சிலம்பொலி/அத்தியாயம் 8

“மாதவி மனை புகுந்த கோவலன், தன் மனையை அறவே மறந்து விடவில்லை” எனல் பொருந்துமா?

1.

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் தன்மனையகம் மறந்து”

என அரங்கேற்றுக் காதையில் [170-175] கூறியதன் மூலம், கோவலன் மாதவி பால் விடுதல் அறியா விருப்பம் உடையவனாகி விட்டமையால், தன் மனையகத்தை அறவே மறந்து விட்டான் எனக் கூறப்பட்டாலும், அவன் தன் மனை வாழ்க்கையை மறந்தவனல்லன் என்பதற்கான அகச் சான்றுகளும் உள்ளன என வாதிடுவாரும் உள்ளனர்.

2. பிள்ளை நகுலத்திற்கு அறியாதே கேடு புரிந்து, கணவனால் கைவிடப்பட்டு, அப்பழி தீர, அவன் கொடுத்த வடமொழி வாசகம் எழுதிய ஏட்டை வாங்கும் தகுதியுடையாரைத் தேடத் தொடங்கிய பார்ப்பனி, புகார் நகரத்துப் பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாடமறுகில் சென்றே மனைதொறும் புகுந்து புகுந்து கேட்டாளாக, அவளை அணுகக் கூவி, அவள் குறை கேட்டு, அவ்வேடு வாங்கி, அவள் பழி தீர்த்தான் கோவலன் என்கிறான் கோவலனின் வாழ்க்கை முறைகளையெல்லாம் உணர்ந்த அவன் பார்ப்பன்த் தோழன் மாடல மறையோன். “பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனைதொறும் மறுகிக், கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அருமறையாட்டியை அணுகக் கூஉய்” (அடைக்கலக் காதை : 60-63) என்ற வரிகளைக் காண்க எனச் சான்று காட்டுவர் அவர்கள்.

3 ஆக, பார்ப்பனி, வடமொழி வாசகம் எழுதிய ஏட்டை வாங்குவாரைத் தேடிப் பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாட மறுகிற்கே சென்றாள் என்பதும், கோவலன் அவளை ஆங்கே கண்டு அணுக அழைத்து, அவள் துயர் தீர்த்தான் என்பதும், கோவலன் மாதவியொடு உறவு கொண்டிருந்த நிலையிலும், தன் மனை வாழ்க்கையை மறந்தவனல்லன்; பீடிகைத் தெருவில் உள்ள தன் மாட மறுகில் வாழ்வதும் மேற்கொண்டிருந்தான் என்பதை உறுதி செய்கின்றன என்பர்.

4 தம் கூற்றுக்கு அரணாக மற்றுமோர் அகச்சான்றும் காட்டுவர்; கானல் வரிப் பாடல் நிகழ்ந்த அன்று மாலை, கோவலன்பால் சேர்த்து அவனைக் கொணருமாறு பணித்து, மாதவி கொடுத்த கடிதத்தைக் கொண்டு சென்ற வசந்தமாலை, அக்கடிதத்தைக் கோவலனிடம் கொடுத்த இடம் கூல மறுகு ஆகும். “மாலை வாங்கிய வேலரி நெடுங்கண், கூலமறுகில் கோவலற்கு அளிப்ப” [வேனிற்காதை : 72-73] என்று கூறுகிறார் இளங்கோவடிகளார். கூலமறுகாவது பல்வேறு வகைப் பொருள்கள் விற்கும் பெருங்கடை வீதியாகும். “பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூலவீதி” [இந்திர விழவூரெடுத்த காதை 22-23], “கூலம் குவித்த கூலவீதி” [ஊர்காண் : 211] என்ற வரிகளைக் காண்க.

5 ஆக, மாதவியைக் கடற்கரைக்கண் விட்டுப் பிரிந்த கோவலனும், ஆங்கிருந்து நேரே கடை வீதிக்குத்தான் சென்றுள்ளான். அவன் அங்கு வழக்கமாக இருப்பதை அறிந்திருந்ததனாலேயே வசந்தமாலையும், கடிதத்தை எடுத்துக் கொண்டு நேரே கடை வீதிக்கே சென்றுள்ளாள். ஆக, மாதவியொடு தொடர்பு கொண்ட கோவலன், தன் மனையை அறவே மறந்து விட்டவனல்லன்; மாதவி மனையில் வாழ்வது போலவே, தன் மனையிலும் வாழ்ந்திருந்தான் என்பது, இதனாலும் தெளிவாகிறது என்பர்.

ஆனால், மாதவியின் மாலை வாங்கி, அவள் மனை புகுவதற்கு முன்னர்க், கோவலன் கண்ணகியொடு தன் மனையகத்தே சில ஆண்டுகள் இருந்து இல்லறம் ஆற்றியுள்ளான். “யாண்டு சில கழிந்தன இற்பெரும் கிழமையின், காண்டகு சிறப்பின் கண்ணகி தனக்கு” (மனையறம் படுத்த காதை: 89 - 90) என்ற வரிகளைக் காண்க.

பிள்ளை நகுலத்திற்கு அறியாதே கேடு புரிந்தாளின் பழி தீர்த்த கோவலன் செயல், அந்தச் சில ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக் கொண்டு விட்டால், அந்நிகழ்ச்சியைச் சான்று காட்டிக் கோவலன், மாதவியோடு இருந்த காலத்திலும், தம் மனையை அறவே மறந்தவன் அல்லன் எனக் கொள்ளும் முடிவு வலுவற்றுப் போய் விடுகிறது.

இத்தடைக்குக், “கோவலனின் இப்பண்பு நலத்தைக் கூறிப் பாராட்டும், அவன் பார்ப்பனத் தோழன் மாடல மறையோன், இந்நிகழ்ச்சியை, மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவின் போது, கோவலன், களிறு அடக்கி மறையோனைக் காத்த செயலை அடுத்தே வரிசைப்படுத்தியுள்ளான் ஆதலின், இதைக் கண்ணகியோடு வாழ்ந்த சில ஆண்டு காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக் கோடல் கூடாது. மாதவி உறவு கொண்ட பின்னர் நிகழ்ந்த அருஞ் செயலாகவே கொள்ளுதல் வேண்டும்” என விடை அளித்து விடுவர் அவர்,

“மனையகம் மறந்தான்” (அரங்கேற்றுக் காதை : 175) எனத் தம் கூற்றுப்படக் கூறியது மட்டும் அல்லாமல், “அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை: 71 - 73) என, மனைவியோடிருந்து மனையறம் நடாத்த மறந்து போன கோவலன் செயலைக் கண்ணகி, அவன் நேர்முகமாகவே நின்று எடுத்துக் காட்டும் நிலையின் அவள் கூற்றிலும் வைத்துக் கூறியுள்ளார் இளங்கோவடிகளார்.

மேலும், நாடு காக்கும் காவலரும் வேட்கை கொள்ளும் பெருவளம் கொண்ட பெருங்குடியில் வந்தவன் கோவலன். “உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின் பரதர்” (மனையறம் படுத்த காதை 1 - 2) என இளங்கோவடிகளார் கூறுவது காண்க. ஆகவே, கோவலன், காவலன் போலவே காட்சி அளிப்பன் ஆதலாலும், கோவலன் மனை மறந்து பல்லாண்டு கழிந்து விட்டமையால், அவன் உருவை, அவன் மனை குற்றிளையோரும் மறந்து போக, அவன் கடை வாயிற் கண் வந்து நிற்கவும், அவர் கண்களுக்குக் கணப் போது கோவலனாகக் காட்சி அளிக்காது, காவலனாகத் தோற்றம் அளித்து விட்டமையால், அவர்கள் “காவலன். போலும் கோவலன் கடையகத்தான்”, “காவலன், போலும் கடைத்தலையான் வந்து, நம் கோவலன், என்றாள் ஓர் குற்றிளையாள்” (கனாத்திறம் உரைத்த காதை: 65 - 66) எனக் கூற வேண்டிய நிலை நேர்ந்து விட்டது.

ஆகவே, மாலை கொண்டு மாதவியோடு உறவு கொண்டது முதல், அவள் பாடிய கானல் வரி கேட்டு, அவளை வெறுத்துக் கை விட்டுத் திரும்பியது வரையான இடைப்பட்ட காலத்தில், கோவலன், கண்ணகி வாழும் தன் மனைக்குச் சென்றவன் அல்லன் என்பதே உறுதியாகிறது.

ஆனால், பிள்ளை நகுலத்திற்குக் கேடு செய்த பார்ப்பனியின் துயர் தீர்த்தலும், வயந்த மாலை வந்து கொடுத்த மாதவியின் மடலை வாங்க மறுத்தலும் ஆகிய கோவலன் நிகழ்ச்சிகள், மாதவியின் மனையல்லாத, முறையே, பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனையின் கண்ணும், கூலமறுகின் கண்ணும் நிகழ்ந்தனவாகக் காட்டும் அகச் சான்றுகள் இருக்கும் போது, கோவலன் மாதவியையும், அவள் மனையையும் விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்பது எவ்வாறு பொருந்தும் என்ற வினா எழல் இயல்பே;

பார்ப்பனியின் துயர் தீர்த்த செயலை, மாதவியின் உறவு கொண்ட பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக் கொண்டாலும், அது, கோவலன் தன் மனையை மறந்தவன் அல்லன் என்ற கூற்றிற்குத் துணை செய்வதாகாது.

பீடிகைத் தெருவாவது, பெருங்குடி வணிகர்கள் இருந்து வாணிகம் புரியும் தெருவாகும். “கோடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலிமறுகின் பீடிகைத் தெருவு” (கடலாடுகாதை: 121-122) என முன்னரும் கூறப்பட்டிருப்பது காண்க. பீடிகைத் தெருவு, பெருங்குடி வணிகரின் மாடமலி மறுகோடு இணைத்தே கூறப்படும் (“பீடிகைத் தெருவும்,பெருங்குடி வாணிகர் மாடமறுகும்”—இந்திர விழவூர் எடுத்த காதை: 41-42) என்றாலும், பீடிகைத் தெருவு வேறு; பெருங்குடி வாணிகர் மாடமறுகு வேறு. பீடிகைத் தெருவு வணிகப் பெருமக்களின் பெரு வாணிகம் நடைபெறும் வீதி. வாணிகர் மாடமறுகு, அவ்வணிகப் பெருமக்கள் வாழும் மாட மாளிகைகள் இடம் கொண்டிருக்கும் பெருவீதி. “பீடிகைத் தெருவு” என்ற தொடருக்கு, இந்திர விழவூர் எடுத்த காதை(41), கொலைக் கனக் காதை (104) ஆகிய இரு இடங்களிலும், “கடைத் தெருவு” என அடியார்க்கு நல்லார் உரை கூறியிருப்பதும், “வணிகர் மாடமறுகு” என்ற தொடருக்கு, “வணிகர் குடியிருப்பு” என அரும்பத உரைகாரரும், “பெரிய குடியிருப்பை உடைய வாணிகரது மாடமாளிகைத் தெருவு” என அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறியிருப்பது காண்க.

பார்ப்பனி, “கருமக்கழிபலம் கொண்மினோ” எனக் கூவியவாறே, பீடிகைத் தெருவிலும் அலைந்து திரிந்துள்ளாள்; பெருங்குடி வாணிகர் மாட மறுகிலும், அலைந்து திரிந்துள்ளாள்; வேறு பல மனைகள் தோறும் அலைந்து திரிந்துள்ளாள். அந்நிலையில், பீடிகைத் தெருவில் இருந்த கோவலன், அவளை அருகில் அழைத்து, அவள் துயர் தீர்த்தான். அது போலவே, வசந்தமாலை, மாதவி கடிதத்தோடு சென்று, கோவலனைக் கண்டது, கூலமறுகில்; அதாவது, பல்வேறு கூலங்கள் விற்கப்படும் பெருங்கடை வீதியில், அதாவது பீடிகைத் தெருவில்.

ஆகக் கோவலன் வாழ்வது, தொடக்கத்தில் சில ஆண்டுகள், கண்ணகி மனையிலும், பின்னர்க் கானல்வரி நிகழ்ச்சி வரை மாதவி மனையிலும் என்றாலும், அந்நாட்களில், அவன் முறையாகப் பெருவாணிகத் தெருவில், அதாவது பீடிகைத் தெருவில், தன் வாணிக நிலையத்தில் இருந்து வாணிகம் புரிந்து வந்தான் என்பதுதான் அவ்விரு அகச் சான்றுகளாலும் உறுதி செய்யப்படுமேயல்லாது, அவன் மாதவியோடு உறவு கொண்டிருந்த போதும், தன் மனைக்குச் சென்று வந்தான் என்ற முடிவுக்கு அரண் செய்வன ஆகா.

ஆகவே, மாதவி உறவு கொண்ட பின்னர்க் கோவலன் தன் மனையை மறந்தே வாழ்ந்தான் என்பதே முடிந்த முடிபாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பொலி/அத்தியாயம்_8&oldid=1775842" இலிருந்து மீள்விக்கப்பட்டது