சிலம்பொலி/அத்தியாயம் 7

கோவலன் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு அதன் வழிச் செயல்படுபவனே ஒழியச் சிந்தித்துச் செயல்படுபவன் அல்லன்!

சிலம்பை விற்றுப் பெறும் பொருளை முதலாகக் கொண்டு, இழந்த பொருள் ஈட்ட, மதுரை சென்ற கோவலன் எண்ணம், மதுரையில் தன்னொத்த வணிகர்களைக் கண்டு, அவர் துணை கொண்டு, தொழில் ஆற்ற வேண்டும் என்பதுதான்.

சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்
மாடமதுரை அகத்துச் சென்று…”

கனாத்திறம்:74-76

புகார் நகர் விடுத்து, மதுரை செல்லும் தன் குறிக்கோள் இதுதான் என்றே கண்ணகியிடம் தெளிவாகக் கூறினான்.

“பழம்பெரும் நகராம் மதுரையில், அரசர்க்கு அடுத்து வைத்து மதிக்கத்தகும் என் குல வணிகர்கள்பால் என் நிலை, நான் வந்திருக்கும் குறிக்கோள் குறித்துக் கூறி, ஆவன செய்து வருங்காலும், இவளைத் தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கின்றேன்” என்றுதான் கௌந்தி அடிகளிடம் கூறி விடை கொண்டான்.

தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்நிலை உணர்த்தி யான் வருங்காலும்
பாதக் காப்பினள் பைந்தொடி.”

ஊர்காண்: 21-23

“கூடல் மாநகரில் உன்னை விரும்பி விருந்தேற்றுக் கொள்வாரிடத்தை அறிந்து, ஆவன செய்து விட்டுப் பின்னரே திரும்புவாயாக!” என்று கூறித்தான் கௌந்தி அடிகளாரும் விடை கொடுத்து அனுப்பினார்.

வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்

பொருந்துழி அறிந்து போது ஈங்கு”

—ஊர் காண் : 60-61

ஆனால், மதுரை சென்று திரும்பிய கோவலன் ஆங்கு, “மன்னர் பின்னோர்க்கு என் நிலை உணர்த்தி வருவேன்” எனக் கூறிச் சென்றது போலவோ, “பொருந்துழி அறிந்து வா” எனக் கௌந்தி அடிகளார் ஆணையிட்டது போலவோ, ஏற்றுச் சென்ற பணிகளை முடித்துத் திரும்பினானா என்றால், இல்லை. சென்றவன் ஆங்கு, “வையங்காவலர் மகிழ்தரு வீதி” (145), “எண்ணெண் கலையோர் இருபெரு வீதி” (167), “அங்காடி வீதி” (179), “பயங்கெழு வீதி” (200), “நலங்கிளர் வீதி” (204), “அறுவை வீதி” (207), கூல வீதி (211), “நால் வேறு தெருவு” (212), “ஆவண வீதி” (213), “மன்றமும், கவலையும், மறுகும்” (214) ஆகிய இவற்றையெல்லாம் வறிதே பார்த்து வந்தானே ஒழிய, ஏற்றுச் சென்ற வினை முடித்து வந்தானல்லன், இவற்றைக் கண்டு பெற்ற மகிழ்ச்சியில் கடமையை மறந்து விட்டான். இவற்றையெல்லாம், குறிக்கோள் ஏதும் இல்லாமல், வறிதே வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்து விட்டான். அதனால்தான், ஆசிரியர் இளங்கோ அடிகளார் “அங்கெல்லாம் சென்று திரும்பினான்” என்னாது “அங்கெல்லாம் திரிந்து திரும்பினான்” என்று கூறியுள்ளார். “மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து” (214) என்ற வரியினைக் காண்க,

பல்வேறு இடங்களுக்கும், குறிக்கோள் இன்றிச் சென்றலையும் கீழோர் செயலைத் திரிதல் என்ற சொல் குறிக்கும் என்பதை, முறுக்கேறிய உடலினராகிய கீழோர் வண்டுகள் மொய்க்கும் புதுக் கள் உண்ட நிலையில், பெய்யும் மழையினையும் பொருட்படுத்தாது, மேலாடை நெகிழ்வதும் நினைவிலராய்ப், பகல் கடந்த காலத்தும், நகரில் சென்றலையும் செயலைக் குறிப்பிடுங்கால், நெடுநல்வாடை, “திரிதர” என்ற சொல்லால் குறிப்பிடுவது, உறுதி செய்வது காண்க.

முடலை யாக்கை முழுவலி மாக்கள்,
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார், பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர.”

—நெடுநல் : 32-35

பிறந்த மண்ணில் வாழ்விழந்து போவதற்குக் காரணமாய் இருந்த பாணரோடும், பரத்தரோடும் திரியும் பழக்கம் வாழ்வு தேடி வந்த இடத்திலும், கோவலனை விடவில்லை போலும்!

கௌந்தி அடிகளிடம், சென்று வந்த செய்திகளைக் கூறிய போதும், மதுரையின் மாண்பு, அம்மாநகர் ஆளும் மன்னவன் கொற்றம் இவை பற்றித்தான் கூறினானே ஒழிய, வணிகர்களைக் கண்டது பற்றிக் கூறவில்லை. காரணம், வணிகர்களை அவன் பார்க்கவில்லை.

“தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவல்ன் கூறுழி”

என்ற வரிகளைக் காண்க. (அடைக்கலம் : 9-10)

கோவலனின் இப்போக்கு, கௌந்தி அடிகள் உள்ளத்தைப் பெரிதும் வருத்தியுளது வழியிருந்தும் வாய் இல்லாமையால், இவன் வருந்த நேருமோ, என அஞ்சியுள்ளார். அதனால்தான், மதுரைப் புறஞ்சேரி, தம்மைப் போலும் மாதவத்தோர்க்கல்லாது, கோவலன் போலும் இல்லறத்தவர்க்கு இடமாதல் இயலாது என்பதை அறிந்து, கோவலனையும், கண்ணகியையும், மதுரை அகநகர்க்கு அனுப்பி வைக்கும் நிலையில், “கோவல! போகும் இடத்தில், உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, உங்கள் நிலையை நீ எடுத்துச் சொல்லும் உன் சொல் திறத்தில்தான் உளது” எனக் கூறி அனுப்புகிறார்.

அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின், நின்
உரையிற் கொள்வர்”

என்ற கௌந்தி அடிகளார் உரை காண்க. (அடைக்கலம் : 109:110) “நின் உரை” என்பதற்கு “மாசாத்துவான் என்னும் பிரகாசம்; வணிகர் நின் பிரகாசத்தாலே, நின்னை அகநகர் மருங்கில் வைத்துக் கொள்வர்” என அரும்பத உரையாசிரியரும், “மாசாத்துவான் மகன் என்னும் புகழால் எதிர் ஏற்றுக் கொள்வார்; நின் உரை என்றார். மாசாத்துவான் மகன் என்பதனை” என அடியார்க்கு நல்லாரும் உரை விளக்கம் அளித்தாலும், “நின் உரை” என்பதற்கு, “உன் சொல் திறம் அல்லது உன் சொல்லாற்றல்” எனப் பொருள் கோடலே பொருந்தும். “வாயில் இருக்கிறது வழி”, “வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்” என மக்களிடையே வழங்கும் பழமொழிகளையும் காண்க.

தானும் வாழ்வான்; உடன் அழைத்து வந்திருக்கும் கண்ணகியையும் வாழ வைப்பான் கோவலன் என்ற நம்பிக்கை கௌந்தி அடிகளார்க்கு உண்டாகவில்லை. அதனால்தான், மதுரை மாநகரில், மன்னர்க்கு அடுத்த வரிசையில் வைத்து மதிக்கத் தக்க மாபெரும் வணிக மக்கள், தங்களுக்குக் கிடைத்தற்கரிய பெருமை மிகு விருந்தினராக ஏற்றுக் கொள்ளத் தக்க பெருநிலையும், பெருவாழ்வும் உடையோராகிய கோவலனையும், கண்ணகியையும், ஏதும் அற்றவர்களாக, திக்கற்றவர்களாகக் கொண்டு, ஒர் ஆயர் மடந்தை பால், அடைக்கலப் பொருள்களாக ஒப்படைக்கத் துணிந்தார் கௌந்தி அடிகளார்.

மாநகரத்து வணிகர்கள் பால், தங்களை அறிமுகம் செய்து கொண்டு, அவர்கள் துணையோடு வாழ்க்கையைத் தொடங்க மாட்டான் கோவலன்; அது செய்ய முனைவான் என்றாலும், அதை, அத்துணை விரைவில் செய்து முடிக்க மாட்டான்; சில நாட்களாவது ஆகும். அது வரை, அவர்கள் இருப்பதற்கு ஓர் இடத்தைத் தேடித் தர வேண்டுவது இன்றியமையாதது; அது செய்யாது விட்டால், கோவலனும், கண்ணகியும், மதுரை மாநகரில் இருக்கவும் இடம் காணா அனாதைகள் போல் அலைய நேரும் என அஞ்சினார். அதனால்தான், “அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் உரையிற் கொள்வர், ஆகவே, மாநகர் புகுக” என வழி காட்டி விடை கொடுத்தவர், அப்படியே போக விடுத்துத், தம் பணி நோக்கிப் போவது செய்யாது, மாதரியைக் கண்ணுற்றதும், அவ்விருவரையும் அவள் பால் அடைக்கலப் பொருள்களாக ஆக்கி அனுப்பி வைத்தார். . .

வணிகப் பெருமக்களைக் கண்டு, வாழ ஒரு வழி வகுத்துக் கொள்வான் கோவலன் என்ற நம்பிக்கை கௌந்தி அடிகளுக்கு உண்டாகவில்லை என்பது, “மதுரை மாநகரத்து வணிகப் பெருமக்கள், இவர்களைத் தங்கள் வீட்டிற்கு வருதற்கரிய சிறந்த விருந்தினர்களாக மதித்து வரவேற்றுக் குடி அமர்த்துவர்; அவர்கள் அது செய்யுங்காலும், இவர்களைக் கொண்டு சென்று காப்பாயாக” என மாதரி பால் கூறும் போது, “இவர்கள் நிலைமை அவ்வணிகப் பெருமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தாம் யார் என்பதை இவன் எடுத்துக் கூறினால்,” என்ற ஐயப்பாடு வாய்பாட்டினால் கூறும் முகத்தான் தம் ஐய உணர்வை அடிகளார் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது காண்க.

மாதரி!கேள்; இம்மடந்தை தன் கணவன்
தாதையைக் கேட்கின் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்”

என்ற வரிகளைக் காண்க. (அடைக்கலம் : 125-128)

ஆகக் கோவலன் சிந்தித்துச் செயல்படுபவன் அல்லன் என்பதைக் கௌந்தி அடிகளாரும், அவனோடு பழகிய சின்னாட்களிலேயே அறிந்து கொண்டார் என்பது தெளிவாகிறது.

காது, கை, கால்களில் அணியும் அணிகள் இணையாக அணிய வேண்டுவன. அத்தகைய அணிகளில் ஒன்றுதான் சிலம்பும். பண்ண வேண்டுமாயினும், இணையாகவே பண்ண வேண்டும். வாங்க வேண்டுமாயினும், இணையாகவே வாங்க வேண்டும். விற்க வேண்டுமாயினும், இணையாகவே விற்க வேண்டும். ஒன்றை விற்று விட்டு, ஒன்றை வைத்திருப்பதும் பயனில்லை. அது போலவே, ஒன்றை மட்டும் வாங்குவதும் பயன் அளிக்காது. இதில் தெளிவான சிந்தனை உடையவள் கண்ணகி. அதனால்தான் “இலம் பாடும் நாணுத் தரும்” என்ற கோவலனுக்கு விடை அளித்த கண்ணகி, “சிலம்பு உள கொண்மென” (கனா:73) என்ற தொடரில், “சிலம்பு உள” எனப் பன்மை வாய்பாடு கூடிய வகையால், இரண்டு சிலம்புகளையுமே கொள்க எனக் கூறினாள். கண்ணகி, சிலம்புகளை இணையாகவே கொடுக்க முன் வந்திருக்கவும், கோவலன், “சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு, யான் போய் மாறி வருவன்” (கொலைக்களம்:92-93) எனக் கூறி, ஒற்றைச் சிலம்பைக் கொண்டு சென்றதன் முகத்தான், “கோவலன் சிந்தித்துச் செயல்படும் தெளிவுடையான் அல்லன்” என்ற குற்றச் சாட்டிற்கு வலுவேற்றி விடுவது அறிக.

வயிரம் முதலாம் நவமணிகளின் குணம் குற்றம் அறிந்த வல்லோர் இருந்து, தொழில் புரியும் நவரத்தின வணிக வீதியினையும், சாதரூபம் முதலாம் பொன்னின் இனம் அறிந்து தொழில் புரியும் பொன் வணிகர் வீதியையும் முன்னாள் கண்டு வந்தவனாதலின், சிலம்பு கொண்டு புறப்பட்ட கோவலன், நேரே, அவ்வணிகர்களிடமே சென்றிருக்க வேண்டும். மேலும், அவன் கொண்டு செல்வது, “காவலன் தேவிக்கு ஆவதோர்” சிறப்பு வாய்ந்த விலை மதிக்கவொண்ணாக் காலணி, ஆகவே அதை விற்கச் சென்றவன், வணிகர்களிலும், அரசர் குடும்பத்திற்காம் உயர்ந்த அணிகளை ஆக்கி அளிக்க வல்ல பெரு வணிகர்களிடமே சென்றிருக்க வேண்டும். ஆனால், கோவலன் அது செய்தானா என்றால், இல்லை. வணிக வீதியில் அடியிட்ட அளவே, எதிரில் பொற் கொல்லன் வரக் கண்டு, அரசர்க்குரிய அணிகலன்களை விலை மதிக்க வல்ல பெரிய பொற் கொல்லனாக இருக்க வேண்டும் எனத் தானே கருதிக் கொண்டு விட்டான். அவ்வளவே. வணிகர்களைக் காண வேண்டும்; தன் நிலை உணர்த்த வேண்டும் என்பதை மறந்தே போனான்; பொற்சிலம்பைப் பொற் கொல்லன் கையில் கொடுத்து, விலை மதிக்குமாறு கூறி விட்டான். மாநகர் காண, முன்னாள் சென்ற போது, இவனை அறிந்து வந்தானா கோவலன் என்றால், இல்லை. அறிந்து வந்திருந்தால், “உன்னால் இதற்கு விலை கூற இயலுமா?” “நீ விலை இடுதற்கு ஆதியோ?” என்று கேட்டிருக்க மாட்டான். மேலும், பொற் கொல்லனை, அவன் பணி புரியும் இடத்தில், இருந்து தொழில் புரியும் நிலையில் கண்டனனா என்றால், அதுவும் இல்லை. தெரு வழியே வந்து கொண்டிருக்கும் நிலையில், தெருவு இடையே நிறுத்தியே விலை பேசத் தொடங்கி விட்டான்.

“வேந்தற்கு விளம்பி யான் வர என் சிறுகுடில் ஆங்கண் இருமின்” எனக் கூறிச் சென்ற பொற்கொல்லன், மீண்டு வந்து, “சிலம்பு காணிய வந்தோர் இவர்” என, உடன் கொண்டு வந்த கொலையாளிகளை அறிமுகம் செய்து வைத்த போதும், அவர்களை ஐயுறுதற்கேற்ற சிந்தனைத் தெளிவு கோவலனுக்கு உண்டாகவில்லை.

“இலக்கண முறைமையின் இருந்தோன் சங்கிவன் கொலைப்படு மகன் அலன்” எனக், கொலையாளிகளில் ஒருவன் கூறிய போதும், பொற்கொல்லன் குடிலில், கொலை பற்றிய பேச்சு, சிலம்பு காண வந்தோன் வாயில் வருவானேன் என்ற சிந்தனை கோவலனுக்குத் தோன்றவில்லை. -

கொலையாளிகளைத் தன் வழிக்குக் கொணர்வான் வேண்டிக், கள்ளர்களின் பல்வேறு திறமைகளை, விரிவான வகையில் பொதுவாகவும், இளங்கோ வேந்தன் கழுத்தாரத்தைக் களவாடிய கள்வன் ஒருவனின் தனித் திறமையைக் குறிப்பாகவும்,பொற் கொல்லன் கூறுவதும், பொற் கொல்லனின் அச்சொல் வன்மையால் ஈர்க்கப் பட்டு விட்ட கொலையாளிகளில் ஒருவன், தான் கண்ட கள்ளன் ஒருவனின் திறத்தை விளக்குவதும் ஆகிய, சிலம்பு வாணிகத்தோடு சிறிதும் தொடர்பில்லாத சொல்லாடல்கள் நெடும் பொழுது நிகழ்ந்திருந்த நிலையிலும், கோவலன் சிந்தனை செயல்பட்டிலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பொலி/அத்தியாயம்_7&oldid=1775839" இலிருந்து மீள்விக்கப்பட்டது