சிலம்பொலி/அத்தியாயம் 2

மாதவி தொடர்பாகவே பொருளழித்து வறுமையுற்றுக் கைப்பொருள் இழந்து நிற்கும் நிலை கோவலனைக் கானல் வரிக்கு முன்பே அலைக்கழிக்கத் தொடங்கி விட்டதை மாதவியும் உணர்ந்திருந்தாள் என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது பொருந்துமா?

“குளிப்பதற்குக் கொள்ளைப் பொன்; அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்; அம்மம்ம செலவினை எப்படிக் கணக்கிடுவது?” [பக்கம் : 4]

“பொழிலாட்டும் நாண்மகிழ் இருக்கையும் பூமலி கானத்துப் புதுமண நுகர்வும், நகையாடாயமும், பாணருடனும், பரத்தருடனும் திளைத்து வருதலும் எல்லாம் பகட்டே ஆம். பகட்டு என்றால் பண ஒட்டந்தானே?” [பக்கம் : 3]

“காமக்களி மகிழ்வு. பொழிலாட்டு, நாண் மகிழ் இருக்கை, புதுமணம் புகுதல், நகையாடாயத்து நன்மொழி திளைத்தல் என்ற வகையில், பாணரொடும் பரத்தரொடும் திரிவதே மாதவிச் சூழலில் கோவலன் இயல்பாயிருக்கிறது. இதைத் தானே மாதவியும் காண்கிறாள்” [பக்கம் : 52]

“எதனையும் எதிர்த்துப் போராடும் உறுதி படைத்தது மாதவியின் மனம்; பரத்தை வாழ்வை மறுத்துக் கற்பு வாழ்வை மேற்கொண்டு, தாயையும் எதிர்த்தது மாதவியின் மனம்;… ஆனால், அவளது அத்தகைய எதிர்ப்பு, ஆரவாரத்தை எதிர்க்க, கானல் வரி பாடும் வரை இன்னமும் எழவில்லை.” [பக்கம் : 3]

“கைப்பணம் இல்லாத கலக்கம், அவனுடைய காதல் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கியது என்பதில் ஐயம் நமக்கு எழுவதற்கு இடம் இல்லை.” [பக்கம் : 2]

“கைப்பணம் இல்லாத போது கசப்பெழுந்ததும், கைப்பணம் கேட்கும் சூழலையே கசந்து கொள்கிறான் கோவலன்… வாழ்க்கைக்கு வழி என்ன என்று கலங்கிப் புண்பட்ட கோவலன் மனம், இவ்வாறெல்லாம் கானல் வரிக்கு முன் ஊசலாடுகிறது.” [பக்கம் : 32]

“கைப் பொருள் இன்மையே கோவலன் கருத்தைக் கலக்குகிறது… மாதவிக்குத் தெரியுமா இந்த மனப். புழுக்கம்?” [பக்கம் : 1]

“கோவலன் செல்வத்தை இழந்த நிலையை நாம் அறிவோம். அதனைப் பற்றி மாதவியும் எண்ணியிருத்தல் வேண்டும். மாதவியிடம் குறிப்பாக அவன் சுட்டியிருக்கலாம்.” [பக்கம் : 237]

“கானல்வரி” என்ற தம் நூலில் தெ.பொ.மீ. அவர்கள் சிதற விட்டிருக்கும் அவர் எண்ணங்கள் இவை. இவ்வாறெல்லாம் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதன் மூலம், தெ.பொ.மீ. அவர்கள் 1. மாதவிக்காகச் செலவிட்டே கோவலன் வறியனாகி விட்டான். 2. கோவலன் வரையறையற்றுச் செலவழிப்பதை மாதவியும் அறிந்திருந்தாள். 3. ஆனால், கோவலனின் அவ்வாரவார வாழ்க்கையை அவள் எதிர்க்கவில்லை. 4. கைப்பணம் இல்லாமை கோவலன் காதல் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கி விட்டது. கானல்வரிக்கு முன்னரே,—வாழ்க்கைக்கு வழி என்ன என்று கலங்கிப் புண்பட்டு விட்டது கோவலன் மனம். 5. இதை மாதவியிடம் கோவலன் குறிப்பாகச் சுட்டியிருக்கலாம்; கோவலன் செல்வம் இழந்த நிலையை மாதவியும் எண்ணியிருத்தல் வேண்டும் என்ற முடிவுகளைக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.

“குளிப்பதற்கும் கொள்ளைப் பொன்! அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்! அம்மம்ம! செலவினை எப்படிக் கணக்கிடுவது?” [பக்கம்: 4] எனக் கேட்பதன் மூலம், கோவலன் பொருள் அழிவிற்குக் காரணம், மாதவியின் குளியலும், கோலங்கோடலுமே எனக் கொண்டுள்ளார் தெ.பொ.மீ. எனத் தெரிகிறது.

“அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்” என்பதற்குச் சான்றாக, மாதவி கோவலனோடு கலந்து கொண்ட கடைசி இந்திர விழாவின் போது, ஊரெல்லாம் காண அவள் ஆடியதனால் கொண்ட பொறாமையால் வந்துற்ற வெறுப்பு காரணமாக, ஊடல் கோலமோடு இருந்த கோவலனுக்குக் கூடலும், ஊடலும் அளித்து மகிழ்விப்பதற்கு முன்னர்க் குளித்துக் கோலங்கொண்டதைக் கூறும்,

ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்பப்
பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்,
ஊறின நன்னீர், உரைத்தநெய் வாசம்,
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி,
நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப்,
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்
நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக்
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை

அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்

வாங்குவில் வயிரத்து மரகதத் தாள் செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண், புனைவினை
அங்கழுத்து அகவயின் ஆரமொடு அணிந்து,
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு,
இந்திர நீலத்து இடையிடை திரண்ட
சந்திர பாணி, தகைபெறு கடிப்பினை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம், புல்லகம்
தொடர்ந்த தலைக்கணி
மையிர் ஒதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்”

இவ்வரிகளைக் காட்டியுள்ளார். இவ்வரிகளைச் சான்று. காட்டியதன் மூலம், அவ்வரிகளில் கூறப்பட்டிருக்கும் கால் விரல் மோதிரம் முதல், புல்லகமாம் தலைக்கணி வரையான முப்பதுக்கும் மேற்பட்ட அணி வகைகளில், எந்த ஒரு அணியையும், கோவலன் உறவு கொள்வதன் முன்னர், மாதவி பெற்றிருக்கவில்லை; அவை அனைத்தும் கோவலன் கொடுத்தனவே. இவ்வாறு மாதவிக்குக் கொடுத்துக் கொடுத்தே, கோவலன் வறியனாகி விட்டான் என்பது அவர் கருத்தாதல் தெரிகிறது.

ஆனால், அரங்கேற்றுக் காதையும், அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் காட்டும் மாதவிக் காட்சி, தெ.பொ.மீ. கூற்றுக்கு அரண் செய்வதாக இல்லை.

அரங்கேறுவதற்கு முன்னர், தன் மூல மரபுப்படி மாதவி வழிபட்ட தலைக்கோல், கணுக்கள் தோறும் நவமணிகள் இழைக்கப்பட்டு, இடைப்பகுதி சாம்பூநதம் என்னும் பொன் தகடால் கட்டப்பட்டது எனக் கூறுகிறது அரங்கேற்றுக் காதை, “கண்ணிடை நவமணி ஒழுக்கி, மண்ணிய நாவலம் பொலந் தகட்டு இடைநிலம் போக்கி” [116-117] என்ற வரிகளைக் காண்க. மேலும் அதே அரங்கேற்றுக் காதையில், ஆடி முடித்து நின்ற மாதவியைக் கூறுங்கால், ஆடி அடங்கி நின்ற பொன்னால் பண்ணப்பட்ட ஒரு பூங்கொடியாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். “பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்” [157-159] என்ற வரிகளைக் காண்க. ஆக, அவள் தலைக் கோல் அமைப்பும், பொற்கொடி ஆடி நின்றாற். போலும் அவள் தோற்றமும், கோவலன் உறவு கொள்வதற்கு முன்பே, மாதவி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவள் என்பதை உறுதி செய்கின்றன. -

அது மட்டுமன்று. கோவலன் ஊடல் தணிக்க மாதவி கடைசியாகக் கொண்ட கோலத்தையும், மாலை வாங்கித் தன் மனை புகுந்த கோவலனுக்குத் தன் மனையகத்து நிலவுப் பயன் கொள்ளும் நிலா முற்றத்தில் முதன் முதலாகக் கலவியும், புலவியும் அளித்த போது கொண்ட மாதவி கோலத்தையும் ஒப்பு நோக்கின், கடைசியாகக் கோலங் கொண்ட போது அணிந்திருந்த அணிகலன்கள் அவ்வளவையும் கோவலன் மகிழ, முதன் முதலாகக் கோலங் கொண்ட போதும், மாதவி அணிந்திருந்தாள் என்பது தெளிவாகும்.

கடலாடு காதையில் கூறுவது போல், அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் பாதாதி கேசமாக மாதவி அணிந்திருந்த அணிவகைகள் அனைத்தையும் கூறாமல், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மேகலை ஒன்றை மட்டுமே கூறியுள்ளார் ஆசிரியர். அது ஒன்றைக் கொண்டே, கோவலன் உறவு கொள்வதற்கு முந்தைய மாதவியின் செல்வ வாழ்வை உணர்ந்து கொள்ளலாம்.

கானல் வரிப் பாடலுக்கு முன்பாகக், கடலாடச் செல்வதன் முன்னர்க் கோவலன் ஊடல் தவிர்த்துக் கூடல் களிக்கக் கோலங் கொண்ட போது, மாதவி அணிந்து கொண்ட மேகலை முத்துக்களால் ஆனது. “பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ” (கடலாடு 87-88). ஆனால், கோவலனுக்குக் கலவியும், புலவியும் முதன் முதலாக அளித்த போது, அவள் அணிந்திருந்த மேகலை, முத்தினும் உயர்ந்ததான செம்பவளத்தால் ஆனது. “செந்துகிர்க் கோவை சென்றேந்து அல்குல் அந்துகில் மேகலை அசைந்தன வருந்த” (அந்திமாலை 29,30).

ஆக, கோவலன் உறவு கொள்வதற்கு முன்பே, மாதவி பால், பவளத்தால் ஆன மேகலை போலும் மகளிர்க்கு வேண்டும் அணிகள் பலவும் இருந்தன என்பது இவ்வொப்புக் காட்டால் உறுதியாகிறது. ஆகவே கோவலன் மாதவிக்குக் கொடுத்தே வறியனாகி விட்டான் என்பதற்குக் கடலாடு காதையில், மாதவி அணிந்திருந்த அணிகளின் பட்டியலைக் காட்டி முடிவு செய்வது முறையாகாது.

கோவலன், மாதவி உறவு கொண்டதினாலேயே வறியன் ஆகி விட்டான் என்பத்ற்குக் “கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுற” எனப் பதிகத்தில் (15-16) கூறியிருப்பதைக் காட்டி, ஆசிரியரைச் சான்றுக்கு அழைக்க எண்ணக் கூடும்.

இது, ஆசிரியர் கூற்று அன்று; சீத்தலைச் சாத்தனார் கூறியது. ஆசிரியர் கூற்று என்றே கொண்டாலும், அது கூறிய ஆசிரியரே, அவன் கடலாடச் செல்லும் போது, இராச வாகனமாம் அத்திரி ஏறிச் சென்றான் என்றும், அந்நிலையிலும், அவன் வானம் போல் வரையாது வழங்கும் வள்ளலாகவே வாழ்ந்திருந்தான் என்றும், கூறியுள்ளார். “வான வண்கையன் அத்திரி ஏற” (கடலாடு: 119) என்ற வரியையும், “இராச வாகனமாகிய அத்திரி” என்ற அடியார்க்கு நல்லார் உரையினையும் காண்க. இதனால், அவர் பதிகத்தில் கூறியது வலுவற்றுப் போய் விடுவது உணர்க.

“கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுற” என ஆசிரியர் கூறியது மட்டுமன்று; “சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலந்தருவான் பொருட்குன்றம் தொலைந்த இலம்பாடு” (கனாத் திறம் 69-71) எனக் கோவலனே கூறியுள்ளான். ஆகவே, கோவலன் பொருள் அழிவுக்கு மாதவியே காரணம் என்பதற்கு வேறு சான்று வேண்டா என வாதிடல் கூடும்.

ஆனால், கூறியவன் பரத்தையாம் மாதவியோடு உறவு கொண்டிருந்து விட்டுப் பல்லாண்டு கழித்தே மனைக்குத் திரும்பியவன் என்பதையும், கூறுவது, மனைவியாம் கண்ணகியிடம் என்பதையும் கருத்தில் கொண்டே, அவன் கூறுவதை மதிப்பிடல் வேண்டும். இது ஆடவர் தம் மனைவியர் முன்னிலையில் வழக்கமாக வாரி வீசும், பரத்தையர் மீதான வசைமாரி.

“அணைபோலும் மெத்தென்ற தோளினை உடையாய்! செய்யாத ஒரு செயலை,நான் செய்ததாகக் கூறிச் சினப்பதற்கு நான் செய்த குறைதான் யாது? என் மீது ஐயுற்று என்னைக் கோபியாதே; தவறு செய்யாதவன் நான் என்பதைத் தெய்வச் சான்றாகக் காட்டவும் செய்கின்றேன்:-

அணைமென் தோளாய்! செய்யாத சொல்லிச்
சினவுவது ஈங்கு எவன்?
ஐயத்தால் என்னைக் கதியாதி, தீது இன்மை
தெய்வத்தால் கண்டி, தெளிக்க”

- மருதக்கலி: 26:6-8.

என்றெல்லாம் தன் மனைவியிடம் கூறுகிறான், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்து விட்டுத் தன் மனைக்கு வந்த ஒர் ஆடவன்.

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு மனை திரும்பிய மற்றொருவன், மனையாள் ஐயத்தைப் போக்க, “புனைந்து அழகு செய்யப் பெற்ற அழகிய கூந்தலை உடையளாய, என்னோடு தொடர்புடையவளோ என உன்னால் ஐயுறப் பட்டவளோடு, நான் அத்தகைய தொடர்புடையேன் ஆயின், பலியாக உயர்ந்தனவற்றையே கொள்ளும் கொடிய தெய்வம் என்னை வருத்துவதாக!” என அஞ்சாது பொய்ச் சூள் உரைக்கவும் துணிந்துள்ளான்.

உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையிரும் கதுப்பின் நீகருத் தோள்வயின்
அனையேனாயின் அணங்கே என்என
மனையோள் தேற்றும்.”

—அகம்: 166:7-10.

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்து விட்டு, மனை வந்து, கணவன்மார் பொய்ச் சூள் கூறி, அதை மறைக்க, மறுக்க முயலினும், அவர் தம் மனைவியர், அவர் கூறுவதை நம்புவதில்லை.

நான் அத்தகைய தவறு செய்திலேன் எனக் கூறிய ஒருவனைப் பார்த்து, “பரத்தையர் ஒழுக்கம் கொண்டவன் நொந்து கொள்ளத் தக்கவன்” என்று உன்னை வெறுத்து, உன் ஒழுக்கக் கேட்டை, என் பால் வந்து கூறுவார் இல்லாத போது வேண்டுமாயின், தீதிலேன் நான் என்று என்னிடம் வந்து கூறி, என்னைத் தெளிவிக்க வருக எனக் கணவன் கூற்றை நம்ப மறுக்கும் இல்லத்தரசி ஒருத்தி கூறுவது காண்க.

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்
தீதிலேன் யான் எனத் தேற்றிய வருதிமன்.”

—மருதக்கலி: 8: 6-7

பரத்தையர் ஒழுக்கம் அறியேன் எனக் கூறும் கணவன் கூற்றை நம்ப மறுப்பது மட்டுமல்லாமல், அவ்வாறு கூறும் அவனும் பொய்யன், அவனுக்காகத் தூது வரும் அவன் பாணனும் பொய்யன் எனக் கடிந்துரைப்பதும் செய்வர். உன்னைக் காட்டிலும் உன் பாணன் பொய் சொல்வதில் வல்லன். பல பொய்ச் சூள் உரைப்பதிலும் வல்லன். “பாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன்: பல சூளினனே!” (ஐங்குறு நூறு: 43) என்றும், “நீ தூது அனுப்பிய ஒரு பாணன் பொய்யன் என்பது தெளிவாகி விடவே, உன்னால் கைவிடப்பட்ட என் போல்வார்க்கு ஊரில் உனக்குத் துணையாய் உள்ள பாணர் அனைவருமே, உனக்குத் துணை போகும் கள்வராகவே தோன்றுகின்றனர். “ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, உள்ள பாணரெல்லாம் கள்வர் போல்வர், நீ அகன்றி சினோர்க்கே” (குறுந்: 127) என்றும் கூறும் இல்லத்தரசியரும் உள்ளனர்.

அது மட்டுமன்று. பரத்தையர் ஒழுக்கம் கொள்ளும் ஆடவர், தம் ஒழுக்கத்தை அறிந்து கொண்டுள்ளனர் தம் மனைவியர் என்பதை அறிந்ததுமே, அவர் முன் நடுநடுங்கிப் போவர். அவ்வச்ச மிகுதியால் அவர் ஆட்டியபடியெல்லாம் ஆடவும் செய்வர். பரத்தையர் உறவு கொள்ளும் அவ்வாடவர் செயலை உற்ற மனைவியரும், ஊராரும் மட்டுமல்லாமல், அவனோடு உறவு கொண்ட பரத்தையரும் எடுத்துக் கூறி எள்ளி நகையாடுவர்.

ஐவகையாகப் பின்னி ஒப்பனை செய்யப்பட்ட மணம் கமழும் தன் கூந்தலைப் பற்றி உறவும் கொண்டு விட்டு, அழகிய வேலைப்பாடமைந்த தன் கை வளை கழலப் பிரிந்து துயர் செய்தமையால் வெறுப்புற்றுச் சினங் கொண்டு அவனை நோக்கி, “உன் செயலை உன் மனையாளுக்கு இப்போதே சென்று உரைக்கின்றேன் பார்” என்று சொல்லிய அளவில் அந்நல்லவனுக்கு ஏற்பட்ட நடுக்க நிலையை, “நினைந்து நினைந்து நகுகின்றேன் யான்” எனக் கூறி, அவனை எள்ளி நகையாடுகிறாள் ஒரு பரத்தை,

உள்ளுதொறும் நகுவேன் தோழி!…ஊரன்
தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்துச் சினவாது சென்று,நின்
மனை யோட்கு உரைப்பல் என்றலின்…
நன்னராளன் நடுங்க ஓர் நிலையே!”

(நற்றிணை: 100)

“நம் வீட்டில் இருக்கும் போது, தன் செல்வச் சிறப்பு மனைவிக்கு அஞ்சாத் தன் ஆண்மை போலும் பொய்ப் பெருமைகளைக் கூறுபவன், தன் மனைக்குச் சென்றதுமே, மகவீன்று கிடக்கும் மனைவியிடும் ஆணைகளையெல்லாம், அவள் ஏவும் ஏவல்களையெல்லாம், கண்ணாடி முன் நின்று, நாம் கையைத் தூக்கினால், தானும் கையைத் தூக்கியும், நாம் காலைத் தூக்கினால். தானும் காலைத் தூக்கியும், நாம் செய்வதையே செய்து, காட்டும் கண்ணாடிப் பாவை போல், அவள் ஆட்டிய படியெல்லாம் ஆடிக் கிடப்பன்” எனக் கூறி, அவன் செயலை எள்ளி நகையாடுகிறாள் பிறிதொரு பரத்தை.

எம்மில் பெருமொழி கூறித், தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல மேவன
செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.”

- குறுந்:8.

பரத்தையர் ஒழுக்கம் உடைய ஆடவரின் இவ்வியல்பினைக் கண்ணகியும் அறிவாள். அதனால், “சலதியொடு ஆடிக் குலம் தரும் வான் பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத்தரும்” என்ற கோவலன் கூற்றும், அது போன்றதே எனக் கொண்டாள். தன் உள்ளத்தில் கொண்ட அக்கருத்தை, மேலே கூறிய இல்லத்தரசியர், வாய் விட்டுக் கூறியது போல் அல்லாமல், நாகரிகமாகப் புன்முறுவல் காட்டிக், கூறாமல் கூறியுள்ளாள். அதனால்தான், நாணுத் தரும் எனக் கூறியதை அடுத்து, “நலங் கேழ் முறுவல் நகைமுகம்” காட்டினாள் கண்ணகி. [கனாத்திறம்: 72]

ஆக, சலதியோடு ஆடித் தொலைத்த இலம்பாடு நாணுத்தரும் எனக் கோவலன் கூறியதைக் கண்ணகி நம்பவில்லை என்பது தெளிவாகிறது. ஆகவே, மாதவியோடு ஆடியே, கோவலன் வறுமையுற்றான் என்பதற்குச் “சலதியொடு ஆடிக் குலந்தரும் வான்பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு” என்ற கோவலன் வாக்குமூலமும் சான்றாக அமைதல் இயலாது.

ஆக, இதுகாறும் எடுத்துக் காட்டிய விளக்கங்களால், மாதவிக்காகச் செலவிட்டே கோவலன் வறியனாகி விட்டான் என்ற தெ.பொ.மீ. கூற்று, எவ்வகையாலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று என்பது தெளிவாக்கப்பட்டது. .

அடுத்து, “கோவலன் வரையறையற்றுச் செலவழிப்பதை மாதவியும் அறிந்திருந்தாள்; ஆனால், கோவலனின் அவ்வாரவார வாழ்க்கையை அவள் எதிர்க்கவில்லை” என்ற தெ.பொ.மீ. கூற்றில் உண்மையிருக்கிறதா என்பதை இனிக் காண்பாம்.

கோவலன் பொருளழிவுக்குக் காரணமான செலவினங்களாகச் சிலப்பதிகாரத்தால் தெரிவன: ஒன்று: ஆயிரத்தெண் கழஞ்சு பொன் கொடுத்து மாதவி மாலையை வாங்கியது. இரண்டு: மாதவி மகள் மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவின் போது, தானம் பெற வந்தார்க்குச் செம்பொன் மாரி பொழிந்தது. மூன்று: பிள்ளை நகுலம் இறப்பதற்குக் காரணமானாள் என்பதனால் கணவனால் கைவிடப்பட்ட பார்ப்பினிகை, வட எழுத்து வாசகம், எழுதிய ஏட்டை வாங்கி, தானம் செய்து, அவள் துயர் தீர்த்ததோடு, கானம் போன அவள் கணவனையும். கொணர்ந்து உறுபொருள் கொடுத்து நல்வழிப்படுத்தியது. நான்கு: பொய்ச் சான்று கூறிப் பூதத்தால் புடைத்துணப்பட்டானின் மனைவியையும், அவள் சுற்றத்தையும் பசிப் பிணி போக்கிப் பல்லாண்டு புரந்தது. இவை ஒவ்வொன்றும், கோவலன் வாழ்வில் ஒரு முறையே நிகழ்ந்த நிகழ்ச்சிகள். இவையல்லாமல், கோவலனின் பொருள் அழிவிற்கு முழு முதல் காரணமாம் பிறிதொன்றும் உளது. அது, நகையாடாயம், குரல்வாய்ப் பாணர், நகரப் பரத்தர் ஆகியோருடன், குறிக்கோள் இன்றி, வாழ் நாளெல்லாம் திரிந்தது வகையில் ஆன பொருளழிவு. இது, அவனின் அன்றாட நிகழ்ச்சிகள். நாள்தோறும் நடைபெற்ற பொருளழிவு.

இச்செலவினங்களுள் முதல் இரண்டை மட்டுமே மாதவி அறிவாள். ஆனால், ஆயிரத்தெண் கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கியதை, அவள் தடுத்திருக்க இயலாது; அது, கோவலன் உறவு ஏற்படுவதற்கு முன்பே நிகழ்ந்து விட்ட, கோவலன் உறவு ஏற்படுவதற்குக் காரணமான செலவு; அதுவும் அவள் மனையிடத்தே நடந்தது அன்று; நகர நம்பியர் திரிதரும் தெருவில் நடைபெற்றது. மகள் மணிமேகலை பெயர் சூட்டு விழாவின் போது, தானமாகப் பொற்காசுகளை வழங்கியது, அவளும் விரும்பிய செலவு; ஆகவே, அதுவும் அவளால் மறுக்க வேண்டாத செலவு.

இவ்விரண்டையும் தவிர்த்துப் பிற செலவுகளை மாதவி அறிந்திருக்க இயலாது. பார்ப்பினி பாவம் தீர்த்த செலவு, பெருங்குடி வணிகர் பீடிகைத் தெருவில், பொய்ச் சான்று கூறினான் மனைவியின் சுற்றம் ஓம்பிய செலவு, பூதச் சதுக்கத்தில், பாணரொடும், பரத்தரொடும் திரிந்து செலவிட்டது. பூம்பொழில் அகத்தும், நாளங்காடியிலும், இவ்விடங்கள் மாதவி கண்டு அறியாத இடங்கள். அரங்கேறச் சென்ற அரசவை, இந்திர விழாவில் ஆண்டு தோறும் ஆடிய விழா அரங்கு, கடலாடக் கோவலனுடன் சென்ற கடற்கரை ஆகிய இவை தவிர்த்துப் புகார் நகரத்தை அறியாதவள் மாதவி. இங்கெல்லாம் செல்லப் புகார் நகரத்துப் பெருவிதிகளைக் கடந்தே சென்றனளாயினும், சென்றது கொல்லாப் பாண்டியின் உள் அமர்ந்தே ஆதலின், அவ்வீதிகளைக் கண்டு சென்றவள் அல்லள். கோவலனோடு கடல் விழாக் காணச் செல்லும் போது, “மானமர் நோக்கியும் வையம் ஏறி” [கடலாடு: 120] எனப் பொதுப்படையாகக் கூறினும், கானல்வரி முடிந்து கோவலன் பிரியத் தனித்துத் திரும்பிய போது,

“கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்கு” (கானல் : 52) என வண்டியின் உள் அமர்ந்தே திரும்பினள் எனத் தெளிவாகக் கூறியிருப்பது காண்க. கோவலனோடு சென்ற கடற்கரைக் கண்ணும், கடற்கரைக்கு வருவார் பலரும் தன்னைக் காணவும், வருவார் பலரையும் தான் காணவும் வாய்ப்புடைய இடத்து அமர்ந்து கானல் வரி பாடினாள் அல்லள். மாறாக, இவ்விரண்டிற்குமே வாய்ப்பு இல்லாத நிலையில், தாழை வேலியாகச் சூழ்ந்து கிடந்த புன்னையின் அடியில், சுற்றிலும் திரை வளைக்கப்பட்ட இடத்தில் இருந்தே கானல்வரி பாடினாள்.

கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்கோர்
புன்னை நீழற் புது மணற் பரப்பில்
ஒவிய எழினிசூழ உடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை”

-கடலாடு:166-170.

மாதவி புகார் நகரத்தில் பிறந்தவளேயாயினும், அந்நகரத்துப் பல்வேறு பகுதிகளைச் சென்று பார்த்தவள் அல்லள். புகார் நகரத்துப் பூஞ்சோலைகளும் அவளுக்குத் தெரியா. கௌசிகன் என்ற இருபிறப்பாளன் மகளாய்ப் பிறந்து மாருதவேகன் என்ற விஞ்சையனால் காதலித்துக் கொண்டு வரப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் கை விடப்பட்ட சுதமதி அறிந்திருந்த அளவு கூடப் புகார் நகரத்தை மாதவி அறிந்திருக்கவில்லை. புகார் நகரத்தில் உள்ள பூம்பொழில்கள் எத்தனை; அவை ஒவ்வொன்றின் இயல்பு யாது என்பதை அச்சுதமதி வாய்க் கேட்டே மாதவி அறிந்து கொண்ட உண்மையை, மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் மலர் வனம் புக்க காதை 44 முதல் 79 வரையான வரிகளில் தெரிவித்திருப்பது காண்க.

ஆகவே, கோவலன் வரையறையின்றிச் செலவழிப்பதை அறிந்திருந்தும், மாதவி அதை எதிர்க்கவில்லை என்ற தெ.பொ.மீ. வாதத்தில் சாரம் இல்லை என்பதை உணர்க.

அடுத்து, “கானல்வரிக்கு முன்னரே, வாழ்க்கைக்கு வழி என்ன என்று கலங்கிப் புண் பட்டு விட்டது கோவலன் மனம். இதை மாதவியிடம் கோவலன் குறிப்பாகச் சுட்டியிருக்கலாம். கோவலன் செல்வம் இழந்த நிலையை மாதவியும் எண்ணியிருத்தல் வேண்டும்” என்ற தெ.பொ.மீ. அவர்கள் முடிவினை நோக்குவாம்.

கோவலன் கொலையுண்டது, கண்ணகி அவனோடு வானாடு அடைந்தது கேட்ட அளவே போதித் தர்மம் புகுந்து, தன் பால் உள்ள செல்வம் அனைத்தையும் புண்ணிய தானமாக அளித்து விட்டுத் துறவறம் மேற்கொண்டவள் மாதவி. செல்வம் தேடும் கணிகையர் வாழ்க்கை தனக்கு மட்டும் அன்று; தன் மகளுக்கும் வேண்டாத ஒன்று எனக் கொண்டு, மகளையும் துறவுக் கோலம் கொண்டவள் மாதவி.

காதலன் தன்வீவும், காதலிநீ பட்டதூஉம்
ஏதிலார் தாம்கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப்
போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த
மாதவி தன்துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ?”

என, வாழ்த்துக் காதையுள், கண்ணகியின் அடித் தோழியே அரற்றிக் கூறுவது காண்க. அத்தகைய மாதவி, கோவலன் வறுமையை உணர்ந்திருந்தால், அவன் குறிப்பாகவேனும், தன் வறுமை நிலையைச் சுட்டிக் காட்டியிருந்தால், அவள் அவ்வறுமை போக வழி செய்திருப்பாள்.

கடல் விளையாட்டுக்கான, கோவலன் ஏறிச் சென்ற அத்திரியைத் தொடர்ந்து வையம் என்ற வண்டியேறிச் சென்ற மாதவி, கால் விரல்களில் மகர வாய் மோதிரம்; கால்களில் பாத சாலம், சிலம்பு, பாடகம், சதங்கை, காற் சரி; துடையில் குரங்கு செறி, இடையில் முப்பத்திருகாழ் முத்து வடத்தால் ஆன மேகலை; தோளில் மாணிக்க வளை, பொற்கம்பியில் கோத்த முத்து வளை, முன் கைகளில் மாணிக்கமும் வயிரமும் இழைத்த வளை, பொன் வளை, நவரத்தின வளை, பவழ வளை, சங்க வளை; கை விரல்களில் வாளையின் பிளந்த வாய் போலும் முடக்கு மோதிரம், அடுக்கடுக்காக இரத்தினக் கல் பதித்த அடுக்காழி மோதிரம், மரகதக் கல் இழைத்த மோதிரம்; கழுத்தில் வீர சங்கிலி,நுண்ணிய ஞாண், ஆரம்; புறமுதுகில் கோவை; காதுகளில் நீலக் கல் பொதித்தனவும், வயிரம் பொதித்தனவுமான காதணிகள்; நெற்றியில் தெய்வ வுத்தி முதலாம் தலைக் கோலம் என்ற எண்ணிலா அணிகளை அணிந்தே சென்றுள்ளாள். இவை அனைத்தும் கோவலன் கொடுத்தனவே என வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். எனினும், மாதவிக்குத் தேவை, இவ்வணிகளா? அல்லது கோவலனா என்ற நிலை ஏற்படின், அவள் கோவலனையே ஏற்பள்; அவன் பொருட்டு அவ்வளவு அணிகளையும் இழக்கவே முன் வருவள். அவன் வறுமை நிலையைக் குறிப்பாகவேனும் உணர்ந்திருந்தால், அவ்வறுமை தீர, அவ்வளவையும் அவன் பால் வாரி வழங்கியிருப்பாள். அதில் ஐயம் இல்லை. அது நிகழவில்லை. ஆகவே, அவள் அவன் வறுமையை அறிந்திருக்கவில்லை; அவனும் அவளுக்கு அதைத் தெரிவிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பொலி/அத்தியாயம்_2&oldid=1775832" இலிருந்து மீள்விக்கப்பட்டது