தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002
காஞ்சி கடிதம் : 2
இதயத்தில் பூத்த மலர்
சட்ட மேம்பாடு பற்றிய சில பொதுக் கருத்துக்கள்
சட்டத்தைத்துச்சமென எண்ணுபவர்களின் கூற்றுகளும் அவற்றின் விளக்கங்களும்
இந்தி எதிர்ப்பு அறப்போரும் சிறைச் செலவும்
தம்பி,
ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு—அதற்கான பேச்சு எழுந்து வளர்ந்துகொண்டு வருகிறபோது—எவ்வளவு வேண்டுமானாலும் அந்தச் சட்டம் வேண்டாம்—கூடாது—தீது என்று வாதாடலாம், மறுத்துரைக்கலாம், எதிர்ப்புச் செய்யலாம். ஆனால் இவைகளை மீறி ஒரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், பிறகுகூட அதை எதிர்த்துப் பேசிக் கருத்து வேற்றுமையைக் கூறலாம். ஆனால், மீறுவது மட்டும் கூடாது. மீறுவது சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பாங்கினைச் சமுதாயம் கொண்டு ஒழுகவேண்டும் என்று உள்ள நிலையைக் கெடுத்துவிடும். அது கெட்டுப் போய்விட்டால் பிறகு சமூகக் கட்டுக் கோப்பைச் சிதையாதபடி பாதுகாத்து வரும் சக்தி பாழ்பட்டு விடும். அந்தச் சக்தி பாழ்பட்டுவிட்டால் பிறகு நாட்டிலே காட்டுமுறை ஏற்பட்டுவிடும் என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.
அதிகாரம் ஊட்டிவிடும் ஆணவத்தின் காரணமாக, பலர் குளறிக்கொட்டியிருப்பதனை மிக மிக நாகரிக நடையுள்ள தாக்கி, அவர்களின் தூற்றலையும் ஒரு தத்துவ விளக்கம் போன்றதாக்கி நான் தந்திருக்கிறேன்—மேலே.
படு! படு! சட்டத்தை மீறினால் சும்மாவிடுவார்களா!
எதிர்த்தால் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கொட்டடியில் தள்ளுகிறார்கள்.
பேச்சு என்ன இதுகளிடம்! கூப்பிடு போலீசை! கொண்டுபோகச் சொல்லு சிறைக்கூடம்.
நாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளாமல், எமக்கு உள்ள அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளாமல் எங்களையா எதிர்க்கிறாய்? என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்!இவ்விதமாகப் பேசுபவர்கள், சட்டத்தை மீறினால் சங்கடப்படவேண்டி நேரிடும் என்பதனை எடுத்துக் காட்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். சட்டத்தை மீறும்போது, சட்டத்தின் பாதுகாவலரின் பிடியில் சிக்குவோம் என்பதும், கொட்டப்படுவோம் என்பதும் எவருக்கும் தெரியும். எனவே அதனை நினைவு படுத்துவதாகக் கூறிக்கொண்டு நிந்தித்துக்கிடப்போர் தமது நீண்ட நாவினுக்கு அதிக வேலை கொடுத்து அலுத்துப்போகத் தேவையில்லை.
சட்டம் சமுதாயக் கட்டுக்கோப்புக்கு இன்றியமையாதது என்ற அரிச்சுவடி போதிக்கத் தேவையில்லை, அதுபற்றிய பொது அறிவு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டு விட்டிருக்கும் இந்த நாட்களில்.
சட்டத்தைக் குறித்த தன்மைகளை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்ட அல்ல, என்னை நிந்திக்கும்போதுகூட, பொதுத் தத்துவவிளக்கத்தை உள்ளடக்கிப் பேசட்டும் என்பதற்காகவும், அவர்கள் எத்தனை இழிமொழி பேசித் தமது இயல்பினையும், தம்மிடம் உள்ள சரக்கின் தன்மையினையும் எடுத்துக் காட்டியபடி இருந்தாலும், சேற்றுக் குட்டையிலிருந்தும் சில கெண்டைகளைத் தேடிப் பெறுவதுபோல, அவர்களின் ஆபாசப் பேச்சிலிருந்தும், கிளறி எடுக்கத்தக்கவைகளை. நான் பெற முயற்சித்திருக்கிறேன் என்பதைக் காட்டிடவும், சட்டம் பற்றிய சில பொதுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.
✽✽✽
சட்டம், ஆட்சி செய்கிறது சட்டம்!
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது!
சட்டம், எவரையும் கட்டுப்படுத்தக்கூடியது!
சட்டம், வளையாது, நெளியாது; வல்லவனைக் கண்டு ஒளிந்துகொள்ளாது; இளைத்தவன் மீது காரண ற்றுப் பாயாது.
சட்டத்தின் கண்முன்பு அனைவரும் ஒன்று தான்!
சட்டம், சமுதாய ஒழுங்கைக் காத்து வருகிறது.
சட்டம், சமுதாயம் சின்னாபின்னமாகாதபடி பார்த்துக்கொள்கிறது.
சட்டம், நாட்டிலே காட்டுமுறை புகாதபடி தடுத்து நிறுத்துகிறது.
சட்டம் மக்கள் ஒருவருக்கொருவர் கூடி வாழ்வதிலே தான் பெருமையும் சுவையும் பயனும் பண்பும் இருக்கிறது என்ற பேருண்மையை நிலைநாட்டத் துணை புரிகிறது,
சட்டம், உயிர், உடைமை, உரிமை, அமைதி, ஆகியவைகளுக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருக்கிறது.
சட்டம், கோபதாபம், விருப்பு வெறுப்பு, வெறி போன்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, தகாத செயலில் ஈடுபட்டு, சமூகத்துக்கு எவரும் ஊணம் விளைவித்து விடாதபடி தடுத்துக்கொண்டிருக்கிறது.
சட்டம், மக்களுக்குள்ளாக ஏற்படக்கூடிய தொடர்பையும், மக்களுக்கும் அரசுக்கும் ஏற்படும் தொடர்பையும், மாண்புடையதாக இருக்கச் செய்யும் பெரு முயற்சியில் ஈடுபடுகிறது.
சட்டத்தின் கண்கள் கூர்மையானவை! சட்டத்திற்கு நெடிய கரங்கள்!சட்டம், கண்ணீர் கண்டு கடமையை மறந்துவிடாது; மயக்குமொழி கேட்டு, வழிதவறிச் செல்லாது.
சட்டம், தன்முன் நிற்பது யார்? நண்பனா? பகைவனா? உற்றார் உறவினனா? உதவி செய்தவனா? ஊரிலே பெரிய புள்ளியா? ஊறு விளைவிக்கக்கூடியவனா? என்ற இவைபற்றி எண்ணித் தடுமாற்றம் கொள்ளாது. செய்தது என்ன? எப்படிச் செய்தான்? யார் சான்று? எத்தகைய குற்றம்? குற்றமற்றவனாக இருக்கக்கூடும் என்று ஐயப்பாடு எழவாகிலும் இடம் இருக்கிறதா? எனும் இவைபற்றித்தான் எண்ணிப்பார்த்து முடிவு செய்யும்.
கலம் நேர்வழி செல்ல உதவும் கருவிபோல, சமுதாயம் ஒழுங்காக இருந்துவரத் துணையாக நிற்பது சட்டம்.
சட்டத்தை மதிக்காமல் சமுதாயத்தில் இடம் பெற்று இருந்திட இயலாது; அனுமதி கிடையாது.
சட்டம், அவரவருடைய விருப்பத்திற்கேற்ற வடிவம் கொள்ளாது—வடிவம், இவ்விதம் இருக்க வேண்டும் என்று உரியவர்கள் கூடி முடிவு செய்தான பிறகு மீண்டும் உரியவர்களே கூடி மாற்றினாலொழிய அமைந்துவிட்ட வடிவம், அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டியதாகி விடும்.
தத்தமக்கு விருப்பமான முறையில், வாழ்க்கை நடத்தவும், அத்தகைய வாழ்க்கை நடத்துவதற்குத் தேவைப்படுபவைகளைத் தத்தமது இயல்புக்குத்தக்க முறையிலே தேடிப் பெறவும் அவ்விதம் தேடிப் பெற்றவைகளை வேறு எவரும் பறித்துக்கொள்ளாது பார்த்துக் கொள்ளவும், தடுத்திடவும் தேவைப்படும் பாதுகாப்புப் பெற்று, வாழ்ந்துவர ஏற்பட்ட அமைப்பே, சமுதாயம் என்று ஆகிறது.
தனித்தனி விருப்புக்கு ஏற்றபடி அமையும் வாழ்க்கையும், அந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்படும் முறையும், மற்ற எவருடைய வாழ்க்கைக்கோ, வாழ்க்கை அமைவதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கோ, கேடு மூட்டாததாக அமைந்தாக வேண்டும்; அப்போதுதான், சமுதாயம் சாயாமல், சரிந்து போகாமல் இருக்க முடியும்.ஆகவே, பொதுவாக அனைவரும் வாழவேண்டும், அதற்குக் குந்தகம் ஏற்படாத முறையில், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு ஒழுக வேண்டும் என்பதே சமுதாய நெறி—அறவழி ஆகிறது. அதனைக் கட்டிக்காத்து வருவதே, சட்டம். எனவே சட்டம், அறவழியை அழியாது பாதுகாத்துத் தருகிறது. ஆகவே, அறம் நிலைக்க, சட்டம் அச்சாணியாகிறது. அந்த அச்சாணியின் ஒழுங்குக்கும் நேர்த்திக்கும், வலிவுககும் ஏற்பத்தான் சமுதாயத்தின் தரம் அமையும். சமுதாயத்தின் தரம் உயர உயர அங்குக் காணப்படும் சட்டததின் நேர்த்தியும் மேன்மை மிக்கதாகும். சட்டத்தின்படி ஒழுகி வருவதன் மூலம் ஏற்படும் வலிவும் பொலிவும், சமுதாயத்தின் தரத்தை உயர்த்துகிறது; ஆகவே சட்டம், சமுதாயத்தை உருவாக்கி, பாதுகாத்து, வளரச்செய்து, அதனுடைய தரத்தையும் உயர்த்துகிறது.
எந்த அளவுக்கு, ஒரு சமுதாயத்தின் தரம் உயர முடியும் என்று எண்ணிபபார்த்த பேரறிவாளர்கள் கூறியிருப்பது, மேலெழுந்தவாரியாகக் கவனிப்பவர்களுக்கு விந்தையாகக்கூடத் தோன்றும். சட்டங்களே தேவை இல்லாத அளவுக்குச் சமுதாயத்தின் தரம் உயர்ந்து விட்டது என்ற நிலை பிறந்திடவேண்டும் என்கிறார்கள் அந்தப் பேரறிவாளர்கள்.
தரம் உயர்ந்துவிட்ட சமுதாயத்துக்குச் சட்டங்கள் தேவையில்லை!
தரம் கெட்டுவிட்ட சமுதாய நிலையிலும் சட்டங்கள் தேவை இல்லை! ஏனெனில், தரம் கெட்டுவிட்ட சமுதாயத்தில், சட்டங்கள் சரிந்து போய்விடும்!
இது வியப்புக்குரிய செய்தி என்று மட்டும் கருதுவது போதாது; மிக உயர்ந்த நிலையிலும் சட்டம் தேவைப்படாது, மிகக் கேவலமாகிவிட்ட நிலையில் சட்டம் தேவை இல்லை என்பது நகைச்சுவைப் பேச்சும் அல்ல.
இனி மருந்து எதற்கு? என்று நோய் முற்றிப்போய் ஆள் தேறமாட்டான என்று தெரிந்துவிட்ட போதும் கூறுகிறார்கள்; நோய் நீங்கிப்போய், ஆள் நல்ல உடற்கட்டுடன் விளங்கும்போதும் கூறுகிறார்கள்.இரண்டும் ஒன்று என்றா பொருள்? இல்லை!
அஃதே போலத்தான், சட்டங்களின் அருமை பெருமையை உணர்ந்து, பயனை அறிந்து அதன்படி ஒழுகவேண்டும் என்ற நினைப்போ நிலையோ அற்ற மக்கள் கூட்டத்துக்குச் சட்டத் தொகுப்பு தேவையில்லை; அதுபோன்றே அழுக்காறு, அவா, வெகுளி எனும் கேடுகள் அறவே நீக்கப்பட்டு, அறநெறியினைத் தமது இயல்பு ஆக்கிக்கொண்டுவிட்ட மக்களுக்கும் சட்டம் தேவை இல்லை.
ஆனால், இன்றைய உலகு, இந்த இரு நிலைகளைக் கொண்டதாக அமைந்து இல்லை.
சட்டத்தின் பிடியில் தங்களை ஒப்படைக்க மறுக்கும் காட்டுப் போக்கினரும் அதிகம் இல்லை, அறநெறியினைத் தமது இயல்பு ஆக்கிக் கொண்ட முழுமனிதர்கள் கொண்டதாகவும் சமுதாயம் இல்லை. நிதான புத்தியுடன் இருக்கும் போது எவை எவைகளைத் தகாதன, தீதானவை, கேவலமானவை, கேடு பயப்பவை என்று உணருகிறார்களோ, அதே செயல்களை, அழுக்காறு, அவா, வெகுளி எனும் உணர்ச்சிகளின் பிடியிலே சிக்கி விடும்போது செய்திடும் போக்கினர் நிரம்ப உள்ள நிலையிலேயே சமுதாயம் இருக்கிறது.
ஆமாம், செய்தேன்!
செய்தேன், அதனால் என்ன?
செய்தேன்! நீ யார் கேட்க?
செய்தேன்! என்ன செய்துவிடுவாய்!
செய்தேன்! செய்வேன்!
இவ்விதம் ஆர்ப்பரித்திடும் நிலையினின்றும் மெள்ள மெள்ள விடுபட்டு, தீய செயல்களைச் செய்துவிட்ட பிறகு, தவறு என உணர்ந்து, வருத்தப்படுவது, பயப்படுவது. வெட்கப்படுவது, மறைக்கப் பார்ப்பது, மறுத்துப் பார்ப்பது, மறக்கப் பார்ப்பது என்ற நிலைக்கு, மனிதர்கள் செல்வதற்கே பலப்பல நூறு நூற்றாண்டுகளாயின!!
கொன்று குவித்தேன்!
வெட்டி வீழ்த்தினேன்!
துண்டு துண்டாக்கினேன்!
கொளுத்திவிட்டேன்!
கொள்ளை அடித்தேன்!
மானபங்கப்படுத்தினேன்!
என்று கூறுவதைக்கூட, போர்க்காலத்தில், கூச்சமின்றிக் கேட்டுக்கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது,
ஆனால், இந்த மனநிலை, உள்ளத்திலே மூண்டுவிடும் வெப்பம் குறையக் குறைய மாறத் தொடங்கி, பகை மடிந்த பிறகு, மடிந்துபோகிறது.
புதிய கருத்துகள், புதிய முறைகள், புதிய ஏற்பாடுகள் மிகுதியாக உள்ள இந்நாட்களிலேயும், ஒவ்வொரு பெரும் போருக்குப் பிறகும், கொடுமைகளையும் அழிவுச் செயலையும் வெறுத்தும் கண்டித்தும், மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வலியுறுத்தியும், பல ஏடுகள் வெளியிடப்படுகின்றன; போர் இனிக்கூடாது, போரற்ற உலகு காணவேண்டும், போர் எழாத சூழ்நிலை அமைக்க வேண்டும், அழிவுக் கருவிகளை அழித்திடவேண்டும், கலந்து பேசிக் கேடு களையவேண்டும், கூடி வாழ்ந்திட முறை காணவேண்டும் என்ற பேருண்மைகள் வலியுறுத்தப்படுகின்றன.
அவ்விதமான பேருண்மைகளை வலியுறுத்துவோர்களைப் பேரறிவாளர் என்று போற்றிடச் சமுதாயம் முன்வருகிறது.
பெரும்போரில் ஈடுபட்டுப் பகைவர்களை அழித்திடப் பல்வேறு கொடுமைகளையும் கூசாது செய்தவர்களே கூட, போர் முடிந்தபிறகு, போர் கொடுமையானது, போர் கூடாது, அழிவு தடுக்கப்படத்தான் வேண்டும், அமைதியான உலகே ஆனந்த உலகு என்று உணர்ந்து பேசுகின்றனர்.
போரில் ஈடுபட்டவர்களுக்கே போர் கூடாது என்பதிலே உண்மையான எண்ணம் ஏற்படும் என்று அறிவாளர் கூறியிருப்பது, இந்தப் போக்கை அறிந்ததால் தான்.போர் முடிந்தபிறகு மன மாறுதல் ஏற்படுவது போலவே, தனிப்பட்ட முறையிலே எழும் பகை காரணமாக ஒருவன், தீயசெயலைச் செய்துவிட்ட பிறகு, அவன் உள்ளத்திலே பகை உணர்ச்சி மடியத் தொடங்கும்போது, அவனுக்கே, தன்னுடைய செயலைக்குறித்து, ஒரு அருவருப்பும் அச்சமும் எழுகிறது.
பொதுவாகப் பார்க்கும்போது, கொடுமை செய்வதில், இயற்கையான களிப்பும், பெருமிதமும் கொண்டிடும் காட்டுக்குணம், இன்று பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறலாம். காட்டுக்குணம் என்று கூறும்போது, அதிலேயும் இருவகை இருப்பதை உணரலாம்: ஒன்று, பாய்ந்து தாக்கும் கொடுமை; மற்றது, பதுங்கி மாய்க்கும் கயமை!
இன்று, இரண்டாவது வகைக் காட்டுக் குணமே, அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், தாக்கும் வலிவு குறைந்திருக்கிறது என்பதுடன், தாக்குதலை வெறுப்பார்கள், எதிர்ப்பார்கள், தடுப்பார்கள் என்ற அச்சம் மேலிட்டுவிட்டிருக்கிறது; எனவேதான், பதுங்கிடவும், தாக்கிய பிறகு ஒளிந்திடவும், கேட்கும்போது மறுத்திடவும், பிடிபடும்போது தப்பித்துக் கொள்ளவும் கொடுமை செய்தவன், இந்நாட்களில் முயலுகிறான்.
இந்தப் போக்கு ஏற்படச் சமுதாய அமைப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட சட்டமும், அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திடும் திறத்துடன் ஒரு அரசும் காரணமாயின.
எனவே, சட்டம், மனிதனுடைய மனத்திலேயும் போக்கிலேயும், குறிப்பிடத்தக்க ஒரு மாறுதலை ஏற்படுத்தத் துணைபுரிந்திருக்கிறது; கொல்லும் புலிக்குக் கூண்டாக இருப்பது மட்டுமன்றி, புலியின் இரத்த வெறிப்போக்கை ஓரளவு மாற்றியும் இருக்கிறது என்று கூறலாம்.
தனிப்பட்டவர்களுக்குள் ஏற்பட்டுவிடும் பகையானாலும், இரு நாடுகளுக்குள் மூண்டுவிடும் பகையானாலும், பகைகொண்ட அந்த இரு தரப்பினரின் வலிவுக்கு ஏற்றபடி, வெற்றி தோல்வி அமைகிறது.
சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சமுதாயத்தில், ஒருவன், வேறு ஒருவனைக் கொடுமை செய்யும்போது, கொடுமைக்கு ஆளானவன் பக்கம் சமுதாயம் முழுவதும் துணை நிற்கிறது என்று பொருள்படும்.
கொடுமை செய்தவன், தனியாக்கப்பட்டு விடுகிறான்!
கொடுமைக்கு ஆளானவன் சார்பாகச் சமுதாயம் எழுகிறது; சட்டம் முழக்கம் எழுப்புகிறது; அரசு துணை நிற்கிறது.
கொடுமை செய்தவன் வலிவுமிக்கவனாக இருக்கலாம்; கொடுமைக்கு ஆளானவன், வலிவற்றவனாக இருக்கலாம். அந்த இருவருக்குள் மூண்டுவிட்ட பகையில், சமுதாயம் சட்டத்தின் துணையுடன், தலையிடாதிருக்குமானால், வலிவற்றவனை வலிவுள்ளவன் வதைத்திடுவான், வலிவற்றவன் அழிக்கப்பட்டுப் போய்விடுவான். ஆனால் சட்டத்திற்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொண்ட சமுதாய அமைப்புமுறை இருக்கிற காரணத்தால், அந்த வலிவற்றவனுக்குத் துணையாகச் சமுதாயமே நிற்கிறது; ஒருவன் எத்துணை வலிவுமிக்கவனாக இருப்பினும், அவனுடைய வலிவு, சமுதாயத்தின் கூட்டுவலிவின் முன்பு எம்மாத்திரம்? எனவே, அவன், தன் வலிவினைக் காட்டிட இயலாது! அவன் செய்த கொடுமைக்கேற்ற தண்டனை தரப்படுகிறது; கொடுமை செய்தவன், தன் சொந்த வலிவினைக்காட்டித் தப்பித்துக்கொள்ள முடியாது போகிறது.
எனவே, சட்டம், வலியோர் சிலர் எளியோர் தமை வதை புரியும் கொடுமையைத் தடுத்திடும் வலிவுமிக்க ஓர் ஏற்பாடாக விளங்கி வருகிறது.
இவ்வளவும், இதற்கு மேலும் கூறலாம், சட்டத்தின் பொருள், பொறுப்பு, பொருத்தம் ஆகியவைபற்றி!
இவைகளை உள்ளடக்கித்தான், சட்டம் ஆள்கிறது என்று கூறுகிறார்கள். சட்டம், தனிப்பட்ட எவரையும் விட வலிவுமிக்கது, எவர் சார்பிலும் நின்றுவிடாமல், வலியோர் எளியோரை வதைக்காதபடி பார்த்துக் கொள்கிறது என்று கூறுகிறார்கள்.
சட்டத்துக்கு அடங்கி நடப்பது—கேவலப்போக்கு என்றோ, கோழைத்தனம் என்றோ கூறுபவர் எவரும் இரார்; ஏனெனில், சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு. எனவே, அந்தச் சமுதாயத்திலே உள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் தன்னுடைய இசைவின் பேரில் அமைந்துள்ள ஏற்பாடே சட்டம் என்று கூறிக்கொள்ள, பெருமைப்பட, உரிமை இருக்கிறது சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்பது, தானும் சேர்ந்து சமைத்துக்கொண்டுள்ள ஒரு சமுதாய ஏற்பாட்டுக்கு, சமுதாய நலனைக் கருதி, உடன்பட்டு ஒழுகி வருவது என்ற பொருள் தருவதால், அது தவறு ஆகாது என்பது மட்டுமல்லாமல், அது தலையாய கடமை என்ற எண்ணம் எழுகிறது.
சட்டம் அவ்விதம்; நாம் என்ன செய்யலாம்?
சட்டத்திற்கு மாறாக நான் ஏதும் செய்வதற்கு இல்லைஎன்று கூறிடுவோர், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில், தமது விருப்பு வெறுப்பு எப்படி இருப்பினும், அந்த விருப்புவெறுப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேனும், சமுதாய ஏற்பாட்டுக்கு ஒத்தபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தான் தெரிவிக்கிறார்கள்.
✽✽✽
நாம் என்ன செய்யலாம்? சட்டம் அப்படி!
இப்படியும் ஒரு சட்டமா?
இதற்கும் சட்டம் வந்துவிட்டது!
எடுத்ததற்கெல்லாம் சட்டமா?
சட்டம் என்றாலும் அதிலே பொருத்தம், பொருள் இருக்க வேண்டாமா?
ஆர அமர யோசிச்சிச் சட்டம் போடணும்.
இவருடைய சட்டமப்பா இது!
எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று.
ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்?
சட்டம் போடுவதா பெரிய கஷ்டம்?
அவருக்கென்ன, நினைத்தா போடுவாரு ஒரு சட்டம்!
சட்டம் வருகிறதாம்பா! தெரிந்துகொள்!
சட்டம் போடப்போறாராமே பெரிய சட்ட நிபுணரு!
சட்டம் போட இவனுக்கு என்ன தகுதி இருக்குது?
புரிந்துகொண்டா போடறாங்க சட்டம்?
யாரைக் கேட்டுப் போட்டாங்க இந்தச் சட்டம்?
இவனோட சட்டத்தை எவன் மதித்து நடப்பான்?
இதுக்கும் பேரு சட்டந்தானாம்!
இந்தச் சட்டம் நிலைக்குமா?
இவனோடு தீர்ந்தது இந்தச் சட்டம்!
சட்டம் போட்டுவிட்டா பிரச்சினை தீர்ந்து போச்சா?
எத்தனையோ சட்டத்தைப் பார்த்தாச்சி; விட்டுத்தள்ளு!
இந்தச் சட்டம் தொலையணும்; நாடு உருப்பட வேணும்!
இங்கேதான்யா இப்படிப்பட்ட சட்ட மெல்லாம்!
இப்படிப்பட்ட சட்டம் போட்டவனெல்லாம் என்ன ஆனான்னு தெரியாதா?
நியாயந்தானாய்யா இந்தச் சட்டம்?
கொஞ்சமாவது ஈவு இரக்கமிருந்தா, இப்படி ஒரு சட்டம் போடுவானா?
யார் என்ன செய்ய முடியும் என்கிற ஆணவத்திலே போடற சட்டம்!
சட்டம் போட்டுவிட்டா எல்லோரும் பெட்டிப் பாம்பாகி விடுவாங்கன்னு நினைப்பு!
கண்ணுமண்ணு தெரியாம கொண்டாடினோம்; போடறான் சட்டம்!
சட்டத்தைத்தானே காட்டுகிறே! காட்டு!
சட்டப்படிதானே நடக்குது சகலமும், தெரியுமே!
ஆட்டுக்குப் போடுது சட்டம் ஓநாய்க் கூட்டம்!
வலுத்தவன்கிட்டப் போகுதா இந்தச் சட்டம்?
ஏழை வாழவா இருக்குது இந்தச் சட்டம்?
இல்லாதவனை மிரட்டத்தான்யா சட்டம்!
நல்லதுக்குப் போடமாட்டாங்க ஒரு சட்டம்!
சட்டம் ஒழுங்காகத்தான் இருக்குது! இருந்து?
சட்டம் இருக்குதா? ஆமாம் ஏட்டிலே தானே!!
ஏன்யா, சட்டம் சட்டம்னு பேசி வயற்றெரிச்சலைக் கிளப்பறே!
போய்யா, நீயும் உன்னோட சட்டமும்.
என்னய்யா செய்துவிடும் உன்னோட சட்டம்?
ஆமாம்! மீறப்போறேன் உன் சட்டத்தை! செய்ய முடிந்ததைச் செய்துகொள்ளு, போ!
சட்டம் சட்டம்னு பயந்து சாகச் சொல்றயா?
உயிரைத்தானேய்யா பறிச்சிக்கும் உன் சட்டம்? செய்யட்டும்!!
கிளம்புங்க, நமக்காகச் சட்டமா? சட்டத்துக்காக நாமா? என்பதை ஒருகை பார்த்தேவிடுவோம்!
✽✽✽
தம்பி! முற்பகுதியில், சட்டத்தின் மேம்பாடுபற்றிக் கூறியிருப்பதற்கும், பிற்பகுதியில், சட்டத்தைத் துச்சமென்று கருதும் மனப்போக்கு எழத்தக்கவிதமாக எழுதியிருப்பதற்கும் பொருத்தம் காணோமே—சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்பதற்கான அழுத்தமான காரணங்களைக்காட்டிவிட்டு. சட்டத்தைக் கேலிசெய்தும் கேவலப் படுத்தியும், மீறத்தக்கது ஒழித்திடவேண்டியது என்ற முறையிலும் எழுதியிருப்பது முறையாகத் தெரியவில்லையே என்று எவருக்கும் கேட்கத் தோன்றும்.
பொறுத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் எனக்கும் இல்லை என்பதை நீ நன்கு அறிந்திருக்கிறாய்—எனவே, ஏன் நான் இவ்விதம் எழுதினேன் என்று எண்ணிப்பார்த்தால் உண்மை விளங்கும்.
சட்டம், சமுதாய ஏற்பாடாக, கட்டுக்கோப்பு கண்ணியம் ஒழுங்கு நீதி நியாயம், நேர்மை ஆகியவற்றினைப் பாதுகாத்திடத்தக்கதாக அறநெறி மேற்கொள்வதாக அமைந்திருக்குமானால், அப்படிப்பட்ட சட்டத்தை அனைவரும் வரவேற்றுப் போற்றி அதன் கட்டுக்கு அடங்கிச் சமூக மேம்பாடு எழில்பெற ஒழுகவேண்டும்— ஒழுகிவருகின்றனர் மிகமிகப் பெரும்பாலோர். ஆனால் சட்டம், தான்தோன்றித்தனமாக, ஆணவப் போக்குடன், ஆய்ந்து பார்க்காமல், ஆதிக்க வெறிகொண்டு, அக்கிரமத்துக்குத் துணையாக, அநீதியைக் கொலுவேற்ற இயற்றப்படுமானால், சட்டம் மதிப்பற்றுப்போகும், துச்சமென்று எண்ணுவர், எதிர்த்திட முனைவர்—எதிர்த்துள்ளனர்— எதிர்த்து நிற்பர்.
சட்டம் நோய் தீர்க்கும் மருந்து என்று கொள்வோமானால், அம்மருந்து முறைப்படி செய்யப்பட்டதாக, அத்துறை வல்லுநரின் ஒப்பம் பெற்றதாக, நோய்தீர்க்க வல்லதாக அமைந்திருக்கவேண்டும். அங்கனம் தயாரிக்கப் பட்டதாக இருப்பின் கசப்பு, குமட்டல், எரிச்சல் ஏற்படினும் சகித்துக்கொண்டு, நோய்போக அம்மருந்து உட்கொள்வர். பொருள்வகை, செய்முறை அறியாது, கண்மூடித்தனமாக, விளக்கமற்ற நிலையில் விரைவு அதிகம்காட்டி, தயாரித்த மருந்து எனின் அதனை உட்கொள்ளார்—உட்கொள்பவர்க்கு நோயினும் கேடான நிலையே ஏற்பட்டுவிடும்.
சட்டத்தை மீறலாம் என்ற நினைப்பும், மீறவேண்டும் என்ற துடிப்பும், மீறத்தக்க துணிவும் மக்கள்—அல்லது குறிப்பிடத்தக்க பகுதியினர் கொள்ளத்தக்க விதமான கோணற் சட்டத்தை இயற்றிவிட்டு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு, அதனை மீறலாகாது என்று பேசிப் பயன் இல்லை.
அவ்விதம் செய்யப்பட்ட சட்டங்கள் நிலைத்திருப்பது மில்லை.
எனவேதான், சமூகத்தில், விவரம் அறியாமல், விளக்கம் பெறாமல், ஆர அமர யோசியாமல், தீது பயக்கத்தக்க, தன்மானம் அழிக்கத்தக்க, உரிமையை உருக்குலையச்செய்யத்தக்க, வலியோர்க்குத்துணை நிற்கத்தக்க விதமான சட்டங்களை எதிர்த்து நிற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன — நடைபெற்றுக் கொண்டு வருகின்றன; நடைபெற்றுத்தீரும்.
சட்டம் இயற்றுவது என்பது எத்தனை பொறுப்பான காரியம் என்பதை உணர்ந்து, தூய நோக்கத்துடன் இயற்றிட வேண்டும்.
சட்டம் இயற்றும் அதிகாரம் எம்மிடம் சிக்கிவிட்டது, இனி எமது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்றுவோம் என்ற போக்கு அறவே கூடாது. அதனைச் சமூகம் தாங்கிக்கொள்ளாது.தேவை அறிந்து, சூழ்நிலை தெரிந்து, அனுபவ அறிவையும் அறிவாளர் கருத்தையும் பெற்று, மக்களுக்குப் பெரும்பாதகம் விளைவிக்காத விதமான முறை கண்டறிந்து, சட்டங்கள் இயற்றப்படவேண்டும்; அத்தகைய சட்டங்களை மதித்து நடப்பர்—நடந்து கொள்கின்றனர்.
கனி தரும் மரமாகத்தக்க செடி, தோட்டத்தில் பயிரிடுபவர்களே, அந்தச்செடி, வீட்டுச் சுவரின் இடுக்கிலே தன்னாலே முளைத்துவிட்டால், கல்லி எடுக்கிறார்கள். வேரினைக் கருக்கிடவும் செய்கிறார்கள்.
மக்களின் நல்வாழ்வுக்காக இந்தச் சட்டம் பிறந்திருக்கிறது என்ற நம்பிக்கை எழத்தக்க முறையில் சட்டம் இயற்றவேண்டும்—மீறினால் என்ன ஆகுமோ என்ற கிலி மக்கள் மனத்திலே எழும். ஆகவே, அவர்கள் தண்டனைக்குப் பயந்து அடங்கிக்கிடப்பர் என்று மட்டும் எண்ணிக்கொண்டு, சட்டத்தை இயற்றிவிடுவது, முழு அளவு பலனை நிச்சயம் தாராது. இதை விளக்கிடும் நிகழ்ச்சிகள் வரலாற்று ஏடுகளிலே நிரம்ப இருக்கின்றன.
சட்டத்தை மீறலாமா என்று கேட்கிறார்களே சிலர், அவர்களுக்குக் கூறிடத்தயங்காதே, தம்பி! தேவையான, நியாயமான சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். சட்டத்தின் கட்டுக்கு அடங்கி நடந்து கொள்கிறோம். ஆனால், எம்மை இழி மக்களாக்கிவிடத்தக்க கேடு விளைவிக்கும் சட்டம் இயற்றப்பட்டால், அதனை மதித்திட முடியாது, மீறித்தான் நடப்போம், அதற்காக அளிக்கப்படும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்பதனை—தெளிவாக—திட்டவட்டமாக என்று.
எல்லாச்சட்டத்திலும் மேலானது, உயிரானது, புனிதமானது, அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறார்கள்.
அதனைவிட மேலானது, புனிதமானது, நல்வாழ்வுக்கான மக்களின் அடிப்படை உரிமை.
அந்த உரிமையைப் பறித்திடும் சூதுமதியுடன், சூழ்ச்சித்திறத்துடன், ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, அதற்குச் சட்டத்தைக் கருவியாக்கிக் கொண்டால், அந்தச் சட்டத்தை எப்படி மதித்திட முடியும், எவர் மதிப்பர், ஏன் மதித்திடவேண்டும்.இந்த எண்ணத்துடனேயே, இந்த எண்ணம் தரும் தெளிவையும் துணிவையும் துணைகொண்டே, இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்தப்பட்டு வருகிறது. இது சட்டத்தை மீறுவதாகும் என்கிறார்கள் துரைத்தனத்தில் இடம்பிடித்துக் கொண்டவர்கள்; அல்ல! அல்ல! எத்தகைய தீதான, தேவையற்ற, சட்டத்தை இந்தத்துரைத்தனம் எம்மைச் சுமக்கச் சொல்கிறது பாருங்கள் என்று உலகோர்க்கு உணர்த்த நடத்தப்படும் அறப்போர் இது என்கிறோம், நாம்.
தம்பி! சட்டம் பொருத்தம் பொருள் அற்றதாகவும், உரிமைக்குக்கேடு விளைவிப்பதாகவும் இருந்திடும்போது, மக்கள் சட்டம்பற்றி என்னென்ன பேசிக் கொள்வார்கள் என்பது குறித்து நான் குறிப்பிட்டுள்ள பகுதியை மறுபடியும் ஒருமுறை படித்துப்பார். ஒவ்வொரு பேச்சும் ஒரு மனநிலையைக் காட்டிடும்.
நாம் என்ன செய்யலாம். சட்டம் அப்படி!—என்ற பேச்சிலே, ஒரு ஏக்கம் தொனிக்கிறதல்லவா? இந்த ஏற்பாடு கெடுதல் மூட்டுகிறது, தெரிகிறது; ஆனாலும், சட்டம் இதுபோலச் செய்துவிட்டார்களே, என்ன செய்வது என்ற ஏக்கம்
இப்படியும் ஒரு சட்டமா? கோபமும் வெறுப்பும் கலந்திருக்கிறது, இந்தக் கேள்வியில்.
இதற்கும் சட்டம் வந்துவிட்டதா? என்று கேட்கும் போதும் எடுத்ததற்கெல்லாம் சட்டமா? என்று வினவிடும் போதும், ஒரு துரைத்தனம் கண்டதற்கெல்லாம் சட்டம் போட்டு, மக்களை அதிக அளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது, அந்தத் துரைத்தனத்துக்கு ‘அமுல்’ செய்வதிலேயே அளவற்ற சுவை இருக்கிறது என்ற கருத்து கலந்து வெளிவருகிறது.
பொருளும் பொருத்தமும் அற்ற முறையிலே சட்டம் இயற்றும்போது, மக்கள் வெறுப்படைந்து பேசுகிறார்கள், சட்டம் என்றால் அதிலே பொருத்தம் பொருள் இருக்க வேண்டாமா என்று.
ஆர அமர யோசித்துச் சட்டம் போடவேண்டும் என்ற பேச்சு எப்போது எழுகிறது! ஒரு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து எடுத்துரைத்துச் சட்டம் இயற்ற, நேர்மாறானது விளைவது காணும்போது இப்பேச்சு எழுகிறது.
இவருடைய சட்டமப்பா இது?—என்று கூறும்போது. சட்டம் இயற்றுபவர்கள் மீது தமக்குள்ள அலட்சியத்தை வெளியிடுகிறார்கள். ஆணவக்காரன் அல்லது அசடன்—இவன் சட்டம் இதுபோலத்தான் இருக்கும் என்ற பொருள்பட.
எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று. அடுக்கடுக்காகச் சட்டங்களைக் குவித்துவைத்திருக்கிறார்கள் தேவையற்று, என்பதைக் குறிக்க இதுபோலக் கூறுகிறார்கள்.
ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்?- என்று கேட்பவர், அதிகாரத்திலிருப்பவர், எந்த நியாயம் கேட்டாலும் உரிமை கேட்டாலும் அதை அடக்கிட சட்டத்தைக் கருவியாக்கிக்கொள்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன், அதிகாரத்திலிருப்பவரிடம் மதிப்பு மங்கி வருகிறது என்பதையும் காட்டுகிறார்.
தம்பி, இப்படியே விளக்கம்பெற, ஒவ்வொரு பேச்சையும் படித்துப் படித்துக் கருத்தினை ஆராய்ந்தால், திகைப்பு வியப்பு, ஏக்கம், வெறுப்பு, அலட்சியம், கோபம், எதிர்ப்பு துணிவு எனும் ஒவ்வோர் வகையான உணர்ச்சியும் இந்தப் பேச்சுக்களிலே உள்ளடங்கி இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
பொறுத்துப் பார்த்துப் பார்த்து, முறையிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து, எரிச்சல் மூட்டப்பட்டு இறுதியில் என்ன நடந்தாலும் நடக்கட்டும் எதிர்த்தே தீருவது என்ற துணிவு பிறந்து, அந்தக் கட்டத்தின் போது தான்,
என்பன போன்ற பேச்சுக்கள் எழுகின்றன; செயலும் நிகழ்கிறது.
இந்த நிலைக்கு மக்களைத் துரத்தக்கூடியதாக, சட்டம் இயற்றக்கூடாது.
இந்த நெறியை ஆட்சியினர் மறந்து, கண் மூடித்தனமாகச் சட்டம் இயற்றினால், அந்தச் சட்டம் ஏட்டில் இருக்கும், நாட்டிலுள்ள நல்லோர் துணிந்து அதனை மதிக்க மறுப்பர்.
நாம் நடத்திவரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் இந்த நிலையையே எடுத்துக் காட்டுகிறது; எனவே சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்ற மேலான கோட்பாட்டை மதித்து ஒழுகும் நமது கழகத்தவர், ஆகாத, தீதான, தேவையற்ற, பொருளற்ற, வேண்டுமென்றே பூட்டப்படுகிற, உரிமை பறிக்கிற சட்டத்தை எதிர்த்து சிறை செல்வதை, ஒரு தீமையை எதிர்த்து நிற்கும் அறம் என்று உளமார நம்பி நடந்து கொள்கிறார்கள். அந்தச் சீரிய செயல், சட்டம் இயற்றுபவர்கள எத்தகைய நெறி நிற்க வேண்டும் என்பதனை அவர்களே, மெல்லமெல்ல ஆனால், நிச்சயமாக உணர்ந்திட வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இத்தகைய நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் அறப்போரில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதிலே நான் பெருமைப் படுகிறேன்; அந்தப் பெருமிதத்தில், எனக்கு! எனக்கு! என்று கேட்டுத் தம்பிகள் பங்கு பெற்றுக்கொள்வது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. அந்தப் பெருமையில் தமக்குரிய ‘பங்கினை’ப் பெற முனைந்து, நாவலர் நெடுஞ்செழியன் சிறை சென்றிருக்கிறார். என் வாழ்த்துக்களை அவருக்கும், கோவை மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன் மற்றும் பல நண்பர்கட்கும் வழங்கி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் மட்டுந்தானா அண்ணா! என்று கேட்டிடமாட்டாய் என்று எண்ணுகிறேன், தம்பி! ஏனெனில் நீ அறிவாய், அன்பு ததும்பும் ஒரு தூய இதயத்திலிருந்து நான் கொய்து அளிப்பது அந்த வாழ்த்து! அந்த மலரின் மணமும் மாண்பும் நீ அறிந்திருக்கிறாய்!!
2-8-1964
அண்ணன்,
அண்ணாதுரை