தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007
காஞ்சிக் கடிதம்: 7
நாலும் நாலும்
விலைகள் ஏறிவிட்டதற்குக் கூறப்படும் காரணங்கள்
‘குழப்பக் கல்லூரி’யில் நேர்மாறான கருத்துகள்
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் நிலை
ஜனநாயக சோஷியலிசம்: இருபதாம் நூற்றாண்டின் இணையிலா மோசடி!
தம்பி,
நாலும் நாலும் ஏழு என்று ஒரு மாணவனும், ஒன்பது என்று மற்றோர் மாணவனும் கூறினால், அவர்கள் தலையில் குட்டி, காதைக் கிள்ளி, இப்படிப்பட்ட மர மண்டைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் நிலை பிறந்ததே என்று ஆசிரியர் ஆயாசப்படுவார்; பெற்றோர்களோ, எத்தனை கட்டைப் புத்தியாக இருப்பினும் ஆசிரியர் தமது பிள்ளைகளுக்கு அறிவு பிறந்திடச் செய்வார் என்று நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், இல்லை இல்லை ஒன்பது என்று மற்றோர் ஆசிரியரும், வேறொருவர் நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று தீர்மானிப்பதற்கு முன்பு ‘நாலு’ என்றால் எத்தனை என்பதைக் கண்டாக வேண்டும் என்றும் கூறிடும் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் என்ன செய்வர் பெற்றோர்? என்னகதி ஆவர் மாணவர்?எதை வேண்டுமானாலும் சொல்லிவைக்கலாம் என்று உங்கள் அண்ணாதுரை இப்படிச் சொல்கிறானே, நாலும் நாலும் எட்டு என்பதைக்கூட சொல்லிக் கொடுக்கத் தெரியாத ஆசிரியரும் இருப்பாரா! பொருத்தம் இருக்கிறதா அவன்பேச்சில்—பொருள் இருக்கிறதா அவன் தரும் உதாரணத்தில் என்றெல்லாம், நம்மைப் பிடிக்காதவர்கள் கூறத் துடித்திடுவர்; சொல்லிவிடு தம்பி! அவர்கட்கு, அவர்கள் சல்லடம் கட்டுமுன்பே! அப்படி ஒரு பள்ளிக்கூடம் இல்லை! ஆனால் அப்படி ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் எவ்வளவு வேதனை நிரம்பிய விசித்திரம் தெரியுமோ, அது தெரிகிறது ஆளுங்கட்சியான காங்கிரசில் ஒரே பிரச்சினை பற்றி வெவ்வேறு தலைவர்கள் வெளியிடும் மாறுபாடான கருத்துக்களைக் கவனிக்கும்போது.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுகிறேன்.
இன்று விலைகள் ஏறிவிடடதற்குக் காரணம் உற்பத்திக் குறைவுதான்.என்கிறார் ஒரு காங்கிரஸ் தலைவர்! பெரிய தலைவர் தான்!!
வணிகர்களின் இலாபவேட்டையால் ஏழைகள் கொடுமைப்படுததப்படுகிறார்கள் என்று வீரமாகப் பேசிய உணவு அமைச்சர் சுப்பிரமணியமே,
என்று பேசுகிறார்—பேசத் தலைப்பட்டிருக்கிறார்.
என்று பேசுகிறார் மற்றொருவர். இவரும் பெரிய காங்கிரஸ் தலைவர்—கிருஷ்ணமேனன், தம்பி! ஒரு காலத்தில், ‘நேருவின் வாரிசு’ என்று கொண்டாடப்பட்டு வந்தவர்— அவர் பதவி இழந்ததும் இங்கேகூட இழுத்த இழுப்புக்குச் சென்றிடும் இயல்பினர் சிலர், விருந்து வைத்து விழா நடாத்தி, இனி எமது வேலை, மீண்டும் இவரைப் பதவியில் ஏற்றி உட்காரவைத்துப் பக்கம் நின்று பார்த்துப் பரவசம் பெறுவதே! என்றுகூடப் பேசி வந்தார்களே, நினைவிலிருக்கிறதா! அதே கிருஷ்ணமேனன் தான! அடித்துப் பேசுகிறார், உற்பத்தி குறையவில்லை, விநியோக முறையிலேதான் கோளாறு என்று.
இவ்விதம் உருக்கமும் புள்ளி விவரமும் கலந்த உரையாற்றுகிறார் காங்கிரசில் உள்ள தலைவரொருவர். கனைத்துக்கொண்டு; கண் சிமிட்டிக்கொண்டு எழுந்திருக்கிறார் இன்னோர் காங்கிரஸ் தலைவர்,
இவ்விதம் எழுச்சியுடன் பேசுகிறார் இந்தியப் பேரரசின் அமைச்சராக இருந்து விலகிய மாளவியா எனும் மாபெருந்தலைவர்—காங்கிரஸ் தலைவர்!! எழுந்திருக்கிறார் மற்றோர் காங்கிரஸ் தலைவர், ஒருமுறை சூழ இருப்போரைப் பார்க்கிறார்.
இவ்விதம் பேசியவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே—மைசூரில் முதலமைச்சராக இருத்தவர், அனுமந்தய்யா என்பவர்.
துரிதமான, துணிவுமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஒருவர்.
ஆர அமர யோசித்து, விளைவுகள் என்னென்ன நேரிடக்கூடும் என்று பார்த்து. மெள்ள மெள்ளத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இன்னொருவர்.
இப்போதைய நெருக்கடி போக்கிட உடனடியாக அதிக அளவு உணவுப் பொருள் வெளிநாடுகளிடமிருந்து வரவழைத்தாக வேண்டும் என்று கூறுகிறார் ஒருவர்.
வரவழைக்கிறோம். வருகிறது. அமெரிக்காவிலிருந்தும், தாய்லாந்து, கம்போடியா ஆகிய இடங்களிலிருந்தும். பாகிஸ்தானிலிருந்துகூட வருகிறது என்கிறார் லால்பகதூர்.
அவமானம்! அவமானம்! இவ்வளவு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகுமா சோற்றுக்காக வெளிநாட்டானிடம் பிச்சை எடுப்பது? கேவலம்! கேவலம்! அதிலும் பாகிஸ்தானிடமிருந்து உணவுப் பொருள் பெறுகிறோம் என்று கூறுவது கேட்க வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் என்று பேசுகிறார், காட்கில் எனும் பழம் பெரும் காங்கிரஸ் தலைவர்.சர்க்காரே உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் கொள்ளை இலாபமடிப்போரின் கொட்டத்தை அடக்க முடியும் என்று ஒருவரும் சர்க்கார் உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ளக் கூடாது, வகையாகச் செய்திட முடியாது, நெருக்கடி அதிகமாகிவிடும் என்று மற்றொருவரும் நேர்மாறாகப் பேசுகின்றனர். இருவரில் எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற நோக்கம் காட்டி, வணிகர்களை அடியோடு ஒழித்துக் கட்ட அல்ல, சர்க்கார் உணவு தானிய வாணிபத் துறையில் ஈடுபடுவது—ஈடுபடப்போவது முழு அளவில் அல்ல–ஒரு அளவுக்குத்தான்–வணிகரும் இருப்பர்–சர்க்காரும் வணிகர் வேலை பார்க்கும்–இது கொள்ளை இலாபத்தைத் தடுக்க–வாணிப முறையைச் செம்மைப் படுத்த—சீர்குலைக்க அல்ல என்று கனம் சுப்பிரமணியம் கூறுகிறார்.
உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைத்திட வழி செய்யுங்கள் என்று கேட்கிறார் ஒருவர்.
கடலைப் பிண்ணாக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலே 45 கோடி கிடைத்ததாமே சென்ற ஆண்டு, அதனை இந்த ஆண்டு அதிகமாக்க வழி செய்க என்கிறார் வேறொருவர்.
சதாசர் சமிதி மூலம் ஊழலையும் இலஞ்சத்தையும் ஒழித்துக்கட்ட முடியும்—கட்டப்போகிறேன்—கட்டிக் கொண்டு வருகிறேன் என்று பேசுகிறார் நந்தா.சதாசர் சமிதியா! அதிலே இலஞ்சப் பேர்வழிகள் நுழைந்து கொண்டுள்ளனராமே! போலீஸ்படை இருக்க எதற்காக இந்தக் காவிப்படை என்று கடுங்கோபத்துடன் கேட்கிறார், வங்கநாட்டுக் காங்கிரஸ் தலைவர் (அடுத்து அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகப் போகிறவராம்) அடுல்யா கோஷ்.
காமராஜ் திட்டம் கவைக்குதவாது என்கிறார் ஒருவர், அதுதான் கைகண்ட மருந்து என்கிறார் மற்றொருவர்.
தம்பி! இப்போது யோசித்துப் பார்க்கச் சொல்லு, நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், ஒன்பது என்று மற்றொருவரும், கூட்டுவது பிறகு பார்ப்போம், முதலில் நாலு என்றால் என்ன? எவ்வளவு? அதைத் தீர்மானிப்போம் என்று வேறொருவரும் பேசிடும் பள்ளிக் கூடம்போல இருக்கிறதல்லவா !! தம்பி, அத்தனை பெரியவர்கள் கூடிப் பேசிய இடத்தைப் பள்ளிக்கூடம் என்று சொல்வதா என்று கோபித்துக்கொள்ள எவரேனும் கிளம்பினால், நமக்கேன் வீண்பகை—பள்ளிக்கூடம் என்பதை மாற்றி அவர்களுடைய நிலையின் உயர்வுக்கு ஏற்ற வேறு பெயரளித்துவிடுவோம்—கல்லூரி என்று கூறுவோமே—குழப்பக் கல்லூரி என்று பெயரிடுவோம்.
அட பைத்தியக்காரா! இதைப்போய்க் குழப்பம் என்கிறாயே! இதுதான் கருத்துப் பரிமாறிக்கொள்ளுதல்! இது தான் ஜனநாயகம்! பேச்சு உரிமை! எவரும் தமது மனத்துக்குச் சரியென்று பட்டதை அச்சம், தயை தாட்சணியமின்றி எடுத்துக்கூறிடும் உரிமை. இது வழங்கப்படுவது எமது ஸ்தாபனமாம் காங்கிரசிலேதான்! இதன் அருமை பெருமையைத் தெரிந்துகொள்ள இயலாமல், இதனைக் குழப்பம் என்று பேசுகிறாய், குறை இது என்று ஏசுகிறாய்! ஒரு ஜனநாயக அமைப்பிலே இதுதான் அழகு! என்று கூற முற்படுவர், தெரியும்.
ஆனால், தம்பி! நாலும் நாலும் எட்டு என்பது போன்ற அடிப்படையிலே ஆளுக்கொரு பேச்சுப் பேசுவது, ஜனநாயகமாகாது-கருத்துக் குழப்பத்தைத்தான் காட்டும்; கொள்கைக் குழப்பத்தைத்தான் காட்டும்.
இன்று காங்கிரசிலே திட்டவட்டமான கருத்துக் கொண்டு எல்லோரும் ஈடுபட்டு இல்லை. பணபலம், பதவிபலம், விளம்பரபலம் மிகுதியாக உள்ளது என்ற காரணத்தால், அதிலே புகுந்துகொண்டு அதிகாரம் பெறலாம், ஆதாயம் பெறலாம் என்ற நோக்கத்துடன் எவரெவரோ சேர்ந்துவிட்டனர்—ஒரே கட்சி என்று ஒப்புக்குக் கூறிக்கொள்கின்றனரேயொழிய—அடிப்படைப் பிரச்சினைகளிலேயே வெவ்வேறு கருத்துகளை, முரண்பாடான கருத்துகளைக் கொண்டவர்கள்—ஒட்ட முடியாதவர்கள்—வெட்டிக்கொண்டு போகவேண்டியவர்கள்—உள்ளனர். உற்பத்தியாளர்களின் சார்பில் பேசுகிறேன் என்று நிலத்திமிங்கலங்களுக்காக வாதிடுபவர்களும் உள்ளனர் காங்கிரசில்; விநியோகமுறை செப்பனிடப்பட வேண்டும் என்ற சமதர்மக் கருத்தினரும் உள்ளனர் அதே காங்கிரசில். முரண்பாடுகளை மூடி மறைத்து வைத்துக்கொண்டு எவரெவருக்கு எந்தெந்தச் சமயத்தில், எந்தெந்த இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறதோ, ஆங்கு தமது கருத்தினைச் செயல்படுத்திப் பயன் பெறுகின்றார்.
எனவேதான் தாமதம், தெளிவின்மை, துணிவின்மை, திரித்திடுதல் எனும் கேடுகள் காங்கிரஸ் மேற்கொள்ளும் திட்டங்களிலும், இயற்றும் சட்டங்களிலும் நெளிகின்றன.
இத்தனை முரண்பாடுகளையும் கவனித்து, எந்தக் கருத்தினரையும் இழந்திட மனமில்லாததால், அவரவரும் என் கருத்தும் இதிலே இருக்கிறது, என் நோக்கமும் இதிலே ஈடேறுகிறது என்று மகிழ்ச்சி கொண்டிடத்தக்க விதமாக, கலப்படமான முறையிலே சட்டம் ஏட்டிலே ஏறுகிறது—பெருந் தாமதத்துக்குப் பிறகு.
சட்டம்—திட்டவட்டமற்று, தெளிவற்று அமைந்து விடுகிறது. வழக்கு மன்றத்திற்குப் பெருவிருந்து கிடைக்கிறது.
சட்டம் செயல்படத் தொடங்கும்போது மேலும் இடர்ப்பாடுகள் எழுகின்றன—திரித்துவிட வழி கிடைப்பதால், சட்டத்தினால் கிடைத்திட வேண்டிய முழுப் பலனும் கிடைத்திடுவதில்லை. ஏட்டிலே முற்போக்கான சட்டம் இருந்தும் நாட்டிலே அதற்கேற்ற பலன் கிடைக்காமலிருப்பது இதனால்தான்.
பொதுப்படையாகப் பேசினால் சிலருக்குப் புரிவது கடினம் என்றால், தம்பி! காங்கிரஸ் அரசு இயற்றியுள்ள நிலச்சீர்திருத்தச் சட்டத்தையே, எடுத்துக்காட்டாகக் கொண்டு, நான் கூறியிருப்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
நிலச் சீர்திருத்தச் சட்டம் என்பது, தம்பி! சமதர்மப் பொருளாதாரத் திட்டத்துக்கு அடிப்படையாக அமைவது. ஆயினும், காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத்தை, சமதர்மப் பொருளாதார அடிப்படை என்று கூறிடக்கூட அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அச்சத்திற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு அதிபர்களான பட்டக்காரர்கள், பாளையக்காரர்கள், இராமநாதபுரம் ராஜா, செட்டி நாட்டு ராஜா, வாண்டையார், வலிவலத்தார், நெடும்பலத்தார், மூப்பனார், செய்யூரார், சூணாம்பேட்டையார், இலஞ்சியார், சங்கரண்டாம் பாளையத்தார், கடவூரார், காட்டுப்புத்தூரார், ஒரக்காட்டார், பாண்டேசுரத்தார், வேட்டவலத்தார் எனும் இன்னோரன்ன பிற நிலப் பிரபுக்களைக் காங்கிரசில் நடுநாயகங்களாக வைத்துக் கொண்டு, சமதர்ம அடிப்படையான நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வருகிறோம் என்று கூற எப்படித் துணிவு பிறந்திட முடியும்? நெடுங்காலம் நிலச் சீர் திருத்தத்தை, நடைமுறைக்கு ஏற்றதல்ல, தேவையற்றது, பலன் கிடைக்காது என்று கூறி எதிர்த்து வந்தனர் நிலப் பிரபுக்களின் மனம் மகிழ. ஆனால், எதிர்க் கட்சிகள், இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு வளரவும் கிளர்ச்சி நடத்தவும் முற்படக் கண்டு, மக்களை இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து, நிலப் பிரபுக்களிடம் நிலைமைகளை எடுத்துக் காட்டி. இன்னின்ன முறைகளால், நீங்கள் உமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம், அதற்கெல்லாம் இடம் வைத்துச் சட்டம் இயற்றி விடுகிறோம் என்று கூறிச் சம்மதம் பெற்று, உச்ச வரம்புச் சட்டம் இயற்றப்பட்டது.
தம்பி! உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கம், ஆட்சியிலிருந்த காங்கிரசை மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளரும் நிலை கண்டு, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது; உள்ளூரச் சமதர்ம நோக்கம் கொண்டு அல்ல.
எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது, இன்று ‘ஜனநாயக சோஷியலிசம்’ பேசும் இதே காமராஜர், நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, நிலச் சீர்திருத்தத்தையே எதிர்த்துப் பேசியது.உழுபவனுக்கு நிலமாம்
உழுபவனுக்கு நிலம்!
இருப்பவனுக்கு வீடு!
ஏறுபவனுக்கு ரயில்!
இப்படிக் கேலி பேசினவர் தான் காமராஜர். இறுதிவரையில் எதிர்த்துப் பார்த்து, எவ்வளவு தாமதம் ஏற்படுத்தலாமோ அவ்வளவும் செய்து பார்த்து, கடைசியில், ஏராளமான விதி விலக்குகள் வைத்து, இந்த நிலச் சீர்திருத்தச் சட்டத்தைச் செய்தனர். இந்த விதி விலக்குகளைக் காரணமாகக் கொண்டு, நிலப் பிரபுக்கள், தமது ஆதீனத்திலிருந்த நிலத்தைப் பிரித்துப் பிரித்து பல்வேறு காரியங்களுக்காக என்ற பெயரால்—கோயில் கட்டளை என்பதிலிருந்து கல்லூரி நடத்துவது என்பது வரையில் பல பெயரால்—எழுதிவைத்துவிட்டு, சட்டத்தால் தங்கள் ஆதிக்கம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதபடி தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்—காங்கிரஸ் அரசின் துணை கொண்டு. சட்டம் ஒரு கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போயிற்று.
எவரொருவரிடமும் இவ்வளவுக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது என்ற ஒரு சட்டம் அமுலுக்கு வந்திடுவதால், ஏற்படக்கூடிய புரட்சிகர மாறுதல், இங்கே ஏற்படாமல் போனதற்குக் காரணம் இதுவே.
மீண்டும் அந்தச் சட்டத்தின் ஓட்டைகளை அடைத்திடவும், உருப்படியான பலன் கிடைக்கத்தக்க விதமாகச் செயல்படுத்தவும், விதிவிலக்குகளை நீக்கிடவும், போலி ஏற்பாடுகளை உடைத்திடவும், முற்போக்காளர் ஆட்சியில் அமர்ந்து எங்கே செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே, இத்தனை பக்குவமாக நமது நலனைப் பாதுகாத்து வரும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் நீடித்து இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நிலப்பிரபுக்கள் காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டு, ஊட்டம் கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.
நிலச்சீர்திருத்தச் சட்டம் பயனற்றுப் போய்விட்டது என்பதனைக் காங்கிரஸ் அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்து நிலைமைகளைக் கண்டறிந்த அமெரிக்க ஆய்வாளர்களே கூறிவிட்டனர்.
சட்டம் ஓட்டைகள் நிரம்பியதாக இருக்கிறது.சட்டத்தைச் செம்மையான முறையில் செயல் படுத்தவில்லை.
செம்மையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வமே இல்லை.
அவ்விதமான சட்டம் ஒன்று இருக்கிறது என்ற நினைப்பே அற்றவர்களாக அதிகாரிகள் உள்ளனர்.இவ்விதம் அந்த ஆய்வாளர்கள் கூறிவிட்டனர். சட்டம் செய்துவிட்டோம், நாங்கள் சமதர்மிகள் அல்லவோ! என்று காங்கிரஸ் அரசினர் கூறுவதும், சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம், நாங்கள் மட்டும் என்ன, சமதர்மிகள் அல்லவா!! என்று நிலப்பிரபுக்கள் பேசுவதும், சமதர்மம் பூத்துவிட்டது, அதன் மணம் என் நாசியிலே புகுந்துவிட்டது, ஓடோடிச் சென்று அந்த மலரினைப் பறித்துச் சூடிக்கொள்வேன், ஆடுவேன், பாடுவேன், எவரேனும் ஏனென்று கேட்டால் சாடுவேன் என்று கூறிச் சிலர் காங்கிரசுக்குள் ஓடுவதும் இப்போது புரிகிறதல்லவா?
தம்பி! இப்போதும் நாட்டிலே உள்ள மொத்த நிலத்தில் பாதி அளவு, நூற்றுக்குப் பத்துப்பேர் என்று சொல்லக்கூடியவர்களான பிரபுக்களிடம்தான். இது நான் தயாரித்த கணக்கு அல்ல; ஆய்வாளர்கள் அளித்தது. சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள குட்டிக் குபேரர்களிடம் மொத்த நிலத்திலே ஐந்திலே ஒரு பாகம் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலை, ஜமீன்களை ஒழித்துவிட்டோம், நிலத்துக்கு உச்சவரம்பு கட்டிவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளப் பயன்படும் சட்டங்கள் இயற்றிய பிறகு!!
இதுபோலத்தான், தயக்கம், தடுமாற்றம், தாமதம் ஆகிய கட்டங்களைத் தாண்டி, பணம் படைத்தோரின் மனம் நோகாதபடியும், ஆதிக்கம் கெடாதபடியும், சலுகை சரியாதபடியும் பாதுகாப்புத் தேடிக் கொடுத்து, ஒப்புக்கு ஒரு ஓட்டைச் சட்டத்தைச் செய்துவிட்டு, ஒய்யாரமாக முழக்கமிடுகிறார்கள், சமதர்மம்! ஜனநாயக சோஷியலிசம்!! என்று. அதனைப் பட்டக்காரரும் பாளையக்காரரும் ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, மேலும் உரத்தகுரலில் முழக்கமிடுகிறார்கள், ஜனநாயக சோஷியலிசம் என்று.
பெரும்பெரும் நிலப்பிரபுக்களும், கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களும், வெளிநாட்டு முதலாளிகளுடன் கூட்டாகப் பெருந்தொழில் நடத்துபவர்களும், காங்கிரசில் கூடி நின்று, ஜனநாயக சோஷியலிசம் பேசுவது, இருபதாம் நூற்றாண்டின் இணையிலாத அரசியல் மோசடி என்று நான் சொன்னால், கடுமையாகக் கூறிவிட்டேன் என்று யாரும் எண்ணிக் கோபிக்கக்கூடாது—எத்தனையோ வார்த்தைகளை கடுமை என்பதற்காக வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு, கடைசியாக நான் பயன்படுத்தியிருப்பது மோசடி என்ற வார்த்தை. அதைவிட நாகரிகமான வேறு வார்த்தை கிடைக்கவில்லை, இந்த நிலைமையை விளக்க. எனக்கு எவரையும் புண்படுத்த விருப்பம் ஏற்படுவதில்லை—திருடனைக்கூட நான் நடுநிசி உழைப்பாளி என்று கூறத்தயார். ஆனால் இந்த நிலைமையை விளக்க ‘மோசடி’ என்ற பதத்தைக்கூட உபயோகிக்கா விட்டால், உண்மையைத் துளியும் விளக்கிட முடியாது.
இந்த அரசியல் மோசடி நடத்தப்பட வேண்டியதற்காகவே, முரண்பட்ட கருத்துகளைக் கொண்டவர்கள், காங்கிரஸ் முகாமில் இருக்கிறார்கள்—ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையின்போதும், முரண்பாடு நெளிகிறது. முடிவிலோ, எவருக்கு எந்த நேரத்தில் வலிவு மிகுந்திருக்கிறதோ அவர் பக்கம் அனைவரும் நிற்கின்றனர்; எந்த நேரம் பார்த்துக் கவிழ்த்துவிடலாம் என்ற நினைப்புடன்.
எனவே, கருத்து வேறுபாடும். அதனைத் தாராளமாக வெளியிடுவதும் எமது ஜனநாயகத்தின் மாண்பு என்று மார்தட்டிக் கூறுபவர்கள் கிளம்பும் போது, இதனை நினைவிலே கொண்டிட வேண்டுகிறேன்.
இனித் தம்பி! இத்தகைய அடிப்படை விஷயத்திலேயே அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் ஆளுக்கு ஒரு விதமாக, முரண்பட்டுப் பேசுகிறார்களே, இதனை ஜனநாயகப் பண்பு என்று கூறுபவர்களைக் கேட்டுப் பாரேன், இந்த அளவுக்கு வேண்டாம், மிகச் சாதாரணமான அளவுக்கு,—இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சினையில் அல்ல, மிகச் சாதாரணப் பிரச்சினையில்—வேறு கட்சிகளில், தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளைப் பேசினால், இந்தக் கண்ணியவான்கள் எனனென்ன கூறுகிறார்கள்—எதெதற்கு முடிச்சுப் போடுகிறார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்க்கச் சொல்லேன்!!
வேலூரில் மாநாடு நடத்தலாம் என்று நண்பர் நடராசனும், போளூரில் நடத்தலாம் என்று சுப்பிரமணியமும் கூறுவதாக வைத்துக்கொள் தம்பி! இந்தப் பெரிய கட்சியில் உள்ளவர்களுக்கு எவ்வளவு ‘சின்னப் புத்தி’ வந்து விடுகிறது—நடராசன்—சுப்பிரமணியம் லடாய்! மாநாடு நடத்துவதில் தகராறு! பிளவு! பிளவு! குழப்பம்! குளறல்!! ஏ! அப்பா! கொட்டை எழுத்துக் கோமான்களும், நெட்டுருப் பேச்சாளரும், நெரித்த புருவத்தினரும் என்னென்ன பேசுவார்கள்! பேசினர்!! இதோ, தம்பி! உணவுப் பிரச்சினையிலே இருந்து ஊழல் பிரச்சினைவரை, சதாசர் சமிதிப் பிரச்சினையிலே இருந்து சமுதாய நலத்திட்டம் வரையில், கருத்தடைப் பிரச்சினையிலே இருந்து காவல் படைப் பிரச்சினை வரையில், இத்தனை முரண்பாடு பேசப்படுகிறதே, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில், ஒரு வார்த்தை பேசச் சொல்லு, பார்ப்போம்! என்னய்யா வேடிக்கை இது, நாலும் நாலும் ஏழு என்கிறார் ஒருவர், ஒன்பது என்கிறார் மற்றொருவர், இந்த இலட்சணத்தில் இருக்கிறதே உங்கள் கட்சிக் கோட்டைக்குள்ளே பிளவு, தகராறு, பேதம் என்று—சே! சே! இது பிளவும் அல்ல, பேதமும் அல்ல—இது தான் உண்மையான ஜனநாயகம் என்று கூறுவர்! கூறுவரா? முழக்கமே எழுப்புவர்!
வேறொரிடத்திலே உள்ள ஒரு காங்கிரஸ் முகாமிலே, தம்பி! இந்த ஜனநாயகத்தை மேலும் சற்று விறுவிறுப்பாக நடத்திக் காட்டினராம்! அந்த ஜனநாயகத்தின் அருமை பெருமையை உணர முடியாத ஒரு காங்கிரஸ் தலைவர்.
என்று மற்றொர் காங்கிரஸ் தலைவர்மீது புகார் செய்திருக்கிறார்.
இப்படி பலாத்காரம் — வன்முறை — நடக்கலாமா என்று கேட்டுப் பார் தம்பி! உடனே பதில் பளிச்சென்று கிடைக்கும் “இது வன்முறையா! சே! சே! இது அன்புப் பெருக்கு!” என்று.
பத்திரிகைகளில் விவரம் கொடுத்திருக்கிறார்—அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரிடமும் புகார் தரப்பட்டிருக்கிறதாம்—கமிட்டிக் கட்டத்திலே நடைபெற்ற ‘காங்கிரஸ் ஜன நாயகம்’ பற்றி.
‘அடித்துப் பேசினார்’ என்று எழுதுவதுண்டல்லவா? ஒரிசாவில் நடைபெற்ற கமிட்டிக் கூட்டத்தில், ஒருவர் பேசினார்—இன்னொருவர் அடித்தார்!!
தம்பி! ஒரு புதிய ‘கதாநாயகரை’க் கண்டெடுத்து, பொட்டிட்டுப் பூமுடித்துக்கொண்டு வந்து காட்டினார்கள் மக்களிடம்.
இதோ பாருங்கள் இந்த நாயகனை!
கட்டுடல் காணுங்கள், கண்ணொளி பாருங்கள்.
இவர் இளைஞர்! ஏறுநடை! எதற்கும் அஞ்சா உள்ளம்!
ஆபத்துகள் இவருக்குப் பூச்செண்டு! ஆற்றல் இவருக்கு அபாரமாக உண்டு!
எதிரிகளை முறியடிப்பதில் இவருக்கு இவரே இணை,
வீழ்ந்துகிடந்த காங்கிரசை நிமிர்த்தி விட்டார்!
வீரட்டி விரட்டி அடித்து வெற்றிகொண்டார், காங்கிரசை எதிர்த்தோரை.
பொருளாதாரப் பிரச்சினைகள் இவருக்குக் கற்கண்டு.
தொழில் நிபுணர்! நாட்டுக்குத் தோன்றாத் துணைவர்.வாதிடுவதில் வல்லவர்! வரிந்து கட்டிப் போரிடுவதில் திறமை மிக்கவர்.
நேருபண்டிதரே இவரிடம் யோசனைகள் கேட்கிறார்; அத்தனை நுண்ணறிவு இவருக்கு.
டில்லி அரசாங்கப்பணிமனையில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு! அங்கு இவர் விருப்பம்போல் செல்வார், உணர்ந்ததை உரைப்பார், அதனைத் துரைத்தனம் ஏற்றுக் கொள்ளும்.இவ்விதமாகவெல்லாம், அர்ச்சனைகள் செய்து அரங்கமேற்றினர்; அவரும் ஆடினார் வேகமாக, காங்கிரசின் எதிரிகளைச் சாடினார் மும்முரமாக, காமராஜர் புகழையும் பாடிக் காட்டினார், கழகத்தை ஒடுக்கிட வழியும் கூறினார், அமெரிக்கா சென்றார், ‘பாரதம்’ உய்ந்திடும் வழி கண்டறிய. தேர்தல் களம் நின்றார், வென்றார், முதலமைச்சர் ஆனார்! ஒரிசாவின் பட்நாயக் தம்பி, நினைவிற்கு வருகிறதா!
அவர் மீது தான் புகார் கிளம்பியிருக்கிறது; ‘அடிதடி ஜனநாயகம்’ நடத்தினார் என்று.
ஒவ்வொன்றுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு புது ‘வியாக்யானம்’ கொடுக்கிறார்களே, இவர் என்ன வியாக்யானம் தருவாரோ, யார் கண்டார்கள்!
இப்படி ஒரு விளக்கம் கொடுப்பாரோ என்னவோ யார் கண்டார்கள்!!
இவ்விதமாகவெல்லாம், தம்பி! அந்த இடத்து விவகாரம் இருந்து கொண்டு வருகிறது. ஆனால், பேச்சு மட்டும் இருக்கிறது, எம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஆட்சி நடத்த? என்று. நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று விவாதிப்பது போன்ற நிலையிலும் ‘அடிதடி ஜனநாயக’ முறையிலும் இருந்து கொண்டே, பேச்சு மட்டும் இத்தனை சத்தத்துடன் இருக்கிறது. இரவல் நகைக்கே இத்தனை குலுக்கென்றால் சொந்தத்தில் நகை என்றால் சுருண்டு விழுவாள் போல இருக்கிறது என்று பேசிக்கொள்வார்கள், கொச்சையாக—அவ்விதம் இருக்கிறது இவர்கள் விவகாரம். ஆனால் தம்பி! அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். நீயும் நானும், மாறி மாறி இவர்களால் ‘கைது’ செய்யப்படுகிறோம்; சிறையில் தள்ளப்படுகிறோம்!! தெரிந்து கொள்!
6-9-1964
அண்ணன்,
அண்ணாதுரை