தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008

காஞ்சிக் கடிதம்: 8

புதிய படை புறப்படுகிறது!


நந்தாவின் சாதுக்கள் படை

நயனதாராவின் கேலியும் கிண்டலும்

சாது சன்னியாசிகள் பற்றிய மீராபென்னின் கருத்துகள்

தம்பி,

பகைவர்கள் படை எடுத்துப் புயலெனப் புகுந்திட முனையும்போது, நாட்டைக் காத்திடவும் பகையை முறியடித்திடவும் வகுக்கப்படும் போர்முறைகளில் வல்லவர்கள், எந்தப் படையை எந்த முறையில் எந்த நேரத்தில் எவ்விதமான போரிட எங்கு அனுப்பிவைப்பது என்பது குறித்து எடுத்திடும் முடிவினைப் பொருத்தே வெற்றியா தோல்வியா என்பது இருக்கிறது.

படைகள் போரிடத்தான் உள்ளன; எந்தப் படையிலும் பயிற்சி பெற்ற போர் வீரர்களே உள்ளனர்; அதிலே எவருக்கும் ஐயம் இல்லை. ஆனால் பெற்றிடும் பயிற்சியில், வகையும் தரமும் உண்டு. எந்தப் படையினரும் எதிர்த்துப் போரிடுவதிலே அஞ்சாது நின்றிடவும் ஆபத்தைத் துச்சமென்று எண்ணிடவும் இயல்பும் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஆனால், படையில் ஒவ்வோர் பிரிவினருக்கென்று ஒவ்வோர் விதமான பயிற்சி தரப்படுகிறது. ஒவ்வோர் விதமான போர் முறைக்கும் அதற்குத்தக்கதான பயிற்சி இருக்கிறது.

கோட்டை கொத்தளங்களைத் தாக்குவது, கோட்டை கொத்தளங்களைத் தாக்குதலிலிருந்து காத்திடுவது எனும் இருவேறு செயலிலும், தீரம் வீரம் நிரம்பத் தேவை; ஆனால், இருவேறு செயல்களிலே ஒவ்வொன்றுக்கென்று ஒவ்வோர் முறை உளது; அந்த முறையில் பயிற்சி பெற்றார்க்கே அந்தத்துறையும் பணியும் தந்திடுதல் வேண்டும், முழுப் பயன்பெற.

வாள் வீச்சிலும் பழக்கம் உண்டு எனினும், இவன் வேல் எறிவதிலே தன்னிகரற்றவன் எனின், அன்னானை அதற்கே அனுப்பி வைத்தால் வெற்றி ஈட்டிட வழி செய்ததாகும். வாட்போர் அறியானோ இவ்வீரன்! அறிந்துள்ளான்! எனவே, வாட்போர்ப் படையிலே சேர்ந்து போரிடட்டும் என்று கட்டளையிடலாம்; அவனும் வாளினைச் சுழற்றிப் போரிடலாம்: ஆனால், அவன் வேல் எறிவதனால் கிடைத்திடும் பலன் கிடைத்திடாது.

அன்பும் அறமும் நிலவிட வேண்டும், பண்பு மிகுந்திட வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவரே, வள்ளுவர். எனினும், அறம் அழிப்போரும் பண்பு கெட்டோரும், அமைதி குலைப்போரும், ஆகா வழி நடப்போரும் உள்ளனரே; அவர்களால் அமளி மூட்டப்பட்டு விடுமானால், அறவுரை கூறிடல் பயனளிக்காதே; எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றன்றோ இன்னல் விளைவித்தவர்களை அடக்கிட இயலும் என்பதனை எண்ணிப் பார்த்திட மறுத்தாரில்லை; மாறாக, அது குறித்து எண்ணி எண்ணிப் பார்த்து ஏற்புடைய கருத்துகள் பலவற்றைக் கூறியுள்ளார். அந்தக் கருத்துகளைக் காணும்போது, என்னே இந்த வள்ளுவர்? வாலறிவன் நற்றாள் தொழுவது பற்றித்தான் கூறினார், அதிலே வல்லவர் என்று எண்ணிக் கொண்டோம்; இதோ போர் முறை குறித்து இத்துணை நுண்ணறிவு கொண்டு வழி காட்டுகின்றாரே, போர்க்களம் பல கண்டவரோ! என்று எண்ணிடுவோம், வியந்திடுவோம். அஃது அவருடைய தனிச் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இன்னவன் இதனை முடித்திட வல்லவன் என்பதனைக் கண்டறிந்து, அதனை அவனிடம் விடல்—என்பதனை எல்லாத் துறைகளுக்கும் ஏற்றதெனக் கூறி வைத்தார்; அஃது போர்முனைத் துறைக்கும் பொருந்தும்; எனினும், போர்முறை குறித்தே ஆய்வுரை பல கூறியுள்ளார்.

இருக்கட்டும் அண்ணா! இப்போது எதற்காகப் போர்முறை பற்றிப் பேசுகிறாய்—நாம் நடாத்தி வருவதோ அறப்போர் - நம்மை எதிர்ப்போர் நடத்திடுவதோ அக்கப் போர்—நீ கூறிடத் தொடங்கியதோ களம் நின்று போரிடும் முறை பற்றி; எதற்காக? என்று கேட்கின்றாய்! கேட்பது மட்டுமா தம்பி! அண்ணன்தான் பயந்தவன் ஆயிற்றே. பாரேன் போர் முறை பற்றி இத்தனை பேசிடும் வேடிக்கையை என்றெண்ணி உள்ளூரச் சிரித்திடவும் செய்கின்றாய்! அறியேனா!!

தம்பீ! இன்று எனக்குப் போர்—போர் முறை—படை—படை வகை—பயிற்சி—பயிற்சிக்கேற்ற படைவகை—என்பன பற்றிய எண்ணம் பிறந்தது. மலாசியாவைத் தாக்கிடச் சுகர்ணோ முனைகிறார் என்றோர் பக்கம் செய்தி! வியட்நாமில் அமளி —குழப்பம்—என்றோர் செய்தி! அமெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்காகத் துடித்திடும் கோல்ட்வாட்டர் என்பவர், பொதுவுடைமை நாடுகளுடன் போரிட்டாக வேண்டும் என்று வெறிப் பேச்சுக் கிளப்பிடும் செய்தி! இப்படிப் பல பார்த்ததால் எனக்கும் போர் பற்றிய எண்ணம் பிறந்தது போலும் என்று எண்ணிக் கொண்டிருப்பாய். என் எண்ணம் இந்தச் செய்திகளைக் கண்டதனால் எழுந்ததுமல்ல. வேறென்ன என்கிறாயோ! புதியதோர் படை புறப்படுகிறது-வாளேந்திப் போரிட அல்ல—புனிதப் போர் புரிய! அது பற்றிப் படித்தேன்—அருமையான ஓர் ஆய்வுரையும் இதுகுறித்து வெளிவந்திருந்தது. பார்ததேன்; பார்த்திடவே, போர் பற்றிய பொதுவான எண்ணம் எழுந்தது.

தம்பி; பெருமழையால் ஏரி குளம் குட்டைகள் நிரம்பி எங்கும் சேறும் சகதியுமாகிவிட்டால், தவளைக் கூட்டத்துக்குக் கொண்டாட்டமல்லவா! கேட்போர் காதினைத் துளைத்திடத்தக்க கூச்சல் எழுப்பும், தூக்கத்தைக் கெடுக்கும்,

ஒரு குற்றமும் நாம் செய்தோமில்லை, இந்தத் தவளைகள் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்திடத் துணிந்தனவே? எத்தனை பெரிய சத்தம்! ஓயாத கூச்சல்! காதைத் துளைத்திடும் சத்தம்! என்ன எண்ணிக் கொண்டன இந்தத் தவளைகள்! கூச்சலிடுவதிலே நம்மை மிஞ்சுவார் எவரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, மண்டைக்கனம் கொண்டுவிட்டனவோ! வலிய வம்புக்கு இழுக்கின்றனவே! விடக்கூடாது இந்தத் தவளைகளை!! என்று எண்ணி, ஒருபடை திரட்டிக்கொண்டு கிளம்பி, தவளைகள் கூச்சலிடும் குளம்குட்டை ஓரம் நின்று நாமும் கூச்சலிடுவோம், உரத்த குரலில்; ஓயாமல்! நமது குரலொலி தமது குரலொலியைவிடப் பயங்கரமான அளவு உளது என்பதனை, இந்தப் புத்திகெட்ட தவளைகள் உணரட்டும்; உணர்ந்து வெட்கத்தால் வாயடைத்துப் போகட்டும் என்று கூறிக்கொண்டு, அதனையே போர்முறையாக்கிக் கொண்டு, கூவும்படையாகிக் கூச்சல் கிளப்பிடுவார் உண்டோ!! இல்லை! ஆளுக்கொரு கல்வீசித் தவளைகளைக் கொன்று போடுவோம் என்று கிளம்பிடுவார் உண்டோ! இல்லை என்பாய், பொதுவாக, அதுபோல் செய்திட ஒரு திட்டம் போட்டுக்கொள்வார் இல்லை. ஆனால், பிரான்சு நாட்டிலே இவ்விதமான வேலைத்திட்டம் இருந்தது. புரட்சிக்கு முன்பு. ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல நான் கூறுவது; வரலாற்றிலிருந்து எடுத்தளிக்கும் துணுக்கு, சீமான்கள் கொட்டமடித்துக் கொண்டிருந்த நாட்கள்! சாவு வரவில்லையே, சர்வேசா! என்று ஏழைகள் அழுது கிடந்தகாலம். தவளைகள் கூச்சல் கிளப்புவதால் சீமானின் தூக்கம் கெடுமல்லவா? சீமானின் தூக்கம் கெட்டால், உடம்பு என்னாவது! அவன் உடம்பு போனால் நாட்டின் உயிர் எப்படி இருக்கும்!! இவ்விதமான எண்ணம் அரசியல் கருத்தாக இருந்துவந்த காலமது. அப்போது இரவுக் காலங்களில், சீமான் பஞ்சணையில் படுத்திடுவான்; காடு கழனியாக்குபவர்கள், கல்லும் தடியும்கொண்டு தவளைகளைத் தாக்கியபடி இருப்பராம், இரவெல்லாம்; கூச்சலிடும் தவளைகளைக் கொல்வராம். இது, சீமானின் தூக்கத்துக்கான பாதுகாப்புப் படை! என்ன தருவார் சீமான்? என்றா கேட்கிறாய்! கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறாரே, போதாதா!!

செருக்குமிக்க சீமான்கள் காலத்துப் படைபோன்றதோர் படை இதுபோது எங்கேனும் அமைந்துளதோ, அதுபற்றியோ அண்ணா! நீ கூறுவது என்று கேட்கிறாய். இல்லை, தம்பி! இல்லை! நான் குறிப்பிடும் படை, சீமான் அமைத்தது அல்ல; சீமான்களுக்காகவும் அல்ல! ஏழைகளுக்கு இதம் செய்ய ஏழை பங்காளர் அமைத்த படை!! எது அது என்கிறாய். பொறு. கூறுகிறேன்; கூறுமுன் வேறோர் படை ஒன்று காட்டுகிறேன்.

தஞ்சைத் தரணி! அதனை வடபுலத்து முஸ்லீம் மன்னர் படை தாக்க வருகிறது: பாய்ந்து வருகிறது. பெரும்படை—போரிடுவதிலே ஆற்றல் மிகக் கொண்ட படை.

தஞ்சை மன்னன் கைகட்டி வாய்பொத்தி இருப்பானோ! நாடு காத்திடும் கடமை உணர்ச்சி அற்றவனோ மன்னன்!!

கை ஒலி எழுப்பினான், எதிர்வந்து நின்றனர் ஏவலர். கட்டளையிட்டான். கடுகிச் சென்றனர் நிறைவேற்ற.

படையொன்று கிளம்பிற்று; பறித்திட, ஒடித்திட, குவித்திட, வீசிட, பரப்பிட!

எதிரிகளைக் கண்டதுண்டமாக்கி வீசிட, அவர்களின் படைக்கலன்களைப் பறித்திட, வாட்களை ஒடித்திட, தஞ்சை மன்னனின் கட்டளை பெற்ற படை முனைந்தது என்று எண்ணுகின்றாய்.

தம்பி! ஒடித்தனர் பறித்தனர். வீசினர்!! ஆனால், எதிரிப்படையினரை அல்ல — பகைவர்களை அல்ல. காடென வளர்ந்திருந்த துளசிச் செடிகளை!!

ஏன்? என்கிறாய். மறுகணம் எண்ணிக் கொள்கிறாய், எதிரி அறியாவண்ணம் பாய்ந்து சென்று தாக்கிடப் புது வழி அமைக்கின்றனர் போலும், அதற்கே காடழித்துப் பாதை போடுகின்றனர் என்றெண்ணிக் கொள்கின்றாய். அது அல்ல நடந்தது. துளசிச்செடிகளைப் பறித்தெடுத்துச் சென்று எதிரிப்படை நுழையும் பாதையிலே வீசிடுக! பரப்பிடுக! துளசியைக் காலால் மிதித்துக்கொண்டு வருவது ‘மகாபாபம்!’ இதனை உணர்ந்து பகைப்படை வந்தவழியே திரும்பிப் போய்விடும்!! இது மன்னன் கட்டளை—போர்முறை.

இதனை நான் வரலாற்றுச் செய்தி என்று கொண்டிடவுமில்லை கூறிடவுமில்லை. அந்த நாள் நிலையினைக் காட்டிடக் கட்டிவிடப்பட்ட கதை என்றே கொள்கின்றேன்; ஆனால், கருத்தே அற்றது இது என்று தள்ளிட மாட்டேன்—ஏமாளி மன்னன் இதுபோல், பொருளற்ற போர் முறையை மேற்கொள்வான் என்ற கருத்தினைத் தருவது இந்தக் கதை.

துளசிச்செடி, இந்து மார்க்க வைதீகர்கட்கு, மகிமை வாய்ந்தது; புண்யம் பெற்றுத்தருவது. கண்களில் ஒத்திக் கொள்வதும், தலையில் சூடிக்கொள்வதும் நீருடன் கலந்து பயபக்தியுடன் உட்கொள்வதும், இந்து மார்க்கத்திற்கு ஏற்பட்டது. துளசி மாலையாமே மகாவிஷ்ணுவுக்கு!!

துளசியை மிதித்துவிட்டால் போதும், பாவம் ஏழெழு ஜென்மத்துக்கும் விடாது! சாஸ்திரத்தைக் கூறினேன். தம்பி! சாஸ்திரத்தை!!

இப்படி உள்ள ஒரு சாஸ்திரம் பொருள் உள்ளது, தேவைப்படுவது என்று வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், தம்பி! இந்து மார்க்கத்து வைதீகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த நம்பிக்கையை, முஸ்லீம் படை மதிக்குமா, ஏற்றுக்கொள்ளுமா என்று அந்த மன்னன் எண்ணிடவில்லை. வீசு துளசியை! விரண்டோடுவர் பகைவர்!! என்று கட்டளையிட்டார். பச்சைப் பசேலென ஏதோ தெரிவது கண்டு, பகைவர்களின் குதிரைப்படை மேலும் வேகமாகப் பாய்ந்ததாம், அந்த மன்னனின் ஆட்சி வீழ்ந்ததாம், சொல்கிறார்கள்.

எதிரிப் படையை விரட்ட வழியிலே துளசியை வீசினதுபோல, இப்போது நாட்டிலே தலைவிரித்தாடும் அக்கிரமத்தை ஒழிக்க, அநீதியைத் தொலைக்க, ஒரு புதுப் படை புறப்பட்டிருக்கிறது. எது அந்தப் படை? எவர் திரட்டியது? எங்கு உளது? என்று கேட்கிறாயோ, தம்பி! முதலில் எங்கு உளது? எது அந்தப் படை? என்பதற்குப் பதில் கூறிவிடுகிறேன். ‘காஞ்சி’ இதழின் அட்டைப் படத்தை ஒருமுறை பார்! பார்த்தனையா? என்ன காண்கிறாய்? சாதுக்களை அல்லவா!! அந்தப் படைதான் தம்பி, புதிதாகக் கிளம்பியுள்ள படை! நந்தா திரட்டி அனுப்பியுள்ள படை!! ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம், கொள்ளை இலாபம், கள்ளச்சந்தை, புரட்டு புனைசுருட்டு எனும் சமூகக் கொடுமைகளை எதிர்த் தொழித்திடுக என்று கட்டளையிட்டு, நந்தா இந்தச் சாதுக்கள் படையினைத் திரட்டி அனுப்பிவைக்கிறார்.

உள்துறை அமைச்சர் இந்த நந்தா. நல்லெண்ணம் மிகக்கொண்டவர், நாணயமானவர் என்கிறார்கள். சமூகக் கேடுகளைக் களைந்தாக வேண்டும் என்ற உறுதி கொண்டவர்; சூள் உரைத்துச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முனைந்திருக்கிறார். அதற்காக அவரை எவரும் பாராட்டுவர். நோக்கம் நேர்த்தியானது! ஆனால், முறை? துளசி அல்லவா கொட்டச் சொல்கிறார் பகைவர் நுழையும் பாதையில்! சட்டம், போலீஸ் ஆகியவைகளின் கண்களில் மண்ணைத் தூவிடும் கைதேர்ந்தவர்களைக் கண்டறிந்திட, காவி கட்டிய ஜெபமாலைகளை அல்லவா ஏவுகிறார். வேண்டும் வேண்டும் பெரும் பொருள் வேண்டும்! பிறர் பொருள் எனினும் பிழையிலை, வேண்டும்! உழைத்திடாமலே பொருள் குவித்திட உண்டு பல வழி, அனைத்தையும் அறிவோம்! என்று கூறிடும் கொடியவர்களை அடக்க, பணம் ஆட்கொல்லி! பாபச் சின்னம்! வாழ்வு மாயை! ஓர் வஞ்சக வலை! உலகு மாயை, அழியத்தக்கது, அழியாதது ஒன்று உண்டு, அது அங்கே! நிர்மலமான ஆகாயத்தை நோக்கு, நீசத்தனமிக்க உலகை நம்பாதே!! என்ற உபதேசம் பெற்றும் கொடுத்தும், கட்டற்று, கவலையற்று, காசு பணம் வேண்டும் என்ற அவசியமற்று, காலைக் கட்டிக்கொண்டு அழும் மனைவியும், காகூவெனக் கூவி அழும் குழந்தைகளும், கடன்பட்ட நெஞ்சமும் கொண்டிடாத காவிக் கோமான்கள் தானா கிடைத்தார்கள்! துளசி வீசுகிறாரே நந்தா, பகைவன் நுழையும் பாதையில்!!

சாதுக்களைக் கண்டதும் காலில் வீழ்ந்திட, கன்னத்தில் போட்டுக்கொள்ள, வரம் கேட்டிட, சமாராதனை நடத்திட, இன்றும் இங்கு நிரம்பப்பேர் உள்ளனர்—இல்லை என்று கூறிடவில்லை. அதிலும் வடக்கே உள்ள சாதுக்கள் ஒரு படை அளவு உள்ளனர்—படை வீரர் போன்ற கட்டுடலும் இருக்கிறது; பார்த்துமிருக்கிறேன்.

தம்பி! அரித்துவாரத்தில் பார்த்தேன், அழகிய கங்கைக்கரை ஓரம் முழுவதும், அரண்மனைகளோ என்று வியந்திடத்தக்கதான மடங்கள்—சாதுக்களுக்கு. எத்தனை சாதுக்கள் எத்தனை நாட்களுக்கு, என்னென்ன கேட்டாலும் தந்திட, வழிபட்டிட, அங்கு ஏற்பாடுகளைச் செய்துவைத்துள்ளனர் சீமான்கள், சிற்றரசர்கள், வணிகக் கோமான்கள், வாழ்வுக்கலை வல்லவர்கள்! மாலை வேளையில், இந்தச் சாதுக்கள், ஒரு கவலையுமற்று— (இந்த உலகம்பற்றிய கவலை) உலவுகிறார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கவலை மேலுலகம் பற்றியதாக இருக்கலாம்-மேலுலகில் இங்கு உள்ளது போன்ற ஏற்பாடுகள் உண்டோ இல்லையோ என்ற கவலை.

கோதுமையும், நெய்யும், சர்க்கரையும், பருப்பும், பாலும் பழமும் கிடைக்கிறது ஒவ்வொரு வேளையும். பரமனைப்பற்றிய தியானத்தில் ஈடுபடுகிறார்கள். ஏன் முடியாது!! பசிப்புலி அடக்கப்பட்டதும், புண்ணியம் பற்றிய நினைப்பு சுரக்கிறது. சாதுக்கள்போல ‘சம்சாரிகள்’ இருக்க முடிகிறதா! பாலுக்குச் சர்க்கரை கூட அல்ல, கூழுக்கு உப்பு போதுமான அளவு இல்லையே என்ற கவலை குடையும்போது, சாதுவாக இருக்க முடிவதில்லை, சாமான்யர்களால்—கோபம் தாபம், குமுறல் கொதிப்பு, பகை பயம், அடிமைத்தனம் அக்கிரம நினைப்பு எல்லாம் குடிபுகுந்து விடுகின்றன—போக்கிரியாகிறான், திருடனாகிறான், வெறியனாகிறான், வெகுண்டெழுகிறான், சாதுவாக இருக்க முடிவதில்லை. சாதுவின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதற்கான பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதால், சாது சாதுவாக இருந்திட முடிகிறது. வாழ்ந்திட வழி அமைத்துக் கொடுத்திட வேறு சிலர் பொறுப்பேற்றுக் கொள்வதனால், இவர்கள், வாழ்வு என்றால் என்ன? அது உண்மையா, மாயையா? இவ்வுலக வாழ்வு நித்தியமா அநித்யமா? என்பன பற்றிச் சிந்திக்கவும்—சிரவணம் செய்யவும் முடிகிறது.

இந்த நிலையிலேயும், சாதுக்கள் சாதுத்தன்மையை விட்டு வெகுதூரம் விலகி, காமக்குரோத மதமாச்சரியங்களால் ஆட்டுவிக்கப்படும் வெறித்தன்மை கொண்டு விடுவது பற்றிய செய்திகளும் அடிக்கடி வெளிவருகின்றன.

பெரியசாமிக்கு விஷம்கொடுத்த சின்னசாமி, பீடத்தைப் பெயர்த்தெடுத்த சாமி, பெண்ணைக் கடத்திச் சென்ற சாமி, மண்ணில் பொன்னை மறைத்த சாமி, மரக்கறி உணவை மறுத்த சாமி, கரியைப் பொன்னாய் ஆக்கும் சாமி, காளியை ஏவல் கொள்ளும் சாமி, காட்டு மாளிகை கட்டிடும் சாமி, கன்னியர் கலங்கிட நடந்திடும் சாமி, கோர்ட்டு வாசலில் இருந்திடும் சாமி, கொடுத்ததை மறைத்திடும் குட்டிச் சாமி, கிருமிக்கூடாய் ஆகிடும் சாமி என்று எத்தனை எத்தனையோ வகையினர் உளர். வடக்கே நடைபெறும் கும்பமேளாக்களின்போது, தம்பி! இந்தச் சாதுக்கூட்டம் கோலாகலமாகப் பவனி வருவதுண்டு. பல்லக்கில் ஏறிடும் சாமி, குதிரை ஏறிடும் சாமி, யானைமீது அம்பாரி அமைத்து அதிலே பவனி வந்திடும் சாமி, உடலை மறைத்திட உடை தேடாது, உள்ளது காண்க என உலவிடும் சாமி, முகாம் அமைத்து முழங்கிடும் சாமி, யாகம் வளர்த்திடும் பெரிய சாமி இவ்விதம் பலர் அரசோச்சுகின்றனர், அந்தக்கும்பமேளாக்களில். உடை அணியா உருவங்களைத் தெரிசிக்க, விழுந்தடித்துக்கொண்டு செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்களில் சிலர், இடிபட்டு மிதிபட்டுச் செத்தனர் என்றும் செய்தி வந்திருக்கிறது.

உள்ளதில் கெட்டது எதுவோ அது மட்டுமே உன் கண்களில் படுகிறது; உண்மைச் சாதுக்களே இல்லையோ என்று என்னைக் கேட்பர், தம்பி! நான் சொல்லக்கூடியது இதுவே. உண்மைச் சாதுக்கள் மிக மிகக் குறைவு, உடையார் சாதுக்களாக உள்ளோரே மிக அதிகம்; உண்மைச் சாதுவைக் கண்டறிவதும் கடினம் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்ற கிழமைதான் பேசியிருக்கிறார்—திருத்தணியில் என்று நினைக்கிறேன்.

உண்மைச் சாதுவைக் கண்டுபிடிக்கிறோம் என்றே வைத்துக்கொள். அவர்கள், நந்தா கூறிடும் வேலைகளையா மிக முக்கியமானது எனக் கருதுவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பின் தன்மை, மகிமை ஆகியவற்றிலே மனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கும் சாதுக்களிடம் நந்தா, நியாய விலைக்கும் அநியாய விலைக்கும் உள்ள தாரதம்மியத்தைப் பற்றியும், சந்தைக்கும் கள்ளச்சந்தைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்தறிந்து நல்வழி காட்டுக! என்று கூறினால் என்சொல்வர்! ‘பாலகா! உலக மாயை எனும் இருளில் சிக்கிச் சீரழிகிறாய்! சந்தை என்கிறாய் கள்ளச் சந்தை என்கிறாய்! பொருள் என்கிறாய் விலை என்கிறாய்! இந்த உலகமே சந்தை! கள்ளச் சந்தை! மாயச்சந்தை! பரம்பொருளன்றி மற்றவை பொருளே அல்ல! இதனை அறிந்திட நீ தரவேண்டிய விலை நிராசை! போ! போக போகாதிகளில் ஈடுபடும் சுபாவத்தை மாற்று! இந்திரியச் சேட்டைகளை அடக்கு! இகத்தை மற! பரத்தைத்தேடு! ஓம் தத்சத்!’ என்று கூறுவரேயன்றி, ஒயிலூர் கடைத் தெருவில் ஒன்பதாம் நம்பர் கடையில் அறுபது மூட்டை சீனியை ஒளித்து வைத்திருக்கிறான் கங்காதரன் என்ற தகவலைச் சேகரித்துக்கொண்டு வந்து தருவார்களா!

உண்மைச் சாது இந்த உலக விவகாரத்தில் தன்னைச் சிக்கவைத்துக் கொள்ளமாட்டார்.

சிக்கவைத்துக்கொண்டு சீர்செய்வேன் என்று செப்பிடும் சாது உண்மைச் சாதுவாக இருந்திட இயலாது.

என்றாலும், குல்ஜாரிலால் நந்தா மெத்த நம்புகிறார், சாதுக்கள் படை திரண்டால் சகல கேடுகளும் ஒழிந்திடும் என்று அவ்வளவு நம்பிக்கை துளசியின் மகிமையில்! வீசுகிறார் பகைவன் நுழைந்திடும் பாதையில்.

தம்பி! உங்கள் அண்ணாதுரைக்குச் சாது சன்னியாசிகள் என்றாலே பிடிக்காது, அதனால் இதுபோலக் கூறுகிறான் என்பர் சிலர்.

நான் கூறியிருப்பதைவிட வேகமாக, வெளிப்படையாக, சாதுக்களைப் படைதிரட்டும் ஏற்பாட்டினைக் கண்டித்துச் சிந்தனையைத் தூண்டிச் செம்மைப்படுத்தத்தக்க சீரிய முறையில் இந்தக் கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், நயனதாரா சாகால் என்பார் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

திருமதி விஜயலட்சுமி பண்டிட் திருமகளார் ஒருவருக்கு நயனதாரா என்று பெயர்; கட்டுரையாளர் அவர்கள் தான் என்று எண்ணுகிறேன்.

துணிவும் தெளிவும் துள்ளுகிறது நயனதாராவின் கட்டுரையில்! இடித்துரைக்க ஏளனத்தையே கருவியாக்கிக் கொண்டுள்ளார். இலட்சிய மணமும் கமழ்கிறது கட்டுரையில்; புத்துலகம் காணவேண்டும் என்ற துடிப்பு பளிச்சிடுகிறது.

எந்த நவயுக உலகில் ஓரிடம் பெற நாம் போராடிக்கொண்டு வந்தோமோ, அந்த உலகு வேகமாக, வண்ணம் மிகக்கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிறது—ஜெட்விமான வேகத்தில் செல்கிறது. வேறெந்தக் காலத்தைக் காட்டிலும் நன்மை மிக அதிகமாக அறைகூவி அழைத்திடும் இந்தக் காலத்-
தில், உலக கிருகத்தில், விஞ்ஞானம் புரட்சியை—ஏற்படுத்தியபடி இருக்கிறது; இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆகிக்கொண்டு வருகின்றனர், எங்கெங்கும் உள்ள மக்கள்—ஆனால், நாம் அல்ல! நாம் மீண்டும், பழய கட்டைவண்டிக் காலம் போதுமென்ற நினைப்புக் கொண்டு, கர்நாடக யுகத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கிவிட்டோம்—பின்னோக்கி!! மூடு பனி விலகுகிறது தற்காலிகமாகத் தேசிய அரங்கிலே புதிய நட்சத்திரமாக, சாது வந்துள்ளார், காண்பீராக!!

துவக்கமே தம்பி! துணிவு துள்ளும்விதமாக அமைந்து விடுகிறது.

கட்டைவண்டிக் காலம்
பின்னோக்கிப் பயணம்
கர்நாடக யுகம்

என்று இடித்துரைக்கிறார், நயனதாரா. கடுமையான கோடை வெப்பத்தைத் தணித்திடும் பூங்காற்றுப் போல, ஒதியமரங்களுக்கு மத்தியில் ஓர் சந்தனத் தருபோல, ஓட்டை ஒடிசல்களுக்கு மத்தியில் கிடந்திடும் ஓர் நல் முத்துப் போல, பழமை, பண்டைப்பெருமை, பரதேசிகளின் பரிபாலனம் என்பனபற்றி எல்லாம் பெரிய இடத்துள்ளார் பேசிடும் இந்த நாட்களில், உலகம் விஞ்ஞானத்தின் உன்னதத் தன்மையினைத் துணைகொண்டு வேகமாக, முன்னேற்றப் பாதையிலே செல்கிறதே, உதவாக்கரைகளே பெற்றதையும் இழந்துவிடும் பேதைமைபோல, அடைந்துள்ள ஓரளவு முன்னேற்றத்தையும் இகழ்ந்துவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறீர்களே! கட்டை வண்டிக் காலத்தின்மீது மீண்டும் மோகமா? என்று கேட்கிறார். கோபம் பொத்துக்கொண்டுதான் வரும், பழமை விரும்பிகளுக்கு. அதிலும் இடித்துரைப்பது என் போன்றவன் எனில், எரிதழலாகுவர். ஆனால், கட்டுரையாளரோ, நானல்ல.

பின்னோக்கி நடத்திடும் இந்தப் பயணத்தில் ஒரு கட்டம் சென்றிடுவோம்—நமது நிர்வாகத் துறைகளிலே சாதுக்கள் வேலைக்கு அமரும் கட்டம்!

நமது வெளிநாடுகள் குறித்த விவகாரத்துறையிலும்!! என்று கூறிக் கேலி செய்கிறார் நயனதாரா.

போகிற போக்கைப் பார்த்தால் இவ்விதந்தான் இருக்கிறது என்பதைச் சிலரேனும் உணர முடிகிறது. பற்றற்றவர்கள் சாதுக்கள், இவர்களைப் பரிபாலனத் துறையில் ஈடுபடுத்தினால், ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம் போன்றவைகள் நெளியாது என்றும் எண்ணிடத் தோன்றும். ஊழலையும் ஒழுங்கீனத்தையும் இலஞ்சத்தையும் முறைகேட்டினையும் கண்டறிந்து ஒழித்திட வல்லவர்கள் சாதுக்களே என்ற எண்ணம், வளர வளர ஊழலைச் செய்திடுவோர் எவர்? சம்சாரிகள்! ஏன்? அவர்கள் ஆசைக்கு ஆட்பட்டவர்கள்! ஆசைக்கு ஆட்பட்டவர்கள் வேலைகளில் உள்ள மட்டும், ஊழல் இருக்கத்தான் செய்யும் எனவே, ஆசைகளைத் துறந்த சாதுக்களை, சர்க்கார் அதிகாரிகளாக்கிடுவோம்—ஊழல் ஏற்பட வழியே எழாது என்ற எண்ணம் உருவாகிடத் தான் செய்யும். எங்கும் எவரும் இதுபோல எண்ணிட மாட்டார்கள் என்றுரைப்பர், தம்பி! இதுபோல எண்ணியது மட்டுமல்ல, இதற்கொப்பான ஒரு ஏற்பாட்டையே மேற்கொண்டார் இங்கிலாந்து நாட்டில் கிராம்வெல் எனும் பட்டமற்ற மன்னன்—பாதுகாவலன்.

பொருளாசை கொண்டோர் புனிதப் பணியாற்றிட மாட்டார்கள்—புனிதப் பணியாற்றி வரும் பாதிரிமார்களைக் கொண்டே ஆட்சி முறை கண்டிடல் வேண்டும். அவர்களே அறநெறி அறிந்துரைப்பர், அப்போதுதான் அறநெறி வழுவாத நிலை ஆட்சியிலும் சமூகத்திலும் இருக்கும் என்று திடமாக நம்பிய கிராம்வெல், பாராளு மன்றத்தைத் திருத்தி அமைத்தார்-பாதிரிமார் பார்லிமென்ட் என்றே பெயரிடப்பட்டது அதற்கு; வரலாறு.

எனவே, சாதுக்களைச் சர்க்கார் நடத்திட அழைப்பாரோ! என்று கட்டுரையாளர் கேலிக்காக இதுபோல் கூறுகிறாரே என்று ஐயம் கொள்ள வேண்டாம். தங்கு தடையின்றி, கேட்பார் மேய்ப்பாரின்றி, இந்தப் பின்னோக்கிச் செல்லும் பயணம் மேற்கொள்ளப்படுமானால், கட்டுரையாளர் குறிப்பிடும் கட்டம் பிறந்திடக்கூடும். கிராம்வெல் செய்தே பார்த்தார். நடந்தது என்னவெனில், ஆட்சி மன்றத்தில் அமர்ந்ததும், பற்றற்ற பாதிரிமார்கள் தத்தமது விருப்பு வெறுப்பினைக் காட்டிடவும் அதற்காக வாதிடவும், போரிடவும் முனைந்து பாராளுமன்றத்தைப் படுகளமாக்கிவிட, கிராம்வெல் கலக்கமும் துக்கமும் கொண்டு, அந்தப் பார்லிமெண்டையே கலைத்துவிட்டு, புனிதப் பணியாற்றிடப் பழையபடி ஆலயம் சென்றிடுக என்று அவர்கட்குக் கூறி அனுப்பிவிட்டார். உளவறியும் படை, போலீஸ் படை, கட்சித் தொண்டர் படை ஆகியவைகளால் சாதிக்கமுடியாத செயலைச் செய்திடச் சாதுக்கள் படையினால் முடியும் என்று நம்பிடும் நந்தா, அதே சாதுக்களால் மட்டுமே ஒழுங்கான, ஊழலற்ற ஆட்சி நடத்தமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்ள ஏன் தயங்கப்போகிறார்? அதனால்தான் கட்டுரையாளர் கூறினார், இனி, சர்க்காரின் நிர்வாக அலுவலகங்களில், —வெளிவிவகாரத் துறையிலும்-சாதுக்களே நியமிக்கப்படும் காலக்கட்டம் பிறந்திடக்கூடும் என்று.

மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், ஆசியப் பகுதியில் உள்ள சில முக்கியமான தூதராலயங்களிலும், சாதுக்களே கொலுவிருக்கக்கூடும்—எதிர்காலத்தில்—பழமையை நோக்கி நடந்திடும் எதிர்காலத்தில்!

என்று கூறியிருக்கிறார், கட்டுரையாளர்.

முற்போக்காளர்கள், இதனை ஏளன மொழி என்பர்; ஆட்சிப் பொறுப்பில் உள்ளார் இதனை எரிச்சல் மூட்டும் பேச்சு என்பர்; கேலி செய்து அறிவு புகட்டும் நேர்த்தியான முறையிலே அமைந்த பேச்சு இது என்று நான் கருதுகிறேன்.

சாதுக்கள் இவ்விதம் சகல துறைகளையும் நிர்வகிக்கக் கிளம்பிடும் போக்கை வகுத்திட முற்படுவது பிற்போக்குத்தனம் என்று கண்டித்திடும் இக்கட்டுரையாளர், இன்று சகல துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ள நிர்வாக முறை சிறந்ததாக இருக்கிறது என்று கூறவில்லை—அதிலே காணப்படும் தவற்றையும் கண்டிக்கிறார்—கேலி மொழியால்.

சாதுக்களை வெளிநாடுகளில் தூதராலயங்களில் நியமிப்பது நல்லதுகூட
என்கிறார். இதென்ன, சாதுக்களை நியமிக்கலாம் என்று பரிந்துரைப்பதுபோல் தோற்றமளிக்கிறதே இந்தப் பேச்சு என்று எண்ணி ஆயாசப்படுவீர்கள். ஆனால், இன்றுள்ள நிலையைக் கேலி செய்யவே இது போல் கூறுகிறார்.

இன்று தூதராலய அதிபர் தூங்கி விழுகிறாரல்லவா, தாம் அளித்திடும் விருந்துகளின்போது, அதனை விட மேலாக இருக்குமல்லவா, சாது, அதிபர் ஆனால்! ஆசியப் பகுதியிலே வேலை பார்க்கச் சொன்னால் மறுத்துவிடுகிறார் அல்லவா, தூதராலய அலுவலர்; மனைவி, பாரிஸ் அல்லது ரோம் நகரில் வாழ்ந்திடவே விரும்புகிறார் என்ற காரணத்துக்காக, அதைவிட மேல்தான், சாது தூதராலய அலுவலராகிவிடுவது.

சாதுவுக்குக் குடும்பம் இல்லை, எனவே, சுக வாழ்வுபற்றிய நினைவு எழக் காரணமில்லை.

விருந்தளிக்கமாட்டார்; வாழ்க்கைச் சுவையால் வசீகரிக்கப்பட்டு வீழ்ந்திடமாட்டார். ஏனெனில், வாழ்வே மாயம்! என்பதல்லவா, சாதுவின் சித்தாந்தம்!!

கடுங்குளிர் தாக்கிடும் இடங்களில் மட்டுமே சாது அதற்குத்தக்க உடை அணிந்திடுவார்; பருவமாற்றத்தின் விளைவுகளையும் கட்டுப்படுத்திவிடுவாரேல், உடைச் செலவும் இல்லை! சர்க்கார் பணம் விரயமாகாது.

நிர்வாகத் துறையில் சாது இடம்பெற்று விடுவாரானால், மகத்தான மாறுதல் ஏற்படுத்தி விடுவார்—நாட்டவர் அனைவரும் சமாதி நிலை அடைவர்!

விழித்தெழுந்திடும்போது, செத்துக்கிடப்போம், அல்லது நாம் சமாதி நிலையில் இருந்த போது நாட்டைப் பிடித்துக்கொண்ட வேற்றவரின் காலின் கீழ் சிக்கிக்கிடப்போம். இருப்பினும், சாது மனப்போக்கின் காரணமாக இதனைப் பொருட்படுத்த மாட்டோம்; நடப்பது நிசமல்ல, நமக்கல்ல என்று எண்ணிக் கொள்வோம்.
இவ்விதமாகத் தம்பி! இன்றுள்ள நிலையையும், எதை நோக்கி நாம் இழுத்துச் செல்லப்படுகிறோமோ அந்த நிலையையும், மாறிமாறித் தாக்குகிறார்; முரட்டுத்தனமான தாக்குதல் அல்ல; மிக நேர்த்தியான முறையில்; உயர்தரமான நையாண்டி நடையில்.

உணவுப் பிரச்சினை குறித்துக் காங்கிரஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை சரியானதாக, பலன்தரத்தக்கதாக இல்லை என்ற கருத்தினையும் கட்டுரையாளர் விளக்கிவிட்டு, அதன் தொடர்பாக, சாதுக்கள் பற்றிய நையாண்டியை மேலும் தருகிறார்.

உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தநேரம், சாதுக்களை நாம் நாடிடப் பொருத்தமான நேரமே! உணவு நெருக்கடி போக்கிட உற்பத்தியைப் பெருக்குவது, இறக்குமதி செய்வதுகூடத் தேவைப்படாதல்லவா! (உபவாசம் இருந்திட) உணவு தேவை இல்லை என்று கூறிடத்தக்க நினைப்பு அருளுவர் சாதுக்கள்!!

சாதுக்களை நாடி அவர் துணையுடன் துரைத்தனம் நடத்த முனைந்து விட்டோமானால் உலகில் நமது நாட்டுக்குத் தரப்பட்டுள்ள இடம் என்ன என்பது பற்றியோ, காமன் வெல்த் மாநாட்டிலே நாம் பின்வரிசையில் தள்ளப்பட்டுக் கிடந்திட நேரிட்டது பற்றியோ, உலக நாடுகளிலே நமக்கு உற்ற நண்பர்களாக அதிகம்பேர் இல்லை என்பது பற்றியோ ஆப்பிரிக்க பூபாகத்தில் சீனா பாசவலை வீசுவது பற்றியோ, காஷ்மீர் குறித்துத் தான் கொண்டுள்ள போக்கே நியாயமானது என உலகினை நம்பவைத்திடப் பாகிஸ்தான் எல்லா விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவது பற்றியோ நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்! உலகம் உண்மை என்று எண்ணுபவர்கள் இவைபற்றி எண்ணிக் கவலைப் படட்டும். (சாதுக்களால் நடத்திச் செல்லப்படும் நிலைபெற்ற) நமக்கு உலகம் வெறும் புகை! மாயம்! உலகை மறந்திடுவோம். உலக விஷயம் குறித்து எண்ணிக் காலத்தை வீணாக்குவானேன்!!

இவ்விதம் கிண்டல் செய்கிறார் நயனதாரா! சாதுக்கள் ஒரு நாட்டின் அரசினை நடத்திச்செல்ல இடமளித்தால் மக்கள் என்ன கதி பெறுவர் என்பதனை எடுத்துரைக்கிறார்.

உலகம் மாயை, வாழ்வு அநித்யம் என்ற நம்பிக்கையும், உண்டு உலவிட வேண்டும் என்று எண்ணாமல் உபதேசம் கேட்டுச் சமாதிநிலை அடைய வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட சமூகமாக்கப்பட்டு விடுவோம், சாதுக்களைத் துரைத்தனம் நடத்தச் சொன்னால் என்பதனை எடுத்துரைக்கிறார். பிறகு சாதுக்கள் உண்மையாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல தொண்டாற்ற விரும்பினால், அதற்கு ஏற்ற இடம், நிர்வாகத்துறை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். என்னென்ன செய்யலாம் இந்தச் சாதுக்கள் என்பது பற்றியும் கூறுகிறார்.

இந்து மார்க்கத்தில் மூண்டுவிட்டுள்ள அழுக்குக் குட்டைகளை ஒழித்திடப் புனிதப் போர் தொடுக்கட்டும்,

திருக்கோயில்களிலே ஊழல் ஆட்சி நடத்தும் பூஜாரிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தட்டும்.

மார்க்கத்தைத் தவறான வழியிலே நடத்திச் செல்வதை, வறுமை, அறியாமை ஆகியவற்றின் பிடியிலே சிக்கியுள்ள மக்களைச் சுரண்டிடும் கொடுமையைக் கொதித்தெழுந்து எதிர்த்திடட்டும்.

தீண்டாமையை எதிர்த்துப்போரிடட்டும்!

தம்பி ! இந்த அளவுக்குத் துணிந்து நீயோ நானோ கூறினால், எத்தனை ஆத்திரம் பீறிட்டுக்கொண்டுவரும், பழமை விரும்பிகளுக்கு, எண்ணிப்பார்! மதத்திலே ஊழல்கள் நெளிகின்றன, போக்குவார் இல்லை; சுரண்டல் நடக்கிறது, தடுப்பார் இல்லை; மூடத்தனம் மூடுபனியாகக் கிடக்கிறது, அறிவு ஒளி அளித்திடுவார் இல்லை. சாதுக்கள் இந்த நிலையை மாற்றிடப் புனிதப்போர் புரிந்திடவேண்டும்; அதற்கு ஏற்றவர்கள் அவர்கள் என்ற கருத்துடன் கட்டுரையாளர் எழுதுகிறார்.

மதத்துறையைவிட்டு வெளியே வேறு துறைகளிலும் சாதுக்கள் ஈடுபட விருப்பம் கொண்டால், நமது நகரங்களிலே உள்ள குப்பை, கூளம் அழுக்கு அனாசாரம் ஆகியவற்றைப் போக்கிடும் பணியினை மேற்கொள்ளட்டும்

என்கிறார். சாதுக்களுக்கும் கோபம்வரும், மார்க்கக் காவலர்க்கும் மன உளைச்சல் ஏற்படும்; என்ன அக்கிரமம் குப்பை கூளங்களை அகற்றிடும் வேலையையா செய்யச் சொல்கிறீர், மன அழுக்கைப் போக்கிட அவதரித்துள்ள மகான்களை என்று வெகுண்டுரைப்பர். என்ன செய்வது, கட்டுரையாளர் இவர்களின் கடும் கோபத்தைப் பொருட்படுத்துபவராகத் தெரியவில்லை, தயக்கம் தடுமாற்றமின்றி, அச்சம் கூச்சமின்றிக் கூறுகிறார்.

வீதிகளிலே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த,

சுவர்களிலே ஒட்டப்பட்டுக் கிடக்கும் ஆபாசச் சுவரொட்டிகளைக் கிழித்தெறிய,

வீதியிலே திரிந்து கொண்டிருக்கும் நாய்களை விரட்ட,

ஊருக்கு நல்ல குடி தண்ணீர் கிடைத்திடும் வழி தேட,

இந்தப் பணிகளில் ஈடுபட முன் வரட்டும் சாதுக்கள் என்று கூறுகிறார்.

நாடும் சமூகமும் நல்ல நிலைபெற, எதிர்காலம் ஒளிமிக்கதாக இருந்திட, விஞ்ஞானத்தின் துணைகொண்டு, இன்னலைக்கண்டு அஞ்சாத மனப்பான்மையுடன் பணியாற்றி முன்னேற்றம் காணவேண்டுமேயன்றி, சாது சன்னியாசிக் கூட்டத்திடம் கைகட்டி வாய்பொத்தி நின்று, காட்டுமிராண்டிக் காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றிடக் கூடாது; நேரு பண்டிதர் நமக்கு அளித்துச் சென்ற அறிவுரை அதுவே; அவர் காட்டிய வழி நடப்போம்; மக்கள் காண அவர் உரைத்த இலட்சியங்களைக் காட்டுவோம். முன்னேற்றப் பாதையிலே நாம் நடைபோட நமக்கெல்லாம் துணிவு அளித்த நேருவின் உருவத்தை மக்கள் காணட்டும், கர்நாடகக் காலத்துக்கு நம்மைத் தள்ளிச் செல்லும் சாதுக்களின் உருவத்தை அல்ல—என்று மிக உருக்கமாகக் கூறுகிறார். நந்தாவின் உள்ளம் நொந்துபடும்—சாதுக்கள் கோபித்துக் கொள்வர் என்றாலும் உள்ளத்தில் பட்டதை உரைத்திடுவேன் என்கிறார் கட்டுரையாளர்.

தம்பி! சாது சன்யாசிகளைப் படைதிரட்டி, நாட்டிலே நெளியும் கேடுகளை ஒழித்திடப் போரிடும்படி நந்தா கூறுவது கேட்டு, முற்போக்காளர் அனைவரும் நயனதாரா வெளியிட்டது போன்ற கருத்தினையே பெறுவர், கவைக்குதவாத திட்டமாக இருக்கிறதே உள்துறை அமைச்சர் தீட்டியது என்று எண்ணிக் கவலை கொள்வர்.

தம்பி! எத்தகைய படையிடம் எத்தகைய போர் வகையைத் தந்திட வேண்டும் என்றறிந்து அவ்விதம் செய்தால் மட்டுமே, வெற்றி பெற்றிட முடியும் என்று கூறினேன்—நந்தா திரட்டிடும் சாதுக்கள் படை ஊழல் இலஞ்ச ஒழிப்புக்கு ஏற்றது அல்ல என்பதனை விளக்கிக் காட்டியுள்ளார் நயனதாரா.

சிற்சில காலத்தில் சிற்சிலருக்கு, கேடு களைந்திட வேண்டும் என்பதிலே ஆர்வம் எழுகிறது, செயல்பட முனைகின்றனர். ஆனால், அவர்கள் மேற்கொள்ளும் முறையும், திரட்டிடும் படையும் பயனற்றதாகி விடுவதால் வெற்றி கிடைப்பதில்லை.

இத்தாலி நாட்டிலே ஓர் காலத்தில், சமூகம் முழுவதும் கேடுகள் மிகுந்திருந்தன. ஒழுக்கம் அழிக்கப்பட்டுக் கிடந்தது. இதனைக் கண்டார், வேதனை மிகக் கொண்டார், இந்த நிலையினை மாற்றியாக வேண்டும் எனத்துடித்தார், செயலில் ஈடுபட்டார் ஒரு சிலர்.

அவருடைய ஆர்வம் போற்றிடத் தக்கது—ஐயமில்லை.

அவருடைய அறிவுரையை மறுப்பார் எவரும் இருந்திட முடியாது. அருளாளர் என்றும் அவரைக் கொண்டாடினர். பெயர் சவனரோலா.

பொய்யும் புரட்டும் ஒழிந்திட, அநீதியும் அக்கிரமமும் அழிந்துபட, புனிதப்போர் தொடுத்தார் சவனரோலா! படை திரட்டினார் அப்புனிதப் போருக்காக.

படை எது தெரியுமா? தம்பி! சன்மார்க்கத்தை மதித்திடும் ஆர்வமிக்க தொண்டர் படை. போர் முறை?

கருப்புடை அணிந்து வலம் வருவர், புனிதப்போர் நடாத்திடும் படையினர் நகரத் தெருக்களில்—வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு கதறியபடி.

தர்மம் அழிகிறதே தடுப்பார் இல்லையோ!
அக்ரமம் நெளிகிறதே அழிப்பார் இல்லையோ!
நீதி சாய்கிறதே, கேட்பார் இல்லையோ!

என்றெல்லாம் புலம்பியபடி வலம் வருவராம்.

வெற்றி கிட்டியதா என்றுதானே கேட்க விரும்புகிறாய் தம்பி! எப்படிக் கிட்டும்! அக்கிரமக்காரன் தான் கண்ணீர் கண்டு கலங்கமாட்டானே! இதயம் இருந்தால் தானே, இளக! உள்ளம் உறங்காதிருந்தால்தானே, உருக!! சவனரோலாவின் படை, பார்ப்போருக்கு இரக்க உணர்ச்சியை மட்டும் தந்திட உதவிற்று. சமூகக் கேடுகள் ஒழிந்து பட உதவவில்லை.

நந்தா உருகுகிறார், உள்ளம் துடிக்கிறது. ஊழல் மலிந்து கிடப்பது கண்டு; ஆனால், அதனை ஒழித்திட அவர் மேற்கொள்ளும் முறை, எனக்குத் தம்பி! துளசியைப் பகைவன் நுழையும் வழியிலே வீசிவைத்த மன்னனையும், மாபாவிகளைத் திருத்த மாரடித்தழுதிடும் படையைத் திரட்டிய சவனரோலாவையுந்தான் நினைவிற்குக் கொண்டு வருகிறது. நான் கூற எண்ணிய கருத்துக்களை நயனதாரா என்பவர், எனக்கு ஏற்படக்கூடியதைவிட அதிகத் துணிவுடனும் தெளிவுடனும் எடுத்துரைத்தார்—நான் அதனை எடுத்துரைத்தேன்.

சாதுக்களை, தம்பி! நந்தா மனிதப் பிறவியிலிருந்து மாறுபட்டவர்கள் என்று எண்ணுகிறாரோ, அல்லது மேம்பட்டவர்கள் என்று கருதுகிறாரோ எனக்குத் தெரியவில்லை.

சாதுக்களின் இயல்பும் நடவடிக்கையும், நிலையும் நினைப்பும் எப்படி உளது என்பதைக் கண்டறிந்து உண்மையை உணர்ந்திடத்தக்க விதமாக, நந்தாவுக்கு சாதுக் கூட்டத்திடம் எத்தனை எத்தனை ஆண்டுகளாக நெருங்கிய நேசமிகு தொடர்பு உளதோ அதனையும் நானறியேன்.

ஆனால் ஆண்டு பல, சாது சன்னியாசிகளிடம் நெருங்கிய தொடர்புகொண்டு, தூய்மையைத் தேடிய, ஒருவர்—சாதுக்கள் குறித்துக் கண்டறிந்து கூறினது பற்றி முன்னம் நான் படித்திருக்கிறேன்.

சாது சன்னியாசிகள் என்றாலே கட்டோடு பிடிக்காதவரின் கருத்து அல்ல.

மதம் பொய், பூஜாரிகள் புரட்டர்கள் என்று எண்ணிடும் வழி தவறியவர்களின் வார்த்தை அல்ல. சீலம் பெறவேண்டும், அதனைப் பெற்றிட ஏற்ற இடம் சாது சன்யாசிகளின் சன்மார்க்கக் கூடங்களே என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அவர்களிடம் பயபக்தியுடன் நடந்துகொண்டு வந்தவரின், கண்டுபிடிப்பு, நான் குறிப்பிடுவது. குப்பை கூளங்களைக் கிளறி இந்த நாட்டு மதத்தை இழிவுபடுத்த வேண்டும் புனிதத் தன்மையைப் பாழாக்க வேண்டும் என்ற கெடுமதி கொண்டவரின் கலகப் பேச்சல்ல—இந்து மார்க்கத்தைத் தழுவிக்கொண்டு எல்லையிலாப் பரம் பொருளைக் கண்டிட ஏங்கித் தவித்திட்ட ஓர் அம்மையாரின் மனக் குமுறல் நான் குறிப்பிடுவது. அமெரிக்க நாட்டிலிருந்து இங்கு வந்த மேயோ அல்ல—பிரிட்டிஷ் நாட்டிலிருந்து இங்கு வந்து, இந்த நாட்டைத் தாயகமாக்கிக் கொண்டு, பேரையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்ட ஓர் மாதரசியின் கண்டன உரை. போன மாதக் கப்பலில் வந்து இறங்கிப் பத்து நாள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சீமை திரும்பிச் சென்று அரைகுறை அறிவினைக் காட்டிக் கொள்ளும் அவசரப் புத்திக்காரரின் அகம்பாவப் பேச்சு அல்ல. மீராபென் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, ‘இந்தியக் கோலத்தை’ப் பெற்றுக்கொண்டு, மகாத்மா காந்தியின் ‘சிஷ்யை’ ஆகி, அவருடைய ஆசிரமத்தில் இடம்பெற்று, ‘ஆத்ம சக்தி’யின் அருமையினை உணர்ந்து, அதற்கேற்றபடி தமது வாழ்க்கையினை ஒழுங்குபடுத்திக் கொண்ட உத்தமி என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் கொண்டாடி வந்த அம்மையாரின் கொதித்த உள்ளத்தில் இருந்து கிளம்பிய சொற்கள். சாது சன்னியாசிகளிடம் சர்வேசனைக் கண்டறியும் ‘பரம இரகசியம்’ இருக்கிறது, அவர்களின் உபதேசம் கேட்டு உயர்ந்திடலாம் என்று மீராபென், சாதுக்களைக் கண்டு வழிபடலானார். திருத்தலங்கள் பலவற்றிலே இருந்து வந்த சாதுக்களைத் தரிசித்தார்—ஜென்ம சாபல்யம் ஆகவேண்டும் என்பதற்காக. ஆனால் என்ன கண்டறிந்து கொண்டார்? அவரே கூறட்டும், தம்பி!

“1947ம் ஆண்டிலிருந்து 1950ம் ஆண்டுவரை, ரிஷிகேசத்துக்கு அருகிலுள்ள பசுலோக் எனும் இடத்தில் இருந்து வந்தபோது, சாதுக்கள் பிரச்சினையிலே உள்ள அசங்கியம் அவ்வளவையும் கண்டறிய வேண்டி வந்தது.

என் காதுக்கு எட்டிய விஷயங்களைக் கேட்டு நான் திடுக்கிடலானேன். தீர விசாரித்தறிவது என்
கடமை என்று உணர்ந்தேன். நான் அதுபற்றி விசாரிக்க விசாரிக்க மேலும் மேலும் அதிகமான அக்கிரமம், கொடுமைகள் நெளிவதைக் கண்டேன். சூதாட்டம், குடி, கூத்தி, கொலை இவைகளிலே மூழ்கிக்கிடந்தனர் சாதுக்கள். புனிதவான்களின் தலம் என்று மக்களால் நம்பப்படும் ரிஷிகேஸ் அரக்கர்களின் இருப்பிடம் என்பதை அறிந்து கொண்டேன்.

தம்பி! சாதுக்களைப்பற்றி, சாந்தமுனிவர் என்று சான்றோர் கொண்டாடிய காந்தியாரிடம் சிஷ்யையாக இருந்த மீராபென் கூறியது இது. பத்திரிகைகளில் அறிக்கையே வெளிவந்தது. இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் இது குறித்து எழுதிற்று, மீராபென் கூறுவது போலவே நிலைமை இருக்கிறது என்று. அந்த இதழின் ஆசிரியர் மகாத்மாவின் மைந்தர்—தேவதாஸ் காந்தி.

பூலோக மாயையிலிருந்து விடுபட்டு, சாலோக சாமீப சாயுச்யப் பதவி பெற்றிட, அநித்ய வாழ்வை அகற்றிக் கொண்டு நித்திய வாழ்வு பெற, நிலையில்லா இன்பத்தை உதறிவிட்டுப் பேரின்பம் பெற, மருள் மூட்டிடும் பொருளை எறிந்துவிட்டுப் பரம்பொருளைக் கண்டிட வழி கூறிடும் மகான்கள், காவி கட்டிய இந்தச் சாதுக்கள் என்று நம்பிச் சென்றார் மீராபென் அம்மையார்; சாதுக்களின் தலைமைப் பீடமோ என்று எவரும் எண்ணிடத்தக்க ரிஷிகேசத்துக்கு, அங்கு அம்மையார் கண்டது,

சூதாட்டம்
கற்பைச் சூறையாடல்
கொலை
குடிவெறி

தம்பி! ஆண்டு பலவற்றுக்கு முன்பு நான் எழுதிய ‘வேலைக்காரி’யில் கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக் கொடியவன் ஒருவன் சாது வேடமிட்டுக் கொண்டு ஆசிரமம் நடத்தி அங்கு அழகிகளை மலராகக் கொண்டு காமவேளுக்குப் பூஜை செய்து வந்தான்; அவனை உண்மைச் சாது என நம்பிக்கிடந்த ஒரு வாலிபன், யோகியாக வேடமணிந்து கிடந்தவன் போகி என்பதைக் கண்டறிந்து குமுறி, கொதித்தெழுந்து, கண்டனச் சொற்களை வீசினான் என்று எழுதியபோது, எத்தனை எத்தனை கண்டனம் என்மீது! எத்துணை எரிச்சல் கொண்டனர் பழமை விரும்பிகள். மீராபென் கூறிடும் நிலைமைக்கு என்ன பதில் கூறுவர்!

பத்து ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தேன். சாதுக்கள் உலகம் தன்னைத்தானே திருத்திக் கொள்ளும் என்று, அதற்கான நேர்மைமிக்க முயற்சி எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன்.

ஆண்டு பல கழித்து நான் ரிஷிகேஸ் செல்கிறேன் காண்பது என்ன? அவ்விடம் முன்பு போலவே பாபக்கூடமாக இருந்திடக் கண்டேன். பதறிப் போனேன். காவி உடையைக் காணவே சகிக்கவில்லை.

சாதுக்களின் ‘கோட்டம்’ எத்துணை தீமைகளின் பிறப்பிடமாக இருப்பிடமாக இருந்து வருகிறது என்பதனை எடுத்துக் காட்டியதுடன் விடவில்லை மீராபென்; இத்தகைய சாதுக்களை அரசு ஆதரிப்பது அக்கிரமம் என்பதையும் கூறினார்.

புனித ஸ்தலங்கள் என்பவைகளிலே புனிதவான்கள் என்று உலவிக்கொண்டுள்ள சாதுக்களைத் திருத்தி நல்வழிப்படுத்திட வேண்டிய அவசரப் பிரச்சினையைக் கவனியாமல், சர்க்கார் இந்தச் சாதுக்களை உற்சாகப்படுத்தி ஆதரவு காட்டுவது தவறு என்பது என் கருத்து.

இந்தக் கண்டனத்துக்குப் பிறகேனும் நிலைமை திருந்தியதா என்றால், இல்லை இதற்குப் பிறகும் கும்பமேளாக்களிலே உடையற்று உலா வருகிறார்கள் இந்தச் சாதுக்கள். அவர்களுக்குள்ளே அமளி மூள்கிறது! அருவருக்கத்தக்க தீயசெயல்களில் ஈடுபட்டனர் என்று சிலர் பிடிபடுகின்றனர்; தண்டனை பெறுகின்றனர். மற்றவர்களோ மகேசன் அருளால் நாம் பிடிபடவில்லை! என்று எண்ணி, பூஜா மாடத்தில் கோலாகல வாழ்வு நடாத்தியபடி உள்ளனர்.

ஒழுக்கக் கேட்டினை ஒழித்திடச் சாதுக்களைப் படை திரட்டி அனுப்புவதற்கு முன்பு நந்தா, சாதுக்களிடம் நெளிந்திடும் ஒழுக்கக் கேட்டினைப் போக்கிட வழி என்ன கண்டார், வெற்றி எந்த அளவு பெற்றார்! கரிக்கட்டையைக் கொண்டு உடலழுக்கைப் போக்கிட முனைகின்றாரே!! முறையா?

பாதையிலே காவி உடையினன் வரக் கண்டால், புரட்டன் வருகிறான் என்று மக்கள் உடனடியாக உணர்ந்து உரைக்கின்றனர். கண்மூடித்தனமாகச் சாதுக்களை வழிபட்டு வந்த, சாமான்யர்களுக்குக் கூட. சாதுக்கள் பற்றிச் சந்தேகங்கள் எழும்பிவிட்டன.

என்று எழுதுகிறார் மீராபென்; நந்தா மட்டும் துளியும் சந்தேகப்படவில்லை, சஞ்சலப்படவில்லை, சாதுக்கள் படை திரட்டிப் புனிதப் போர் நடத்தி வெற்றி காணலாம் என்று எண்ணுகிறார்!

இந்தப் படை கொண்டு எந்தப் புனிதத்தைக் காண்பாரோ நானறியேன்; ஒன்று மட்டும் புரிகிறது தம்பி! நந்தா உலவிடும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே, நகைத்துப் பேசிடும் விஷயமாகிவிட்டது இவர் சாதுக்களைப் படை திரட்டிடும் செயல்.

என்றாலும் அவர் அமைச்சர்-படை அமைக்கிறார்.

துளசியை வீசினானாமே மன்னன்! தடுத்திட முடிந்ததா, கேட்டிடும் துணிவு பிறந்ததா!

எனவேதான், தம்பி! நந்தாவின் இந்த முயற்சியைத் துணிவுடன் கண்டித்து எழுதிய நயனதாராவின் கட்டுரையைக் கண்டு, வியந்து பாராட்டினேன்—உன்னிடமும் கூறினேன்,


13-9-1964

அண்ணன்,
அண்ணாதுரை