சிலம்பொலி/அத்தியாயம் 5
மாதவியின் ஆடற்கலையில் ஈர்ப்புண்டுதான் கோவலன் மாதவி மனை புகுந்தான் எனக் கோடல் பொருந்துமா?
“அவள் (மாதவி) பாட்டுக்கும், தாளத்துக்கும் ஏற்ப, அவள் வீசிய நெடுங்கண் வீச்சில், அரங்கேற்றுக் காதையில், தன் மனத்தைப் பறி கொடுத்தான் அவன் (கோவலன்). கலையே அவளாக விளங்கிய போது, அவளிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தான்.”
“மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்டு கோவலன் மனமருண்டான் என அவர் (இளங்கோவடிகளார்) நேரே கூறவில்லை. ஆனால், அவளது மாலையைக் கோவலன் வாங்கும் போது என்ன கூறுகிறார் ஆசிரியர்? ‘எந்தக் குறிப்பிலே எழுந்ததொரு வியத்தகு கண் வீச்சில் ஈடுபட்டானோ, அந்தக் கண் வீச்சுடையாளது மாலையையே அவன் வாங்குகிறான்’ என்ற குறிப்பே தெளிவாக நம் மனத்தில் எழுமாறு, “மாமலர் நெடுங்கண் மாதவி மாலை” என்று ஆசிரியர் கூறுகிறார்.
கோவலன், மாதவி உறவு கொண்ட சூழ்நிலை குறித்து, திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் (கானல்வரி : பக்கம் : 33).
இதனால் கோவலன்-மாதவி உறவு கொண்டது, புதிய காம நுகர்ச்சி விருப்பத்தால் ஈர்ப்புண்டு நாளுக்கு ஒரு பரத்தை எனத் தேடி அலையும், அவன் “பரத்தன” காரணத்தால் அன்று; கலையின் ஆர்வத்தில் உள்ளதைப் பறி கொடுப்பவன் கோவலன்; மாதவியின் ஆடற் கலையால் ஈர்ப்புண்டே, அவன் அவள் உறவினை மேற்கொண்டான் என்பது தெ.பொ.மீ. கருத்தாதல் தெரிகிறது.
கோவலன் கலையுள்ளம் படைத்தவன்தான்; அதில் ஐயம் இல்லை; யாழை வார்தல், வடித்தல் போல்வன மேற்கொண்டு, மீட்டுதற்கு உரியதாக்கி, இசை யோர்த்துப் பார்த்த மாதவி, அதை மேலும் உறுதி செய்து கொள்ள விரும்பிய நிலையில், ஏவல் முறையில் அல்லாமல், இரக்கும் நிலையில் இருந்து, இசை வாசிக்கும் தாளம் யாதோ அறியேன் எனக் கூறி, யாழை அவள் கை நீட்டியதும், அவனும் அது வாங்கிக் கானல் வரிப் பாணிகளை மாதவி மனம் மகிழ வாசித்ததும், அவன் இசையறிவிற்கு ஒர் எடுத்துக் காட்டு.
"“எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்டவகை தன் செவியின் ஒர்த்து
‘ஏவலன்; பின், பாணியாது?’ எனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும், கடற்கானல் வரிப்பாணியும்
—கானல் வரி.
அது போலவே, மதுரை செல்லும் இடை வழியில் கோசிகமாணியைக் கண்ணுற்ற பின்னர், துர்க்கையின் போர்க் கோலக் காட்சியைப் பாடியவாறே வந்து எதிர்ப்பட்ட பாணர் கொணர்ந்த செங்கோட்ட யாழ் உறுப்புகளை, அரும்பாலை எனும் பண்ணிசை எழுவதற்கு ஏற்பத் திருத்தி அமைத்து, முறைப்படி மீட்டுச் செவிப் புலத்தால் அறிந்து, அப்பண்ணையும், அப்பண்ணின் திறத்தையும் அவரோடு கலந்து பாடினான்.
“ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரின் பாங்குறச் சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத்து யாஅத்து
ஒற்றுறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்துப்
பாய்கலைப் பாவைப் பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற்பாணி அளைஇ அவரொடு”
—புறஞ்சேரி இறுத்த காதை : 1.04-113.
கோவலன் கலையுள்ளம் வாய்க்கப் பெற்றவன் என்பதை, இவ்விரு நிகழ்ச்சிகளும் ஐயமற உறுதி செய்கின்றன என்பது உண்மை. அது வேறு; ஆனால், மாதவியின் ஆடற்கலையின் திறம் கண்டு, அக்கலையால் ஈர்ப்புண்டே, அவன் மாதவி மனை புகுந்தான் என்பதற்கு அவை சான்றுகள் ஆகா.
“அவள் பாட்டுக்கும் தாளத்துக்கும் ஏற்ப, அவள் வீசிய நெடுங்கண் வீச்சில் தன் மனத்தைப் பறி கொடுத்தான்" என அறுதியிட்டுக் கூறிய தெ.பொ.மீ. அவர்கள் மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்டே, கோவலன் மனம் மருண்டான் என இளங்கோவடிகளார் எங்கும் கூறவில்லை என்ற உண்மை, தம் முடிவிற்குத் தடையாக நிற்பது உணர்ந்தமையால், “அவ்வரங்கேற்றத்தைக் குறிப்பாக யாரெல்லாம் கண்டனர் எனவும், அவர் கூறவில்லை” என்ற வரிகளில் அமைதி காண முயன்றுள்ளார்:அரங்கேற்றக் காதையில் கூறப்படும் அவள் ஆடல், அரசவைக் கண், அரசன் காண, முதன் முதலில் அரங்கேறி, அரசர்க்காகவே ஆடிய வேத்தியல் கூத்து ஆகும். அந்த ஆடலையும், ஆடற்கலைக்குத் துணை நிற்கும் ஆடலாசிரியன், [“ஆடற்கு அமைந்த ஆசான்” (25)] இசையாசிரியன், [“அசையா மரபின் இசையோன்” (36)] புலவன், [“நாத்தொலைவு இல்லா நன்னூற்புலவன்” (44)] தண்ணுமை ஆசிரியன், [“தண்ணுமை அருள் தொழில் முதல்வன்” (55)] குழலோன் [“வழுவின்று இசைக்கும் குழலோன்” (69)] யாழ் ஆசிரியன், [“புலமையோன்” (94)] ஆகிய இவர்களேயல்லாமல், ஐம்பெருங் குழுவைச் சார்ந்த அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் ஆகியோரும் கண்ணுற்றனர் [“அரைகொடு பட்ட ஐம்பெரும் குழுவும்” (126)] எனத் தெளிவாகக் கூறியுள்ளார் அடிகளார்; ஆகவே, ஆடலை யாரெல்லாம் கண்டனர் என்பதை அடிகளார் குறிப்பாகவும் கூறவில்லை. ஆகவே, கோவலன் கண்ணுற்றதை நேரே கூறவில்லை என்ற வாத வலுவில், கோவலன்,அவள் ஆடலைக் கண்டு, அக்கலையால் ஈர்ப்புண்டே அவள் மனை புகுந்தான் என முடிவு கொள்வது முறையாகாது.
அரசர் நிகர் வாழ்வுடையான், அரசர்க்கு அடுத்து வைத்து மதிக்கத் தக்க வணிகர் குடி வந்தவனேனும், கோவலன், அரசவைக் கண் இருந்து, மாதவி ஆடலைக் கண்ணுற்றவன் அல்லன். வாழ்நாளில், அரசவைக்கு அணித்தாகச் செல்வதை ஒரு நாளும் செய்தறியான் கோவலன், நாள் தோறும் சென்று பழகும் இடங்களாக, அடிகளார் கூறும், விளையாட்டிடமாம் பொழில், நாள் மகிழ் இருக்கையாம் நாளங்காடி, நிறை காமப் பேச்சுப் பேசும் நகையாடாயம், பாணர், பரத்தர் இருப்பு, நகர நம்பியர் திரிதரு தெருவு ஆகியவற்றில், அரசவை இடம் பெற்றிலது அறிக.“பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து,
நாள்மகிழ் இருக்கை நாளங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்,
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்…”
—இந்திர விழவூரெடுத்த காதை: 195-201.
நாடாளும் அரசர் காண ஆடும் வேத்தியல் ஆட்டம் வல்ல மாதவி, நாட்டு மக்கள் காண ஆடும் பொதுவியல் ஆட்டமும் கற்றவள். “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,” “வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்து” (அரங்கேற்றுக் காதை:12:39-40) என்ற வரிகளைக் காண்க. கோவலன், அவள் ஆடிய அத்தகு பொதுவியல் ஆட்டத்தைக் கண்டு, அவள் ஆடற்கலையால் ஈர்ப்புண்டு, அவள் மனை புகுந்திருத்தல் கூடும் என்பதற்கும் வாய்ப்பு இல்லை. மாதவி, வேத்தியலைப் போலவே, பொதுவியலையும் ஆடியவள் என்பது உண்மை. ஆனால், அப்பொதுவியல் ஆட்டத்தை, அரசவை ஏறி அரங்கேறிய பின்னர் வந்த இந்திர விழாக் காலங்களில் ஆடியதல்லாது, அரங்கேற்றத்திற்கு முன்னர் ஆடியவள் அல்லள். ஆகவே, மாலை வாங்கி மனை புகுவதன் முன்னர், கோவலன் அவள் ஆடலைக் கண்டிருக்கவே இயலாது; ஆகவே, அவள் ஆடற்கலையால் ஈர்ப்புண்டே, அவன், அவள் மனை புகுந்தான் என்பது அறவே பொருந்தாது.
அரசவை சென்று, அவள் ஆடலைக் கண்டவனாயின் மாலையை அவன் ஆண்டே வாங்கியிருப்பன்; ஆனால், மாலை அங்கு வாங்கப்படவில்லை; மாறாக, நகர நம்பியர் திரிதரு தெருவில்தான் வாங்கப்பட்டது. “நகர நம்பியர் திரிதரு மறுகில், பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த மாமலர் நெடுங்கண் மாதவி மாலை, கோவலன் வாங்கி” (அரங்கேற்று காதை: 168-171) என்ற வரிகளைக் காண்க.
அது மட்டும் அன்று. மாதவியின் நற்றாய், தன் மகளுக்குத் துணையாக வர வேண்டிய ஆடவன், அவள் கலைத் திறம் அறிந்து பெருமைப்படுத்தும் பக்குவம் உடையவனாக இருக்க வேண்டும் என விரும்பவில்லை; மாறாக, ஆயிரத்து எண் கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கும் செல்வ வளம் உடையவனாக இருந்தால், அதுவே போதும் என்றே விரும்பினாள். “நூறுபத்து அடுக்கி, எட்டுக் கடை நிறுத்த வீறுயர் பசும் பொன் பெறுவது இம்மாலை; மாலை வாங்குநர், சாலும் நம் கொடிக்கு” (அரங்கேற்று காதை: 164-166) என்ற அவள் கூற்றினைக் காண்க.
ஆக, எந்நிலை நின்று நோக்கினும், மாதவியொடு கோவலன் உறவு கொண்டமைக்குக் கோவலனின் கலையார்வமே காரணமாம் என்பதற்கான அடிப்படைச் சான்று சிறிதும் இல்லை என்பதே முடிந்த முடிபாம்.