சிலம்பொலி/அத்தியாயம் 6
“கோவலன் தன்னோடிருந்த காலத்து, அவனைப் பிரிந்ததால் கடுந்துயரத்தைக் கண்ணகியும் எய்துவாள் என்று உணராமை, அவளிடத்து (மாதவி) நாம் காணும் ஒரு பெருங்குறை” [பக்கம்: 97] என மாதவி மீது தெ.பொ.மீ. குற்றம் சாட்டுவது முறைதானா?
ஒரு நிகழ்ச்சியால், ஒருவர் இன்பமோ, துன்பமோ உற நேர்ந்த நிலையில்தான், அது போலும் நிகழ்ச்சி பிறர்க்கு வாய்க்கின், அவர்களும் அது போலும் இன்ப துன்பங்களுக்கு ஆளாவர் என்பதை உணர்ந்து கொள்வர்.
ஒருவன், தன்னினும், எல்லா வகையிலும் மெலிந்து இருப்பவர்க்குக் கொடுமை இழைக்க முனையும் முன்னர் ஒரு கணம், தான் ஒரு காலத்தில், தன்னிலும் வலியார் கையில் அகப்பட்டுப் பட்ட இன்னலைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பானே ஆகில், தன்னிலும் மெலியார்க்குக் கேடு செய்யும் எண்ணம் அக்கணமே அவன் நெஞ்சை விட்டு அகன்று விடும்.
“வலியார் முன்தன்னை நினைக்க; தான், தன்னின் மெலியார் மேல் செல்லுமிடத்து” (குறள்:250) எனக் கூறியதன் மூலம், ஒருவர் தனக்கு ஒரு கேடு நேர்ந்த வழியே, பிறர் கேடுக்கு உள்ளாகும் போது அவர் படும் துயர்க் கொடுமையை உணர்வர் என மன இயல்பை உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர்.
கானல்வரி நிகழ்ச்சி வரை, பிரிவுத் துயர் என்பதையே அறியாது வாழ்ந்தவள் மாதவி. கோவலன் அவளை ஒரு நாள் கூடப் பிரிந்து அறியாப் பேரார்வம் அவள் பால் சொரிந்து கொண்டிருந்தான். விடுதல் அறியா விருப்பினன். அதனால், கோவலன் தன்னுடன் இருந்த காலத்தில், கண்ணகியின் பெருமையினையோ, கணவன் பிரிவால் அவள் உற்ற கடுந்துயரையோ, மாதவி உணர்ந்து கொள்ளவில்லை. உணர வேண்டிய நிலையே, அப்போது அவளுக்கு வாய்க்கவில்லை. அப்போது, அவள் சிந்தையும், செயலும், கோவலனுக்கு ஊடலும், கூடலும் மாறி, மாறி அளித்து அவனை இன்புறுத்துவதிலேயே கழிந்து விட்டது.
தான் பாடிய கானல் வரிப்பாடல் கேட்டுக் கோவலன் பிரிந்து சென்ற அக்கணமே, பிரிவுத் துயர்க் கொடுமையை மாதவி உணர்ந்து கொண்டாள். அந்நிலையே, அவள் உள்ளமும், உடலும் செயலற்றனவாகி விட்டன.
“கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்கு,
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்”
[கானல்வரி: 52] என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது காண்க.
கோவலன் பிரியவே, மாதவி கொடிய துயர்க்கு உள்ளாகி, உடலும், உள்ளமும் வாடி வருந்திக் கிடந்த நிலையைக் கோசிகமாணி, கோவலன் கேட்கக் கூறியிருப்பதும் காண்க.
“கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்று…
வருந்தினை.”
—புறஞ்சேரி : 48-51.
கோவலனும், கண்ணகியும், இரவோடிரவாகப் புகார் நகர் விட்டுப் போய் விட்ட செய்தியையும், அஃதறிந்து, அவ்விருவரின் இரு முதுகுரவர்களும் அப்போது உற்ற துயர்க் கொடுமையினையும் அறிந்த அளவே, மாதவி மேனி பசந்து விட்டது. ஒன்று, பலவாகப் பெருகும் நோய்க்கு ஆளாகி விட்டாள். மாதவியின் இந்நிலையைப்,
“பெரும்பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோய் உற்று”
என [புறஞ்சேரி: 66-68] கோசிகமாணியின் வாய் வழியே இளங்கோவடிகளார் விளங்கக் காட்டுவது காண்க.
பிரிவுத் துயர் இத்தகைத்து என்பதைத் தான் அறிந்து கொண்டவுடனேயே, கோவலன் தன் மனையகத்தே இருந்த காலத்தில், கண்ணகி எத்துணைத் துயர் உற்றிருப்பாள் என எண்ணிப் பார்த்தாள் மாதவி. தன்னைக் கடற்கரைக் கண் விட்டுச் சென்ற சிறிது நேரப் பிரிவுத் துயரையும் பொறுக்க மாட்டாது, வயந்தமாலை பால் கடிதம் கொடுத்துக் கோவலனைத் தன் பால் ஈர்த்துக் கொள்ள முயற்சித்த தன் போல் அல்லாமல், கோவலன் அத்தனை ஆண்டுக் காலம் கண்ணகியை விடுத்துத் தன் பாலே இருந்து விடவும், அவனைத் தன் மனைக்கு அழைத்துக் கொள்ள ஒரு முறையேனும் முயற்சி செய்யாது, பிரிவின் கொடுந்துயரைப் பொறுமையாகத் தாங்கி நின்ற கண்ணகியை நினைந்து பார்த்தாள். அவ்வளவே. அவள் பெருமையை உணர்ந்தாள். கோவலனைத் தன் பாலே கொண்டு விட்டு, அப்பெருமைக்குரியாளுக்குத் தான் விளைத்து விட்ட கொடுந் துயர்க்கு—தான் செய்த அப்பெரும் பிழைக்கு வருந்தினாள். அப்பிழை பொறுக்குமாறு வேண்டிக் கொள்ளவும் துடித்தாள். அவ்வளவே. கோசிகமாணி பால் கொடுத்த கடிதத்தில், கண்ணகி புகழ் பாடியதோடு, தன் பிழைக்கு மன்னிப்பும் வேண்டிக் கொண்டாள். அதில், தன் துயர்க்கு வருந்தாது, அவர்கள், பிறந்த மண்ணைத் துறந்து, இரவோடு இரவாக, வேற்றூர் போக நேர்ந்தமைக்குத் தானே காரணமாகி விட்டமைக்கே வருந்தினாள்.
“குலப் பிறப்பாட்டியொடு,
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
—புறஞ்சேரி : 89-91
அது மட்டுமன்று; மதுரையில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் நேர்ந்த கதி கேட்ட அக்கணமே, தன் கணிகைய்ர் வாழ்க்கையன்றோ இத்துணைக் கொடுமைக்கும் காரணமாயிற்று எனக் கொண்டு, அது போலும் கொடுமைக்கு, இனி, தான் மட்டும் அன்று; தன் மகளும் காரணமாகக் கூடாது என்ற உணர்வு எழவே, புத்தப் பள்ளி புகுந்து, ஆங்குறை மாதவர் தாள் பணிந்து, புண்ணிய தானமாகப் பொருளையெல்லாம் போக்கி விட்டுத் தான் துறவு மேற்கொண்டது மட்டுமல்லாமல், தன் கண்மணி மணிமேகலையின் கோதைத் தாமம் குழலொடு களைந்து, அவளையும் துறவுக் கோலம் பூணச் செய்து சாந்தி பெற்றாள்.
மாதவியின் இம்மாண்பு நலனைச் செங்குட்டுவன் கேட்க, மாடலமறையோன் மட்டுமல்லாமல், கண்ணகியின் அடித் தோழியும் வாயாரக் கூறி, மனதாரப் பாராட்டியுள்ளனர்.
“மற்று அதுகேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிகெனக்”
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறங் கொள்ளவும்”
—நீர்ப்படை : 103-108.
என்ற மாடல மறையோன் பாராட்டு காண்க.
“காதலன் தன்வீவும், காதலிநீ பட்டதூஉம்
ஏதிலார் தாம்கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப்
போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த,
மாதவிதன் துறவும் கேட்டாயோ, தோழி?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழி?”
—வாழ்த்துக் காதை
இது அடித் தோழி பாராட்டு.
மாதவி, பிறர் துயர் காணப் பொறாதவள்; அவர் துயர்க்குத் தானே காரணமாகி விட்டது அறிந்த, அக்கணமே தன்னை அழித்துக் கொண்டவள்; தன் மகள் வாழ்வையும் அழித்து விட்டவள் என்ற அடுக்கடுக்கான பெருமைக்குரியவள் என்பது மேலே கூறியவற்றால் தெளிவாகத் தெரிகிறது. அத்தகையாள் கோவலன் தன்னோடு உடன் இருந்த காலத்தில், கோவலன் பிரிவால் கண்ணகியும் வருந்துவாள் என்பதை ஒரு சிறிதே உணர்ந்திருந்தாலும், கோவலன் தன்னை விடுதல் அறியா விருப்புடையனாகத் தன் மனையகத்தே வீழ்ந்து கிடக்க விரும்பினாலும், அவனைக் கண்ணகி மனைக்குத் துரத்தியே இருப்பாள்.
ஆக, அக்காலத்தில், கண்ணகியும் பிரிவால் வருந்துவாள் என்பதை அறிந்து கொள்ள மாட்டா நிலையில், மாதவி வீழ்ந்து கிடந்த அக்காலச் சூழ்நிலை குற்றமுடையதே யல்லாது, மாதவி குற்றமுடையாள் அல்லள். ஆகவே, மாதவி மீது, தெ.பொ.மீ. குற்றம் சாட்டுவது முறையாகாது.