சிலம்பொலி/அத்தியாயம் 9
“குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்து இலம்பாடுற்றேன்” என்ற கோவலன் கூற்றில் வரும் குலந்தருவான் பொருள் குன்றத்தில் மங்கல அணியும், காற்சிலம்பும் ஒழிந்த கண்ணகியின் பல்வேறு அணிகளும் அடங்கும் எனல் பொருந்துமா?
“குலந்தருவான் பொருள் குன்றம் தொலைந்த இலம் பாடு நாணுத்தரும்” எனக் கோவலனும், அது கேட்டுச் “சிலம்புள கொண்மென” (சிலம் பு:9: 70 - 71, 73) எனக் கண்ணகியும் கூறுவது கொண்டு, சிலம்பு தவிர்த்த, கண்ணகியின் பிற அணிகள் எல்லாம், மாதவிக்குக் கொடுத்தே தீர்ந்து போயின எனக் கொள்வது பொருந்துமா?
“சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்” (சிலம்பு:9 : 74-75} என்பது கொண்டு, முதலீடு செய்ய, சிலம்பு தவிர்த்து வேறு அணிகலன் எதுவும் இல்லை. அனைத்தும் தீர்ந்து. போயின எனக் கூறுவதும் பொருந்துமா?
மனையறம் படுத்த காதையில், கண்ணகியைப் பாராட்டும் கோவலன், “மறுவில் மங்கல அணியே அன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்?”, “திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன் கொல்?” (சிலம்பு:2:63-64; 69-70) எனப் பாராட்டுவது கொண்டு, கண்ணகி பால் மங்கல அணி அல்லாமல், ஒரு காழ் முத்தம் போலும் பிற அணிகள் பல இருந்தன என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
அது போலவே, கோவலன் கண்ணகியை மறந்து, மாதவியை அடைந்து விட்ட நிலையில், கண்ணகி மங்கல அணி தவிர்த்துப் பிற அணிகள் அணிவதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்பதை உணர்த்த, கால் சிலம்பையும், இடை மேகலையையும், காது குழையினையும், இழந்து நின்ற நிலையை, “அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய, மென்துகில் அல்குல் மேகலை நீங்க… கொடுங் குழை துறந்து வடிந்து வீழ்காதினள்” (சிலம்பு: 47-51) என்ற அடிகளால் ஆசிரியர் விளக்குவது கொண்டு, கோவலன் மாதவியை அடைந்த தொடக்க நாளன்றும், கண்ணகிபால், சிலம்பு மட்டுமல்லாமல், மேகலை, குழை போலும் பிற அணிகள் இருந்தன என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வளவு அணிகள் இருந்திருக்கவும், தன் இல்லாமையைக் கூறி வருந்திய கோவலனுக்குச் “சிலம்புள” எனச் சிலம்பு ஒன்றை மட்டுமே கண்ணகி கூறியிருப்பது நோக்க, அப்போது, அது தவிர்த்துப் பிற அணிகளையெல்லாம் கோவலன் அழித்து விட்டான் என்றே கொள்ள வேண்டும் என வாதிடுவோர் கூற்றில் வலுவில்லை எனக் கூறி மறுத்து விட இயலாது என்பது உண்மை.
வயங்கிணர்த் தாரோனாகிய தன் மகன் கோவலன், தயங்கினர்க் கோதையாம் கண்ணகியோடு மகிழ்ந்து வாழ்ந்திருக்கும் நாட்களில் அவர்கள் இருவரும் தனியே இருந்து இல்லறம் ஆற்றிப் பெறும் சிறப்பினைக் காணும் பேருள்ளத்தோடு, கோவலனைப் பெற்ற பெருமனைக் கிழத்தி, அவர்களைத் தனியே குடி அமர்த்திய போது, அவ்வாழ்க்கைக்குத் துணை செய்ய, “வேறுபடு திருவினை” வழங்கினள். வேறுபடு திருவாவது நானா விதமான செல்வம் என்கிறார் அரும்பத உரையாசிரியர். பல படைப்பாகிய செல்வம் என்கிறார் அடியார்க்கு நல்லார்.
அவ்வாறு வேறுபடு திருவினைக் கோவலன் தாய் கொடுப்பதற்கு முன்பே, மங்கல அணியல்லாமல், ஒருகாழ் முத்தம் போலும் பல்வேறு அணிகளை அணிந்திருந்தாள் கண்ணகி. அணிந்துள்ள அணிகளின் பொறை தாங்க மாட்டாது, முகம் முத்து முத்தாக வியர்த்துப் போய் விடும்; இடை பெரிதும் வருந்தித் தளர்ந்து போய் விடும். அந்த அளவான பேரணிகலன்களை அணிந்து கொண்டிருந்தாள். கண்ணகியோடு கோவலன் மகிழ்ந்திருந்த நாளில்தான், கோவலன் தாய், வேறுபடு திருவினை வழங்கி அவர்களை வேறே குடி அமர்த்தினாள்.
“திங்கள்முத்து அரும்பவும், சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்கொல்!
………… ………… ………… …………
உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
வார்ஒலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
………… ………… ………… …………
வேறுபடு திருவின் வீறுபெறக் காண,
உரிமைச் சுற்றமொடு ஒருதனிப் புணர்க்க”
—மனையறம்: 71-88
தன் மனை புகுந்து, கண்ணகியின் வாடிய மேனி வருத்தம் கண்ட கோவலன் கூறிய முதற் கூற்றில் அணிகலன்தொலைந்த இலம்பாடு கூறப்படவில்லை. அகுலம் தருவான் பொருட் குன்றம் தொலைந்த இலம் பாடு நானுத்தரும்" (கனாத்திறம் 70-71), 'குலந் தருவான் பொருள்" என்பதற்கு அரும்பத உரையாசிரியர், "தாயத்தாரால் தரப்பட்ட பொருள்" என்றும், அடியார்க்கு நல்லார், "குலத்தில் உள்ளார் தேடித் தந்த மிக்கநிதிக்குன்றம்;தொன்றுதொட்டு வருகின்ற பொருள்' என்றும் பொருள் கூறியுள்ளனர்.
ஆகவே, கண்ணகியைக் கண்ட அள்வே, தான் தொலைத்து விட்டதாகக் கோவலன் கூறிய குலந்தருவான் பொருள் என்பது அவன் தாயாம் பெருமனைக் கிழத்தி, அவர்களின் இல்லறச் சிறப்பு காண வழங்கிய "வேறுபடு திரு" மட்டுமே. அது வழங்குவதற்கு முன்பாகக் கண்ணகிபால் இருந்த அணிகலன்களின் அழிவுபற்றி ஏதும் கூறப்படவில்லை.
கண்ணகியைக் கண்ணுற்றதும் கூறிய முதற்கூற்றில் தொலைத்தது, "குலம் தருவான் பொருள்" எனப் பொதுப்படக் கூறினானேனும் "சிலம்புள கொண்மின்' எனக் கண்ணகி கூறிய பின்னர், அச்சிலம்பு முதலாக ஈட்டக் கருதியவற்றில் "சென்ற கலனொடு உலந்த பொருள்" (கனாத்திறம் 74-75) என அணிகலன், பொருள் இரண்டையுமே கூறியுள்ளான்; ஆகவே, கண்ணகியின் அணிகலன்களும் அழிக்கப்பட்டன என்பதில் ஐயம், இல்லை
ஈட்ட எண்ணியபோது, பொருளோடு, கலனையும் இணைத்தே கூறினானேனும் நாணுத்தரும் இலம்பாடு உறுதற்குக் காரணமான இழப்பினைக் கூறும்போது, பொருள் ஒன்றை மட்டுமே கூறினான்; பொருள் என வறிதே கூறிவிடாமல், குலந்தருவான் பொருள் குன்றம் எனக் கூறியுள்ளான். ஆகவே, கலன் அழிவும் ஓரளவு நிகழ்ந்திருக்குமேனும், பொருட் குன்றமே அழிந்தது போலும் பேரழிவுக்கு அது ஆளாகவில்லை. ஆகவே, கண்ணகி பால், மங்கல அணி தவிர்த்த ஏனைய அணிகலன்கள் அவ்வளவும் அறவே அழிந்து போயின எனக்: கொள்வதற்கு இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது
[கானல்வரிப் பாட்டின் முடிவில், மாதவியை வெறுத்துக் கடற்கரையிலேயே விடுத்துத் தனித்துத் திரும்பிய] கோவலன், கண்ணகியை அடைவதற்குச் சற்று முன்பாக, கண்ணகி துயர் தீர்வதற்காம் வழிவகை கூறி ஆறுதல் உரைக்கும் தேவந்திக்குக், கண்ணகி பொற்றொடி அணிந்தே காட்சிஅளித்துள்ளாள். கண்ணகியைத் தேவந்தி, “பொற்றொடீ” என்றே அழைத்துள்ளாள். அது மட்டுமன்று; கணவனை அடைய, சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய துறைகளில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழலாம் எனக் கூறிய தேவந்தி கூற்றை மறுத்து, அது பீடு தருவதாகாது எனப் பதில் அளித்த கண்ணகி, ஆசிரியர்க்கு ஆயிழை அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “பொற்றொடீஇ… சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு தாமின்புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாமொரு நாள் ஆடுதும்; என்ற அணியிழைக்கு, அவ் ஆயிழையாள் பீடன்று என இருந்த பின்னர்” (சிலம்பு: 9: 54-64) என்ற வரிகளைக் காண்க. ஆக, கோவலன் கண்ணகியை அடையும் போது, கண்ணகியின் எல்லா அணிகளும் தொலைந்து விடவில்லை. அவள் பால், சிலம்பு மட்டுமல்லாமல், பொற்றொடி இருந்திருக்கிறது. ஆராய்ந்து அணியத் தக்க வேறு பிற அணிகளும் இருந்திருக்கின்றன என்பது, தேவந்தி, ஆசிரியர் ஆகிய இருவர் கூற்றால் உறுதியாகிறது.தன் மனை புகுந்து, தன் வாடிய மேனி கண்டு வருந்தும் கோவலனுக்குக் கண்ணகி பொற்றொடியோடு வேறு சில சிறந்த அணிகளும் அணிந்தே காட்சியளித்துள்ளாள். “தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு” என ஆசிரியர் கூறுவதும், “சிலம்புள, கொள்ளுங்கள்” என்ற கண்ணகியை விளிக்கும் கோவலன் “சேயிழை கேள்” என விளித்தலும் காண்க. (சிலம்பு: 9 : 67-68; 73) ஆக, கோவலன் மாதவியை விடுத்துக் கண்ணகியை அடையும் போது, கண்ணகி, சிலம்பு தவிர்த்த பிற அணிகளையெல்லாம் அறவே இழந்து விடவில்லை. பைந்தொடியும், வேறு சில சிறந்த அணிகளும் அவள் பால் இருந்திருக்கின்றன என்பதை இத்தொடர்கள் உறுதி செய்வது காண்க.
சிலம்பு முதலாக, இழந்த அணிகளோடு பிற செல்வம் ஈட்ட மதுரைக்குப் புறப்பட்ட கோவலன்—கண்ணகியின் பால், சிலம்பு தவிர்த்த வேறு அணிகள் எதுவுமே இல்லை; சிலம்பை மட்டுமே கொண்டு சென்றனர் எனக் கூறுவது பொருந்துமா?
மதுரைக்குச் செல்லும் தமக்கு வழித்துணையாக வரும் கௌந்தி அடிகளிடம், கண்ணகியை அறிமுகம் செய்து வைக்கும் கோவலன், கண்ணகியைக் கால்களில் பாடகமும், தோளில் கொடிவளையும் அணிந்த கோலத்தில்தான் அறிமுகம் செய்துள்ளான். கண்ணகியின் மென்மைத் தன்மையை உணர்த்தும் வகையில், அவள் அடியின் மென்மைத் தன்மையைக் குறிக்கும் நிலையில், அவ்வடிகளில் பாடகம் கிடந்து அழகு செய்வதைப், “பாடகச் சீறடி பரற் பகை உழவா'என்றும் (சிலம்பு:10:52) கௌந்தி அடிகள் துணை கிடைத்தமையால், மனைவியின் துயர் தீர்த்தேன் எனக் கூறும் நிலையில் மனைவியைக் குறிப்பிடும் போது, “தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன்” (சிலம்பு : 10 : 63) எனக் கூறுவதும் காண்க.
வீடு விட்டுக் காடு புகுந்து அலையும் தன் நிலை கண்டு வருந்தும் கோவலனுக்கு, “இவ்வருத்த நிலையிலும் மனைவியாம் கண்ணகியோடு சேர்ந்தே இருக்கும் பேறு பெற்றனை” என ஆறுதல் கூறும் போதும், “தாயும் நீயே ஆகித் தாங்கு” எனக் கூறிக், கண்ணகியை மாதரி பால் அடைக்கலம் அளிக்கும் நிலையிலும், கௌந்தி அடிகளார்க்கு ஆயிழைகள் அணிந்து நிற்கும் கோலத்திலேயே, கண்ணகி காட்சி அளித்துள்ளாள். “ஆயிழை. தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை” (சிலம்பு : 14 : 58 -59), “ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு” (சிலம்பு :15 : 135-136) எனக் கூறும் கௌந்தி அடிகளார் வாக்கினைக் காண்க.
அடிசில் ஆக்குதற்கு ஆன கலங்களோடு, தாம் கொடுத்த, கோளிப்பாகல் முதலாம் காய்களையும், மா முதலாம் கனிகளையும், சாலி அரிசியையும் பெற்றுக் கொண்ட கண்ணகியின் கைகளில், கோல்வளை ஒளி விட்டுக் கிடந்ததையும், அமுதுண்ணும் கோவலன் அருகில் அமர்ந்து உணவு படைக்கும் நிலையில், தம் குல தெய்வமாம் கண்ணனுடனிருக்கும் நப்பின்னையாகக் காட்சி அளித்த கண்ணகியின் தோள்களில் பல்வளைகள் கிடந்து ஒளி விட்டதையும் இடைக் குல மடந்தை மாதரியும் அவள் மகள் ஐயையும் கண்டு களித்துள்ளனர். “சாலி அரிசி, தம்பால் பயனொடு கோல்வளை மாதே! கொள்கெனக் கொடுப்ப” — “பூவைப்புதுமலர் வண்ணன் கொல்லோ? நல்லமுதுண்ணும் நம்பி! ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டு நம் குலத்துத் தொழுனை ஆற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்கு கொல்?” (சிலம்பு: 16 : 27:28, 47-51) என்ற சிலப்பதிகாரத் தொடர்களைக் காண்க.
தன் கணவனுக்குத் தவறிழைத்த மன்னன் மாநகர் மதுரை. ஆகவே, அம்மதுரையை எரித்து அழித்த கண்ணகி செயல், “கொடிது அன்று” எனப் பாராட்டும் அம்மாநகரத்துப் பெருமனைக் கிழத்தியர்க்குக் கண்ணகி சிறந்த அணிகள் அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று” (சிலம்பு: 22 : 135-136) என்ற அவர் கூற்றில் அவர்கள் கண்ணகியைச் “சேயிழை நங்கை” என்றே குறிப்பிட்டிருப்பது காண்க.
“என் துயர் அறிதியோ?” என்ற வினாவிற்கு, “அறிவேன்” என விடையிறுக்கும் போதும், “மதுரை மாநகரும் அரசும் கேடுறும் எனப் பண்டே உரைக்கப்பட்டது” என முற்பிறப்பு நிகழ்ச்சி கூறிய போதும், “உன் கணவன் கோவலன் முற்பிறப்பில், அரசுபணி புரிந்த பாதகன் என்போனாவன்” எனக் கண்ணகியின் முற்பிறப்பு வரலாறு கூறும் போதும், அவை கூறிய மதுராபுரித் தெய்வத்தின் முன், கண்ணகி, பசும் பொன்னால் பண்ணப்பட்டுக் கை நிறைய அணிந்த தொடி போலும் அழகிய அணிகள் பல அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “அரஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய்,” “உரைசால் மதுரையோடு அரை கேடுறும் எனும் உரையும் உண்டே, நிரை தொடியோயே!”, “முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன்” (சிலம்பு : 23 : 21; 135-136; 152-153) என்ற தொடர்களில், மதுராபுரித் தெய்வம், கண்ணகியை “அணி இழாஅய்”, “நிரை தொடியோயே!”, “பைந்தொடி” என்றே விளித்தல் காண்க.கொற்றவை வாயிலில் பொற்றொடியைத் தகர்த்து விட்டு, வைகையின் ஒரு கரை கொண்டு சேரர் நாடு அடைந்த போதும், கண்ணகி மேனியில் சிறந்த அணிகள் இருந்ததை,சேரர் கோமான் செங்குட்டுவன், கண்ணகியை “செயிடுடன் வந்த இச்சேயிழை” (சிலம்பு : 25-108) என்ற தொடர் மூலமே குறிப்பிட்டான் எனப் பாடுவதன் மூலம் இளங்கோ அடிகளார் உறுதி செய்துள்ளார்.
கோவலன் பின்னாக, மாதவத்தாட்டி கௌந்தி அடிகளாரோடு ஐயை கோட்டம் அடைந்த கண்ணகியின் காதுகளில் மகரக் குழை கிடந்து ஒளி விடுவதை, ஆசிரியர் இளங்கோவடிகளார் காண்கிறார். “கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத்தாட்டியும்… ஐயைதன் கோட்டம் அடைந்தனர்” (சிலம்பு : 11 205-216) என்ற தொடர்களைக் காண்க.
திங்கள் ஒளியில் மூழ்கியவாறே, காட்டு வழியைக் கடந்து செல்லும் போது, தளர்ச்சி போகக் கணவன் தோளைத் தழுவிக் கொள்ளும் போதும், “நின் கணவன் கள்வனல்லன்! கள்வன் எனச் சொன்ன இவ்வூரை எரியுண்ணும்” என்ற வெய்யோன் உரை கேட்ட அளவே மாநகர் மன்னனிடம் முறை கேட்க, கையில் சிலம்பு ஏந்தி விரையும் போதும், கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கோவலன் கால்களைத் தொழுது இரு கைகளாலும் பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும், கண்ணகியின் கைகளிலும் தோள்களிலும், வளைகள் கிடந்து ஒளி விடும் காட்சியை இளங்கோவடிகளார் தொடர்ந்து கண்டு வந்துள்ளார். “தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி” (சிலம்பு : 13 : 33) என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத் தோளி நின்றிலள்; நின்ற சிலம்பொன்று கையேந்தி” (சிலம்பு : 19-1-2); “அழுதேங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழையாள் தன் கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கையால் பற்ற” (சிலம்பு 19: 64-65.) என வரும் தொடர்களில், ஆசிரியர் இளங்கோவடிகளார், “தொடிவளைச்செங்கை”, “இலங்கீர் வளைத் தோளி,” “துணைவளைக்கை” எனக் கண்ணகியின் வளை அணியை விதந்தோதியிருப்பது காண்க.
மேலே கூறிய இடங்களில் கண்ணகியின் வளையணியைக் கண்ணுற்ற ஆசிரியர், “தீத்திறத்தார் பக்கமே சேர்க” என எரிக்கடவுளுக்கு ஏவலிடும் கண்ணகியின் கைகளில் பொற்றொடி கிடந்து பொலிவுற்ற காட்சியையும் கண்டுள்ளார். “தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று, காய்த்திய பொற்றொடி ஏவப்புகையழல் மண்டிற்று” (சிலம்பு : 21: 55-56) என்ற தொடரினைக் காண்க.
தன் அழுகுரல் கேட்டு உயிர்த்தெழுந்த கோவலன் அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்த போது, அழுதேங்கி நிலத்தில் சாயும் அந்நிலையிலும், “கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் ஆகாது” எனப் பாண்டியன் உரைக்கக் கேட்டுச் சினம்மிக்கு, “நற்றிறம் படராக் கொற்றவ!” என விளித்து, “என் கால் சிலம்பில் உள்ளவை மாணிக்கப் பரல்கள்” எனக் கூறும் போதும், மதுரையை எரியூட்டத் துணிந்து கொங்கையைத் திருகி மதுரை மாநகர் மீது எறிந்த அந்நிலையிலும், பின் தொடர்ந்து வருவதல்லாது முன் வந்து நிற்க மாட்டாது மதுராபுரித் தெய்வமும் அஞ்சும் வண்ணம் சினங் கொண்டு நிற்கும் நிலையிலும், கண்ணகியின் மேனியில் அணி இழைகள் கிடந்து விளங்கப் பெற்றிருந்த காட்சியை இளங்கோவடிகளார் கண்டு வந்துள்ளார். “அழுதேங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழையாள்,” (சிலம்பு : 19 : 64); “கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்றம் காண் என, ஒள்ளிழை, நற்றிறம் படராக் கொற்கை வேந்தே. என் கால் பொற் சிலம்பு மணியுடை அரியே?” (சிலம்பு : 20 : 64-67); "மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்” (சிலம்பு 21 : 54-56), “அலமரு திருமுகத்து ஆயிழை நங்கை நன் முன்னிலை ஈயாள்” (சிலம்பு 23 : 15)—அந்நிலைகளைக் குறிக்கும் இவ்வரிகளில், கண்ணகியை, “ஆயிழையாள்”, “நள்ளிழையாள்”, “விளங்கிழையாள்”, “ஆயிழை நங்கை” என, அவள் அணிந்திருக்கும் அணிகளோடு தொடர்பு படுத்தியே பாடியிருப்பது காண்க.
சேரன் செங்குட்டுவனுக்கும், இளங்கோவடிகட்கும் கண்ணகியின் வரலாறு கூறி, அவளுக்குக் கற்கோயிலும், சொற்கோயிலும் எழக் காரணமாக இருந்த சாத்தனார்க்குக் காட்சி அளித்த கண்ணகியும், ஒண்தொடியும், ஆய்தொடியும், சேயிழையும் அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “தண்டமிழ் ஆசான் சாத்தன் இஃதுரைக்கும்; ஒண்டொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் திண்டிறல் வேந்தே! செப்பக் கேளாய்; தீவினைச் சிலம்பு காரணமாக ஆய்தொடி அரிவை கணவர்க்கு உற்றதும் வலம்படுதானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்” (சிலம்பு : 25 : 66-72) என்ற தொடர்களைக் காண்க.
ஆக, இதுகாறும் எடுத்துக் காட்டிய சான்றுகளால் சலதியோடு ஆடி, குலம் தருவான் பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு போக்க, மதுரைக்குப் புறப்பட்டு விட்ட பின்னரும், கண்ணகி காதில் குழையும், தோளில் தொடியும், கைகளில் வளையும், காலில் பாடகமும் போலும் பல்வேறு அணிகளை அணிந்திருந்தாள்; ஆயிழை அணிந்த அவள் காட்சியை அவள் கணவன் கோவலனும், அவர்களுக்கு வழித் துணையாக வந்த கௌந்தி அடிகளாரும், அடைக்கலம் அளித்த மாதரியும், அவள் மகள் ஐயையும், மதுரைப் பெருமனைக் கிழத்தியரும், மதுராபுரித் தெய்வமும், சேரன் செங்குட்டுவனும், ஆசிரியர் இளங்கோ அடிகளாரும், அவர் நண்பர் சாத்தனாரும் ஆகிய அனைவரும் கண்டு வந்துள்ளனர். ஆகவே, மாதவியோடு உறவு கொண்டு, அவளுக்குக் கொடுத்துக் கொடுத்துச் சிலம்பு ஒழிந்த பிற அணிகளையெல்லாம், கோவலன் இழந்து விட்டான் என்ற கூற்றில் உண்மையில்லை என்பது உறுதியாதல் அறிக.
“சாவதுதான் வாழ்வென்று தானம்பல செய்து
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ?”
—சிலம்பு : 29 : காவற்பெண்டுரை
கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட அவன் தந்தை, உலக வாழ்க்கையை வெறுத்துத் துறவறம் மேற்கொள்வதற்கு முன்னர்த் தன் கண் இருந்த வான் பொருள்களை, மாபெரும் தானமாக அளித்தான் என மாடல மறையோனும், காவற் பெண்டும் கூறுவன, குன்றெனக் குவிந்திருந்த குலச் செல்வத்தைத் தான் தொலைத்து விட்டதாகக் கோவலன் கூறியதன் பின்னரும், மாபெரும் தானம் என மதிக்கத் தகுமளவு வாரி வழங்கத் தக்க வான் பொருள், அவன் தந்தை பால் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
“கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெரும் தானமா வான்பொருள் ஈத்து”
—சிலம்பு : 27 : 90-91
காலில் அணியும் அணிகளாகச் சிலம்பு, பாடகம், நூபுரம் போல்வன கூறப்படுமேனும், சிலம்பு மகளிர் மணப் பருவம் அடையும் வரையே அணியப்படும். மண விழாவின் போது, மணவிழா நாளின் முன்சாய நாளன்று, அது அகற்றப்படும். அந்நிகழ்ச்சியைச் சிலம்புகழி நோன்பு என, மண நிகழ்ச்சிக்கு நிகரான நிகழ்ச்சியாகக் கொண்டு விழாக் கொண்டாடுவர்.
மகளிர் மணம் ஆகாதவர் என்பதை உணர்த்த அவர் காலில் சிலம்பு அணியப்படும். மணம் ஆன மகளிர், அது அணிவது இல்லை. மணப் பருவம் உற்று ஒருவனைக் காதலித்த நிலையில், பெற்றோர் அதற்கு இசையாமை அறிந்து, அவர் அறியாவாறு காதலன் ஊர் சென்று மணந்து கொள்ளத் துணிபவள், மனை விட்டு நீங்குங் கால், சிலம்பைக் கழற்றித் தாய் வீட்டில் வைத்து விட்டே செல்வள். மணம், மணமகள் வீட்டில் நிகழ்வது இயல்பு; மாறாக, அது மணமகன் லீட்டில் நிகழுமாயினும், அந்நிலையிலும், சிலம்புகழி நோன்பைத் தம் வீட்டில் நிகழ்த்தவே தாய்மார் விரும்புவர்.
பெற்றுப் பேரன்பு காட்டி வளர்த்த அன்னையும், மறத்து போகுமளவு வன்கண்ணளாகி விட்ட தன் மகள் சிலம்பைக் கழற்றிப் பிறந்தகத்தே வைத்து விட்டு, முன் பின் அறியானாகிய காதலனுடன் அவனூர் சென்று விட்டது கொடுமையினும் கொடுமை எனக் கண்ணீர் விடும் அகநானூற்றுத் தாயின் கூற்றிலும், (“சிறு வன்கண்ணி சிலம்பு கழிஇ, அறியாத் தேனத்தல் ஆகுதல் கொடிதே.”—அகம் : 385)—சிலம்புகழி நோன்பாம் சிறப்பினத் தான் கண்டு மகிழ்வதற்கு வாய்ப்பளிக்காது, பிறர் கண்டு. மகிழத், தன்னை விட்டுப் போய் விட்ட தன் ஆயிழை மகளை நினைந்து அழும் நற்றிணைத் தாயின் கூற்றிலும் (“சிலம்பு கழீஇய செல்வம், பிறர் உனக்கழிந்த என் ஆயிழை”-நற்றிணை: 279), காதலனுடன் சென்று விட்ட தன் மகளின் காற்சிலம்பு அகற்றும் விழாவினை, அக்காதலன் தாய், அவள் மனையிடத்தே கொண்டாடிய செய்தி கேட்டு, சிலம்புகழி நோன்பு என் மனையில் நிகழ்ந்திருக்க வேண்டும். அதை உங்கள் மனையகத்தே நிகழ்த்திக் கொண்டீர்கள். மண விழாவினையாவது எங்கள் மனையில் நிகழ வழி விடுங்கள் என வேண்டும் ஐங்குறுநூற்றுத் தாயின் கூற்றிலும் (“தும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிக” - ஐங்குறு. 399) சிலம்புகழி நோன்பின் சிறப்பு மிளிர்வது காண்க.
ஆகவே, சிலம்பு, மணமான மகளிர் அணியப்படா நிலையில், வீட்டில் வீணே இருக்கும் ஓர் அணிகலன்; ஆகவே, தன்பால் வேறு பல அணிகள் இருக்கவும், அவையெல்லாம் அணியத் தக்கன. ஆகவே, அவற்றுள் எதுவும் தராது. வீணே இருக்கும் சிலம்பினைக் கொடுக்க முன் வந்தாள், கண்ணகி.