சிலம்பொலி/அத்தியாயம் 3

கோவலன் பாடிய கானல் வரிப்பாக்களின் பாட்டுடைத் தலைவி கண்ணகியே எனல் பொருந்துமா?

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் கானல் வரிப் பாக்கள் கருத்தாழ மிக்கவை; பழகப் பழகப் பேரின்பம் பயக்கும் பண்புடையார் நட்பு போல், நயந்து பயிலப் பயிலப் பெருஞ்சுவை தரும் பெருமையுடையன. பன்மொழிப் புலவர், உயர்திருவாளர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய போது, தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்குச் சிலப்பதிகாரத்தைச் சொல்லிக் கொடுத்த போது, தாமும், மாணவர்களும் பெற்ற விளக்கங்களையெல்லாம், “கானல் வரி” என்ற தலைப்பில், மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணை மூலம், ஒரு நூலாக 1961-இல் வெளியிட்டுள்ளார்கள்.

கானல் வரியில் பொதிந்து கிடக்கும் துணுக்கமான பல கருப் பொருள்களை, மிகத் தெளிவாகச் சிக்கல் நீக்கி எடுத்துக் காட்டியுள்ளார். கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களையும், மாதவி பாடிய கானல் வரிப் பாக்களையும் அடுத்தடுத்து வைத்து ஆராய்ந்து, பாடியவர்களின் அப்போதைய உள்ளுணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

கானல் வரிப்பாக்களின் கருப்பொருட்களைத் தெளிவாக உணர, தெ.பொ.மீ. அவர்களின் திறனாய்வு பெருந்துணை புரிகிறது என்றாலும், சிலப்பதிகாரப் பாத்திரங்கள் ஒரு சிலவற்றின் பால் கொண்டு விட்ட ஈடுபாட்டின் விளைவாக, அப்பாத்திரங்கள் குறித்து, அவர் கொள்ளும் முடிவு மறு ஆய்வுக்கு உரியதாகவும் உளது.

தான் பாடிய கானல் வரிப் பாக்களில், பாட்டுடைத் தலைவியாகக் கோவலன் தன் மனைவி கண்ணகியையே கொண்டுள்ளான் என்பதற்காகப் பல்வேறு சான்றுகளைத் தர முற்படும் தெ.பொ.மீ. அவர்கள் கானல் வரி முதல் இரு பாடல்களில், காவிரியை விளிக்கக் கோவலன் “கயற் கண்ணாய்!” என்ற தொடரை ஆண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, “கண்ணகியைக் கண்ட கவுந்தி அடிகள், “கயல் நெடுங்கண்ணி” என்றே கூறுகிறார். கோவலனைக் “கயல் நெடுங்கண்ணி காதற் கொழுந!” என அவளுடைய கயற்கண்களில் ஈடுபட்ட காதலோடு பிணைத்தே காண்கிறார். கண்ணகியோடு உடனிருந்த நிலையைக் கோவலனும் மறக்கவில்லை. கண்ணகி, கோவலனைப் பிரிந்த நிலையில், அவள் கயற்கண்ணை நினைந்தே, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப” என இளங்கோவடிகளும் பாடுகிறார். பின்னும், கோவலனும் கயலையே நினைப்பான், இங்கே காவிரியைப் புனைந்துரைத்தது கண்ணகிக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகிறது! கண்ணகி பால் தான் கண்டனுபவித்த கற்பின் திறத்தைக் காவிரியின் மேல் அவனையும் அறியாது அவன் அடி மனம் ஏற்றிப் பார்க்கிறது” [பக்கம்: 110, 111] என்ற தம் வாதத்தின் மூலம், அக்கயற்கண் கண்ணகியின் கயற்கண்ணே; ஆகவே, காவிரி வடிவில், கோவலன் கண்ணகியையே காண்கிறான் என முடிவு செய்துள்ளார்.

ஆக, கயற்கண் என்றால், அது கண்ணகியின் கண்களையே குறிக்கும் என்பதற்குக் கண்ணகியின் கண்களைக் குறிப்பிடும் இளங்கோவடிகளாரும், கௌந்தி அடிகளும் “கயற்கண்ணி” எனக் குறிப்பிடும் தொடர்களையே, அவர் சான்றாகக் கொண்டுள்ளார் என்பது தெளிவு.

கோவலன் பிரிய, அஞ்சனம் தீட்டுவது மறந்த நிலையிலும், கோவலன் உடன் இருக்க, ஆயர்பாடியில் அஞ்சனம் தீட்டப் பெறும் நிலையிலும், சிலம்பு விற்கக் கோவலன் விடை கொள்ளும் நிலையிலும், இளங்கோவடிகள் கண்ணகியின் கண்களைக் “கயல் நெடுங்கண்” [அந்திமாலை: 53, அடைக்கலம்: 132, கொலைக்களம் 94] எனக் கயலோடு தொடர்புபடுத்தியே பாடியுள்ளார் என்பதும், தம்மை வணங்கித் தம் துணை வேண்டி நின்ற நிலையில், மதுரை செல்லும் வழியின் நிலைமைகளை விளக்கிக் கூறும் கௌந்தி அடிகளாரும், கண்ணகியைக் “கயல் நெடுங்கண்ணி” [நாடுகாண்: 74] என அழைத்து, அவள் கண்ணோடு கயலைத் தொடர்பு படுத்தியே பார்த்துள்ளார் என்பதும் உண்மை.

ஆனால், கயலைக் கண்ணோடு தொடர்பு படுத்திப் பார்ப்பதை, இளங்கோவடிகளார், கண்ணகி கண்ணுக்கு மட்டுமே உரிமையாக்கிக் கொண்டு விடவில்லை. இந்திர விழாக் காண வந்த விஞ்சையன் மனைவி கண்ணுக்கும் அந்த உரிமையை வழங்கியுள்ளார். “கருங் கயல் நெடுங்கண் காதலி” [கடலாடு : 3] என அவளை அவர் அழைப்பது காண்க. அது மட்டும் அன்று.

காவிரியின் வடகரைவாழ் உழவர் மகளிர் கண்களுக்கும், மதுரை மாநகரத்துப் பரத்தையர் கண்களுக்கும் கூட, அவ்வுரிமையைத் தந்துள்ளார். “செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்” (நாடுகாண் : 130), “செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசல்” (ஊர் காண் : 141) என முறையே வரும் அவர் பாடல் வரிகளைக் காண்க.

அது மட்டுமன்று. மகளிர் கண்களைப் பற்றிக் கூறும் போதெல்லாம், கயலைத் தொடர்புபடுத்திப் பாடுவதை இளங்கோவடிகளார் பொது நெறியாகவே கொண்டுள்ளார். முழுமதி நிகர் முகம் உடைய புகார் நகரத்து மகளிரைக் குறிப்பிடும் அடிகளார், வானத்து அரவும் பகை அஞ்சிய வான்மதி, கார்மேகத்தைச் சுமந்து கொண்டு, தன் கண் இடங் கொண்டிருந்த குறு முயலை அகற்றி விட்டு, இரு கயல் மீன்களையும், அவற்றின் இடையே ஒரு குமிழம் பூவையும் கொண்டு மண்ணுலகில் வந்து உலா வரும் போலும் என்ற அவர் பாடல் வரிகளைக் காண்க.

கருமுகில் சுமந்து, குறுமுயல் ஒழித்து,ஆங்கு
இருகருங் கயலொடு, இடைக்குமிழ் எழுதி,
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சி
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்?”

—இந்திரவிழா: 204-207

அது மட்டுமன்று “கயற்கண்ணாய்!” எனக் கயலைக் கண்ணாக உருவகித்து, இளங்கோவடிகளார் காவிரியை மட்டும் பாடவில்லை; கயல் விளையாடும் வையையாற்றைப் பாடும் போதும், கயலைக் கண்ணாக உருவகித்தே பாடியுள்ளார்.

குரவம் முதலாம் மலர்களால் ஆன துகில், குருக்கம் முதலாம் மலர்களால் ஆன மேகலை, மணற் குன்றுகளாம் கொங்கை, முருக்கிதழாம் செவ்வாய், முல்லையாம் வெண்நகை, கயலாம் கண், அறலாம் கூந்தல், உலகு ஓம்பலாம் ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட வையை என்ற குலக்கொடி, என்ற வையை ஆற்று வருணனையில் வையை ஆற்றுக் கயலையும், அதன் கண்ணாக உருவகித்துப் பாடியுள்ளமை உணர்க. “விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண்” (புறஞ்சேரி: 166).

ஆகக் “கயற்கண்” என்ற தொடர், கண்ணகியைக் குறிக்கும் என்பதற்கு, இளங்கோவடிகளார் கண்ணகியைக் “கயற்கண்ணி” எனக் குறிப்பிடும் தொடர்களைச் சான்றாகக் கொள்வது அத்துணைப் போதுமானதாகாது. ஆகவே, காவிரியாற்றுக் கயலில், கோவலனைக் கண்ணகியின் கண்களையே காணச் செய்துள்ளார் இளங்கோவடிகளார் என்பது பொருந்தாது.

மேலும், இடைக்குல மடந்தை பால் கோவலனையும், கண்ணகியையும் அடைக்கலமாக ஒப்படைக்கும் போது, கண்ணகியைக் குறிப்பிடும் கௌந்தி அடிகளார், அவள் கண்ணோடு, கயலைத் தொடர்பு படுத்திப் பாராமல், வாளா, “கருந்தடங் கண்ணி” (அடைக்கலம்: 128) என்றும் கூறியுள்ளமையால், கௌந்தி அடிகள் கண்ணகியைக் “கயல் நெடுங்கண்ணி” என அவள் கண்களைக் கயலொடு தொடர்பு படுத்தியே காண்கிறார் எனக் கௌந்தி அடிகளைச் சான்றுக்கு அழைப்பதும் ஏற்புடையதாக இல்லை.

மேலும், காவிரியாற்றுக் கயல்கள், கோவலனுக்கு மட்டும் கண்களாகக் காட்சி அளிக்கவில்லை; மாதவிக்கும் அவை கண்களாகவே காட்சி அளித்தன. “கருங் கயற் கண் விழித்து நல்கி நடந்தாய் வாழி! காவேரி!” [கானல் வரி : 25] என்ற அவள் பாடலைக் காண்க. ஆகக் காவிரிக் கயல் கோவலனுக்குக் கண்ணகி கண்களை நினைவூட்டி விட்டன என்பதில் பொருள் இல்லை என்பது, இதனாலும் தெளிவாதல் அறிக.

கானல் வரிப் பாக்களால், கோவலன் பாடிப் பாராட்டும் காவிரியில் பிறழும் கயல்களைக் கண்ட அளவே, கோவலனுக்குக் கண்ணகியின் கண்கள் கண் முன் வந்து நிற்குமாயின், கோவலன் கானல் வரிப் பாட்டிற்கு முன்னரும், கண்ணகியின் கண்களில் கயலைக் கண்டிருக்க வேண்டும்; கானல் வரிப் பாக்களுக்குப் பின்னரும் அவள் கண்களில் கயலையே அவன் கண்டிருக்க வேண்டும். ஆனால், கானல் வரிக்கு முன்னரோ, அல்லது பின்னரோ, கண்ணகி கண்களில் கயல் வடிவைக் கோவலன் கண்:டானா என்றால் இல்லை.

கண்ணகியை மணந்து மனையறங் கொண்டு சில ஆண்டுகள் வாழத் தொடங்கியது தொட்டுக் கொலையுண்டு, வானாடு அடைந்தது வரையான காலத்தில் கோவலன் கண்ணகியின் கண்களைப் பார்த்ததாக இரண்டு இடங்களை மட்டுமே இளங்கோவடிகளார் கூறியுள்ளார். அவ்விரு இடங்களிலும் அவள் கண்ணில் கயலைக் கண்டான் இல்லை.

கண்ணகியை மணந்து, அவளோடு நிலா முற்றத்தே மகிழ்ந்திருந்த போது, அவளின் நுதல் முதலாம் பல்வேறு உறுப்புகளின் நலம் குறித்துப் பாராட்டிக் கூறும் குறியாக் கட்டுரைக் கண், கோவலன் அவள் கண்களில் முருகனின் வேலைத்தான் கண்டானேயல்லாது கயலைக் கண்டிலன். “அழகிய ஒளி வீசும் நீண்ட வேல் ஒன்றை உன் முகத்துச் சிவந்த, அன்பால் குளிர்ந்த இரு கண்களாக்கிக் கொடுத்துள்ளான். “அஞ்சுடர் நெடு வேல் ஒன்றும், நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?" [மனையறம் 51.52] என்ற கோவலனின் குறியாக் கட்டுரை காண்க.

அதே போல், கொலையுண்டு குருதி கொப்புளிக்க வீழ்ந்து கிடக்கும் தன் மார்பைக் கண்ணகி தழுவிக் கொண்டாளாக, எழுந்து நின்ற கோவலன் வானாடு செல்வதன் முன்னர், அழுதேங்கி அரற்றுவாளின் கண்ணீரை மாற்றி, இருந்தைக்க எனக் கூறி விடை கொள்ளும் நிலையிலும், அவள் கண்ணில் கயலைக் கண்டிலன்; மாறாக, “”எழுது எழில் மலர் உண்கண்“” (ஊர் சூழ் 67) என அவளை விளிப்பதன் மூலம் அவள் கண்களில் மலர் வடிவைத்தான் கண்டான்.

ஆக, கண்ணகி கண்களில், கயல் ஒளி விடுவதை என்றும் கண்டிராத கோவலன், காவிரியாற்றுக் கயலைக் கண்டதுமே, அவனுக்குக் கண்ணகியின் கண்கள் நினைவுக்கு வர, காவிரியைக் கண்ணகியாகவே கொண்டு பாடத். தொடங்கினான் என்பதில் பொருள் இல்லை.

“கண்ணகியின் பால் தான் கண்டு அனுபவித்த கற்பின் திறத்தைக் காவிரியின் மேல், அவனையும் அறியாது, அவன் அடி மனம் ஏற்றிப் பார்க்கிறது” என்கிறார். தெ.பொ.மீ. அவர்கள் [பக்கம். 111],

ஆயிரத் தெண் கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கி மாதவியின் மணமனை புகுவதன் முன்னர்க் கோவலன், சில ஆண்டுகள், கண்ணகியோடு வாழ்ந்தான். அச்சிலவாண்டு காலத்தில், எப்போதேனும், கண்ணகியின் கற்பு நலம் கண்டு பாராட்டியுள்ளானா கோவலன் என்றால், இல்லை. மாறாக, அந்நாட்களில், அவளைப் பொன்னாகவும், முத்தாகவும், மணப் பொருளாகவும் கரும்பாகவும், தேனாகவும், பாவையாகவும், மருந்தாகவும், மணியாகவும், அமிழ்தமாகவும், இசையாகவுந்தான் கண்டு உலவாக் கட்டுரை பல பாராட்டிக் களி மகிழ்வெய்தினானே ஒழிய, அவள் கற்பு நலம் குறித்து ஒரு வார்த்தையும் கூறினான் அல்லன்; மனையறம் படுத்த காதையில் வரும் அவன் உலவாக் கட்டுரைகளை [73-81] காண்க.

கானல் வரி இறுதியில், மாதவியை மாயப் பொய் கட்டும் மாயத்தாளாகவும், ஆடல் மகளே ஆகவும் கொண்டு, மனை புகுந்த கோவலன் மாதவியின் பரத்தமை ஒழுக்கத்திற்கு மாறான கற்பின் திறத்தைக் கண்ணகி பால் கண்டு பாராட்டினனா என்றால் இல்லை. அவள் கற்பின் திறத்தில் கருத்தைப் போக்குவதற்கு மாறாக, அவளின் வாடிய மேனியின் வருத்தம் கண்டே மனம் நெகிழ்ந்தான். [கனாத்திறம்: 68. வரி காண்க.]

கானல் வரி நிகழ்ச்சிக்கு முன்னர், கண்ணகியின் கற்பின் திறத்தை உணர்ந்து கொள்ளும் உணர்வு கோவலனுக்கு வாய்க்கவில்லை.

கௌந்தி துணையால், கண்ணகியோடு பிரியாதுறையும் வாழ்க்கை நலம் பெற்று, மதுரை செல்லும் அந்த இடைக் காலத்திலாவது, அவள் கற்பின் திறத்தைக் கண்டு கொண்டானா என்றால் இல்லை. அவள் கற்பின் திறத்தைத் தானே உணர்ந்து கொள்ள வேண்டியவன் உணராதது மட்டுமன்று; அதைப் பிறர் உணர்ந்து பாராட்டிய பின்னரும் உணர்ந்து கொண்டானல்லன்.

ஐயை கோட்டத்துத் தேவராட்டி, கண்ணகியை “ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” [வேட்டுவ வரி : 49-50] எனப் பாராட்டினாள். கோசிக மாணிமூலம் கொடுத்தனுப்பிய முடங்கலில் கண்ணகியைக் “குலப்பிறப்பாட்டி” [புறஞ்சேரி : 90] எனக் குறிப்பிட்டு அவள் கற்பின் பெருமையை, மாதவி அவனுக்கு உணர்த்தினாள். கௌந்தி அடிகளோடு இருந்த கண்ணகியை, “மாசில் கற்பின் மனைவி” [புறஞ்சேரி : 102] எனக் கூறி, அவள் கற்பின் மாண்பை எடுத்துக் காட்டினார் இளங்கோவடிகளார். இவ்வளவிற்குப் பிறகும், கோவலன் கருத்தில், கண்ணகியின் கற்பின் பெருமை இடங் கொள்ளவில்லை; மாறாக, அவளின் மலர் போலும் மேனியும், அதன் நடுக்கமுமாம் புறத் தோற்றத்தையே அவன் காண்கிறான்.

மதுரை மாநகர் சென்று, ஆங்குள்ள வணிகப் பெருமக்களைக் கண்டு வரக் கௌந்தி அடிகளாரிடம் விடை கொள்ளும் நிலையில், கண்ணகியின் கற்பு வாழ்விற்கு ஊறு விளைத்ததற்காக வருந்த வேண்டியவன், அது செய்யாது, அந்நிலையிலும், மலர் போலும் அவள் மேனி நடுங்குவதற்குக் காரணம் ஆனது குறித்தே கலங்குவானாயினன். “நறுமலர்மேனி நடுங்கு துயர் எய்த…சிறுமையுற்றேன்” (ஊர் காண்: 18-20) என்ற வரிகளைக் காண்க.

அது மட்டுமன்று; கற்புடைப் பெண்களின் பெருமைகளை மாதரிக்குப் பெருக எடுத்துக் கூறி விட்டு, கண்ணகியைக் “கற்புக்கடம் பூண்ட தெய்வம்” (அடைக்கலம்:143) எனக், கோவலன் முன்னிலையில், அவன் கேட்க, கௌந்தி அடிகளார் கண்ணகி கற்பின் பெருமையைப் பறை சாற்றினார். அது கேட்ட பின்னராவது, கோவலன் உள்ளத்தில் கண்ணகியின் கற்பு நலமாம் அக அழகு இடங்கொண்டதா என்றால் இல்லை.

ஆயர்பாடியில், மாதரி இல்லத்தில், தனக்கு உணவு படைத்து, வெற்றிலை மடித்துத் தந்து நின்ற நிலையிலாவது கண்ணகி கற்பு நலம் கோவலன் கருத்தில் பட்டதா என்றால் இல்லை. அப்போதும் அவளின் பேரறிவு—பெருமை மட்டுமே அவன் பார்வையில் பட்டது. “சிறு முதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்” (கொலைக் களம்: 68) என்றே அவன் கூறுவது காண்க.

அப்படியாயின், கண்ணகியின் கற்பின் பெருமையைக் கோவலன் கண்டு கொள்ளவே இல்லையா என்றால், உணர்ந்து கொண்டான்; ஆனால், எப்போது? அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்டமையால், தான் ஆற்ற வேண்டிய கற்புக் கடமைகளை ஆற்ற மாட்டா நிலை ஏற்பட்டதை நினைவூட்டி, அது ஏற்பட, ஒழுக்கம் கெட்டுத் திரிந்த அவன் செயலைக் கண்ணகி இடித்துக் காட்டிய பின்னரே, அவள் கற்பின் பொற்பினை உணர்ந்தான். அதன் பின்னரே, கண்ணகியின் நாணம், மடம், கற்பு ஆகியவற்றை உணர்ந்தான். “நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே!” (கொலைக்களம்: 90-91) என்றெல்லாம் பாராட்டினான்.

ஆக, கண்ணகியின் கற்பு நலத்தைக் கொலைக் களம் நோக்கி அடியிடுவதற்குச் சில நாழிகைக்கு முன்னர்தான் கோவலன் உணர்ந்து கொண்டான். அங்ஙனமாகவும், கண்ணகி கற்பு நலத்தைக் கோவலன், மாதவி உறவு கொள்வதற்கு முன்பே, உணர்ந்து அனுபவித்ததாகவும், அந்த அனுபவத்தையே, கானல் வரிப் பாக்களில், காவிரியைக் கண்டதும், வரி வடிவில் வடித்துக் காட்டினானாகவும் கூறுவது அறவே பொருந்தாது.

கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களின் பாட்டுடைத் தலைவி கண்ணகியாயின், கானல் வரி இறுதியில் மாதவியை வெறுத்துப் பிரிந்த கோவலன், அடுத்த கணம் தன் உள்ளத்தில் ஆட்கொண்டிருந்த கண்ணகியை அடைந்திருக்க வேண்டும். கடற்கரையிலிருந்து நேரே, தன் கடிமனை புகுந்திருக்க வேண்டும். ஆனால், கோவலன் அது செய்தானா என்றால், இல்லை.

கோவலன் பிரியத் தனியே மனை புகுந்த மாதவி, ஆங்கு மன அமைதி நாடித் தனக்குத் தெரிந்த இசையையெல்லாம், யாழில் மீட்டுத் தீர்த்தாள். பின்னர்க், கோவலனுக்குக் கடிதம் எழுத ஏற்ற மலர்களைத் தேடிக் கொண்டு நீண்டதொரு கடிதத்தைப் பலமுறை நினைந்து நினைந்து எழுதி முடித்து, வயந்த மாலையிடம் கொடுத்துள்ளாள். -

கோவலன் தன் மனைக்குச் சென்றிருக்க மாட்டான் என்பதை வயந்த மாலை அறிவாள். அதனால், அவள், அவன் இயல்பாகத் திரிந்து உறையும் கூலமறுகிற் சென்று கடிதத்தைக் கொடுத்துள்ளாள்.

கோவலன் கடிதத்தைக் கண்டதுமே வாங்க மறுத்து, வயந்த மாலையை உடனடியாகத் துரத்தி விடவில்லை. உடனுறை காலத்து, அவன் மகிழ, மாதவி ஆடிக் காட்டிய எட்டு வகை வரிக் கோலங்களையும் ஒவ்வொன்றாக விரித்துக் கூறி மாதவியைப் பழித்துள்ளான். இவ்வளவும் நடக்க எத்துணைக் காலம், எத்துணை நெடும் பொழுது வேண்டியிருக்கும்! அத்துணை நெடும் பொழுதும், கண்ணகியைக் காண வேண்டும் என்ற கருத்து இல்லாமல் கூலமறுகிலேயே கிடந்துள்ளான். கண்ணகி பால் சென்ற. கருத்துடையான் செயலாகுமா இது?

கண்ணகியை எப்பொழுது அடைந்தான்? ‘கங்குல் சுனைசுடர் கால்சீயாமுன்’ (கனாத்திறம்:78-79) என்கிறார் இளங்கோவடிகளார். அதாவது விடியற்போதில் மாதவியைக் கடற்கரைக்கண் மாலையில் பிரிந்து வந்தவன், கண்ணகியைக் கங்குல் சுனைசுடர் கால்சீயாமுன்தான் காண்கிறான். ஆக ஓர் இரவு முழுதும், எங்கோ சுற்றித் திரிந்துள்ளான். இது கண்ணகியின் நினைவாகவே இருந்தவன் செயலாகுமா?

கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களின் பாட்டுடைத் தலைவியைக் கண்ணகியாகக் கொள்வதில் மற்றுமொரு தடையும் உளது.

“கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்!” “கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்!” எனப் பாடியதன் பயனாய், “காவேரி நின் கணவனும் சோழன். கங்கையைப் புணர்ந்தான். நீ அதற்காகப் புலத்தல் செய்திலை; அவன் கன்னியைப் புணர்ந்தான்; நீ அப்போதும் அவனோடு புலத்தல் செய்யவில்லை; என்னே! நின் கற்பின் மாண்பு!” எனக் கற்பு நெறி பிறழாக் காவிரியைப் பாராட்டுகின்றன அப்பாக்கள்.

தெ.பொ.மீ. அவர்கள் கூற்றுப்படி, காவிரி வடிவில் கண்ணகியைக் காண்கிறான் கோவலன் என்பதாயின், அக்காவிரியின் கணவனாம் சோழன், கங்கை, கன்னி ஆகிய இருவரைப் புணர்ந்தது போல, கண்ணகியின் கணவனாம் கோவலனும், கண்ணகி தவிர்த்து வேறு இரு மாதரைப் புணர்ந்தவனாதல் வேண்டும். ஆனால், சிலப்பதிகாரம், கோவலனுக்கு அத்தகு பெருமாசினைக் கற்பிக்கவில்லை. . அவன் பாணரோடும், பரத்தரோடும் திரிந்தவனாக . இருக்கலாம். ஆனால், மாதவி தவிர்த்து, வேறு ஒரு பரத்தையோடு உறவு கொண்டவனல்லன்.

தம் கூற்றிற்குத் தடையாக இது நிற்பதை தெ.பொ.மீ. அவர்கள் உணராமல் இல்லை. “உள்ளுறை போல, ஒட்டணி போல, ஒவ்வொன்திற்கும் உவமேயம் தேடி அலையலாகாது. கங்கையும் கன்னியும் போலக் கோவலன் இருவரைக் கண்ணகியின் வேறாகக் கை தொட்டனனா என்று கேட்டல் வேண்டா. கன்னியும், கங்கையும் கடவுள் அருள் விளக்கமானால், ஒன்றன் இரு வேறு கோலங்களாம். மாதவியைத் தெய்வ அரம்பையின் வடிவமாகவே விஞ்சையன் பேசுகிறான். அவளைக் கன்னிக் கோலத்தில் மணந்தது ஒன்று; மணிமேகலை பிறந்த பின், கன்னி நிலை நீங்கத் தாய்மைக் கோலத்தில் கூடியது ஒன்று என இவ்வாறு “ஒன்றனையே இரண்டாகப் பேசலாம்” [பக்கம்: 111] என்ற அவர் சமாதான உரையினைக் காண்க.

தாம் கொண்டு விட்ட பொருளுக்கு நேரும் குறைபாட்டைத் தவிர்ப்பான் வேண்டி, இத்தகு ஓர் அமைதியினை தெ.பொ.மீ. அவர்கள் தேடிக் கண்டாலும், அதுவே அவர் பொருள் கோளின் வலுவற்ற நிலைக்கு வலுவான சான்றாகி விடுவது அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பொலி/அத்தியாயம்_3&oldid=1775833" இலிருந்து மீள்விக்கப்பட்டது