தமிழ் அகராதிக் கலை/இரண்டாம் பாகம்



இரண்டாம் பாகம்

முதல் நிகண்டு

சேந்தன் திவாகரம்

தமிழ் மொழியில் இதுவரை கிடைத்திருக்கும் நிகண்டு நூற்களுக்குள் இதனை முதலாவதாகக் குறிப்பிடலாம். சேந்தன் திவாகரம் என்பதைச் சுருக்கித் திவாகரம் என்றும் அழைப்பதுண்டு.

பெயர்க் காரணம்

இதனை இயற்றிய ஆசிரியர் திவாகரர் என்பவர். இவரை ஆதரித்து இந்நூலை இயற்றச் செய்தவன் சேந்தன் என்பவன். எனவே இது சேந்தன் திவாகரம் எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர்வைப்பு ஒரு புதுமுறையே! அதாவது, இயற்றுவித்தவர் பெயரும் இயற்றியவர் பெயரும் முறையே இணைந்து திகழ்கின்றன. வன்றோ? சில நூற்கள் இயற்றியவர் பெயராலும், சில நூற்கள் ஆதரித்து இயற்றுவித்தவர் 

பெயராலும், வேறுசில கதைத்தலைவன் பெயராலும், சில சொல்லப்பட்டுள்ள பொருளின் பெயராலும், இன்னுஞ்சில இன்னோரன்ன பிற காரணங்களாலும் பெயர் பெற்றிருக்க, இந்நூலோ சேந்தன் திவாகரம் எனப் பெயர்பெற்றிருப்பது ஒரு புதுமைதானே!

அகத்தியர் எழுதிய நூலுக்கு அகத்தியம் என்பது பெயர்; தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்பது பெயர்; இளம்பூரணர் எழுதிய உரைக்கு இளம்பூரணம் என்பது பெயர்; நச்சினார்க்கினியர் எழுதிய உரைக்கு நச்சினார்க்கினியம் என்பது பெயர்; இவை போலவே, திவாகரர் எழுதிய நூலுக்குத் திவாகரம் என்பது பெயர். இது முற்றிலும் சரியே. இக்காலத்தில்கூட, இடத்தின் பெயரோ அல்லது விஞ்ஞானப் பொருளின் பெயரோ, கண்டுபிடித்தவர் அல்லது உருவாக்கியவரின் பெயரால் வழங்கப்படுவது தெரிந்ததே! பழைய நூற்கள் சிலவற்றின் பெயர்கள், இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களால் அழைக்கப்படுவது மிகவும் பொருத்தம் என்பதோடு மட்டுமல்லாமல், வேறொரு பெரிய நன்மையும் உண்டு என்பதை மறக்கக்கூடாது. அதாவது, பழைய தமிழ் நூற்களை எழுதிய ஆசிரியர்களைப் பற்றி ஒன்றுமே அறிய முடிவதில்லை. முத்தொள்ளாயிரம் போன்ற சிறந்த தமிழ் நூற்களைப் படைத்த ஆசிரியர்களின் பெயர்கள் கூடத் தெரியவில்லையே! இந்நிலையில், ஆசிரியரின் பெயரையே நூலுக்கு இடும் முறையால், நூலாசிரியரின் பெயரை மட்டுமாவது தெரிந்து கொள்ளும் வாய்ப்பாயினும் கிடைத்தது பிற்காலத்தார்க்கு ஒரு பெரும் பேறல்லவா?

இந்நூலுக்கு ஆசிரியர் பெயரால் திவாகரம் என்று மட்டும் பெயரிடாமல், சேந்தன் திவாகரம் என்று 

பெயரிட்டதற்குச் சிலர் வேறு காரணம் கூறுகின்றனர். அதாவது, இந்தத் திவாகர நிகண்டுக்கு முன்னாலேயே, திவாகரம் என்னும் பெயருடைய இன்னொரு நிகண்டு இயற்றப்பட்டிருந்தது. திவாகரர் என்னும் பெயருடைய வேறொருவர் அதனை இயற்றியிருக்கலாம். ஒரு பெயரே ஒரே காலத்தில் ஒரே தெருவில் பலர்க்கு இருக்கும்போது, ஒரு பெயரையே பல காலத்தில் வாழ்ந்த பலர் வைத்துக் கொண்டிருந்திருக்கலாமன்றோ? எனவே, அந்தப் பழைய திவாகரத்துக்கும் இந்தப் புதிய திவாகரத்திற்கும் வேறுபாடு தெரிவதற்காகப் பழைய திவாகரத்தை ‘ஆதி திவாகரம்’ என்றும், புதிய திவாகரத்தைச் ‘சேந்தன் திவாகரம்’ என்றும் பிற்காலத்தவர் குறியிட்டு அழைத்தனர். என்பதுதான் சிலர் கூறும் புதுக்காரணம். இதனை மறுப்பவரும் உளர். அவர்மறுப்பு வருமாறு:—

சேந்தன் திவாகரத்தைத் தவிர, ஆதி திவாகரம் என வேறொரு நிகண்டு இருந்திருக்க முடியாது. அதற்கு எந்தச் சான்றும் கிடைத்திலது. சில உரை நூற்களுள் சேந்தன் திவாகரப் பாக்களே எடுத்தாளப்பட்டுள்ளன; ஆதி திவாகரப் பாடல் என்ற பெயரில் எதுவும் எடுத்தாளப்படவில்லை. மேலும், பிற்கால மக்களால் பெருவாரியாகப் படித்துப் போற்றப்பட்ட சூடாமணி நிகண்டின் ஆசிரியராகிய மண்டல புருடர், தமக்குமுன் இருந்த திவாகரம், பிங்கலம் என்னும் இரண்டு நிகண்டுகளையும் முதல் நூல்களாகக் கொண்டு எளிய முறையில் சூடாமணி நிகண்டைத் தாம் எழுதியிருப்பதாகக் கூறியுள்ளார். ‘இங்கிவை இரண்டும் கற்க’ என மண்டல புருடர் இரண்டு என்னும் எண்ணிக்கையிட்டு முடிவாகக் கூறி 

விட்டதனாலே, திவாகரம், பிங்கலம் என்னும் இரண்டு நிகண்டுகளைத் தவிர, ஆதிதிவாகரம் என வேறொரு நிகண்டு முற்காலத்தில் இருந்திருக்க முடியாது. அப்படியிருந்திருந்தால் மண்டலபுருடர் அதனையும் கூட்டி மூன்றாகக் குறிப்பிட்டிருப்பார். எனவே, நிகண்டுகளுக்குள் முந்தியது சேந்தன் திவாகரமே. அதன் பழமையை நோக்கி அதனையே ஆதி திவாகரம் என்றும் அழைத்திருக்கக்கூடும். ஆகவே, ஆதி திவாகரம், சேந்தன் திவாகரம் என்னும் இரண்டும் ஒரு நிகண்டின் பெயர்களே. இந் நுட்பம் உணராதார் இரண்டினையும் தனித்தனி நிகண்டெனக் கருதியிருக்க வேண்டும்”.

மேலே இருசாரார் கருத்துக்களைக் கண்டோம். நடுநிலைமையுடன் இரு கருத்துக்களையும் அணுகி ஆராயின், ஆதி திவாகரமும் சேந்தன் திவாகரமும் ஒன்றாக இருக்க முடியாது; திவாகரம் என்னும் பெயரில் இரண்டு நிகண்டுகள் இருந்ததனால்தான், இரண்டிற்கும் வேறுபாடு தெரிய, முந்தியதை ஆதி திவாகரம் என்றும், சேந்தனால் தூண்டி எழுதப்பட்ட பிந்தியதைச் சேந்தன் திவாகரம் என்றும் அழைத்தனர்–என்னும் முதல் சாராரின் கருத்தே சரியானது என்பது புலப்படும். ‘இல்லாமல் பிறவாது–அள்ளாமல் குறையாது’ என்றபடி, ஆதி திவாகரம் என ஒன்று இல்லாமல் இந்தப் பேச்சு எழுந்திருக்க முடியாது. அப்படியில்லாதிருந்தால் சேந்தன் திவாகரம் என அழைக்க வேண்டிய வேலையே இன்றி, வெறுமையாய்த் திவாகரம் என்றே அழைத்திருப்பர். மேலும், ஆதி திவாகரம் இல்லாதிருந்தால், சேந்தன் திவாகரம் எனப் பெயர் வந்ததற்குக் காரணமாக இரண்டு விதமான கருத்துத் தெரிவிப்பதோடு ஆராய்ச்சியாளர்கள் அமைந்துவிட்டிருப்பார்கள் அதாவது, திவாகரர் தம்மை ஆதரித்த சேந்தனுக்கு 

நன்றி செலுத்துமுகத்தான் அவன் பெயரையும் இணைத்துச் சேந்தன் திவாகரம் எனத் தம் நூலுக்குப் பெயரிட்டார் என்றாவது, அல்லது, இந்தத் திவாகரர் காலத்திற்கு முன்பே வேறொரு திவாகர நிகண்டு இருந்திருக்க வேண்டும்; அதனால்தான் இந்த நிகண்டிற்குச் சேந்தன் திவாகரம் என்ற பெயர் எழுந்தது போலும்; ஆனால் அந்தப் பழைய திவாகரத்தைப் பற்றி ஒன்றும் தெரிந்திலது என்றாவது ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருப்பர். அப்படியில்லாது, ஆதி திவாகரம் என ஒன்றைத் திட்ட வட்டமாக அறிவித்திருப்பதனாலே அது இருந்திருக்கக் கூடும். எனவே, சேந்தன் திவாகரமே பழமை பற்றி ஆதி திவாகரம் என அழைக்கப்பட்டது என்னும் கூற்றுப் பொருந்தாது. அப்படியே சேந்தன் திவாகரத்தின் பழமையைப் பாராட்ட விரும்பியிருந்தாலும் அதனை ஆதி நிகண்டு என அழைத்திருக்க வேண்டுமே தவிர, ஆதி திவாகரம் என அழைத்திருக்க முடியவே முடியாது. எனவே, ஆதி திவாகரம் வேறு. அப்படியாயின் அஃது எங்கே எனின், தமிழில் மறைந்து போன நூற்களின் எண்ணிக்கை மிக நீளமானது; அந்த நீளமான பட்டியலில் ஆதி திவாகரமும் சேர்ந்துவிட்டிருக்க வேண்டும். சேந்தன் திவாகரமாவது உருப்படியாய்க் கிடைத்ததே! 

சேந்தன் வரலாறு

சேந்தனைப் பற்றி முறையான வரலாறு இல்லை. அரசர்கள்பற்றியோ—புலவர்கள்பற்றியோ—வள்ளல்கள் பற்றியோ—இன்னும் செயற்கருஞ்செயல்கள் செய்த பெரியார்கள் பற்றியோ முறையான வரலாறு எழுதி வைக்காத குறை நம் தமிழ் முன்னோரைச் சாரும் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, வரலாற்று நிகழ்ச்சிகளை அறியக் கிடைத்துள்ள சான்றுகளின் (சாதனங்களின்) வாயிலாக வரலாற்றை மூன்று வகைப்படுத்திக் கூறுவதுண்டு. அதாவது, (1) பட்டப் பகலில் நடந்த வரலாறு, (2) வைகறையில் (விடிவதற்கு முன்) பனி மூட்டத்தில் நடந்த வரலாறு, (3) அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு எனப் பகுக்கலாம். சரித்திரம் என்னும் பெயரில் இப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கப்படுவது முதல்வகையைச் சேர்ந்ததாகும்—அதாவது பட்டப்பகலில் நடந்த வரலாறாகும். இதற்கு இப்பெயர் கொடுத்ததற்குக் காரணம்:— பட்டப் பகலில் நடக்கும் நிகழ்ச்சிகள் நன்றாகத் தெளிவாகத் தெரியும். அதுபோலவே, ஆண்டு, திங்கள், நாள், நாடு, ஊர், மக்களின் பெயர்கள், நிகழ்ச்சிகள் முதலியன தெளிவாகக் குறிப்பிட்டு எழுதப்பட்ட வரலாறு, ஐயத்திற்கிடமின்றி உறுதியானது. இது முதல் வகையது. அடுத்து, பழந்தமிழ் மன்னர்கள் பழந்தமிழ்ப் புலவர்கள் முதலியோர் வரலாறு—இராமர், பாண்டவர் முதலியோர் வரலாறு—இன்ன பிற வரலாறுகள் எல்லாம் இரண்டாம் வகையைச் சார்ந்தன. ஏனெனில், இவை முறையாக ஆண்டு, திங்கள், நாள் முதலியன குறிப்பிட்டு ஐயத்திற்கு இடமின்றி எழுதப்பட்டவையல்ல. புராணம், இதிகாசம், காவியம், பல 

வகை இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாக இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் ஒரு தோற்றமாக (உத்தேசமாக) நுனித்து (யூகித்து) உணரப்படுவனவாகும். வைகறையில் பனிமூட்டத்தில் பொருள்கள் தெளிவாகத் தெரியாமல் ஒரு தோற்றமாகத்தானே தெரியும்? அதுபோலவே இவையுமாதலின், இவை இரண்டாம் வகையன. அடுத்து, சிந்துவெளி நாகரிகம், பழைய எல்லம்—பாபிலோன் நாகரிகங்க்ள் முதலிய வரலாற்றுக் குறிப்புக்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. விளக்கு வசதியும் இல்லாதவிடத்தில் அமாவாசை நள்ளிரவில் பொருள்கள் தெரியவே தெரியா; தடவிப் பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டும்; அதுபோலவே, சிந்துவெளி நாகரிகம் முதலியன, முன்னமேயே எழுதி வைத்துள்ள பழைய வரலாற்றுக் குறிப்பு எந்த உருவத்திலும் ஒரு சிறிதும் இன்மையால், நிலத்தைத் தோண்டி எடுத்துக் கண்ட பொருட்கள் வாயிலாகவும் பழைய கட்டடங்கள்—இடிபாடுகள் வாயிலாகவும் இன்ன பிற பொருட்கள் வாயிலாகவுமே அறிந்து கொள்ளப்படுவதால், இவை மூன்றாம் வகையனவாகும்.

மேற்கூறிய மூன்று வகையுள் சேந்தன் வரலாறு இரண்டாம் வகையைச் சார்ந்ததாகும். எப்படியெனில், முதல் வகையைப்போல் சேந்தனைப் பற்றி முறையான வரலாறு எழுதி வைக்கப்படவும் இல்லை; மூன்றாம் வகையைப் போல் சேந்தனைப் பற்றி எழுத்துச் சான்று ஒரு சிறிதும் கிடைக்காமலும் இல்லை. எனவே இரண்டாம் வகையைப் போல், திவாகரம் போன்ற நூற்களின் வாயிலாகச் சேந்தனைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில செய்திகள் அறியக் கிடக்கின்றன. கிடைத்தவரைக்கும் மனநிறைவு கொள்ள வேண்டியதுதான்! இந்த இரண்டாம் வகை 84

வரலாற்றுப் பிரிவைச் சாரும் தகுதி சேந்தனுக்கு மட்டும் உரியதன்று-திவாகரருக்கும் சரி-இனி சொல்லப் போகும் நிகண்டுகளின் ஆசிரியர்களுக்கும் சரி இது பொருந்தும். எனவேதான் இம் முவகை வரலாற்றுத் தகுதி ஈண்டு இவ்வளவு விரிவாக எழுதப்பட்டது. இனி, சேந்தனைப் பற்றிய செய்திகளைக் காண்போம்:

சேந்தன் சோழ நாட்டுக் காவிரிக் கரையை ஒட்டிய அம்பல் என்னும் பகுதியின் தலைவன்; அருவந்தை என்னும் ஊரினன்; (அதாவது தஞ்சை மாவட்டத்தான்) கல்வி கேள்வி நிரம்பியவன்; தமிழ், வடமொழி என்னும் இருமொழிகளிலும் வல்ல செந்தமிழன். பல பாடல்களும் நூல்களும் எழுதிய சிறந்த பாவலன்-நாவலன். இறைவியின்மேல் செந்தமிழ் மாலை அந்தாதி பாடியுள்ளான். இராமரது விற்போர், பாரதப் போர், தாருகன் வதை முதலியவை பற்றியும் பாடியுள்ளான்.

சிறந்த மூதறிவாளன். நல்ல நோக்கினன். நாகரிக நாட்டமுடையவன். மறம் நீக்கி அறம் பேணுபவன். ஐம்புலன்களை வென்றவன். குடிமக்களைத் தன் குடை நிழற்கீழ்க் குளிர்ச்சியுடன் காப்பவன். பரிசிலர் பலர் வரினும் இல்லை என்னாது கொடுக்கும் கொடையாளி. பகைவர் வரின் வெல்லத்தக்க படையாளி. தேவரே போன்ற சிறந்த தோற்றமுடையவன். புலவர்களை ஆதரித்துப் பெரும்புகழ் பெற்றவன். ஒளவையார், திவாகரர் முதலிய புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாடப் பெற்றுள்ளவன். ஒரு நாட்டின் தலைவனுக்கு இன்னும் என்ன வேண்டும்? ஏறக்குறைய எல்லா நல்லியல்புகளும் இருக்கின்றனவன்றோ?

சேந்தனைப் பற்றிய இவ்வளவு செய்திகளையும் திவாகர நிகண்டினுள் காணலாம். திவாகரர் தம் 85

நிகண்டினைப் பன்னிரண்டு தொகுதிகளாக அமைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும், நன்றி பாராட்டும் வகையில், சேந்தனைப் புகழ்ந்து பாடியுள்ளார். அவற்றினின்றே மேற்கூறிய செய்திகள் திரட்டித் தரப்பட்டன. அப்பாடற் பகுதிகள் முதல் தொகுதி தொட்டு முறையே வருமாறு:

1. “வடநூற் காசன் தென்தமிழ்க் கவிஞன் கவியரங் கேற்றும் உபயகவிப் புலவன் செறிகுணத்து அம்பற் கிழவோன் சேந்தன்”. 2. "கற்ற நாவினன் கேட்ட செவியினன் முற்ற உணர்ந்த மூதறி வாளன் நாகரிக நாட்டத் தாரியன் அருவந்தை தேறுங் காட்சிச் சேந்தன்”. 3. "காதலி கையிற் போதிப் பெருந்தவன தெவ்வடு கால வைவேல் எழிலி அவ்வை பாடிய அம்பற் கிழவன் தேன்தார்ச் சேந்தன்". 4. "நாடே பிறர் நாட்டிற் குவமை, ஆறே காலம் அறிந்துதவும் காவிரி தானே ஆடவர் திலகன் அம்பல் மன்னன் ஈடிசைத் தலைவன் அருவந்தைச் சேந்தன் ஆய்ந்த திவாகரத் தரும்பொருள் விளங்கும்". 5. "ஒருவற் கொருவன் ஆகி உதவியும் பரிசில் மாக்கள் பற்பல ராயினும் தானுெரு வன்னே தரணி மானவன் செந்தமிழ்ச் சேந்தன் தெரிந்த திவாகரம்". 6. “வருதற் கங்கை வடதிசைப் பெருமையும் தென்திசைச் சிறுமையும் நீக்கிய குறுமுனி குண்டிகைப் பழம்புனல் காவிரிப் பெரும்பதி அம்பற் கதிபதி சேந்தன்". 86

7. "முற்றவப் பயனே கற்றவப் பயனே சாபத் திழுக்கிய தேவ சாதரில் தோற்றம் உடையனென அம்பல் தோன்றிய இயற்கைச் சேந்தன்”. 8. "மறக்குறும்பு ஒட்டி அறத்தின் வழிநின்று கவிகைத் தண்ணளி புவிபெற ஆணையின் ஐம்புலன் ஆளும் அம்பற் கோமான் திண்பெருஞ் சேந்தன் திவாகரம்". 9. "அண்ணல் செம்பாதிக் காணி யாட்டியைப் பெண்ணனங்கை மூவுலகும் பெற்ற அம்மையைச் செந்தமிழ் மாலை அந்தாதி புனைந்த நாவலன் அம்பற் காவலன் சேந்தன்". 10. ".அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும் பாரதம் பொருத பேரிசைச் சிலையும் தாருகற் கடிந்த வீரத் தயிலும் பாடிய புலவன் பதிஅம்பற் சேந்தன் பயில் வுற்ற திவாகரம்". 11. "புலவி நீக்கிய கல்விச் செல்விக்கு அமிழ்து சுவை ஈந்த அரும்பெறல் இன்பத்து ஒருபெருஞ் செல்வன் அருவந்தைச் சேந்தன் பகர்வுற்ற திவாகரம்”. 12. "செம்பொற் கிடையான் அம்பற் சேந்தன் நன்ன ராளன் நலமிகு நாட்டத்தன்”.

இவை பன்னிரண்டும் சேந்தனைப் பற்றிய திவாகரப்பாடல் பகுதிகளாகும். இனி இவற்றின் சில பகுதிகள் குறித்துச் சிறிது ஆய்வோம்:

எடுத்ததும் முதல் தொகுதிப் பாடலில் 'வடநூற்கு அரசன்’ என்று சேந்தன் சிறப்பிக்கப் பெற்றுள்ளான் இதிலிருந்து, வடமொழியில் இவனுக்கிருந்த பெரும் புலமை புலப்படும். மேலும், இக்காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலம் பெற்றுள்ள மதிப்பை அக்காலத்தில் வடமொழி பெற்றிருந்தது. இப்பொழுது ஆங்கிலம் படித்தால் சிறப்பு என்பதுபோல, அப்பொழுது வடமொழி படித்திருந்தால் சிறப்பு. இன்று A, B, C, D, முதலிய இருபத்தாறு ஆங்கில எழுத்துக்களை மாற்றி மாற்றிப் பின்னிப் பின்னிப் பிணைத்துப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் போடுவதில் பெருமை காண்பது போல, அன்று வடமொழி படித்தவர் என்று விளம்பரம் செய்வதில் பெருமை காணப்பட்டது. எனவே, சேந்தன் இத்தகுதியிலும் மிக்கவனாகத் திகழ்ந்தான்.

மூன்றாம் தொகுதிப் பாடலில், 'காதலி கையிற். போதிப் பெருந்தவன்' என்று சேந்தன் குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பம் தருகிறது. 'போதிப் பெருந்தவன்' என்றால், போதி மரத்தின் கீழ்ப் பெருந்தவம் புரிந்த புத்த பகவான்தான். இந்தத் தொடரில் புத்த பகவானாக உருவகிக்கப்பட்டிருப்பதைக்கொண்டு இவனைப் புத்த மதத்தினன் என்று கூறிவிடக் கூடாது. ஏன் எனில், ஒன்பதாவது தொகுதிப் பாடலில் கூறியுள்ளாங்கு, சிவனது இடப்பாகங் கொண்டிருக்கும் அம்மையின்மேல் இவன் செந்தமிழ் மாலை அந்தாதி நூல் பாடியிருப்பதாலும், சேந்தனைக் கந்தனைச் 'செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல் வேந்தனே' என்று முருகனை அருணகிரியார் குறிப்பிட்டுள்ளாங்கு முருகனது பெயராகிய 'சேந்தன்' என்பதை இவன் வைத்துக்கொண்டிருப்பதாலும் இவன் சைவ சமயத்தினனேயாவான். அப்படியெனில், 'காதலி கையிற் போதிப் பெருந்தவன்' என்னும் தொடருக்கு நாம் 88


பொருள் காணவேண்டும்:- மனைவியிடம் பெறும் சிற்றின்பத்தைத் துறந்து உலகிற்குப் பணி புரிந்தார் புத்த பகவான்; அவர் போலவே இவனும் மனைவியின் சிற்றின்பத்தை மட்டுப்படுத்திக் கொண்டவன், என்பது பொருள். எட்டாவது தொகுதிப் பாடலில்கூட, 'ஐம்புலன் ஆளும் அம்பல் கோமான்’ என்று சிறப்பிக்கப்பெற்றுளானல்லவா? எனவே, புலன் உணர்ச்சியை அடக்கியாள்பவன் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ள போதிப் பெருந்தவன் என்னும் உருவகத்தைக் கொண்டு இவனைப் புத்த மதத்தினன் எனல் பொருந்தாது.

இதே மூன்றாம் தொகுதிப் பாடலில் உள்ள அவ்வை பாடிய 'அம்பல் கிழவன்' என்னும் தொடரைக் கொண்டு இவன் அவ்வையாரால் பாடப்பட்டுள்ளான் என்பது புலனாகிறது. அவர் இவன்மேல் பாடிய தனிப்பாடலோ அல்லது தனி நூலோ யாதெனப் புலப்பட்டிலது. அஃதும் இழந்த செல்வங்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியதே போலும்!

அடுத்து நான்காம் தொகுதிப் பாடலில், இவனது நாடோ பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழக் கூடியது; இவன் காவிரி ஆறோ காலம் அறிந்து உதவக்கூடியது; இவனே ஆடவர் திலகன், ஈடிசைத் தலைவன்-என்று கூறப்பட்டிருப்பவற்றிலிருந்து இவன் காட்டின் நீர்வளமும் நிலவளமும் இவனுடைய ஆட்சிச் சிறப்பும் வீரமும் புகழும் நன்கு விளங்கும்.

இவன் கண்கவர் வனப்பும் பொலிவும் மிக்கவன் என்பது ஏழாம் தொகுதிப் பாடலால் விளங்கும். ஏதோ ஒரு சாபம் காரணமாக மண்ணுலகிற்கு வந்துவிட்ட ஒரு தேவனே என்று எண்ணும்படியான கவர்ச்சியான தோற்றமுடையவன் என்னும் கருத்தை, 'சாபத்திழுக்கிய தேவ சாதரில் தோற்றம் உடையன்' என்னும் பகுதி உணர்த்துகின்றதன்றெ? ஆனால் அவன் உண்மையில் அப்படி வந்தவனல்லன்; இயற்கையாகவே பேரழகு மிக்க மாந்தனேயாவான் என்னும் கருத்தை இயற்கைச் சேந்தன் என்னும் தொடர் உணர்த்துகிறது.

சேந்தன் திவாகரம் என வெறும் பெயருக்கு மட்டும் உரியவன் அல்லன் சேந்தன் திவாகர நிகண்டோடு இவனுக்கு நெருங்கிய தொடர்புண்டு; அதாவது, திவாகரத்தை இவன் நன்கு தெரிந்து ஆராய்ந்து பயின்று பலர்க்கும் எடுத்துச் சொல்லியும் உள்ளான் என்பதை, 'சேந்தன் ஆய்ந்த திவாகரம், சேந்தன் தெரிந்த திவாகரம், சேந்தன் பயில்வுற்ற திவாகரம், சேந்தன் பகர்வுற்ற திவாகரம்’ என்னும் பாடற் பகுதிகளால் அறியலாம். இறுதியாக, சேந்தனது ஊர் பற்றியும் பேர் பற்றியும் காலம் பற்றியும் உள்ள சிக்கலைச் சிறிது ஆய்ந்து விட்டு இவ் வரலாற்றை முடித்துக் கொள்ளலாம்:

காவிரிப் பகுதியைச் சேர்ந்த 'அம்பல்' என்னும் ஊரும் 'அருவந்தை' என்னும் ஊரும் சேந்தனுக்கு உரியவை என்னும் கருத்து, (1) 'அம்பற் கிழவோன் சேந்தன்', (2) 'அருவந்தை தேறுங் காட்சிச் சேந்தன்', (4) 'அருவந்தைச் சேந்தன்', (6) 'காவிரிப் பெரும்பதி அம்பற்கு அதிபதி சேந்தன்', (7) அம்பல் தோன்றிய சேந்தன் முதலிய திவாகரப் பாடல் பகுதிகளால் தெளியப்படும். ஆனல், புறநானூறு—385—ஆம் பாடலில், சிறிது வேற்றுமையுடன், கிட்டத்தட்ட இதே மாதிரியில் ஒர் அரசன் பேசப்பட்டுள்ளான். அப்பாடலின் அடியில், அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனர் பாடியது என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு:—

“வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்பப்
புலரி விடியற் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட் டருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என்னரை
நீனிறச் சிதாஅர் களைந்து
வெளியது உடீஇஎன் பசிகளை ந் தோனே
காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல் வசைப் பட்ட
ஓங்கல் வானத் துறையினும் பலவே.”

[அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனர் பாடியது.]

“காவிரி பாயும் கழனி சூழ்ந்த அம்பர் என்னும் ஊரின் தலைவனாகிய அருவந்தை என்பான், எனக்கு நல்ல உடையும் உணவும் அளித்து என் வறுமையைப் போக்கினான்; அவன் நீடுழி வாழ்க!” என்பதுதான் மேலுள்ள புறநானூற்றுப் பாடலின் சுருக்கமான கருத்தாகும். . . . .

இந்தச் சூழ்நிலையை வைத்துக் கொண்டு, புறநானூற்றில் சொல்லப்பட்டிருப்பவனும் திவாகரத்தில் சொல்லப்பட்டிருப்பவனும் ஒருவனே என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதற்குச் சான்று, இரண்டு நூற்களிலும் ஒத்து வந்துள்ள காவிரி, அம்பர் (அம்பல்), அருவந்தை என்னும் மூன்று சொற்களுமேயாம். புறநானூற்றில் அம்பர் கிழவோன் என இடையின 'ர்' உள்ளது. திவாகரத்திலோ அம்பற் கிழவோன் என வல்லின 'ற்' உள்ளது. வல்லின 'ற்' இருப்பதால் புணர்ச்சியிலக்கணப்படி 'அம்பல்' எனப் பிரித்துக்கொள்ள நேரிட்டது. புறநானூற்றின் வேறு ஓர் ஒலைச் சுவடியில் 'அம்பல்' என்றே உள்ளது. எனவே ஒரு பெயரே சுவடிக்குச் சுவடி மாறுபடுவது இயற்கை ஆனால், அருவந்தை என்னும் சொல்தான் பொருளளவில் மாறுபட்டுள்ளது. புறநானூற்றின்படி 'அருவந்தை' என்பது அரசனது பெயராகும். திவாகரத்தின்படியோ-சிலர் கருத்துப்படி 'அருவந்தைச் சேந்தன்' என ஊரின் பெயராகத் தெரிகிறது.

நடுநிலையுடன் ஆராயுங்கால், திவாகரத்திலுள்ள அருவந்தை என்பதை ஊரெனச் சொல்லாமல் அரசனது பெயராகவே கொள்ளலாமே! அதாவது 'அருவந்தைச் சேந்தன்' என்பதற்கு, அருவந்தை என்னும் பட்டப் பெயருடைய-குடும்பப் பெயருடைய சேந்தன் எனப் பொருள் கொள்ளலாமே? அதாவது, பாண்டியன் நெடுஞ்செழியன்-பாண்டியன் அறிவுடை கம்பி, சோழன் நலங்கிள்ளி-சோழன் நெடுங்கிள்ளி என்னும் பெயர்களிலுள்ள பாண்டியன், சோழன் என்னும் குடிப் பெயர்களைப் போல, அருவந்தைச் சேந்தன் என்பதிலுள்ள அருவந்தை என்பதும் குடும்பப் பட்டப் பெயராக இருக்கலாமன்றோ?

எனவே, காவிரி, அம்பல், அருவந்தை என்னும் சொற்கள் புறநானூற்றிலும் திவாகரத்திலும் இருப் பதும் உண்மைதான் எனினும், இந்தச் சான்றைக் கொண்டு, புறநானூற்று அம்பர்கிழானும் திவாகரத்து அம்பற் கிழானும் ஒருவனே என முடிவு கட்டுதல் ஏற்புடைத்தாகாது. அவன் வேறு-இவன் வேறு ஒருவேளை, இவன் அவனது மரபில் வந்தவன யிருக்கலாம். இதற்குக் காரணமும் கூறமுடியும்: புறநானூற்றுப் பாடலில் சேந்தன் என்னும் பெயரின் வாடையே காணப்படவில்லை; அரசனது பெயராக அருவந்தை என்னும் சொல்தான் உள்ளது. இருவரும் ஒருவரேயானால், இவ்வளவு விளம்பரம் உள்ள சேந்தன் என்னும் பெயர் புறநானூற்றுப் பாடலில் வராமற் போக வழியில்லை. மேலும், அப்புறப்பாட்டைப் பாடியவர் கல்லாடர்; அவர் சங்க காலத்தைச் சேர்ந்த புலவர். புறநானூற்றுப் பாடல்களும் சங்க காலத்தன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, சங்க காலம் கி.பி. 3 அல்லது 5-ஆம் நூற்றாண்டிற்குள் முடிவடைவதாகத் தெரிகிறது. ஆனால், திவாகரரும் திவாகரச் சேந்தனும் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்கள் என்று துணிவதற்கு இடமுண்டு. சில சான்றுகள் வருமாறு:

(1) திவாகரர் தமது நூலின் தொடக்கத்தில் விநாயகர் காப்புப் பாடல் பாடியுள்ளார். மற்றும், முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியில் விநாயகருக்கு உரிய பெயர்களை,

"ஒற்றைக் கொம்பன், விநாயகன், ஐங்கரன்,
வெற்றி யானை முகவன், கணபதி,
பாசாங்குச தான், ஆகு வாகனனே.”

என்னும் பாடலில் கூறியுள்ளார். ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படிப் பார்த்தால், பழந்தமிழகத்தில் விநாயகர் வணக்கம் கிடையாது. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து நரசிம்மவர்ம பல்லவனுடைய படை, சாளுக்கிய மன்னனாகிய புலிகேசியை வென்று வாதாபி நகரைக் கைப்பற்றியபோதுதான், அங்கிருந்த விநாயகர் உருவம் ஒன்றைப் பல்லவனுடைய படைத் தலைவர் பரஞ்சோதியார் (சிறுத்தொண்டர்) தமிழகத்துக்கு முதல் முதலாகக் கொண்டு வந்தார். அதன் பின்னரே -அதாவது ஏழாம் நூற்றாண்டில்தான் தமிழ் நாட்டிற்கு விநாயகர் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், சங்க நூற்களில் காணப்படாத விநாயகர் திவாகரத்தில் இடம் பெற்றிருக்கிறார் என்றால், ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே திவாகரரால் திவாகரம் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

(2) சேந்தன் அம்மையின்மேல் அந்தாதி பாடியிருப்பதாகத் திவாகரர் கூறியுள்ளார். தொண்ணுாற்றாறு சிறு பிரபந்த (சிற்றிலக்கிய) வகைகளுள் அந்தாதியும் ஒன்று. அந்தாதி போன்ற நூல் வகைகள் சங்க காலத்தில் இயற்றப்படவில்லை. இன்னவை சங்க காலத்திற்கு இப்பால் இடைக் காலத்திலேயே எழத் தொடங்கின.

(3) மேலும், திவாகர நிகண்டின் இரண்டாம் தொகுதியாகிய மக்கட் பெயர்த் தொகுதியில், 'வேள் புலவரசர் சளுக்கு வேந்தர்’ எனச் சாளுக்கிய மன்னர் குடியினர் பேசப்பட்டுள்ளனர். எனவே, சாளுக்கிய மன்னர்கள் தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்ட பின்னரே திவாகர நூல் தோன்றியிருக்க வேண்டும். தமிழ் நாட்டோடு எந்த விதமான தொடர்பும் இல்லாத மன்னரைத் தமிழ் நிகண்டு பேச வேண்டிய காரணமே இல்லையன்றே? தமிழ் நாட்டோடு தொடர்பு கொள்ளாத ஏனைய உலக மன்னர்களைப் பற்றித் திவாகர நிகண்டு பேசவில்லையன்றோ?

சாளுக்கிய மன்னர்கள் தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்டது ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளிலாகும், புலிகேசி, விக்ரமாதித்யன் முதலிய சளுக்கிய குல மன்னர்கள், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டையாண்ட பல்லவ குல மன்னர்களோடு போரிட்டதாக வரலாறு கூறுகின்றது. எனவே, சளுக்கிய மன்னர்களைப் பற்றியும் கூறும் திவாகரம் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகத்தான் இருக்கவேண்டும். ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டில் திவாகரம் தோன்றியிருக்கக்கூடும் என்று கூறலாம். அப்படியென்றால், சேந்தனும் திவாகரரும் எட்டாம் நூற்றாண்டினர் என்பது பெறப்படும்.

ஆனால், திவாகரம் மூன்றாம் தொகுதிப் பாடலில் 'அவ்வை பாடிய அம்பற் கிழவன்' எனத் திவாகரரால் சேந்தன் சிறப்பிக்கப் பெற்றிருப்பதைக் கொண்டு, 'அவ்வையார் சங்க காலத்தவர்; அவரால் பாடப் பெற்ற சேந்தனும் சங்க காலத்தவன்; எனவே சேந்தன் திவாகரமும் சங்க காலத்தது', என்று சிலர் கூறக்கூடும். இது பொருந்துமா? அவ்வையாரைப் பொறுத்தமட்டில் எதையும் துணிந்து கூறுதற்கில்லை. அவ்வை என்ற பெயரை வைத்துக் கொண்டு திட்டவட்டமாகக் கால ஆராய்ச்சி செய்துவிட முடியாது. ஏன் எனில், கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றைப் புரட்டிப் பார்க்குங்கால், அவ்வையார் என்னும் பெயரில் பல காலத்தில் பலர் இருந்ததாகத் தெரிகிறது. இருபதாம் நூற்றாண்டுச் சினிமா-நாடக அவ்வையாரோ, பழைய அவ்வையார்கள் பலரும் சேர்ந்த கதம்ப அவ்வையாராகக் காட்சியளிக்கின்றார். எனவே, திவாகரர் கூறியுள்ளபடி சேந்தனைப் பாடிய அவ்வையார் எந்த அவ்வையாரோ? அவர் சங்க கால அவ்வையாரே என்று எப்படித் துணிந்து கூறமுடியும்? இடைக் கால அவ்வையாராக இருக்கலாமே!

எனவே, சேந்தனும் திவாகரரும் ஒருதோற்றம் எட்டாம் நூற்றாண்டினராவர். கால ஆராய்ச்சிக்காகவே புறநானூற்றுப் பாடலை இங்கே இழுத்துப் போட்டு இவ்வளவு நேரமும் முயற்சியும் செலவிட வேண்டியதாயிற்று.
திவாகரர் வரலாறு

சேந்தனைப் பற்றி முறையான வரலாறு எழுதி வைக்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டோம். இருப்பினும், திவாகரர் எழுதி வைத்துள்ள குறிப்புக்களைக் கொண்டு அவனது வரலாற்றை ஓரளவு உருவாக்கிக் கொண்டோம். ஆனல் திவாகரர் வரலாற்றைப் பொறுத்தமட்டும் நமக்கு ஏமாற்றமே காத்துக் கிடக்கிறது. அவரைப் பற்றி ஓரளவாயினும் அறிந்துகொள்வதற்குக்கூட, அவர் நூலோ அல்லது பிறர் நூற்களோ துணை புரியவில்லை. சில நூலாசிரியர்கள் நூலுக்கு முன்னுல் உள்ள பாயிரப் பகுதியில் தம்மைப் பற்றி ஒரு சிறிது உரைத்திருப்பார்கள்; அல்லது நூலாசிரியரைப் பற்றிப் பிறராயினும் பாயிரப்பகுதியில் புகழ்ந்து எழுதியிருப்பார்கள். இந்த இரண்டு நிலைகளுமே திவாகர நிகண்டில் காணப்படவில்லை. ஒருவேளை இருந்து அழிந்துவிட்டிருக்குமோ? இந்நிலை நமது தீப்பேறே. இருப்பினும், திவாகரரைப் பற்றிப் பின்வருமாறு சிறுகுறிப்பு செப்பனிட்டுக் கொள்ளலாம் :-

திவாகரர் முதலில் இல்லறம் நடாத்திப் பின்னர்த் துறவு பூண்ட ஒரு முனிவர். திவாகர முனிவர் அருளிச்செய்த சேந்தன் திவாகரம் என நூலுக்கு முன்னால் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு இது புலனுகும். இவர் தஞ்சை மாவட்டத்துச் சேந்தனால் ஆதரிக்கப் பெற்றவர்; அதனுல் இவரும் அந்த வட்டத்தினராக இருக்கலாம். இவர் நன்றி மறவாத பண்பினர் என்பது, தம் நூலின் தொகுதி தோறும் தம்மை ஆதரித்த சேந்தனைப் புகழ்ந்து பாடியிருப்பதன் வாயிலாகப் புலப்படும்.

திவாகர நூலுக்கு முன்னுல் காப்பு என்னும் தலைப்பில் ஒரே ஒரு செய்யுள் மட்டும் உள்ளது. நூலாசிரியர்கள் தம்மையும்-நூலையும் காக்குமாறு பிள்ளையாரையோ அல்லது பிற கடவுளரையோ வேண்டிக் காப்புச் செய்யுள் பாடுவது மரபு. திவாகரர் பிள்ளையாரை வேண்டிக்கொண்டுள்ளார். அந்தக் காப்புச் செய்யுள் வருமாறு:

“தந்திமுகத்து எந்தை சதங்கைப் பதம்போற்றிச்
சிந்தை விளக்காம் திவாகரத்துள்-வந்த
தொகுதியொரு பன்னிரண்டும் சோராமல் நேரே
பகுதியுற மனமே பற்று.”

இப்பாடலிலுள்ள 'தந்தி முகத்து எந்தை' என்பதற்கு, யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள் என்பது பொருள். இவ்வாறு பிள்ளையார் வணக்கம் பாடியிருப்பதால், திவாகரர் சைவ சமயத்தவர் என்பது எளிதில் விளங்கும். மேலும், நிகண்டின் முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியில் சிவன் பெயர்களையே இவர் முதலில் தொடங்கியுள்ளார். இதனாலும் இவர் சைவர் என்பது பெறப்படும். சமண சமயத்தவராகிய மண்டல புருடர் தமது சூடாமணி நிகண்டின் தொடக்கத்தில், சமணக் கடவுளாகிய அருகன் பெயர்களையே முதலில் தொடங்கியிருப்பது ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும். அன்றியும், சைவ சமயத்தானாகிய சேந்தனால் ஆதரிக்கப்பெற்று, அவன் பெயரையும் தம் நூலுக்கு இட்ட திவாகரரும் சைவ சமயத்தவராகத்தானே இருந்திருக்கக்கூடும். திவாகரர் சோழக் குடும்பத்தின் வழிவந்தவர் என்ற ஒரு கருத்து சிலரிடையே நிலவுவது உண்டு. அத்தகையவர் இந்தத் திவாகரர் அல்லர்; அவர் ஆதி திவாகரம் எழுதிய திவாகரராவார் என்ற கருத்து வேற்றுமையும் உண்டு. இவ்விரண்டனுள் பின் கருத்தே பொருத்தமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இந்தத் திவாகரர் சோழர் குடிவழியினராயிருந்திருந்தால் சேந்தனால் ஆதரிக்கப்பட்டிருக்கவேண்டியதில்லையன்றோ?

அடுத்துப் பேசப்போகும் பிங்கல நிகண்டின் ஆசிரியராகிய பிங்கலர் என்பவர் திவாகரரின் மகவார் என்பதாகப் பிங்கல நிகண்டின் பாயிரத்தில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதுகுறித்து ஆங்கு ஆராய்வாம்.

திவாகரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்பது முன்னரே சொல்லப்பட்டுள்ளது. இக் குறிப்புக்களைத் தவிர, திவாகரரைப் பற்றி வேறொன்றும் தெரிந்திலது. இனி ஏதேனும் கிடைத்தால் உண்டு.

நூலின் காலம்

சேந்தனும் திவாகரரும் எட்டாம் நூற்றாண்டினராதலின், சேந்தன் திவாகரம் எட்டாம் நூற்றாண்டு நூல் என்பது இனிது பெறப்படும்.

நூலின் அமைப்பு

திவாகரம் பன்னிரண்டு தொகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன :-

  1. தெய்வப் பெயர்த் தொகுதி
  2. மக்கள் பெயர்த் தொகுதி
  3. விலங்கின் பெயர்த் தொகுதி
  4. மரப் பெயர்த் தொகுதி
  5. இடப் பெயர்த் தொகுதி
  6. பல் பொருள் பெயர்த் தொகுதி
  7. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
  8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
  9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி
  10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
  11. ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதி
  12. பல்பொருள் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி

என்பனவாம். தெய்வப் பெயர்த் தொகுதியில் பல்வகைத் தெய்வங்களின் பற்பல பெயர்கள் கூறப்பட்டிருக்கும். இது போலவே, மற்ற தொகுதிகளிலும், அவ்வப் பெயர்கள் கூறப்பட்டிருக்கும். தொகுதி என்றாலும், நிகண்டு என்றாலும், கூட்டம் என்றாலும் பொருள் (அர்த்தம்) ஒன்றே. திவாகரத்தில் உள்ள தொகுதி அமைப்பு முறையே, பின் வந்த நிகண்டுகளின் அமைப்புக்கும் வழிகாட்டியாகும்.

மேற்கூறிய பன்னிரண்டு தொகுதிகளையும் மூன்று வகைக்குள்ளும் அடக்கிவிடலாம். அதாவது. முதல் பத்துத் தொகுதிகளையும் சேர்த்து ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி என்னும் தலைப்புக்குள் அடக்கிவிடலாம். ஏனெனில், இந்தப் பத்தும் ஒரே முறையைப் பின்பற்றியவையாகும். அதாவது, தெய்வம் முதல் ஒலி யீறாக உள்ள பத்துப் பொருள்களுள் ஒவ்வொரு பொருளையும் குறிக்கும் பல பெயர்களும் (Class vocabularies) தொகுத்துக் கூறப்பட்டிருப்பதால்-எடுத்துக் காட்டாக, சிவன் என்னும் தெய்வத்திற்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களும் கூறப்பட்டிருப்பதால்-இந்தப் பத்துத் தொகுதிகளையும் ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி என்னும் ஒரே தலைப்பால் குறிப்பிடலாமன்றோ அடுத்துப் பதினொன்றாவது தொகுதியை ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என அதே தலைப்பாலேயே குறிப்பிடலாம். இப்பகுதியில்தான், நாம் இப்போது கையாண்டு வரும் அகராதிப் பயன் அமைந்திருக்கிறது. அதாவது: (Homonyms) ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களும் (அணி என்றால் அழகு, ஆபரணம், அணிதல், வரிசை என்பது போல) கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக உள்ள பன்னிரண்டாம் தொகுதியையும் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் அதே தலைப்பாலேயே குறிப்பிடலாம். இப்பகுதியில், முக்காலம் என்றால் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது போல--நால் நிலம் என்றால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பது போல--ஐம் பொறி, என்றால் மெய், வாய், கண், முக்கு, செவி என்பது போலக் குழுப் பெயர்கட்கு (Group-names) விளக்கம் கொடுக்கப்படும். நானிலம் என்னும் ஒரு பெயர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கும் என்பதுபோல, இத்தொகுதி அமைக்கப்பட்டிருப்பதால் இதற்குப் 'பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி' என்னும் பெயர் கொடுக்கப்பட்டது பொருத்தம் தானே!

எனவே, திவாகரத்தின் பன்னிரண்டு தொகுதிகளையும் (1) ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி, (2) ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதி, (3) பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூவகைக்குள் அடக்கி விடலாம். இங்கே இம்மூவகை அமைப்புக்களைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதற்குத் தக்க காரணம் உண்டு. திவாகரத்தின் தொகுதி அமைப்புமுறையே பின்வந்த நிகண்டுகளின் அமைப்புக்கு வழிகாட்டி என்று முன்னரே கண்டோம். அவ்வண்ணமே-திவாகரத்தைப் போலவே பன்னிரண்டு தொகுதிகளாகச் சில நிகண்டுகள் அமைந்துள்ளன. இப்பன்னிரண்டு தொகுதிகளையும் மூவகைத் தொகுதிகளுள் நாம் அடக்கியிருக்கிறோம். இம்மூன்றனுள் முதல் வகையைப் பற்றி மட்டும் (அதாவது முதல் பத்துத் தொகுதிகளைப் பற்றி மட்டும்) சில நிகண்டுகள் பேசுகின்றன. வேறு சில நிகண்டுகளோ, இரண்டாம் வகையைப் பற்றி மட்டும் (அதாவது பதினொன்றாவது தொகுதியைப் பற்றி மட்டும்) பேசுகின்றன. இன்னும் சில நிகண்டுகளோ, மூன்றாம் வகையைப் பற்றி மட்டும் (அதாவது பன்னிரண்டாவது தொகுதியைப் பற்றி மட்டும்) பேசுகின்றன. அந்த விவரங்கள் எல்லாம், பின்னர் அந்தந்த நிகண்டுகளைப் பற்றித் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விளக்கும்போது குறிப்பிடப் 

படும். அந்த வசதிக்காகவே இங்கே இவ்வளவு அடிப்படை பொதுவாகப் போடவேண்டியதாயிற்று. இனி அங்கங்கே அந்தந்த வகையை மட்டும் குறிப்பிட்டுச் சென்றுவிடலாமன்றோ? இனி மீண்டும் திவாகர நிகண்டிற்கு வருவோம்:

திவாகரத்தின் பன்னிரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறைய 9500 சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வளவு சொல்செல்வங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் திவாகரப் பாடல்கள் தொல்காப்பியத்தைப் போல் சூத்திர (நூற்பா) வகையைச் சார்ந்தவையாகும். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பெற்ற தொல்காப்பிய நூலில் உள்ள நூற்பாக்கள் (சூத்திரங்கள்) சிலவும் இந்த நிகண்டுக்குள் அப்படியே சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இஃது ஒரு வகை மரபு. அதாவது, ஒரு நூலாசிரியர், முன்னோரையும் அவர்தம் நூலையும் மதித்துப் போற்றுவதற்கு அடையாளமாக, அம் முன்னோரது நூலில் உள்ள சில செய்யுட்களை அப்படியே எடுத்துத் தம் நூலில் சேர்த்துக் கொள்வது அக்கால வழக்கம். இது திருட்டு ஆகாது. அவ்வண்ணம் திவாகரத்திலுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் இரண்டு வருமாறு:—

“நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர்.”

“ஒருநெறி யன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரினது படல மாகும்.”

மேலுள்ள நூற்பாக்கள் இரண்டும் தொல்காப்பியம்—பொருளதிகாரம்—செய்யுளியலில் உள்ளன. 

இவையே திவாகரத்தின் பத்தாம் தொகுதியாகிய ஒலி பற்றிய பெயர்த் தொகுதியிலும் உள்ளன.

இத் திவாகரம் கி.பி. 1835-ஆம் ஆண்டில் தாண்டவராய முதலியார் என்பவரால் ஓலைச் சுவடியிலிருந்து முதல் முதலாக அச்சிடப்பட்டது. இப்பதிப்பில் முதல் பத்துத் தொகுதிகள் மட்டுமே உள்ளன; இறுதித் தொகுதிகள் இரண்டும் காணப்படவில்லை. மேலும் இப்பதிப்பில் இடைச்செருகல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு நூலைப் பெயர்த்தெழுதுபவரோ அல்லது அச்சிடுபவரோ, நூலின் இடையிடையே தாமாகச் சிலவற்றைச் செருகிவிடுவதற்குத்தான் இடைச்செருகல் என்று பெயராம். தாண்டவராயர் தம் கைவண்ணம் சிறிது காட்டியிருப்பார் போலும்!

தாண்டவராய முதலியாருக்குப் பின்னர் மேலும் சிலர் திவாகரத்தைப் பதிப்பித்தனர். அப் பதிப்புக்களுள் பதினொன்றாவது தொகுதியின் அகரமுறைச் சீர்திருத்தப் பதிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து ஓரளவு விளக்கினால்தான் புரியும்.

இப்போது நமக்கு ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையென்றால் உடனே அகராதியை எடுத்துப் புரட்டுகிறோம். இக்கால அகராதிகளில் எழுத்துக்களின் வரிசை முறையில் சொற்கள் அமைக்கப்பட்டிருப்பதால் எந்தச் சொல்லையும் உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் பழைய நிகண்டுகளில் இப்படியில்லாததால் குறித்த சொல்லை உடனே தேடி எடுக்க முடியவில்லை. அதனால் திவாகரத்தில் சொல்லுக்குப் பொருள்கூறும் பகுதியாகிய பதினொன்றாவது தொகுதியில் உள்ள சொற்களை 

அகர வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு அக்காலத்தவர் சிலர் பயன்படுத்தி வந்தனர். (இது குறித்து முன்பு ஓரிடத்திலும் சொல்லப்பட்டுள்ளது.) அச்சு வசதி ஏற்பட்ட பின்னர் அகர வரிசையில் சீர்திருத்திப் பதிப்பிக்கவும் செய்தனர். ‘அகர முறைச் சீர்திருத்தப் பதிப்பு’ என்றால் இதுதான். அண்மைக் காலத்தில் அச்சிடப்பட்ட திவாகரப் பதிப்புகளில்கூட, பதினொன்றாவது தொகுதி மட்டும் அகர வரிசையில் உள்ளது. ஆனால், இந்த அகர வரிசை திவாகரர் செய்த முறையன்று; பிற்காலத்தவர் செய்து கொண்ட சீர்திருத்தமே—என்பது நினைவிருக்க வேண்டும்.

அகர வரிசைப்படுத்திய பிற்காலத்தவர்கள் பதினொன்றாவது தொகுதியை ‘ஆதியிற் பொருள்’, ‘அந்தத்துப் பொருள்’ என இரு பிரிவுகளாக அமைத்துள்ளனர். ‘ஆதியிற் பொருள்’ என்றால் என்ன என்று விளக்குவதற்கு, ஆதியிற் பொருள் பிரிவிலுள்ள முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் எடுத்துக் கொள்வோம்:-

[அங்கதம் என்னும் பெயர்]

“அங்கதம் தோளணி அரவு மாகும்.”

இது முதல் நூற்பா.

[வேளாண்மை என்னும் பெயர்]

“வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும்.”

இஃது இறுதி நூற்பா.

அங்கதம் என்னும் சொல்லுக்கு, தோள் அணி, அரவு என்னும் இரண்டு பொருளாம். வேளாண்மை 

என்னும் சொல்லுக்கு, உபகாரம், ஈகை என்னும் இரண்டு பொருளாம். இவ்வாறு அங்கதம், வேளாண்மை என்னும் சொற்களைப் பாடலின் முதலில் ஆதியில்) நிறுத்திப் பின்னர்ப் பொருள் கூறுவதால் இந்தப் பிரிவுக்கு ஆதியிற் பொருள் என்று பெயர் சூட்டப்பட்டது. இனி, ‘அந்தத்துப் பொருள்’ என்றால் என்ன என்று விளக்குவதற்கு அந்தத்துப் பொருள் பிரிவிலுள்ள முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் எடுத்துக் கொள்வோம்:— .

[அணங்கு என்னும் பெயர்]

“தெய்வமும் தெய்வத் துவமை மாதரும்
மையலும் நோயும் வருத்தமும் கொலையும்
ஐயமின் றுரைக்கும் அணங்கு என்கிளவி.”

இது முதல் நூற்பா.

[வையம் என்னும் பெயர்]

“சிவிகையும் ஆனேறும் சகடமும் தேரும்
அவனியும் வையம் எனப்பெய ராகும்.”

இஃது இறுதி நூற்பா.

அணங்கு என்னும் சொல்லுக்கு, தெய்வம், தெய்வத்துவமை மாதர் (பெண் தெய்வம் போன்ற பெண்), மையல், நோய், வருத்தம், கொலை என்னும் ஆறு பொருளாம். வையம் என்னும் சொல்லுக்கு, சிவிகை (பல்லக்கு), ஆனேறு (காளை), சகடம், தேர், அவனி (உலகம்) என்னும் ஐந்து பொருளாம். இவ்வாறு அணங்கு, வையம் என்னும் சொற்களைப் பாடலின் அந்தத்தில் (இறுதியில்) வைத்து முன்னாலேயே பொருள் கூறியிருப்பதால்,

இந்தப் பிரிவுக்கு அந்தத்துப் பொருள் என்று பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாறு அகராதி முறையில் சீர்திருத்திக் கொண்டது எளிதில் பொருள் காண்பதற்கு உதவும். ஆனால் திவாகரரின் அமைப்பு முறையிலே, மிக்க மதிப்பும் பயனும் உள்ள பொருள் முன்னாலும், அதற்கு அடுத்தது அதன் பின்னாலும், அதற்கு அடுத்தது அதன் பின்னாலுமாக வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். சிலவிடங்களில் எதுகையும் இடம்பெற்றிருக்கும்.

திவாகரத்தின் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும், இத்தனையாவது தொகுதியாகிய இன்ன பெயர்த் தொகுதி முற்றிற்று என்றும், நூலின் இறுதியில் “பன்னிரு தொகுதியும் பண்பொடு முற்றின” என்றும் திவாகரராலேயே அறுதி செய்யப்பட்டிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாம்.

நூலின் உட்பொருள்

திவாகர நிகண்டு, ஏறக்குறைய உலகம் முழுதும் அடங்கியுள்ள ஒரு பொருட்காட்சி நிலையமாகும். எனவே, நாம் அதன் உள்புக்கு ஒரு சில பொருட்களேயாயினும் காணவேண்டும். திவாகரம், பிங்கலம், சூடாமணி முதலிய நிகண்டுகளுள் ஒரு நிகண்டினையாயினும் நாம் ஓரளவு ஆராய்ந்துவிட்டால், பின்னர் மற்ற நிகண்டுகளை மிக மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளலாம். எனவே மாதிரிக்காக, முதல் நிகண்டாகிய திவாகரத்தை ஓரளவு விரிவாகக் காண்பாம். 

1. தெய்வப் பெயர்த் தொகுதி

தெய்வப் பெயர்த் தொகுதியில், சிவன், திருமால், முருகன், அருகன், புத்தன் முதலிய பல்வகைத் தெய்வங்களின் பெயர்களைக் கூறுவதோடு ஆசிரியர் அமைந்துவிடவில்லை; மேலும் பலவகைத் தேவ இனங்கள், அரக்க இனம், நாள் (நட்சத்திரங்கள்), கோள் (கிரகங்கள்), விண், காற்று, தீ, நீர், பலவகைக் காலங்கள், மழை மேகம் இடி முதலியவற்றிற்குரிய பலவகையான பெயர்களையும் கூறியுள்ளார். மாதிரிக்காக முதல் பாட்டைப் பார்ப்போம். அதில் சிவனுக்குரிய அறுபத்துமூன்று பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அது வருமாறு :—

(சிவன் பெயர்)

“சங்கரன், இறையோன், காம தகனன்,
கங்கா தரனே, கறைமிடற் றண்ணல்,
கூற்றை உதைத்தோன், குன்ற வில்லீ,
ஏற்று வாகனன், திரியம்பகன், சோதி,
நக்கன், சடையோன், நாரி பாகன்,
முக்கண் பகவன், பசுபதி, பரமன்,
கொன்றை சூடி, கொலை மழுவாளி,
ஈமத் தாடி, பிஞ்ஞகன், பித்தன்,
ஆனை யுரித்தோன், அரன், சிவன், உருத்திரன்,
கால காலன், கபால மூர்த்தி,
நீல கண்டன், நீறணி கடவுள்,
அரவா பரணன், ஆரழ லாடி,
பிறையது சூடி, பெருமான், உமாபதி,
அழலது வேத்தி, அமலன், ஆனந்தன்,
பரசு பாணி, சுடலை யாடி,
மானிடம் ஏந்தி, மறைமுதல், யோகி,
புலித்தோ லுடையோன், புரமூன் றெரித்தோன்,



பினாக பாணி, பேயோ டாடி,
பூத நாதன், புணர் கங்காளன்,
ஞான மூர்த்தி, ஈசன், அனாதி,
ஐம்முகன், பகவன், ஆதி, பாண்டரங்கன்,
அந்தி வண்ணன், ஆலமர் கடவுள்,
நந்தி, நம்பன், நாதன், தற்பரன்,
கண்ணுதல் மூர்த்தி, கைலையாளி, என்று
எண்ணிய நாமம் இன்னமும் பலவே.”

சிவனுக்குக் கூறப்பட்டுள்ள பெயர்களைக் கூர்ந்து நோக்கின், திவாகரர் காலத்திலேயே தமிழ்நாட்டில் புராணக் கதைகள் மலிந்துவிட்டன என்பது புலனாகும். சங்க இலக்கியங்களில் இத்தகைய பெயர்களைக் காணமுடியாதன்றோ? இதனாலும் திவாகரம் சங்க காலத்தைச் சேர்ந்த நூலன்று என்பது புலனாகும்.

திவாகரத்தில் சமண சமயக் கடவுளாகிய அருகனுக்கு உரியனவாக நாற்பத்து மூன்று பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள், ஆதியங் கடவுள் பகவன், அறவாழி யந்தணன், எண் குணன், பூமிசை நடந்தோன் என்னும் பெயர்களும் அடங்கியுள்ளன. இப்பெயர்கள் அருகனுக்குரியனவாகச் சூடாமணி முதலிய நிகண்டுகளிலும் சொல்லப்பட்டுள்ளன. இவை, திருக்குறள் கடவுள் வாழ்த்திலுள்ள ஆதிபகவன், மலர் மிசை ஏகினான், அறவாழி யந்தணன், எண்குணத்தான் என்னும் பெயர்களோடு ஒத்துள்ளமை ஆராய்ச்சிக்குரியது. இதைக் கொண்டே, திருவள்ளுவர் ஒரு சமணர் என்று சிலர் கூறுகின்றனர் போலும் இருப்பினும், திருவள்ளுவரைச் சாதி சமயங்கட்கு அப்பாற்பட்டவராக மதிப்பிடுதலே எக்காலத்திற்கும் ஏற்புடைத்தாகுமன்றோ? 

‘எல்லாக் கலைகளையும் எழுதுவதற்கேற்ற சொல் வளம் தமிழில் இல்லை; ஆதலின் எல்லாப் பாடங்களையும் தமிழில் நடத்த முடியாது’ என்று பிதற்றும் கையாலாகாத கடைந்தெடுத்த சோம்பேறிகளுக்குத் தமிழ் நிகண்டுகள் பெரிய அறைகூவலாகும். தமிழில் எதையும் குறிப்பிடுவதற்குச் சொல்வளம் உண்டு. இன்னும் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் பல சொற்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, காற்று என்னும் பொருளின் தொடர்பாகமட்டும் இருபது சொற்கள் இருப்பதைக் கீழே காணலாம்:—

(காற்றின் பெயர்)

“வாதம், கூதிர், வங்கூழ், கால், வளி,
ஊதை, அனிலம், கோதை, நீழல்,
உலவை, மாருதம், மருத்து, புவனம்,
வாடை, ஒலியே, கூதை, உயிர்ப்பே,
வேற்றலம், கொண்டல், கோடை என்று இருபதும்
காற்றின் பெயரெனக் கருதல் வேண்டும்.”

இவையேயன்றிப் பின்னுள்ள பாடல்களில், வடந்தை, மலயக்கால், தென்கால், தென்றல், சூறை, சாரிகை, சுழற்காற்று முதலிய காற்றின் பல்வகைப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. அம்மம்மா! எத்துணை சொற்செல்வம்!

நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளவற்றோடு தமிழின் சொற்களஞ்சியம் முற்றும் நிறைந்துவிட்டதாகக் கொள்ளக்கூடாது. வழக்கத்திலுள்ள பதினாயிரக்கணக்கான எளிய சொற்கள் நிகண்டுகளில் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று நோக்குவாம்:–

“நென்னலும் நெருநலும் முன்னைநாள் ஆகும்.”



இது முதல் தொகுதியிலுள்ள ஒரு பாடல்தான். நென்னல் என்ற சொல்லும் நெருநல் என்ற சொல்லும் முன்நாள் அதாவது நேற்று என்பதைக் குறிக்கும்—என்பது இதன் பொருளாகும். இந்தப் பாடலில் ‘நேற்று’ என்னும் சொல் விடப்பட்டுள்ளதன்றோ? இவ்வாறு விடுபட்ட சொற்கள் மிகப் பலவாம். ஆதலின், நிகண்டுகளைக்கொண்டு தமிழ்மொழியின் சொற் கருவூலத்தை அளந்து எண்ணிக்கையிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது.

அடுத்து இன்னொரு கருத்து ஆராய்ச்சிக்குரியது. தமிழ்மக்கள் சித்திரைத் திங்களைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகின்றனர். தைத் திங்களைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடும் ஒருசார் மரபும் நிலவி வருகிறது. இப்பொழுதே போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த இரண்டு திங்களுக்கிடையே புதிதாக மற்றொரு திங்கள் (மாதம்) போட்டியாக முளைப்பதற்குத் திவாகரம் இடம்தரும்போல் தெரிகிறது. அது வருமாறு:–

தமிழ் வழக்குப்படி இரண்டு திங்கள்கள் கொண்டது ஒரு பருவமாகும். எனவே, பன்னிரண்டு திங்கள்கள் கொண்ட ஓர் ஆண்டினைப் பின்வருமாறு ஆறு பருவங்களாகப் பகுக்கலாம்:–

சித்திரை, வைகாசி—இளவேனில் பருவம்.
ஆனி, ஆடி—முதுவேனில் பருவம்.
ஆவணி, புரட்டாசி—கார்ப் பருவம்.
ஐப்பசி, கார்த்திகை—கூதிர்ப் பருவம்.
மார்கழி, தை—முன்பனிப் பருவம்,
மாசி, பங்குனி—பின்பனிப் பருவம்.

இதுபற்றிக் கூறும் திவாகரப் பாடல் வருமாறு:

(அறுவகைப் பருவம்)

“காரே, கூதிர், முன்பனி, பின்பனி,
சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு
இருமூன்று வகைய பருவம் அவைதாம்
ஆவணி முதலா இரண் டிரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே.”

இப்பாடல் கார் முதலிய ஆறு பருவங்களையும் முதலில் குறிப்பிட்டு, பிறகு இப்பருவங்கட்கு உரியனவாக ஆவணி முதலாக இரண்டிரண்டு திங்கள்களாக எண்ணிச் சேர்த்துக் கொள்க—என்று கூறுகிறது. இங்கே கார்ப்பருவமாகிய ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது. சூடாமணி முதலிய நிகண்டுகளிலும் இவ்வாறே ஆவணி தொடங்கப்பட்டுள்ளது.

“பரவிய காரே கூதிர்
     முன் பினிற் பனிக ளோடு
விரவிய இளைய வேனில்
     விரைந்திடு முதிய வேனில்
மருவும் ஆவணியே ஆதி
     மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து
     பார்த்திடின் வாய்த்த பேராம்.”

என்பது சூடாமணி நிகண்டுப் பாடல்.

இவற்றில் மட்டுமா? மூவாயிரம் ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்திலும்,

“காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்”

எனக் கார்ப்பருவமே முன்னர்த் தொடங்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் எழுந்த அகப்பொருள் விளக்கம் என்னும் நூலிலுங்கூட, 

“காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே”

எனக் கார்ப் பருவமே முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆவணியில் தொடங்குவதில் ஏதோ புத்தாண்டுப் பொருத்தம் இருக்கவேண்டும்! இதுகுறித்துத் தனியாக விரிவாக ஆராயவேண்டுமாதலின், ஒரு புதிய எண்ணத்தைக் கிளறிவிடும் அளவுக்கு மட்டும் ஈண்டு ஒரு சிறிது நோக்குவாம்:-

இப்போது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகின்ற தென்பாண்டி நாட்டில் சிலவிடங்களில் ஆவணித் திங்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் போற்றப்படுகிறதாம். பழைய தமிழ்ச் சேர நாடாகிய மலையாளத்தின் சில பகுதிகளிலுங்கூட ஆவணியே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறதாம். மலையாளப் பெருமக்கள் மிகப்பெரிய நாட்டு விழாவாகக் கொண்டாடும் ‘ஓணம் பண்டிகை’ ஆவணித் தொடக்கத்திலே நிகழ்கிறது என்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாற்று.

எனவே, ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக ஆவணித் திங்கள் ஆண்டின் தொடக்கமாகப் போற்.றிக் கொண்டாடப்பட்டுள்ளது என உய்த்துணரலாம். கொடிய கோடை நீங்கிக் குளிர்ந்த கார்காலம் தொடங்கும் திங்களாதலின் ஆவணி அவ்வாறு போற்றப்பட்டதுபோலும்!

மற்றும், ஆவணித் திங்களை ஆண்டின் தொடக்கமாகக் கூறுவதில் தக்க பொருத்தம் இல்லாமற் போகவில்லை. மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம். 

கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு வீடு (இராசி) களிலும் ஞாயிறு (சூரியன்) தங்குவதுதான் முறையே சித்திரை முதலிய பன்னிரண்டு திங்கள்கள் (மாதங்கள்) ஆகும். ஞாயிறு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு திங்கள் காலம் இருப்பான். எனவே, பன்னிரண்டு வீடுகட்கும் பன்னிரண்டு திங்கள்கள் ஆகும். இன்னுங் கேட்டால், தமிழர்கள் சித்திரை, வைகாசி.....மாசி, பங்குனி எனப் பன்னிரு திங்கள்களையும் பெயர் சொல்லி அழைப்பதுபோல, மலையாளிகள் மேடம், இடபம்......கும்பம், மீனம் எனவே பன்னிரு திங்கள்களையும் பெயர் சொல்லி அழைக்கின்றனர். இம்முறைப்படி நோக்கின், ஞாயிறு மேடம் என்னும் வீட்டில் இருப்பது, சித்திரைத் திங்கள் என்பதும், சிம்மம் என்னும் வீட்டில் இருப்பது ஆவணித் திங்கள் என்பதும் புலனாகும். பன்னிரு வீடுகளுள் சிம்மம் என்னும் வீடு ஞாயிற்றின் ஆட்சிக்குரிய சொந்த வீடு என்பதும், இரவல் வீடுகளாகிய மற்ற பதினொரு வீடுகளுள் மேடம் என்னும் வீட்டில் வந்திருக்கும்போது ஞாயிறு ‘உச்சம்’ (உயர் வன்மை) பெற்று விடுகிறான் என்பதும் கணிப் புக்கலையின் (சோதிடக் கலையின்) முடிபு. எனவே, ஞாயிறு ‘உச்சம்’ பெற்றிருக்கும் மேட வீட்டுத் திங்களாகிய சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டது போலவே, ஞாயிறு ‘ஆட்சி’ பெற்றிருக்கும் சொந்த வீடாகிய சிம்மம் என்னும் ஆவணித் திங்களை அந்தக் காலத்தார் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டதில் தவறொன்றும் இல்லை. மற்றும், சிம்ம வீட்டுத் தொடர்புடைய மகம் என்னும் விண்மீன் ஞாயிற்றுக்கு மிகவும் உகந்ததாம். இவ்வாராய்ச்சியின்படி மேலும் சொல்லப் போனால், சித்திரையினும் ஆவணியை 

ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வதே சாலவும் பொருந்தும் என்னும் கருத்து புலனாகலாம்.

இறுதியாக மழையைப் பற்றிய சொற்செல்வங்களைக் குறிப்பிடுவதோடு இந்த முதல் தொகுதியை முடித்துக் கொள்ளலாம். மழையின் பல்வகை நிலைகளையும் கூறும் பாடல்களைப் படிக்கப் படிக்க மனத்தில் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே பெருகுகின்றன. அப்பாடல்கள் வருமாறு:–

(மழை தூவுதல்)

“சீகரம், பிதிரே, சிதர், அரி, சிகரம்,
தூவல் என்றிவை துவலை யாகும்.”

(துளி போடுதல்)

“துளி, பெயல், ஆலி, உறைதுளி யாகும்.”

(கட்டி கட்டியாய்ப் பெய்தல்)

“ஆலி, ஆலங் கட்டி யாகும்.”

(பெருமழை பெய்தல்)

“ஆசாரம் என்பது பெருமழை யாகும்.”

(விடாமழை பெய்தல்)

“சோனையும், பனித்தலும், விடாது சொரிதல்.”

(மழைபெய்து விடுதல்)

“தலையல் என்பது மழைபெய்து விடுதல்.”

இச்சொல்வளங்கள் உண்மையிலேயே தமிழுக்குச் சிறப்பு அளிப்பனவன்றோ? இவற்றையெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தலாமே! இடைக்காலத்தில், மாதம்,என்னும் வடசொல் தமிழ்மொழியில் புகுந்துவிட்டது. அதைக் குறிக்கும் திங்கள் என்னும் இனிய செந்தமிழ்ச் சொல், 

“ஆவணி முதலா இரண்டிரண் டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே.”

என்னும் திவாகரப் பாடலில் ஆளப்பட்டுள்ளது. “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று சங்க இலக்கியமாகிய குறுந்தொகையிலும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. எனவே நிகண்டுகளிலுள்ள தமிழ்ச் சொற்களைத் துருவி எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

தெய்வப் பெயர்த் தொகுதியில், நாள், கோள், விண், காற்று, தீ, நீர், காலங்கள், மழை மின்னல் இடி முதலியவற்றையும் கூறியிருப்பதிலிருந்து இவையும் தெய்வச் சார்புடையவை என்று பழங்கால மக்கள் நம்பி வழிபட்டனர் என்பது புலனாகும். 

2. மக்கள் பெயர்த் தொகுதி

மக்களினத்தில் சாதி சமயத்துறையிலும் அரசியல் துறையிலும் தொழில் துறையிலும் தகுதியளவிலும் வாழும் இடத்தைப்பொறுத்தும் எத்துணைப் பிரிவுகள் உண்டோ அத்துணைப் பிரிவுகளுக்கும் உரிய பெயர்கள் ஏறக்குறைய மக்கள் பெயர்த் தொகுதியில் கூறப்பட்டுள்ளன. ஆண்பாற் பெயர்களோடு பெண்பாற் பெயர்களும் பேசப்பட்டுள்ளன. இவற்றோடு, மக்களது உடல், உடலுறுப்புக்கள், உயிர், ஆகியவற்றின் பெயர்களும் உரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு சில பெயர்களைக் காண்பாம்:–

பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு இக் காலத்தில் ‘உபாத்தியாயர்’ என்று பெயராம். இது வடமொழிப் பெயர். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல்—(இந்த ஒப்புமை சொல்லக்கூடாதுதான்; என்ன செய்வது)—இந்த உபாத்தியாயர் என்னும் பெயரும் முழுதாய் நிலைக்காமல் ‘வாத்தியார்’ ஆகி, பின்னர் ‘வாத்தி’ என வந்து அப்படியே ஆணி அடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டது. இனி எவராலும் இந்தப் பெயரை இம்மியும் அசைக்க முடியாதுபோல் தெரிகிறது. ஆனால் அந்தக்காலத்தில் ‘கணக்காயர்’ என்னும் கருத்துச் செறிந்த பெயரால் ஆசிரியர் அழைக்கப்பட்டார்.

“கணக்காயர் நூல் உரைப்போர்.”

என்பது திவாகர நூற்பா. கணக்கு என்றால் நூல் (புத்தகம்) என்று பொருளாம். எழுதப்படிக்கத் தெரியா

மல், பேசமட்டும் தெரிந்திருந்த மிகமிகப் பழங்காலத்து மக்கள், கொடுக்கல் வாங்கல் கணக்குகளைக் குறிக்கும் முறையில் முதல்முதல் கோடுகிழிக்கத் தொடங்கினர். இதுதான் அவர்கள் செய்த முதல் வரிவடிவ (எழுத்து உருவத்தில் உள்ள) மொழியாகும். இப்போதுங்கூட எழுதப்படிக்கத் தெரியாத நாட்டுப்புறத்துப் பெண்டிர், கொடுக்கல் வாங்கல்களைக் குறிப்பதற்காகக் கோடுகள் போட்டு வைக்கின்றனரல்லவா? எனவே, எழுதிவைக்கவேண்டிய இன்றியமையாமை இந்தக் கணக்கிலிருந்துதான் தொடங்கியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். இவ்வாறு தொடங்கிய கணக்குச் சுவடி பிறகு கணக்கு நூலாயிற்று. கல்வி கற்பதே கணக்குத் தெரிந்து கொள்வதற்காகத்தான் என்ற நிலை அன்று இருந்தது. இக்காலத்திலும் நாட்டுப்புற மக்கள் தம்பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு உரிய காரணமாக, ‘நாலு கணக்குத் தெரிந்து கொண்டால்தானே உலகத்தில் பிழைக்க முடியும்’ என்று கூறுவதைக் கேட்கலாம்.

இதற்கேற்பவே அக்காலத்தில் தமிழ்க்கணக்கு நூற்கள் மிகப் பெருகிப் பரந்துபட்டிருந்தன—இன்று இவை இருக்குமிடம் தெரியவில்லையே; இதை நினைத்து இப்போது பெருமூச்செறிந்து என்ன பயன்! – எள் நெய்யைக் குறிக்கும் எண்ணெய் என்னும் பெயர் பிறகு எல்லாவகையான எண்ணெய்களுக்கும் உரித்தானதைப்போல, இந்தக் கணக்கு என்னும் பெயரும் நாளடைவில் எல்லாவகையான நூற்களுக்கும் உரித்தாயிற்று. சங்க இலக்கியங்களைக்கூட மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்று குறிப்பிடுகிறோமல்லவா? எனவே, கணக்கு என்றால் பொதுவாகப் புத்தகம் என்று பொருளாம். ஆகவே, கணக்கை ஆய்ந்து கற்பிக்கும் 

ஆசிரியர் ‘கணக்காயர்’ என்று அழைக்கப்பட்டது பொருத்தம்தானே! இப்படி எத்தனையோ செந்தழிழ்ச் செல்வங்களை இழந்துவிட்டு இன்னொரு மொழியிலிருந்து சொற்களை இரவல் வாங்கிக்கொண்டிருக்கிற நாம் மிகவும் இரங்கத்தக்கவரல்லவா! இனி மற்றும் சில செல்வங்களைக் காண்பாம்:-

(பெருமையில் சிறந்தோன் பெயர்)

“அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும்
செம்மலும் பெருமையிற் சிறந்தோன் பெயரே.”

அண்ணல், குரிசில், ஏந்தல், தோன்றல், செம்மல் என்னும் சொற்கள் சிறந்த பெருமையுடையவரைக் குறிக்குமாம். எவ்வளவு இனிய பெயர்கள்!

மக்கள் பேச்சுவழக்கில் ‘உலகம்’ என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. ‘இப்படி நடந்தால் உலகம் என்ன நினைக்கும்?’ ‘உலகம் என்ன பேசும்?’ ‘உலகத்திற்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்’—என்னும் பேச்சு வழக்குத் தொடர்களில் உள்ள உலகம் என்னும்சொல் உலகத்திலுள்ள தாழ்ந்த குணமுடையோரைக் குறிக்கவில்லை. உயர்ந்த பண்பாளரையே குறிக்கும். ஆம்! உயர்ந்தவர்க்கே உலகம் உரியது. அவராலேயே உலகம் நன்கு இயங்குகிறது. இக்கருத்தினை,

“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.”

என்னும் திவாகர நூற்பா நன்கு புலனாக்கும்.

அடுத்து, பொதுவாக அரசர்களையும் சிறப்பாகச் சேர சோழ பாண்டிய மன்னர்களையும் குறிக்கும் பெயர்களைப் பற்றிய பகுதிகளைப் பார்ப்போம்:

(அரசன் பெயர்)

“புரவலன், கொற்றவன், பெருமான், காவலன்,
அரையன், ஏந்தல், கோ(வே), குரிசில்,
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன்,
நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திவன்,
இறைவன், அண்ணல் எனப் பதினெட்டும்
அரசன் தொல்பெயர் ஆகும் என்ப.”

(சேரன் பெயர்)

“பூழியன், உதியன், கொங்கன், பொறையன்,
வானவன், குட்டுவன், வான வரம்பன்,
வில்லவன், குடநாடன், வஞ்சி வேந்தன்,
கொல்லிச் சிலம்பன், கோதை, கேரளன்,
போந்தின் கண்ணிக்கோன், பொருனைத் துறைவன்,
சேரலன், மலயமான், கோச்சேரன் பெயரே.”

(சோழன் பெயர்)

“சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன்,
பொன்த் துறைவனின், புலிக்கொடிப் புரவலன்,
நேரியன், ஆர்த்தார்க்கோன், நேரிறை, அபயன்,
நேரி வெற்பன், கோழி வேந்தன்,
சூரியன், புனனாடன் கோச்சோழன் பெயரே.”

(பாண்டியன் பெயர்)

“செழியன், தமிழ்நாடன், கூடற்கோ, தென்னவன்,
வழுதி, மீனவன், பஞ்சவன், மாறன்,
கெளரியன், வேம்பின் கண்ணிக்கோ, கைதவன்,
பொதியப் பொருப்பன், புனல்வையைத் துறைவன்,
குமரிச் சேர்ப்பன், கோப்பாண்டியனே.”

அம்மம்மா ! ஒவ்வொருவருக்கும் எத்தனை பெயர்கள்! இப்பாடல்களை எல்லாம் படித்து வைத்திருந்தால் 

எழுத்தாளரும் பேச்சாளரும் ஒரேபெயரையே திரும்பத்திரும்பப் பயன்படுத்தாமல், பல்வகைப் பெயர்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். அதனால் படிப்பவர்கட்கும் சுவை மிகும். இஃது ஒரு பெரிய நன்மையல்லவா?

ஈண்டு, சேரரைப் பற்றிய பகுதி ஆராய்ச்சிக்குரியதாகும். பண்டைக்காலத்தில் தமிழ்நாடு, சேரநாடு–சோழநாடு-பாண்டிய நாடு-தொண்டை நாடு என்றெல்லாம் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை யாவரும் அறிவர். அப்பிரிவுகளுள் சேரநாடு எனப்படும் பகுதி இப்போது ஏங்கே? அதுதான் ‘கேரளா’ எனப்படும் மலையாள நாடாகும். தொடர்புடைய சிலர் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் இது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது கேர்ளா எனப்படும் மலையாள நாட்டில் பேசப்படும் மலையாள மொழிக்குக் கேரளம் என்ற பெயரும் உண்டு. இதற்குப் பெரிய ஆராய்ச்சிகூட வேண்டியதில்லை. ஒரு சிறிது உற்றுக்கேட்டாலே போதும்—தமிழ்மொழியும் கேரள மொழியும் ஒன்றே என்பது எளிதில் புரியும். இதற்குச் சான்றாக இரண்டு வாக்கியங்கள் வருமாறு:-

(1) “இது ஒரு பருத்திச்செடியுட படம். இதனுட பூவும் காயும் நோக்குக”. (பருத்திச்செடி என்னும் பாடத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

(2) “செந்நாயி ஆட்டின் குட்டியெ சாடி கொன்னு தின்னு”. (ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்னும் பாடத்தின் இறுதி வாக்கியம் இது.)

மேலுள்ள வாக்கியங்கள் இரண்டும் தமிழ்ப்பாடப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையல்ல; மலையாள 

மொழிப் பாடப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்போது தெரிந்து கொள்ளலாமே, தமிழும் மலையாளமும் ஒன்றே என்பதை! ஆனால் ‘செந்நாய்’ என்னும் தமிழ்ச்சொல் ‘செந்நாயி’ எனவும், ‘குட்டியை’ என்னும் தமிழ்ச்சொல் ‘குட்டியெ’ எனவும், ‘கொன்று தின்றது’ என்னும் தமிழ்ச்சொல் ‘கொன்னு தின்னு’ எனவும் கொச்சை உருவத்தில் மலையாள மொழியாகக் காட்சியளிக்கிறது. எனவே, பேச்சு இலத்தின் மொழிதான் பிரெஞ்சுமொழி என்று ஒரு கருத்து நிலவுவது போல, பேச்சுத் தமிழ்தான் மலையாளம் என்று ஒருவாறு கூறலாம். ஆகவே, தமிழ்நாட்டின் ஒரு பிரிவாக இருந்த சேரநாடுதான் இப்போது தனித்து இயங்கும் கேரளாவாகும்—என்று துணிந்து கூறலாம். இதற்குச் சான்று வேண்டுமா? சேரமன்னனின் பெயர்களைக் கூறும் திவாகரப் பாடலில் ‘கேரளன்’ என்று ஒரு பெயர் காணப்படுகிறதே—அஃது ஒன்றே போதாதா?

பாண்டியனைக் குறிக்கும் பெயர்ப் பட்டியலில் ‘தமிழ்நாடன்’ என்னும் ஒரு பெயர் காணப்படுகிறது. கழகம் வைத்துத் தமிழ் வளர்த்த சிறப்புரிமையால் பாண்டியன் தமிழ்நாடன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் போலும்.

இனி அரசரை விடுத்து மற்றையோரிடம் செல்வோம்:

வள்ளுவர் என்னும் சொல் இழிந்த குலத்தாரைக் குறிக்கும் என்னும் கொள்கையில் திருவள்ளுவரையே இழிகுலத்தவராகக் கொண்டவர்களும் உண்டு. ஆனால் வள்ளுவர் என்பவர் அரசரின் உள்ளுக்குள்ளான— 

உண்மையான காரியத் தலைவராவார் என்னும் உயர்ந்த பொருளை,

“வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னர்க்கு
உள்படு கருமத் தலைவர்க்கு ஒன்றும்.”

என்னும் நூற்பா உணர்த்துவது மனத்திற்கு நிறைவு அளிக்கின்றதல்லவா?

அடுத்து, ஆரியர் என்றால் உயர்ந்தவர்—மேலானவர் என்று மதிப்பாக எண்ணிக்கொண்டிருக்கும் நம் மனத்தை, ஆரியர் என்றால் விலங்குகள்போல் நாகரிகம் அற்றவர்—தாழ்ந்தவர்—மிலேச்சர் என்னும் பொருள் தருகிற

“மிலேச்சர் ஆரியர்”

என்னும் திவாகர நூற்பா குழப்புகிறதன்றோ?

பழங்காலத்தில் அரேபியா, ரோமாபுரி போன்ற அயலிடங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வதிந்தவர்களை ‘யவனர்’ என்றும் ‘சோனகர்’ என்றும் அக்காலத் தமிழ்மக்கள் அழைத்தனர் என்பதை,

“யவனர் சோனகர்.”

என்னும் நூற்பாவால் அறியலாம். இதிலிருந்து அக்காலத் தமிழகம் எவ்வளவோ சிறப்புற்றிருந்தது என்பது புலனாகும்.

அடுத்துக் கூறப்போகும் பெயர்கள் நுட்பமானவை. ஒருத்தி, கொண்ட கணவனை வஞ்சித்து அவனறியாமல் பிறன் ஒருவனோடு கூடிப்பெற்ற பிள்ளைக்குக் ‘குண்டகன்’ என்று பெயராம். (இந்தக்காலத்தில் குண்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இத் தகுதி

யினர்தானோ!) கைம்பெண் (விதவை) வயிற்றில் பிறந்த பிள்ளைக்குக் ‘கோளகன்’ என்று பெயராம். திருமணமாகாத கன்னி பெற்ற பிள்ளைக்குக் ‘கானினன்’ என்று பெயராம். இவற்றை,

“கொண்டோன் பிழைத்துப் பெறும்புதல்வன் குண்டகன்.”

“கோளில் கைம்மையில் பெறும் புதல்வன் கோளகன்.”

“கன்னியிற் பெறும் புதல்வன் கானினன் ஆகும்.”

என்னும் நூற்பாக்களால் அறியலாம். அன்றியும், பொதுவாக ஆணையும் பெண்ணையும் குறிக்கும் பெயர்களும் அறியத்தக்கனவாம் :

(ஆண் பெயர்)

“ஆடவர், மைந்தர், காளை, குமாரர்,
ஆடுஉ, மாந்தர், மகன், புமான், மணாளன்,
கூடிய ஆண் பெயர் ஆகக் கூறுவர்.”

(பெண் பெயர்)

“பேதை, அங்கனை, வனிதை, இளம்பிடி,
மாது, மடவாள், மகடூஉ, மங்கை,
மடந்தை, காரிகை, மானினி, மஞ்சனி,
மாயோள், ஆட்டி, பாவை, தெரிவை,
தையல், அரிவை, பெதும்பை, பிணா, மகள்,
நையு நுண்ணிடை நாரி என்றாங்கு
இருபதும் இரண்டும் பெண்பாற்கு எய்தும்.”

மேலே ஆணுக்கும் பெண்ணுக்கும் இத்தனை பெயர்கள் கூறியிருப்பதுகூட வியப்பன்று; ஆணின் மயிருக்கும் பெண்ணின் மயிருக்கும் வெவ்வேறு பெயர்கள் கூறியிருப்பதுதான் வியப்பு!

[ஆண்மயிரின் பெயர்]

“குஞ்சி, நவிர், உளை, குடுமி, தொங்கல்,
பங்கி, பித்தை, ஒரி, சிகை என்று
இங்கிவை எல்லாம் ஆண்மயிர் என்ப.”

[பெண்மயிரின் பெயர்]

“கோதை, நெடுமை, கூந்தல், ஐம்பால்,
ஓதி, கூழை, பரிசாரம், கதுப்பு,
கேசம், அளகம், குழல், குரல், சுரியல்,
பேசின் மராட்டம், பெண்மயிர் என்ப.”

ஆணுக்காகட்டும் — பெண்ணுக்காகட்டும் — தலை மயிர் என்றால் ஒன்றுதான். அதிலேபோய் வேறுபாடு காட்டியிருப்பதோடு, ஒவ்வொன்றிற்கும் பல பெயர்கள் கூறியிருப்பது வியப்பினும் வியப்பாயுளது! இன்னும் பலவகை உறுப்பின் பெயர்களும் இத் தொகுதியில் பட்டியல் செய்யப்பட்டுள்ளன. 

3. விலங்கின் பெயர்த் தொகுதி

புதிதாகச் சென்னைப்பட்டணம் செல்பவர்கள் ‘உயிர் காலேஜ்’, ‘செத்த காலேஜ்’ என்னும் இரண்டு இடங்களையும் மற்றும் பல இடங்களையும் பார்த்துவிட்டு வருவது வழக்கம். உயிர்காலேஜ், செத்த காலேஜ் என்பன பொருட்காட்சி நிலையங்களாகும். செத்த காலேஜ் என்னும் நிலையத்தில், செத்துப் போன உயிர்களின் உடலங்கள், கருங்கற் சிலைகள் முதலிய உயிரில்லாத பொருள்கள் இருக்கும். உயிர் காலேஜ் என்னும் இடத்தில், பல வகையான விலங்குகள், பறவைகள், நீர் வாழும் உயிர்கள் முதலிய உயிர்ப் பொருள்கள் இருக்கும். இது மிகவும் சிறிய நிலையம். ஆனால், திவாகர நிகண்டின் மூன்றாம் தொகுதியாகிய ‘விலங்கின் பெயர்த்தொகுதி’ என்னும் பகுதியோ, சென்னை உயிர்க் காட்சி நிலையத்தைவிடப் பற்பல மடங்கு பெரியதாகும்.

(1) மரஞ்செடி கொடி (தாவரம்), (2) நீர் வாழ்வன, (3) ஊர்வன, (4) பறவை, (5) விலங்கு, (6) மக்கள், (7) தேவர் என எழுவகை இனத்துப் பிறவிகளாக உயிர்களைப் பிரிப்பது ஒருசார் மரபு. இந்த ஏழனுள், தேவர் தெய்வப் பெயர்த் தொகுதியிலும், மக்கள் மக்கட் பெயர்த் தொகுதியிலும் சொல்லப்பட்டுள்ளனர். மரஞ்செடி கொடி என்னும் நிலையியல் (தாவரப்) பொருள் நான்காவது தொகுதியாகிய மரப்பெயர்த் தொகுதியில் சொல்லப்பட்டுள்ளது—(அதனை அடுத்தாற்போல் காணலாம்.) இந்தத் தேவர், மக்கள், 

மரஞ்செடிகொடி என்னும் மூன்றும் போக, மற்றைய விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன என்னும் நான்கு உயிர்ப்பொருள்களும் மூன்றாம் தொகுதியாகிய இந்த விலங்கின் பெயர்த்தொகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதியில் பலவகை விலங்குகள், பல வகைப் பறவைகள், பறப்பன என்ற முறையில் ஈ, கொசு, வண்டு, வௌவால் முதலியவைகள், பாம்பு, பல்லி, தேள், எறும்பு, கறையான், சிலந்தி, புழு முதலிய ஊர்ந்து செல்லும் உயிர்கள், மீன்வகைகள், சிப்பி, சங்கு, நண்டு, தவளை, அட்டை, ஆமை, முதலை, திமிங்கிலம் முதலிய நீர்வாழ் உயிர்கள், விலங்கு—பறவை முதலியவற்றின் உறுப்புக்கள் ஆகியவற்றிற்கு உரிய பெயர்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், மாதிரிக்காக விலங்கைப் பற்றிச் சிறிது சிறப்பாகக் காண்பாம் :

சிங்கம், புலி, யானை, குதிரை, மாடு, ஆடு, மான், முதலிய பலவகை விலங்குகளின் பெயர்களும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு விலங்குக்கும் எத்தனையோ பெயர்கள் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, யானைக்கு முப்பத்தெட்டுப் பெயர்களும் குதிரைக்கு முப்பது பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இப் பொதுப்பெயர்களோடு நின்றுவிடவில்லை. யானையென்றால், ஆண் யானைக்கு, வெவ்வேறு பெயர்களும், பெண் யானைக்கு வெவ்வேறு பெயர்களும், குட்டி யானைக்கு வெவ்வேறு பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை,

[ஆண்]

“மதகரி, தந்தி, வன்களிறு யானை.”



[பெண்]

“கரேணு, பிடி, பெண் யானைப் பெயரே.”

[கன்று]

“போதகம், துடியடி, கயம், முனி, கன்று ஆம்.”

என்னும் நூற்பாக்களால் அறியலாம். அடுத்து, குதிரையின் பெயர்களுள், பாண்டியர் குதிரைக்குக் ‘கனவட்டம்’ என்றும், சேரர் குதிரைக்குப் ‘பாடலம்’ என்றும், சோழர் குதிரைக்குக் ‘கோரம்’ என்றும், மற்ற சிறு குறுநில மன்னர்களுடைய குதிரைக்குக் ‘கந்துகம்’ என்றும் பெயராம். இவற்றை,

“கனவட்டம் என்பது வழுதி ஊர்மா,
பாடலம் என்பது சேரன் ஊர்மா,
கோரம் என்பது சோழன் ஊர்மா,
கந்துகம் குறுநில மன்னர் ஊர்மா.”

என்னும் பாடல் பகுதி உணர்த்தும். இந்தப் பெயர்ப் பிரிவினை சுவையாயுளதல்லவா!

மற்றும், மாடு, ஆடு, மான், பன்றி முதலிய விலங்குகளுக்கேகூட பல பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காக மாட்டை எடுத்துக்கொள்வோம்.

மாடு தொடர்பாக உள்ள ஓர் உண்மை சிலருக்குப் புரியாமல் குழப்பமாயிருக்கிறது. சிலர் அதில் கருத்துச் செலுத்தியேயிருக்கமாட்டார்கள். அது வருமாறு:—மாட்டில் எருமை என ஒரு பிரிவு உண்டு. அதில் ஆணும் உண்டு—பெண்ணும் உண்டு. ஆண் 

பெண் இரண்டிற்கும் பொதுவான பெயர் எருமை என்பதே. மாட்டில் இந்த எருமையல்லாத மற்றொரு பிரிவு உள்ளதல்லவா? எல்லோராலும் எருமையினும் சிறந்ததாகக் கொண்டாடப்படும் அந்தப் பிரிவு மாட்டுக்கு உரிய பெயர் என்ன? இது சிலருக்குப் புரியாத புதிராகும். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண் மாட்டிற்குப் ‘பசு’ என்றும், ஆண் மாட்டிற்குக் ‘காளை’ என்றும் சொல்கிறார்களே தவிர, அந்தப் பசு மாடு—காளைமாடு ஆகிய இரண்டிற்கும் பொதுவான பெயர் என்ன என்றால் சிலரால் சொல்ல முடியவில்லை. இன்னொரு பிரிவுக்கு எருமை என்பது பொதுப் பெயராயிருப்பதுபோல, இந்தப் பிரிவுக்குப் ‘பசு’ என்பதுதான் பொதுப்பெயராகும். பசு என்பது சிலர் எண்ணுவதுபோல் பெண்மாட்டுக்கு மட்டும் உரியதன்று; ஆண் மாட்டுக்கும் உரியதாகும். எனவே, ஆண் எருமை—பெண் எருமை என்று சொல்வது போல, ஆண் பசு—பெண் பசு என்றும் சொல்லலாம். ஆனால் ஆண்பசு என்று சொல்லும் வழக்கம் இக்காலத்தில் அருகிவிட்டது என்னவோ உண்மைதான்! இருப்பினும் அங்ஙனம் கூறுவதில் தவறொன்றும் இல்லை. இக்கருத்துக்கு,

[பசுவின் பொதுப் பெயர்]

“ஆவும், பெற்றமும், பசுவும், ஆனும்,
கோவும், குரால் தேனும் பசுச்சாதிப் பொதுப்பெயர்.”

[பெண் பசுவின் பெயர்]

“சுரபி, தேனு, சுரை, கபிலை, சேதா,
குரமே, கோமளம், பெண்பால் மேன.”



[ஆண் பசுவின் பெயர்]

“பாறல், புல்லம், பாண்டில், பசு, மூரி,
ஏறு, பூணி, இருலே, பெற்றம்,
எருது, சே, விடை, இடபம் என்றிவை
கருதின் போத்தின் பெயரெனக் கருதுவர்.”

என்னும் பாடல்கள் சான்று பகரும். இவற்றுள் முதல் பாடலின் இறுதியில் உள்ள ‘பசுச்சாதிப் பொதுப்பெயர்’ என்னும் சிறு தொடரே போதுமே!

மற்றும் இப்பகுதியில், இன்னின்ன விலங்குகளின் ஆண்களையும் பெண்களையும் இன்னின்ன பொதுப்பெயர்களாலும், குட்டிகளை இன்னின்ன பொதுப்பெயர்களாலும் அழைக்கவேண்டும் என்னும் மரபுநிலை மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, மீன்கள் தொடர்பான ஒரு சுவையான செய்தியைப் பார்ப்போம். ‘மெலியவரை வலியவர் வாட்டினால் வலியவரைத் தெய்வம் வாட்டும்’ என்னும் கருத்தை விளக்கும் முறையில், ‘சிறுமீனைப் பெருமீன் விழுங்கினால் பெருமீனைத் திமிங்கிலம் விழுங்கும்’ என்று உலகில் மக்கள் கூறுவது வழக்கம். ஆம், உண்மைதான்! சிறுமீனை விழுங்கும் அந்தப் பெருமீனுக்கு ‘யானை மீன்’ என்று பெயராம். யானை மீனை விழுங்கும் மீனுக்குத் ‘திமிங்கிலம்’ என்று பெயராம். திமிங்கிலத்தை விழுங்கும் மீனுக்குத் ‘திமிங்கில கிலம்’ என்று பெயராம். இந்த விவரங்களை,

[பெருமீனின் பெயர்]

“யானைமீன், திமி, பெருமீன் ஆகும்.”

[யானைமீனை விழுங்கும் மீன்]

“யானையை விழுங்குமீன் திமிங்கிலம் என்ப.”



[திமிங்கிலத்தை விழுங்கும் மீன்]

“அம் மீனை விழுங்கு மீன் திமிங்கிலகிலமே.”

என்னும் நூற்பாக்கள் உணர்த்தும். பிறரை ஏய்த்துப் பிழைப்பவனைத் ‘திமிங்கிலம்’ என்று சுட்டித் திட்டுவது உலக வழக்கம். இன்னும் பெரிய அளவில் ஊரை அடித்து உலையில் போடுபவனைத் ‘திமிங்கில கிலம்’ என்று சொல்ல வேண்டும் எனத் திவாகரம் நமக்குக் கற்றுத் தருவதுபோல் இல்லையா! ஆனால் மக்கள் இந்தத் திமிங்கிலகிலத்தைக்கூடப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுபோல் தெரிகிறது. ‘ஐயோ அவனா—அவன் பெரிய திமிங்கிலமாயிற்றே!’ என்று கூறுகின்றார்களே—இங்கே பெரிய திமிங்கிலம் என்பது திமிங்கிலகிலத்தைத்தானோ? இருக்கலாம்! 

4. மரப் பெயர்த் தொகுதி

முருங்கைமரம் அறியாதவர்களும் பூவரசம், பூ பார்க்காதவர்களும் பெரிய நகரங்களில் இருப்பதாகச் சொல்வதுண்டு. இது கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால், ‘நெல் காய்க்கும் மரம் பார்த்திருக்கிறீர்களா?’ என்று சிலரை நோக்கிக் கேலி பண்ணுவது என்னவோ உண்மை! இது எதைக் காட்டுகிறது? மக்களுள் சிலர் மரஞ்செடி கொடிகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவராயுள்ளனர் என்பது இதனால் புலனாகும். அதிலும், மரஞ்செடிகள் அழிக்கப்பட்டு, அவை சூழ்ந்துள்ள சிற்றூர்கள் (கிராமங்கள்) புறக்கணிக்கப்படுகிற இந்தக் காலத்து மக்களுள் பெரும்பாலோர்க்கு ஒன்றுமே தெரியாது என்று துணிந்து கூறலாம்.

என்னென்ன மரஞ்செடிகொடிகள் எங்கெங்கே உள்ளன?—இங்கிங்கே உள்ள மரஞ்செடி கொடிகளுக்கு என்னென்ன பெயர்?— அவற்றின் கிழங்கு, வேர், பட்டை, தோல், பிசின், தளிர், இலை, காம்பு, ஈர்க்கு, மொட்டு, பூ, காய், கனி, கொட்டை, பயறு முதலியவற்றுள் ஒவ்வொன்றும் உடம்புக்கு என்னென்ன நன்மை தரும்?—எந்தெந்தப் பிணிக்கு எது எது நல்லது?— என்ற விவரங்கள் எல்லாம் நம் பழம் பாட்டன் பாட்டிமார்களுக்குத் தண்ணீர்ப் பாடம். நாமோ இப்பொழுது மருத்துவமனைகளைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறோம். இருந்த மரங்களைப் போக்கிவிட்டுப் புதிதாக மரம் நடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், திவாகரநிகண்டின் 

மரப்பெயர்த் தொகுதிக்குள் புகுந்து, பலவகை மரஞ்செடி கொடிகளின் பெயர்களை அறிந்து கொள்வதன் வாயிலாகவாவது மனக்கண்ணைக் குளிரச் செய்யலாம். பெரிய பெரிய அரசாங்கத் தோட்டங்களைக் (Botonical gardens) காட்டிலும் இம் மரப் பெயர்த் தொகுதி மிக மிகப் பெரியது.

இத்தொகுதியில், பற்பல விதமான மரஞ்செடி கொடிகளைக் குறிக்கும் பெயர்கள் கூறப்பட்டிருப்பதோடு அவற்றின் இளமைப் பெயர்களும், அவற்றின் உறுப்புக்களாகிய கிழங்கு, வேர், தோல், கிளை, முள், வைரம், தளிர், இலை, மொட்டு, பூ, பூங்கொத்து, தாதுப்பொடி, காய், கனி, கொட்டை, பயறு, தானியம் முதலியவற்றின் பெயர்களும் பலபடக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காகச் சில காண்பாம்:

மரஞ்செடி கொடிகளின் சிறிய கூட்டமாகிய பூங்கா (நந்தவனம்) என்பதைக் குறிக்கப் பதினொரு பெயர்களும், பெரிய கூட்டமாகிய காட்டைக் குறிக்க இருபத்துமூன்று பெயர்களும், மூங்கில் என்னும் ஒரு வகை மரத்திற்கு மட்டும் இருபத்தைந்து பெயர்களும் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:—

[நந்தவனத்தின் பெயர்]

“தேம் பொழில், மரக்கா, தோட்டம், துடவை,
உய்யானம், சோலை, வனம், உத்தியானம்,
தண்டலை, கானம், அடவி, பதினொன்றும்
ஈண்டிய நந்தன வனமென இசைப்பர்.”



[காட்டின் பெயர்]

“கடம், வியல், பழுவம், கட்சி, குறும்பொறை,
கடறு, காந்தாரம், அடவி, கான், வனம்,
ககனம், காண்டம், கட்டம், முளரி,
சுரம், அத்தம், ஆரணியம், கானம், களரி,
சீரணி, பொச்சை, விடர், தில்லம், காடே.”

[மூங்கிலின் பெயர்]

“காம்பு, திகிரி, கண், வேழம், சந்தி,
தூம்பு, முளை, வெதிர், விண்டு, வேரல்,
முந்தூழ், தட்டை, கீசகம், வேய், பணை,
அம்பு, வரை, வேணு, கழை, அமை, ஓங்கல்,
பாதிரி, கிளை, அரி, பாண்டில், உள்பட
வருபவை மூங்கில் எனவகுத் தனரே.”

மேலும் சில செய்திகளும் பெயர்களும் மிகவும் இன்பமாயுள்ளன. அவை வருமாறு:— இலையுதிர்ந்த காட்டிற்கு ‘முதையல்’ என்று பெயராம்.

“முதையல் இலையுதிர்வு பிறங்கிய முதுகாடே.”

‘கோளி’ என்னும் மரம் பூக்காது காய்க்குமாம்.

“கோளி பூவாது காய்க்கும் குளிர் மரம்.”

சண்பக மரப் பூவையும் வேங்கை மரப் பூவையும் வண்டுகள் மொய்க்காவாம்.

“சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர் மரம்.”

‘செம்மல்’ என்பது பழம் பூவின் பெயராம்.

“செம்மல் பழம் பூ வாகச் செப்புவர்.”

‘பொங்கழி’ என்பது தூற்றாத நெல் கூட்டின் பெயராம்.

“பொங்கழி தூற்றா நெற்கூ டாகும்.”



கொத்துமல்லிக்கு ‘உருள் அரிசி’ என்று ஒரு பெயராம். கடுகுக்குக் ‘கடிப்பகை’ என்று ஒரு பெயராம்.

“உருளரிசி கொத்துமலி யென உரைப்பர்.”

“கடிப்பகை, ஐயவி, கடுகின் பெயரே.”

கடிப்பகை என்றால் பேய்க்குப் பகை என்பது பொருள் (கடி = பேய்). வெண்சிறு கடுகை அரைத்துச் சாந்து பண்ணிக் குழந்தையின் உடலில் பூசி வைத்தால் பேய் பிசாசுகள் அண்டமாட்டா என்பது அக்காலத்தவர் நம்பிக்கை. இதற்குக் கடிப்பகை என்னும் பெயர் சான்று. இவ்வாறு சுவையான பல பெயர்கள் இத்தொகுதியில் கூறப்பட்டுள்ளன. இன்னும் ஒன்றே ஒன்று காண்பாம்:

உள்ளே அழுத்தமுடைய—அதாவது உள்வைரம் உடைய கருங்காலி முதலிய மரங்கள் ‘ஆண்மரம்’ எனப்படும். ஆண் மரத்திற்கு அகக்காழ், வன்மரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு. உள்ளே மெல்லிய சோற்றுத் தன்மை உடையனவாய், வெளியில் மட்டும் ஓரளவு அழுத்தமுடைய பனை, பாக்கு, தென்னை, மூங்கில் முதலிய மரங்கள் ‘பெண் மரம்’ எனப்படும். பெண்மரத்திற்குப் புறக்காழ், வன்புல் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இந்த இரண்டுங்கெட்ட முருக்க மரம், நார் மரம், பால் மரம் முதலிய மரங்களுக்கு ‘அலிமரம்’ என்று பெயராம். இந்த ஆண்—பெண் பிரிவினை, திறவுகோல்களுக்குள் ஆண் சாவி—பெண் சாவி என்று சொல்லுவதுபோல் இருக்கின்றதல்லவா? இனிப் பாடல்கள் வருமாறு:— 

[ஆண் மரம்]

“அகக்காழ், வன்மரம் ஆண்மரம் ஆகும்;
அவை கருங்காலி முதலா யுள்ளன.”

[பெண் மரம்]

“புறக்காழ் வன்புல் பெண்மரம் ஆகும்;
அவைதாம்,
தெரிக்கில் பனை, கமுகு, தெங்கு, மூங்கில்.”

[அலி மரம்]

“முருக்கு நார் பால் மர முதலாயின
வேறு அலிமரம் எனும் விகற்பம் பெறுமே.”

இது தொடர்பான இன்னொரு கருத்தும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. அது வருமாறு:— மக்கள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இனவளர்ச்சி செய்வது போலவே, மரஞ்செடி கொடிகளும் தத்தம் பூக்களின் வாயிலாக ஆணும் பெண்ணுமாய் இணைந்து இன வளர்ச்சி செய்கின்றன. சில செடிகளில் ஒரு பூவிலேயே ஆண் உறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்து இருக்கும். இத்தகைய செடிகள் ‘இணையினப் பூஞ்செடிகள்’ எனப்படும். வேறு சிலவற்றில் —ஒரு செடியிலேயே ஆண் பூ தனியாகவும் பெண் பூ தனியாகவும் இருக்கும். இத்தகையவை ‘ஈரினப் பூஞ்செடிகள்’ எனப்படும். வேறு சிலவற்றில்—ஒரு செடியில் ஆண் பூ மட்டுந்தான் இருக்கும்; இன்னொரு செடியில் பெண் பூ மட்டுந்தான் இருக்கும். இத்தகையவை ‘ஓரினப் பூஞ்செடிகள்’ எனப்படும். காற்றின் உதவியாலும் வண்டின் வாயிலாகவும் ஆண் பூவில் உள்ள மகரந்தத்தூள் பெண் பூவில் கலக்கக் கருவுற்றுக் காய்காக்கும். இதுதான் மரஞ்செடி கொடிகளின் 

ஆண்பெண் கூட்டுறவு முறையாகும். ஆனால் திவாகரத்தில் உள்ள ஆண் பெண் பாகுபாடு இந்த அடிப்படையில் கூறப்பட்டதன்று. மரங்களின் உருவத்திற்கு உள்ள வன்மை, மென்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆண்மரம், பெண்மரம் என்ற பாகுபாடு திவாகரத்தில் பேசப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கவேண்டும்.

கடைசியாக, மலர்களால் தொடுக்கப்பட்ட மங்கலமான மாலைக்கு உரிய பெயர்களைப் பார்ப்போம்.

[மாலையின் பெயர்]

“தொடையல், வாசிகை, சிகழிகை, கோதை,
படலை, அலங்கல், கத்திகை, பிணையல்,
அணியல், சுருக்கை, தொடலை, தாமம்,
தொங்கல், தெரியல், கண்ணி, தார், சூட்டு,
மஞ்சரி, ஒலியல், இலம்பகம், மாலை.”

அப்பப்பா! மாலையைக் குறிக்க இருபது பெயர்களா? இவற்றுள்ளும், இன்ன விதமாய்த் தொடுக்கப்பட்ட மாலைக்கு இன்ன பெயர்—இன்ன இடத்தில் அணியும் மாலைக்கு இன்ன பெயர் என்றெல்லாம் பாகுபாடு உண்டு. இத்தகைய பெயர்ப் பாகுபாடுகள், தமிழ் மொழியின் சொல் வளத்தைக் காட்டுவதோடு, தமிழ் மக்களின் கலை வளத்தையும் செழிப்பான வாழ்க்கை வளத்தையும் அறிவிக்கின்றனவன்றோ? 

5. இடப் பெயர்த் தொகுதி

இந்த இடப்பெயர்த் தொகுதியின் வாயிலாக, புராணங்களில் சொல்லப்படுகின்ற மூவுலகத்தையுமே ஓரளவு காணலாம்போல் தோன்றுகிறது. இன்னும் ஈரேழு பதினான்கு (2x7=14) உலகங்கள் என்று சிலரால் சுட்டப்படுபவை எங்கே உள்ளன என்று தெரியவில்லை. ஆனால், விண்வெளியில் எண்ணற்ற உலகங்கள் உள்ளன என்பது அறிவியல் உண்மை.

இத்தொகுதியிலோ, வீட்டு (மோட்ச) உலகம், தெய்வ உலகம், நரக உலகம், நிலவுலகம், திசைகள் முதலியவற்றின் பெயர்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள்ளும் மக்கள் வாழும் நிலவுலகமே இத்தொகுதியின் பெரும் பகுதியைப் பிடித்துக்கொண்டுள்ளது; அதாவது, நாடு, மலை, மலையின் பலவகை உறுப்புகள், மேடு, பள்ளம், கடல், கழி, உப்பளம், ஆறு, வாவி, ஊருணி, மணல் வகைகள், குறிஞ்சி—முல்லை—மருதம்—நெய்தல்—பாலை என்னும் ஐந்திணைகள், ஊர், ககரம், தெரு, கடை, கோவில், அரண்மனை, வீடு, கட்டட உறுப்புகள், அகழி, மதில், குதிர், யானை—குதிரை கட்டும் இடங்கள், அரங்கம், சுரங்கம், கல்லூரி, கழகம், போர்க்களம், சுடுகாடு, வயல் வகைகள், வழி, தூரம் முதலியன விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

திவாகர நிகண்டில, இந்தியப் பெரு நாட்டின் மலைகளுள், கொல்லி மலை (சோழநாடு), பொதியமலை (பாண்டியநாடு), மேரு மலை, வெள்ளி (இமய) மலை 

ஆகிய மலைகள் பேசப்பட்டுள்ளன. ஆறுகளுள் காவிரியாறு (சோழநாடு), பொருநை எனப்படும் தாமிரவர்ணியாறு—குமரி எனப்படும் கன்னியாறு (கன்னியாகுமரிப் பகுதி)—வையையாறு (பாண்டிய நாடு), ஆனிவானி எனப்படும் ஆன் பொருநையாறு (சேரநாடு), பாலாறு (தொண்டைநாடு), கெளதமையாறு, கோதாவிரி ஆகிய ஆறுகள் கூறப்பட்டுள்ளன. நகரங்களுள், சிதம்பரம்—திருவாரூர்—காவிரிப் பூம்பட்டினம் — உறையூர் (சோழநாடு), மதுரை (பாண்டியநாடு), கருவூர் என்னும் வஞ்சி (சேரநாடு); கச்சி என்னும் காஞ்சிபுரம் (தொண்டைநாடு) அவந்தி—காசி—மிதிலை—அயோத்தி—அரித்துவாரம் (வடநாடு) ஆகிய நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதினின்று, திவாகரர் காலத்தில், மேற்கூறப்பட்டுள்ள மலைகளும் ஆறுகளும் நகரங்களுமே தமிழ் மக்களிடத்தில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது புலனாகும். மேலும், இன்று பர்மா எனப்படும் கடாரமும் (சிலர் சுமத்ராவைக் கடாரம் என்கின்றனர்), இன்று சிலோன் என்று அழைக்கப்படும் ஈழமும், மேற்கூறப்பட்டுள்ள இந்தியப் பகுதிகளோடு இணைத்துத் திவாகரம் முதலிய நிகண்டுகளில் பேசப்பட்டிருப்பதை ஆராயப் புகுந்தால் அது ஒரு பெரிய அரசியல் சிக்கலாகுமாதலின் அதனை விடுப்பாம். அடுத்து, புலியூர், தில்லை என்னும் பெயர்கள் சிதம்பரத்திற்கு உரிய பெயர்கள் என்று சூடாமணி நிகண்டில் காணக்கிடக்கவும், திவாகர நிகண்டில் “மன்றம் சிதம்பரம்” என்று பாடப்பட்டிருப்பது மிக்க இன்பமாயுள்ளது. அந்த ஊருக்குச் சிதம்பரம் என்னும் வடமொழிப் பெயருக்குப் பதிலாக ‘மன்றம்’ என்னும் செந்தமிப் பெயர் ஒரு காலத்தில் வழங்கப்பட்டது என்பதை எண்ணும்போது 

மனம் மகிழ்கிறதல்லவா? இறைவன் மன்றத்தில் திருக்கூத்து நிகழ்த்துவதாக இன்றைக்கும் கூறுகின்றார்களன்றோ?

இன்னும் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க சில சுவையான செய்திகள் வருமாறு:—

நீரும் வயலும் சூழ்ந்த ஊருக்குத்தான் ‘கிராமம்’ என்று பெயராம்.

“சுரந்த நீரும் வயலும் சூழ்ந்தஊர்
கிராம மாகக் கிளக்கப் படுமே.”

ஐந்நூறு குடும்பங்களுக்குக் குறையாத கிராமத்திற்குப் ‘பெருங்கிராமம்’ என்று பெயராம்.

“குடி ஐஞ்ஞூறுக்குக் குறைவற நிறைந்தது
பெருங்கிராமம் எனப் பேசப் படுமே.”

சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஊர்—அதாவது, மலைகளுக்கு நடுவே உள்ள ஊர் ‘கேடகம்’ எனப்படும். மலையும் ஆறும் அடுத்த ஊர் ‘கர்வடம்’ எனப்படும். பல பண்டங்கள் விற்கும் கடற்கரை ஊரின் பெயர் ‘பட்டினம்’ என்பதாம். பாடி, புரம் என்பன நகரத்தைக் குறிக்கும் பெயர்களாம். சுற்றிலும் சிற்றூர்கள் சூழ்ந்த பெரிய நகரத்தின் பெயர் ‘மடப்பம்’ என்பதாம். இச்செய்திகளை,

“கிரிபல சூழ அடுத்தஊர் கேடகம்.”

“மலையும் ஆறும் அடுத்தஊர் கர்வடம்.”

“பண்டம் பலகொடு பகரும் கடற்கரை
மன்னும் பதியே பட்டினம் ஆகும்.”

“பாடியும் புரமும் நகரப் பதியே.”

“மருங்கில் ஊர்சூழ் பெரும்பதி மடப்பம்.”

என்னும் பாடல்களால் அறியலாம். மேலும் பலவகை வழிகளின் பெயர்கள் ஈண்டு குறிப்பிடத்தக்கன. 

கடத்தற்குக் கடுமையான வழிக்கு அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம் என்று பெயர்களாம். பல வழிகள் பிரிந்து செல்லும் இடத்திற்குக் கவலை, கவர்நெறி என்று பெயர்களாம். விடங்கர் என்பது சிறிய வழியாம். பாதை பெருவழியாம். படுகர், மடு என்பன ஏறிஇறங்கும் வழிப்பெயர்களாம். அளக்கர் என்பது நீண்ட வழியாம். இவற்றை,

“அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், அருநெறி.”

“கவலை, கவர் நெறி ஆகக் கருதுவர்.”

“விடங்கர் சிறுவழி ஆகும் என்ப.”

“பாதை பெருவழி.”

“படுகர், மடு இழிந்தேறப்படு நெறி.”

“அளக்கர் நீள் வழியே.”

என்னும் பாக்கள் உணர்த்தும். இவ்வளவு நுணுக்கமான பெயர்ச் செல்வங்களைப் பெற்றிருக்கும் தமிழ்மொழியின் சிறப்பே சிறப்பு! பொதுவாக மலையைக் குறிக்க முப்பத்தெட்டுப்பெயர்களும், கடலைக் குறிக்க முப்பத்தாறு பெயர்களும், வாவியைக் குறிக்க இருபத்தேழு பெயர்களும், சேற்றைக் குறிக்கப் பதினேழு பெயர்களும், ஊரைக் குறிக்க இருபத்தேழு பெயர்களும், மதிலைக் குறிக்கப் பத்தொன்பது பெயர்களும், வழியைக் குறிக்க இருபத்தொரு பெயர்களும் இப்படி இன்னும் பலவற்றிற்கும் பலப்பல பெயர்களும் உள்ளமை வியப்பிற்குரியதாம்.

இழிந்த சாக்கடை என்னும் சலதாரையைக் குறிக்க அங்கணம், தூம்புவாய் என்னும் இரண்டு அழகிய பெயர்களும், உயர்ந்த கல்வி நிலையத்தைக் குறிக்கக் 

கல்வியூரி, கல்லூரி என்னும் இரண்டு சிறந்த பெயர்களும் உள்ளமை கண்டு வியக்க!

“அங்கணம் தூம்புவாய் சலதாரை யாகும்.”

“கல்வியூரி கல்லூரி யாகும்.”

இறுதியாகக் கழகம் என்னும் சொல்லைப் பற்றிச் சிறிது ஆய்வாம்: கல்லூரிக்கும் மேற்பட்ட பெரிய கல்வி நிலையத்தைப் ‘பல்கலைக்கழகம்’ என இன்று அழைக்கிறோம். கழகம் என்னும் இந்த இனிய பெயரை, பல துறைகளில் பலர் கூடிப் பணியாற்றும் பல வகை நிறுவனங்களும் பெற்றுள்ளன. ஆனால், கழகம் என்றால் ‘சூது ஆடும் இடம்’ என்னும் பொருளில், திருக்குறளில் ‘சூது’ என்னும் தலைப்பில்,

“கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.”

“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.”

என்னும் இரு குறள்கள் காணப்படுகின்றன. ‘கழகமும் கையும் சூதாடும் கருவியுமாக இருப்பவர் ஒன்றும் இல்லாதவராகிவிடுவர்’, ‘கழகத்தில் புகுந்தவர் செல்வமும் பண்பும் அற்று விடுவர்’-என்பன மேலுள்ள குறட் கருத்துக்கள். சூதாடுகளம் என்னும் பொருளில் கழகம் என்னும் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பது சிலரைத் தியங்கி மயங்கச் செய்துள்ளது. கழகம் என்னும் சொல்லை எழுத்து எழுத்தாக—அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து உடைத்துச் சொல்லாராய்ச்சி செய்பவரும் உண்டு. இதற்காக இவ்வளவு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது மிகவும் எளிதில் அவிழ்க்கக் கூடிய சிக்கலேயாகும். இதற்குத் திவாகர 

நிகண்டு துணைபுரியும். கழகம் என்னும் சொல்லுக்குத் திவாகரத்தில் கிடைக்கும் விளக்கம் வருமாறு:—

[கழகம் என்னும் பெயர்]

“செல்லல் தீய்க்கும் பல்புகழ்ச் சேந்தனில்
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்,
மல்லும், சூதும், படையும், மற்றும்
கல்வி பயில் களமும் கழகம் ஆகும்.”

‘சேந்தனைப் போல் கல்வியறிவிற் சிறந்த நாவலர்கள் கூடும் இடமும், மற்போர் பயிலும் இடமும், சூது ஆடும் இடமும், படைப்பயிற்சி பெறும் இடமும்’, கல்வி கற்கும் இடமும் கழகம் எனப் பெயர் பெறும்’—என்பது மேலுள்ள திவாகர நூற்பாவின் கருத்தாகும். ‘பலர் கூடும் இடம்’ என்னும் பொது அடிப்படையிலேயே, மேற்கூறப்பட்டுள்ள இடங்கட்குக் கழகம் என்னும் பெயர் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. திவாகரத்தில், கழகம் என்னும் பெயர் உடையனவாக ஐந்திடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலும் கடையுமோ, ‘வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்—கல்வி பயில் களமும் கழகம் ஆகும்—என முழு முழு வரியில் கூறப்பட்டு முக்கியம் பெற்றுள்ளன; ஏனைய மூன்றுமோ, அதுவும் இதுவும் உதுவும் என்ற ஏனோ தானோ முறையில்— ‘மல்லும் சூதும் படையும்’ என ஒற்றை வரியில் ஓட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றன் தகுதிபற்றி ஆசிரியரின் உள்ளத்தில் இருந்த மதிப்பீடுகள் பாட்டாக வெளிவரும்போது அதற்குரிய உருவம் பெற்றுவிட்டன. இலக்கியத் திறனாய்வுக் கலைஞர்களும் உளநூல் வல்லுநர்களும் இதனை எளிதில் உணர்வர் இதிலிருந்து உணர வேண்டியதாவது:— 

அறிஞர்கள் பலர் கூடும் சங்கங்களும் கல்விக் கூடங்களுமே கழகம் என்னும் பெயரை முன்னர்ப் பெற்றிருந்தன. பின்னரே, மற்போர்ப் பயிற்சிக்களமும் படைக்கலப் பயிசிற்சிக்களமும் சூதாடு களமும் கழகம் என்னும் பெயர் பெற்றிருக்கவேண்டும். இதற்கு மாறாக, சூதாடும் இடந்தான் முன்னர்க் கழகம் என அழைக்கப்பட்டது; அந்தப் பெயரே பின்னர் அறிவியல் மன்றங்களுக்கும் கடன் வாங்கப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், அன்று தொட்டே அறிஞர்கள் சூதாட்டத்தை இழித்துப் பேசி வருகின்றனர். எனவே, அந்த இழிசெயல் நடக்கும் இடத்திற்குக் கழகம் என்னும் பெயர் முதலில் இருந்திருக்குமானால், அந்த இழிந்த பெயரையா அறிஞர்கள் கூடும் ஆராய்ச்சி மன்றங்களுக்குப் பெயராகச் சூட்டியிருக்க முடியும்? ஒருகாலும் முடியாது! ஆகவே, அறிவு மன்றங்களும் கல்விக்கூடங்களுமே கழகம் என்னும் பெயர்க்கு உரியனவாம். இக்காலத்திலும் உடற்பயிற்சியும் படைப்பயிற்சியும் கல்வித்திட்டத்தில் சேர்ந்திருப்பதைப் போல, அக்காலத்திலும் மற்போர்ப் பயிற்சியும் படைக்கலப் பயிற்சியும் முக்கியம் பெற்றிருந்தனவாதலால், அவை நடைபெறும் இடமும் கழகம் என அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. ஆனால் சூதாடு களத்திற்கு இப்பெயர் வந்த வரலாறு யாதாக இருக்கலாம்? இதற்கும் இதோ பதில் கிடைத்துவிட்டது:

அறிவியல் மன்றங்களில் ஓய்வு நேரத்தில் பொழுது போக்கிற்காகச் சூதாட்டம் நடந்திருக்கலாம் முதலில் பந்தயம் இன்றி ஆடியிருக்கலாம். பின்னர்ப் 

பணம் வைத்துப் பந்தயம் கட்டி ஆடியிருப்பர். இப்படியாகச் சில இடங்களில் அறிவியல் ஈடுபாட்டினும் சூதாட்டமே முதலிடம் பெற்றுவிட்டிருக்கலாம். நாளடைவில் சில அறிவியல் மன்றங்கள் கலைக்கப்பட்டு, முழுக்க முழுக்கச் சூதாடும் களமாகவே மாறி விட்டிருக்கலாம். இன்றைய உலகில் இத்தகைய நிலையைச் சில இடங்களில் காணக்கூடும்— ஆனால், நிலைமை மாறியும், கழகம் என்னும் அந்தப் பெயர் மட்டும் அப்படியே ஆணியடித்துக் கொண்டு நிலைத்துவிட்டிருக்கவேண்டும். அதனால்தான் “கழகத்தியலும் கவற்றின் நிலையும்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூற்களில் ஆளப்பட்டிருப்பதல்லாமல், திருவள்ளுவரின் திருக்குறளிலும் சூதாடும் இடம் எனக் கழகம் சுட்டப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறள் ஆட்சியைக்கொண்டு, கழகம் என்னும் சொல், சூதாடும் இடத்தை மட்டுந்தான் அக்காலத்தில் குறித்து வந்தது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. ஓர் இலக்கியக் கழகத்தைப் பற்றிப் பேசும்போது கழகம்–கழகம் என்றால் அது அந்த இலக்கியக் கழகத்தைக் குறிக்கும். ஓர் அரசியல் கட்சிக் கழகத்தைப் பற்றிப் பேசும்போது கழகம்—கழகம் என்றால் அது அந்த அரசியல் கட்சியைக் குறிக்கும். இது இக்கால உலகியல். இது போலவே, திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்பதைப் பற்றிப் பேசும்போது கழகம்–கழகம் என்றால் அது சூதாடும் இடத்தைக் குறிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்? நாளடைவில் சூதாடுங்கழகங்கள் திருவள்ளுவர் போன்ற அறிஞர் பெருமக்களால் இழித்துக் கண்டிக்கப்பட்டமையாலும், அதனால் மக்களால் புறக்கணிக்கப்பட்டமையாலும், சூதாடும் இடங்களைக் கழகம் என அழைக்கும் 

வழக்காறு இன்று அறவே மறைந்துவிட்டது. அறிஞர்கள்கூடும் சங்கங்களும் கல்வி பரப்பும் நிலையங்களும் முன்போலவே கழகம் என அழைக்கப்படுகின்றன. இதுதான் கழகம் என்னும் பெயரின் வரலாறாகும். இவ்வளவு அரிய கருத்துக்களையும் அறிவதற்குத் திவாகரப் பாடல் நமக்குத் துணை நிற்கிறதல்லவா?

இந்தக் காலத்தில் ‘கிளப்’ (CLUB) என்னும் ஆங்கிலச் சொல் பல இடங்களையும் சுட்டி நிற்பதைப் போல, திவாகரர் காலத்தில் கழகம் என்னும் சொல் பல இடங்களையும் சுட்டி நின்றது என்பதையும் ஈண்டு சுட்டாமல் விடமுடியவில்லை. 

6. பல்பொருள் பெயர்த் தொகுதி

பல்பொருள் பெயர்த் தொகுதி என்னும் பெரிய கடைத்தெருவிற்குள் நுழைந்துவிட்டால் ஆங்கே பல வகையான பொருள்களைப் பார்க்கலாம். இத் தொகுதியில், பல்வகைப் பொன்கள் (உலோகங்கள்), மணிகள் (இரத்தினங்கள்), சங்கநிதி, பதுமநிதி, காந்தம், சூரிய காந்தக்கல், சந்திரகாந்தக் கல், சங்கு, கருப்பூரம், கத்தூரி, சாந்து, பூச்சு, பொட்டு, குங்கிலியம், பெருங்காயம், அரக்கு, சுக்கு-ஏலம் முதலிய மருந்துச் சரக்குகள், விறகு, கரி, சாம்பல், சாணம், புகை, பனிநீர், காவிக்கல், பஞ்சு, சோறு, பல்வகை உணவுகள், தேன், பால், தயிர், நெய், மோர், சர்க்கரை, கள், நஞ்சு, அமிழ்து முதலிய பல்வகைப் பொருள்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இப்பகதியிலுள்ள சில சுவையான செய்திகள் வருமாறு:–

சங்க நிதி, பதும நிதி என்னும் இருவகைச் செல்வங்கள் பேசப்பட்டுள்ளன. இவை பாற்கடலில் தோன்றியதாகவும், தேவர் உலகத்தில் உள்ளதாகவும், குபேரன் கையில் இருப்பதாகவும் பலவாறு பல புராண நூற்களில் கூறப்பட்டுள்ளன. சங்கநிதி சங்கு வடிவாக இருக்கும் என்றும், பதும நிதி தாமரை வடிவாக இருக்கும் என்றும் மற்றையோர் கூறுவது போலவே திவாகரரும் கூறியுள்ளார். இவற்றின்முன் நின்று கொண்டு எது வேண்டுமென்று கேட்டாலும் கொடுக்கும் என்று கூறுகிறார்கள். இது குறித்துத்தான், ‘வரையாது வழங்கும் சேந்தனுடைய கைகளைப் போன்றவை’ என்று திவாகரர் கூறியுள்ளார் போலும்.

“செங்கைநிதி அம்பல் சேந்தன் செங்கையில்
சங்கின் வடிவினது சங்க நிதியே.”

“தேமலர் அலங்கல் சேந்தன் செங்கையில்
தாமரை வடிவினது பதும நிதியே.”

என்பன திவாகரப் பாடல்கள். வாய்ப்புக் கிடைத்தபோது வள்ளல் சேந்தனைப் பாராட்ட ஆசிரியர் மறக்கவில்லை. இஃது அவரது செய்ந்நன்றி மறவாச் சீர்மைக்கு எடுத்துக்காட்டு! மேலும் சில செய்திகள் காண்பாம்:

“சாணி புண்ணிய சாந்தம் எனப்படும்”

என்னும் நூற்பாவால், மாட்டுச் சாணத்தை மக்கள் மிகவும் உயர்வாக மதிப்பது புலனாகும். மற்றும் பிட்டு, அஃகுல்லி, இடி, மோதகம், பில்லடை, அப்பம் முதலிய உணவுப் பண்டங்களும் ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. பூரிகம், நொலையல், கஞ்சம், தோசை, என்னும் தின்பண்டங்கள் அப்பவகையைச் சேர்ந்தனவாம்.

“பூரிகம், நொலையல், கஞ்சம், தோசை
பேதவகைப் பெயர் அப்ப மாகும்.”

“அப்பம், பிட்டொடு, அஃகுல்லி, இடியெனச்
செப்பிய வெல்லாம் சிற்றுண்டி யாகும்.”

சிற்றுண்டி என்னும் சொல், ‘டிஃபன்’ (Tiffen) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேராக இக்காலத்தில் புதிதாகப் படைத்துக்கொண்ட தமிழ்ச்சொல் அன்று அது பழைய செந்தமிழ்ச்செல்வமே என்பது, மேலுள்ள திவாகர நூற்பாவால் புலனாகும். 

இத்தொகுதியில் பொன்னைக் குறிக்க முப்பத்தெட்டுப் பெயர்களும், சோற்றுக்கு இருபத்து நான்கு பெயர்களும், உண்ணும் செயலுக்குப் பதின்மூன்று பெயர்களும், கள்ளுக்கு நாற்பத்தெட்டுப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காக, சோற்றுக்கும் உண்ணல் தொழிலுக்கும் உரிய பெயர்களை மட்டும் பார்ப்போம்:

(சோற்றின் பெயர்)

“புன்கம், மிதவை, பொம்மல், போனகம்,
அன்னம், ஓதனம், அயினி, அடிசில்,
பாளிதம், பொருகு, மிசை, பதம், பாத்து,
அமலை, உணவு, துப்பு, அசனம், கவுளம்,
சொன்றி, நிமிசம், மடை, கூழ், புழுக்கல்,
ஒன்றிய மூரல், சோறு என உரைப்பர்.”

(உண் தொழிலின் பெயர்)

“மிசைதல், பக்கித்தல்,
அயிலல், அனுங்கல், விழுங்கல், துய்த்தல்,
மேய்தல், அயிறல், நுகர்தல், அருந்தல்,
உண்டல், தின்றல், பருகுதல் என்றிவை
பண்பின் தொழிலைப் பகருங் கிளவி.”

மற்றும், பொதி சோறு, ஆற்றுணா. தோட்கோப்பு என்னும் சொற்கள் கட்டு சோற்றைக் குறிக்கும் பெயர்களாம்.

“பொதி சோறு ஆற்றுணா தோட்கோப்பு ஆகும்.”

பொதி என்றால் மூட்டை; எனவே, பொதி சோறு என்றால் கட்டு சோற்று மூட்டை என்று பொருளாம்.

ஆறு என்றால் வழி - உணா என்றால் உணவு; எனவே, ஆற்றுணா என்றால், வழிப்பயணத்தில் உண்ணும் உணவு (மூட்டை) என்று பொருளாம். தோட்கோப்பு(தோள்+கோப்பு) என்றால் தோளில்கோத்துத் (மாட்டித்) தொங்கும்பொருள் என்று பொருளாம்; எனவே, அக்காலத்தில் கட்டு சோற்று மூட்டையைத் தோளில் மாட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போயினர் என்பது புலப்படும். இந்த நாகரிகக் காலத்திலும் எந்தெந்தப் பொருளையோ ஒரு வகைப் பையில் போட்டு அடைத்து இளம் பெண்களும் — ஆண்களுங்கூடத் தோளில் மாட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போகிறார்கள் அல்லவா? இவ்வகைப் பைக்குத் ‘தோட் கோப்பு’ என்னும் அழகிய பெயரை நாம் சூட்டலாமே. ஏனெனில், ஊருக்கு ஊர் உணவுக் கடைகள் ஏற்பட்டுவிட்டதால் கட்டு சோற்று மூட்டை கரைந்து காணாமற் போய்விட்டதன்றோ இக்காலத்தில்?

இவ்வாறு பழைய சொற்கிடங்கிற்குள் புகுந்து பார்த்தால் எண்ணற்ற சொற்கள் இக்காலத்திற்கு ஏற்புடையனவாகக் கிடைக்கலாம்.

7. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி

செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி என்னும் பெரிய தொழிற் பேட்டைக்குள் (Industrial Estate) புகுந்துவிட்டால், பலவகைத் தொழிற் படைப்புகளைப் பார்க்கலாம். இத்தொகுதியில், பலவகை உலோகங்கள், மரங்கள், தோல், நூல், மண் முதலியவற்றால் செய்யப்பட்ட செயற்கைப் பொருள்களின் பெயர்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதாவது, பலவகைப் படைகள் (ஆயுதங்கள்), அணிகலன்கள், நாழிகை வட்டில் (கடியாரம்), கண்ணாடி, பலவகை இசைக் கருவிகள், தேர், வண்டி, வீடுகளில் பயன்படுத்தப்படும் பலவகையான பொருள்கள், உழவு-நெசவு முதலிய தொழில்களுக்கு உதவுங் கருவிகள், எழுதுகோல், ஏணி, தோணி, கப்பல், கிளி யோட்டுங் கருவி, குடை, சீப்பு, பந்து-காற்றாடி முதலிய விளையாட்டுப் பொருள்கள், செருப்பு, பலவகை உடைகள், கொடிகள், படுக்கை, ஓவியம் முதலியவற்றிற்குரிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

பலவகையான வாச்சியங்கள் (இசைக் கருவிகள்) பேசப்பட்டுள்ளன. அவற்றுள் பறை என்பது ஒன்று. அந்தப் பறை என்னும் வகையில்மட்டும் ஏறத்தாழ இருபது இனங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதிலிருந்து தமிழர்களின் இசைக்கலையின் வளம் புலப்படும். தமிழில் இசை இல்லை என்பவர்க்கு இச்செய்தி ஓர் அறைகூவல் அன்றோ?

உயரமாக அமரும் நீளப் பலகையை ‘பெஞ்சு’ (Bench) என்னும் ஆங்கிலச் சொல்லால் இக்காலத்தில்

பலர் அழைக்கின்றனர். இக்காலத்தும் சில விடங்களில் இதனை ‘விசி’ என்றும் ‘விசிப் பலகை’ என்றும் அழைக்கும் பழக்கம் மறையவில்லை. இதனைக் குறிக்க விசி, அரி என இருசொற்கள் இருப்பதாகத் திவாகரம் தெரிவிக்கிறது.

“விசி அரி ஆகும்”

என்பது பாடல். எனவே, பிற மொழிச் சொற்களிலேயே மயங்கிவிடாமல், பழந்தமிழ்ச் சொற்களைப் போற்றி வழங்கவேண்டும். இத் தொகுதியில் பல பொருள்கட்கும் உரிய பல பெயர்கள் கூறப்பட்டிருப்பினும், ஈண்டு மாதிரிக்காகக் கூறையைக் (துணியைக்) குறிக்கும் பெயர்களைமட்டும் காண்பாம்:–

[கூறையின் பெயர்]

“மடியே, புட்டம், மாறுகம், கலை, உடை,
இலக்கர், கலிங்கம், சேலை, காடகம்,
காழகம், அறுவை, வட்டம், சாடி,
தானே, வாத நம், கோடிகம், அம்பரம்,
ஆசாரம், ஆடை, தூசு, துகில், நீவி,
சமபடம், பட்டம், படாம், புடவை, கூறை.”

[நல்லாடையின் பெயர்]

“எடகம், புங்கம், பங்கம், இடையல்,
வேதகம், சில்லீகை, சித்திலீகை, கத்தியம்,
நாகம, தூரியம், கருள், பாரி, நல்லாடை.”

கலிங்கம், காழகம் என்னும் பெயர்களை நோக்குங்கால், அந்த நாடுகளிலிருந்தும் தமிழ் நாட்டுக்கு உடை வகைகள் வந்தன என்பது புலனாகும். 

இந்தத் தொகுதியிலும் சேந்தன் பாராட்டப் பெற்றுள்ளான். சேந்தனைப் போன்ற வீரர்கள் காலில் கட்டிக் கொள்ளும் வீரக்கழலுக்குக் ‘காலணி வடம்’ என்று பெயர் என்று விளக்கும்முகத்தான் திவாகரர் சேந்தனைச் சிறப்பித்துள்ளார். பாடல்:–

“கெழுதகை அம்பல் கிழவோன் சேந்தனில்
விழைவுறு தியாகத்து வீரத்து விளக்கிய
கழலே ஆடவர் கால்மிசை யணிவடம்.”



8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி

உளவியல் (Psychology), வடிவக் கணக்கு (geometry), விஞ்ஞானக் கருத்துக்கள் முதலிய துறைகள் பற்றித் தமிழில் நூல் எழுதுவதற்கு வேண்டிய சொற்கள் பல இத்தொகுதியிலிருந்து கிடைக்கும். சிலவற்றிற்கு நேரடியாகக் கிடைக்காது போயினும், இத்தொகுதியில் சொல்லப்பட்டிருக்கும் சொற்களைக் கொண்டு சில புதிய பெயர்களையும் படைத்துக்கொள்ளலாம்.

வடிவு, அளவு, நிறம் முதலிய காட்சிப் பொருட் பண்புப் பெயர்களும், சுவை, குணம், உணர்வு, முதலிய கருத்துப் பொருட் பண்புப் பெயர்களும் இத்தொகுதியில் கூறப்பட்டுள்ளன. சிறிது விரிவாகச் சொல்லவேண்டுமானால், வட்டம், வளைவு, திரள், குவிவு, மொக்குள், உண்டை, உள்துளை, துவாரம், பரப்பு, அகலம், நீளம், தொகுதி, மிகுதி, பாதி, முழுமை, உயர்ச்சி, பெருமை, பருமை, சிறுமை, செறிவு, மென்மை, வன்மை, நுண்மை, நொய்ம்மை, செம்மை—பசுமை—கருமை - பொன்மை - வெண்மை முதலிய நிறங்கள், ஒளி, அழகு, வலிமை, மதர்ப்பு, எளிமை, வெம்மை, தண்மை, வீரம், வெற்றி, தோல்வி, மனம், அறிவு, கருத்து, உணர்வு, விருப்பு, வெறுப்பு, அன்பு, இரக்கம், சினம், காமம், அச்சம், அருவருப்பு, வியப்பு, உவகை, கண்ணோட்டம், நன்மை, தீமை, நோய், வறுமை, செல்வம், இன்பம், துன்பம், சோம்பல், பகை, நட்பு, வஞ்சனை, பொறாமை, ஒழுக்கம், பழைமை, புதுமை, 

பிறப்பு, இளமை, நிலையாமை, உரிமை, ஆக்கம், தூய்மை, வளமை, உறவு, துறவு, மணம், இனிமை, கசப்பு, புளிப்பு, உறைப்பு, அளவைகள், ஒப்புமை முதலிய பண்புகளுக்குரிய பல்வகைப் பெயர்கள் மிகவும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

பெருமை என்னும் பண்பைக் குறிக்க முப்பத்தொன்பது பெயர்களும், மிகுதியைக் குறிக்க இருபத்துமூன்று பெயர்களும், வலிமைக்கு முப்பத்திரண்டு பெயர்களும், அச்சத்திற்கு நாற்பத்திரண்டும், விருப்புக்கு இருபத்தைந்தும், துன்பத்திற்கு நாற்பத்தேழும், குற்றத்திற்கு இருபத்தேழும், இன்னும் பலவற்றிற்கும் பலப்பல பெயர்களும் கூறப்பட்டிருப்பதிலிருந்தே இத் தொகுதியின் விரிவு புலனாகும். மாதிரிக்காகப் பெருமையின் பெயர்களை மட்டும் காண்போம்:–

“தடம், தவவு, விபுலம், வியலிகை, வியன், விறல்,
முடலை, அகலுள், மோடு, செம்மை,
பீடு, கண், பழி, பீன், முன்பு, மால், மா,
வந்தை, கலந்தை, பரி, பணை, அழுவம்,
பிறங்கல், படு, நனி, இயக்கம், வியம், தகை,
செம்மல், அணி, நன்று, அருமை, இருமை,
கருமை, கதழ்வு, கயவு, மூரி,
பெருமை, பாடும், அண்ணலும், அதற்கே”

இனிச் சில சுவையான செய்திகளைப் பார்ப்போம்: சிலர் தம் நண்பர்க்கு மடல் (கடிதம்) எழுதும்போது, ‘உழுவல் அன்புடைய கெழுதகை நண்பரீர்!’ என்று நண்பரை விளிக்கின்றனர். இது சிலரிடத்தில் ‘சம்பிரதாயம்’ (Formality) எனப்படும் ஒருவகை மரபாகப் போய்விட்டது. இவர்களுக்குள் அன்பும் இருக்காது —பண்பும் இருக்காது; இதற்கு முன் இவர்கள் பகைவர் 

போலவும் நடந்து கொண்டிருப்பர் — அல்லது — இன்னும் சில நாளில் பகைவராகவும் மாறக்கூடும்; இருப்பினும், ஒப்புக்கு ‘உழுவல் அன்புடைய நண்பரீர்’ என அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘உழுவல் அன்பு’ என்பதன் பொருள் புரியாமலேயே எழுதிக் கொள்கின்றனர். இன்னோர் அனைவரும் மிகவும் இரங்கத் தக்கவரே — இல்லையில்லை — எள்ளி நகையாடற்கு உரியவராவர். எனெனில் ‘உழுவல்’ என்றால், ஏழுபிறவிகள் எடுத்தாலுங்கூடத் தொடர்ந்து நீடிக்கக்கூடிய அன்பு என்று பொருளாம்.

“உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும்.”

என்பது திவாகர நூற்பா, நிலைமை இங்ஙனமிருக்க, மணிக்கு மணி மனம் மாறும் பேர்வழிகள், உழுவல் அன்புடைய கெழுதகை நண்பர்களாக எப்படியிருக்க முடியும்? அடுத்து, இறுமாப்பு என்பதைக் குறிக்க ஏக்கழுத்தம் என்னும் சொல்லும், அக (மன) மலர்ச்சி என்பதற்குச் செம்மாப்பு என்ற சொல்லும், குறிப்பு என்பதற்கு நாட்டியம் என்ற சொல்லும், காரணம் என்பதற்குப் பொருட்டு, திறன், வாயில் முதலிய சொற்களும், இலாபம் என்பதற்குப் பசை, பேறு முதலிய சொற்களும் இருப்பதை எடுத்துச் சுட்டாமல் இருக்க முடியவில்லை:

“இறுமாப்பு ஏக்கழுத்தம்.”

“செம்மாப்பு அகமலர்ச்சி.”

“நாட்டியம் குறிப்பே.”

“நிபமும், பொருட்டும், ஏதுவும், நிமித்தமும்,
திறனும், வாயிலும், காரணம் தெரிசொல்.” .

“ஊதியம் பசை பயன் பலித்தம் ஆக்கம் என்று
ஓதிய ஐத்தும் இலாப மாகும் ;
பேறும் அதிகமும் பேசுப இலாபம்.”

என்பன பாடல்கள். ஏக்கழுத்தம், செம்மாப்பு என்பன மிகவும் இனிய அழகிய சொற்கள் அல்லவா? நாட்டியம் என்றால் குறிப்பாம். நாட்டியம் ஆடுபவர்கள் தங்கள் உடல் - உறுப்பு அசைவுகளின் வாயிலாகக் குறிப்பாகத்தானே கருத்தை உணர்த்துகின்றனர்! எனவே, நாட்டியம் என்பது பேசாத பேச்சு – நாட்டியக் கலை என்பது பேசாத பேச்சுக் கலை – என்னும் கருத்து இனிது புலனாகும். அடுத்து, காரணம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கிடைக்காத ஏக்கம் சிலருக்கு உண்டு. இனி அந்த ஏக்கம் வேண்டா! பொருட்டு, திறன், வாயில் முதலிய நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளனவே - பயன்படுத்தலாமே! அடுத்தபடியாகப் பசைக்கு வருவோம். உலக வழக்கில் செல்வத்தைப் பசை என்று குறிப்பிடும் பழக்கம் உண்டு. ‘அவருக்குப் பசை ஏறிவிட்டது’, ‘அதில் நல்ல பசை படும்’, ‘அதில் ஏதேனும் பசை படுமா?’, ‘அதில் ஒன்றும் பசை படவில்லை’, ‘பசை இருந்தால் தானே வண்டி ஓடும்!’- என்பன உலக வழக்குகள். இந்தத் தொடர்களில் பசை என்பது பண்ச்சார்பான பொருள்படுவது காண்க. இந்த நயமான உலக வழக்குச் சொல், திவாகரத்தில் இலக்கியச் சொல்லாக ஏறியிருப்பது கண்டு வியக்க!

மேற்கொண்டு சில நிறுத்தல் அளவைப் பெயர்களைப் பார்ப்போம். ஒரு பலம் அளவுக்குத் ‘தொடி’ என்று பெயராம். கால் பலத்திற்குக் ‘கஃசு’ என்று பெயராம். தொடி நூறு நிறை கொண்ட அளவுக்குத் ‘தூக்கு’, ‘கா’, ‘துலாம்’ என்று பெயர்களாம். 

“ஒரு பலப் பெயர் தொடி.”

“கஃசு காற் பலம்.”

“தூக்கும், காவும், துலாமும், நூற்று நிறை.”

என்பன பாடல்கள். கால் பலத்திற்குக்கூடத் தனிப்பெயர் இருந்ததென்றால், தமிழின் சொல்வளத்தையும், அன்றைய தமிழரின் கணக்கியல் கலை நுட்பத்தையும் என்னென்பது! மேலும், இச்சொற்கள் நிகண்டோடு நின்றுவிடவில்லை; இலக்கியத்திலும் எடுத்தாளப்பட்டுள்ளன. சான்றாக, திருக்குறளில் உழவு என்னும் தலைப்பிலுள்ள ஒரு குறளை நோக்குவோம்: ‘நிலத்தில் ஒரு பலம் (தொடி) மண், கால் பலம் (கஃசு) மண்ணாகக் காயும் அளவுக்கு ஏரை ஓட்டி ஓட்டி உழுதால், அந்நிலம் பிடி எருவும் போடாமலேயே நிரம்ப விளையும்’ என்னும் கருத்துப் பொதிந்த

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.”

என்னும் குறளில் தொடி, கஃசு என்னும் சொற்கள் அமைந்துள்ள அழகை நாம் நன்கு சுவைக்கத்தான் வேண்டும்!

இந்தத் தொகுதியிலும் திவாகரர் சேந்தனை மறக்கவில்லை. அம்பல் தலைவன் சேந்தனைப் போல அறிந்தும் அறியாதவர்போல் அடங்கியிருப்பதற்குத் தான் ‘அறிமடம்’ என்று பெயர் என்று அறிமடம் என்பதற்கு விளக்கம் கொடுக்கும் இடத்தில் ஆசிரியர் சேந்தனைச் சிறப்பித்துள்ளார்:

“பெருஞ் சேந்தன் அம்பல் பெருமான் போலத்
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புற மறைத்து
அறிந்தும் அறியார் போறல் அறிமடம்.”

என்பது நன்றியறிவிப்புப் பாடலாகும். 

9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி

செயல் பற்றிய பெயர்த் தொகுதியில் ஏறக்குறைய இருநூற்றைம்பது செயல்கள் அதாவது வினைகள் பேசப்பட்டுள்ளன. சில செயல்களுக்கு, இனிய அழகிய தூய தமிழ்ப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, செய்தல் என்னும் வினைக்கு,

“அயர்தல், குயிற்றல் ஆற்றல், இழைத்தல்,
வனைதல், செய்தல் மாற்ற மாகும்”

எனப் பல பெயர்கள் கூறப்பட்டிருப்பது காண்க. மகளிர் விளையாட்டைக் குறிக்க,

“ஓரை, பண்ணை, கெடவரல், பொய்தல்,
உண்டாட்டு, கிரீடை, உப்பு, கேளி,
வண்டல், தொடலை, மகளிர் விளையாட்டு.”

எனப் பல பெயர்கள் இருப்பது புலனாகும். இந்தக் காலத்தில் நம் நாட்டில் ஆண்கள் மட்டுமே விளையாடுகின்றனர். பெண்கள் விளையாடும் பழக்கம் இப்போதுதான் சிறிது தலைகாட்டுகிறது ஆனால், பண்டைய தமிழகத்தில் பெண்கள் பெரிதும் விளையாடினர்; பலவகை ஆட்டங்கள் ஆடினர் என்ற செய்தி இந்தத் திவாகர நூற்பாவால் புலனாகின்றது. இந்தக் காலத்தில் ஆண்கள் பந்தாடுகின்றனர். அந்தக் காலத்திலோ பெண்களே பந்தாடினர். பந்தாடும் ஆண்மகன் பெட்டையாகக் கருதப்பட்டான். இந்தச் செய்தி ஈண்டு, குறிப்பிடப்பட வேண்டியதொன்றன்றோ?

அடுத்து, விழாவைக் குறிக்க,

“முருகும், சாறும், சேறும், விழாவே;
உயர் துணங்கறலும், உற்சவம் ஆகும்.”

என்னும் புதுமைப் பெயர்கள் உள்ளமை, காண்க.

இப்போது நடைமுறைப் பேச்சு வழக்கில் அலங்காரம்—அலங்காரம் செய்தல் என்னும் வழக்காறே பெரும்பாலும் அடிபடுகிறது. இந்த அலங்காரத்தைக் குறிக்க எத்தனையோ இனிய அழகிய சுவையான தமிழ்ப் பெயர்கள் இருப்பதைத் தமிழ் மக்களுட் பெரும்பாலார் அறிந்தாரிலர். ஒப்பனையைக் குறிக்கும் அப்பெயர்களை ஈண்டு காண்பாம்:—

“மண்ணல், கைசெய்தல், பொற்பு, அலங்கரித்தல்,
புனைதல், மிலைதல், வேய்தல், அணிதல்;
வனைதல் ஒப்பனை மாற்ற மாகும்.”

இனி இச் சொற்களைப் பயன்படுத்தலாமே!

நாம் உலக வழக்கில் அயர்ந்த தூக்கத்தைத் தூங்குதல் என்னும் வினையால் சுட்டுகிறோம். ஆனால், தூங்கல் என்னும் சொல், நிரம்பாத தூக்கத்தையே குறிக்கும் என நிகண்டு கூறுகிறது. இதனை

“தூங்கல் நிரம்பாத் தூக்கம் என்ப.”

என்னும் திவாகர நூற்பாவால் அறியலாம். பொதுவாகத் தூக்கத்தைக் குறிப்பதற்கு,

“கண் படை, கண் வளர்தல், கனவோடு, அளந்தர்,
துஞ்சல், பள்ளி, துயிறல் ஆகும்;
உறங்கலும், படையும் உரைப்பர் அதற்கே.”

என வேறு பல பெயர்கள் உள்ளன. 

கணவன் மனைவியர்க்குள் ஏற்படும் சிறு மனத் தாங்கலுக்கு ‘ஊடல்’ என்று பெயராம். இந்த ஊடலைச் ‘செல்லக் கோபம்’ என்று சொல்லலாம். இது சிறிது முதிருமேயானால் அதற்குப் ‘புலவி’ என்று பெயராம். அந்தப் புலவி நீட்டிக்குமேயானால் அதற்குத் ‘துனி’ என்று பெயராம். இவ்வாறு நீட்டித்த ஊடல் ஒருவாறு முடிவடைந்து கூடலுக்கேற்ற சூழ்நிலை உருவாகுமானால் அதற்கு ‘ஒல்’ என்றும் ‘சிரல்’ என்றும் பெயர்களாம்.

“ஊடலின் முதிர்தல் புலவி யாகும்.”

“அதனின் நீடுதல் துனி எனப்படுமே.”

“ஒல்லும் சிரலும் முடிவிடன் உரைக்கும்.”

என்பன திவாகர நூற்பாக்களாம். அகராதி தொகுத்து வெளியிட்டுள்ள பலரும், ஈண்டு கூறப்பட்டுள்ள ஒல், சிரல் என்னும் சொற்களின் உண்மைப் பொருள் உணராதவராய், இச் சொற்களுக்கு ‘முடிவிடம்’ (Limit, End, Top) என்று பொருள் எழுதியுள்ளனர். ‘ஒல்லும் சிரலும் முடிவிடம் உரைக்கும்’ என்னும் பாடலை அவர்கள் திரிபாகப் புரிந்து கொண்டுள்ளனர் என உணரக்கிடக்கின்றது. ‘ஊடலின் முதிர்தல் புலவியாகும்,’ அதனின் நீடுதல் துனி எனப்படுமே என்னும் இரு பாடல்களோடு ஊடலைப் பற்றிய பகுதி முடிந்துவிட்டதாக அவர்கள் நம்பி, ‘ஒல்லும் சிரலும் முடிவிடன் உரைக்கும்’ என்னும் பாடலை, வேறு செயலைப் பற்றிக் கூறும் தனிப் பகுதியாகக் கொண்டுவிட்டனர். அதனால்தான், ‘ஊடல் முடியும் இடம்’ என்று பொருள் எழுதாமல், எது ஒன்றும் முடியக்கூடிய இடம் - எல்லை - உச்சி என்ற கருத்தில் பொதுவாக எழுதிவிட்டனர். இது பொருந்தாது. ‘ஒல்லும் சிரலும் முடிவிடன் உரைக்கும்’ என்னும் திவாகர 

நூற்பாவுக்கு, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் உரிய விளக்கம் காணக்கிடக்கிறது.

“கூடியும் கூட்ட மின்மை
     குலவிய புலவி யென்ப.
ஊடலே நணுகா ராகி
     உரைமறுத் திருத்த லாகும்.
ஆடவர் நீங்க உள்ளே
     அடைத்துறல் துனியே என்பர்.
ஊடலைத் தீர்த்தலின் பேர்
     உணர்த்தலே ஒல்லல் ஆகும்.”

என்பது சூடாமணி நிகண்டு நூற்பா. இப்பாடலின் இறுதிப் பகுதியில், ஊடல் தீர்ந்த நிலைக்கு ‘ஒல்லல்’ என்று பெயராம் என்ற செய்தி தெளிவாக விளக்கப்பட்டுள்ள தன்றோ? வழி வழி மரபையொட்டிய இந்த விளக்கத்தைக் கொண்டு, திவாகர நூற்பாவின் உண்மைப் பொருளை உணரலாமே! இக்காலத்தில் அகராதி தொகுத்தவர்கள் இதனை அறியாதது வியப்பே!

அன்றியும், ‘ஒல்’ என்னும் சொல்லுக்கு ‘உடன்படுதல்’ என்னும் பொருள் உண்டு என்பது,

“பாசறை யல்லது நீ ஒல்லாயே.”

என்னும் புறநானூற்றுப் (31) பகுதியாலும், அதே சொல்லுக்குப் ‘பொருந்துதல்’ என்னும் பொருளும் உண்டு என்பது,

“கானத்து ஒல்லும் பேரழல்”

என்னும் கந்தபுராணப் பகுதியாலும், அதற்கே ‘பொறுத்தல்’ என்னும் பொருளும் உண்டென்பது, 

“ஒல்லுவ சொல்லாது”

என்னும் பரிபாடல் (12) பகுதியாலும் விளங்கும் என்ற செய்தி அகராதி தொகுத்தவர்கள் அறிந்ததுதானே! ‘ஒல்’ என்னும் சொல்லுக்குரிய உடன்படுதல், பொருந்துதல், பொறுத்தல் என்னும் இம்மூன்று பொருள்களும், ‘ஒல்’ என்பதற்கு ‘ஊடல் முடிவிடம்’ என்று பொருள் கொள்வதற்குத் துணை புரியுமே! அதாவது ஊடல் கொண்ட தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் குறை பொறுத்து உடன்பாடு எய்திப் பொருந்துதல்தானே ஊடல் முடிவிடமாகும்?

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடி வாழ்க்கைத் துணைவர்களாகும் விழாவைக் கல்யாணம், விவாகம் முதலிய வடமொழிச் சொற்களால் இடைக்கால மக்கள் குறித்து வந்தனர். இக்காலத் தமிழ் மக்களோ, ‘திருமணம்’ என்னும் அழகிய தமிழ்ச் சொல்லால் அதனைக் குறிக்கின்றனர். ஆம்! மணத்தல் என்றால் கூடுதல். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடுகிற — இணைகிற நிகழ்ச்சிதானே திருமணம் என்பது! இதற்குத் திவாகரத்தில் அகச்சான்று காணலாம்.

“மணத்தல் கூடுதல்”

என்பது திவாகர நூற்பா. இப்படியாகத் துருவித் துருவி நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவேண்டும்.

ஊராண்மை என்றால் மிக்க செயலாம்; பேராண்மை என்றால் அரிய செயலாம்: 

“ஊராண்மை மிக்க செயல்.”

“பேராண்மை அரிய செயல்.”

என்பன திவாகர நூற்பா. எடுப்பான இந்த இரண்டு சொற்களும்,

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.”

என்னும் திருக்குறளில் பொருள் பொதிந்து பொலிந்து கிடப்பதை அறிந்து மகிழ்க.

ஆலோசனை, மந்திராலோசனை என்னும் வடமொழி வழக்காறுகளுக்குத் தக்க தமிழ்ச் சொல் அறியாது பலர் திகைக்கின்றனர். இதோ: சூழ்ச்சி, உசாவல், தேர்ச்சி, நூல், எண்ணல் என ஐந்து சொற்கள் உள்ளனவே அப்பொருளைக் குறிக்க!

“சூழ்ச்சி, உசாவே, தேர்ச்சி, நூல் என
யாப்புற எண்ணல் கிளவி யாகும்.”

என்பது நூற்பா. அடுத்து, ‘ஒற்றுமை’ என்னும் சொல்லுக்குக் ‘குறிக்கோள்’ என்று பொருள் கூறுகிறது திவாகரம்

“ஒற்றுமை குறிக்கோள்.”

என்பது நூற்பா. ஒற்றுமைக்கும் குறிக்கோளுக்கும் உள்ள தொடர்பு அறிஞர்களின் ஆராய்ச்சிக்குரியதாம்.

வரையறுத்தல் என்பதைக் குறிக்கக் கணித்தல், குணித்தல் என்னும் இரு சொற்கள் கூறப்பட்டுள்ளன.

“கணித்தலும், குணித்தலும் வரையறுத்த லாகும்.”

என்பது நூற்பா. இப்பாடலின் துணையால் கணிதத்தைப் பற்றிய ஓர் உண்மை புலனாகிறது. உலகில் இசை, இலக்கியம், ஓவியம், சிற்பம், நாடகம், கணிதம், விஞ்ஞானம், முதலிய பல கலைகள் உள்ளன; இவை பள்ளிக்கூடங்களிலும் மாணவர்க்குப் பயிற்றப்படுகின்றன. இவற்றுள், கணிதத்தைத் தவிர மற்ற கலைகளைப் பொறுத்தவரையில், காலப்போக்கில் பல மாறுதல்களும் புதுப்புது ஆராய்ச்சி முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக,—அன்று எழுதிய சில இலக்கியங்களை இன்று பலர் ஏற்றுக்கொள்வதில்லை, அன்று இசைத்த இசையும் நடித்த நாடகமும் இன்று பெரும்பாலோரைக் கவருவதில்லை. ஓவியத்திலும் ‘மாடர்ன் ஆர்ட்’ (Modern Art) என்ற பெயரில் பல மாறுதல்கள் காணப்படுகின்றன. நில நூலே எடுத்துக் கொண்டாலோ, உலகம் தட்டை என்று அன்று கூறினர்; உருண்டை என்று இன்று கூறுகின்றனர். கதிரவன் (சூரியன்) உலகத்தைச் சுற்றுவதாக அன்று கூறினர்; உலகம் கதிரவனைச் சுற்றுவதாக இன்று கூறுகின்றனர். விஞ்ஞான முடிவுகளோ காலத்துக்குக் காலம் மாறுகின்றன. புதுமை பெறுகின்றன பச்சையரிசியே உடம்புக்கு நல்லது என்று ஒரு நேரத்திலும் புழுங்கலரிசியே நல்லது என்று ஒரு நேரத்திலும், இன்னின்ன பொருட்டுக்களினால் (காரணங்களினால்) இந்தப் பொருள் தீயது என்று: ஒருவராலும், அதே பொருள் இன்னின்ன பொருட்டுக்களினால் நல்லது என்று ஒருவராலும் மாறிமாறிக் கூறப்படுகின்றன.

ஆனால் கணிதக் கலை மட்டும் ஒரே நிலையானது. அன்றும் நான்கும் மூன்றும் ஏழுதான் - இன்றும் 

நான்கும் மூன்றும் ஏழுதான் - என்றைக்குமே நான்கும் மூன்றும் ஏழேதான்! எவர்க்கும் ஏழெட்டு ஐம்பத்தாறுதான்-எந்த இடத்திலும் ஐம்பத்தாறுதான்-எந்தக் காலத்திலும் ஏழெட்டு ஐம்பத்தாறே தான். எனவே கணிதம் என்பது, மாறாத - திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட ஒரே முடிவுடையது என்பது புலனாகும். ஒரு கணக்கைச் சரியான முறையில் எவர் போட்டாலும் ஒரே விடை வருவது கண்கூடன்றோ? இதனால்தான், கணிதம் என்பது, சரியான—திருத்தமான ஒருவகை அறிவியல் (Exact Science) ஆகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சரியாக - திருத்தமாக வரையறுத்தலுக்குக் கணித்தல் என்று பெயராம். கணிப்பது கணிதம். அதாவது திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டதே கணிதம் என்பது புலப்படும். இத்தனை கருத்துக்களையும், ‘கணித்தலும் குணித்தலும் வரையறுத்தலாகும்’ என்னும் திவாகரப் பாடல் உள்ளடக்கிக்கொண்டிருக்கிறதன்றோ?

அடுத்து, பலவகை வரிப் பெயர்கள் நினைவுகூரத்தக்கனவாம். சிற்றரசர்கள் பேரரசர்க்குக் கட்டும் வரியைக் குறிக்கும் பாடல் வருமாறு:

“அரசிறை, திறையே,
கப்பமும், மிறையும் காட்டும் அதுவே.”

சுங்க வரியைக் குறிக்கும் பாடல் வருமாறு:

“உல்கு, சுங்க விறை,
ஆயம், சாரிகை அஃதென மொழிப.”

குடிமக்கள் அரசர்க்குக் கட்டும் வரியைக் குறிக்கும் பாடல் வருமாறு:—

“கரமும், கடனும், கறையும், குடியிறை;
இறுப்பும், வரியும், ஏற்கும் அதற்கே.”



அடுத்து, கூத்து (நடன-நாட்டிய) வகையைப் பற்றி அறிய வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

கூத்தின் பெயர்களாவன:–

“நடமே, நாடகம், கண்ணுள், நட்டம்,
படிகம், ஆடல், தாண்டவம், பரதம்,
ஆறுதல், தூங்கல், வாணி, குரவை,
இலயம், நிலயம், திருத்தம், கூத்தே;
நடனம், தூக்கு, நாட்டியம், நட்டணம்,
நடையும் அதற்கே நவிலலு மாகும்.”

“கரணம், பித்தம், மலைப்பு, பவுரி,
பிரமரி, வீரட் டானம், குனிப்பே,
உள்ளாளனம், கடகம், எனவே ஒன்பதும்
ஒள்ளிய கூத்தின் விகற்ப மாகும்.”

திருமால் ஆடும் கூத்தின் பெயர்களாவன:—

“அல்லியம், குடமாடல், மல்லே, மரக்கால்,
எல்லொளி மாயோன் ஆடலாகும்.”

சிவன் ஆடும் கூத்தின் பெயர்களாவன:–

“பாண்டரங்கம், கபாலம், கொடுகொட்டி,
என்றிவை மூன்றும் முக்கண னாடல்.”

முருகன் ஆடும் கூத்தின் பெயர்களாவன:—

“கொட்டியும், குடையும், குமரன் ஆடல்.”

திருமகள் ஆடும் கூத்து:–

“பரவை என்பது திருமகள் ஆடல்.”

துர்க்கை (காளி) ஆடும் கூத்து:-

“மரக்கால், கூத்தே, துர்க்கை ஆடல்.”



மங்கையர் எழுவர் (சப்த கன்னியர்) ஆடுவது:—

“எழுவர் மங்கையர் ஆடலும் துடியே.”

காமன் (மன்மதன்) ஆடும் கூத்து:—

“பேடாடல் காமனது ஆடலாகும்.”

கைகோத்து ஆடும் கூத்து:—

“குரவைக் கூத்தே கைகோத் தாடல்.”

இருகை முடக்கி ஆடுங் கூத்து:—

“முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித்
துடக்கிய நடையது துணங்கை யாகும்.”

முருகன் சாமி ஏறி ஆடுங் கூத்து:—

“அணங்கும், வெறியும், கழங்கும், வேலனாடல்.”

மேலுள்ள பாடல்களினல், கூத்தைக் குறிக்கும் பெயர்களையும், கூத்தின் வகைகளையும், அவரவர் ஆடும் கூத்துகட்குரிய தனித்தனிப் பெயர்களையும் அறியலாம். இதிலிருந்து தமிழருடைய கூத்துக் கலையின் ஆழமும் அகலமும் உயர்ச்சியும் புகழ்ச்சியும் நன்கு. புலனாகுமே!

அடுத்துச் சில சுவையான சொற்களைக் காண்பாம்:

அவித்தலைக் குறிக்கும் பாடல்:—

“நதுத்தலும் நொதுத்தலும் நுதுத்தலும் அவித்தல்.”

இப்பெயர்கள் சுவையாகவும் வேடிக்கையாகவும் உள்ளனவன்றோ? இரண்டு காலடிகளையும் கீழே 

பதியவைத்துக் கோழிபோல் குந்திக்கொண்டிருப்பதற்குக் ‘குஞ்சித்தல்’ என்று பெயராம்.

“குந்திய கால்நிலை குஞ்சித்த லாகும்.”

அவமதிப்பாக இகழ்ச்சியாகச் சிரிப்பதற்கு ‘அசி’ என்று பெயராம்.

“அசி அவமதிச் சிரிப்பா மென அறைவர்.”

இவ்வாறு பலவகைச் செயல்கள் இத் தொகுதியில் பேசப்பட்டுள்ளன.

இன்னார்க்குத்தான் கொடுப்பது, இப்போதுதான் கொடுப்பது, இத்தனை முறைதான் கொடுப்பது, இன்னதுதான் கொடுப்பது, இவ்வளவுதான் கொடுப்பது என்ற வரன்முறை - வரையறை இல்லாமல், அம்பல் சேந்தனைப் போல, எல்லோர்க்கும், எப்போதும், எத்தனை முறையும், எதனையும், எவ்வளவும் கொடுப்பதற்குக் ‘கொடை மடம்’ என்று பெயராம் - என்று கூறுமுகத்தான், இத்தொகுதியிலும் நன்றியறிதலாகத் திவாகரர் சேந்தனைச் சிற்பித்துள்ளார்:

“திடமொழி அம்பல் சேந்தனை ஏய்ந்த
கொடைமடம் வரையது கொடுத்த லாகும்.”

என்பது அந்நன்றியறிவுப் பாடலாகும். 

10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி

இப்பகுதியில் ஒலி (ஓசை) தொடர்பான பல்வேறு பிரிவுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இதனை இன்னும் நன்கு விளக்க வேண்டும்.

ஒரு மொழி (பாஷை) எனப்படுவது, பல சொற்றொடர்களால் (வாக்கியங்களால்) பேசப்படுவது. ஒரு சொற்றொடர் பல சொற்களால் ஆனது. ஒரு சொல் பல எழுத்துக்களால் ஆனது. ஓர் எழுத்தோ பல ஒலி அணுக்களால் ஆனது. அதாவது, அணு அணுவான பல ஒலிகளின் திரளே ஓர் எழுத்தாகும் எடுத்துக்காட்டாக, ‘ஆ’ என்னும் ஓர் எழுத்தை ஒலிக்கச் சிறிது சிறிதாக—அணு அணுவாக ஓசையை நீட்டிக்கொண்டே செல்லவேண்டும். எனவே, பல ஒலியணுக்களால் ஆனது. எழுத்து; பல எழுத்துக்களாலானது சொல்; பல, சொற்களாலானது சொற்றொடர்; பல சொற்றொடர்களைக் கொண்டது ஒரு மொழி—என்பது புலனாகும். இதனைப் பவணந்தி முனிவர் தமது நன்னூலில்,

“மொழிமுதற் காரணமாம்,
      அணுத்திரள் ஒலி எழுத்து.”

எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார். இது ‘காரண காரிய முறை’ (Logical Method) எனப்படும்.

எனவே, ஒலி பற்றிய பெயர்த் தொகுதியில், ஒலி பற்றிய விவரங்களும், ஒலியாலான எழுத 

திலக்கணமும், எழுத்தாலான சொல்லிலக்கணமும், சொல்லாலான பொருள் இலக்கணமும், பொருள் அமைந்த செய்யுள் இலக்கணமும், செய்யுளோடு சேர்ந்து வரும் இசையிலக்கணமும் சொல்லப்பட்டிருப்பதில் வியப்பில்லை. பொதுவாக நிகண்டு நூலை ஒருவகை ‘மொழி நூல்’ என்று கூறலாமெனின், அதிலும் குறிப்பாக இந்த ஒலி பற்றிய பெயர்த் தொகுதியை ஒருவகை ‘மொழி விஞ்ஞானம்’ என்றே கூறிவிடலாம்.

இனி இத்தொகுதியில் உள்ள சில சிறந்த சொல்லாட்சிகளையும் கருத்து விளக்கங்களையும் கண்டு சுவைப்போம்:—

சொல்லுதல் என்பதைக் குறிக்கும் சொற்களஞ்சியம் வருமாறு:—

“விரித்தல், கதைத்தல், உரைத்தல், கூறல்,
தெரித்தல், ஆடல், நொடித்தல், நவிலல்,
சாற்றல், பணித்தல், மொழிதல், வலித்திடல்,
ஏற்ற முந்நான்கும் சொல்லுதற் கிசையும்.”

“பகர்தல், செப்பல், இயம்பல், பரவல்,
குயிறல், இறுத்தல், கூறல், புகறல்,
கட்டுரை, விளம்பல், கரைதல், ஓதல்,
சொற்றல், வழங்கல், வசனம், காதை,
பேசல், பேச்சு, கிளப்பே, அறைதல்,
இசைப்பு, தேர்தல், மீழற்றல், வாணி,
அசைப்பு, என்றின்னவை சொல்லென அறைவர்;
குயில், வினா, எதிர்ப்பு, கீர், நுவல், பாணி,
இயம், வாக்கு, என்பவும் சொல்லின்பால்.”

சொல்லைப் பற்றிய சொல் வளங்களையறிந்து வியந்தோம். மேலும் தொடருவோம்: பலமுறை 

சொல்லுதலுக்கு ‘மீதுரை’ என்று பெயராம். விடாது பேசுதலுக்குப் ‘பிதற்றுதல்’ என்று பெயராம்.

“மீதுரை பல்கால் விளம்புத லாகும்.”

“பிதற்றுதல் விடாது பேசுதலாகும்.”

ஒருவரிடம் உள்ள குறையைச் சுட்டி அவர் இல்லாத விடத்தில் புறங்கூறுதலுக்குக் ‘கொடுவாய்’ என்று பெயராம். ஒருவரிடம் இல்லாத குறையைக் கற்பனையாகப் புனைந்து அவர் இல்லாத விடத்தில் புறங்கூறுதலுக்குக் ‘கொண்டியம்’, ‘தொடுப்பு’ என்று பெயர்களாம்.

“கொடுவாய் என்பது புறங்கூற லாகும்.”

“கொண்டியம் தொடுப்பு வெறும்புறங் கூறல்.”

சிலரறிந்து பழித்தல், அம்பல் ஆகும் பலரறிந்து பழித்தல் அலர் எனப்படும்:

“அம்பல் சிலரறிந்து தம்முட் புறங்கூறல்.”

“அலரே பலரும் அறிந்து அலர்தூற்றல்.”

ஒருவரது வளர்ச்சியைக் கருதி, அவரது குறையைக் கண்டித்துப் பேசுவதைக் குறிக்கும் சொற்களாவன:—

“கழறலும் இடித்தலும் உறுதிக் கட்டுரை.”

குழந்தையின் பொருள் நிரம்பாத மெல்லிய மழலைப் பேச்சைக் குறிக்கும் பெயர்களாவன:—

“நிழற்றலும், மிழற்றலும், மென்செல்;
மழலை, கொஞ்சல், குதலை, உல்லாபம்,
மிழலை எனவும், விளம்பும் அதற்கே”



ஒன்றும் பேசாமல்—செய்யாமல் சும்மா இருத்தலுக்கு வாளா இருத்தல் என்பது பெயர்:

“வாளா என்கிளவி பேசா என்றாகும்.”

போருக்கு—அதாவது, போட்டிக்கு—விவாதத்திற்கு அழைப்பது அறைகூவல் ஆகும்.

“அறைகூவல் பொர அழைத்தல்.”

கல்வியையும் கற்றலையும் குறிக்கும் பெயர்கள் கருதத்தக்கன:

“உறுதியும், சால்பும், ஓதியும், அறிவும்,
கலையும், கேள்வியும், கல்வி யாகும்.
வித்தை, சாலம், விஞ்சை, ஊதியம்,
மற்றிந் நான்கும் கல்வியின் நாமம்.”

“நவிலல், கெழுமல், பயிலல், கற்றல்.”

உறுதி (நன்மை), சால்பு (பெருந்தன்மை), அறிவு, ஊதியம் என்னும் பெயர்கள் கல்விக்கு இருப்பதை ஊன்றி நோக்கின் கல்வியின் பயனும் சிறப்பும் புலப்படும். கலைகளைக் கற்பதும் கல்வியே என்பது ஈண்டு கருதத்தக்கது. “கேள்வியும் கல்வியாகும்” என்ற தொடரிலிருந்து, கல்வியறிவும் பட்டறிவும் நிறைந்த பெரியோர்களின் சொற்பொழிவு விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதும் கல்வியாகும் என்பது புலனாகும். தாமாகப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் கேட்டாவது தெரிந்து கொள்ளலாமே ‘கற்றில னாயினும் கேட்க’ என்பது வள்ளுவர் வாய்மொழியன்றே!

இலக்கியம் என்னும் சொல்லுக்கு என்னென்னவோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. மேலே

நாட்டு ஆசிரியர்களின் கருத்துக்களையும் இழைத்துக் குழைத்துக் கூறுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகச் சில காண்பாம்:

(1) ‘மொழியின் வாயிலாக மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்து விளக்குவதே இலக்கியம்’ (Literature is thus fundamentally an expression of life -through the medium of language) என்று ஃஅட்சன் (Hudson) என்னும் அறிஞர் கூறியுள்ளார்.

(2) ‘தலை சிறந்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதே இலக்கியம் (Literature is a record of best thoughts) என்று எமர்சன் (Emerson) கூறியுள்ளார்.

(3) ‘மக்களிடம் நற்பண்பை உருவாக்கவல்ல சிறந்த கருவிகளுள் இலக்கியமும் ஒன்று’ (Literature is one of the most powerful instruments for forming character) என்று வைகவுன்ட் மார்லி (Viscount Morley) என்னும் பெரியார் கூறியுள்ளார்.

இவ்வாறே இலக்கியம் பற்றிப் பலரும் பலவாறு கூறிச் செல்கின்றனர். இது குறித்துத் திவாகரம் கூறுவதாவது:—

“இலக்கியம்: உதாரணம், எடுத்துக்காட்டல்.”

என்பது நூற்பா. ஓர் உயர்ந்த கருத்தை—அறிவுரையை—நீதியை—படிப்பினையைத் தக்க உதாரணத்தின் வாயிலாக—எடுத்துக்காட்டின் மூலமாக விளக்குவதே இலக்கியம்; இதுதான் திவாகர நூற்பாவின் இலக்கிய விளக்கம். அந்த எடுத்துக்காட்டு 

(உதாரணம்) வரலாறாகவும் இருக்கலாம்—அல்லது—வாழ்க்கை நிகழ்ச்சியாகவும் இருக்கலாம். சிலப்பதிகாரம் போன்றவை வரலாற்று இலக்கியங்கள். திருக்குறள் போன்றவை வாழ்க்கை நிகழ்ச்சி இலக்கியங்கள்.

இப்போது தமிழ் மொழியில் எத்தனையோ பாவகைகளைக் காண்கின்றோம். ஆனால் பழங்காலத்தில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் வகைகளே முறையே முதன்மை பெற்றிருந்தன. இவற்றுள்ளும் வெண்பாவே முற்பட்டதும் முதன்மை உடையதும் ஆகும். இதனைத் தமிழ்மொழி வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் அறிந்தவர்கள் நன்குணர்வர். மேலும்,

“முதற்பா வெண்பா.”

என்னும் திவாகர நூற்பாவாலும் இக்கருத்து உறுதிபெறும். இதனால், பாக்களுள் குறள் வெண்பாவைத் தேர்ந்தெடுத்த திருவள்ளுவரது உயர்ச்சியும் திருக்குறளின் மாட்சியும் புலப்படுமே.

கணக்கு, கணக்காயர் என்னும் சொற்களைப் பற்றி முன் ஓரிடத்தில் நாம் ஆராய்ந்துள்ளோம். எண்ணாலான கணிதத்தை மட்டுமே இக்காலத்தில் கணக்கு என்னும் சொல்லால், மக்கள் குறிக்கின்றனர். அக்காலத்திலோ, எண்ணாலான கணிதம் எழுத்தாலான இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளையும் கணக்கு என்னும் சொல்லால் அழைத்தனர். நற்றிணை முதலிய பதினெட்டுச் சங்க இலக்கியங்களை ‘மேற்கணக்கு’ என்றும், நாலடியார் முதலிய பதினெட்டுச் சங்க இலக்கியங்களைக் ‘கீழ்க் கணக்கு’ 

என்றும், தமிழ் எழுத்துக்களைத் ‘தமிழ் நெடுங்கணக்கு’ என்றும் அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளதே! இவ்வளவு கருத்துக்களையும் துணிந்து கூறுவதற்கு,

“எழுத்தும் எண்ணும் கணக்கு எனப்படுமே.”

என்னும் திவாகர நூற்பாவும் துணைக்கு வருமே! அடுத்து, ஏழு இசைகளின் பெயர்கள் வருமாறு:—

“குரலே, துத்தம், கைக்கிளை, உழையே,
இளியே, விளரி, தாரம், என்றிவை
எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே”

ஏழு இசைகளுக்கு உரியனவாக—ச, ரி, க, ம, ப, த, நி,—என்னும் ஏழு எழுத்துக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வடமொழி முறையை ஒட்டியவை. இவ்வெழுத்துக்களுக்கு ஈடாக—ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள—என்னும் ஏழு தமிழ் எழுத்துக்களையும் திவாகரம் பரிந்துரைக்கிறது:

“ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும்
இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக் குரிய.”

என்பது நூற்பா. தமிழிசையுலகம் இதனை ஊன்றி ஆராய்ந்து உண்மை காணவேண்டும்.

இறுதியாகத் திவாகரத்தில், பொதுவாக ஒலியைக் குறிக்க இருபத்திரண்டு பெயர்களும், ஒலித்தலைக் குறிக்க முப்பத்தேழு பெயர்களும், ஆரவாரத்தைக் குறிக்க இருபத்தொரு பெயர்களும் கூறப்பட்டுள்ளன. மேலும், சில ஒலி வகைகள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. அவை வருமாறு:— 

எழுத்து எழுத்தாகப் பிரித்து உணரமுடியாத ஓசையைக் குறிக்கும் பெயர்களாவன:—

“பிளிறலும், குளிரலும், பிரற்றலும், சிரற்றலும்,
மருளலும், பயிறலும், குரைத்தலும், கனைத்தலும்,
முளைத்தலும், அகவலும், எழுத்திலா ஓசை.”

பலவகையான ஒலிகள் கலந்த கலப்போசையைக் குறிக்கும் பெயர்களாவன:—

“தமரம், பூசல், ஆர்ப்பு, கர்ச்சனை,
குமுறல், உலம்பல், கோடணை, கோலா
கலமே, தெழித்தல், கலகம், ஆகுலமோடு,
ஊறுதல், முந்நான்கு ஒன்றலாப் பேரொலி.”

ஒலிக் குறிப்புக்களை அறிவிக்கும் பெயர்களாவன:—

“இம்மெனல், கல்லெனல், இழுமெனல், வல்லெனல்,
பொம்மெனல், ஒல்லெனல், பொள்ளெனல்,
ஞெள்ளெனல் அன்ன அநுகரண ஓசையாகும்;
கொம்மெனல், விடேலெனல், நெரேலெனல்,
முகேரெனல், அம்மெனல்,
சசேலெனல், அநுகரண ஓசை.”

உலக வழக்கில், சரேலெனப் பாய்ந்தான்; படீர் என உடைத்தான் என்றெல்லாம் சொல்லுகின்றோம் அல்லவா? இப்பாட்டில் கூறப்பட்டிருப்பவை யாவும் இவ்வினத்தைக் சேர்ந்தவையே.

இரட்டைக் கிளவிகளாக வரும் ஒலிப் பெயர்களாவன:— 

“படபடெனல், களகளெனல், பதபதெனல்,
கொளகொளெனல், மொடு மொடெனல்,
திடுதிடெனல், மொகமொகெனல், கலகலெனல்
நெடுநெடெனல், கடகடெனல், நிறையுபயவோசை.”

(உபயம்=இரண்டு; உபய ஓசை=இரட்டை ஒலி)

மேலுள்ள ஒலி பற்றிய பாடல்களைக் கொண்டு, ஒரு நிகண்டு நூல், மொழித் துறையில் எத்துணை தொலைவு சென்று செயலாற்றியிருக்கிறது என்பதை நுனித்துணரலாம்.

மேலும் இத் தொகுதியில், எழுத்திலக்கணப் பகுதிகளும், சொல்லிலக்கணப் பகுதிகளும், பொருளிலக்கணப் பகுதிகளும், யாப்பிலக்கணப் பகுதிகளும் இசையிலக்கணப் பகுதிகளும் பரவலாக விளக்கப்பட்டிருப்பதை நூலினுட் சென்று காண்க. 

11. ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி

கடந்த பத்துத் தொகுதிகளும் ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதிகளாகும். அதாவது, ஒவ்வொரு பொருளுக்கும் எத்தனை பெயர்களுண்டோ அத்தனை பெயர்களும் கொடுக்கப்பட்டன. இந்தப் பதினோராவது தொகுதியோ அவற்றினும் வேறுபட்டது என்பது முன்னரே அறிந்த செய்தி. அதாவது, நாம் இந்தக் காலத்தில் பயன்படுத்தும் அகராதியைப் (Dictionary) போல, ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் (அர்த்தங்கள்) உண்டோ அத்தனை பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ள பகுதியாகும் இது. அதனால்தான், ‘ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி’ என்னும் தலைப்பு இப்பகுதிக்குச் சூட்டப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் முந்நூற்று எழுபத்தேழு சொற்களுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. இவற்றுள் ஒரே பொருளுடைய சொல் எதுவும் இல்லை. குறைந்தது இரண்டு பொருள்களாயினும் உடைய சொற்களே உள்ளன. இருபத்து மூன்று பொருள்கள் (அர்த்தங்கள்) உடைய சொல்லும் இவற்றுள் உண்டு.

நாம் இப்போது பயன்படுத்தி வரும் அகராதிகளில் ஆயிரக்கணக்கான சொற்கள் உள்ளனவே, ஆனால் இத்தொகுதியில் முந்நூற்று எழுபத்தேழு சொற்கள் தாமே உள்ளன; மற்ற சொற்கட்கெல்லாம் 

பொருள் தரவில்லையே - என்று கேட்கத் தோன்றும். இப் பதினோராந் தொகுதியில் நேர்முகமாக முந்நூற்று: எழுபத்தேழு சொற்கட்குப் பொருள் கூறப்பட்டிருப்பினும், மற்ற பத்துத் தொகுதிகளில் மறைமுகமாகப் பல்லாயிரக்கணக்கான (9500) சொற்கட்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, - முதல் தொகுதியில் முதல் பாவில் சிவனைக் குறிப்பனவாக அறுபத்து மூன்று பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அப்படியென்றால், அந்த அறுபத்து மூன்று பெயர்கட்கும் சிவன் என்று பொருள் (அர்த்தம்) எழுதிவிட்டதாகத்தானே பொருள் கொள்ள வேண்டும்? இவ்வாறே எல்லாத் தொகுதிகளிலும் உள்ள எல்லாச் சொற்களுமே பொருள் விளக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கொள்ளவேண்டும்.

ஏன், இந்தத் தொகுதியிலுங்கூட, முந்நூற்று எழுபத்தேழு சொற்களின் பொருள்களாகப் பல சொற்கள் தரப்பட்டுள்ளன அல்லவா? அந்தப் பல சொற்களின் பொருள்களாக இந்த முந்நூற்று எழுபத்தேழு சொற்களையும் கொள்ளவேண்டும். இவ்வாறாக இந்தத் தொகுதியிலும் எண்ணற்ற சொற்கள் இடம், பெற்றிருத்தலை அறியலாம்.

இத் தொகுதியினும் இக்கால அகராதிகளில் சொற்கள் மிக்கிருப்பதற்குத் தக்க பொருட்டுகள் (காரணங்கள்) வேறு சிலவும் உண்டு. அவை யாவன:- ஒன்று: பேச்சு வழக்கில் உள்ள எல்லா எளிய சொற்களும் இக்கால அகராதியில் இடம் பெற்றுள்ளன. அங்ஙனமின்றி ஓரளவு அரிய சொற்கள் ம்ட்டுமே நிகண்டில் இடம் பெற்றுள்ளன. எளிய சொற்கட்குப் பொருள் எழுதிக்கொண்டு கிடக்க வேண்டியதில்லை என்பது நிகண்டு நூலாரின் கருத்தாயிருக்கலாம். 

இரண்டு : இக்காலத்தில் கலைகள் பெருகிப் பல்கியுள்ளமையால், இருக்கும் தமிழ்ச் சொற்களைக் கொண்டே மின்சாரம், புகைவண்டி முதலிய கலைத் துறைச் சொற்கள் பல தமிழில் புதியனவாகப் படைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இக்கால அகராதிகளில் இடம் பிடித்துக் கொண்டுள்ளன.

மூன்று : பிற்காலத்தில் பல மொழிகளோடு தொடர்பு கொள்ளவேண்டி நேர்ந்ததால், அவை சார்பான பல சொற்கள் இக்கால அகராதிகளில் ஏறியுள்ளன.

இன்னும் பல்வேறு சமயங்கள் - நாகரிகங்கள் தொடர்பாகப் பல சொற்கள் இடம்பெற்றன. இவ் வாறாகப் பலவகையிலும் இக்கால அகராதிகள் நிகண்டுகளைவிட உருவத்தில் உப்பிவிட்டன.

இத்தொகுதியிலுள்ள முந்நூற்று எழுபத்தேழு சொற்களும் ஆதியிற் பொருள், அந்தத்துப் பொருள், என்னும் இரு பிரிவின் கீழ் அகரவரிரையில் பிற்காலத்தவரால் அடுக்கி அமைக்கப்பட்டுள்ளன என்று முன்னோரிடத்தில் கூறியுள்ள செய்தியை ஈண்டு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளல் நன்று.

இனி இத்தொகுதியில் உள்ள சில சொற்பொருள் விளக்கங்களைக் காண்பாம்:

அடுதல் என்னும் சொல்லுக்குச் சமைத்தல், கொல்லுதல் (கோறல்) என்னும் இரு பொருட்கள் கூறப்பட்டுள்ளன. 

“அடுதல் சமைத்தலும், கோறலும் ஆகும்.”

என்பது நூற்பா. சமைத்தலுக்கும் கொல்லுதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்னும் குறிப்பு இந்த நூற்பாவால் புலனாகலாம். இதனைச் சிறிது ஆய்வாம் :

ஓர் உயிர் உணவு உண்கிறது என்றால் இன்னொன்றைக் கொன்றுவிட்டது என்றுதான் அதற்குப் பொருள். பெரும்பாலான அஃறிணை உயிர்கள் புலால் உண்ணிகளாகவே (மாமிச பட்சணகளாகவே) உள்ளன. அதாவது ஒன்றையொன்று கொன்றே. உண்ணுகின்றன. மரக்கறி உண்ணிகள் (சாகப் பட்சணிகள்) என்று அழைக்கப்படுகிற ஆடு மாடு. முதலியவை செடி கொடிகளை அப்படியே இழுத்துப் பிடுங்கி மெல்லுகின்றன. இஃதும் உயிர்க்கொலையே. மரஞ்செடி கொடிகளும் உயிர் உடையனவேயாம்.

மக்களையே எடுத்துக்கொள்வோமே. மிகப் பழங்காலத்தில் மக்கள் பிற உயிர்களைக் கொன்றே, தின்றார்கள் அண்மைக்காலம் வரையுங்கூட மக்களைக்கொன்று தின்னும் மக்களும் இருந்தனர். இன்றுங்கூட உலகில் புலால் புசிப்பவரே (Non-vegetarians) மிகப் பெரும்பான்மையர், மரக்கறி உணவினரோ (vegetarians) மிகச் சிறுபான்மையரே. ஒரு நாளைக்குக் கூட - ஒரு வேளைக்குக் கூட மரக்கறி மட்டும் உண்ண முடியாதவராய், நாடோறும் - வேளை தோறும் புலால் கலந்தே புசிப்பவர் இன்றும் பலர் உளர். மரக்கறி உணவிலுங்கூட உயிர்க் கொலை பரவலாக உள்ளது. நாம் எத்தனையோ நெற்களை ஒரு வேளை உணவாக உண்ணுகிறோம். அத்தனை நெற்களும் அத்தனை உயிர்கள். நாம் உண்ணும் அவரை, துவரை, உளுந்து. 

கடலை முதலிய பயறுவகைகள் அனைத்தும் உயிர்களே. திருவிழா நாட்களில் சுண்டல் செய்வதற்காக அண்டா நிறையக் கடலைகளைக் கொட்டி வேகவைக்கிறோமே — அப்போது உள்ளே கொதிக்கும் ஒலி கேட்கிறதே அது என்ன ஒலி தெரியுமா? ஐயையோ! எங்களை அடாத முறையில் கொல்கின்றீர்களே! என்று ஆயிரக்கணக்கான கடலைகள் அலறி ஓலமிடும் ஒலி தான் அது. நாம் உண்ணும் தானிய வகைகளும் பயறு வகைகளும், நிலத்தில் விதைத்தால் முளைத்துப் புதுவாழ்வு பெறக்கூடிய புத்துயிர்களே. நாம் புசிக்கும் காய்கனிகளிலுள்ள விதைகளும் கொட்டைகளுங்கூட அத்தகையனவே. ஆனால் எல்லாவற்றையும் நாம் உள்ளே தள்ளிச் செரிக்கச் செய்து விடுகிறோம்.

இதிலிருந்து, உணவு சமைத்தல் என்றால், உயிர்களைக் கொல்லுதல்—உயிர்களைக் கொன்று பதம் செய்தல் என்று பொருள் கொள்ள வழியிருக்கிறது. அந்தக் காலத்தில் புலாலையும் சரி—மரக்கறியையும் சரி மக்கள் பச்சையாகவே உண்டார்கள்; இந்தக் காலத்தில் நாம் வேக வைத்து உண்ணுகிறோம்—இதுதான் வேற்றுமை.

சமையல் வேலையின் தொடக்க நிகழ்ச்சி கொலைச் செயலே—அதாவது—ஆட்டையோ, கோழியையோ, மீனையோ, கூலங்களையோ (தானியங்களையோ) பயறுகளையோ கொல்லத் தொடங்கியபோதே சமையல் கலையும் தொடங்கிவிட்டது.

பண்டைக் காலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள்—கொல்லா நோன்பிகள், தாமாக உதிர்ந்த சருகுகளையும், தாமாக விழுந்த கனிகளின் (விதைகள்— 

கொட்டைகள் நீங்கிய) தசைப் பகுதிகளையும் மட்டுமே உண்டு வந்ததில் உள்ள மறைபொருள் (இரகசியம்) யாது? மக்கள் கொள்ளும் நடைமுறை உணவில் கொலைச்செயல் அடங்கியுள்ளது என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தமையினாலேயே, தாமாக உதிர்ந்து மீண்டும் முளைக்காத பகுதிகளை மட்டும் உண்டு வந்தனர்.

இவ்வளவு கருத்துக்களையும் நினைவு செய்து கொள்ள, ‘அடுதல் சமைத்தலும் கோறலும் ஆகும்’ என்னும் நூற்பா உதவி செய்கிறதல்லவா? அடுப்பு, அடுக்களை (அடுப்பங்கரை), அடிசில் (உணவு) ஆகிய சொற்கள் அடுதல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டனவே என்பதும் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

அடுத்து, கடி என்னும் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறப்பட்டிருப்பது கருதத்தக்கது அவையாவன:

“கடியென் கிளவி, காப்பே, கூர்மை,
விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே,
வரைவே, மிகுதி, புதுமை, தோற்றம்,
மெய்படத் தோன்றும் பொருட்டாகும்மே;
ஐயமும், கரிப்பும், ஆகலும் உரித்தே.”

என்பது நூற்பா. இந்நிகண்டுப் பொருள்களைப் பார்த்தே இக்கால அகராதியினர் சொற்பொருள் விளக்கம் செய்துள்ளனர்.

படித்துத் தெரிந்துகொள்வது மட்டும்தான் கல்வி என்பதில்லை. கேட்டுத் தெரிந்து கொள்வதும் கல்விதான். கேள்வி என்னும் சொல்லுக்கு, கேட்கும். 

காது என்னும் பொருளோடு கல்வி என்னும் பொருளும் திவாகரத்தில் கூறப்பட்டுள்ளது:

“கேள்வி கல்வியும் செவியும் கிளக்கும்.”

என்பது நூற்பா ‘கற்றிலனாயினும் கேட்க’ என்னும் திருக்குறள் பகுதியும், ‘கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன. கல்வி உளநூல் (Educational Psychology) வளர்ச்சி காலத்தில், படித்துத் தெரிந்து கொள்வதோடு, கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்—பார்த்துத் தெரிந்து கொள்ளுதல்—தொட்டுத் தெரிந்து கொள்ளுதல்—மோந்து தெரிந்து கொள்ளுதல்—சுவைத்துத் தெரிந்து கொள்ளுதல் ஆகிய ஐம்புலப் (Sense Training) பயிற்சியும், செய்து (Learning By Doing) தெரிந்து கொள்ளுதல் ஆகிய இயக்கப்பொறிப் (Kinaesthetic) பயிற்சியுங்கூடக் கல்வியாகக் கருதப்படுவதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

நாம் அரசியல் (Politics) என்று சொல்கிறோமே அதைக் குறிக்கக் கொற்றம் என்னும் அழகிய தமிழ்ச் சொல்லும் அக்காலத்தில் வழங்கப்பட்டது என்பதனை

“கொற்றம் அரசியலும் வெற்றியும் ஆகும்.”

என்னும் நூற்பாவால் அறியலாம்.

பெண்கள் காதில் அணிந்து கொள்ளும் அணிகலனுக்குக் ‘கம்மல்’ என்ற பெயர் உண்டு. இதனை இக் காலத்தினர் ‘தோடு’ என அழைக்கின்றனர். இதனையே சற்று முன்காலம் வரைக்கும் ‘ஓலை’ என்று அழைத்தனர். இன்றும் சிலவிடங்களில் சிலர் ஓலை என்றே அழைக்கின்றனர். ஆயினும், தோடு என 

அழைப்பதே இன்று நாகரிகமாகக் கருதப்படுகிறது. இதனையே இலக்கியப் புலவர்கள் ‘குழை’ என அன்றும் அழைத்தனர்—இன்றும் அழைக்கின்றனர். ஓலை, குழை, தோடு என்னும் பெயர்கள் நமக்கு அறிவிக்கும் மறைபொருள் (இரகசியம்) யாது?

மிகப் பழங்காலத்து மக்கள் வெள்ளி, பொன் முதலியவற்றால் நகை செய்து காதுகளில் அணிந்து கொள்ளவில்லை. இயற்கையாகக் கிடைத்த பூக்கள், பூவிதழ்கள், தளிர்கள், தென்னையோலை–பனையோலைகள் முதலியவற்றையே காதுகளில் அணிகலன்களாகச் செருகி மகிழ்ந்தனர். இன்றும் சிலர் மலர்களைக் காதில் செருகிக் கொள்வதைக் காணலாம். இன்றும் சிலர் தென்னையோலை பனையோலைகளைச் சுருட்டிக் காதுத்துளையில் பதித்துக் கொள்வதைப் பார்க்கலாம்

இவ்வாறு மலர்களையும் இதழ்களையும் தளிர்களையும் அணிந்துவந்த மக்கள், அவை உடனுக்குடன் காய்ந்து கருகிப் போவதால் அடிக்கடி வேறு மாற்ற வேண்டியிருப்பதில் உள்ள தொல்லையை நீக்குவதற்காக, அவை போலவே நிலையாகப் பொன், வெள்ளி முதலியவற்றால் நகைகள் செய்து அணியத் தொடங்கினர். அப்போதும் சரி—இப்போதும் சரி—பழைய பெயர்களை விடவில்லை. மிக்க விலை மதிப்புடைய அந்த அணிகலன்களை ஓலை என்றும், தளிர் என்னும் பொருளுடைய குழை என்றும், இதழ்—ஓலை என்னும் பொருளுடையதோடு என்றும் இந்நாள்வரை அழைத்து வருகின்றனர். இவ்வளவு கருத்துக்களையும் 

“குழையே, குண்டலம், தளிர், சேறும் ஆகும்.”

“தோடே, தொகுதியும், பனையிதழ் போல்பவும்,
பூவின் இதழும் புகலும் கிளவி,"

என்னும் திவாகர நூற்பாக்களால் உணரலாம்.

இதிலிருந்து, இப்போது பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்களின் மதிப்பு எத்தகையது: என்பதும் புலனாகலாம். அதாவது—உண்மையான பூக்களுக்குப் பதிலாக இப்போது பல வண்ணக் காகிதப் பூக்கள் நாட்டில் நிறைய நடமாடுகின்றன. இவை வாடா மலர்களாய் மக்களையும் இடங்களையும் ஒப்பனை செய்கின்றன. இருப்பினும் இவற்றிற்கு உண்மையான மலர்களின் மதிப்போ தகுதியோ இல்லையன்றோ ? உண்மையான ஓலை, குழை, தோடு இவற்றிற்குப் பதிலாக, பொன், வெள்ளி முதலியவற்றால் செய்த ஓலை, குழை, தோடு இவற்றிற்குள்ள மதிப்பும் காகிதப் பூக்களின் மதிப்புப் போன்றதே!

ஞமலி, ஞாலம் என்பனபோல் ஞகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மொழியில் மிகவும் குறைவே. அவ்வரிசையில் ‘ஞெ’ என்னும் எழுத்தில் தொடங்கும். ஞெள்ளல் என்னும் சொல்லுக்கு நிகண்டில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளமை புதிய கவர்ச்சியளிக்கிறது. அது வருமாறு:

(ஆதியிற் பொருள் பகுதி)

“ஞெள்ளல், தெருவே, மேன்மையும், நிகழ்த்தும்."

(அந்தத்துப் பொருள் பகுதி)

“சோர்வு, மிகுதல், உடன்படல், படுகர்,
நாலினோடு ஒலியும், தெருவும், ஞெள்ளல்.”

என்பன நூற்பாக்கள். 

பண்டைக் காலத்தில் தமிழகத்தில் கணிதம் எவ்வளவு வளர்ச்சியுற்றிருந்தது என்பதனை

“நூலே, எண்ணும், பனுவலும் ஆகும்".

என்னும் நூற்பாவால் அறியலாம். நூல் என்றால், எண் எனப்படும் கணிதக் கலை நினைவுக்கு வருமளவுக்கு அன்று கணிதக் கலை தமிழில் வளர்ந்திருந்தது. ஆனால் இன்று...? எல்லாவற்றையும் இழந்து, தமிழில் ஒன்றும் இல்லை என்ற குறைச் சொல்லைக் காதால் கேட்டுப் பிறர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

‘மா’ என்னும் ஓரெழுத்து மொழிக்கு ஆறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன:

“மாவே, பெருமையும், கருமையும், சூதமும்,
மேவிய நாற்கால் உடையவும், வண்டும்,
பூவுறை திரு என ஆறையும் பொருந்தும்.”

[சூதம்=மாமரம்; நாற்கால் உடைய=விலங்குகள்; பூஉறை திரு=தாமரைப் பூவில் வதியும் திருமகள்]

அரி என்னும் சொல்லுக்கு உரிய இருபத்து மூன்று பொருள்களும் அறியத்தக்கன:

“கண், வரி, கடல், பொன், கிண்கிணிப் பெய் பால்,
பொன்னிறம், குதிரை, தவளை, குரங்கு,
பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை,
எனப் பதினைந்தும் அரியெனப் புகல்ப,
சிங்கம், திருமால், திகிரி, இரவி,
இந்திரன், காற்றே, யமனே, அங்கி, என்று
அங்கண் வடமொழிச் சிதைவின் அரியாகும்.”

என்பது நூற்பா. அரி என்னும் சொல் தற்செயலாகத் தமிழ் மொழியிலும் உள்ளது; சிறு ஒலி வேறுபாட்

டுடன் வடமொழியிலும் உள்ளது. அரி என்னும் வட மொழிச் சொல்லின் பொருள்கள் தமிழ் மொழியிலும் கலந்து பலரால் பயன்படுத்தப்படுகின்றன. மேலுள்ள இருபத்து மூன்று பொருள்களுள் முதல் பதினைந்தும் அரி என்னும் தமிழ்ச் சொல்லுக்கு உரியன; இறுதி எட்டும் அரி என்னும் வட மொழிச் சொல்லுக்கு உரியன. இவ்வுண்மை உணராமல், அரி என்னும் சொல் வட மொழியிலிருந்துதான் தமிழ் மொழிக்கு வந்தது என்று யாரும் உளறக்கூடாது.

அரி என்னும் சொல் தமிழ் இலக்கியங்களில் பல விடங்களில் பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். நிகண்டு நூற்பாக்களை நெட்டுரு செய்திருப்பவர்கள் முட்டின்றிப் பொருள் புரிந்து கொள்ள முடியுமன்றோ நிகண்டின் பயன் இப்போது புரியுமே!

கிழி என்னும் சொற்கு மூன்று பொருள்கள் கூறப்பட்டுள்ளன:

“எழுது படமும் இருநிதிப் பொதியும்
கிழிபடு துகிலும் கிழியெனற்கு உரிய.”

எழுது படம் என்றால் ஓவியம். இருநிதிப் பொதி என்றால் துணியில் கட்டிய பொன் மூட்டை அதாவது பொற்கிழி, கிழிபடுதுகில் என்றால் பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு பகுதி.

ஈண்டு எழுதுபடம் என்னும் பொருள் கவனிக்கத்தக்கது. சுவரிலும் பலகையிலும் துணியிலும் தாளிலும் ஓவியம் தீட்டப்படுகிறது. பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்ட பகுதியில் எழுதப்படும் ஓவியம் கிழி என அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஓவியம் என்னும் 

பொருளைக் குறிக்கும் படம் என்னும் வடசொல்லுக்குத் துணி என்பது நேர்பொருள் என்றும், துணியில் எழுதப்பட்ட ஓவியம் ‘படம்’ என வடமொழியாளரால் அழைக்கப்பட்டதென்றும் சொல்லப்படுவதுண்டு. இந்தப் படம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்தான் கிழி என்பது. கிழியில் (துணியில்) எழுதப்படும் ஓவியம் ‘கிழி’ எனப்பட்டது.

அடுத்துக் ‘கூழ்’ என்னும் சொல் நினைக்கத்தக்கது. இச் சொல் இலக்கியங்களில் உணவு, பயிர் என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது. பயிர் தானே உணவுப் பொருளாக மாறுகிறது! அதனால் இரண்டையும் கூழ் எனல் சாலும்.

“பல்வகை உணவும், பயிரும், பொன்னும்,
கொள்ப மாதோ கூழ்என் கிளவி.”

என்பது திவாகரம். ஈண்டு, பல்வகை உணவுக்கும் கூழ் என்பதே பொதுப் பெயர் என்பது பெறப்படும். ஆனால் இன்று நடைமுறை உலக வழக்கில், கூலங்களை (தானியங்களை) மாவாக்கித் துழவிய ஒரு வகைத் தடிப்பான நீருணவே கூழ் எனப்படுகிறது. இதிலிருந்து அறியக் கிடப்பதென்ன? நாகரிகம் முதிராத மிகப் பழங்காலத்து மக்கள், கூலங்களை இடித்து நசுக்கி அப்படியே துழவி உண்டார்கள்; அதுதான் அன்றைய உணவு முறை—அதுதான் அன்றைய சமையல் முறை. அந்த உணவைக் கூழ் என்று அழைத்து வந்தார்கள். பின்னர் வேறு விதமாகச் செய்யப்பட்ட உணவும் கூழ் என அழைக்கப்பட்டது, உணவு என்றால் கூழ்—கூழ் என்றால் உணவு என்ற நிலை அன்று இருந்தது. பிறகு நாளடைவில் நாகரிக முதிர்ச்சியால் புதிய முறையில்

உணவு செய்யப்பட்டது. புது முறைகள் புகத் தொடங்கியதும், ஒவ்வொன்றும்—சோறு, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, பொங்கல், புலவு என்பன போல—ஒவ்வொரு பெயர் பெற்றது. பழைய கறுப்பன் பழைய கறுப்பனே என்றபடி, இடித்துத் துழவிய நீருணவுமட்டும் இன்றும் கூழ் என்னும் பெயரளவில் நிற்கிறது. ஆயின், புலவர்கள் மட்டும் பழைய மரபைவிடாது உணவு என்னும் பொருளில் கூழ் என்னும் சொல்லே ஆண்டு வருகின்றனர். இதுதான் கூழின் வரலாறு.

இந்த நூற்பாவில் கூழ் என்னும் சொல்லுக்குப் பொன் என்னும் பொருளும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொன் கொடுத்தால் உணவுப் பொருள் கிடைக்கும்; அதனால் பொன்னும் கூழ் எனப்பட்டது போலும் இதிலிருந்து, பழங்காலத்தில் தமிழ்நாட்டில் பொன் நாணயம் புழக்கத்தில் இருந்தது என்பதும் தெரியவரும். பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பொன் கொடுத்து வாங்கும் பொருள் உணவுட் பொருள்மட்டுமேயாகும். ஆடை அணிகலன் முதலியன என்றோ ஒரு நாளைக்கே வாங்கப்படும். இன்றும் இந்நிலையைக் காணலாம். எனவே பொன்னின் பயனாக, உணவுப் பொருள் வாங்கும் நோக்கமே முனைப்புற்றிருந்ததால் பொன்னும் கூழ் எனப்பட்டது. “இந்தப் (சம்பளப்) பணத்தைக் கொண்டு தான் நாங்கள் இத்தனை பேரும் சாப்பிட வேண்டும்” என்று உலக வழக்கில் பணத்துக்கும் உணவுக்கும் தொடர்பு காட்டப்படுவதையும் ஈண்டு ஒப்பு நோக்குக (இது போன்ற சொற் குடும்பங்களைப் பற்றி இந்நூலின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.) 

புலவர் என்னும் சொல்லால் அறு வகையினர் குறிக்கப்பட்டுள்ளனர்:

“அமரரும், கவிஞரும், ஆடுநரும், பாடுநரும்,
பொருநரும், அறிஞரும், புலவர் எனப்படுமே.”

என்பது நூற்பா. அமரர்=தேவர்; பொருநர்=போர் மறவர். ஒவ்வொரு கலையிலும் வல்லவர் புலவர் என அழைக்கப்படுவர் என்பது இப்பாடலால் புலனாகும். தேவருக்கும் இப்பெயர் உண்டு என்பதிலிருந்து இப் பெயரின் பெருமை விளங்கும்.

வாகை என்றால் வெற்றி. ஒரு துறையில் வெற்றி பெற்றவர் வாகை என்னும் ஒரு வகைப் பூ சூடிக்கொள்ளுதல் மரபு. நாளடைவில், வெற்றி பெற்றவர் வாகைப் பூ சூடினும் சூடாவிடினும் அவர் வாகை சூடினர்’ என்று சொல்லும் மரபு ஏற்பட்டுவிட்டது. வெற்றி என்றால் போரில் பெறும் வெற்றிமட்டும் சிலருக்கு நினைவுக்கு வரும். இன்னும் சிறிது ‘தாராளக் கணக்கு’ போட்டுப் பார்த்தால், போட்டிகளில் பெறும் வெற்றியும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். இவை மட்டும் வெற்றியாகா. உழைப்பு, கல்வி, பண்பு, கொடை, ஒழுக்கம், தவம், அறச்செயல்கள் முதலிய நல்லனவற்றிலெல்லாம் மற்றையோரினும் முதன்மை பெற்றுத் திகழ்வதும் வாகையாகும். இந்த அரும்பெருங் கருத்தைத் திவாகரம் அழகாக அறிவித்துள்ளது:

“ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும்
கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும்
சால்பு முதலாம் பண்பும் ஈகையும்
ஒழுக்க முதலாம் தவமும் அறத்துறையும்
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும்
வருவன எல்லாம் வாகை என்னும் பெயர்.”



என்பது நூற்பா. மறத்துறையில்மட்டும் வெற்றி நோக்குடன் வெறிகொண்டலையும் மக்கட் கூட்டம், அதனை விடுத்து அறத்துறையில் கண் திருப்புமாயின், உலகில் போட்டி பொறாமை போர் பகை முதலிய தீமைகள் விலகி, உயர்வு ஒற்றுமை ஒப்புரவு முதலிய நன்மைகள் பெருகி இவ்வுலகம் இன்பவுலகமாக மாறிவிடும் அன்றோ?

இந்தப் பதினோராம் தொகுதியில் இரண்டு இடங்களில் தமிழ் முழக்கம் கேட்கிறது. ஆசிரியர் திவாகரர் தமது தாய் மொழியாகிய தமிழ் மொழியைக் ‘கன்னித் தமிழ்’ என்றும், ‘வாழித் தமிழ்’ என்றும் புகழ்ந்து மகிழ்வெய்துகிறார் கம்பலை, மடங்கல் என்னும் இரு சொற்களையும் தமிழர் இன்னின்ன பொருள்களில் வழங்குவர் என்று கூறுமுகத்தான் தமிழைச் சிறப்பித்து ஆசிரியர் சிறப்பெய்துகிறார்:

“இன்னாங் கோசை, நடுக்கம், அச்சம்,
கன்னித் தமிழோர் கம்பலை என்ப.”

“ஊழித்தீ, சிங்கம், உகமுடிவு, இடியென,
வாழித் தமிழோர் மடங்கல் என்ப.
கொடுங் கூற்றின் பெயரும், நோயும், கூறும்”

என்பன பாச்கள். இன்று தமிழின் பெருமையைப் பேசுவோருக்கு ஒருசிலரால் என்னென்னவோ ‘பட்டங்கள்’ கட்டப்படுகின்றன. திவாகர முனிவரோ, எட்டாம் நூற்றாண்டிலேயே, என்றும் குலையாத இளைய கன்னிமொழி தமிழ் என்றும், என்றும் அழியாது வாழும் மொழி தமிழ் என்றும் கூறித் தம் மொழியுணர்வை மொழிப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார். உண்மை

யான தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரையில் ‘தாம் ஆடாவிடினும் தம் தசை ஆடுவது’ உறுதி.

பொறை என்னும் சொற்குப் பொருள் கூறும் வாயிலாக ஆசிரியர் அம்பல் சேந்தனது பொறுமையைப் புகழ்ந்துளார்:

“மலை, சுமை, பாரம், அம்பல் சேந்தனோடு
உலவிய பொறுமை, பார், ஐந்தும் பொறையே,”

பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சேந்தன் சிறப்பிக்கப்பெற்றுள்ளான்.

இந்தப் பதினோராந் தொகுதி, இக்காலத்துப் பயன்படுத்தப்படுகிற ‘டிக்க்ஷனரி’ எனப்படும் அகராதியைப் போன்றதாதலின், அக்காலத்து மக்கள் இத் தொகுதியையே பெருவாரியாகப் பயின்றனர்—மனப்பாடமும் செய்துவைத்துக் கொண்டனர். நிகண்டு கற்றவர் என்னும் பெயருக்கு உரியவர் மட்டுமல்லர்—பொதுவாகப் படித்தவர் என்னும் பெயருக்கு உரியவர் அனைவருமே, நிகண்டு நூலிலுள்ள மற்ற தொகுதிகளைக் கற்றாலும் கற்காவிடினும், பதினோராந் தொகுதியாவது கட்டாயம் கற்றேயிருந்தனர். பதினோராந் தொகுதியைப் பதினோராம் நிகண்டு எனத் தனி நிகண்டு நூல் போல் குறிப்பிடும் வழக்கமும் அன்று இருந்தது. இதிலிருந்து, இத்தொகுதியின் இன்றியமையாமையும் பரந்த பயனும் நன்கு புலப்படும். 

12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி

முதல் பத்துத் தொகுதிகளும் ‘ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதிகள்’ எனவும், பதினோராம் தொகுதி ‘ஒரு சொல் பல் பொருள் பெயர்த்தொகுதி’ எனவும், பன்னிரண்டாம் தொகுதியோ, அவற்றினும் வேறுபட்டதாய், ‘பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி’ என்னும் தனி வகையது எனவும் முன்னரே அறிந்து வைத்துள்ளோம்.

ஆம்! முக்காலம், ஐம்பொறி, முப்பத்திரண்டு அறம் முதலிய எண் குழுப் பெயர்களில் அடங்கியுள்ள பொருள்கள் இன்னின்னவை எனத் தெளிவிக்கும் தொகுதி இப் பன்னிரண்டாம் தொகுதியாகும். பிற்காலத்தில் அகராதி அமைத்தவர்கள் இதுபோன்ற பகுதிக்குத் ‘தொகையகராதி’ எனப் பெயர் தந்துள்ளனர். ஐம்பொறி என்னும் ஒரு பெயரிலுள்ள ஐந்து என்னும் தொகை, மெய்-வாய்-கண்-மூக்கு-செவி என்னும் பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கின்றதல்லவா? அதனால், இந்தப் பகுதிக்குப் ‘பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி’ என்னும் பெயரும், இதுபோன்ற அகராதிப் பகுதிக்குத் ‘தொகை அகராதி’ என்னும் பெயரும் மிகவும் சாலும்.

இனி இப் பன்னிரண்டாங் தொகுதிக்குள் புகுந்து சுவையான சில பகுதிகளைப் பார்ப்போம்: 

ஒன்று என்னும் எண்ணால் சுட்டப்படுவது (மோட்சம் எனப்படும்) வீடு பேறாம். தனக்கு இணையாக வைத்து எண்ணத் தக்கது வேறு எதுவும் இன்றித் தான் தனித்த பெருமை உடையது வீடுபேறு என்பது இதனால் புலனாகும்.

“ஒன்று என்பதுவே வீடுபேறு ஆகும்.”

என்பது திவாகர நூற்பா. உயிர் வாழ்க்கையின் ஒப்பற்ற ஒரே பயனாய் வீடுபேறு மதிக்கப்பட்டிருக்கிறது.

இருவகை அறங்களாவன: இல்லறம், துறவறம் என்னும் இரண்டுமாம்.

“இருவகை அறமே இல்லறம், துறவறம்.”

வாழ்க்கை நிலையை இல்லறம், துறவறம் என இரண்டாகத் தமிழ் நெறியாளர் வகுத்துள்ளனர். திருவள்ளுவரும் தமது திருக்குறளில் இவ்விரண்டு செறிகளையே இல்லறவியல், துறவறவியல் என்னும் பிரிவுகளின் கீழ்ப் பேசியுள்ளார். ஆனால் வடமொழி வாணரோ பிரமச்சரியம் (திருமணம் ஆகாத நிலை), கிருகத்தம் (இல்லறம்), வானப்பிரத்தம் (மனைவியுடன் காட்டில் தங்கித் தவஞ்செய்யும் நிலை), சந்நியாசம் (துறவறம்) என வாழ்க்கை நிலையை நான்காக வகுத்துள்ளனர். அதாவது, அவரவர் பழக்கவழக்க வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நிலைகள் வகுக்கப்பட்டுள்ளன. உண்மை இப்படியிருக்க,

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.”

என்னும் திருக்குறளின் உரையாக, வடமொழிவாணரின் நான்கு நிலைகளைப் புகுத்திக் குழப்புவது 

பொருந்துமா? அதாவது, நான்கு நிலையினருள் கிருகத்தன் எனப்படும் இல்வாழ்வான், மற்ற மூவர்க்கும் (மூன்றுநிலையினர்க்கும்) துணையாக நிற்க வேண்டும் என இக் குறளுக்குப் பொருள் கூறப்படுகிறது; இது பொருந்துமா?

வள்ளுவர் தமது நூலில் அறத்துப்பாலை நான்காகப் பிரிக்காமல் இல்லறம், துறவறம் என இரண்டாகத் தானே பிரித்துக்கொண்டுள்ளார். அப்படியிருக்க, நான்கு நிலைகளை எவ்வாறு இக்குறளில் அவர் அமைத்துப் பேசியிருக்க முடியும்? மேலும் இக்குறளுக்கு அடுத்துள்ள

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.”

என்னும் குறளில் ‘துறந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளாரே—அவர் யார்? முன் குறளிலேயே துறவிகள் அடங்கிவிட்டால், இந்தக் குறளிலும் அவர்களுக்கு என்ன வேலை? எனவே, முன் குறளில் உள்ள ‘இயல்புடைய மூவர்’ என்பதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்க வேண்டும். இதனை ஆராய்ச்சியாளரின் அறிவுப் பசிக்கு விருந்தாக விட்டு வைப்போம்.

பிற்காலத் தமிழ் நூற்கள் சிலவற்றில் நான்கு நிலைகள் பேசப்பட்டுள்ளனவே எனின், அது, வடமொழிக் கோட்பாடு தமிழில் இரண்டறக் கலந்துவிட்ட காலத்தின் கோலமாகும். நிகண்டு நூற்களிலுங்கூட, வடமொழிக் கோட்பாடுகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. 

கல்வியும் செல்வமும் இருவகைப் பொருள்களாம்:

“இருவகைப் பொருள் கல்விப் பொருள், செல்வப் பொருள்.”

இப்பாவில், கல்விப் பொருளுக்கு முதன்மை தரப்பட்டிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. கல்லாத, செல்வர்கள் இதனை உணரவேண்டும்.

“மெய், வாய், கண், மூக்கு, செவி, ஐம்பொறியே.”

என்னும் திவாகரப் பாடலில் உள்ளாங்கு ஐம்பொறிகள் தொன்றுதொட்டுப் பேசப்படுகின்றன. ஆனால், இக்காலத்து உளநூல் அறிஞர்கள் (Psychologist) உடல்தசையின் இயக்கத்தையும் ‘இயக்கப் பொறி’ (Kinaesthetic) என்னும் பெயரில் ஒரு பொறியாகக் கொண்டு பொறிகள் ஆறு என்கின்றனர். இது புதுமை!

நிகண்டினுள், தாய்மார்களை ஐந்து வகையினராக்கி

“பாராட்டுந் தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய்,
கைத்தாய், செவிலித்தாய், ஐந்தெனக் கழறுவர்.”

எனக் கூறியிருப்பது சுவையாயிருக்கிறது!

காலாட் படை, தேர்ப் படை, யானைப் படை, குதிரைப்படை எனப் படைகளை நால் வகையாகக் கூறுவதே அக்கால மரபு என்பதை அனைவரும் அறிவர். ஆனால், காலாட் படையை வேல் படை, வாள் படை, வில் படை என மூவகையாக்கி, தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை என்னும் மூன்றையும் சேர்த்து 

“வேல்தானை, வாள்தானை, வில்தானே, மேலோர்
தேர்த்தானே, பரித்தானே, களிற்றுத்தானே என
ஆற்றல் சான்ற அறுவகைத் தானை.”

எனப் படையை ஆறாக நிகண்டு கூறியிருப்பது ஒரு புது மாறுதல்! விஞ்ஞானம் பெருகியுள்ள இருபதாம் நூற்றாண்டில் நிலப்படை, நீர்ப்படை, வானப்படை எனப் படைகள் மூவகைக்குள் அடங்கும். இவற்றுடன் மலைப்பயிற்சிப் படையையும் சேர்த்து இக்காலத்தும் படைகளை நால் வகையாகக் கூறலாம் போலும்! இன்னும் என்னென்ன படைகள் முளைக்க இருக்கின்றனவோ?

“படையும், குடியும், கூழும், அமைச்சும்,
அரணும், தட்பும், அரசியல் ஆறே.”

என அரசியல் உறுப்புகள் ஆறு என்று எட்டாம் நூற்றாண்டில் திவாகரம் கூறியுள்ளது. இதனை மேலும் சில நூற்றாண்டுகட்கு முன்பே,

“படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”

எனத் திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். இதிலிருந்து அறிய வேண்டுவது யாது? ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்பர் இதற்கேற்ப, முன்னர்த் தோன்றியுள்ள இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே பின்னர் நிகண்டு நூற்கள் எழுந்தன என்பது புலனாகும். நிகண்டு நூற்கள் மொழியிலக்கண நூல் வகையைச் சேர்ந்தனவன்றோ?

பத்து வகையான முதல்(மூலப்) பொருள்கொண்டு சிற்ப உருவங்கள் செய்யப்படலாம் எனத் திவாகரம் அறிவிக்கிறது: 

“கல்லும், உலோகமும், செங்கலும், மரமும்,
மண்ணும், சுதையும், தந்தமும், வண்ணமும்,
கண்ட சருக்கரையும், மெழுகும், என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பாவன.”

என்பது நூற்பா.

கல்=கருங்கல்; உலோகம்=பொன், வெள்ளி, வெண்கலம் முதலிய உலோகங்கள்; சுதை=சுண்ணாம்பு, வண்ணம்=பல்வகை வண்ணச் (நிறச்) சாந்து; கண்ட சருக்கரை=ஒரு வகைச் சருக்கரை.

இந்தப் பகுதி கலை உள்ளத்திற்கு ஓர் உணவாகும். உலகியலில் ‘பளிங்குச் சிலை’ என்கிறார்களே, இப்பாடலில் பளிங்கு கூறப்படவில்லையே எனின், மண் என்பதனுள் பளிங்கு அடங்கும். பளிங்கு—கண்ணாடி—பீங்கான் போன்றவை பல்வகை மண்ணால் ஆனவையேயன்றோ?

உலக மக்கள் அனைவரும் தொடர்பு கொண்டுள்ள இந்தக் காலத்தில் உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் (பாஷைகள்) இருப்பது தெரிய வருகிறது. உலகம் முழுவதும் தொடர்பு கொள்ளமுடியாத பழங்காலத்தில் பதினெட்டு மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன

“அங்கம், வங்கம், கலிங்கம், கெளசிகம்,
சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம்,
மகதம், கோசலம், மாடம், கொங்கணம்,
துளுவம், சாவகம், சீனம், காம்போஜம்,
பருணம், பப்பரம், எனப் பதினெண் பாடை.”

என்பது திவாகர நூற்பா. இப்பதினெட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சுற்றுப்புற நாடுகளிலும் 

வழங்கிய—வழங்குகிற மொழிகளாம். இவற்றுள் சில மொழிகள் சில மாறுதல்கள் பெற்று வேறு பெயர்களுடன் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. ஒவ்வொன்றின் விவரமும் வருமாறு:—

(1) அங்கம்:—வட இந்தியாவில் உள்ள காசி நகரைச் சார்ந்த பகுதி அங்க நாடு. அங்கே வழங்கிய மொழி அங்க மொழியாகும். கன்னனை அங்கர்கோன் எனப் பாரதம் கூறும்.

(2) வங்கம்:—வங்காள மாநிலத்தில் வழங்கும் வங்காள மொழி.

(3) கலிங்கம்:—ஏறக்குறைய நர்மதையாற்றுக்கும் துங்கபத்திரையாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி கலிங்க நாடாகும். இன்று ‘ஒரிசா’ என அழைக்கப்படுகிறது. அசோகரும் குலோத்துங்கச் சோழனும் ஒவ்வொரு காலத்தில் வென்ற நாடு இது. இங்கே வழங்கிய மொழி கலிங்க மொழியாகும். இப்போது இங்கே வழங்கும் மொழி ‘ஒரியி’ எனப்படுகிறது.

(4) கெளசிகம்:—இது வட இந்தியாவில் வழங்கிய ஒரு மொழி.

(5) சிந்து:—வடக்கே சிந்து மாநிலத்தில் வழங்கும் சிந்தி மொழி.

(6 சோனகம்:—வெளி நாட்டாராகிய கிரேக்கர், அரேபியர் போன்றவர்களைச் சோனகர் என்றும் அவர்தம் மொழியைச் சோனகம் என்றும் அன்று நம்மவர் அழைத்தனர். 

(7) திரவிடம்:—இது தமிழ் மொழி. நாளடைவில் தமிழிலிருந்து பல மொழிகள் தோன்றின என்பது யாவரும் அறிந்த செய்தியே.

(8) சிங்களம்:—இலங்கையில் வழங்கும் சிங்கள மொழி.

(9) மகதம்:—வடக்கேயுள்ள பீகார் மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதி மகத நாடாம். மெளரியப் பேரரசுக்கு உரியது மகதமன்றோ? ஈண்டு வழங்கிய மொழி மகத மொழியாம்.

(10) கோசலம்:—வட நாட்டில் (உத்தரப் பிரதேசம்) கங்கை பாய்வதும் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டதுமான ஒரு பகுதி கோசல நாடாம். இங்கே வழங்கிய மொழி கோசல மொழி.

(11) மராடம்:—இன்றைய மகாராட்டிர (பம்பாய்) மாநிலத்தில் வழங்கும் மகாராட்டிர (மராட்டி) மொழியாகும்.

(12) கொங்கணம்:—அரபிக் கடலுக்குக் கிழக்கும்–மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும்—கோவாவிற்கு வடக்கும் - குசராத்தி நாட்டுக்குத் தெற்கும் ஆன எல்லைக்கு உட்பட்ட பகுதி கொங்கணமாகும். ஆங்குப் பேசிய மொழி கொங்கண மொழி எனப்பட்டது.

(13) துளுவம்:—கேரள நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் இடையே குறிப்பிட்ட பகுதியில் பேசும் மொழி. கல்யாணபுரி ஆற்றுக்கும் சந்திரகிரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏறத்தாழ எழுநூறாயிரம் (700,000) மக்களால் இன்று பேசப்படுவதாகச் சொல்லப்படுகிறது. 

(14). சாவகம்:—இந்தியப் பெருங்கடலில் (Indian Ocean) ஏறக்குறைய மூவாயிரம் தீவுகளைக் கொண்டதாய் ‘இந்தோனேழ்சியா’ என்னும் நாடு இன்று விளங்குகிறது. இதன் தலைநகராகிய சாகர்த்தா நகர், சாவா (Java) என்னும் தீவில் உள்ளது. இதன் பக்கத்தில் சுமத்ரா என்னும் பெரிய தீவு உள்ளது. இந்தச் சுமத்ரா—சாவா பகுதியினை நம்மவர் சாவகம் என்றும், ஈண்டு வழங்கிய மொழியினைச் சாவக மொழி என்றும் அழைத்தனர். இந்தப் பகுதியை அடுத்து மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. இங்கெல்லாம் பழங்காலத் தமிழ் மன்னர்கள் படையெடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இன்றும் இப் பகுதிகளில் தமிழ் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஆனால், மலேயா, சிங்கப்பூர், இந்தோனேழ்சியா ஆகிய பகுதிகளில் இன்று பேசப்படும் மொழி ‘மலாய் மொழி’ என அழைக்கப்படுகிறது.

(15) சீனம்:—இந்தியாவின் வடக்கேயுள்ள சீன நாட்டில் வழங்கும் மொழி இது; ஓவிய எழுத்துக்களைக் கொண்டது; மேலிருந்து கீழ் நோக்கி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்படுவது.

(16) காம்போஜம்:—இந்தியாவின் வடமேற்கு (பாகிஸ்தான்-பெஷாவர்) எல்லையைச் சேர்ந்த ஒரு பகுதி காம்போஜம் ஆகும். இங்கே பேசப்பட்ட மொழி காம்போஜ மொழியாம். தென் கிழக்கு ஆசியாவில் உள்ள ‘கம்போடியா’ என்னும் நாடும் காம்போஜம் எனப்படுகிறது.

(17) பருணம்:—ஒரு வட இந்திய மொழி.

(18) பப்பரம்:—இஃதும் ஒரு வடக்கு மொழியாம். 

மேற்கூறிய பதினெட்டு மொழிகளுள் சோனகம், சிங்களம், சாவகம், சீனம் என்னும் நான்கைத் தவிர, மற்ற பதினான்கும் இந்தியப் பெருநாட்டைச் சேர்ந்த மொழிகளாம். இலக்கண உரைநூற்களில் காணப்படுகின்ற

“சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்,
கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங் குசலம்,
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.”

என்னும் பழம் பாடல் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. தமிழ் நாட்டை அடுத்தடுத்துத் தொடர்பு கொண்ட பதினேழு நாடுகள் இப்பாடலில் பேசப்பட்டுள்ளன. இப்பாடலையும் திவாகர நூற்பாவையும் உற்று நோக்கின், தமிழர்கள் பல நாட்டினரொடு—பல மொழியினரொடு தொடர்பு கொண்டிருந்தமை புலனாகும்.

பதினெட்டு மொழிகளுள் தமிழ் மொழியானது திரவிடம் என்னும் மாற்றுப் பெயரால் திவாகரத்தில் சுட்டப்பட்டுள்ளது. வட இந்திய மொழிகள் பலவற்றைத் தனித்தனியே எடுத்து மொழிந்த திவாகரம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் தென்னிந்திய மொழிகளைத் தனித் தனியே சுட்டவில்லை. திவாகரம் எழுதப் பெற்ற எட்டாம் நூற்றாண்டில் மலையாளம் என ஒரு மொழி இல்லை. மலையாள நாடு அப்போது சேர நாடு. இப்போதும் தமிழும் மலையாளமும் ஏறக்குறைய ஒரே மொழியே. பழங் கன்னடமும் தமிழும் ஒன்றேயாம். இப்படியே பார்த்துக் கொண்டு சென்றால், தென்னிந்தியாவில் தமிழ்மொழி அன்று பெற்றிருந்த தலைமைநிலை புலனாகும்.

13 

திவாகரம் கூறும் பதினெட்டு மொழிகளும் பிற்காலத்தில் பல்வேறு பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தன. சில தேய்ந்தன. சில குட்டி போட்டன. எனவே, பிற்காலத்தில் இந்தப் பதினெட்டு என்னும் எண் வரையறைக்கு இடமில்லாது போயிற்று. திவாகரத்தை அப்படியே அடியொற்றி (காப்பியடித்து) பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த சூடாமணி நிகண்டு, இந்தப் பதினெண் மொழிகளின் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. திவாகரத்துக்கும் சூடாமணிக்கும் இடைப்பட்ட எண்ணூறு ஆண்டுகளில் எத்தனையோ மொழிகள் கிளைத்துவிட்டனவாதலால், சூடாமணி நிகண்டு ‘கப்சிப்’ என்று பேசாமல் விட்டுவிட்டது.

பெயர்பெற்ற மொழிகள் என விதந்து பேசக்கூடிய அளவு எட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்த இப்பதினெட்டு மொழிகளுள் பலவற்றின் பெயர்களை அவ்வளவாக இன்று பார்க்க முடியவில்லை. இந்தியாவின் சிறந்த மொழிகளாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியி, வங்காளம், அசாம், காசுமீரி, பஞ்சாபி, குசராத்தி, மகாராட்டிரம், இந்தி, உருது, சம்சுகிருதம் என்னும் பதினான்கு மொழிகளே இப்போது திகழ்வது ஈண்டு எண்ணிப் பார்த்தற்குரியது.

அடுத்து, முப்பத்திரண்டு அறங்கள் (தருமங்கள்) இன்னின்னவை எனப் பின்வருமாறு திவாகரம் கூறுகிறது:

“ஆதுலர் சாலை, ஓதுவார்ககு உணவு, அறு
சமயத்தோர்க்கு உணவு, பசுவுக்கு வாயுறை,
சிறைச்சோறு, ஐயம், தின்பண்டம், மகச்சோறு,
மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால்,



அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத் தூரியம்,
வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய்
மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து,
தலைக்கெண்ணெய், பெண்போகம், சுண்ணம், பிறர்துயர்
காத்தல், தண்ணீர்ப் பந்தர், மடம், தடாகம்,
கா, ஆவுரிஞ்சி நடுதறி, ஏறு
விடுத்தல், விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல்,
இச்செயல் முப்பத்திரண்டு அறம் என்ப.”

என்பது பாடல். இவற்றுள், இந்தக் காலத்தில் நிலைத்து நிற்கும் அறங்கள் எத்தனையோ?

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல அறிவுகளோடு மன அறிவாகிய பகுத்தறிவையும் சேர்த்து ஆறு அறிவு உடையவர்களாக மக்களைச் சொல்வது வழக்கம். ஆனால் திவாகரரோ, மக்களையும் விலங்குகளையும் ஐந்தறிவு உடைய உயிர்களாக முதலில் கூறி, மன அறிவாகிய ஆருவது அறிவும் மக்களுக்கு உண்டு என்றும், அந்த ஆறாவது அறிவு ஒரு சில விலங்குகட்கும் உண்டு என்றும் பின்னர்க் கூறியுள்ளார்:

“உற்றறி புலன், நா, மூக்கொடு, கண், செவி,
மக்களும் மாவும் ஐந்தறி வினவே.”

“மனத்தோடு ஆறறிவினரே மக்கள்
ஒருசார் விலங்கும் அதுபெறற்கு உரித்தே.”

என்பன நூற்பாக்கள். மக்களுள் சிலர்—சிலரென்ன பலர்—பகுத்தறிவற்ற விலங்குகள்போல இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நடந்து கொள்கிறார்களே—இதுபோல அன்றும் நடந்திருப்பார்கள் அல்லவா? 

அதனால்தான், மக்களை மாக்களோடு இணைத்து ஐயறிவு உயிராகத் திவாகரர் கூறினார் போலும். விலங்குகளுள்ளும் ஆறறிவு உடையவை ஒரு சில உண்டு எனக் கூறியிருப்பதை நோக்கின், மக்கள் எவ்வளவோ உயர்ந்த பண்பு உடையவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்பது சொல்லாமல் பெறப்படும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரும் இப்படி ஒரு குறிப்புத் தந்துள்ளார்:

“மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
ஒருசார் விலங்கும் உளவென மொழிப.”

என்னும் தொல்காப்பிய நூற்பா ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

இந்தத் தொகுதியில், அலி எனப்படும் பேடியின் இயல்புகள் பேசப்பட்டிருப்பது மிகவும் சுவையாக உள்ளது. அது வருமாறு:

“பேடி யிலக்கணம் பேசுங் காலை
நச்சுப் பேசலும், நல்லுரை யோதலும்,
அச்சு மாறி ஆண் பெண் ஆகியும்,
கைத்தலம் ஒன்றைக் கடுக வீசியும்,
மத்தகத்து ஒருகை மாண்புற வைத்தலும்,
விலங்கி மிதித்தலும், வழிவே றாகியும்,
துளங்கித் தூங்கிச் சுழன்று துணிந்தும்,
நக்கும், நாணியும், நடம்பல பயின்றும்,
பக்கம் பார்த்தும், பாங்கு திருத்தியும்,
காரண மின்றிக் கடிபல கொண்டும்,
வாரணி கொங்கையை வலிய நலிந்தும்.



இரங்கியும், அழுதும், அயர்ந்தும், அருவருத்தும்,
குரங்கியும், கோடியும், கோதுகள் செய்தும்,
மருங்கில் பாணியை வைத்தும், வாங்கியும்,
இரங்கிப் பேசியும், எல்லேல் என்றும்,
இன்னவை பலவும் இயற்றுதல் இயல்பே.”

இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள பேடியின் செயல்கள் அனைத்தும் அப்படியே இயற்கையை ஒட்டி உள்ளன. இப்பாடலைப் படிப்பவர் தம் மனக்கண்முன் ஒரு பேடியின் உருவத்தை அப்படியே காணலாம்.

இந்த விதமாகத் திவாகரத்தின் பன்னிரண்டாந்தொகுதியில் அறிவுக்கு விருந்தான பல செய்திகள் படைக்கப்பட்டுள்ளன.

பின்னெழுந்த பல நிகண்டுகளுக்கும் முன்னோடியாகச் சேந்தன் திவாகரத்தைப் பயந்த ஆசிரியர் திவாகரர் பெரிதும் போற்றுதற்கு உரியவர். அவருக்குத் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.