தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005
காஞ்சிக் கடிதம்: 5
நச்சரவு வளர்க்கின்றார்
பாஞ்சாலத்தில், இராஜஸ் தானத்தில், கேரளாவில், பீகாரில், மைசூரில் -எங்கும் ஊழல் மயம்
கடுங்கோபம் காமராசருக்கு வருவதற்குக் காரணம் களத்தில் நிற்பவர் நாம் என்பதே
நந்தாவின் கைவிளக்கு சதாசர் சமிதி
சந்தானம் கமிட்டியின் கருத்துகள்
பிரதம நீதிபதி மகாஜன் காங்கிரஸ் கட்சிக்குக் கூறியுள்ள புத்திமதிகள்
தம்பி,
காணீர் கண்குளிர காந்திமகான் சீடர் இவர்!
தியாகத் தீயினிலே குளித்தெழுந்து வந்திட்டார்!
தொண்டு செய்வதன்றிக் கொண்டவிரதம்
வேறில்லை
பண்டிருந்த பாரதத்தைக் கண்டிடவே
உழைக்கின்றார்!
காட்சிக்கு எளியரிவர் கடுஞ்சொல்தனை அறியார்!
ஏழை எளியோர்க்கு ஏற்றமது அளித்திடுவார்!
உழைப்பதற்கே உருவெடுத்தார் ஊதியம்
பெறுதற்கல்ல!
தொடமாட்டார் பொன்பொருளைக் கொள
மாட்டார் மனமாசு!
பாடுபடும் ஏழைதுயர் பார்த்துப் பதறுகிறார்!
மாடுமனை மக்கள் பெற்று மகிழவழி கண்டிடுவார்!
பாலையெலாம் சோலையாகிப் பைங்கிளிகள்
பாடிடவே
செந்நெல் மணிக்குவியல் சேர்த்திடுவார் நாட்டினுக்கு!
உழைப்பை உறிஞ்சிவரும் உலுத்தரை ஒழித்திடுவார்!
மாளிகையின் சீற்றம்கண்டு மன்னர்
அஞ்சிடமாட்டார்!
எப்பாடுபட்டேனும் இங்கு இல்லாமை
போக்கிடுவேன்!
இதற்கன்றோ இன்னல்பல ஏற்றோம் பல ஆண்டு!
நாட்டினை வாழவைக்க நல் உறுதி
கொண்டுவிட்டோம்!
வீட்டை மறந்துவிட்டோம்; பாட்டை
வகுத்துவிட்டோம்!
நாட்டினுக்கு நற்செய்தி நவின்றதுடன் நில்லாமல்
நாளும் உழைக்கின்றார் நாம்வாழ, ஆளவந்தார்!
பாசுரம் இதுபோலப் பலப்பல பாடி, பல்லாண்டு கூறி, வரவேற்றனர் மக்கள் காங்கிரஸ் அமைச்சர்களை விடுதலை விழா முடித்து அவர்கள் நாடாளத் தொடங்கியதும் தன்னலம் இந்தத் தியாகிகட்கு இருக்க முடியாது; மகாத்மாவின் ஒளியிலே இருந்து இருந்து இவர்கள், எவர்க்கும் எழக்கூடிய சுயநலத்தைச் சுட்டெரித்து விட்டார்கள்; பரங்கி மூட்டிய அடக்குமுறைத் தீயிலே வீழ்ந்து வீழ்ந்து இவர்கள் புடம்போட்ட தங்கமாகிவிட்டனர்; இவர்கள் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து கோலாகல வாழ்க்கை நடாத்தி வந்த குட்டிக் கோமான்களின் வழிவழி வந்தவரல்ல; குண்டுக்கும் தடியடிக்கும், சிறைக்கும் கொடுமைக்கும் தம்மைத்தாமே பலியிட்டுக் கொள்ளத் துணிந்த தூயவர்கள்; ஏழையுடன் ஏழையாய் இருந்து வந்தவர்கள்; ஏரடிக்கும் சிறுகோலின் மதிப்பை அறிந்தவர்கள்; பசியும் பட்டினியும் கண்டவர்கள்; கோடி கோடியாகக் கொட்டிக் காட்டினாலும் நேர் வழியினின்றும் இம்மியும் வழுவமாட்டார்கள்; இவர்களின் கரத்திலே ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, எனவே, ஆடுவமே! பள்ளுப்பாடுவமே!! என்று கொண்டாடினார்கள்.
மாளிகைகளிலே மந்தகாச வாழ்வு நடாத்திக் கொண்டு, மக்களின் குரலுக்குச் செவிகொடுக்காமல் மதோன்மத்தர்களாக இருந்துகொண்டு, தன் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளவே அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அண்ணன் தம்பிகளும், மாமன் மைத்துனரும், அடிவருடி நிற்போரும் ஆனந்த வாழ்வு பெற வழி அமைத்துக் கொடுத்துவிட்டு, இலஞ்ச இலாவணத்தில் புரண்டுகொண்டு, ஊழலாட்சி நடாத்திக் கொண்டு வந்தனரே, உலுத்தர்கள், அவர்கள் அல்ல இப்போது ஊராள வந்திருப்பவர்கள்; இவர்கள் உத்தமர்கள், சத்திய சந்தர்கள் ஊர்வாழத் தாம் உழைக்கும் உயர்ந்தோர், என்றெல்லாம் பேசினர்; போற்றினர்; அஞ்சலி செய்து அகமிக மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் அமைச்சர்கள் தவறு செய்யக்கூடியவர்களாக இருக்கமுடியும் என்று எண்ணுவதே இழுக்கு; பாபம்; தேசபத்தியின் தூய்மையை உணர்ந்திட முடியாத உன்மத்தர்களின் போக்கு என்றெலாம் இடித்துரைத்தனர், ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக! ஆளவந்தார்களும், அடக்க ஒடுக்கம் காட்டினர், அன்பு சொட்டப் பேசினர், மக்களுடன் பழகினர், அவர் மனக்குறையாதென உசாவினர், தன்னலமற்ற தொண்டாற்ற முனைந்தனர், தழைத்திடும் அறம் இனி, செழித்திடும் மக்கள் வாழ்வு, கொழித்திடும் செல்வம் எங்கும் என்று பலரும் கருதினர்; அந்தி வானத்தின் செந்நிறம் சொக்க வைத்திடுவது போன்றதோர் நிலை இருந்தது; பிறகோ? இருள்! காரிருள்! இருளைத் துணைக்கொண்டவர் செய்திடும் செயல் பலப்பல!!
தெரியும்! தெரியும்! தேசபக்தன் வேடமிட்டு நீர் நடாத்தும் தில்லு முல்லுகள்!!
தன்னலமற்ற தியாகியோ! யாரறியார் நீவிர் அடித்த கொள்ளையை! குவித்த பணத்தின் அளவை!!
ஊழல்! இலஞ்சம்! ஓரவஞ்சனை! பழிவாங்குதல்! இவை உமது முறை!
கள்ளமார்க்கெட் நடத்துவோர் உமக்கு நண்பர்கள்!வீடு கட்டிக் கொண்டீர் மாளிகை போல!
விலைக்கு எடுத்துக்கொண்டீர் சர்க்கார் உடைமையை, மலிவாக!
உற்றார் உறவினருக்கு வழிகாட்டிவிட்டீர், கொள்ளை அடிக்க.
தெரியும்! தெரியும்! உம் தில்லுமுல்லுகள்!இவ்விதம், கொதித்தெழுந்து பேசுகிறார்கள் இன்று காங்கிரஸ் அமைச்சர்களைப்பற்றி, பல்வேறு இடங்களில், பலப்பலர். வெட்டவெளிக் கூட்டங்களில் மட்டும் அல்ல; சட்டமன்றங்களில்!!
காங்கிரஸ் அமைச்சர்களையா இப்படி ஏசுகிறீர்கள்? என்று கேட்பவர்களுக்கு, இடித்துரைப்பார் பதிலளிக்கிறார்கள்; காங்கிரசால் அமைச்சர் ஆனவர்களைக் கண்டிக்கிறோம், நாட்டுமக்கள் சார்பில்; நல்லாட்சி வேண்டும் என்பதற்காக; வீட்டு நெருப்பு என்பதற்காக அதில் வீழ்ந்து புரண்டிடுவார் உண்டோ? என்று கேட்கின்றனர்.
ஆதாரமற்ற புகார்கள். அரசியல் எதிரிகளின் அங்கலாய்ப்பு
விஷமிகள் கட்டிவிடும் வீண் புரளி
வேற்று நாட்டானிடம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளின் தூற்றல் பேச்சு.இதனை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை; இப்படிப்பட்டவர் இவர் என்று உயர்நீதி மன்றத்து முதல்வரொருவர் அறுதியிட்டுக் கூறியானபிறகும்,
கெய்ரான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார்.
கெய்ரான் திரட்டிய பெருநிதி அவரிடமேதான் இருக்கிறது.
கெய்ரானின் ஆதரவாளர் காங்கிரசில்தான் உள்ளனர்.
கெய்ரானின் ஆதரவாளர் சட்டமன்றத்திலும் உள்ளனர்.என்னென்ன காரணம் காட்டினாலும், எத்தனை சமாதானம் சொன்னாலும், எவரெவரைச் சான்றளிக்க வைத்தாலும், குற்றம் குற்றமே என்று தாஸ் அவர்கள் துணிந்து, நேர்மையுடன் தீர்ப்பளித்துவிட்டார்கள்.
இதற்குப் பிறகு, கெய்ரான் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினாரே தவிர, காங்கிரசை விட்டு அல்ல, பொதுவாழ்க்கையை விட்டும் அல்ல. அவர் இப்போதும் பாஞ்சாலத்துக் காங்கிரசில், குறிப்பிடத்தக்க பெரிய புள்ளி!
அவர்மட்டும் அல்ல, அவர் எந்தத் தவறும் செய்தவரல்ல, அவர்மீது கூறப்படுவன யாவும் வீணான பழி, அரசியல் பகைவர்களின் கோள் என்றெல்லாம் தாஸ் அவர்களிடம் சாட்சி சொன்னவர்களிலே பலர் சட்டமன்ற உறுப்பினர்கள்; அவர்கள் காங்கிரசிலே தான் உள்ளனர்; உயர்தர அதிகாரிகள் பலர்; அவர்கள் இப்போதும் அதிகாரிகளாகத்தான் இருக்கின்றனர். கெய்ரான் ஒருவர் தான் விலகினார்; அவருடைய ‘தர்பாருக்கு’த் துணைநின்றவர்கள், ஆட்சியில் பங்குதாரர்கள், பரிந்து பேசியோர், நீதிபதி நேர்மையானது என்று ஏற்றுக் கொள்ள இயலாத பொய்க் காரணம் பல காட்டி அவரைக் காப்பாற்றிட முனைந்தோர் அனைவரும், காங்கிரசிலும் இருக்கிறார்கள், சர்க்காரிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஊழலும் இலஞ்ச இலாவணமும் ஒழிக்கப்பட்டு விடுவதற்கான முழு நடவடிக்கையைக் காங்கிரஸ் அமைப்பு எடுத்துக் கொண்டாகிவிட்டது என்றா பொருள்? நேர்மை உள்ளம் கொண்டவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.தம்பி! கெய்ரான் விஷயமாக தாஸ் கமிஷன் அறிக்கை வெளிவந்ததே, இது முதலாவது என்றும் எண்ணிவிடாதே. இதற்கு முன்பு வேறோர் காங்கிரஸ் தலைவரின் பேரில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டது; அறிக்கை கொடுத்தார் விவியன் போஸ்; அந்தக் காங்கிரஸ் தலைவர் பேரில் கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் ஆதாரமுள்ளவை என்பதாக. என்ன நடந்தது? அந்தக் காங்கிரஸ் தலைவர் அவர் வகித்திருந்த பதவியினின்றும் விலகிக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டார்! ஆனால், காங்கிரசில் இருக்கிறார்; நீக்கப்படவில்லை!
அதற்கும் முன்னால் அடிபட்ட முந்திரா விவகாரத்தை மறந்துவிட்டிருக்கமாட்டாய் அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி, அந்த நிகழ்ச்சியிலே டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு இருந்த தொடர்பு குறித்துக் கருத்து தெரிவிக்கையில், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் வாதம், பேச்சு, ஒப்புக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. என்ன நடந்தது அதன் விளைவாக? டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், தாமாகப் பதவி துறந்தார்.
இன்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் இந்தியாவின் நிதி மந்திரியாகக் கொலுவீற்றிருக்கிறார்.
முந்திரா விவகாரம் பற்றி விசாரணை நடத்திய சக்ளா இந்தியாவின கல்வி மந்திரியாக வீற்றிருக்கிறார்.
சக்ளாவை விடப் பெரிய அந்தஸ்து, அமைச்சர் அவையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு! என்ன பாடம் இதிலிருந்து தெரிகிறது என்று, நேர்மை பட்டுப்போகாத பழைய காங்கிரஸ்காரரைப் பார்த்துக் கேள், தம்பி! பெருமூச்சுதான் பதிலாகக் கிடைக்கும்.
எம்முடைய ஆட்சியிலாவது ஊழல் நடப்பதாவது! என்று எக்காளமிட்டு வந்தார்கள். ஒவ்வொன்றாக வெடித்துக்கொண்டு வெளியே வருகிறது. இதனைக்கண்டு பிடிக்க ஒரு குழுவே அமைக்கப்பட வேண்டி நேரிட்டு விட்டது.
பாஞ்சாலத்தோடு நின்றுவிடவில்லை, ‘பாரத புத்திரர்’ என்ற பட்டயம் பெற்றுக்கொண்டு பகற்கொள்ளை அடிப்பவர்களின் கதை; படலம் படலமாக வெளிவந்தபடி இருக்கிறது!ஜெய்பூரில், ராஜஸ்தானத்து முதலமைச்சர் மாகன்லால் சுகாடியா என்பவர்மீது பாய்ந்து,
தாஸ் கமிஷன் போல ஒன்று அமைத்து, முதலமைச்சர் மீது குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சோஷிய லிஸ்டு கட்சியினர் உம்ராவ் சிங் என்பவர்,
உதயபூரில் தவறான முறையில் முதலமைச்சர் நிலத்தைப் பெற்று, அதில் இரண்டு இலட்ச ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள வீடு கட்டிக்கொண்டார்,
பாங்கியில், பல இலட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார்.
தவறு! தவறு! இரண்டு இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ளது அல்ல. என் வீடு. ஒரு இலட்சம் கூடப் பொறாது. யாரேனும் ஒரு இலட்ச ரூபாய் கொடுப்பதாக இருந்தால், வீட்டையும் நிலத்தையும் தந்துவிட நான் தயார்!என்று முதலமைச்சர் சுகாடியா முழக்கமிடுகிறார். அதைக் கேட்டு மற்றவர்கள் வாயடைத்துப்போய்விட வில்லை.
என்று ஒரு உறுப்பினர் கேட்கிறார். சுகாடியா பதில் ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு இத்தனை இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை விளை நிலமாக்கினோம்,
இந்த ஆண்டு இத்தனை விதமான புதிய தொழிற்சாலைகளைத் துவக்கி இத்தனை வேலை இலட்சம் பேருக்கு கொடுத்தோம்,இந்த ஆண்டு கள்ளமார்க்கெட் செய்பவர்களைக் கண்டுபிடித்து, அடக்கி, விலைகளை இந்த அளவுக்குக் குறைந்திடச் செய்திருக்கிறோம்,
இந்த ஆண்டு இத்தனை மருத்துவமனைகள் அமைத்து, இன்னின்ன லியாதிகளினால் ஏற்படும் கேடுகளைக் குறைத்திட முயன்றிருக்கிறோம் என்றெல்லாம் பேசவேண்டிய இடத்திலே, தம்பி! என்ன பேச்சு நடைபெற்றிருக்கிறது, பார்த்தனையா!!
முதலமைச்சர் அக்கிரம வழியிலே பணம் திரட்டினார், அரண்மனைபோன்ற வீடு கட்டினார்—என்பது பேச்சு!! இவர்கள், காங்கிரஸ் அமைச்சர்கள்! இந்த இலட்சணமான ஆட்சியைக்கண்டு, மார்தட்டிக்கொள்ளவும், மற்ற எந்தக் கட்சியும் ஆட்சி செய்திடும் ஆற்றல் பெற்றது அல்ல என்று மமதை பேசவும், நாக்கு நீளுகிறது பெருந்தலைவர்களுக்கு, மக்களுக்கு எதுவுமே புரியாது என்று அவர்கள் ஒரு தப்புக்கணக்குப்போடும் காரணத்தால்.
தம்பி! வீடுகட்டிய விந்தையுடன் முடிந்துவிடவில்லை. ராஜஸ்தானத்து ரசாபாசம்.
கம்யூனிஸ்டு கட்சியினரான இரண்டு உறுப்பினர்கள்,
என்று குற்றம் சாட்டினார்கள்.
குல்ஜாரிலால் நந்தா, சாதுக்களைப் படை திரட்டி, சென்று சேகரிப்பீர் செய்திகளை! என்று அனுப்புகிறாராம்! ஏன்? இதோ சட்ட மன்றத்தில், இரு உறுப்பினர்கள், வெளிப்படையாக, விளைவுபற்றி அஞ்சாது, வீரத்துடன் பேசியிருக்கிறார்களே, அவர்களை அழைத்து முழுத் தகவல் தரச் சொல்வதுதானே! அதன்பேரில் விசாரணை தொடங்குவதுதானே! செயல்பட முனைவது தானே! செய்தாரா? செய்வாரா? செய்யமாட்டார்! நந்தா செய்யக்கூடியதெல்லாம், அந்த இரண்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்களை, இவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை மூட்டுகிறார்கள் என்று கூறி, சிறையில் போட்டடைப்பதுதான். சுகாடியா சிரித்தபடி, நம் சுகானுபவத்தைக் கெடுத்திடத் துணிந்தவர்கள் தொலைவார்கள் என்றெண்ணி உதயபுரி மாளிகையில் உல்லாசமாக இருந்திடுவார்.
தம்பி! கெய்ரான், சுகாடியா போன்ற, குற்றச் சாட்டுக்கு இலக்காகி உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ஆள முற்பட்டபோது, அவர்களை வாழ்த்தவில்லையா, வரவேற்கவில்லையா, அவர்கள் நாட்டுப் பற்று, தன்னல மறுப்பு, அறிவாற்றல், பண்பு ஆகியவை பற்றிப் பலபடப் பேசவில்லையா, காங்கிரசை நடத்திடும் கர்த்தாக்கள். நிரம்பப் பேசினார்கள்! இன்று! சட்டசபையில் சரமாரியாகக் கிடைக்கிறது சவுக்கடி!!
ஒரு துளி அய்யப்பாடு கிளம்பினாலும், விழித்தெழுந்து, விசாரணை நடத்தி, தவறு இருந்தால் கண்டறிந்து, கேடு களைந்து, கேட்டினுக்குக் காரணமாக இருந்தவர்களைப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், கட்சியிலிருந்தே நீக்கிவிட வேண்டியது முறையாக இருக்க, மூலைக்கு மூலை பேசப்பட்டு, நாறி, அழுகி, தானாக நாற்றமடிக்கிற வரையில், குற்றத்தைக் கண்டு பிடிக்கும் வேலை, களை எடுக்கும் வேலை நடைபெறுகிறதா! கிடையாது!! மாறாக, ‘கபர் தார்’ குற்றம் கூறாதே! உன் குலையை அறுத்தெடுத்து மாலையாக்கிக் கொள்வேன் என்று கூரை மீதேறிக் கூவுகின்றனர்.
இந்த மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல், துணிந்து நின்று, குற்றம் குற்றமே என்று கூறத்தக்கவர்கள் எத்தனை பேர் கிடைக்க முடியும்? மிகச் சொற்பம்.
கேரளத்து முதலமைச்சர் சங்கர் மீது குற்றச்சாட்டுகளைத் தொகுத்தெடுத்துக்கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் டில்லிக்குச் சென்றனர் என்றோர் செய்தி சென்ற கிழமை வெளிவந்தது.
கேரளத்துக்கு எத்தனை முறை எத்தனை பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் சென்று வந்தனர்—சேதி அறிய—பிளவு போக்க—அமைதி காக்க–ஒன்றுபடுத்த–ஒழுங்கு படுத்த!! தொட்டால் பட்டமரம் துளிர்க்குமாமே அந்தக் காமராஜரும் போய்வந்தார்; இன்றைய ‘பாரதப் பிரதமர்’ லால்பகதூர் சென்று வந்தார், கண்டு வந்தார், நிலைமை சரியாகிவிடும் என்று செப்பிவிட்டு வந்தார்; மொரார்ஜிதேசாய் போய்வந்தார்; காங்கிரசின் ஒரு செயலாளர் சாதிக் அலி என்பார் போய்விட்டு வந்து, “வெளியே சொன்னால் வெட்கக்கேடு; அப்படி இருக்கிறது கேரளத்தில் காங்கிரஸ் நிலைமை” என்று தெரிவித்தார். இப்போது பட்டியலே தயாரித்துக்கொண்டு, டில்லிப் பட்டணமே சென்று, முதலமைச்சர் சங்கர் மீது இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கூறுகிறார்கள். மாலை வேளையில் மேடை ஏறியதும் எத்தனை பெரிய முழக்கம், இந்த நாட்டை ஆள நாங்களன்றி வேறு யார்? எவருக்கு உளது அந்த யோக்கியதை? என்று!! நாறுகிறது, நாட்டிலே பல பகுதிகளில்; நாக்கு மட்டும் நீளுகிறது. நம்மைவிட்டால் வேறு நாதி இல்லை இந்த மக்களுக்கு என்ற போக்கில்.
ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை ஊழல்கள் வெளி வருகின்றன என்பதைக் காட்ட மட்டும் அல்ல, தம்பி! மக்களிடம் எவர் எவர்களைப் பற்றி இந்திரன் என்றும், சந்திரன் என்றும், காங்கிரஸ் தலைவர்களால் புகழ்பாடி வைக்கப்படுகிறதோ, அவர்களெல்லாம், என்ன கதியாகிறார்கள், அவர்களைப் பற்றிய முழு உண்மை ஆராய்ந்து அறியப்படும்போது என்னென்ன விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின்றன, அவைகள் எத்துணை மோசமான வைகளாக இருக்கின்றன என்பதையும் விளக்கிடத்தான் கூறுகிறேன். மாசிலாமணிகள் நாங்கள் என்று மார் தட்டிப் பேசுகிறார்களே, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பற்றி. இந்த மணிகள் எத்தனை மோசம் என்பது விளக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளே வேண்டாம் என்று பேசுகிறாரே காமராஜர், சிலரை அழைத்துக்கொண்டும், சிலரை இழுத்துக் கொண்டும், சிலரை ஒழித்துவிடத் திட்டமிட்டுக் கொண்டும் வருகிறாரே, காரணம் புரிகிறதா?
தம்பி! பீகாரில் இதுபோலவே புகார்! மைசூரில், நிஜலிங்கப்பா மீது குற்றச்சாட்டு. இந்த நிலையில் காங்கிரசாட்சி இருக்கும்போது, கண்டபடி பேசிக் கொண்டிருப்பதும், எதிர்க் கட்சிகளைக் கேவலமாக ஏசுவதும், சரியா, முறையா? என்பதை நடுநிலையாளர் எண்ணிப் பார்த்திடவேண்டும். பொதுமக்களிடம் இத்தனைப் பெரிய அளவிலும், இவ்வளவு நெருக்கமான முறையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் நேசத் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதன் காரணமாக, இங்கு ஆளவந்தார்கள் வெகு விழிப்புடன் இருக்க வேண்டிவருகிறது. துளி சந்தேகம் எழுந்தாலும், விடமாட்டார்கள் கழகத்தார்! ஒரு நடவடிக்கையிலேனும் அழுக்குத் தெரியுமானால் அம்பலப் படுத்தி விடுவார்கள்! மிக விழிப்பாக இருக்கவேண்டும்; அப்பழுக்கற்ற முறையில் நடந்தாகவேண்டும்; இல்லை யென்றால் துளைத்தெடுத்து விடுவார்கள் என்ற அச்ச உணர்ச்சி, இங்குள்ள காங்கிரஸ் ஆளவந்தார்களுக்கு நிரம்ப இருக்கிறது இதனை நான் கூறுவதற்குக் காரணம் நமக்கு நாமே பெருமிதம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, ஜன நாயகத்தில், ஒரு ஆட்சி நேர்மையாக இருக்கவேண்டுமானால், ஆட்சியில் உள்ளவர்கள், நாம் எதைச் செய்தால் எதிர்க்கட்சியினர் எந்தவிதமாக நம்மை எதிர்த்துத் தொலைத்துவிட முனைவார்களோ என்ற அச்சம் கொண்ட நிலையில் இருந்தாக வேண்டும். அந்த நிலையற்றுப் போகுமானால் பிறகு ஆளவந்தார்கள் சொல்வதெல்லாம் சட்டம்தான், காட்டுவதெல்லாம் வழி தான்! மாற, மீற மக்கள் முயன்றாலும் முடியாது எனவே தம்பி! ஜனநாயகம் வெற்றிபெற, விழிப்புடனும் விறு விறுப்புடனும் பணியாற்றத்தக்க அளவும் ஆற்றலும், நிலையும் பெற்ற ஒரு எதிர்க்கட்சி இருந்தாக வேண்டும். அந்த நிலை, திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது. ஓங்கி வளர்ந்ததெல்லாம் ஒடிந்து வீழ்ந்துவிட்டன: ஓங்காரக் கூச்சலிட்டதுகள், ஒய்யாரக் கொண்டைக்குப் பூவுமுண்டு, ஒயிலாளின் காலுக்குத் தண்டை உண்டு என்று பாடிக்கொண்டு பாங்கி வேலை பார்க்கச் சென்றுவிட்டன. களத்தில் நிற்பவர் நாம்... கடுங்கோபம் காமராஜருக்கு வருவதற்குக் காரணம் அதுவே.
பெரிய இடத்திலே மட்டுமன்றி, எல்லா மட்டங்களிலும் இலஞ்ச இலாவணம்—ஊழல்—நெளிகிறது என்ற பேச்சு எழுந்தபோது கோபம் கொப்பளித்தது காங்கிரசின் கர்த்தாக்களுக்கு. மறுத்தனர், மிரட்டினர் மழுப்பினர், இறுதியாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்தாலொழிய, பொதுமக்கள் மனத்திலே மூண்டுவிட்டுள்ள அருவருப்பை நீக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். இந்தச் சமயத்தில், வேறோர் காலமாக இருப்பின் முனிபுங்கவர் ஆகியிருப்பார் என்று பலர் கருதத்தக்க முறையிலே பேசியும் உபதேசம் செய்துகொண்டும் உள்ள உள்துறை அமைச்சர் நந்தா புறப்பட்டார். இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் படை அவருடைய கட்டளைக்குக் காத்துக் கிடக்கிறது. பரவலாக நாடெங்கும் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன. ஜெயப்பிரகாஸ் நாராயணன் இருக்கிறார், கட்சிகள் வேண்டாம் கிராம அரசுகள் போதும் என்று கூறிக் கொண்டு; ஆதாரவாளர்கள் அணியும் ஒன்று இருக்கிறது வினோபா இருக்கிறார், அவருடைய சர்வோதய இயக்கம் இருக்கிறது. இத்தனை அமைப்புகளும் நந்தாவுக்குப் போதுமானதாக, ஆற்றல் கொண்டவையாகத் தோன்றவில்லை; என்ன காரணத்தினாலோ இந்த அமைப்புக்கள், இலஞ்ச ஒழிப்பு வேலையைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. அத்தகைய நம்பிக்கையே இல்லாமல் அவர் எதற்காகப் போலீஸ் படையை நடாத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. ஒளிமிகு மின்சார விளக்கு கைவசம் இருக்க, அதைக் கொண்டு செல்லாமல் மின்மினிகளைப் பிடித்துக் கரத்தில் வைத்துக்கொண்டு அவை விட்டு விட்டுச் சிந்தும் ஒளியின் துணைகொண்டு இருட்டறையில் கருப்புப் பணத்தைத் தேடுகிறார்— கனம். நந்தா!!
இதற்காக அவர் சாதுக்களைக் கூட்டிவைத்துப் பேசினார்.
சதாசர் சமிதி என்றோர் அமைப்பை நிறுவி, குற்றம் குறைகூற விரும்புவோர், வருக! என்று அழைத்தார்,
இரண்டே ஆண்டுகளில் இலஞ்சப் பேயை விரட்டுவேன், இல்லையேல் நான் பதவியை விட்டு விலகிப்போவேன் என்று நந்தா சபதம் எடுத்துக்கொண்டார். ஆகவே, இரண்டு ஆண்டுகளுக்குள் இலஞ்சத்தை ஒழித்ததாகக் காட்டியாக வேண்டும். ஒரு புதிய அமைப்பு மூலம் இந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினால், அந்த அமைப்பும் அவருடைய ஆதீனத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தால், இரண்டாம் ஆண்டு முடிகிற நேரமாகப பார்த்து,
இலஞ்சம் வெகுவாகக் குறைந்துவிட்டது, கொடுப்பவர்களுக்கும் குலைநடுக்கம் கண்டு விட்டது; வாங்குபவர்களுக்கும் கிலிபிடித்து விட்டது.
எடுத்த சபதத்தை நந்தா நிறைவேற்றி விட்டார்! இலஞ்சப் பேய் ஒழிந்துவிட்டதுஎன்பதாக நாட்டுக்கு அறிவித்துவிட வழி இருக்கிறது இதற்காகவே நந்தா திட்டமிட்டு இவ்விதம் செய்தார் என்று நான் கூறவில்லை. இவ்விதம் எண்ண இடமளிக்கிறது அவருடைய வேலை முறை என்று கூறுகிறேன்.
வங்கக் காங்கிரஸ் தலைவர் அட்டுல்யாகோஷுக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை.
வேறு பல காங்கிரஸ்காரர்களுக்கும் இது பிடிக்கவில்லை.
வெளிப்படையாகவே இவர்கள் பேசினர்; வெகுண்டெழுந்தார் நந்தா; சமிதியைக் குறைகூறுகிறவர்களைக் கண்டிக்கலானார். வங்கத் தலைவர் வாளாயிருக்கவில்லை; காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்கிறார். நந்தா கூறுகிறார், நானாக இந்தச் சமிதியை ஆரம்பிக்கவில்லை, காங்கிரஸ் தலைவர் காமராஜரின் சம்மதம் பெற்றுத்தான் ஆரம்பித்தேன் என்று.
காமராஜரோ, சமிதி பற்றி எதுவுமே பேசத்தேவை இல்லை செயற்குழுவில் என்று கூறிவிட்டார்.
சதாசர் சமிதி அல்லது குழு இலஞ்சப் பிரச்சினையை, மிக எளிதாக, மிக விரைவாக, கடினமான எந்த முறைகளுமின்றியே தீர்த்துவிட முடியும் என்று நம்பிடும் பரிதாபத்தை ‘இந்து’ பத்திரிகை எடுத்துக் காட்டியிருக்கிறது.
நாற்பத்து ஐந்தே நாட்களில் ‘சதாசர்’ தன்னிடம் கொடுக்கப்பட்ட புகார்களைத் தொகுத்து, தரம் பிரித்து, பரிசீலித்து, முடிவுகள் எடுத்து கருத்தையும் கூறிவிட்டது! அந்தக் கருத்து என்னவென்றால், புகார்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது; புகார்களில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை; என்பதாகும். இதன்படி பார்த்தால், இலஞ்சம் தாண்டவமாடுவதாகச் சொல்வது தவறு என்று ஏற்படும்.
‘இந்து’ இதழ் இந்த முறையையும் விரும்பவில்லை. இந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருத்தமான காரணங்களையும் ‘இந்து’ காட்டியிருக்கிறது.
சர்க்காரால் அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, முறைப்படி ஆராய்ந்து பார்த்து, நிர்வாகத் துறையில் மேல் மட்டத்திலிருந்து அடி மட்டங்கள் வரையில் இலஞ்ச ஊழல் இருக்கிறது என்று கூறி இருக்கிறது.
மத்திய சர்க்கார் அமைத்த தனிப் போலீஸ் பிரிவு 1963-ம் ஆண்டு 4857 புகார்களைப் பெற்றுப் பரிசீலிக்க வேண்டி வந்தது. 1957-ல் 2733 புகார்கள்! 1963-ல் 4857 என்று வளர்ந்து காட்டுகிறது.
புகார்களில் அற்பமானவை, ஆதாரமற்றவை என்று தள்ளிவிடத் தக்கவைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
இந்தக் காரணங்களைக் காட்டி ‘இந்து’ நந்தாவின் கைவிளக்கு பயனில்லை என்பதை விளக்குகிறது.
எத்தனை சமாதானம் கூறினாலும், காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் இலஞ்சமும் வளர்ந்துவிட்டிருக்கிறது என்பதை மறைக்க முடியாது—மறுக்க முடியாது—பெரியவர்கள் மழுப்பிக் கொண்டிருக்கலாம்.
நிர்வாகத்திலே நெளியும் ஊழலும் இலஞ்சமும் இந்த விதம் இருக்கிறது—கருப்பஞ்சாறு பருகாதே போதை ஏறும், நிலை தடுமாறும் என்று ‘காச்சினது’ குடித்து விட்டுப் பேசுவது என்பார்களே அதுபோல, இத்தனை ஊழலை வைத்துக்கொண்டே பெரிய தலைவர்கள் பேசுகிறார்கள், நாட்டை ஆளும் யோக்யதை எமக்கன்றி வேறு எவருக்கும் இல்லை என்று.
இலஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டுமல்லவா? துணிந்து நான் கூறுவதைச் செய்வீர்களா?
முதலில், காங்கிரசின் மேல் மட்டத்தைத் துப்புரவாக்குங்கள். முடியுமா? துணிந்து செய்வீர்களா?நன்கொடை, இனாம் என்ற எந்தப் பெயராலும் தொழிலதிபர்கள், வணிகர்கள், முதலாளிகள், தொழிற்சாலை நடத்துபவர், சர்க்கரை வியாபாரிகள் டாட்டாக்கள், பிர்லாக்கள், சிங்கேனியாக்கள் போன்றாரிடம் தேர்தல் நிதி வசூலிக்கமாட்டோம் என்று ஆளுங்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட வேண்டும்.
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து வாங்கப்படும் பணம் பிரம்மாண்டமான அளவுள்ளது.
இந்தப் பணம் அமைச்சர்களையும் காங்கிரஸ் அரசியல்வாதிகளையும் ‘குஷி’ படுத்தவும், வியாபார சம்பந்தமாக எந்தவிதக் குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதற்காகவும் தரப்படுகிறது.
இந்தப் பணம், தாங்களே மனமுவந்து, தர்ம நியாயத்துக்காகவோ, தேச பக்தி காரணமாகவோ தரப்படுகிறது என்று ஒருவரும் நம்புவதில்லை. இந்தப் பணம் ஒருவிதமான இலஞ்சம்தான்.
பர்மிட், லைசென்சு, கோட்டா பெறுவதற்காகத் தரப்படுகிறது.
ஆளுங்கட்சி துணிந்து தன்மீது உள்ள இந்தக் கறையைத் துடைத்துக்கொள்ளட்டும். பிறகு நாட்டிலே ஒரு பரிசுத்தம் ஏற்படும்.
நன்கொடை திரட்டுவதை நிறுத்துவதோடு, காங்கிரஸ் தலைவர்களுக்கு, ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை மாலையாகக் கட்டிப் போடுகிறார்களே, அதை நிறுத்திவிட வேண்டும்.
இப்படி ‘நோட்டு மாலை’ போடுபவர்கள், பஸ் முதலாளிகள் அல்லது மற்ற முதலாளிகள். எதற்காகப் போடுகிறார்கள்? இந்தப் பொதுஜனத் தலைவர்களிடம் கொண்ட அன்பினால் அல்ல! ஏற்கெனவே பெற்ற சலுகைக்காக அல்லது இனிச்சலுகை பெறவேண்டும் என்பதற்காகப் போடுகிறார்கள்.
க்ஷேம நல சர்க்காரில், மந்திரிகளிடம், சலுகைகள் காட்டுவதற்கான அதிகாரம் மிகப் பெரிய அளவில்இருக்கிறது. இலஞ்ச ஊழலுக்கு ஆணிவேர் இதிலே தான் இருக்கிறது.
வணிகர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களுக்குத் தேவைப்படும் லைசென்சு, பெர்மிட், கோட்டா ஆகியவைகள் வழங்கும் அதிகாரத்தை மந்திரிகளிடமிருந்து எடுத்து விடவேண்டும்! அந்த அதிகாரத்தை அரசியல் கட்சிகளைச் சேராத, சுயேச்சையாக உள்ளவர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அத்தகைய குழுவில் எந்த மந்திரியும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
அமைச்சர்களும் அதிகாரிகளும், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டிருப்பவர்கள், சமூக விரோதிகளாகிய கெட்ட பெயரெடுத்தவர்களுடன் குலவக்கூடாது; அவர்கள் நடத்தும் விருந்துகளில் கலந்துகொள்ளக் கூடாது.
காண்ட்ராக்டர்கள், பெரிய வியாபாரிகள், பெரும் பணம் படைத்தவர்கள், பெரிய மோட்டார்கள் உடையவர்கள் இவர்கள் நடத்தும் பானவிருந்து விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் தம்மைத் தாமே தடுத்துக்கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால், அப்படிப்பட்டவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், பகிஷ்கரிப்பது சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி வைக்கும்.
சர்க்கார் மாளிகை விழாக்களில் இப்போது நடப்பதுபோல கண்டவர்களை அழைக்கக்கூடாது; இப்படிப்பட்டவர்களை அத்தகைய விழாக்களுக்கு அழைக்கக்கூடாது.என்ன அண்ணா இது! ஒரே அடியாகக் காங்கிரஸ் மந்திரிகளை, எந்த அதிகாரம் அவர்களுக்கு ஜொலிப்பையும்—மிதமிஞ்சிய மதிப்பையும் தருகிறதோ அதை விட்டுவிடச் சொல்லுகிறாயே! எந்த முதலாளிகளின் நன்கொடை கொண்டு தேர்தலில் வெற்றி பெறுகிறார்களோ அந்தப் பணத்துக்கும் உலைவைக்கிறாயே! இது நடக்கக் கூடிய காரியமா? உன் பேச்சைக் கேட்பார்களா? என்றுதானே தம்பி! கேட்கிறாய்? தம்பி! அவ்வளவு பெரியவர்கள் இப்படி இப்படி நடந்தாகவேண்டும் என்று என்னால் சொல்லமுடியுமா! ஏழை சொல் அம்பலம் ஏறுமா!! எனக்கும் புரிகிறது உனக்கும் தெரிகிறது, காங்கிரஸ் அரசியல்—தேர்தல் காரியம்—எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்று. ஆனால், முதலாளிகளிடம் பணம் வாங்காதே! பெர்மிட் கோட்டா லைசென்சு வழங்கும் அதிகாரத்தை விட்டுவிடு! என்று சொன்னால், கேட்பார்களா!! நான் அல்ல தம்பி! இத்தகைய யோசனைகளைத் துணிந்து கூறியது. இந்தியாவின் பிரதம நீதிபதியாக இருந்தவர், மேகர்சந்த் மகாஜன் என்பவர் கூறியுள்ளது அது. நேர்மை உணர்ச்சியுடன் அஞ்சாமையும் இணைந்திருப்பவர்கள் மட்டுமே, ஆளவந்தார்கள் புருவத்தை நெரித்து, முணுமுணுத்து, பழிவாங்கத் திட்டமிடக்கூடும் என்று தெரிந்திருந்தும், உண்மையை உரைத்திடுவோம். ஊராள்வோர் கோபித்தால் கோபித்துக்கொண்டு போகட்டும், ஊரார் உண்மை நிலைமையை உணர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே இது போலப் பேச முடியும்.
இவ்விதம் துணிந்து, உண்மையைச் சொன்னவர், மகாஜன்.
நம் அனைவருக்கும் தெரிந்ததைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்; ஆனால், நாம் சொல்லும்போது கட்சிமாச்சரியத்தால் பேசுகிறோம் என்று பொதுமக்கள் எண்ணிக்கொள்ளக்கூடும்; அல்லது பொதுமக்களிடம் ஆளவந்தார்கள் அதுபோலச் சொல்லிவிடக் கூடும்.
மகாஜன் ஒரு கட்சிக்காரர் அல்ல, அரசியல்வாதி அல்ல; காங்கிரஸ் அமைச்சர்கள்பற்றிக் கண்டித்துப் பேசி, அதன் மூலம் ‘பெயர்’ பெற்று, ஓட்டுவேட்டை ஆட நினைக்கிறவர் அல்ல. நாடு சீர்ப்பட, நிர்வாகம் தூய்மைப்பட, என்ன செய்தாக வேண்டும் என்பது பற்றி ஆர அமர எண்ணிப்பார்த்து, விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் இருந்து பிரச்சினையை அலசிப்பார்த்து, இதனைக் கூறுகிறார். பொறுப்புமிக்க இடத்தில் இருந்தவர், பொச்சரிப்புக்கொண்ட பதவி தேடி அல்ல.ஒரு ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளிடமிருந்து ‘இடித்துரை’ கேட்பது சகஜம்; ஆனால், பிரதம நீதிபதி எனும் மிக உன்னதமான நிலையில் இருந்தவர்—மனம் நொந்து—ஆளுங்கட்சிக்குத் துணிந்து புத்திமதி கூறுவது என்றால், உள்ளபடி அது வியந்து கவனிக்கத் தக்கதாகும்.
எல்லை கடந்துவிட்டது, இனி நமக்கென்ன என்று நம்போன்றவர்கள் இருந்துவிடக்கூடாது, மக்களுக்கு உண்மை நிலைமையை உணர்த்தியாக வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் ஆளுங்கட்சியை இத்தனை பச்சையாகக் கண்டித்துள்ளார்.
டாட்டாக்கள், பிர்லாக்கள், சிங்கேனியாக்கள், போன்றாரிடம் பணம் பெறுவது ஒருவிதத்தில் இலஞ்சமே! என்று கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள், காங்கிரசுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள ‘பந்தபாசத்தை’ எடுத்துக்காட்டிடும்போது, கவனிக்க மறுத்திடும் போக்கினர்கூட, எந்தவிதமான அரசியல், கட்சி நோக்குமற்ற முன்னாள் பிரதம நீதிபதி, நொந்த மனத்துடன், துணிந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் போக்கை அம்பலப்படுத்தி, அந்தப் போக்கைப் போக்கிக் கொள்ளாமல், சமிதிவைத்து இலஞ்சப் பேயை ஒழிப்பேன் என்று நந்தா கூறுவது வெறும் கேலிக் கூத்தாகிப் போகும் என்று கூறியுள்ளதை அலட்சியப் படுத்த மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். தம்பி! அவர் எடுத்துரைத்தவைகளைப் பொதுமக்கள் அறியும் படிச் செய்திடவேண்டிய பொறுப்பு உன்னுடையது. உன்னால் முடியும்.
தேர்தலில் வெற்றிபெறப் பெரும் பணத்தை முதலாளிகளிடம் பெற்றுக்கொண்டால், பணம் கொடுத்த முதலாளிகள், ஒன்றுக்குப் பத்தாக, கொள்ளை இலாபமடித்திடாமல் வேறு என்ன செய்வார்கள்! கொள்ளை இலாபம் பெற, குறுக்குவழி சென்றாக வேண்டிவருகிறது. குறுக்குவழி செல்லும்போது, சட்டம் குறுக்கிட்டாலும், அதிகாரிகள் தடுத்திட்டாலும், காங்கிரஸ் அமைச்சர்களின் நண்பர்கள் என்ற ‘கவசம்’ இவர்களுக்கு எந்தவிதமான தொல்லையும் ஆபத்தும் வரவிடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. இலஞ்சமும் ஊழலும் வளராமலிருக்க முடியுமா?பிரதம நீதிபதியாக இருந்தவரே காங்கிரஸ் ஆட்சியினரின் குட்டுகளை இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்குகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ முடுக்குடன் பேசுகிறார்கள், எம்மைக் குறைகூற என்ன இருக்கிறது? எவருக்கு இருக்கிறது அந்தத் தகுதி? என்று. தகுதி மிக்கவரும், வேதனை தாளாமல், மனத்திலுள்ளதைக் கொட்டிவிட்டார். இனியேனும் காங்கிரஸ் தலைவர்கள், சிறிதளவு அடக்க உணர்ச்சி காட்டுவார்களா?
இவர் ஒருசமயம் காங்கிரசுக்குப் பகைவரோ, பிடிக்காதோ காங்கிரஸ் தலைவர்களை என்று எவரும் எண்ணத்தேவையில்லை, தம்பி! அவருடைய கட்டுரையில் துவக்கத்திலேயே, நேருபண்டிதரையும் இன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜரையும் பாராட்டியிருக்கிறார்.
ஆகவே அவருடைய பலத்த கண்டனத்துக்குக் காரணம், வெறுப்பு அல்ல, பொச்சரிப்பு அல்ல, கட்சி மாச்சரியம் அல்ல, பதவி பிடிக்கும் நோக்கம் அல்ல, உள்ளத்தில் தோன்றியதை அச்சம் தயை தாட்சணியமின்றிக் கூறியிருக்கிறார்.
என்னென்ன இன்னலை ஏற்றுக்கொள்கிறார்கள் இந்தத் தூயவர்கள் என்று நாட்டின் நல்லவர்கள், காங்கிரசாரைப் பாராட்டிய காலத்தோடு,
என்னென்ன ஊழல் இவர்கள் ஆட்சியில், பதவி பெற என்னென்ன தந்திரம் செய்கிறார்கள், எவரெவரிடமிருந்து எத்தனை எத்தனை பணம் பெறுகிறார்கள், பெற்ற பணத்துக்காக என்னென்ன சலுகைகளைக் காட்டுகிறார்கள் முதலாளிகளுக்கு, சலுகைகளைப் பெற்றுக் கொண்டு அந்த முதலாளிகள் என்னென்ன விதமான முந்திரா வேலைகளைச் செய்கிறார்கள், ஊழலை வளரச்செய்துவிட்டு, சொந்த நலனைப் பெருக்கிக் கொண்டு சொகுசாக வாழ்கிறார்களே, இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்று பரவலாக எங்கும் பேசப்படும் இந்தக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சே! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமா என்று தோன்றும் நல்ல காங்கிரஸ்காரர் அனைவருக்கும். ஆனால், தம்பி! அவர்கள், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் நம்முடைய நாவினை அல்லவா வெட்டிவிடத் திட்டமிடுகிறார்கள்.எனக்கு ஒரு மகிழ்ச்சி தம்பி! காங்கிரசார் கையாளும் கேடான முறைகளை, அரசியல்வாதிகள் கண்டிப்பதுடன் முடிந்துவிடவில்லை, அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவாளரும் கண்டிக்க முன்வந்து விட்டார்கள்; அவர்கள் பேச்சு, மக்களிடையே தெளிவை நிச்சயம் உண்டாக்கும்.
நாம் இதுகாறும் கூறிக்கொண்டு வந்தவைகளை, நாட்டிலே மிகத் தூய்மையான துறையில் மிகப்பெரிய நிலையிலே இருந்து வந்தவரும் கூறுகிறார், நம்மைவிடத் திட்டவட்டமாக என்பதைக் காணும்போது, நாம் நடாத்தி வரும் பணி நியாயமானது, தேவையானது, தூய்மையானது என்பதிலே மேலும் நம்பிக்கை வளரத்தான் செய்கிறது. எனவே நமது பணி தொடர்ந்து நடைபெற ஆர்வம் அதிகமாகிறது.
என்று கூறிடத் தோன்றுகிறது. உனக்கு என்ன தோன்றுகிறது, தம்பி!
23-8-1964
அண்ணன்,
அண்ணாதுரை