சிலம்பொலி/முன்னுரை

முன்னுரை

தமிழ் மொழி இனிமை வாய்ந்தது. “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்பட வந்த, “தமிழ் தழீஇய சாயலவர்” என்ற தொடரில் வரும், “தமிழ்” என்ற சொல்லே இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர், திருத்தக்க தேவர்.

இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாகச் சொல்லாட விரும்பிய தமிழர், தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள்; அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாகும்.

“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின். வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்றார் ஒரு பெரியார். தமிழர் வாக்கு இனிமை வாய்ந்தது என்றால், அவர் உள்ளமும், அவ்வுள்ளம் உந்த உளவாகும் அவர் செயல் பாடும் இனிமை வாய்ந்தனவே ஆகும். இது உண்மை என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப்பிடிப்பினைக் காணும் வாய்ப்பு பெற்றார் அனைவரும் உணர்வர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழம் பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமையினை இன்றைத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக, அக்காலப் புலவர் பெருமக்கள்,ஆயிரமாயிரம் பாக்களைப் பாடிச் சென்றார்கள். ஆனால், அவர்கள் பாடிச் சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறி விட்டனர். விழிப்புணர்வு அற்ற சிலர் என்றாலும், அவருள் விழிப்புணர்வோடு இருந்தவர்கள், அழிந்தன போக, அழியாதிருந்த அப்பழம் பாக்களையெல்லாம் அரிதின் முயன்று தேடிக் கொண்டார்கள்.

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை, ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பலர் ஒன்று கூடி இருந்து, இப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை, அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம் என்ற தலைப்புகளில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகைcநூல்களில், ஐம்பெருங் காப்பியத் தொகுப்பில் ஒன்றாவதான சிலப்பதிகாரம், “யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல். வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்றும், “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்றும், மகாகவி பாரதியாரால் பாராட்டப்பெற்ற பெருமைக்கு உரியது. அந்நூலைப் பயின்று வருங்கால், திருவாளர். ம.பொ.சி. அவர்களின் “சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற நூலையும், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் “கானல் வரி” என்ற நூலையும், திருவாளர் பி.டி சீனிவாச அய்யங்கார் அவர்களின், “தமிழர் வரலாறு” என்ற ஆங்கில நூலையும் படிக்க நேர்ந்தது. அவ்வாறு படித்த போது, அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் சில, இலக்கிய ஆசிரியராம் இளங்கோவடிகளின் கருத்துக்கும், அக்காலத் தமிழக வரலாற்று உண்மைக்கும் மாறுபட்டிருக்கக் கண்டேன்.

திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் கூற்றில் ஏற்புடையவல்லாத கருத்துக்களுக்கான விளக்கங்களை, நான் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ள, “தமிழர் வரலாறும், திறனாய்வும்” என்ற தலைப்புள்ள என் நூலில் வேண்டிய இடங்களில், இணைப்புகளாக இணைத்து அளித்துள்ளேன். திருவாளர்கள் ம.பொ.சி., தெ.பொ.மீ. ஆகியோர் கருத்துக்கள் சிலவற்றிற்கு அளிக்கும் விளக்கங்களின் தொகுப்பே “சிலம்பொலி” எனும் தலைப்புள்ள இந்நூல். என் ஏனைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், இந்நூலுக்கும் வழங்கி, மேலும் தமிழ்ப் பணி ஆற்றும் துடிப்புணர்ச்சி, என் உள்ளத்தில் மீண்டும் துளிர் விடத் துணை நிற்க வேண்டுகிறேன்.

கா.கோவிந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பொலி/முன்னுரை&oldid=1775854" இலிருந்து மீள்விக்கப்பட்டது