தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004



காஞ்சிக் கடிதம்: 14

வெந்த புண்ணில் வேல்



தருமபுரியில் தோற்கடிக்கப்பட்டோம்
தோல்வி நமக்கொரு பாடம்;
             வெற்றிக்கு வழிஅமைக்கும்.
மெய்யும் பொய்யும் குயிலும் காகமும் போல!
கழகத்தவர் இருட்டில் ஒளி எழ விளக்கு ஏற்றியவர்கள்

தம்பி,

கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிய காளை, பயிரைப் பாழாக்கி, குழந்தைகளைக் குத்திக் குற்றுயிராக்கி அட்டகாசம் செய்வது கண்டு, அதனை மடக்கி அடக்கி, மற்றவர்க்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுத்திட வேண்டும் என்று முயன்றவனை, அந்தக் காளை தாக்கிவிட்டு, தப்பித்துக்கொண்டு கனைத்துக்கொண்டு, புழுதியைக் கிளப்பிக்கொண்டு, வாலைத் தூக்கியபடி ஓடுவதைக் கண்டதுண்டா? காளைக்குப் பேசத்தெரியாது; தர்மபுரியில் வெற்றி கிடைக்கப் பெற்ற எக்களிப்புக் கொண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, வாய் இருக்கிறது; ஆகவே, வார்த்தைகள் குபுகுபுவெனக் கிளம்புகின்றன; பொழிந்து தள்ளுகிறார்கள்! கேட்டுக்கொள்கிறேன் காது இருப்பதால்; பொறுத்துக் கொள்கிறேன், அவர்களின் போக்குப் புரிவதால்; கூறிவைக்கிறேன், உன் கடமையை உனக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதால்.

புள்ளிமானை அடித்துத் தின்றிடும் புலி உறுமுவதும், ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொன்றிடும் ஓநாய் கத்துவதும், காட்டிலே, நாட்டிலே, சில வேளைகளிலே அக்கிரமக்காரர்கள், சூதுபல செய்து நீதியைச் சாய்த்துவிட்டு, ஆர்ப்பரிப்பதுண்டு, அவர்களின் எண்ணம் எல்லாம் முடிந்துவிட்டது என்பதால். பேதமையான எண்ணம் மட்டுமல்ல, தலை சுற்றும் அளவுக்குத் தற்பெருமை ஏறிவிட்டது என்பதும் அந்த ஆர்ப்பரிப்பின் பொருளாகும்.

என்னை எதிர்க்க இனி எவனால் ஆகும்!
எதிர்த்து நின்றவன் என்ன கதியானான் காணீர்!
தாக்கினேன்! தகர்ந்துபோனான்!
பொடிப் பொடியானான் போரிட வந்தவன்!

இவ்விதம் ஆர்ப்பரித்தவர்கள் ஒவ்வொருவரும், தமது வல்லமை பற்றித் தவறான கணக்குப் போட்டுக்கொள்பவர்களே என்பதனை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் எண்ணற்றன உள்ளன வரலாற்றுச் சுவடிகளில்! எக்காளமிடுவோர் இதனை நினைவிற்கொள்வதில்லை.

தரம் குறைந்தவர்கள் மட்டுமல்ல, ஓரளவு தரம் உள்ளவர்களுக்கேகூடச் சில வேளைகளில் வெற்றி தந்திடும் மகிழ்ச்சி, போதையாகி விடுவதுண்டு.

பிறகோர் நாள் வீழ்த்தப்பட்ட ஜூலியஸ் சீசர், களம் சென்று வெற்றி கண்டது குறித்துத் தன் நாட்டவருக்குச் ‘சேதி’ அனுப்பியபோது, சென்றேன்! கண்டேன்! வென்றேன்! என்று குறிப்பிட்டிருந்தான்—தனது வல்லமையின் அளவுபற்றி அவனுக்கு அத்தனை பெரிய கணக்கு.

ஜூலியஸ் சீசராவது, சென்றேன்—கண்டேன்—வென்றேன் என்றார்! முதலமைச்சர் பக்தவத்சலமோ, சென்றேனில்லை! வென்றேன் காண்பீர்! என்று பேசுகிறார்! பேசுகிறாரா? முழக்கமிடுகிறார்! களம்கூடச் செல்லாமல்—வெற்றிபெற்ற வேந்தர்வேந்தே! வாழ்க உமது வீரம்! வளர்க உமது தீரம்!! என்று வளைந்துபோனவர்கள் சொல்லாரம் சூட்டுகின்றனர்.

காணாததைக் கண்டவர்கள்! என்று பேசிடுவோரும், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்றும், திருச்செங்கோட்டையும், திருவண்ணாமலையையும், சென்னை மாநகராட்சி மன்றத்தேர்தலில் மண் கவ்வியதையும் மறத்துவிட்டார்களோ என்றும், பேசிடும் பொது மக்கள் உளர். ஆனால், நான் அவர்களைப்போலக் காங்கிரஸ் தலைவர்களின் ஆர்ப்பரிப்பைக் கண்டிக்கவோ, திருச்செங்கோடு திருவண்ணாமலையைக் கொண்டு தருமபுரியை மறைக்கவோ போவதில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்—காரணம் பல காட்டி இது உண்மையில் தோல்வி அல்ல என்று வாதாடப் போவதில்லை; தோல்வி கண்டோம் என்பதனை ஒப்புக்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கேரளத்தில் கண்ட தோல்வியை மறைத்திடப் புள்ளி விவரக் கணக்குத் திரைக்குப் பின்னே ஒளிந்து கொண்ட காமராஜர் போல, தருமபுரியில் முன்பு பெற்றதைவிட அதிக வாக்குகள் கழகம் பெற்றிருக்கிறது என்று கணக்குக் காட்டிடும் தந்திரத்தையும் மேற்கொள்ள முற்படவில்லை. ஆமாம்! தோற்று விட்டோம்! தோற்கடிக்கப்பட்டோம்! என்பதனைக் கூறிட அச்சம், தயக்கம் கொள்ளவில்லை; தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

தோல்வியை ஒப்புக்கொள்வதுமட்டுமல்ல; அந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி, காங்கிரஸ் தலைவர்கள் பேசிடும் இழிமொழிகள், எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுகள், ஒழித்தே விடுவோம் என்ற மிரட்டல்கள் ஆகியவற்றை வரவேற்கிறேன்.

நான், எனது கழகத் தோழர்களின் கண்முன்பும் பொதுமக்களுடைய கண்முன்பும். தோற்கடிக்கப்பட்ட கோலத்திலேயே நிற்க விரும்புகிறேன்—அவர்கள் காண—காண்பதனால் பெறவேண்டிய கருத்துக்களைப் பெற்றிட!

வளைந்த வாள்! நொறுங்கிய கேடயம்! பிய்த்தெறியப்பட்ட கவசம்! குருதி கசிந்திடும் வடுக்கள்!—இவைகளைப் பட்டுப் பீதாம்பரத்தாலோ, இரவல் மினுக்காலோ மறைத்துக்கொண்டு, என் தோழர்களின் முன்பு போலியான ஒரு காட்சிப் பொருளாக நிற்கப் போவதில்லை; தருமபுரியில் காங்கிரசால் தோற்கடிக்கப்பட்டவன் என்ற நிலையை மறைத்துக்கொள்ளாமல் நிற்க விரும்புகிறேன்; அந்த நிலையில் என்னை என் தோழர்கள் காணவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர்களே! உங்களால் முடிந்த மட்டும் இழிமொழிகளை மாலையாக்கி எனக்களியுங்கள், என் தோழர்கள் என்னை அந்த நிலையிலே காணட்டும்!

அடைபட்டுக் கிடந்த சேற்று நீர், கல் பெயர்க்கப்பட்டு ஒரு துளை தோன்றியதும் அதன் வழியாகக் கிளம்பி வேகமாகப் பாய்ந்தோடி வருவதுபோல, தருமபுரியில் வெற்றி கண்டதால் உங்களுக்குக் கிளம்பியுள்ள எக்களிப்பைக் காட்ட, என்னை ஏசுங்கள்! தூற்றுங்கள்! கேவலமான வார்த்தைகளை வீசுங்கள்! அவைகளை நான் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, உம்மால் எனக்கு அளிக்கப்படும் அந்த விருதுகளுடன், நான் என் தோழர்கள் முன் நிற்க விரும்புகிறேன்.

அதிலே எனக்குக் கேவலம் வரும் என்று எண்ணுகிறீர்கள்—மக்களின் மனப்பாங்கு அறியாததால்!

அவைகளைத் தாங்கிக்கொள்ள நான் அஞ்சுவேன் அல்லது கூச்சப்படுவேன் என்று எண்ணுகிறீர்கள்—என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால்!

நமது அண்ணன் கேவலப்படுத்தப்படுகிறான், தரும புரியில் கழகம் தோற்றதால், என்பதனை எவ்வளவுக்கெவ்வளவு விளக்கமாகத் தெரிந்து கொள்ளுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது — எனக்குமட்டுமல்ல—கழகத்துக்கு.

இன்று நீங்கள் வீசும் இழிமொழி, நாளைய எதிர்காலத்தை எமக்கு ஒளி நிரம்பியதாக்கிட உதவட்டும்; தெம்பு இருக்கும்போதே திட்டித் தீர்த்துவிடுங்கள்; பொன்னான வாய்ப்பு அல்லவா இது உங்களுக்கு; எமது எதிர்காலம் பொற்காலமாக இருக்க வேண்டுமானால் இப்போது உம்முடைய இழிமொழிகளை நாங்கள் பெற்றாகவேண்டும்; நாராசநடை வல்லவர்களைக் கொண்டு நன்றாகத் தூற்றுங்கள், எங்கள் உள்ளத்தில் பாய்ந்திடும் விதமாக! எமது தோழர்களின் கண்கள் குளமாகும் விதமாக! தோல்வி ஏற்பட்டால் என்னென்ன கொடுமைகள் விளைந்திடும், எவை எவைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டிவரும் என்ற உண்மையினை உணர்ந்திட!

தேர்தலில் நாம் வெற்றி பெற்றாகவேண்டும். தொடர்ந்து; இல்லையெனில், ஒரு இடத்தில் நாம் தோற்றாலும் நம்மை இழிவாகப் பேசிடவும், இதுதான் முடிவு என்று ஆரூடம் கணித்திடவும், பொதுமக்கள் மனத்தில் பீதி மூட்டிடவும் காங்கிரசின் பெருந்தலைவர்கள் முனைவார்கள் என்று நான் என் தோழர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களின் நாடியினை முறுக்கேற்றிவிடுவதனை விட, கழகத்தின் தோல்வியைக் காட்டி, நீங்கள் ஏசஏச, என்னைப்பற்றி இழிவாகப் பேசப் பேச, இடம் பிடித்தான்கள் குடம் குடமாகத் தமது தூற்றல் சேற்றை இறைக்க இறைக்க, என் தோழர்கள், வேதனை அடைவார்கள்; அந்த வேதனையிலிருந்து வெளிக்கிளம்பும் ‘சக்தி’ இருக்கிறதே, அது சாமான்யமானதாக இராது: நான் அதனைப் பெற விரும்புகிறேன். என்னையும் கழகத்தையும் இழிவாகப் பேசி ஏசுவதன் மூலம், என்வேலைப் பளுவைக் குறைக்கிறீர்கள்; என் கழகத் தோழர்களின் உறுதியையும் ஊக்க உணர்ச்சியையும் வலுவாக்கி வைக்கிறீர்கள்; வசவாளர்களே! நீவிர் வாழ்க! வாழ்க! நுமது நாவு நீள்க! நீள்க! உமது தூற்றல் அகராதி பெரிதாகுக! பெரிதாகுக!

ஒரு வெற்றி கிடைத்திட்டால், காங்கிரசார் எவ்விதமாக ஆர்ப்பரிக்கின்றனர் என்பதனைக் காணட்டும், கழகத்தவர் மட்டுமல்ல, பொதுமக்களும்.

ஒரு தோல்வி கழகத்தைத் தாக்கினால், அதன் விளைவாக என்னென்ன இழிமொழிகளைக் கழகம் தாங்கிக் கொள்ளவேண்டி வருகிறது என்பதனை உணர்த்திட, நான் ஆயிரம் விளக்கம் தருவதைவிட, உம்முடைய ஒரு அரைமணி நேரத்தூற்றல் பேச்சு மிக மிகப் பலன் தருவதாக அமையும். எனவே தூற்றுங்கள், எமது தோழர்களின் இதயத்தைத் துளைக்கும் அளவுக்கு அவர்களின் கண்கலங்கட்டும், நெஞ்சு பதைபதைக்கட்டும், இரத்தத்தில் சூடு ஏறட்டும்; அது கழகத்தின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தி வைக்கும்.

தருமபுரி தீர்ப்பளித்துவிட்டது என்கிறார்கள்—பெருந்தலைவர்கள்!!

திருச்செங்கோடும், திருவண்ணாமலையும், சென்னை மாநகரமும் தீர்ப்பளிக்கும் திருத்தலங்கள் அல்ல போலும்! அங்கெல்லாம் மக்கள், காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டியது, தீர்ப்பு அல்லபோலும்! தருமபுரியில் மட்டுந்தான் தீர்ப்பு தெரிகிறதோ! பந்தாடும் சிறுவனும் கை கொட்டிச் சிரிப்பான்!!

தருமபுரி தீர்ப்பளித்து விட்டது என்று பேசிடும் காங்கிரசின் பெரியதலைவர் திருவண்ணாமலையின் போது என்ன சொன்னார்? திருவண்ணாமலை தீர்ப்பு அளித்துவிட்டது என்று கூறி, கன்னத்தில் போட்டுக்கொண்டாரா? காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுக் காட்டினாரா? புத்தி வந்தது புத்தி வந்தது என்று சொல்லித் தலையில் குட்டிக்கொண்டாரா? தெரியுமே பொதுமக்களுக்கு, அவர்கள் காட்டிய போக்கும், பேசிய பேச்சும்!

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மக்களை ஏமாற்றி, கழகம் வெற்றிபெற்றுவிட்டது என்றார்.

கழகம் வெற்றிபெறும் போதெல்லாம், ‘இல்லாததும் பொல்லாததும்’ சொல்லிப் பெற்ற வெற்றி! காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தால் அது தீர்ப்பு! நாக்குத்தானா அவர்கள் பேசப் பயன்படுத்தும் கருவி!

தருமபுரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது ‘தீர்ப்பு’ என்றால் திருச்செங்கோட்டிலும், திருவண்ணாமலையிலும் கழகம் வெற்றி பெற்றதும் ‘தீர்ப்பு’ தானே!

திருச்செங்கோடு, திருவண்ணாமலைத் ‘தீர்ப்புகளை’ மதித்துக் காங்கிரஸ் கட்சி என்ன காவி உடுத்திக் கமண்டலம் எடுத்துக்கொண்டு காடேகிவிட்டதா! இல்லையே! போனால் போகட்டும், மற்றோர் சமயம் பார்த்துக்கொள்வோம் என்று இருந்துவிட்டது. இந்த இலக்கணம் எல்லோருக்கும் பொதுதானே! அப்படியிருக்க, தருமபுரியில் கிடைத்த வெற்றியால் மட்டும், ஏன் அவர்கள் தீர்ப்பு! தீர்ப்பு! என்று நாவாட, தலையாட, நாற்காலி மேஜையாட, ஒலிபெருக்கி உடனாட உரையாற்றுகின்றனர்? காரணம் இருக்கிறது, தம்பி! காரணம் இருக்கிறது.

அவர்களுக்குத் தாங்கள் குற்றம் செய்திருக்கிறோம் என்ற அச்சம் நிரம்ப இருந்திருக்கிறது.

நமது குற்றம் வெளிப்பட்டுவிடும்; தண்டிக்கப் பட்டுவிடுவோம்! என்ற அச்சம் இருந்திருக்கிறது.

மறுக்க முடியாததும் மறைக்க முடியாததுமான குற்றங்களைச் செய்துவிட்டிருக்கிறோமே, மக்கள் எப்படி அவைகளை மறந்துவிடுவார்கள், எப்படி மன்னித்து விடுவார்கள்? நிச்சயமாக நம்மைத் தண்டிக்கத்தான் போகிறார்கள் என்ற திகில்கொண்ட நிலையிலேதான் அவர்கள் தருமபுரி வந்தனர்.

ஆனால், தருமபுரியில் வெற்றி அவர்கட்கு என்றதும், அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை; சந்தேகத்துக்கு இடமற்ற தன்மையில் குற்றம் மெய்ப்பிக்கப்படவில்லை என்ற காரணம் காட்டி, கொலையாளி விடுதலை செய்விக்கப்பட்டால், அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக் கொந்தளிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்; அந்த நிலையில் உள்ளனர்! நல்லதீர்ப்பு! நல்ல தீர்ப்பு! என்று பாடுகின்றனர். நாங்கள் வென்றோம்! நாங்கள் வென்றோம்! என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

தருமபுரியில் அவர்கள் வெற்றியை எதிர்பார்க்கவில்லை; வெற்றிக்கு உரியவர்கள் தாமல்ல என்ற எண்ணம் அவர்களிடம்.

அந்த நிலையில் வெற்றி என்று ஏற்பட்டதும், அவர்களால், நிற்க முடியவில்லை, நினைத்துப் பார்க்க முடியவில்லை; வாயைத் திறக்கிறார்கள், வார்த்தைகள் உருண்டோடி வருகின்றன.

“இவன்தான் களவாடினான் என்பதற்குப் போதுமான சான்று இல்லை; மெய்ப்பிக்கப்படவில்லை” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

குற்றக் கூண்டிலே நின்றவன் மகிழ்ச்சிப் பெருக்கடைந்தான், தன் நிலையையும் மறந்தான்.

“அப்படியானால் அந்தத் தங்கச் சங்கிலியை நான் திருப்பித்தர வேண்டியதில்லையே?”
என்று கேட்டுவிட்டானாம், தீர்ப்பளித்த நீதிபதியே, தான் எவ்வளவு பெரிய தவறான தீர்ப்பளித்து விட்டோம் என்பதை உணர்ந்து திகைத்திடத் தக்க விதமாக.

அவன் விவரமறியாத குற்றவாளி! காங்கிரஸ் தலைவர்கள் எல்லாத் திறமையும் பெற்றவர்களாயிற்றே. ஆகவே, குளறிக் கொட்டவில்லை, தீர்ப்புப் பிரமாதம் என்று பேசித் திருவிழா கொண்டாடுகிறார்கள்.

தருமபுரியில் மட்டுமல்ல, எத்தனையோ இடங்களில் எத்தனையோ தடவைகளில், எத்தனையோ விவரமறிந்தவர்கள்கூட மெய்போன்ற பொய்யை ஆதாரமாகக் கொண்டு தவறான தீர்ப்பு அளித்து விடுவதுண்டு.

கள்வனைக் கொண்டுவா! என்ற கூறவேண்டிய மாமன்னன் கள்வனைக் கொன்று வா!

என்று கூறியபோது, மன்னன் தீர்ப்பு-நீதிநெறி வழுவாத மன்னன் தீர்ப்பு—செங்கோல் வளையாச் சிறப்புடையான் தந்த தீர்ப்பு என்றுதான் அவையோர் கருதினர். கோவலனைக் கொடுமைக்கு இரையாக்கிய கெடுமதியாளன், “இஃதன்றோ நல்ல தீர்ப்பு” என்றுதான் பெருமிதத்துடன் கூறியிருப்பான்.

உண்மையான தீர்ப்பு பிறகல்லவா கிடைத்தது, ஒற்றைச் சிலம்பேந்திய கண்ணகி சிலம்பினை உடைத்து உள்ளே உள்ள பரல்களைக் காட்டி, தன் கணவன் குற்றமற்றவன் என்பதனை மெய்ப்பித்தபோது!

எனவே, திருவண்ணாமலையையும் திருச்செங்கோட்டையும், சென்னை மாநகரையும் தீர்ப்பளிக்கும் தகுதி பெற்ற இடங்களல்ல என்று கருதிக்கொண்டு, தருமபுரி மட்டுமே தீர்ப்பளிக்கும் இடம் என்று காங்கிரசார் கூறினாலும்—அது சொத்தை வாதம்—அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதான் என்றோ, முடிவானதுதான் என்றோ கூறி விடுவது எங்ஙனம் பொருந்தும்?

தரப்பட்ட ஆதாரங்களைக் கொண்டும், காட்டப்பட்ட சான்றுகளை நம்பியும், எடுத்துக் கூறப்பட்ட வாதங்களைக்கொண்டும், தரும்புரி மக்கள் அந்த விதமான தீர்ப்பு அளித்துவிட்டனர்.

இதனாலே நான் தருமபுரி மக்கள் மீது குற்றம் கூறவில்லை; அவர்களின் நேர்மையையும் திறமையையும் சந்தேகிக்கவில்லை; நான் கூறிக்கொள்வது, நாம், வழக்கை எடுத்துரைத்ததிலும், சான்றுகளை விளக்கியதிலும் குற்றத்தை மெய்ப்பித்துக் காட்ட வாதாடியதிலும், தேவைப்படும் அளவு திறமையைக் காட்டாததால் வழக்கின் வடிவம் கெட்டுவிட்டது; தீர்ப்பு வேறுவிதமாகி விட்டது என்றுதான் கருதுகிறேன்.

நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டுமேயன்றி, தருமபுரி மக்கள் மீது வருத்தப்பட்டுக் கொள்வது முறையாகாது.

நியாயம் காங்கிரசின் பக்கம் இருந்ததாலும் அல்ல; நீதிபதிகள் தவறான போக்கினர் என்பதாலும் அல்ல; வழக்கை எடுத்துரைப்பதில் நாம் வெற்றி பெறாததாலேயே தீர்ப்பு காங்கிரசுக்குச் சாதகமானதாகத் தரப்பட்டுவிட்டது.

இது தோல்வியை மறைத்திடக் கூறப்படும் தத்துவம் அல்ல; நான் தோல்வியை ஒத்துக்கொண்ட பிறகே இதனைக் கூறுகிறேன்; உண்மை நிலைமையினை உவகைக் கூத்தாடும் காங்கிரஸ் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குக்கூட அல்ல; நமக்கே உண்மை நிலைமை புரியவேண்டும் என்பதற்காக.

பிரச்சாரத்தில் திறமை மிக்கவர்களாயிற்றே, நீங்களா போதுமான முறையிலே வழக்கை எடுத்துரைக்கத் தவறிவிடுவீர்கள்! என்று நையாண்டி செய்வார்கள்; உணருகிறேன். நான் கூறுவது, நமது பிரசார முறை செம்மையாக இல்லை என்பது அல்ல; வழக்கு மிக எளிதானது; சிக்கலற்றது; இதனை விளக்க நாம் அதிகமான முயற்சி எடுக்கத் தேவையில்லை, குற்றம் புரிந்துவிட்டது காங்கிரஸ் கட்சி என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும், ஆகவே, தண்டிக்க முற்படுவர் என்ற நம்பிக்கையை, அளவு கடந்த முறையிலே வைத்துக்கொண்டு தீர்ப்பு நிச்சயமாக நமது பக்கம் தான், இதிலென்ன சந்தேகம், என்ற முனைப்புடன் தருமபுரி சென்றோம். அதைக் கூறுகிறேன்.

அச்சத்தோடு வந்தவர்கள், குற்றத்தை மறைத்திடத் திறமைகாட்டினர், தமக்கு ஆதரவான தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

தீர்ப்பு நம் பக்கம்தான் என்ற நம்பிக்கையை மிக அதிக அளவு கொண்டிருந்ததால், நாம் மெத்தனம் காட்டினோம்; தோற்கடிக்கப்பட்டோம்.

இது தோல்வி அல்ல என்று வக்கணை பேச அல்ல இதனை நான் குறிப்பிடுவது.

இந்தப் போக்கு இனிக்கூடாது என்ற உண்மையினை நாம் உணர்ந்துகொள்வதற்கு இந்தத் தோல்வி ஒரு பாடமாக அமையட்டும் என்பதற்காக.

உண்மை எது, பொய் எது என்று கண்டுகொள்வது மிக எளிது என்று எண்ணிவிட்டோம்; பலர் அவ்விதம் எண்ணிக்கொள்கிறார்கள். மெய்யும் பொய்யும் கிட்டத்தட்ட குயிலும் காகமும்போல என்று கொள்ளலாம்; பலரால் இதுவா அதுவா என்று எளிதாகக் கண்டுபிடித்து விட முடிவதில்லை. அதிலும் பொய் பொன்னாடை அணிந்துகொண்டும், மெய் புழுதிபடிந்த மேனியுடனும் உலா வரும்போது பலருக்கு மயக்கம்—பொய்யின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர்.

நாம், தம்பி! உண்மை நமக்குப் புரிவதால், எல்லோருக்கும் உண்மை புரியத்தானே செய்யும் என்று எண்ணிக் கொள்கிறோம்.

உண்மையின் பக்கம் நாம் இருக்கிறோம் என்பது மட்டும் போதாது. உண்மையின் பக்கம் அனைவரும் வந்து சேரும்படி செய்யவும் வேண்டும். அதற்கான முறைகளைத் திறமையாக, செம்மையாகச் செய்தே வெற்றி பெற முடியும். அதிலே நாம் தவறிவிட்டோம்; காரணம், திறமைக் குறைவு என்றுகூடக் கூற மாட்டேன்; உண்மையை உண்மை என்று மெய்ப்பிக்க வாதாடவும் வேண்டுமா என்று எண்ணிக்கொண்டு விட்டதால்.

இது எப்படிப்பட்ட அரசு என்பது பற்றியும், இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் படும் அல்லல்பற்றியும், இந்த அரசு நடத்திக் காட்டிய அடக்குமுறைக் கொடுமைபற்றியும், மக்கள் மிக நன்றாக அறிவார்களே; அப்படிப்பட்ட மக்கள், தேர்தலில் எப்படிக் காங்கிரசை ஆதரிக்க முடியும்! என்று எண்ணிக் கொண்டோம்.

மக்களில், அரசியல் பிரச்சினைகளை அறிந்தவர்கள், இந்த அரசின் இயல்பினைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்; அதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

ஆனால், அரசியல் பிரச்சினைகளைத் தாமே நேரடியாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பவர்கள் என்று ஒரு பகுதி, மற்றவர் கூறிடும் முடிவினை ஏற்றுக்கொள்ளும் ஒரு பகுதி என்ற முறையில் தான் சமூகம் இருக்கிறது என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

மக்களாட்சி முறையின் மாண்பினை நன்கு உணர்ந்துள்ள நாடுகளில், தாமாகவே அரசியல் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து தக்க முடிவினை மேற்கொள்வோரின் அளவு அதிகம், இங்கு இருப்பதைக் காட்டிலும்.

எனவேதான், இங்கு உண்மைக்காகப் பரிந்துரைக்கும் பணியிலே மும்முரமாக ஈடுபட்டாக வேண்டி இருக்கிறது.

இந்தப் பணி எந்த அளவுக்குத் தேவை என்பதை மறந்த நிலையில் தருமபுரி சென்றோம்; விளைவு நமக்கு வேதனை தந்துவிட்டது.

இந்த அரசு நடாத்திய அடக்குமுறை பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும் கடமையைக் காட்டிலும், இவருக்கா அவருக்கா ஓட்டு என்ற முறையிலேயும், இன்னின்னார். சொல்கிறார்கள் என்பதற்கா, அவர்களெல்லாம் சொல்கிறார்கள் என்பதற்கா? எதற்கு நாம் கட்டுப்படுவது என்ற முறையிலும், தருமபுரி மக்கள் இந்தத் தேர்தலைக் கவனித்தார்கள்.

சுட்டு வீழ்த்தப்பட்டவர்களிடம் இரக்கமற்றவர்களாக, இழப்புக்கு ஆளானவர்களின் வேதனையைத் துடைக்கவேண்டும் என்ற எண்ணமற்றவர்களாக, தருமபுரி மக்கள் இருந்திருக்க முடியாது—எவரும் அவ்விதமானவர்களாக இருந்திட மாட்டார்கள்.

ஆனால், அந்தக் கருத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பு இந்தத் தேர்தல் என்ற எண்ணத்தைவிட வேறு பலவிதமான எண்ணங்களை அவர்கள் கொண்டுவிட்டனர் என்றே தோன்றுகிறது. நாமோ இதயமுள்ளவர்கள் எவரும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த ஒரு ஆட்சியை நடத்திவரும் கட்சியை ஆதரிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையை அளவுகடந்த முறையிலே கொண்டுவிட்டிருந்தோம்.

மக்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய நீதி நியாய உணர்ச்சி, பரிவு பச்சாத்தாப உணர்ச்சி ஆகியவற்றினைக்கூட உருக்குலையச் செய்திடும் வல்லமை, காங்கிரஸ் கட்சியினருக்கு உண்டு என்பதைத் தருமபுரி எடுத்துக்காட்டிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு உள்ள இந்த வல்லமை, போற்றுதலுக்குரியதாகாது; நச்சுப்பை கொண்டுள்ளதற்காகப் பாம்பினைப் பாராட்டுவார் இல்லை,

நாம் செய்த தவறு, காங்கிரஸ் கட்சி இந்த நச்சுப் பரப்பிடும் செயலுக்கேற்ற திறமை பெற்றுளளது என்பது பற்றி அறிந்துகொள்ளாதது என்றும் கூறுவேன்.

நாமோ குற்றம் செய்துவிட்டோம்; மக்களோ நம்மை மன்னிக்கமாட்டார்கள். தண்டிக்கத்தான் போகிறார்கள் என்ற அச்ச உணர்ச்சியால் உந்தப் பட்ட காங்கிரஸ் கட்சி, இரண்டு திங்கள், ஒரு சிற்றூர் விடாமல் தமது பணியாளர்களை ஏவி, மக்கள் மனத்திலே இருந்து வந்த கொதிப்பை மாற்றவும், அவர்கள் முன் வேறு பிரச்சினைகளை வைக்கவும் முனைந்து வந்தபோது, கழகம் அதனைப் பெரிதாகக் கருதவில்லை, தடுத்திடவும் முனையவில்லை.

முதலிலே அறிவிக்கப்பட்ட தேர்தல்நாள் ஒத்தி வைக்கப்பட்டது; வேறோர் நாள் குறிக்கப்பட்டது; அந்த இடைவெளியின்போது, இச்சகம் பேசிடவும், நச்சுக்குழியைப் பச்சை இலை போட்டு மூடிமறைத்திடவும், நாவிலே தேன் தடவிவிடவும், காங்கிரசார் மெத்தத் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டனர்.

திண்ணைப்பேச்சு, சாவடிப்பேச்சு, கூட்டுறவு அமைப்புகளில் கூடிக்குலவுதல் போன்ற முறைகளைக் காங்கிரஸ் கட்சி தன் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டது.

இந்த முறைகளைக் கழகம் மேற்கொள்ளவில்லை; முயலவில்லை; காரணம்? மக்கள் எப்படியும், அடக்கு முறையை அவிழ்த்துவிட்ட காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பார்கள் என்ற நம்பிக்கை.

கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களிலே ஒரு பகுதியினரே கூட, சென்ற தேர்தலின்போது காணப்பட்ட புள்ளிவிவரத்தைக் கொண்டு ஒரு தவறான முடிவுக்கு வந்திருந்தனர். வெற்றிபெற்ற சுயேச்சை உறுப்பினர் மறைந்த திரு. வீரப்ப செட்டியாருக்குக் கிடைத்த 24 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் எதிர்ப்பாளரின் வாக்குகள், ஆகவே, இம்முறையும் அந்த 24 ஆயிரம் வாக்குகளும் காங்கிரசுக்கு எதிர்ப்பாகவே இருக்கும், ஆகவே, அவை அவ்வளவும் கழகத்துக்குச் சேரும் என்று கணக்கிட்டனர்.

அந்தக்கணக்கு பொய்த்துவிடுமா என்பது பற்றிய எண்ணம்கூட எழவில்லை; அவ்வளவு நிச்சயமாக இருந்து விட்டோம். தேர்தல் முடிவு, அந்தக் கணக்கு தவறு என்பதைக் காட்டிவிட்டது; அந்த வாக்குகளைக் காங்கிரஸ் கட்சி பெற்றுக்கொள்ள எல்லா முறைகளையும் பயன்படுத்திக் கொண்டது. அந்த வாக்குகள் நம்மை விட்டுவிட்டு வேறு எங்கும் போய்விடாது என்று எண்ணினோம்; தோல்வி கண்டோம்.

இவற்றை நான் கூறுவதன் காரணம், தம்பி! தோல்வி எதிர்பார்த்ததுதான் என்று வாதாட அல்ல; வெற்றி நிச்சயம் என்று அதிக அளவு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு விட்டோம், தொகுதியின் நிலைமையை நன்கு ஆராயாமல் என்பதைக் காட்டத்தான்.

இன்றுகூட தனித்தனியாகத் தருமபுரித் தொகுதி மக்களைக்கண்டு,

இந்தி ஆட்சிமொழி ஆக்கப்படுவது நியாயமா?

மாணவர் கிளர்ச்சியை இரக்கமற்ற விதமாகத்தாக்கித் தகர்க்க முற்பட்டது நியாயமா?

அடக்கு முறையை அவிழ்த்து விட்டு 59 பேர் துப்பாக்கிக்குப் பலியாகிடச் செய்தது நியாயமா?

என்று கேட்டால், நியாயம் அல்ல என்று தான் கூறுவார்கள்.

ஆனால், காங்கிரஸ் பணியாளர் இரண்டுதிங்களாக நடத்திவந்த பிரசாரம், அதற்காக நடப்பது அல்ல இந்தத் தேர்தல்-தருமபுரி தலைநகராக வேண்டுமா வேண்டாமா? தலைநகர் வேண்டும் என்றால், காங்கிரஸ் வெற்றி பெற்றாக வேண்டும், அதற்காகத்தான் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதுதான்.

இந்தி ஆட்சி மொழியாவதைக் கண்டிக்கிறோம், அடக்கு முறையைக் கண்டிக்கிறோம். ஆனால், அதே போது தருமபுரி தலைநகராக வேண்டும் என்றும் விரும்புகிறோம், அதற்காகவே காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்ன எண்ணத்துடன், தருமபுரியின் குறிப்பிடத்தக்க புள்ளிகள் முனைந்து நின்று பணியாற்றினர். காங்கிரசின் வெற்றிக்கு அது மிக நல்லவாய்ப்பாக அமைந்தது.

மறுப்பார்கள் காங்கிரஸ் கட்சியினர்; எனினும், நான் மனதார நம்புவதை. எனக்கு அறிவிக்கப்பட்டதை நான் சொல்லுகிறேன்: காங்கிரசுக்கு எதிராகப் பணியாற்ற முனைபவர்கள், பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப் படுவார்கள் என்ற திண்ணைப் பேச்சு, தருமபுரித் தொகுதியில் மிக வேகமாகப் பரவிற்று.

அமைச்சர்களோ, தரமுள்ள தலைவர்களோ இந்தத் தவறான பிரசாரம் செய்தார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுத்திரட்டச் சென்ற பணியாளர்கள், அதிக அளவில் அரசியல் தெளிவில்லாதாரிடம் இந்த அச்சம் எழச்செய்து விட்டிருந்தனர் என்று அறிகிறேன்.

கருணாநிதியைப் பார்க்கிறீர்களல்லவா? வழக்குக் கூடப் போடாமல் உள்ளே பிடித்து அடைத்து விட்டார்கள், பாதுகாப்புச் சட்டப்படி!

என்று பேசி, பலருக்கு, உண்மைதானே! ஒரு பெரிய கட்சியின் பொருளாளருக்கே இந்தக் கதி என்றால், நாம் காங்கிரசை எதிர்த்தால், என்னதான் செய்ய மாட்டார்கள்! நமக்கேன் வீண் வம்பு! காங்கிரசுக்கே வேலை செய்வோம்! என்ற எண்ணம் எழுந்தது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அடக்குமுறை கண்டு அருவருப்பும் ஆத்திரமும் எழுவது போலவே, சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு அச்சம் ஏற்பட்டுவிடுவது இயற்கை,
இந்த அச்சம் காரணமாகப் பலர் காங்கிரசுக்கு ஓட்டுத் திரட்டும் வேலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றைக் கூறும் நான், ஆகவே, தருமபுரியில் நாம் தோற்றது வியப்பல்ல என்று வாதாடவில்லை; இந்த நிலைமைகளை மீறி நாம் பணிபுரிந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். கழகத்தின் பணி, சூது சூழ்ச்சிகளை முறியடிக்கத் தக்கதானதாக வலிவு பெற்றாக வேண்டும். தருமபுரித் தோல்வி இந்தப் பாடத்தைத்தான் நமக்கு அளிக்க வேண்டும்.

தம்பி! மகனை இழந்த மாதா மனம் நொந்து கதறிக்கிடக்கிறாள். கணவனை இழந்த காரிகை கண்ணீர் வடிக்கிறாள்; அண்ணனை இழந்த தம்பி புரண்டு அழுகிறான்! இத்தனைக்கும் காரணமான அடக்கு முறையை அவிழ்த்துவிட்ட ஆட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள கட்சி தேர்தலிலே வெற்றி பெறுகிறது என்றால் இது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போன்றதல்லவா, இது நடந்துவிட்டதே தருமபுரியில்!!

“சுட்டோம், சுடுவோம்!” என்று ஆட்சியினர் ஆர்ப்பரித்தாலும் வியப்பில்லையே!

சுட்டோம், ஓட்டளித்தனர் என்று வாதாடிடவும் முனைவரே வன்கணாளர்கள். எதை எதையோ எண்ணிக் கொண்டு, தருமபுரி மக்கள் நடந்து கொண்ட போக்கு, ஆட்சியாளர்களுக்கு, நாம் எப்படியும் நடக்கலாம், எதையும் செய்யலாம், எத்தனை முறையும் சுடலாம், எத்தனை பிணமும் விழலாம், யார் என்ன கேட்க முடியும் என்ற எண்ணத்தை அல்லவா உண்டாக்கி விடும். தோற்றது கழகமா! இல்லையே! அடக்கு முறைக்கு ஆளான மக்களின் இதயக் குமுறலை அல்லவா, இந்தத் தேர்தல் தோல்வி, பொருளற்றதாக்கி விட்டது. நல்லாட்சிக்கான முயற்சிக்கல்லவா பலமான அடி விழுந்து விட்டது!

வீழ்ந்துபட்ட மக்களின் சார்பில் நின்றோம், நம்மை வீழ்த்தி விட்டார்கள். வேதனைப்பட்டவர்களின் துயர்துடைக்க முனைந்தோம். தோற்கடித்து விட்டார்கள். இந்தத் தோல்வி, விழிப்புற்ற தமிழர்களுக்கன்றோ பெருந்தோல்வி என்றாகி விட்டது. தேம்பித் தவித்திடும் தமிழ்த்தாயே! உன் கண்ணீரைத் துடைத்து, நீதியை வெற்றி பெறச் செய்ய முடியாமற் போய் விட்டது. என்னை மன்னித்துவிடு! என்றன்றோ நாம் ஒவ்வொருவரும் மண்டியிட்டு முறையிட்டுக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது.

மகனே, மனம் தளர்ந்து போகக்கூடாது. நீதியின் பக்கம் நின்றாய், மகிழ்ச்சி! எனக்காகப் பரிந்து பேசிப் பணியாற்றினாய், பெருமைப்படுகிறேன். உன் வல்லமை வளரும், தோல்வி வெற்றிக்கு வழி அமைக்கும் என்று கூறித் தமிழ்த்தாய் நம்மைத் தேற்றுவாள் என்பது உறுதி.

நியாயம் சில வேளைகளில் வெற்றிபெறாமற் போய் விடக்கூடும், அதனாலேயே நியாயத்தின் பக்கம் நிற்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு அறிவாளர் எவரும் வரமாட்டார்கள். நியாயம் வெற்றி பெறத்தக்க விதமாக உழைப்பதற்கான வலிவினைத் திரட்டிக் கொள்வோம் என்ற உறுதியைப் பெறுவதே தீரர் கடன்.

நஞ்சு கொடுத்துச் சாக்ரடீசைச் சாகடித்துவிட்டதாலேயே, சாக்ரடீசின் கொள்கையைச் சாகடித்துவிட முடிந்ததா! இரண்டு அங்குல நீளமே உள்ள தேள், கொட்டினால் ஆறடி ஆள் கூடத் துடிதுடிக்கிறான்; அதனாலேயே ஆளைவிடத் தேள் வலிவுள்ளது என்றாகிவிடுமா; ஆளிடம் அந்தத் தேள் சிக்கவில்லை, கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை நிலை. தருமபுரியில் கழகத்தைத் தோற்கடித்து விட்டதாலேயே காங்கிரசுக்கு எதிராகத் திரண்டு கொண்டிருக்கும் எதிர்ப்பும், அந்த எதிர்ப்பை உண்டாக்கிக் கொடுக்கும் மக்களின் எழுச்சியும் மடிந்துவிட்டது என்றாகிவிடாது.

தருமபுரியில் பெற்ற வெற்றி காரணமாகக் காங்கிரஸ் கட்சி தனது வல்லமைபற்றி மிக அதிகமான கணக்குப் போட்டுக் கொள்ளுமானால் அது நமக்கு நல்லதுதான். தொடர்ந்து தவறுகளைச் செய்யவும், மக்களின் மனக்கொதிப்பை அதிகமாக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடவும் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதிலே சுவை காணவும், தனது ஊழலாட்சியைத் திருத்திக் கொள்ளாதிருக்கவும், துணிந்து விடும். அந்தக்கட்டம் வேகமாக வளரும்போது, இதுவரை அக்கறையற்று இருந்துவந்த மக்களும் சீறி எழுவார்கள்; ஆசைக்கு ஆட்பட்டு அநியாயத்துக்குத் துணைபோனவர்களும் தமது தவற்றினை உணர்ந்து நீதியின் பக்கம் நிற்பார்கள்; அஃது காங்கிரசாட்சியை வீழ்த்தும் வலிவை மக்களுக்கு அளித்திடும்.

அந்த நம்பிக்கையுடன் கழகம் பணியாற்றிவரும்; தருமபுரித் தோல்வி அந்தப் பணியின் தரத்தையும் வேகத்தையும் அதிகமாக்கிவிடுமேயன்றித் துவண்டிடச் செய்யாது என்பதனையும் நான் மறந்திடவில்லை.

என்ன கொடுமை செய்தாலும் நமக்குத்தான் ‘ஓட்டு’ என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்குத் தடித்து விடச் செய்கிறது தருமபுரி.

நமக்கோ, உன் வலிவு போதாது, வளர வேண்டும்; முறை செம்மைப் படுத்தப்பட வேண்டும்; முயற்சியில் புதுமுறுக்கு ஏற வேண்டும், உண்மைக்காகப் பரிந்து பேசினால் மட்டும் போதாது, உண்மை வெற்றிபெறத் தக்கவிதமான வலிவு உண்மைக்குக் கிடைத்திட வழி கண்டாக வேண்டும் என்ற பாடத்தைத் தருகிறது.

வெற்றி எந்த நேரத்தில் எந்தக் கட்சிக்குக் கிட்டுகிறதோ, அந்தக் கட்சியை வலிவுள்ள கட்சி என்று எண்ணிக்கொள்வதும், வலிவு இருக்கிற காரணத்தாலேயே அது நியாயமான கட்சி என்று எண்ணிக் கொள்வதும் கூர்த்தமதி படைத்தோரின் போக்கல்ல; தெளிவற்றோர் பெற்றிடும் மன மயக்கம்.

கழகம் நடாத்துவோர், வலிவுள்ள கட்சியில் தஞ்சம் புகுந்து தகத்தகாயம் பெற முனைந்தவர்கள் அல்ல; சாதாரணக் கட்சியை வலிவுள்ளதாக்கியவர்கள்! ஒளி உள்ள இடம் ஓடி வெளிச்சம் போட்டுக் கொண்டவர்கள் அல்ல, கழகத்தினர்; இருண்ட இடத்தில் ஒளி எழத் திருவிளக்கு ஏற்றிவைத்தவர்கள்; எங்கே சென்றால் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று அலைந்து அதற்கோர் இடம் கண்டுபிடித்தவர்களல்ல, தேர்தலில் வெற்றி கிடைக்கத்தக்க வலிவினை உழைத்துப் பெற்றிடும் உறுதிகொண்டு பணிபுரிவோர். கழகத் தோழர்கள் விளைந்த காட்டுக்குருவிகளுமல்ல, மரம் பழுத்தது கண்டு பறந்தோடி வரும் வெளவாலும் அல்ல, அரைக்க அரைக்க மணம் எழும்பும் சந்தனம் போன்ற இயல்பினர். தருமபுரித் தோல்வியை நமது சிந்தனையைக் கிளறி, முறைகளைச் செம்மைப்படுத்தும் ஓர் வாய்ப்பாக மாற்றிட வல்லவரே, கழகத் தோழர்கள்.

இந்த நமது இயல்பை மேலும் விறுவிறுப்பானதாக்கிட, வெற்றிபெற்ற காங்கிரசார் ஏவிடும் தூற்றலையும் பயன் படுத்திக்கொள்வோம். வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சிவிட்டனர்; ஆம்! குருதியைத் துடைத்துக் கொண்டு, தொடர்ந்து பணியாற்றி வருவோம் துயரம் காரிருளெனக் கப்பிக்கொண்டிருக்கும், உணருகிறேன்; ஆனால், தம்பி! விடிவதற்கு முன்பு கருக்கல் அதிகமாகத் தான் இருக்கும். பொழுது புலரும், பொறுத்துக்கொள்; பணியாற்று.


18-4-1965

அண்ணன்,
அண்ணாதுரை