண் திறந்து பார்க்க வேண்டும்; அதில் அவள் செய்திருக்கும் முறையீட்டினைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் இலனாகி, மாதவியின் அன்பில் ஐயுறவு கொள்ளாத நிலையில், அவள் ஆடிக் காட்டிய. கண் கூடு வரி முதலாக எடுத்துக் கோள்வரி ஈறாகப்பல்வேறு வரிக்கூத்துக்களைத் தான் கண்டு மகிழவே அவள் ஆடியதாகக் கொண்டு மகிழ்ந்தவன், இப்போது, அவ்வரிக் கூத்துக்கள், "ஆடல் மகளே ஆதலின், ஆயிழை! பாடு பெற்றன அப்பைந்தொடி தமக்கு' [வேனிற் காதை: 110] எனக் கூறிப் பழித்துரைத்ததன் மூலம், தவறான தீர்ப்பினை இரண்டாவது முறையாகவும் வழங்கி விட்டான்.
அந்த அளவோடு நிற்கவில்லை. தன் மனை புகுந்து கண்ணகியின் வாடிய மேனியையும், அதற்குக் காரணமாம் அவள் வருத்தநிலையையும், கண்ணுற்ற கோவலன், அவை குறித்தோ, அவற்றிற்குக் காரணமாவார் இன்னார் என்றோ வாய் திறந்து கண்ணகி கூறாதிருக்கவும், "சலம்புணர் கொள்கைச் சலதி" என மாதவியைப் பழித்து உரைத்ததோடு, "அவளோடு ஆடிக் குலம்தரும் வான் பொருள் குன்றம் தொலைந்தது?" [கனாத்திறம் உரைத்த காதை : 69-70] எனத் தன் வறுமை நிலைக்கு அவளே காரணம் என அவள் மீது குற்றம் சாட்டி மூன்றாவது முறையாகவும் தீர்ப்பு வழங்கிவிட்டான்.
இவ்வாறு ஒரு முறைக்கு மும்முறை, குற்றம் மாதவியதே எனத் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், மதுரைப் புறஞ்சேரி சென்று புகு முன்னர், இடைவழியில், ஒருபுரி நூல் மார்பர் உறைபதிக்கண் இருந்தபோது, தன்னைத் தனிமையில் சந்தித்த கோசிகமாணி, கோவலனும், கண்ணகியும் புகார் நகர்விட்டுப் போய்விட்டது அறிந்து, மாசாத்துவான் உள்ளிட்ட அம்மாநகரத்து மாந்தர் உற்ற மாளாத் துயர் நிலை கேட்டு, மாதவி செயலிழந்து -வீழ்ந்து விட்டதையும், அவளைக் காணச் சென்ற தன் தாள் பணிந்து, கோவலன்பால் சென்று சேர்க்குமாறு வேண்டித் தன் கை இது கொடுத்தாள் எனக்கூறி, அவன் கொடுத்த அவள் கடிதத்தில் குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையராகவும், தூய உள்ளம் உடையராகவும் இருந்து நடந்துவிட்டனவற்றை ஆராய்ந்து நோக்கினால். தவறு என்பால் இல்லை என்பதைத் தெற்றென உணர்லாம். அத்தகு நிலைநின்று நோக்குதல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவாள் போல், தன்னைப் "பொய் தீர்காட்சிப் புரையோய்" ஏன விளித்தவள், அதில் அவளைப் பற்றி ஏதும் கூறிக் கொள்ளாமல், குரவர்பணி ஆற்ற வேண்டியதன் கடமையை ஆற்றத் தவற நேர்ந்து விட்டதற்கும், மனைப்புறம் போந்து அறியா மனையாளைக் காட்டு வழியில்-அதிலும் கொடிய காரிருளில் கொண்டு செல்ல நேர்ந்து விட்டதற்கும் வருந்தி, அக்கொடுஞ்செயலுக்கு அவள் காரணமாகாள் என்பதை ! அவள்: உள்மனம் உறுதியாகக் கூறுவதால், அக்கொடுமைக்கு யாதுதான் காரணம் என்பதை அறிந்து கொள்ளத் துடிக்கும் அவள் உள்ள நிலையை உணர்த்தி, இறுதியாக, ஒருவேளை அதற்கு அவள் காரணமாயிருந்திருப்பளாயின், அதை மன்னித்தருள வேண்டும் என்ற வேண்டுகோளை-"குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பாட்டியொடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு? அறியாது கையறும் நெஞ்சம்; கடியல் வேண்டும். பொய்தீர் காட்சிப் புரையோய்!"-விடுத்திருக்கக் கண்ணுற்றதும், கோவலன் உண்மையை உணர்ந்து கொண்டான். அவள் தீது அற்றவள்; தீது எல்லாம் தன்னுடையதே என்ற தெளிவான முடிவிற்கு வந்து விட்டான் அதனால், ஒருமுறைக்கு மும்முறை அவள் மீது குற்றம் சாட்டித் தவறான தீர்ப்பு வழங்கிவிட்ட தன் செயலுக்குக் கழுவாய் தேட ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு நேர்ந்து விட்டது. அதனால், "தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி, என் தீது என்றே எய்தியது உணர்ந்து" என்ற வரிகளில் "தவறு செய்தவன் நானே, அவள் தவறினாள் அல்லள் என்ற தீர்ப்பை வழங்கினான்.
"கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்...என் சில்லை சிறுகுடில் அகத்திருந்தோன்" [கொலைக்களக் காதை 145-146] எனப் பொற்கொல்லன் கூறியதுமே, அவன் கூற்றின் உண்மை அன்மைகளை ஆராய்ந்து நோக்காமலே "சிலம்பு கன்றியகள்வன் கையதாயின் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு" (கொலைக்களக்காதை:51-153) என்று பணித்துக் கொலைத் தண்டம் விதித்து விட்டதன் மூலம் ஒரு தவறான தீர்ப்பினைத் தொடக்கத்தில் வழங்கிவிட்டமையால், பின்னர்க் கண்ணகி தன் அரசவை வந்து, தன் சிலம்பு கொண்டு, கோவலன் கள்வனல்லன் என்பதை நாட்டிவிட்டதும், ஆராயாது தீர்ப்பு அளித்துவிட்ட தன் குற்றத்திற்குக் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயம், தென்னவனுக்கு நேர்ந்துவிடவே, "பொன் கொல்லன் தன் சொல்கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்... கெடுக என் ஆயுள்!" (வழக்குரைகாதை: 74-77) எனத் தனக்குத் தானே கொலைத் தண்டம் விதித்துக் கொண்டு உயிர் விட்டு மறுதீர்ப்பு -நல்ல தீர்ப்பு வழங்கினான்.
கோப்பெருந்தேவியின் காலணியைக் களவாடினான் எனக் குற்றம் சாட்டித் தன் கணவனுக்குக் கொலைத் தண்டம் கொடுத்துத் தென்னவன் தீர்ப்பு வழங்கிய கொடுமையைத் தன் கண்களால் கண்டு, தன் காதுகளால் கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு கண்ணகிக்கு வாய்க்க வில்லை என்றாலும், அது செய்தான் தென்னவன் என்பதைப் புறநகர்ப் போய் அஃது அறிந்து வந்தார் வாய்க் கேட்டு அறிந்து கொண்டாள் கண்ணகி.
"அரசுறை கோயில் அணியார் ஞெகிழம்.
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித்தனரே"
துன்பமாலை:25-28
எனக் கூறிக் கொலைக் குற்றம் செய்த குற்றத்திற்கு உள்ளானவன் தென்னவர் கோனே எனத் தெளிவாகக் கூறி வைத்தனர் அவர்கள்.
அவர்கள் அது சொல்லவே, தென்னவன் குற்றம் புரிந்தவன் என்ற முடிவினைக் கண்ணகியும் கொண்டு விட்டாள்? அதனால், "மன்னவன் தவறு இழைப்ப அன்பனை இழந்தேன்"–"செம்மையின் இசுந்த கோல் தென்னவன்" (துன்பமாலை: 36, 44)–"முறையில் அரசன் தன் ஊர்"– "பார் மிகுபழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப, "மன்பதைபழி தூற்ற மன்னவன் தவறிழைப்ப, "வைவாளின் தப்பிய மன்னவன் கூடல்" "தீவேந்தன் தனைக்கண்டு இத்திறம் கேட்பல்" (ஊர்சூழ்வரி: 3,45,49,58,71), "அறிவதை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை விழைத்தோன் வாயிலோயே!" (வழக்குரை காதை: 25-26) என்றெல்லாம் கூறித் தவறுபுரிந்து விட்டான் தென்னவன் எனத் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்டாள் கண்ணகி.
அம்மட்டோ? கள்வனைக் கொல்வது கடுங்கோலா காது, அதுதான் அரச நீதி- "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்தம் காண்"-எனத் தென்னவன் கூறக் கேட்டதுமே "நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!" (வழக்குரைகாதை: 64-6) என அவளை முன்னிலைப் படுத்தி, நேருக்கு நேராகவே தீர்ப்பு வழங்கி விட்டாள்.
இவ்வாறெல்லாம் தீர்ப்பு வழங்கி விட்ட காரணத்தால், அவன் அரசவை புகுந்து, கணவன் கள்வனல்லன் என்பதைக் காற்சிலம்பு கொண்டு நாட்டி விட்டதும், "குற்றம் புரியாதவனுக்குக் கொலைத்தண்டம் கொடுத்து விட்டேனே!" என்ற குற்ற உணர்வு உள்ளத்தை உருக்குலைக்கவே, அந்நிலையே உயிர் விட்ட தென்னவன் செங்கோல் நலத்தை நேரில் கண்டும், தன் சுணவனுக்குத் தவறு இழைத்த தென்னவன் மட்டுமேயல்லாமல், அவன் பிறந்த தென்னவர் குடியே குற்றம் புரியாப் பெருமையுடையது என்பதைக், கீரந்தை மனைவி, வார்த்திகன் மனைவி ஆகியோர் வரலாறுகள் மூலமாக விளக்கி, முடிந்த முடிபாகத், தென்னவர், "மறை நா ஓசை அல்லது. யாவதும் மணிநா ஓசை கேட்டதும் இலனே; அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது குடிபழிதூற்றும் கோலனும் அல்லன்" (கட்டுரை காதை: 31-34) என மதுராபுரித் தெய்வம் கூறக் கேட்டுத் தென்னவன் தீதிவன் என்பதை உணர்ந்து கொண்டமையால், இவ்வுண்மையினை உணர்ந்துகொள்ள இயலாதநிலையில், குற்றம் புரிந்து விட்டான் தென்னவன் எனத் தான் அளித்துவிட்ட தவறான தீர்ப்பை மறுத்து நல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய இன்றியமையாக் கடமை-ஆராயாதே தீர்ப்பு வழங்கிவிட்ட தன் தவறுக்குக் கழுவாய் தேடி வேண்டிய கட்டாயம்-கண்ணகிக்கு நேர்ந்து விட்டது. அதனால், "தென்னவன் தீது இலன். தேவர் கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினான்: நான் அவன்தன் மகள்” (வாழ்த்துக்காதை) என்ற தெளிவான தீர்ப்பை வழங்கினாள்.
தென்னவன் பொருட்டு, அத்தகைய தீர்ப்பு அளிக்க வேண்டி நேரிட்டது போன்ற நெருக்கடி, மாதவியைப் பொறுத்தவரையில் கண்ணகிக்கு வாய்க்கவில்லை. தவறு மாதவியினுடையது என்ற தவறான தீர்ப்பினை ஆராயாதே வழங்கி விட்டுப் பின்னர், உண்மை தெளிந்து, "அவள் தீது இலள்” என மறு தீர்ப்பு வழங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட கோவலன் நிலையும் கண்ணகிக்கு நேரவில்லை.
மாதவியைச் “சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலம் தரு வான் பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு” (கனாத்திறம் உரைத்த காதை: 69-71) எனக் கண்ணகி எதிரில் குற்றம் சாட்டியவன், புகார் நகரை விட்டுப் புறப்பட்டு, காட்டுவழியெல்லாம் கடந்து சென்று புறஞ்சேரியில் இருந்தபோது கோசிகமாணி, புகார் நகரத்து நிகழ்ச்சிகளை யெல்லாம் விளக்கி விட்டுக் கொடுத்த மாதவியின் கடிதத்தைக் கண்ணுற்ற பின்னரே, மாதவி குற்றமற்றவள் என்பதை உணர்ந்து கொண்டு, 'தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே எய்தியது உணர்ந்து" புறஞ்சேரி இறுத்த காதை 94-95) என்று கூறி, மாதவி குற்றம் அற்றவள் என்பதை ஏற்றுக் கொண்டான்.
மாதவியொடு பல்லாண்டு பழகி, அவள் பண்பு நலனெல்லாம் உணர்ந்திருந்த அவனுக்கு, அவள் தீதற்றவள் என்பதை உணர்ந்து கொள்ள, அவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன; கோசிகமாணியின் துணையும் வேண்டியிருந்தது.
தன் கணவன் மாதவியோடு உறவு கொண்டு உலா வந்த ஊரிலேயே வாழ்ந்திருந்தவள் தான் கண்ணகி. ஆனால், மாதவியைக் கண்ணாலும் கண்டறியாதவள். ஆயினும், கணவன் தன்னைப் பிரிந்து, மாதவியோடு இருப்பதற்கு, இம்மாதவி காரணமாகாள்; அக்குற்றம் புரிபவன் தன் கணவன் கோவலனே என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தாள். அதனால்தான் மாதவியைப் பிரிந்து, தன் மனை புகுந்த கோவலன், மாதவியைச் "சலதி" என்றும் "அவளோடு ஆடி வான் பொருள் தொலைத்தேன்' என்றும் கூறிய அவன் கூற்றை ஏற்றுக் கொண்டாள் அல்லள். மாறாக, அது பரத்தையர் தொடர்புடைய விடவர் கூறும் வழக்கமான சொல்; மனைவியர் முன்ன பரத்தையரைப் பழித்தால் மனைவியர் மகிழ்ந்து போவர் என்ற பேதைமை காரணமாகக் கூறும் பொய்யுரை; அதில் உண்மை இல்லை என்றே கொண்டாள். அதை உணர்த்தவே, அவன் சொல் கேட்டுச் சிறிதே நகை காட்டினாள். "நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி"...(கனாத்திறம் உரைத்த காதை.72)
நகை, எட்டு நிலைகளில் தோன்றும் 1. பிறரைத் தான் எள்ளும்போது, 2. பிறர் தன்னை எள்ளும்போது, 3. தன் இளமை காரணமாகப் பிறரை நகைத்தல், 4. பிறர் இளமையால் தன்னைக் கண்டு நகைத்தல், 5. தன் பேதைமை காரணமாக நகைத்தல், 6. பிறர் பேதைமையைக் கண்ட வழித் தான் நகைத்தல், 7. தன் மடமை காரணமாக நகைத்தல், 8. பிறர் மடமை கண்டு நகைத்தல் என்பன அவை. "எள்ளல், இளமை, பேதைமை, மடன் என உள்ளப்பட்ட நகை நான்கு என்ப" என்பது தொல்காப்பிய விதி.
[தொல்: பொருள் : மெய்ப்பாட்டியல் :4]
கண்ணகி நகைத்தநகை, இவ்வெட்டனுள், கோவலன் பேதைமை கண்டு நகைத்த நகையாகும்.
குற்றம் புரிந்தவள் மாதவி என்ற எண்ணம் கண்ணகிக்கு என்றுமே உண்டானது இல்லை. மாதவி தீது இலள்; தீது என்னதே" எனக் கோவலன் புறஞ்சேரியில் உணர்ந்து கொண்ட உண்மையைக் கண்ணகி தொடக்கத்திலிருந்தே உணர்ந்து வந்தாள். அதனால்தான், மனை புகுந்து தன் முன் வந்து நின்றதுமே, கோவலன் மாதவியைக் குற்றம் சாட்டிய போது, அதை ஏற்றுக் கொள்ளாததை நகைத்தே உணர்த்தி விட்டாள்.
மாதவி குற்றம் அற்றவள் என்ற தீர்ப்பை, இவ்வகையால், புகார் நகரை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே வழங்கிவிட்ட காரணத்தால், அத்தனகய தீர்ப்பை,மறுபடியும் வழங்க வேண்டிய கட்டாயம், அவளுக்கு நேரவில்லை; ஆகவேதான், வஞ்சி மாநகர் புகுந்து வழிபடும் தெய்வமாகி விட்ட நிலையில், மாதவி குறித்து அவள் ஏதும் கூறினாள் அல்லள்.
ஆகவே, கோவலனாலும் மன்னிக்கப்பட்ட மாதவியைக் கண்ணகி மன்னித்து ஒரு சொல் கூறவில்லை. ஆகவே மாதவி குற்றம். உடையவளே என்றும், தென்னவனை மன்னித்துத் தீர்ப்பு வழங்கிய கண்ணகி, மாதவி குறித்து அத்தகைய தீர்ப்பு வழங்கவில்லை; ஆகவே, மாதவி குற்றம் உடையவளே என்றும், திரும்பத் திரும்ப எடுத்து வைக்கும் வாதத்தில் வலுவில்லை.
அது மட்டுமன்று; கண்ணகி மாதவியை மன்னிக்க வேண்டிய தேவை எழவில்லை. குற்றம் நிகழ்ந்து விட்டது என்ற நிலை ஏற்படும்போதுதான் மன்னிப்புக்குத் தேவை ஏற்படுகிறது. தவறு செய்து விட்டார் எனக் கொண்டு, ஒருவர் மீது குற்றம் சாட்டும் நிலை எழுந்து விட்ட பின்னரே, அவரை மன்னிக்கும் சூழ்நிலை உருவாகிறது. குற்றம் புரிந்து விட்டாள் மாதவி எனக் கண்ணகி கருதியிருந்தால் தான், மாதவியைக் கண்ணகி மன்னிக்க நேரிட்டிருக்கும், ஆனால், கண்ணகியோ மாதவி மீது குற்றம் கண்டு கோபம் கொள்ளவே இல்லை. ஆகவே, மாதவியைக் கண்ணகி மன்னிக்கும் பேச்சுக்கே. இடம் இல்லை. கண்ணகி மாதவியைக் கோபித்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்ணகியைப் பிள்ளைப் பருவத்தில் பேணி வளர்த்த செவிலித்தாயாம் காவற் பெண்டே உறுதி செய்துள்ளாள்.
"மடம்படு சாயலாள் மாதவிதன்னைக்
கடம்படாள்; காதற் கணவன் கைப்பற்றிக்
குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த
தடம்பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்!
தண்புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்!"
–வாழ்த்துக் காதை.