தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010

காஞ்சிக் கடிதம் : 10

டில்லிக் கடிதம்



பத்திரிகை நிருபர்கள் மாநாடு: வினா—விடை

இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதையும் பரப்புவதையும் ஆட்சியாளர் விட்டுவிட வேண்டும்.

பக்தவத்சலனாரின் வேடிக்கைப் பேச்சு

எங்களுக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை

பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்.

தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாம்.

துக்க நாளில் வன்முறை எழக் காரணமாய் இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே.

இலால்பகதூரின் பேரப் பிள்ளை ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்பதாகக் கேள்வி.

தம்பி,

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி முடித்தவுடன் எழுதுகிறேன்-மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமலிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்து வேதனையுடன் எழுதுகிறேன். மொழிப் பிரச்சினையில் இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிற சிக்கல்களையோ, இந்திக்கு ஆதரவான அணியினர், ஒரு சாதகமான, சமரசச் சூழ்நிலை எழவிடாதபடி தடுக்க, வன்முறைக் கிளர்ச்சிகளையும், அமளிகளையும் தென்னகம் மேற்கொண்டு விட்டிருக்கிறது என்பதைக் காட்டி வாதாடி, சிக்கலை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதனையோ, மொழிப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, மிக மிகப் பொறுப்புணர்ச்சியும் பொறுமை உணர்ச்சியும் தேவைப்படுகிறது என்பதனையோ உணர மறுத்து மாணவர்கள் இவ்விதமான போக்கினை மேற்கொண்டிருப்பது, தாங்கிக்கொள்ள முடியாத வேதனை தருகிறது. நாவலர் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இன்று மாலை வானொலி மூலம் அறிந்து ஆறுதல் அடைந்தேன். அவர் கேட்டுக்கொண்டது போலவே நானும் மாணவர்களைக் கேட்டுக்கொள்வதாக இதழ்களில் அறிக்கை வெளியிடும் படிக்கேட்டுக்கொண்டேன்.

இங்கு, நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில், நான் பேசியதில், தொடர்பு—பொருத்தம் நீக்கிச் சில பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் பேசியது குறித்தும், அதற்கு மதியழகனும் தாமும் தக்க விளக்கம் அளித்ததுபற்றியும் நாவலர் கூறக்கேட்டேன்.

என் பேச்சிலே துண்டு துணுக்குகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் விளையாடுவது இது முதல் தடவை அல்ல; ஒவ்வொரு தடவை அவர்கள் இந்த விதமான விளையாட்டிலே ஈடுபடும்போதும், “இதோடு தொலைந்தான் பயல்! இதோடு கழகம் ஒழிந்தது!” என்று எக்களிப்புக் கொள்ளுவதை நாடு நன்கு அறியும்.

“உங்கள் அண்ணாதுரை இந்திக்குச் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டு விட்டான், தெரியுமா!” என்று முன்பு ஒருமுறை காங்கிரஸ் தலைவர்கள் மேடை தவறாமல் பேசியது எனக்கு நினைவிலிருக்கிறது. சட்ட சபையிலே நான் திட்டவட்டமாக, நான் அவ்விதம் கையெழுத்துப் போட்டேனா? என்று கேட்டபோதுதான், அப்போது அங்கு அமைச்சராக இருந்த சுப்பிரமணியம், “இல்லை! கையெழுத்துப் போடவில்லை” என்று தெரிவித்தார். அதுவரையில் ஒரு பத்துநாள், விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு தனிச்சுவை! அனுபவித்துவிட்டுப் போகட்டும்.

மொழிப்பிரச்சினையிலே உள்ள சிக்கலைப்பற்றியும், தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருப்பதையும், அது குறித்துத் தக்கவிதமான கவனம் செலுத்தாமல், மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இருப்பதையும் எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, காங்கிரஸ் தலைவர்கள் செய்வதுபோன்ற விளையாட்டிலே ஈடுபட நேரமுமில்லை, நினைப்பும் எழவில்லை.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பேசினேன். பலன்? என்ன கிடைக்கும் என்று எனக்கே தெரியவில்லை. லால்பகதூர் அவர்களின் பேச்சிலே, இதுபற்றிக் குறியும் தென்படவில்லை; கோடிட்டும் காட்டவில்லை. இந்த நிலை இங்கு, ஆளவந்தார்களின் அணியில்.

ஆனால், முன்பு நான் புதிய திருப்பம் என்ற கட்டுரையில், குறிப்பிட்டுக்காட்டிய ‘சூழ்நிலை’ பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளில் தெரிகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நந்தாவைக் கண்டு, மொழிப்பிரச்சினையில் ஒரு நல்ல தீர்வு கண்டாகவேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். இரண்டொருவர் அதுபற்றி என்னிடமும் பேசினார்கள் நம்பிக்கையுடன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தச் சமயம் பார்த்து அழித்துவிட, காங்கிரசிலே சிலர் துடியாகத் துடிக்கிறார்கள் என்பதற்கும் குறிகள் தென்படுகின்றன.

மாநிலங்கள் அவையிலே நான் பேசிய தன் முழுவடிவம் கிடைக்கப் பெற்றிருக்கக்கூடும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள இதழ்கள் கூடுமானவரையில் இந்தப் பேச்சை வெளியிட்டிருக்கின்றன— அந்தந்தப் பத்திரிகை மேற்கொண்டிருக்கும் கொள்கைப் போக்கிற்கு ஏற்பத் தலைப்புகளிட்டும்-வெட்டி ஒட்டியும்-வெளியிட்டன. இது இயற்கை என்பது புரிவதால் எனக்கு எரிச்சல் எழவில்லை.

முதலமைச்சர் அளிக்கும் விளக்கம், சில இதழ்களில் முதலமைச்சரின் உறுதி என்ற தலைப்பிலும், வேறு சில இதழ்களில் முதலமைச்சரின் பிடிவாதம் என்ற தலைப்பிலும் வெளிவருவது காண்கிறோம் அல்லவா ? அது போல, அவரவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற தலைப்புகளுடன், என் பேச்சை இதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு இதழும், அடியோடு இருட்டடிப்புச் செய்துவிடவில்லை.

இந்தப் பேச்சினால் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலை காரணமாகத்தான் பத்திரிகை நிருபர்கள் மாநாடு நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

பத்திரிகை நிருபர்கள் மாநாடு என்றால், நாம் சொற்பொழிவு நடத்த நடத்த, நிருபர்கள் குறிப்பு எடுத்து, இதழ்களில் வெளியிடுவது என்பதல்ல. பல இதழ்களின் நிருபர்கள் வருகிறார்கள்; கேள்வி மீது கேள்வியாகத் தொடுத்தபடி இருக்கிறார்கள்; அவற்றினுக்கு நாம் அளிக்கும் பதில்களைக் குறித்துக்கொண்டு போய், தத்தமது இதழ்களில் எந்தப் பகுதி தமக்குத் தேவை என்று அவர்களுக்குத் தென்படுகிறதோ அவைகளை வெளியிடுகிறார்கள்.

அன்று நடந்த நிருபர்கள் மாநாட்டில், எனக்குத் துணையாகத் தோழர் செழியன் இருந்தார்; அவருடைய இல்லத்தில்தான் நடைபெற்றது மாநாடு.

முப்பது நிருபர்கள் இருக்கும் வந்திருந்தவர்கள்; ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவே நடைபெற்றது.

இத்தகைய நிருபர்கள் மாநாட்டில், மடக்குவது, குறுக்கிடுவது போன்ற முறைகளில் தேர்ச்சி பெற்ற நிருபர்களிடம், மிகத் தெளிவாகவும், அதிகமான பரபரப்புக் காட்டாமலும் பேசவேண்டும். அன்று நான் நடந்துகொண்ட முறை குறித்து விவரமறிந்தவர்கள் பாராட்டியது கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், நான் அப்போதே, திருமதி செழியனிடம் சொன்னேன், “எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தமிழ் நாட்டில் சில இதழ்கள், அண்ணாத்துரை இந்தியைப் பரப்ப ஒத்துக் கொண்டான்” என்று மட்டும் வெளியிடும், பாருங்கள்” என்று சொன்னேன், இதழ்களின் போக்கு எனக்கும் தெரியுமல்லவா! நானும் ஒரு பத்திரிகை நடத்துபவன் தானே!! நான் கூறியபடியேதான் சில இதழ்கள் வெளியிட்டன. முதலமைச்சர் பக்தவத்சலமும் அதை வைத்துக் கொண்டுதான் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.

இதுவும் ஒரு நல்லதற்கே பயன்படுகிறது; ஏனெனில், அன்று நடைபெற்றது முழுவதையும் எழுத ஒரு தூண்டுகோல் கிடைத்திருக்கிறது! நிருபர்கள், எவரெவர், என்னென்ன கேள்விகளை, என்னென்ன நோக்கத்துடன் கேட்டனர் என்பதனையும், அவற்றினுக்குப் பதில் அளிக்கும் முறையில் நான் என்னென்ன கருத்துக்களை எடுத்துக் கூறினேன் என்பதனையும் கூறிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.

இந்து இதழிலே மட்டும், குத்திக் கிளறி ஒரு நிருபர் கேட்டபோது அறைகூவலாக அண்ணாதுரை, இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதை சர்க்கார் விட்டு விட்டு, சர்க்கார் முன்னின்று இந்தி பரப்புவதை விட்டுவிட்டு, மக்களின் அமைப்பே இந்தியைப் பரப்ப முனைந்து, என் உதவியை நாடினால், செய்கிறேன் என்று கூறினார் என்று வெளியிட்டிருக்கிறது.

இந்து வெளியிட்டிருக்கிற முறையிலிருந்து, (1) சர்க்கார் இந்தியை ஆட்சி மொழியாக்குவதை விட்டுவிட வேண்டும் (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் முனையக் கூடாது என்பவைகளை நான் வலியுறுத்தி இருப்பது நன்கு விளங்கும்.

நமக்குத் தேவை, (1) இந்தியை ஆட்சிமொழி ஆக்கும் முயற்சியை சர்க்கார் கைவிட்டுவிட வேண்டும் என்பது (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் தனி அக்கறை காட்டும் போக்கும் நிறுத்தப்பட வேண்டும் என்பது. இந்த இரண்டும் சர்க்காரால் கைவிடப்பட வேண்டும்; ஐயா! இதனைச் செய்ய உம்மால் முடிந்து, செய்துவிட்டு வந்தால், பிறகு இந்தி பரப்புவதற்கு உதவி கேளும், செய்கிறேன் என்று நான் கூறியிருக்கிறேன்.

என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர், சாஸ்திரி சர்க்காரிடம் பேசி, இந்தி ஆட்சிமொழி ஆக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடச் செய்யவேண்டும் முதலில்! செய்கிறாரா பார்ப்போமே!! அந்த முறையில், I will take up the challenge— நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் என்ற முன்னுரையுடன் நான் பேசினேன். இதை விடத் தெளிவாகப் பேசியிருக்க முடியாது என்றும் நம்புகிறேன். இதனை வைத்துக்கொண்டு முதலமைச்சராகட்டும், மற்றவர்களாகட்டும், வேடிக்கை பேச என்ன காரணம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. போகட்டும். எத்தனையோ விதமான கலக்கத்தில் சிக்கிக் கிடப்பவர்களுக்கு, என் பேச்சு, சில விநாடி வேடிக்கைக்குப் பயன்படுவது பற்றி மனக்குறை கொள்வானேன்? நடந்தது முழுவதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புப் பெறுபவர்கள், உண்மையை அறிந்துகொள்வார்கள்.

இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திடத் தொடங்கிய நாள்தொட்டு, நாம் தெளிவாக, ஒன்று கூறி வருகிறோம்: எங்களுக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை; இந்தியை நாங்கள் அந்த விதத்தில் எதிர்க்கவில்லை; அது இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்பதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம்.

நமது கழகத்தின் தீர்மானம் தேசீய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்பதாகும். அந்தப் பதினான்கு மொழிகளில் இந்தியும் ஒன்று.

இந்தியை அந்தப் பதினான்கு மொழிகளில் ஒன்று என்று கொள்ளமாட்டோம், கொள்ளக்கூடாது என்று நாம் சொன்னதுமில்லை; சொல்லப்போவதுமில்லை; சொல்லுவதில் நியாயமுமில்லை.

நாம் சொல்லி வருவதெல்லாம், இந்தி, இந்தியாவின் ஒரு பகுதியினரின் தாய்மொழி, அதனை இந்தியாவின் ஆட்சிமொழி என்று ஆக்குவது அடாது, ஆகாது, பெரும்தீது; அது இந்தி பேசாத மக்களை அநீதிக்கு ஆட்படுத்தும், இரண்டாந்தரக் குடிமக்களாக்கும். ஆகவே, அதனை ஒப்பமாட்டோம், எதிர்க்கிறோம் என்பதாகும்.

இந்த அடிப்படை மாறாது என்பது மட்டுமல்ல, நாம் மட்டுமே கூறிக்கொண்டு வருகிற இந்த அடிப்படையை இன்று வேறு பலரும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

நான், மாநிலங்கள் அவையில் பேசியானதும், பிற்பகல், இந்தியின் தீவிரக் கட்சியான ஜனசங்கத்தைச் சார்ந்த வாஜ்பாய் பேசினார். அவர் என்னையும் நான் சொன்ன கருத்துக்களையும் பலமாகத் தாக்குவார் என்ற நப்பாசை பலருக்கு இருந்தது.

அவரோ, அண்ணாதுரை சொல்லுகிற பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற திட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வாஜ்பாய், மாறுபட்டது எதிலே என்றால், 14-மொழிகளும் ஆட்சி மொழிகளாகக் காலம் பிடிக்கும்; அதுவரை ஆங்கிலம் தொடர்ந்து இருக்கட்டும் என்பதிலே தான். அவருடைய கருத்து இப்போதே 14 மொழிகளும் ஆட்சி மொழிகளாகி விடட்டும், ஆங்கிலம் அகற்றப்படட்டும் என்பது.

இதிலே நமக்கு என்ன ஆட்சேபம்! நாளைக்கே நமது தமிழ் மொழி, இந்தியாவின் ஆட்சி மொழியாகி அரியணை ஏறினால், ஆங்கிலம் நமக்கு ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது!

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கப்பட வேண்டும் என்ற சர்க்கார் கொள்கை விடப்பட்டு, இந்திக்காகச் சர்க்கார் பணம் செலவிட்டுப் பரப்பும் முயற்சியை நிறுத்திக்கொண்டு, பதினான்கு மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் என்று சட்டமாக்கப்பட்டு, அதன்படி நமது தமிழ் மொழி ஆட்சிமொழி என்ற நிலைபெற்று, பிறகு இந்தியைப் பரப்ப, மக்கள் அமைப்பு முயற்சி எடுத்துக் கொள்ளும்போது என் உதவி கிடைக்குமா என்று என்னை ஒருவர் கேட்கும்போது. கிடைக்கும் என்று கூறுவதிலே என்ன தவறு காண்கிறாரோ முதலமைச்சர், எனக்குப் புரியவில்லை.

அந்த நாள் வருகிறபோது, இந்தியை இங்குப் பரப்பும் முயற்சி மட்டுமல்ல, தமிழ்மொழியைப் பிற இடங்களில் பரப்பும் முயற்சியும் நடந்துவரும்.

இப்போதே, தென்னக மொழிகளில் ஒன்றை, இந்தி மாநிலத்தவர் படித்துக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு எழவில்லையா! நானேகூடச் சொன்னேனே, மாநிலங்கள் அவையில் பேசும்போது, தமிழ் கற்று, அம்மொழியில் உள்ள இலக்கியச் சுவையைப் பருகினால், வாஜ்பாயே கூட, தமிழ்தான் தொடர்பு மொழியாக இருக்கவேண்டும் என்று ஏற்றுக்கொள்ளுவார் என்று. உடனே அவர் என்ன துள்ளிக்குதித்தெழுந்து. “முடியாது!! முடியாது! அப்போதும் தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்றா பேசினார்? இல்லை! ஏன்? வாதங்களின் பொருத்தத்தையும் நிலைமை விளக்கத்துக்கான பேச்சின் பொருளையும் உணருபவர்கள், முதலமைச்சர் காட்டும் போக்கினைக் காட்டமாட்டார்கள். ஆனால், முதலமைச்சர் இப்போது உள்ள நிலைமையில் நான் அவரிடம் அதிக அளவு நிதானத்தன்மையை எதிர்பார்ப்பதற்கில்லை.

நிருபர்கள் மாநாட்டிலேகூட ஒரு நிருபர், பதினான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில், மக்களின் முயற்சியால், சர்க்காரின் பலமின்றி, ஒரு மொழி தொடர்பு மொழியாகட்டும் என்று கூறுகிறீர்களே, அந்தக் காலம் வரும்போது, மக்கள் வளமுள்ள மொழியாகப் பார்த்துத்தானே தொடர்பு மொழியாகக் கொள்வார்கள் என்று கேட்டபோது நான், “ஆமாம்! வளமுள்ள மொழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன். தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாகக் கொள்ளுங்கள் என்று. அது தொன்மையான மொழி—வளமான மொழி” என்று கூறினேன். வேறோர் நிருபர் குறுக்கிட்டு, “சமஸ்கிருதத்தைக் கொண்டால் என்ன?” என்று கேட்டார்; “அது பேச்சு வழக்கு அற்றமொழி” என்று பதிலளித்தேன் இவைகளையும் முதலமைச்சர் பக்தவத்சலம் மக்களிடம் எடுத்துக் கூறுவார் என்று நான் எதிர்பார்க்க முடியுமா!! ஆனால், இதனை நான் கூறியிருப்பதை நானே எப்படி மறந்துவிட முடியும்!

இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் நிருபர் காடிலால், பேட்ரியட் நாளிதழ் நிருபர் கிரிஷ்மதுர், ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் நிருபர் ரன்ஜித்ராய், டைம்ஸ் ஆப் இந்தியா சுதர்சன்பாடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் (டில்லி வெளியீடு) திரிபாதி, இந்துஸ்தான் ஸ்டாண்டார்டு சைலேன் சட்டர்ஜி, பி. டி. ஐ அமைப்பிலிருந்து குப்தாவும் என். பாலசுப்பிரமணியமும், இந்து நிருபர்கள் இ. கே. ராமசாமியும் பட்டாபிராமனும், அமிர்தபஜார் பத்திரிகை நிருபர் தத்தா, ஈவினிங்நியூஸ் சி. பி இராமச்சந்திரன், மெயில் பி. ராமசாமி, அகில இந்திய ரேடியோ நிலையத்திலிருந்து கே. ஜி. ராமகிருஷ்ணன், யூ. என். ஐ. அமைப்பிலிருந்து கணபதி, இன்பா அமைப்பிலிருந்து ராஜேந்திரகபூர், நவபாரத் இதழிலிருந்து ஜெயின், இந்துஸ்தான் இதழிலிருந்து சந்திராகர், இந்துஸ்தான் டைம்சிலிருந்து தார், தினமலர் ராதா கிருஷ்ணன், பிரீபிரஸ் ஜர்னல் சுவாமிநாதன், நவ்பாரத் டைம்ஸ் ரக்பீர் சகாய், பினான்ஷியல் எக்ஸ்பிரஸ் சந்தானம், சங்கர்ஸ் வீக்லி கோபு, திருச்சூர் எக்ஸ்பிரஸ் ஆர். சுந்தரம், ஜன்ம பூமி, சுயராஜ்யாவிலிருந்து ஏ. எஸ் ரகுநாதன், இவர்கள் அன்று வந்திருந்தவர்கள். சிலருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கக்கூடும், ஒருமணி நேரத்துக்கு மேலாக அவர்கள் கேள்விகள் கேட்க, நான் பதில் அளிக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு மிகுந்த விதமாக அந்த மாநாடு நடைபெற்றது.

அத்தனை நிருபர்களை மொத்தமாகச் சந்திப்பது எனக்கு முதல் முறை. அவர்கள் ஒவ்வொருவரும் இது போன்ற நிகழ்ச்சிகள் பலவற்றிலே பலமுறை கலந்து பழக்கப்பட்டிருப்பவர்கள். என்றாலும், அவர்கள் அனைவருமே என்னிடம் மிகவும் நட்புரிமையுடன் நடந்து கொண்டனர். என் நன்றி அவர்களுக்கு. ஒரு சிலர், என் திறமையைப் பரீட்சிக்க வேண்டும் என்ற முறையில் கேள்விகளைக் கேட்கிறார்களோ என்ற எண்ணம் எழத்தக்கவிதமான பிரச்சினைகளைக் கிளப்பினார்கள் என்றாலும், மொத்தத்தில் எனக்கு, நமது நிலைமையைத் தெளிவு படுத்தவும், கொள்கையை வலியுறுத்தவும் அவர்கள் நல்ல முறையில் வாய்ப்பளித்தார்கள். இது எனக்காக அவர்கள் செய்த உதவி என்பதனைவிட, நாம் ஈடுபட்டிருக்கும் தூய காரியத்துக்குத் துணை செய்திருக்கிறார்கள் என்று கூறுவதுதான் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.

வந்தமர்ந்த சில விநாடிகளுக்குள்ளாகவே ஒரு நிருபர்—டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் என்று நினைவு—“என்ன சொல்லப் போகிறீர்கள்? ஆரம்பிக்கலாமே!” என்றார்.

“என் கருத்தினை மாநிலங்கள் அவையில் கூறியிருக்கிறேன் மேற்கொண்டு ஏதாகிலும் தேவை என்றால் கேளுங்கள், கூறுகிறேன்” என்று நான் கூறினேன். கேள்விகள் புறப்பட்டன. ஒருமுறை எதிரே இருப்பவர், அடுத்தது வலப்பக்கத்தில் ஒருவர். திடீரெனக் கோடியிலிருந்து மற்றொருவர், அதைத் தொடர்ந்து இடப்புறத்திலிருந்து ஒருவர், பிறகு மூன்றாவது வரிசைக்காரர், இப்படிக் கணைகள்! சுவையும் இருந்தது, சூடும் தென்பட்டது. அன்பு ததும்பிடும் போக்கும் கண்டேன், அருவருப்பை அடக்கிக்கொள்ளும் போக்கும் இருந்தது.

ஜனவரி 2-ம் நாள், தி. மு. கழகம் என்ன திட்டம் மேற்கொண்டது? விளைவு என்ன? விளக்கம் என்ன? என்று ஒரு நிருபர் கேட்டார்.

ஜனவரி 26-ம் நாள், இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி என்று ஆக்கிவிடுவதைக் கண்டிக்கத் துக்க நாள் நடத்த, தி. மு. க. திட்டமிட்டது, துவக்கத்திலிருந்தே முதலமைச்சரும் காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், வன்முறைச் சூழ்நிலை எழக்கூடிய விதமான முறையில் பேசலாயினர். காங்கிரஸ் இதழ்களில் அந்தப் பேச்சுகள் வந்துள்ளன. கறுப்புக் கொடிகள் அறுக்கப்படும், கொளுத்தப்படும், கறுப்புக் கொடி கட்டுபவன் கரம் வெட்டப்படும் என்பன போன்ற பேச்சுகள் பேசப்பட்டன. பல காங்கிரஸ் அமைப்புகள், இத்தகைய வன்முறையில் ஈடுபடப் போவதாக இதழ்களிலேயே அறிவித்தன. போலீஸ் கமிஷனர், பொது இடங்களில் கறுப்புக் கொடி கட்டக்கூடாது, அமளி ஏற்படும்; உங்கள் கட்சிக் காரியாலயத்தில், வீடுகளில் கட்டிக்கொள்ளுங்கள் என்று எங்களிடமும், கறுப்புக் கொடியைக் கண்டால் அறுக்காதீர்கள், எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அகற்றிவிடுகிறோம் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் சொன்னார். நாங்கள் அதுபோலவே பொது இடங்களில் கறுப்புக் கொடி கட்டவில்லை; எங்கள் வீடுகளில்தான் கட்டினோம். ஆனால், காங்கிரஸ் படையினரும், போலீசாரும் எங்கள் கட்டடங்களிலே அத்து மீறி நுழைந்து கொடிகளை அறுத்தனர்; சிலர் கொளுத்தினர். இந்தவிதமான வன்முறைச் செயல் எழக் காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே—என்று கூறினேன்.

விவரமாக நான் இந்தச் சம்பவங்களை விளக்கியது கேட்டு, பல வட இந்திய இதழ் நிருபர்கள், முதல் முறையாக இந்த விவரம் கிடைக்கிறது; இதுவரை தெரியாதிருந்தது என்று கூறி வியப்படைந்தனர்.

இன்னும் தெரியவேண்டியது நிரம்ப இருக்கிறது; நள்ளிரவில் மாணவர் விடுதிகள் தாக்கப்பட்டதும், அங்குக் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டதும், அமைதியாக இருந்த மாணவர்களின் கிளர்ச்சி அமளியாகிட வழிவகுத்த அடாத நடவடிக்கைகளும், இவ்விதம் பல உள்ளன. இவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிய வேண்டும். உண்மை அப்போதுதான் துலங்கும், எங்கள் கழகத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மெய்ப்பிக்கப்படும். கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விடுதித் தலைவர்கள், இதழாசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர்கள் சான்றளிக்கத் தயாராக உள்ளனர். ஆகவேதான் நீதி விசாரணை வேண்டுமென வற்புறுத்துகிறோம் என்று விளக்கமளித்தேன்.

அடுத்தபடியாக ஒரு நிருபர், “முதலமைச்சர்கள் மாநாடுபற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

முதலமைச்சர்கள் மாநாட்டிலும், காங்கிரஸ் காரியக் கமிட்டியிலும். பிரச்சினைபற்றிப் பேசி, சில சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அங்குக் காட்டப்பட்ட கருத்தோட்டத்தை ஒட்டி, எந்த விதமான மசோதா என்ன வார்த்தைகள் கொண்டதாகத் தயாரிக்கப் படுகிறது என்பதனைப் பார்த்த பிறகுதான் எங்கள் கருத்தைக் கூறமுடியும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மற்றொன்று; முதலமைச்சர்கள் காட்டிய மனோபாவத்திற்கு ஏற்றவிதமாகவே மசோதா கொண்டு வரப்படுகிறது என்றாலும், அது ஒரு தற்காலிகமான பரிகாரமாகத்தான் கொள்ளப்படும்; கோரிக்கையும் குறிக்கோளும் நிறைவேறி விட்டதாக மக்கள் கருதமாட்டார்கள்... நாங்கள் (தி. மு. க.) விரும்புகிற பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற இலட்சியப் பாதையில், அது ஒரு படி என்று மட்டுமே நாங்கள் கருதுவோம் என்று கூறினேன்.

ஆட்சிமொழிகள் சட்டத்தில் எந்தவிதமான திருத்தம் வரும் என்பது, இங்கு இத்தனை நாள் இருந்த பிறகும், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுபற்றி சர்க்கார் எந்த அளவு சிந்தனை செய்திருக்கிறார்கள் என்றுகூட அறிந்துகொள்ள முடியவில்லை. போன காரியம் முடிந்தது; நூற்றுக்கு நூறு வெற்றி என்று எங்கள் முதலமைச்சர் டில்லியிலிருந்து திரும்பியதும் கூறியிருக்கிறாரே என்று நான் கூறும்போது, இங்குள்ள சிலர் கண் சிமிட்டுகிறார்கள், கேலியாக!!

“ஆட்சிமொழிகள் சட்டத்தில் திருத்தம் உடனடியாகக் கொண்டுவரச் சொல்லி, வற்புறுத்தப் போகிறீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

பாராளுமன்றப் பேச்சில் லால்பகதூர், இதிலே அவசரம் காட்டக்கூடாது; அவரவர்களும் தத்தமது கருத்துக்களைக் கூறியபடி இருக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆயினும், எல்லாக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேசப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவ்விதம் அழைக்கப் பட்டால், நான் வலியுறுத்திப் பேசுவேன் என்று கூறினேன்.

இடையில் இதனையும் கூறிவிடுகிறேன். இங்கு பல கட்சித் தலைவர்களையும் கலந்து பேசும் முயற்சி இருக்கும் அறிகுறியே காணோம்—பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தவிர!!

“சௌரி சௌரா கலகம்பற்றிக் கூறினீர்கள். அந்தக் கலகம் நடந்தது கண்டதும் மகாத்மா, கிளர்ச்சியை வாபஸ் பெற்றுவிட்டாரே, நீங்கள் ஏன் அதுபோலச் செய்யவில்லை?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

கிளர்ச்சி என் தலைமையில் நடைபெறவுமில்லை. கழகக் கிளர்ச்சியுமல்ல அது, நான் வாபஸ் பெற. எங்கள் கிளர்ச்சி, 26-ம் நாள் மட்டும், துக்க நாள் நடத்துவது. 25-ம் நாள் நள்ளிரவே நாங்கள் கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 2-ம் நாள்தான் விடுதலை செய்யப்பட்டோம்.

நாங்கள் உள்ளே இருந்தபோதும் பிறகும் தொடர்ந்து நடைபெற்ற மாணவர் கிளர்ச்சி, கழகம் நடத்தியது அல்ல. ஆகவே, அதனை நிறுத்திவிட எனக்கு எப்படி வாய்ப்பு இருக்கமுடியும்? நாங்கள் திட்டமிட்டு, எங்கள் கழகத்தின் சார்பில் கிளர்ச்சி நடத்தினால், இன்னின்னார் மட்டும் இன்னின்ன முறையில் கிளர்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, வரையறை வைத்திருப்போம். தீய சக்திகள் நுழையக் கண்டால் தடுத்து அப்புறப்படுத்தி இருப்போம் என்று கூறினேன்.

ஒரு நிருபர் கேட்டார், “இந்தி ஆதரவாளர்களாக உள்ள சில தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களா? உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

லால்பகதூர் அவர்களின் பேரப்பிள்ளை, டில்லியில் அவ்விதமான பள்ளிக்கூடத்தில் படிப்பதாகக் கேள்விப் பட்டேன் என்று கூறினேன்.

உண்மையில், இங்கு நான் இதுபோலக் கேள்விப்பட்டேன்.

நான் கூறினதை எந்த நிருபரும் அன்றும் மறுக்கவில்லை; இன்றும் மறுக்கவில்லை.

தெரியுமா! தெரியுமா! உங்கள் அண்ணாதுரை என்ன சொன்னான் தெரியுமா! என்று சிலம்புபோடும் சீலர்கள், இந்தி ஆதரவாளர் லால்பகதூர் தமது பேரப்பிள்ளையை ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி இருக்கிறார் என்பதனைக் கூறவா செய்வார்கள், எப்படி எதிர்பார்க்க முடியும்? சிலர் பசுவிடமிருந்து பால் பெறுகிறார்கள்; சிலர் ‘கோமயம்’ மட்டும் சிரமப்பட்டுச் செம்புப் பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள், அது அவரவர்களின் விருப்பம், தேவையைப் பொருத்தது?

“திராவிட முன்னேற்றக் கழகம் ஏதாவது கிளர்ச்சி செய்யப்போகிறதா?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

பொதுக்குழு கூடித்தான் இதுபற்றித் தீர்மானிக்கும். என்றாலும், இப்போது சூழ்நிலை கெட்டுக்கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கிளர்ச்சி துவக்கினால் தீயசக்திகள் நுழைந்துவிடும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது என்றேன்.

“அப்படியானால் மக்களிடம் உங்களுக்கு இருந்த செல்வாக்கும் பிடியும் குறைந்துவிட்டது என்று பொருளா?” என்று ஒரு நிருபர் மடக்கினார்.

மக்களிடம் செல்வாக்கு இருந்ததாகவாவது ஒப்புக் கொள்கிறீரே, மெத்த மகிழ்ச்சி. அந்தச் செல்வாக்கு அப்படியே தான் இருக்கிறது. ஆனால், நாம் பேசிக் கொண்டது மக்களைப்பற்றி அல்ல; தீயசக்திகளைப் பற்றி!!—என்று நான் கூறினேன். அவர் விடவில்லை. “ஆக தீயசக்திகளை அடக்கிட முடியாது என்று அஞ்சுகிறீர்கள்?” என்று குறுக்குக் கேள்வி கேட்டார். ஆமய்யா ஆம்! சர்க்காரால் முடியாததுபோலவே, தீயசக்திகளை அடக்கிட என்னாலும் முடியாமற் போய்விடும் என்று அஞ்சுகிறேன் என்று பதிலளித்தேன்.

“மொழி விஷயமாக உமது கொள்கை என்ன?” என்ற பொதுப் பிரச்சினையை ஒருவர் எழுப்பினார்.

தேசீய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அந்தக் கட்டம் வரையில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருந்து வரவேண்டும். இதற்கு நாமாக ஒரு காலக்கெடு வைத்துக் கொள்ளக்கூடாது.

“பிறகு, ஒரு தொடர்பு மொழி வேண்டுமே. அது எது?”

அது எது என்பது மக்களாகப் பார்த்து, காலப்போக்கில், இயற்கையான சூழ்நிலையில், தீர்மானித்துக் கொள்ளவேண்டும். சர்க்கார் இன்ன மொழிதான் தொடர்பு மொழி என்று ஆணையிடக்கூடாது; ஆதரவு தரக்கூடாது; மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பதினான்கு மொழிகளில், எது தொடர்பு மொழியாகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? என்று கேட்டார் நிருபர்.

பதினான்கு மொழிகளில் ஏதாவது ஒன்று. தமிழுக்கு என்ன! வளமான மொழி! தொன்மையான மொழி! இலக்கியச் செறிவுள்ளது! தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாமே என்று நான் கூறினேன்.

“தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாமல்லவா?” என்று கேட்டார் மற்றொருவர். ‘சமஸ்கிருதமா, அது பேச்சு வழக்கு அற்ற மொழியாயிற்றே!’ என்றேன். மேலால் அவர் அந்தப் பிரச்சினையைத் தொடரவில்லை.

இந்தி ஆட்சிமொழி என்ற திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிட்டால், பிறகு இந்தி பரப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே? என்று ஒருவர் கேட்டார்.

இல்லை! ஆனால், அந்தப் பரப்பும் காரியத்தைச் சர்க்கார் செய்யக்கூடாது. மக்களின் அமைப்பு (அதிகார பூர்வமல்லாதது) செய்யவேண்டும் என்று கூறினேன்.

அப்போதுதான் அந்த நிருபர், கேட்டார், “நீங்கள் உதவி செய்வீர்களா?” என்று. நான் உடனே கூறினேன், “நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இந்தி ஆட்சிமொழி அல்ல என்று சர்க்கார் அறிவிக்கட்டும்; இந்தியைப் பரப்பும் காரியத்தில் சர்க்கார் ஈடுபடாமல் இருக்கட்டும்” என்று கூறினேன்.

இதுதான் முதலமைச்சர் கரத்துக்குப் பந்து ஆயிற்று! என்ன வேடிக்கையான இயல்பு!!

இந்தியை ஆட்சி மொழி ஆக்கும் திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிட வேண்டும் என்றேனே அது?

இந்தியைப் பரப்பும் வேலையில் சர்க்கார் ஈடுபடக்கூடாது என்றேனே, அது?

பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்றேனே, அது?

தொடர்பு மொழி என்று எதனையும் சர்க்கார் அறிவிக்கக்கூடாது என்றேனே, அது?

தொடர்பு மொழியாக, தொன்மையும் வளமையும் மிக்க தமிழ் ஏன் கொள்ளப்படக்கூடாது என்று கேட்டேனே, அது?

அவை ஒன்றுகூட முதலமைச்சருக்கு, முக்கியமானவையாகப் படவில்லை!! ஏன் என்று கேட்க நான் யார்!! அவரோ முதலமைச்சர்!! நானோ கருணாநிதிக்கு அண்ணன்? நான்போய்க் கேட்கலாமா அவ்வளவு பெரியவரை, இந்தச் சங்கடமான கேள்வியை!!

ஒரு நிருபர் கேட்டார், “ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் புகுத்திய போது ஏற்றுக்கொண்டீர்களே, இந்தியை அதுபோல ஏற்றுக்கொண்டால் என்ன?” என்று.

உம்முடைய கேள்வியின் தோரணையே அச்ச மூட்டுகிறதே ஐயா! வெள்ளைக்காரன் எப்படி ஆங்கிலத்தைக்கற்கச் சொன்னானோ அதுபோல இந்தியை ஏற்கச் சொல்கிறோம் என்றால் என்ன பொருள்? வெள்ளைக்காரன்போல இந்திக்காரர் ஆட்சி செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பதல்லவா? இதைத்தான் இந்தி ஏகாதிபத்தியம் என்பது. மற்றொன்று, ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் திணிக்கவில்லை. நான் அறிந்த அளவில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சான்றோர்கள் ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று முறையிட்டு, பிறகே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது என்றேன்.

“பன்மொழிகள் ஆட்சி மொழிகளாவது நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறேன்” என்றார் ஒருவர்.

கடினம்—சங்கடம் என்றெல்லாம் சொல்லுங்கள்; நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறிவிடமுடியாது. பல மொழிகள் உள்ள இடத்தில், வேறுமார்க்கம் இல்லையே! என்று கூறினேன்.

மறுபடியும் ஒருவர் அடிப்படைக் கேள்வியைத் துவக்கினார். “என்ன காரணத்துக்காக இந்தியை வேண்டாமென்கிறீர்கள்” என்றார்.

பலமுறை பல காரணங்களைக் கூறியாகிவிட்டது. ஒன்றுமட்டும் மறுபடியும் வற்புறுத்துகிறேன். இந்தி சிலருக்கு, தாய்மொழி — தன்னாலே வருவது — பரம்பரைச் சொத்து—அந்த மொழியை நாங்கள் கற்றுத்தேறி இந்திக்காரருடன் போட்டியில் வென்று இடம் பிடிப்பது, நிரந்தரமான இடையூறு—இது அநீதி என்றேன்.

“இயற்கையான சக்திகளால் மொழிகள் வளர வேண்டும், பிறகு அவைகளிலிருந்து தொடர்புமொழி கிடைக்கவேண்டும் என்கின்றீர்? இயற்கையான சக்தியை என்ன செய்து பெறுவது?” என்று கேட்டார்.

சக்தி இன்னவிதம் பெறக்கூடியது என்று திட்டமிட்டுக் கூறமுடியாது. பொதுவான சில யோசனைகள் கூறுகிறேன். சகிப்புத்தன்மை வேண்டும், மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் இயல்பு வளரவேண்டும், ஆதிக்க நோக்கம் அகலவேண்டும், வெறித்தனம் என்கிறார்களே அது ஒழிய வேண்டும். ஒரு உதாரணம் தருகிறேன். நான் நண்பர்களுடன் மோட்டாரில் வடஇந்தியப் பகுதிகள் சென்றிருக்கிறேன்—மத்தியப் பிரதேசம் போன்ற இடங்கள். அங்கு வடஇந்தியர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள், எங்களுக்கு இந்திதெரியாது என்று தெரிந்த பிறகும், வேண்டுமென்றே பிடிவாதமாக, நாங்கள் கேட்பவைகளுக்கு, இந்தியில் தான் பதில் அளித்தார்கள். இது என்ன மனோபாவம் என்றேன். அவர் புரிந்துகொண்டார் என்று எண்ணுகிறேன்.

டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், வரும்போதே சொன்னார் “நான் இந்திவாலா” என்று, நான் கேட்காமலிருக்கும்போதே. அவர்தான், சில கேள்விகளை வேண்டுமென்றே, என் பொறுமையைக் கண்டறியும் முறையில் கேட்டார்.

அவர் கேட்ட கேள்வி இது.

“எவ்வளவுதான் நீங்கள் மறுத்தாலும், பொது மக்கள், தி. மு. கழகமும் வேறுசில அரசியல் கட்சிகளுந்தான் வன்முறைச் செயலுக்குக் காரணம் என்று எண்ணுகிறார்கள். அந்த நிலையில், தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, இது முறையா?” என்று கேட்டார்.

ஐயா! உம்முடைய கேள்வியின் அடிப்படையே தவறு. தி. மு. கழகம் வன்முறையைச் செய்யவில்லை, தூண்டவில்லை, பங்கு இல்லை, என்று நான் பன்னிப் பன்னி மறுத்த பிறகும், நீர், அந்தத் தவறான எண்ணத்தை விட்டுவிடாமல், அதை அடிப்படையாக்கிக் கொண்டு, வாதங்களை அடுக்கும் போதே, உமக்கு நான் பதில் கூறமுடியாது என்று கூறும் உரிமை எனக்கு இருக்கிறது. என்றாலும், கேட்டதற்குச் சொல்கிறேன்; தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணியவைக்கக் கிளம்பவில்லை. சொல்லப்போனால், இந்தியாவிலேயே, பலம்குறைந்த பகுதியாகத் தமிழ்நாடு இருக்கிறது என்று கூறினேன். கூறிவிட்டு, ஐயா! வன்முறைக்குக் காரணம் தி. மு. கழகம் என்று முதலமைச்சர் கூறியதை வைத்துக்கொண்டு பேசுகிறீரே, அதே முதலமைச்சர் சில நாட்களுக்குப் பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும், கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் போலீசாரிடம் தங்களுக்கு இருந்து வந்த வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அறிக்கை விடுத்திருப்பது தெரியுமா என்று கேட்டேன். அப்படி ஒரு அறிக்கை வெளிவந்ததாகவே அந்த நிருபர் காட்டிக்கொள்ளவில்லை. கெட்டிக்காரர்!

“பாராளுமன்றக் கூட்டம் ஒரு தொடராவது தெற்கே நடத்தப்பட வேண்டும் என்று ஒரு யோசனை கூறப்படுகிறதே, அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

ஆமாம், மேலும் பல யோசனைகள் கூடக் கூறப்படுகின்றன. பிரதமமந்திரி வடக்கே இருந்தால், குடியரசுத் தலைவர் தெற்கே வசிக்க வேண்டும், கடற்படைத் தலைமைக் காரியாலயம் வடக்கே இருந்து தெற்கு மாற்றப்பட்டு கொச்சியில் அமைக்கப்பட வேண்டும், இத்தகைய அமைப்புகள் இந்தியாவில் பல்வேறு இடங்களிலே பரவலாக்கப்படவேண்டும் என்றெல்லாம் யோசனைகள் கூறப்படுகின்றன. இவைகள், தென்னக மக்களின் மனத்துக்கு ஒருவிதமான ஆறுதல் அளிக்கலாம்—என்று கூறினேன்.

“மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டால், உமது போக்கு எப்படி இருக்கும்?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

நான் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். இப்போதே அங்கு இந்தி கற்றுத் தரப்படுகிறது. இந்தி தவிர வேறு எந்த இந்திய மொழி கற்பதற்கும் வகை செய்யப்படாததால் மறைமுகமாக இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது வடக்கே உள்ளவர்களோ, தென்னக மொழியைக் கற்க முன்வரவில்லை. மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் படிக்கிறார்கள். இந்தியைக் கட்டாய பாடமாக்கினால் எங்கள் மக்கள் வேதனைப்படுவார்கள்; எதிர்ப்பார்கள், என்று தெரிவித்தேன்.

“மத்திய சர்க்கார் அலுவல்களுக்கான பரீட்சை சம்பந்தமாக என்ன கருதுகிறீர்” என்று கேட்டார் ஒரு நிருபர்; அதுபற்றித் தெளிவான எந்தத் திட்டமும் வெளியிடப்படவில்லை, ஆகவே, அதுபற்றி நான் கருத்தைச் செலுத்தவில்லை என்று பதிலளித்தேன்.

“தொடர்பு மொழி இயற்கையான சூழ்நிலையில் வரவேண்டும் என்கிறீரே, மக்கள் ஒரு சிறுபான்மை மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு விடக் கூடுமல்லவா?” என்று ஒருவர் கேட்டார்,

அப்படியும் நடக்கலாம். மற்றும் ஒன்று. வளமானதாக இருக்கிறதா என்று பார்த்து அத்தகைய மொழியை மக்கள் தொடர்பு மொழியாகக் கொள்ளக் கூடும் அதற்காகத்தான் நான் தமிழுக்காக வாதாடுகிறேன். தமிழ் அத்தனை வளமான மொழி!—என்று கூறினேன்.

ஒருவர், “வங்காள மொழியும் தான்” என்றார், சரி! தமிழ் போன்றே வங்காள மொழியும்; இருக்கட்டும் என்றேன். அவருடைய வங்காள மொழி ஆர்வம், பாராட்டத்தக்கது என உணர்ந்தேன்.

“சௌரி சௌரா பற்றிச் சொன்னீர்கள்—அங்கு வன்முறை நடந்து, கிளர்ச்சியை மகாத்மா வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அதற்காக, காங்கிரஸ், கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்துவிடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.

உண்மை நாங்கள்கூட கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்துவிடச் சம்மதிக்கவில்லை, வன்முறையைக் கண்டிக்கிறோம். வன்முறை எழமுடியாத முறையில் கிளர்ச்சிகள் அமையவேண்டும் என்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறோம் ஆனால், கிளர்ச்சி நடத்தும் உரிமையை விட்டுவிடவில்லை என்று கூறினேன்.

“இந்தி ஒழிக! என்று முழக்கமிடுகிறீர்களே, இந்தி ஆதிக்கம் ஒழிக என்பதுதானே முழக்கமாக இருக்க வேண்டும்?” என்று ஒருவர் கேட்டார்.

இலட்சிய முழக்கங்கள் எடுப்பாக, சுருக்கமாக அமையவேண்டும். சர்க்காரின் இந்தி ஆட்சி மொழி ஆக்கும் திணிப்பு ஒழிக!-என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்க முடியாது. அதன் காரணமாகத்தான் இந்தி ஒழிக என்று சுருக்கமான முழக்கம் இருக்கிறது. மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு! என்ற இலட்சிய முழக்கம் தந்தார். அவர் விரும்பியது வெள்ளைக்காரர்கள் வெளியேற வேண்டும் என்பது அல்ல; வெள்ளையர் நடத்தும் ஆட்சி ஒழியவேண்டும் என்பது. வெள்ளையர் இந்தியாவை ஆட்சி செய்வது வெளியேற வேண்டும் என்று விரித்துக் கூறவில்லை, சுருக்கமாக வெள்ளையனே வெளியேறு! என்றார். செய் அல்லது செத்துமடி என்பது அவர் தந்த மற்றொரு சுலோகம். என்ன செய்ய வேண்டும். எப்போது, எப்படி. ஏன் சாகவேண்டும் என்றெல்லாம் விளக்கமாக்கி, விரிவாகக் கூறவில்லை. சுருக்கமாக, செய் அல்லது செத்துமடி என்றார். இலட்சிய முழக்கங்கள் அவ்விதந்தான் சுருக்கமாக அமையும் என்று கூறினேன்.

“இந்தி எதிர்ப்பு உணர்ச்சி காரணமாகக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேற்றுமை ஓரளவு குறைந்துவிட்டது உண்மையா?” என்று ஒருவர் கேட்டார்.

உண்மைதான். பல காங்கிரஸ்காரர்கள் நாங்கள் கூறும் கருத்துக்களைப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சட்டசபையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இந்தித் திணிப்பைக் கண்டித்துப் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அரசியல் கட்சிகள் அமைத்துக் கொண்டுள்ள அரண்களை உடைத்துக் கொண்டு இந்தி எதிர்ப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்பிவிட்டது என்று கூறினேன்.

வேறொரு நிருபர், “பல ஆட்சிமொழித் திட்டமும் கூறுகிறீர், தொடர்புமொழித் திட்டம்பற்றியும் கூறுகிறீர்; இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் அல்லவா?” என்று கேட்டார்.

எப்படி முரண்? முரண் அல்லவே! பல மொழிகள் இருப்பதனால் தான் ஒரு தொடர்பு மொழிப் பிரச்சினை எழுகிறது. இரண்டு திட்டமும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல; துணை என்று கூறினேன்.

இந்தவிதமாக ஒரு மணி நேரம் நடந்தது அந்த மாநாடு, பயனுள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சில நிருபர்கள் கேள்விகள் கேட்டது, அந்தப் பிரச்சினை புரியாததால் அல்ல, நான் என்ன சொல்லுகிறேன் பார்க்கலாம் என்ற நோக்கத்துடன். முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களுக்கும் தெரியாதா, நான் பேசியிருப்பதன் பொருளும் பொருத்தமும், தெரியும். தெரிந்தும் வேறுவிதமாகப் பேசுவானேன்? காரணம், யாருக்குத் தெரியாது. எதையாவது பிடித்துக் கொண்டு கரையேற எண்ணுவது தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவருக்கு எழும் எண்ணம்; துடிப்பு. நெடுநாட்களாக, கழகத்தை அழித்திட, என்ன கிடைக்கும், என்ன கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள், எதை எதையோ பேசுகிறார்கள், பிறகு எல்லாம் வீண் என்பது கண்டு விம்முகிறார்கள். இது அவர்களின் இயல்பு. இதனைக்கண்டு நான் வியப்படையவில்லை. இதுவும் ஒரு நன்மைக்குத்தான் என்ற முறையில் எடுத்துக் கொண்டு இங்கு நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்திருக்கிறேன். மணி மூன்று, தூங்க முயலுகிறேன். நன்றி, வணக்கம்.


21-3-1965

அண்ணன்,
அண்ணாதுரை

பின் குறிப்பு:

நான் தில்லியிலிருந்து அனுப்பிய கடிதம் 12-3-65 அன்று தான் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது. அக்கடிதம் வந்து சேருவதற்குமுன் சென்ற கிழமை 14-3-65 இதழ் அச்சாகிவிட்டமையால், அதனை இந்தக் கிழமை (21-3-65) இதழில் காணுகின்றீர்கள்.

அன்பன்.
அண்ணாதுரை


★ ★