தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004

காஞ்சிக் கடிதம் : 4

பன்னீர் தெளித்தாலும்...



ஓ என்ரியின் கதை

கொடுமையிலும் கொடுமை உணவுப் பொருள்களின் விலை ஏற்றம்

விலைவாசி ஏற்றத்துக்குக் கறுப்புப் பணமே மூலகாரணம்

உணவுத்துறையின் மோச நிலைக்கு முழுப்பொறுப்பு காங்கிரஸ் ஆட்சியே!

தம்பி,

ஒரு சீமானின் மகனைப் பற்றிய கதை கூறப்போகிறேன்—ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அறிந்து, உள்ளம் உருகி, தக்கதோர் பரிகாரம் தேடித் தந்திடவேண்டும் என்ற உள்ளத் துடிப்புக் கொண்ட வாலிபன் பற்றிய கதை.

தகப்பனார் திரட்டிய திரண்ட செல்வத்துக்கு அதிபதியான இந்த மகன், அவருடைய கல்லறையில் கண்ணீர் உகுத்தான்; சொத்தின் அளவுபற்றிக் குடும்ப வழக்கறிஞர் கூறிய விவரம் கேட்டு, வியப்பல்ல, அதிர்ச்சியே அடைந்தான்; மொத்தத்தில் 2,000,000 டாலர்கள் வைத்துவிட்டுச் சென்றார் அந்தச் சீமான்.

ரொட்டிக்குத் தேவைப்படும் கோதுமை வியாபாரத்திலே குவித்ததே அவ்வளவு செல்வமும்; கோதுமை வியாபாரம் என்றால், பெரிய பெரிய கிடங்குகளைப் பல இடத்திலே அமைத்துக்கொண்டு, கோதுமையை மூட்டை மூட்டையாக அடைத்து வைத்துக்கொண்டு பலருக்கும் விற்பனை செய்தது என்பதல்ல பொருள். கோதுமை விளைந்து அறுவடையாகிச் சந்தைக்கு வந்து விலையாகு முன்பே, வயலில் கோதுமைக் கதிர்கள் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருக்கும்போதே, இன்ன விலைக்கு, இத்தனை அளவு கோதுமையை, இன்ன மாதத்தில் வாங்கிக்கொள்கிறேன் அல்லது விற்கிறேன் என்று. ‘பேரம்’ பேசி வைத்துக்கொண்டு, அதிலே இலாபம் சம்பாதிக்கும் முறை.

ஏழை எளியோருக்குத் தேவை ரொட்டிதானே! தேவை மட்டுமா? அதுதானே அவர்களால் பெறமுடியும்; மற்ற மற்ற உயர்ந்த விலையுள்ள உணவுப் பண்டங்களை அவர்கள் எங்கே வாங்கப் போகிறார்கள்? என்ன விலை ஏறினாலும், விலை ஏற்றம் எத்தனை தாறுமாறாக இருப்பினும், ரொட்டி வாங்கித்தானே ஆகவேண்டும். போகப் பொருளாக இருப்பின், விலை ஏறிவிட்டது என்று தெரிகிறபோது வாங்காமல் இருந்துவிடலாம்! இது வயிற்றுக்குத் தேவையான பொருள்—ஏழைகள் பெற்றே தீரவேண்டிய ஒரே பொருள்; எனவே, அநியாய விலையாக இருக்கிறதே என்று அழுகுரலிற் கூறிக்கொண்டாகிலும் வாங்கித் தீரவேண்டிய பொருள்.

இந்தப் பொருளை, இலாபவேட்டைப் பொருளாக்கினான் சீமான்; ரொட்டியின் விலை ஏறிற்று; சீமானுக்குச் செல்வம் குவிந்தது; ஏழைகள் கைபிசைந்து கொண்டனர்; அந்த ஏழைகளுக்காக ரொட்டிக் கிடங்கு—ரொட்டிக்கடை நடத்திய நடுத்தர வகுப்பினர் நொடித்துத் போயினர். சீமானோ சில ஆண்டுகளில் பெரும் பொருள் குவித்துக்கொண்டான்; களவாடி அல்ல, கள்ளக் கையொப்ப மிட்டு அல்ல; புரட்டு புனைசுருட்டால் அல்ல, வியாபார மூலம்!

கஷ்டப்பட்டுச் சேர்த்தான் இத்தனை செல்வம் என்றோ, அதிர்ஷ்ட தேவதை அணைத்துக்கொண்டாள், அவன் சீமானானான் என்றோ தானே எவரும் கூறுவர். உலக வாடிக்கை வேறாகவா இருக்கிறது?

மகன், திரண்ட செல்வத்தையும் பெற்றான், அந்தச் செல்வம் எப்படித் திரட்டப்பட்டது என்ற உண்மையையும் அறிந்துகொண்டான். அவன் மனம் என்னவோ போலாகிவிட்டது, ஆயிரமாயிரம் ஏழை எளியோர்களின் வயிற்றில் அடித்தல்லவா அப்பா இவ்வளவு பணம் சேர்த்தார். அந்தப் பணத்துக்கல்லவா நாம் அதிபதியானோம். ஐயோ! பாவமே! எத்தனை எத்தனை ஏழைகள், அப்பாவின் வியாபார முறை காரணமாக கோதுமை விலை ஏறிவிட்டதால், குமுறினரோ, கலங்கினரோ, கதறினரோ, துடித்தனரோ, துவண்டனரோ! அவர்களின் கண்ணீர் அல்லவா, என் கரத்தில் விளையாடும் காசுகளாகி விட்டன. இது அநீதி! இது இரக்க மற்ற செயல்! ஏழை இம்சிக்கப்பட்டிருக்கிறான், அதன் விளைவாகக் கிடைத்த பணம் என்னிடம் குவிந்திருக்கிறது. நான் இதய முள்ளவன்! ஏழைக்கு இரக்கம் காட்டும் எண்ணம் கொண்டவன்! என்னால் கூடுமான மட்டும், ஏழைகளுக்கு இதம் செய்வேன்; அப்பாவின் பேராசையால் அலைக்கழிக்கப்பட்டவர்களை நான் கை தூக்கிவிடுவேன்; என்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு இந்தத் திருத்தொண்டு புரிவேன் என்று தீர்மானித்தான்.

பள்ளியில் அவனுடன் படித்த ஒரு நண்பன், பொருளாதாரக் கருத்துக்களையும் சமுதாயத் திருத்தத் தத்துவங்களையும் நன்றாக அறிந்திருந்தான். கல்லூரியில் அவன் பயிலச் செல்லவில்லை; தகப்பனாரின் நகைக் கடையில் வேலை தேடிக் கொண்டான்; கடிகாரம் பழுது பார்த்துத் தரும் நுட்பமான தொழிலிலும் பழகிக் கொண்டிருந்தான். அவனைத் தேடிவந்தான், சித்தம் உருகிய நிலையினனான சீமான் மகன். விவரம் கூறினான்.

“ரொட்டிக்காக அந்த ஏழைகள் அதிகமாகக் கொடுத்த பணத்தை அவர்களிடம் திருப்பித்தர விரும்புகிறேன். உள்ளம் கொதிக்கிறது உண்மை அறிந்த பிறகு. ஏழையிடம் அநியாயமாகப் பறித்ததைத் திருப்பித்தந்தால் தான் என் மனம் நிம்மதியாகும். இதை எப்படிச் செய்யலாம்; ஒரு யோசனை சொல்லு” என்று கேட்டான் சீமான் மகன்.

இலட்சியங்களைக் கற்றிருந்த அவன் நண்பன், தீப்பொறி பறக்கும் கண்ணினனானான்; ஏற இறங்கப் பார்த்தான். சீமான் மகனின் கரத்தை இழுத்துப்பிடித்துக் கொண்டு கூறினான்.

“ஏழைக்கு இதம் செய்ய எண்ணுகிறாயா? அது உன்னால் முடியாது. உன்போல அநியாய வழிகளிலே பணம் திரட்டும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை தரப் படுகிறது தெரியுமா! நீங்களாக உண்மையை உணர்ந்து, உள்ளம் உருகி, அநீதியைத் துடைத்து இதம் செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத்துடிப்புக் கொண்டாலும், இதம் செய்யும் ஆற்றல் அற்றுப் போனவர்களாகி விடுகிறீர்கள். உன் நோக்கம் சிறந்தது, ஆனால், வஞ்சிக்கப்பட்ட, இம்சிக்கப்பட்ட ஏழைக்கு இதம் செய்ய உன்னால் முடியாது; காலம் கடந்துவிட்டது; விஷயம் முற்றிவிட்டது; ஏழையின் வாழ்வு பாழ்பட்டு விட்டது; உன்னால் விளக்கேற்ற முடியாது” என்றான்.

சீமான் மகன், இம்சிக்கப்பட்ட ஏழைகள் அனைவரையும் தேடிக் கண்டு பிடித்து, ஒவ்வொருவருக்கும். இதம் செய்திட முடியாதுதான். ஆனால், என்னால் இயன்ற மட்டும், என்னிடம் உள்ள செல்வத்தை இதற்குப் பயன்படுத்துவேன்” என்றான்.

அந்த நண்பன், அக்கறையற்ற குரலில், “எத்தனையோ தர்ம ஸ்தாபனங்கள் உள்ளனவே, உன் பணத்தைப் பெற” என்றான்.

“சீமான் மகனோ, “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதை அல்லவோ அது. வேண்டாம். நான் ரொட்டி வாங்கிக்கஷ்ட நஷ்டப் பட்டவர்களுக்கே உதவி செய்ய விரும்புகிறேன்.” என்றான்.

“கோதுமையை உன் தகப்பனார் மடக்கிப் போட்டு விலை ஏற்றத்தை மூட்டி விட்டாரே அதன் காரணமாக, ஏழைகள் உணவு பெறுவதிலே, ஏற்பட்ட நஷ்டத்தொகையைத் திருப்பித்தர, எவ்வளவு பணம் தேவைப் படும் தெரியுமா?” என்று கேட்டான். “எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் உள்ள பணம் 2,000,000 டாலர்கள்” என்றான் சீமான் மகன். “கோடி டாலர்கள்” இருந்தாலும் போதாதப்பா, கொடுமைக்கு ஆளான மக்களுக்கு இதம் செய்ய; நியாயம் வழங்க. அநியாய வழியில் திரட்டப்படும் பணத்தால் முளைத்திடும் ஆயிரத்தெட்டுக் கேடுகளை நீ என்ன அறிவாய்!! ஏழையிடம் கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட ஒருகாசு, ஓராயிரம் தொல்லையை ஏழைக்குத் தருகிறது. உன்னால் முடியாது, தந்தையின் வாணிப முறையின் காரணமாகக் கொடுமைக்கு ஆளான ஒருவருக்குக் கூட இதம்செய்ய” என்றுரைத்தான். சீமான் மகனுக் குப் புரியவுமல்லை; இந்தப் பேச்சு பொருளுள்ளதாகவும் தெரிய வில்லை.

“முடியும் நண்பா! முணுமுணுக்காமல், விவரம்கூறு.” என்று கேட்டான், “கூறவா! கூறுகிறேன் கேளப்பா, கருணாகரா! அதோ அடுத்த தெருவில் ஒருவன் ரொட்டிக் கடை வைத்திருந்தான்; எனக்குத் தெரியும். பரம ஏழைகள் அந்தக் கடையில் ரொட்டி வாங்குபவர்கள். விலையைத்தான் ஏற்றிவிட்டாரே உன் தகப்பனார்; இவன் ரொட்டியின் விலையை ஏற்றினான்; ஏழைகளால் அந்த விலை கொடுத்து வாங்க முடியவில்லை, கடை தூங்கிற்று; அவன் கடையில் போட்டிருந்த ஆயிரம் டாலர் அடியோடு நஷ்டமாயிற்று. அவனிடம் இருந்த மொத்த ஆஸ்தியே அதுதான். அவ்வளவும் போய்விட்டது” என்றான்.

அழுத்தந் திருத்தமாகப் பேசலானான் சீமான் மகன், “அப்படிச் சொல்லு விவரத்தை! வா! உடனே போய், அந்த கடைக்காரன் இழந்த ஆயிரம் டாலரைத் திருப்பிக் கொடுத்து அவனுக்கு ஒரு புதிய ரொட்டிக் கடையும் வைத்துக் கொடுக்கலாம்” என்றான்.

“எழுதப்பா, செக்! ஆயிரம் டாலருக்கு மட்டுமல்ல; அவன் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளின் காரணமாக ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாவற்றுக்கும், செக் எழுதிக் கொடு! ஐம்பதாயிரம் டாலர் செக் ஒன்று கொடு! ஏனென்கிறாயா? கடை திவாலாயிற்றாம், அவன் அதன் காரணமாகக் குழம்பினான், பித்துப் பிடித்துவிட்டது, அவன் இருந்துவந்த இடத்தை விட்டு அவனை வெளியேறச் சொன்னார்கள், அவன் அந்தக் கட்டடத்துக்குத் தீயிட்டான். ஐம்பதாயிரம் டாலர் பாழ்! அவனோ பித்தர்விடுதியில் அடைபட்டான், செத்தும் போனான். அடுத்த செக் பத்தாயிரம் டாலருக்கு. ஏனா? அவன் மகன், தகப்பனை இழந்ததால் தறுதலையானான்; கெட்டலைந்தான்; அவன்மீது ஒரு கொலைக் குற்றம்; மூன்று ஆண்டுகள் வழக்கு; அதற்கான செலவு நீதித்துறைக்கு, பத்தாயிரம் டாலர். அதையும் நீதானே கொடுக்கவேண்டும்; கொடு.

“சர்க்காருக்கான செலவு இருக்கட்டும்; நமது உதவி தேவையில்லை சர்க்காருக்கு; ரொட்டிக் கடைக்கு ஏற்பட்ட நஷ்டம் வரையில் கொடுத்திடலாம்; முடியும்” என்றான் சீமான் மகன்.

“விலை ஏற்றத்தை மூட்டி விட்டதனால் ஏற்பட்ட விபரீத விளைவுகளில், இன்னொன்று பாக்கி இருக்கிறதே! காட்டுகிறேன் வா!” என்று கூறி அந்த நண்பன் சீமான் மகனை அழைத்துக்கொண்டு, ஒரு முட்டுச் சந்திலிருந்த ஒரு நிலையத்துக்குள் சென்று, அங்கு, சட்டை தைத்துக் கொண்டிருந்த இளமங்கையைக் காட்டினான். அவள் ஒரு புன்னகை உதிர்த்தாள். “இன்று நாலு டாலர் கிடைக்கும் எனக்கு” என்றாள் அந்தப் பெண். நண்பன், சீமான் மகனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோதுமைவிலை ஏறிவிட்டதே; அந்த விலை ஏற்றத்தை மூட்டியவரின் மகன் இந்த இளைஞன். தன் தகப்பனாரின் செயலால் சீரழிக்கப் பட்டவர்களுக்கு ஏதாகிலும் இதம் செய்ய வேண்டுமென விரும்பி வந்திருக்கிறார்” என்றான். அந்தப் பெண்ணின் புன்னகை மடிந்தது; முகம் கடுகடுத்தது; எழுந்தாள், சீமான் மகனை நோக்கி வெளியே போ! என்று கூவவில்லை, கையால் குறி காட்டியபடி நின்றாள்.

தம்பி! கதையை இந்த அளவுடன் நிறுத்திவிட எண்ணுகிறேன். ஏனெனில், என் நோக்கம், இரு இளைஞர்கள், ஒரு மங்கை, இவர்கட்கு இடையிலே ஏற்பட்ட தொடர்பு பற்றிய விவரம் கூறுவது அல்ல. உணவுப் பண்டங்களின் விலை ஏற்றம், சீமான்களின் வாணிப முறையின் விளைவு என்பதைக் காட்டவும், அந்த விலை ஏற்றத்தால் தாக்கப்படும் ஏழைகளுக்கு ஏற்படும் இன்னல், அதிகவிலை கொடுத்ததால் ஏற்பட்ட பண நஷ்டம் மட்டுமலல விபரீதமான பல விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டவே இந்தக் கதையைக் கூறினேன். கதையும் என் கற்பனையில் உதித்தது அல்ல. அல்லற்படுவோர்களின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டத்தக்க விதமான சிறு கதைகளைத் தீட்டிய வித்தகர் ஓ. என்ரியின் கற்பனை; நான் அதிலிருந்து கருத்தினை எடுத்து என் வழியில் எழுதித் தந்திருக்கிறேன்.

ஓ. என்ரி, சிறுகதை தீட்டுவதிலே வல்லவர் மட்டு மல்ல; அதிலே விந்தை பல இழைத்தளிப்பவர். இந்தக் கதையிலும், விலைவாசி விஷம்போல் ஏறுவதால்—ஏற்றி விடப்படுவதால்—விளையும் விபரீதம் பற்றிக் கூறிவிட்டு, ஒரு விந்தையை இழைத்திருக்கிறார். இரக்க மனம் படைத்த சீமான் மகன், இலட்சியம் அறிந்த ஒரு வாலிபன், கொடுமை கொட்டியதால் கொதிப்படைந்த ஒரு குமரி! இந்த மூன்று பேர்களை வைத்துக் கொண்டு, உணவுப் பொருளின் விலையை, இலாபவேட்டை நோக்கம் கொண்ட வணிகர்கள் விஷம்போல ஏற்றிவிட்டு விடுவதனால், ஏற்படும் விளைவுகளை, நாம் உணரவும் உருகவும் செய்துவிடுகிறார்.

பிறகு? பிறகு? என்ன செய்தான் அந்தச் சீமான் மகன்? அந்தக் குமரி? என்று கேட்கிறாய் ஆவலாகத்தான் இருக்கும், அறிகிறேன், ஓ. என்ரியின் முறை என்ன தெரியுமா, தம்பி! சிறு கதையின் கடைசி இரண்டொருவரிகளில், யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அளித்து முடிப்பார்! அந்த இரண்டொரு வரிகளில், ஒரு பெரிய தத்துவமே கிடைத்திடும்.

சே! இந்த ஏழைகளுக்கே ஆணவம் அதிகம்!—என்று வெகுண்டுரைத்து விட்டுச் சென்றான் சீமான் மகன் என்று முடித்திடலாம், கதையை.

இலட்சியமறிந்த இளைஞன், சீமான் மகனின் கண்கள் தளும்பக்கண்டு, ‘பாவம்! இவன் நல்லவன். இதயம் கொண்டவன். இவனை வெறுக்கக் கூடாது. தகப்பனார் செய்துவிட்டுப்போன கொடுமையை எண்ணி இவன் உள்ளம் உருகிக்கிடக்கிறான்” என்று பரிந்து பேசினான்; மூவரும் நண்பர்களாயினர் என்று கதையை முடித்திருக்கலாம்.

“என்ன காரியம் செய்துவிட்டோம். உதவி செய்ய வந்த உத்தமனை உதாசீனம் செய்து விட்டோமே! அவன் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ?” என்று எண்ணிய பெண், அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் என்று முடித்திருக்கலாம். பலவிதமான முடிவுகள். தம்பி! உனக்கும் எனக்கும் தோன்றும். ஆனால் விந்தையான—உலக நடை முறையை விளக்கிடத்தக்க—முடிவு என்னவாக இருக்கமுடியும் என்பதைக் கண்டறிந்து கூறிடும் திறன் ஓ. என்ரிக்குத்தான் உண்டு.

இந்தக் கதையின் மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறார் ஓ. என்ரி.?

. சீமான் மகனின் மனமும் திருந்திவிடும்; இம்சை செய்யப்பட்டவர்களுக்கு இதம செய்திடுவான். என்ற கருணை பற்றிய விளக்கமளிக்க அல்ல அவர் விரும்பியது.

ஏழைக்கு இழைக்கப்படும் இன்னலுக்கு, இன்னல் இழைத்தவர்களே பிறகோர் நாள் இதம் செய்திட விரும்பி முன்வந்தாலும், நொந்துபோன ஏழையின் வாழ்வை, இரக்கம், கருணை, உதவி மூலம் மலரச்செய்திட முடியாது. கசங்கிய மலர், மீண்டும் தண்ணீருக்குப் பதில் பன்னீர் தெளித்தாலும், எழில் பெற முடிகிறதா? அதுபோலத்தான்.

இந்தக் கருத்தை விளக்கவே அவர் கதை புனைந்தளிக்கிறார்.

இரக்கம், பரிவு, பாசம், இவை தனிப்பட்டவர்களின் உள்ளங்களில் எழக்கூடும், நத்தையிலும் முத்துக் கிடைப்பதுபோல! ஆனால், ஏழை நொந்த வாழ்வு பெறுவது, ஒரு கொடிய முறை காரணமாக. அந்தமுறையை, தனி ஒருவனின் இரக்கம், பரிவு, தானம், தருமம் போன்றவைகளால் போக்கிடவோ, அந்த முறை காரணமாக ஏற்பட்டுவிடும் விபரீதங்களை நீக்கிடவோ முடியாது. இதைக் கூறும் துணிவே, பலருக்கு ஏற்படாது. ஓ. என்ரி இதனைக் கூறுவது மட்டுமல்ல, ஒரு சீமானின் மகன், ஏழையிடம் இரக்கம் காட்டும் பயணத்தைத் துவக்கினால், அந்தப் பயணம், எதிலே போய் முடியும், நடக்கக் கூடியது எதுவாக இருக்க முடியும் என்பதை, நகைச்சுவையுடன், ஆனால், அதேபோது இரண்டு சொட்டுக் கண்ணீரும் கிளம்பிடத் தக்கதானதாகக் கூறுவார்.

சரி! கதையை முழுவதும் கூறத்தான் வேண்டும்; கூறிவிடுகிறேன், தம்பி! கூறவேண்டியது அதிகமுமில்லை.

எங்கே நிறுத்தினேன் கதையை? ஆமாம்! அவள் கோபத்துடன், சீமான் மகனை வெளி ஏற்றுகிறாள்; அந்தக் கட்டத்தில்தான் நிறுத்தினேன்.

அடுத்த கட்டம் என்ன தெரியுமா, தம்பி?

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டம்.

இலட்சியமறிந்த நண்பன் இருக்கிறானே, அவனைக் காண்கிறோம். ஒரு பெரிய ரொட்டிக் கடை முதலாளியின் ‘தங்க பிரேம்’ போட்ட மூக்குக் கண்ணாடியைச் சரிபார்த்து, எடுத்துக்கொண்டு போகிறான், கொடுத்திட. ஒரு உரையாடல் அவன் காதில் விழுகிறது.

“என்ன விலை, ரொட்டி,”
“பத்துப் பணம்.”

“பத்துப் பணமா? விலை அதிகம். எட்டுப் பணத்துக்கு வேறு இடத்தில் கிடைக்கிறதே!”

திரும்பிப்பார்க்கிறான், குரலொலி கேட்டு. அதே பெண்; சட்டை தைத்துக் கொண்டிருந்தாளே, விலை ஏற்றத்தால் நாசமாகிப் போனானே சிறு ரொட்டிக் கடைக்காரன் அவன் மகள்; உதவி செய்ய வந்த சீமான் மகனை வெறித்து விரட்டினாளே அதே பெண்!

“ஐயா! நலமாக இருக்கிறீர்களா?”—அவள் கேட்கிறாள்.

“இருக்கிறேன். போய்னீ!” என்கிறான் இலட்சியமறிந்தவன்.

போய்னீ என்பது கன்னியின் பெயர்.

“நான் இப்போது திருமதி கின் சால்விங்! எனக்கும் கின்சால்விங்குக்கும் போன மாதம் திருமணமாகி விட்டது.” என்கிறாள் அவள்.

கின் சால்விங் என்பது யாருடைய பெயர் தெரியுமா தம்பி! சீமான் மகன் பெயர்!!

கதை அவ்வளவுடன் நின்றுவிடுகிறது! கருத்து என்னென்ன மலருகிறது எண்ணிப் பார், தம்பி!

ஓ, என்ரியின் விந்தை மிகுதிறமையைக் கூறிடவே கதை முழுவதும் சொல்லி வைத்தேன்—நான் இதிலே உன்னை மீண்டும் மீண்டும் கருத்தில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வது,

விலை ஏற்றங்களில் உணவுப் பொருளின் விலை போன்ற ஏற்றத்தைப் வேறு கொடுமைமிக்கது எதுவும் இல்லை. விலை ஏற்றம் என்பது பெருத்த இலாபத்தை மிகக் குறைந்த நாட்களில் கொள்ளை

போலப் பெறவேண்டுமென்று திட்டமிட்டு, வாணிபத் துறையினர் செய்திடும் சதி.

உணவுப் பொருள் விலை ஏற்றத்தின் காரணமாக அவதிப்படும் ஏழைகளின் வாழ்வு நொந்துபோகும் கொடுமையை நீக்கிட, இன்மொழி, இதமளித்தல், பரிவு காட்டுதல், எனும் முறைகள் பயன்படாது,

விலைவாசி ஏற்றத்தினால் ஏற்படுவது, ஏழைக்குப் பொருள் நஷ்டம் மட்டுமல்ல, பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன.

இந்தக் கருத்துகளை உணர்ந்திடச் செய்வதற்கே, இந்தக் கதையைக் கூறினேன்.

உணவுப் பொருள்களின் விலை ஏறிவிட்டது; ஏறிக்கொண்டே இருக்கிறது என்பதைக் காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது!

கைப்புண்ணுக்குக் கண்ணாடியா! என்று கேட்கத் தோன்றும். என்ன செய்வது, தம்பி! இந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் மனம், இப்போதுதானே வந்திருக்கிறது, காங்கிரஸ் அரசுக்கு.

ஆண்டு இரண்டாகிறது நமது கழகத்தவர். விலைவாசி ஏற்றக்கொடுமையைக் கண்டு குமுறி எழுந்து, முறையிட்டுப் பலன் காணாததால், கிளர்ச்சி நடத்தி, சர்க்காரின் கண்களைத் திறந்திட முயன்ற நிகழ்ச்சி. வேலூர் சிறையிலே நான் அடைபட்டுக் கிடந்தேன், உள்ளம் வெதும்பிய நிலையில்.

உணவுப் பொருளின் விலை விஷம்போல ஏறிவிட்டது, ஏழையின் வாழ்வில் இம்சை அதிகமாகிறது.
என்ற உண்மையை ஒப்புக் கொள்ளக்கூட இந்த ஆள வந்தார்களுக்கு மனம் இல்லையே! இது என்ன ஆட்சி!! என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். நமது தோழர்கள் பல ஆயிரவர் சிறையிலே வாடிக் கிடந்தனர்; உள்ளே எத்துணையோ கொடுமைகள்; வெளியே எத்தனை எத்தனையோ ஏச்சுப் பேச்சுகள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டோம். இரு தோழர்களையும் பறி கொடுத்தோம்; இதயத்திலே தழும்பு பெற்றோம்.

உணவு விலையா ஏறி இருக்கிறது?
ஏறினால் என்ன கேடு வந்து விட்டது?

பணம்தான் புரளுகிறதே தாராளமாக; விலை ஏறினால் என்ன?

கூலிதான் கிடைக்கிறதே ஏராளமாக, விலை ஏறினால் என்ன கஷ்டம்?

அரிசி விலையைக் குறைக்க அரி அர பிரமாவினாலும் முடியாது.

விவசாயி தலையில் கை வைத்தால்தான் அரிசி விலையைக் குறைக்கலாம்.

வளருகிற பொருளாதாரத்தில் விலை ஏறத்தான் செய்யும்,

இவை ஆளவந்தார்கள் அன்று உதிர்த்த பொன்மொழிகளிலே சில!

ஒருவர் மிகத் துணிச்சலுடன் அடித்துப் பேசினார்,

விலை ஏறி இருப்பது நாட்டின் சுபீட்சத்தைக் காட்டுகிறது.

என்று.

ஒருவரும், விலைவாசி விஷம்போல ஏறி இருப்பதை இறக்கத்தான் வேண்டும் என்று கூறவில்லை; விலைவாசி ஏறி இருப்பது இயற்கை, நியாயம், தவறு இல்லை, தீது அல்ல என்று வாதாடினார்கள், நினைவிலிருக்கிறதல்லவா, தம்பி!

அப்படியே விலை ஏறி இருந்தாலும், அதைக் குறைக்க, கிளர்ச்சியா வழி? என்று கேட்டவர்களும்,

அப்படியே கிளர்ச்சி செய்வதானாலும், கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்றுகொண்டு விலை குறைய வேண்டும் என்று கூச்சலிடுவதா பயனுள்ள கிளர்ச்சி என்று கேட்டவர்களும்,

அதுதான் கிளர்ச்சி என்று வைத்துக் கொண்டாலும், அதனை ஒழுங்கான முறையில், பலாத்காரமின்றிச் செய்திடும் திறமை இருக்கிறதா என்று கடாவினோரும்.

கிளர்ச்சி ஆபாசமாகப் போய்விட்டதற்குக் காரணம் நான் கூறுகிறேன். கேண்மின்! தலைமை, அவ்வளவு மோசமானது!! திறமையற்றது!! என்று குரலெழுப்பினோரும்,

சட்டசபையில் பேசிடாமல் சந்து முனை சென்று கத்துவதா? இதுவா கிளர்ச்சி? என்று அரசியல் பாடம் போதிக்க முன்வந்தவர்களும், ஏ! அப்பா! எத்தனை எத்தனை பேர்!!

இவர்களை ஜாமீன் கேஸ் போட்டு, உள்ளே தள்ளி வைக்க வேண்டும் என்று முழக்க மெழுப்பினோரும்,

இவர்கள் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கிளர்ச்சி நடத்திக் கிளர்ச்சிக்கு இருந்து வந்த மதிப்பையே பாழாக்கி விட்டார்களே! இனி எந்தக் கிளர்ச்சியும் செய்யவே முடியாத நிலையாகி விட்டதே! என் செய்வது! என்று சோக கீதம் பாடிக் காட்டியவர்களும்,

வீணான கிளர்ச்சி செய்தார்கள்; அதை அடக்கப் பணம் செலவாயிற்று; அந்தப் பணம் இருந்தால் பத்துப் பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம் என்று பொருளாதாரப் பேரறிவைப் பொழிந்தவர்களும்,

உற்பத்தி பெருகுவது ஒன்றுதான் விலைகளைக் குறைத்திடச் செய்யும் ஒரேவழி, நல்வழி, எம்வழி! என்று அகில உலக அறிவைத் தம்மிடம் ஏகபோகமாக வைத்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு எக்காளமிட்டவர்களும், இருக்கிறார்கள், தம்பி! இங்கேயேதான் இருக்கிறார்கள் — இளித்தவாயர்களாகிவிட்டோம் என்று ஒப்புக்கொள்ள மனமின்றி, அன்று என்னென்ன பேசினார்களோ அவ்வளவையும் விழுங்கிவிட்டு இன்று.

விலைவாசி ஏறிவிட்டது, ஒப்புக்கொள்கிறோம்.

விலைவாசி கட்டுப்படுத்தப் படவேண்டும், ஒப்புக்கொள்கிறோம்.
என்று விநயமாகப் பேசி வருகிறார்கள். நமது கிளர்ச்சியை மதிக்க மறுத்தார்கள்; இன்று அவர்களின் முன்னாள் முடுக்கு மாய்ந்தது; உண்மையை ஒப்புக்கொண்டு தீர வேண்டிய நிலை பிறந்தது.

இதற்காக ஒரு கிளர்ச்சியா? என்று கேட்டபடி இடி முழக்கங்கள், இன்று கிளர்ச்சி நடத்த முனைந்து விட்டோம் என்று முழக்குகின்றனர்,

கலெக்டர் அலுவலகத்தின் முன்பா, கிளர்ச்சி! சேச்சே! விலை குறைக்க அவருக்கு என்ன அதிகாரம்? என்று விவரம் பேசிய வித்தகர்கள் இன்று கலெக்டர் அலுவலகங்களின் முன்புதான் நிற்கப்போகிறார்கள்—முழக்கம் எழுப்பிட!

சேர்ந்து கிளர்ச்சி நடாத்துவோம், வாரீர்! என்று ஒரு சாரார் அழைக்கக்கூடச் செய்கிறார்கள். நம்மைத்தான் தம்பி! நம்மைத்தான்!!

காலங்கடந்தாகிலும் இந்தக் கருத்து எழுந்தது பற்றி எண்ணிடும்போது, சிறையிலே அன்றுபட்ட அல்லல் பற்றிய நினைப்பு மறந்தே போகிறது, விதைத்தது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி பெறுகிறோம்.

கிளர்ச்சி நடத்தத் தெரியாத ‘தலைவர்கள்’ கொண்டதாமே, தி. மு. க...!

இன்னும், மற்றவர்கள் கிளர்ச்சி துவக்கவில்லை, திட்டமிட்டபடி!

இதற்குள், கடைகள் சூறையாடப்பட்டன, கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடைபெற்றது. கல்வீச்சும் பதிலுக்குத் துப்பாக்கி வேட்டும் நடைபெற்றுவிட்டன. கிளர்ச்சிக்காரர்களிலும் சிலர் மாண்டனர்; போலீசிலும் சேதம்!!

கிளர்ச்சியின் இலக்கணம் பற்றியும், தலைவர்களின் தன்மை பற்றியும், பெருங்குரல் கொடுத்த பெம்மான்கள் அது கண்டு ஒரு வார்த்தை? கிடையாதே! இதோபதேசம்? இல்லை! அறிவுரை? வக்கு இல்லை! வாயடைத்துக் கிடக்கிறார்கள். . ஒவ்வொருவருடைய வாயும், நம்மைப் பற்றிப் பேசும் போதுதான் வல்லமை பெறுகிறது; மற்ற நேரத்தில்? என்ன இனிப்புப் பண்டத்தைக் கொள்கின்றனரோ புரியவில்லை; கப்சிப்!

போகட்டும், நம்மைப் பொல்லாங்கு சொன்னதால் நமக்கொன்றும் கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. இன்று கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனமும், இரக்கப் பேச்சும் காட்டுகிறார்களே, அது ஒரு வித மகிழ்ச்சியைத் தரத்தான் செய்கிறது.

உணவுப் பண்டங்களின் விலை ஏறிவிட்டிருப்பதற்கு காரணம், உற்பத்திக் குறைவு அல்ல; உற்பத்தியான பொருளைச் சீராக விநியோகிக்கும் முறை இல்லாததே என்று நாம் முன்பு சொன்னோம், நையாண்டி செய்தனர் நாட்டின் நாயகர்கள். இன்று, அதையே, ஒரு கண்டு பிடிப்பு போல எடுத்துக் கூறுகிறார்கள்; பொதுமக்கள் நினைவாற்றல் அற்றவர்கள் என்ற எண்ணத்தில். பொது மக்கள் ஆளவந்தார்களைத் திருப்பிக் கேட்க முடியாதவர்கள்; ஒப்புக்கொள்வோம். ஆனால், தமக்குள் பேசிக் கொள்ளாமலா இருக்கிறார்கள்; நேற்றுவரை இந்த இந்த நேர்மையாளர்கள். விலை ஏற்றத்துக்குக் காரணம் உற்பத்தி போதாது என்றார்கள்; இன்று உற்பத்தியில் குறைவில்லை, விநியோகத்தில் கோளாறு என்கிறார்களே; இவர்களுக்கென்ன, நாளைக்கு ஒரு நாக்கா? வேளைக்கு ஒரு பேச்சா என்று.

விலைவாசி ஏறவில்லை; ஏற்றிவிட்டிருக்கிறார்கள் என்றோம்.

புவிமெச்சும் பொருளாதாரப் போதகாசிரியர் எனத் தம்மைக் கருதிக்கொண்டு, வளரும் பொருளாதாரம் இது, பணப்பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது; அந்நிலையில் விலைவாசி ஏறுவது தவிர்க்க முடியாதது என்று பேசினர்.

இன்று? நந்தா பேசுகிறார்,

‘திட்டமிட்ட அபிவிருத்தித் துறையில் விலைவாசிகள் ஏற்றம் தவிர்க்க முடியாதது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது.’

என்பதாக. ஆமாம் என்று ஆளவந்தார்கள் அனைவருமே சொல்கிறார்கள்.

கள்ள மார்க்கெட்—
கொள்ளை இலாபம்—
கறுப்புப்பணம்-

என்று முன்பு நாம் சொன்னபோது,

அபாண்டம்
வீண்புரளி
பழிச்சொல்

என்று பேசினர், நமது வாய் அடக்க. இன்று?

கள்ளப் பணம் எவ்வளவு நடமாடுகிறது எனத்திட்டவட்டமான மதிப்பீடு ஏதும் என்னிடம் இல்லை. ஆனால், பல நூறு கோடி ரூபாய்கள் இருக்கும் என்பது நிச்சயம். சமீபத்தில் விலைவாசிகள் விஷம் போல விறுவிறுவென்று ஏறியதற்கு இந்தத் திருட்டுப் பணம்தான் மூல காரணம்.

குல்ஜாரிலால் நந்தா கூறுவது! குறை கூறும் குப்பன் பேச்சல்ல!! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூறின போது, குமட்டல் எடுத்தது, காங்கிரசாருக்கு; இப்போது நந்தா பேசுகிறார், முன்பு நாராசமாகப்பட்டது இன்று நற்பாசுரமாகத் தோன்றுகிறது!!

இப்போதேனும் ஆளவந்தார்கள், பிடிவாதப் போக்கை விட்டுவிட்டு, பிரச்சினையைக் கவனிக்க முன் வந்தது கண்டு மகிழ்கிறேன், தம்பி! விலைவாசி குறைய, துரைத்தனம் மேற்கொள்ளும் தகுதியான எல்லா திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும் என்ற கருத்தினை நண்பர் மனோகரன், டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியின் குழுக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். நாம் இப்போது கவனிக்க வேண்டியது, காங்கிரஸ் கட்சியினரின் முன்னாள் நினைப்புகள், பேச்சுகளை அல்ல; மக்களின் அல்லலை மேலும் வளர விடாதபடி தடுத்திட விலைவாசியைக் குறைத்திட வழி கண்டாக வேண்டும் என்பதிலேதான் அக்கறை செலுத்தவேண்டும்.

அதற்காக, நெருக்கடி நேரத்தில் நாலுபேர் கூடிப் பேசிவிடுவது போதாது என்பதையும், விலைவாசி பிரச்சினையைக் கவனிக்க ஒரு நிரந்தர அமைப்பு வேண்டும், அதிலே, எல்லாக் கட்சிகளும் இடம் பெற வேண்டும் என்பதனையும் நான் தெரிவித்தேன்; அரசினர் அந்தக் கருத்தினை ஏற்றுக்கொண்டது அறிந்து மகிழ்கிறேன் இதற்காக,

என்னென்ன முறைகளைத் துரைத்தனம் மேற்கொள்ளப் போகிறது என்பது விளக்கப்பட்டு, செயல் படுத்தப்படும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புமிக்க ஒத்துழைப்பு அளிக்கும்

ஆனால், பரிகாரம் எது என்றாலும், இதமளிக்கும் திட்டம் யாதாக இருப்பினும், விலைவாசி ஏற்றம் காரணமாக, ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பட்ட அவதியின் காரணமாக, ஏற்பட்டுவிட்ட விபரீத விளைவுகளை நீக்கிட இந்த ஆட்சியினரால் முடியாது. கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனம் காட்டலாம், சிறு கடைக்காரன் பித்தனாகிச் செத்துப்போனான்? அவன் பிழைத்தா எழப்போகிறான்? ஆயிரமாயிரம் குடும்பங்கள், அல்லலைத் தொடர்ந்து அனுபவித்து, வளைந்த வாழ்வினராகிப் போயினர். இதற்குக் காரணமாக இருந்த போக்கும், அந்தப் போக்கினைக் கொண்டியங்கிய காங்கிரஸ் ஆட்சியையும், பொதுமக்கள் மன்னிப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. உணவுத்துறையில் ஏற்பட்டு விட்டுள்ள மோசமான நிலைமைக்கு, முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டியவர்கள் காங்கிரசில் ஆள வந்தார்களே!! இன்று பரிகாரம் தேடித்தருகிறோம் என்று பேசிவிடுவது, ‘பழைய பாவத்தை’த் துடைத்து விடாது! அது போக்க முடியாத கறை!

உங்கள் ஆட்சியில் தானே,

உணவு விலை விஷம்போல ஏறிற்று.
பண வீக்கத்தால் பல கேடுகள் விளைந்தன.
கள்ளமார்க்கெட் வளர்ந்தது.
கருப்புப் பணம் நெளிந்தது.
கொள்ளை இலாபம் குவிந்தது.
கெய்ரோன்கள் கொழுத்தனர்.

என்று பொதுமக்கள் கேட்டிடத் தவறமாட்டார்கள்! இத்தனை இன்னலை இழைத்து விட்டு, ‘எம்மைவிடத் திறமையாக ஆளவும் ஆட்கள் உளரோ!’ என்று வேறு பேசுவது கரும்புத் தோட்டம் எதற்கு? காஞ்சிரங்காயினும் இனிக்குமோ கரும்பு? என்று கேட்பது போன்றதாகும்.


16-8-1964

அண்ணன்,
அண்ணாதுரை