தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15
தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்
பதினைந்தாம் தொகுதி
காஞ்சிக் கடிதங்கள் - 2
அறிஞர் அண்ணா
பாரிநிலையம்
184.பிராட்வே. சென்னை 600108
- முதற் பதிப்பு : 1988
- பதிப்பு உரிமையுடையது
- விலை ரூ.15-00
அச்சிட்டோர்: சாலை அச்சகம், 11, திருவீதியான் தெரு,
கோபாலபுரம், சென்னை-600 086 [93]
முதல் இரண்டு தொகுதிகளின்
முதற்பதிப்பின்
முன்னுரை
திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன், எம்.ஏ.
‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று, என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல்வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும் பெருந்தொண்டை, ‘பாரி நிலையத்தார்’ செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன். பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள்— கட்டுரைகள்—நாடகங்கள்—திரைப்பட வசனங்கள்—எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றின் தமிழ் மணம் மிகச்சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசைபயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்கு தடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர் தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழி மேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பரபரப்புணர்ச்சியுடன் அவற்றைப் பிரித்துப் படிக்கிறோம், பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்துகொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும். அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித்திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் ‘தம்பிக்குக் கடிதம்’ என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே, விரைவில ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக!
அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கியவிருந்து படைக்க முன்வந்த ‘பாரி நிலைய’த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன் பெற்று, இனிதுற வாழ்வார்களாக!
4-1-1963 —இரா. நெடுஞ்செழியன்
பதிப்புரை
அறிஞர் அண்ணா அவர்கள் தம்முடைய கருத்துக்களையும் சிந்தனைகளையும் தம்பிக்கு என்ற தலைப்பில் கடித வடிவில் அவர் நடத்தி வந்த ‘திராவிட நாடு’ இதழிலும் ‘காஞ்சி’ இதழிலும் அவ்வப்போது எழுதி வந்தார்கள். இவற்றில் சில கடிதங்கள் திராவிடநாடு, காஞ்சி பொங்கல் மலர்களிலும் வெளிவந்தன.
இக்கடிதங்கள் அறிஞர் அண்ணா அவர்களையும் அவர் நேசித்த இலட்சக்கணக்கான தம்பிமார்களையும் ஒருங்கிணைத்துக் கலந்து உறவாடி மகிழச் செய்தன.
திராவிட நாடு இதழ்களில் வெளிவந்த கடிதங்களை வெளியிட அண்ணா அவர்களிடமே இசைவு பெற்று, முதல் இரண்டு தொகுதிகளையும் 1963ஆம் ஆண்டில் வெளியிட்டோம். இவை கடற்கரையில் சீரணி அரங்கில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெளியிடப் பெற்றன.
திராவிட நாடு இதழ்களில் வெளிவந்த கடிதங்கள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்து நிறைவடைந்தன. காஞ்சி இதழில் அண்ணா தமது சிறை அனுபவங்களைக் ‘கைதி எண் 6342’ என்ற தலைப்பில் கடித வடிவமாகவே எழுதி வந்தார்கள். அவைகளைத் தொகுத்து, ‘கைதி எண் 6342’ என்ற தலைப்பில் தனிநூலாக வெளியிட்டோம். இது அண்ணாவின் கடிதங்களின் பதின்மூன்றாம் தொகுதியாகும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 26-7-64 தொடங்கிக் ‘காஞ்சி’ இதழில் அண்ணா கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். காஞ்சி இதழில் வெளிவந்த முதல் கடிதத்தின் தலைப்பே ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’ என்பதாகும்.
காஞ்சி இதழில் வெளிவந்த கடிதங்களை வெளியிடத்திருமதி ராணி அண்ணாதுரை அவர்களிடம் இசைவு பெற்று வெளியிடத் தொடங்கி இருக்கிறோம். பல காரணங்களால் இவைகளை நூலாக வெளியிடுவதிலும் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இனித் தடையின்றி இவை விரைவில் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பொழுது வெளியிடப் பெறும் இந்தத் தொகுதி மொத்த வரிசையில் பதினான்காம் தொகுதியாகும். காஞ்சியில் வெளிவந்த கடிதங்களில் இரண்டாம் தொகுதியாகும், இதில் பதினோரு கடிதங்கள் வெளிவந்துள்ளன. ‘காஞ்சிக் கடிதங்கள்-2’ என்று தலைப்பிட்டுப் புதிய எண்கள் கொடுத்திருக்கிறோம்.
காஞ்சியில் வந்த கடிதங்களையும். வழக்கம் போலப் புலவர் நா. அறிவழகன் அவர்கள் உள் தலைப்பிட்டுக் கொடுத்தும், கிடைக்காத கடிதங்களுக்கு ‘ஜெராக்ஸ்’ பிரதி எடுத்துக் கொடுத்தும் பலவாறு உதவினார்கள். டாக்டர் சாலை இளந்திரையன் அவர்கள் பிரதியை நன்கு ஒப்பு நோக்கி அச்சிட்டு உதவினார்கள். இவ்விரு அறிஞர்களுக்கும், காஞ்சியில் வெளிவந்த கடிதங்களை நூல்வடிவில் வெளியிட எங்களுக்கு வாய்ப்பளித்த திருமதி ராணி அண்ணாதுரை அவர்களுக்கும், அழகாக அச்சிட்டு உதவிய சாலை அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி உரியது.
வழக்கம் போலத் தமிழ்ப் பெருமக்கள் இந்நூல் வரிசையினையும் ஏற்று எங்களை ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
—பாரி நிலையத்தார்
பொருள் அடக்கம்
கடித எண் பொருள் நாள் பக்க எண்
1 |
.
33 |
.
48 |
.
57 |
.
75 |
93 |
123 |
137 |
.
155 |
.
175 |
.
187 |