சிலம்பொலி/அத்தியாயம் 4

கோவலன் வழக்கமாகக் கண்ணகியின் வீடு சென்று பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தான்; அதை மாதவியும் உணர்ந்திருந்தாள் எனல் பொருந்துமா?

“கண்ணகியின் உடன்பாடு பெற்றே, தன்னுடன் வாழ்கிறான் கோவலன் என [மாதவி] கருதினாளோ? யாமறியோம். கண்ணகியின் வீடு சென்று, பொருள்களைக் கோவலன் வழக்கமாகக் கொண்டு வந்து கொண்டிருந்தமையால், அவள் அப்படியும் எண்ணியிருக்கலாம்.” [பக்கம்: 97-98] என எழுதுவதன் மூலம், கோவலன், வழக்கமாகக் கண்ணகி மனைக்குச் சென்று பொருள்களைக் கொண்டு வந்து கொடுப்பதை மாதவியும் உணர்ந்தே இருந்தாள் என மாதவிபால் ஒரு பெருங். குற்றச்சாட்டினைச் சாட்டியுள்ளார் தெ.பொ.மீ. அவர்கள்.

அவர் கூற்றில் உண்மை இருக்கிறதா?

வயந்த மாலை பால் மாலை பெற்று, மாதவி மனை புகுந்தது முதல், வயந்த மாலை கொடுத்த மாதவி கடிதத்தை மறுத்தது வரையான காலத்தில், கோவலன் ஒரு முறையேனும், கண்ணகி வாழும் தன் மனைக்குச் சென்று வந்தான் எனச் சிலப்பதிகாரம் யாண்டும். கூறவில்லை.

மாதவி மாலை வாங்கி, அவள் மனை புகுந்த, கோவலன் செயலை, “விடுதல் அறியா விருப்பினன் ஆயினன். வடு நீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து”. [அரங்கேற்றம்: 174-175) எனக் கூறியுள்ளார் இளங்கோவடிகளார். மாதவியையும், அவள் மனையையும் விட்டுப் பிரிய மாட்டா வேட்கையுடையன் ஆகிவிட்டான் என மாதவி மனையகத்து அவன் நிலை யாது என்பது பற்றிக் கூறியதோடு அமையாது, தன் மனைவியாம் கண்ணகியையும், அவள் வாழும் தன் மனையையும் மறந்தே போயினான் எனக் கண்ணகி மனையகத்து அவன் நிலை யாது என்பதையும் தெளிவாக்கியுள்ளார்: “விடுதல் அறியா விருப்பினன்” என்பதால், கானல்வரி நிகழ்ச்சி வரை, மாதவியின் மனையைக் கோவலன் பிரிந்தறியான் என்பதும், “மனையகம் மறந்தான்” என்பதால், கானல் வரி இறுதியில் மாதவியை வெறுத்துத் தன் மனை புகும் வரை, கோவலன் தன் மனையையும், மனைவியையும் மறந்தே கிடந்தான்; மறந்தும் மனைப்பக்கவன் சென்றிலன் என்பதும் உறுதியாயின.

கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு வாழ்ந்த காலத்தில், மாதவி மனை தவிர்த்துக் கோவலனைக் காணக் கூடிய இடங்களாகச் சிலப்பதிகாரத்தில் சில இடங்கள் கூறப்பட்டுள்ளன.

கோவலனைத் தென்றலுக்கு உவமையாகக் கொண்டு, கோவலன் போலத் திரியும் தென்றல் எனக் கூற வந்த புலவர், அத்தென்றல் உலா வரும் இடங்களாகக் குறிப்பிட்டவை. ஒன்று, “பூம்பொதி நறுவிரைப் பொழில்”, இரண்டு, “நாள் மகிழ் இருக்கை நாளங்காடி” [இந்திர விழா: 195-196] ஆகக் கோவலன் உலா வரும் இடங்கள், அவனைக் காணக் கூடிய இடங்கள் இவ்விரு இடங்களாம் என்பது கூறாமல் கூறப்பட்டது.

பிள்ளை நகுலம் இறப்பதற்குக் காரணமாகிக் கணவனாம் மாமறையாளனால் கை விடப்பட்டு, வட மொழி வாசகம் எழுதிய ஏட்டினை வாங்கிக் ‘கருமக்கழி பலம் கொள்மினோ’ எனக் கூறித் திரிந்த நிலையில், கோவலன் வருகென அழைத்துத் தானம் செய்யத், தன் துயர் தீரப் பெற்ற மறையாட்டி, அது செய்வாளாத் தேடித் திரிந்த இடங்களில், “பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனைகளும்” (அடைக்கலம் : 60-61) கூறப் பெற்றுள்ளன. ஆகவே, கோவலன் தன் மனையின் கண் இருந்தே அது செய்தான் எனக் கொள்வதற்கும் இடம் இல்லை. காரணம்: அம்மறையாட்டி திரிந்த இடமாக, வணிகர் மாடமறுகின் மனை மட்டுமல்லாமல், வணிகர் இருந்து வாணிகம் புரியும், வணிகர் வாழிடங்களின் வேறுள “பீடிகைத் தெருவும்” கூறப்பட்டுளது. (அடைக்கலம் : 60) கோவலன், அம்மறையாட்டியை அழைத்து, அவள் குறை தீர்த்தது, அப்பீடிகைத் தெருவாதலும் கூடும்.

கோவலன் கடற்கரைக்கண் தன்னை விட்டுப் பிரிந்து சென்றானாகத் தனியே மனை புகுந்த மாதவி, கோவலன் பால் கொடுத்து அழைத்து வருக எனப் பணித்து எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வயந்த மாலை, கோவலனைக் கண்டு கடிதத்தைக் கொடுத்த இடம் கூலமறுகு.

ஆக, இம்மூன்று குறிப்புகளாலும், கோவலன் இருந்த இடங்களாகப் பூம்பொழில், நாளங்காடி, பீடிகைத் தெருவு, கூலமறுகு ஆகிய இந்நான்கு இடங்கள் மட்டுமே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.

கோவலன், தன் மனைக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்தான் என்றால், “அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்” (கொலைக்களம் : 71-73) ஆகிய, இல்லறக் கடமைகளை ஆற்றக் கண்ணகி தவறியிருக்கத் தேவையில்லை. ஆனால், அவற்றை இழந்து விட்டதாகக் கூறுகிறாள். அதுவும் கோவலனிடமே கூறுகிறாள். ஆக, அது இழப்பதற்கு அவன் வாராமையையே காரணமாகக் கூறுகிறாள் கண்ணகி. அது இழந்ததைக் கூறி அவன் வாராமையை, மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது மட்டுமல்லாமல், தன் முன் வந்து நில்லா அவன் செயலை, “என்முந்தை நில்லா முனிவு” [கொலைக்களம் : 76] என வெளிப்படையாகவும் எடுத்துக் கூறியுள்ளாள். ஆகக், கண்ணகி கூற்றாலும், கோவலன், இடைக்காலத்தில், தன் மனைக்குச் சென்று வந்தவனல்லன் என்பது தெளிவாகிறது.

மேலும், கண்ணகியின் பார்ப்பனத் தோழி தேவந்தி, கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறையொன்று உண்டு என உணருகிறாள். அது, கணவனைப் பெறாக்குறையென்றும் உணருகிறாள். அதனால், “பெறுக கணவனோடு” என வாழ்த்துகிறாள். அவள் வாழ்த்துக்கு எதிராகத் தான் கண்ட தீக்கனாவைக் கூறித் தன் நடுக்கத்தைக் கண்ணகி வெளிப்படுத்தினாளாக, தேவந்தி, பிரிந்த கணவரை, மகளிர் பெறுதற்காம் வழி முறையாக, சோமகுண்டம், சூரிய குண்டம் மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுவதைக் கூறி, அவற்றில் யாமும் ஒரு நாள் ஆடுவாம் என்கிறாள்.

சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்;
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்; யாம்ஒருநாள்

ஆடுதும்”

[கனாத் திறம் : 59-63]

ஆக, கண்ணகி கோவலனை உடன் பெற்றிருக்கவில்லை; அவன் ஒரு நாளும் கண்ணகி மனைக்கு வந்திலன் என்பதை அறிந்திருந்ததினாலேயே, தேவந்தி, “பெறுக! கணவனை” என்றும், அது பெற, “ஒருநாள் குண்டம் ஆடிக் கோட்டம் தொழுவாம்” என்றும் யோசனை கூறியுள்ளாள்.

நாள் தோறும் பார்த்திருக்கும் ஒருவரை, எத்துணை நெடுந்தொலைவில் கண்டாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒருவர் எத்துணைதான் நெருக்கமானவராயினும், அவரைப் பல்லாண்டு காலம் காணாதிருந்து, ஒரு நாள் திடுமெனக் காண நேர்ந்தால், கண்ணுற்றவுடனே, அவரை அடையாளம் கண்டு கொள்வது இயலாது. தன் மனைக்குச் சென்றுள்ளான் கோவலன். அம்மனையில் பணி புரியும் குற்றிளையாள், அவனைக் கண்டவுடனேயே அடையாளம் கண்டு கொண்டிலள். காவலன் போலும் எனத் தொடக்கத்தே ஐயுறுகிறாள். சிறிது கழித்தே அவனைக் கண்டு கொள்கிறாள். “காவலன் போலும் கடைத் தலையான் வந்து நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள்” |கனாத்திறம் : 65-66] என்ற இளங்கோவடிகளார். வரிகளையும், “தூரத்தே பார்த்து ஐயுற்று நம் காவலன் போலும் என்று, அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள்” என்ற அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் ஆகிய இருவர் உரை விளக்கத்தையும் காண்க. கோவலன் தன் மனைக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்திருந்தால், குற்றிளையாளுக்கு அம்மயக்கம் நேர்ந்திருக்காது. அவன் பல்லாண்டு காலம், அம்மனைப் பக்கமே வராதிருந்து விட்டுத் திடுமென வந்து நிற்கவேதான் அவளுக்கு அம்மயக்கம் நேர்ந்தது.

மகளிர்க்கு மேனி வாடுவது, கணவர் பிரிவால் ஒருவரின் மேனி வாட்டம் காண்பவர் கண்ணை உறுத்துமளவு ஒரே நாளில் திடுமெனப் பெருகி விடுவதில்லை. பல நாட்கள், பல திங்கள், பல ஆண்டுகளாக அவ்வாட்டம் மெல்ல மெல்ல வளர்ந்தே பெருகித் தோன்றும். மேனி வாடும் ஒருவரை நாள்தோறும் கண்டு வருவார்க்கு, அவ்வாட்டம் வாடுவாரைக் கண்ட அளவே, கலங்குறச் செய்து விடுவதில்லை. அவரை, நெடுங்காலம் காணாதிருந்து, ஒரு நாள் திடுமெனக் காண்பவர்க்கே அவ்வாட்டம் கண்ணை உறுத்துமளவு கொடிதாகத் தோன்றி வருத்தமுறச் செய்யும். கோவலன் வழக்கமாக வந்து கொண்டிருந்தால், கண்ணகிக்கு மேனி வாட்டமே நேர்ந்திருக்காது. வேறு காரணத்தால் மெல்ல மெல்ல மேனி வாடி வந்திருக்குமாயின், அது அவளை வழக்கமாகக் கண்டு வந்திருப்பனாயின், அவன் கண்ணைக் கலக்கியிருக்காது. அவன், அவளைப் பல்லாண்டு காலமாக, அறவே மறந்து விட்டு, ஒரு நாள் திடுமெனச் சென்று காணவேதான் அந்நெடும் பிரிவு அளித்த அவள் மேனி வாட்டம் அவன் கண்ணைக் கலக்குவதாயிற்று. “வாடிய மேனி வருத்தம் கண்டு” [கனாத்திறம் : 68] என்கிறார் ஆசிரியர்.

ஆக, இது காறும் கூறியவற்றால், மாதவி மாலை வாங்கி அவள் மண மனை புகுந்தது தொட்டு, கடற்கரைக் கண், அவள் பாடிய கானல் வரிப் பாட்டால் அவளை வெறுத்து விடுத்து, மீண்டும் தன் மனை புகும் வரை, கோவலன் தன் மனைக்கு ஒரு நாளும் சென்றவனல்லன்; ஆகவே, அவன் வழக்கமாகக் கண்ணகியின் வீடு சென்று, பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தான், அதை மாதவியும் உணர்ந்திருந்தாள் என்ற கூற்றில் சிறிதும் உண்மையில்லை என்பது உறுதியாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பொலி/அத்தியாயம்_4&oldid=1775835" இலிருந்து மீள்விக்கப்பட்டது