தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2/005-007

ஆண்ட சக்கரவர்த்தி

கம்பெனியில் திங்கட்கிழமைதோறும் பஜனை நடைபெறுவது வழக்கம். நாங்களெல்லோரும் கூட்டமாகவும் தனித் தனியாகவும் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். மதுரையில் ஒரு நாள் புட்டுத் தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் திங்கட்கிழமை பஜனை வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம். இரவோடு இரவாக சுவாமி ஊர்வலம் புறப்பட்டுப் புட்டுத் தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்களெல்லோரும் பாடி முடித்த பிறகு, வந்திருந்த சில நண்பர்களும் தனித்தனியே பாடினார்கள். கடைசியாகச் சுவாமிகளைப் பாட வேண்டுமென்று எல்லோரும் வற்புறுத்தினார்கள். “எவ்வளவு நேரம் பாடவேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். “தங்கள் மனம்போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். திருவாளர்.பழனியாபிள்ளை அவர்கள், “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிறவரை பாடுங்கள்” என்றார்.

திருப்புகழ்ச் சந்தத்தில் ஆண்ட சக்கரவர்த்தி என்று பாடத் தொடங்கினார் சுவாமிகள். பாடிக்கொண்டேயிருந்தார். ஏற்கெனவே நெட்டுருப் போட்டிருந்த பாடலன்று; அப்போதுதான் கற்பனையாக எழுந்த பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனர். பாடல் முடியவில்லை. மேலும் தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார்.
சுவாமிகள். சற்று நேரத்தில் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசை கேட்டது. மேளச் சத்தம் தனது பாட்டுக்கு இடையூறாக வந்த நிலையில் பாடலை முடித்தார்சுவாமிகள். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

புகழ் பாட மறுத்தல்

அக்காலத்தில் தமிழறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்சுவாமிகளைக் காண விரும்பினார். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவருமில்லையே! சுவாமிகள் மட்டும் ஏன் இன்னும் மன்னர்மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினால் உங்களுக்குக் ‘கனகாபிஷேகம்’ செய்வாரே மன்னர்!” என்றார்.

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதில்லையென்று நோன்பு கொண்டவர். ஆதலால் மன்னர்மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பலர் வந்து இதுபற்றி வற்புறுத்தியபோது சினங்கொண்டு, “மன்னனும் மறவன்; நானும் மறவன்; என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன். எதற்காக நான் அவனைப் புகழ வேண்டும்? மன்னன் மீது பாடினால்தான் எனது புலமை மன்னனுக்குப் புரியுமோ?” என்று கூறிவிட்டார். சுவாமிகள் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவேயில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

தமிழை விற்கச் சம்மதியேன்

சுவாமிகள் அவ்வப்போது எழுதிய பக்தி ரசப் பாடல்களையெல்லாம் திரட்டி ஒரு சிறு நூலாக வெளியிடச் சில அச்சகத்தார் முயன்றனர். சுவாமிகளிடம் அனுமதி கேட்டபோது, “இலவசமாகக் கொடுப்பதானால் அச்சிட்டுக் கொள்ளுங்கள். தமிழை விலைக்கு விற்கச் சம்மதிக்க மாட்டேன்” என்று கூறி மறுத்துவிட்டார்.

முடிவுரை

திறமை வாய்ந்த ஒரு பெரும் புலவரிடம் இத்தகைய நற்பண்புகளும் குடிகொண்டிருந்தமையால் தமிழ்நாடக உலகம் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றி வணங்குகிறது.

சுவாமிகள்மறைந்தார். அவரது பாடல்கள்என்றும் மறையா; அழியா. சுவாமிகளின் திருப்பெயர் தமிழ் உலகம் உள்ளளவும் மங்காது நின்று ஒளி வீசுமாக!

வணக்கம்!