தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006
காஞ்சிக் கடிதம்: 16
இதயம் வென்றிட...2
பர்மிட்டும் லைசென்சும் பகை போக்கிப் பாசத்தை ஊட்டிவிடும்!
மதில் மேல் பூனை நிலையில் சிலர்
கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்க!
மண்டலத்தின் தேர்தல் நேர வேலைகள்
தம்பி,
சென்ற கிழமை கூறியபடி தேர்தல் காலத்திலே விறுவிறுப்புடனும், மிகுந்த தந்திரத்துடனும் பணியாற்றிடும் சிலர்பற்றி எடுத்துக்காட்டுகிறேன். இவர்களை நமது தோழர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஊருக்குஊர் பெயர்கள் மாறிமாறி இருக்கும்-இயல்பு ஒரேவிதமானதாகவே இருக்கும்.
இவர்கள் தேர்தல் சமயம் தவிர மற்ற வேளைகளில் பொதுவாழ்க்கையில் இல்லாமல் இருக்கக்கூடும்; தேர்தலின்போதுமட்டும் தீவிரமாகிவிடுவர்.
தர்மபுரித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, நமது நண்பர்கள், காங்கிரசில் இன்னாரை வேட்பாளர் ஆக்கினால் இன்னின்னார் வேலை செய்யமாட்டார்கள். ஒதுங்கிக்கொள்வார்கள் என்றுகூடச் சொன்னார்கள். அவ்விதம் நம்பினார்கள்; நம்பிக்கை கொள்ளும்படி அவர்கள் பேசியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஆனால் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, ஒதுங்கி இருப்பார்கள், ஒப்புக்கு வேலை செய்வார்கள் என்று எவர்களைப்பற்றி நமது நண்பர்கள் கூறிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அனைவரும் தீவிரமாக வேலை செய்தனர்.
அது தவறு என்று நான் கூறவில்லை; அது முறையுங்கூட.
ஆனால் அவர்கள், உண்மையில் ஒதுங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதனை நமது தோழர்கள் முன்னதாகவே உணராமலிருந்தது, தவறு இல்லையா?
கசப்பு, வெறுப்பு, பகை எனும் உணர்ச்சிகள் கொந்தளிக்கும் உள்ளம் என்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாகத்தான் காங்கிரசில் உள்ளவர்களில் பலர், சாதாரண நாட்களில் பேசிக்கொள்வார்கள்; நம்மிடமே கூடப் பேசுவார்கள்.
★
இந்தப் பக்தவத்சலம் இப்படித் துப்பாக்கித் துரைத்தனம் நடத்துவது, அதற்கு நாங்கள் துதிபாடிக்கிடப்பது என்றால், அது எப்படி முடியும், எத்தனை நாளைக்கு முடியும்?
★
நான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன், “இந்தி ஆட்சிமொழி ஆகக்கூடாது. ஆங்கிலம் நீடித்திருக்க வேண்டும்; இதற்கு உத்தரவாதம் சட்டப்படி கிடைக்காத வரையில், நான் காங்கிரசுக்காக வாதாட முடியாது” என்று.
★
காங்கிரசுக் கட்சி புனிதமானதுதான், ஆனால் கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுவது போலாகிவிட்டது நிலைமை. ஊரை அடித்து உலையில் போடுபவனெல்லாம் காங்கிரசிலே! இந்த நிலைமையில் உள்ள காங்கிரசை ஆதரிக்கும்படி ஏழைகளிடம் எப்படிக் கேட்டுக்கொள்ள முடியும்? முடியாது என்று கூறிவிட்டேன்.
சர்க்காரின் மந்தத்தனம். நிர்வாக ஊழல், இவ்விதம் இருக்கும்போது, எப்படி ஓட்டுக் கிடைக்கும் காங்கிரசுக்கு என்று கேட்டேன், தலைவர்களை. எனக்கென்ன பயம்!
இவ்விதமாகவெல்லாம், நம்மிடமே வந்து பேசும் காங்கிரஸ்காரர்கள் உண்டு. உள்ளபடி அவர்களில் பலருக்கு மனக்குமுறல்கூட உண்டு. ஆனால், தேர்தல் சமயத்தில், அவர்களில் மிகப் பெரும்பான்மையினர், சட்டை மாட்டிக் கொள்கிறார்கள், காங்கிரசுக்கு ஓட்டு வேட்டையாடுவதில் மும்முரமாகிவிடுகிறார்கள். ஏன்? அவர்களின் குமுறல் அடங்கிப்போகும்படியான நிலைமை ஏற்பட்டுவிடுகிறது; அதற்கு ஆயிரத்தெட்டு வழிகள் உள்ளன; ஆளுங்கட்சிக்கு மட்டுமே அந்த வசதிகள் உண்டு.
ஒரு சிறு சலுகை, மன எரிச்சலைக் குறைத்து விடுகிறது.
ஒரு பர்மிட்டும் லைசென்சும், பகையைப் போக்கிவிடுகிறது; பாசத்தை ஊட்டிவிடுகிறது.
★
அவரே தோளின்மீது கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பேசினார், என்ன! உன்னைப்பற்றி என்னென்னவோ சொல்லுகிறார்களே! காங்கிரசுக்கு வேலை செய்யப்போவதில்லை என்று சொன்னாயாமே. நான் நம்பவில்லை. கேள்விப்பட்டபோது திடுக்கிட்டுப்போனேன் என்று கூறினார். அவருடைய நிலைமைக்கு, வீடுதேடி வந்து என்னைப் பார்த்து, தோளின்மீது கைபோட்டுக்கொண்டு தோழமையுடன் பேசுவது என்றால் சாதாரணமா! அவர் அவ்வளவு
தூரம் கேட்ட பிறகு நான் எப்படி மறுக்க முடியும்? மறுநாளே கிளம்பி வேலை தொடங்கினேன்.
என்று பேசிடும் உண்மைக் காங்கிரஸ்காரரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
★
ஆளுங்கட்சியை அடியோடு பகைத்துக்கொள்ளப் பலரால் முடிவதில்லை.
மயக்குமொழி கேட்டுப் பலியாகிவிடாத உறுதி பலருக்கு இருப்பதில்லை.
அச்சமும் ஆசையும் அலைக்கழிக்காத விதமான உள்ள உரம் இருந்தால் மட்டுமே, ஆளுங்கட்சியை எதிர்த்து நிற்கமுடியும்.
வெற்றியோ தோல்வியோ, நான் என் கட்சிக்காக, எனக்குப் பிடித்தமான கொள்கைக்காக என்று கூறிடும் துணிவு, நேர்மையின்மீது கட்டப்பட்டிருக்க வேண்டும்.
தனித்து நிற்க நேரிட்டாலும் தயங்கமாட்டேன் என்று கூறிடும் துணிவு, ஒரு கொள்கையிடமோ, அந்தக் கொள்கைக்காக உள்ள அமைப்பினிடமோ நாம் வைத்திருக்கும் பற்று இருக்கிறதே அதன்மீது கட்டப்பட வேண்டும்.
அத்தகைய இயல்பினர் நிரம்பப் பேர் இருக்கிறார்கள், கழகத்துக்கு நல்லாதரவு தந்து வருகிறார்கள். ஆயினும், பலர், மதில்மேல் பூனை நிலையில் இன்னமும் உள்ளனர். அவர்களே தேர்தல் காலத்தில், ஆளுங்கட்சி விரித்திடும் வலையிலே எளிதாக விழுந்துவிடுகிறார்கள்; சில்லறைச் சலுகைகளில் மயங்கிப்போகிறார்கள்.
வலை வீசுவதிலும் நாக்கில் தேன் தடவி விடுவதிலும் வல்லவர்கள், காங்கிரசுக் கட்சிக்காகத் தேர்தல் வேலை செய்வதற்கு நிரம்பப் பேர் உள்ளனர்.
தலைவர்களின் மேடை முழக்கங்களால் சாதிக்க முடியாத காரியத்தை இந்தக் காரியவாதிகள் சாதித்து விடுகிறார்கள்.மேடையிலே நாம் இந்தப் பதினேழு ஆண்டு ஆட்சியிலே காணக் கிடைக்கும் கேடுபாடுகளை விளக்கிக் காட்டுகிறோம்.
இதனை மறுத்திட முடிவதில்லை காங்கிரஸ் தலைவர்களால்; மறுத்திட முன்வருபவர்கள், தங்களைப் பேச்சாளர்கள் ஆக்கிக் கொள்வதிலே மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மக்களின் இதயத்தைப் பெறுவதிலே அல்ல.
இந்த முறையினால் மட்டுமே வெற்றி கிட்டிவிடாது என்று உணர்ந்துள்ள, ஊர் அறிந்தவர்கள் கிளம்புகிறார்கள், தனித்தனியே சந்திக்க, தித்திப்புப் பேச்சுத்தந்திட, மனக்குறையைப் போக்கிட! அதிலே நல்ல வெற்றி கிடைக்கிறது.
நாட்டாண்மைக்காரர் இருக்கிறார், ஊரூருக்கும். அவரும், நாம் நடத்தும் கூட்டத்திற்கு வந்திருந்து நாம் காட்டும் காரணங்களைக் கேட்டு, உண்மையை உணர்ந்துவிட்டிருக்கிறார் என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன? நாட்டாண்மைக்காரர் கூட்டத்திற்கு வருவதுமில்லை! கூட்டத்திற்கு வந்து நாம் சொன்னவைகளைக் கேட்டுச் சென்றவர்களும் அவரிடம் சென்று விளக்கம் கூறுவதில்லை.
இந்த நாட்டாண்மைக்காரரின் பேச்சை மீறி நடந்து கொள்ளும் இயல்பு, கிராமப்புறங்களில் அதிக அளவு இன்னமும் தென்படவில்லை, அரும்பு இருக்கிறது. சில இடங்களில் கருகிய மொட்டுக்களாகி விட்டதையும் நான் கண்டிருக்கிறேன்.
அரசியல் கட்சிகளிடம் ஈடுபாடு கொண்டு, நாட்டு நிலைமைகளை அறிந்து, அந்த நிலைமைகளைத் தக்க முறையில் திருத்தி அமைக்கவேண்டும் என்ற உரிமையும் கடமையும் தமக்கு உண்டு என்று உணர்ந்து செயல்படுவோர்களைப் போலவே, கிராமத்துத் தலைவர்கள் இருந்துவருவார்கள் என்று எண்ணிக்கொள்வது சரியல்ல; அப்படி எண்ணிக்கொண்டு கணக்குப்போடும் போதுதான், போட்ட கணக்குப் பொய்த்துப் போய்விடுகிறது.ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது...எனும் உண்மை விளக்கப்படும்போது அதற்குக் காரணமாக உள்ள ஆட்சியிடமும் அந்த ஆட்சியை நடத்தும் கட்சியிடமும் விவரமறிந்தவர்களுக்கு எரிச்சல் வருகிறது; அந்தக் கட்சிக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.
ஆனால், ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டதே என்ற கவலையில் அல்ல; வரவர கிராமத்திலே அவனவன் அவன் இச்சைப்படி நடந்து கொள்கிறான்; பெரியவர்கள் நாட்டாண்மைக்காரர்கள் ஆகியோரின் பேச்சின்படி நடப்பதில்லை என்ற கோபமும், தனது மதிப்புக் குறைந்து விடுகிறதே என்ற கவலையும் கிராமத்துத் தலைவருக்கு.
அவருடைய ‘அரசியல்’, நாடு அறிந்த அரசியலோடு முழுக்க முழுக்கத் தொடர்பு கொண்ட தல்ல.
சுட்டுத் தள்ளுகிறார்களாம் என்று கேள்விப்படும் போது அவருடைய மனம் பதறத்தான் செய்கிறது, அத்தகையவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுகிறார், ஒரு கணம். மறுகணமோ நாலுபேர் நடத்திய பஞ்சாயத்திலே ஒப்புக்கொண்டு போன குப்பன் அதன்படி நடக்கவில்லையே என்ற கவலை அவரைப் பிடித்துக்கொள்கிறது.
அந்தக் கவலையின் முன்பு நாட்டை வாட்டிடும் அரசியல் பிரச்சினைகள் மங்கி விடுகின்றன.
இந்த மனப்போக்கு மாற்றப்பட வேண்டும்; இது வெறும் மேடைப் பேச்சினால் மட்டும் மாறிவிடாது; கிராமத்துடன் நமது கழகத் தோழர்கள் தொடர்ந்து, நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமாகவே, நிலைமையையும் நினைப்பையும் மாற்றிட முடியும்.
தர்மபுரியில் நான் கேள்விப்பட்டேன். ஒரு கிராமத்தில் முக்கியமானவரைக் காங்கிரஸ் தலைவர்கள் தமது பக்கம் சேர்த்து கொண்டார்கள் என்று.
யார் அந்தக் கிராமத்துப் பெரியவர்? என்று நான் கேட்டேன். மந்திரிக் கவுண்டர் என்று சொன்னார்கள்.தர்மபுரித் தொகுதியில் சில கிராமத் தலைவர்களுக்கு மந்திரிக் கவுண்டர் என்று பட்டப் பெயரே இருப்பதாக அறிந்துகொண்டேன்.
இவர்களைப் போன்றவர்களின் செல்வாக்குப் பற்றிய கணக்கு நாம்தான் மக்களின் இதயத்தை வென்று விட்டோமே என்ற நினைப்புடன் மட்டும் நாம் இருந்து விடும்போது நமக்குப் புரிவதில்லை. இந்தக் கணக்கு நமக்குப் புரியவேண்டும், தெளிவாக.
தேர்தல் நேரமாகப் பார்த்து ஆசை ஊட்டியும் அச்சமூட்டியும் எவரெவரை எப்படி எப்படி வளையச் செய்வது என்ற வித்தையில் வல்லவர்கள் நடத்திடும் நாடகத்தில் சில காட்சிகளை இனிக் காண அழைக்கிறேன், தம்பி!
★
முன்னாள் கள்ளுக்கடைக்காரர்:– போய்யா, போ! போ! காங்கிரசுக்காக வாதாட வந்துவிட்டாயா! எவ்வளவு கிடைச்சுது அதுக்கு. நாங்க எதுக்காகய்யா காங்கிரசுக்கு ஓட்டுப்போடணும், எங்க தலையிலே கல்லைப்போட்டுதே அதுக்காகவா; எங்க பிழைப்பிலே மண்ணைப் போட்டுதே அதுக்காகவா! என்னோட ஓட்டு காங்கிரசுக்குக் கிடையாது—நிச்சயமா— ஆமாம். என்வாயாலே காங்கிரசுக்கு ஓட்டுப் போடுன்னு ஒரு பயலுக்கும் சொல்லமாட்டேன்—நீ கையைப் பிடிச்சிக்கிட்டாலும் சரி, காலைத் தொட்டுக் கும்பிட்டாலும் சரி......
மண்டலம்:– உங்களோட கோபத்துக்கான காரணம் எனக்கு நன்றாகப் புரியுது உங்கபேர்லே ஒரு துளியும் எனக்குக் கோபம் கிடையாது. இரண்டு தலைமுறையாக நடத்திக் கொண்டுவந்த தொழிலைக் கெடுத்துவிட்டதே காங்கிரஸ், மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்து என்ற கோபம் உங்களுக்கு. ஆனா.....
மு. க. க:– ஆனா என்னய்ய ஆனா......வழக்கமான உபதேசந்தானே? ஒரு சிலருக்குப் பண நஷ்டமென்றாலும் பலபேருக்கு நன்மை; புண்யகாரியம்; ஏழைகளோட குடும்பத்துக்கு நிம்மதி; இதைத்தானே சொல்லப்போறே. கேட்டுக் கேட்டுக் காதும் புளித்துப் போயிருக்குது.......
மண்டலம்:– அய்யய்யே! நான் அந்தப் பழய காடிப் பேச்சையா சொல்லவந்தேன். மதுவிலக்குச் சட்டம் கொண்டுவந்தாகணும் என்று, ஒரே வற்புறுத்தல். மகாத்மா சொன்னதைக்கூட நிறைவேற்றாமல் இருக்கலாமா, காங்கிரஸ் மந்திரிசபை என்கிற எண்ணம். அதனாலே கொண்டுவரப்பட்டது மதுவிலக்குச் சட்டம்...
மு. க. க:– காரணம் சொல்றிங்களா, காரணம்! காரணத்தைச் சொல்லிவிட்டா, என் பெட்டியிலே காசு வந்து குவிந்துவிடுமா...
மண்டலம்:– சொல்ல வந்ததை முழுவதையும் கேட்காமலே கோபம் பொங்கிவருதே உங்களுக்கு, கேளுங்க. வந்த புதுசிலே மகாத்மா பேச்சை மறந்து விடக்கூடாது பாருங்க...அதனாலே சட்டம் போட்டாச்சி. இப்ப, காங்கிரசிலே, மதுவிலக்குச் சட்டம் இருந்தாக வேணும்னு பிடிவாதம் பேசுகிற ஆசாமிகளோட தொகை குறைச்சலாகிவிட்டுது. மதுவிலக்குச் சட்டம், எதிர்பார்த்த பலனைக் கொடுக்கல்லே என்கிற பேச்சு வலுவாகிவருது...
மு. க. க:– அதனாலே...! போலீசை நாலாபக்கமும் ஏவி வேட்டை ஆடிக்கிட்டு வர்ரிங்க... அதைத்தானே சொல்றே...
மண்டலம்:– அதைச் சொல்லவில்லைங்க....ஒரே அவசரம், ஆத்திரம்; பொறுமையாக் கேட்கவேண்டாமா. மதுவிலக்குச் சட்டம் பிரயோஜனமில்லே. அதை எடுத்து விடலாம் என்று இப்ப ஒரு அபிப்பிராயம் உருவாகிக் கொண்டு இருக்குது...
மு. க. க:– என்னது! என்னது! மதுவிலக்கு வேண்டாமென்று...
மண்டலம்:– மதுவிலக்குச் சட்டம் வேண்டாமென்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்ப கருத்து வளர்ந்து கொண்டிருக்குது. கொஞ்ச நாளிலே இந்தக் கருத்துக்கு அமோகமான ஆதரவு கிடைத்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் பளிச்சிட்டுக் காட்டுது...மு. க. க:– என்னாலே நம்பமுடியல்லையே, மகாத்மாவோட பேரைச் சொல்லிக்கொண்டு மக்களோட ஆதரவு தேடுவது காங்கிரஸ் கட்சி. மகாத்மா, மதுவிலக்குச் சட்டம் வேதம்னு சொல்லிவிட்டாரு. அப்படிப்பட்ட சட்டத்தை எப்படி எதிர்த்து ஒழிக்க முடியும்...காங்கிரஸ் கட்சியாலே...
மண்டலம்:– இப்ப இருக்கிற காங்கிரசுக்கும் அப்ப இருந்த காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாததாலே இவ்விதம் பேசத்தோணுது உங்களுக்கு. இப்ப இருக்கிற காங்கிரசிலே, மகாத்மா காந்தியை முன்னே எதிர்த்துக்கொண்டு இருந்தவங்களோட தொகைதான் அதிகம். தெரியுதுங்களா, அவங்களோட எண்ணம், மகாத்மா என்னமோ தன்னைப்போலவே எல்லோரும் தவசிகள் என்ற நினைப்பிலே மதுவிலக்குச் சட்டம் கொண்டு வரச்சொல்லி கட்டளையிட்டார். ஆனா அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுதான்.
மு. க. க:– அதனாலே...போட்ட சட்டம் போட்டபடியே தானேய்யா இருந்து வருது...
மண்டலம்:– இருந்துவருது, ஆனா எத்தனை நாளைக்கு? சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என்ற குரல் வலுவடையுது தெரியுங்களா? இப்பவே. மகாராஷ்டிரத்திலே கடைகளைத் திறந்தாச்சி.
மு. க. க:– பம்பாய் பக்கத்திலேயா—அங்கே காங்கிரஸ் ஆட்சி இல்லையா...
மண்டலம்:– காங்கிரஸ் ஆட்சிதான் அங்கே நடப்பது, காங்கிரஸ் கட்சியே சொல்லிவிட்டுது மதுவிலக்குச் சட்டத்தைத் தளர்த்த வேண்டியதுதான் என்று. காங்கிரஸ் கட்சி சொல்வதைக் காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றுது, அதுதானே நியாயம்...
மு.க. க:– பம்பாய் பக்கத்திலே மதுவிலக்கு சட்டத்தை மாற்றிவிடச்சொல்லி அங்கே இருக்கிற காங்கிரஸ் சொல்லி இருக்குதா! பலே! பலே! துணிச்சல் பாருங்க அப்படி இருக்குது அங்கே. இங்கே தொடை நடுக்கம் எடுக்குது காங்கிக்கிலே உள்ளவங்களுக்கு பஞ்சமாபாதகத்திலே ஒண்ணல்லவா குடின்னு பஜனைப் பேச்சுப் பேசறாங்க...
மண்டலம்:– எதுவரையிலே பேசுவாங்க? உங்களைப் போன்றவங்க, விவரம் தெரிந்தவங்க காங்கிரசிலே சேராமப்படிக்கு ஒதுங்கி இருக்கிறவரைக்கும். உங்களைப் போன்றவங்க, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து பாடுபடணும்... விளக்கமாப் பேசணும்... இந்த மாதிரிச் சட்டமெல்லாம் வீணா பண நஷ்டத்தைத்தான் உண்டாக்கும் என்று தைரியமாப் பேசணும்.
மு. க. க:– பேச விடுவாங்களா? மதுவிலக்கு, மகாத்மாவோட திட்டம்; அதை எதிர்த்துப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ்காரருக்கும் உரிமை கிடையாது என்று உருட்டி மிரட்டிப் பேசுவார்களே...
மண்டலம்:– அதுதான் முடியாது என்கிறேன். ஜனநாயகம் நடக்குது ஜனநாயகம். தெரியுதுங்களா? ஜனநாயக தர்மப்படி, அவரவர்களும் தமக்குச் சரி என்று பட்ட விஷயத்தைப் பற்றி அச்சம், தயை. தாட்சணியம் இல்லாமப்படிக்குப் பேசலாம்......
மு. க. க:– கள்ளுக் கடைகளை மறுபடியும் திறக்க வேணும்னு கூடவா பேச முடியும்? அனுமதிப்பார்களா.........!
மண்டலம்:– அனுமதி மறுக்க யாருக்கு உரிமை! ஒருவருக்கும் கிடையாது. கேட்கலாமே நீங்க, என்னப்பா நான் பொருளாதாரக் காரணத்துக்காகவும், உழைப்பாளிகளுடைய நன்மைக்காகவும் கள்ளுக் கடைகளை மறுபடியும் திறக்க வேண்டும் என்று சொன்ன உடனே, சரமாரியா கண்டனத்தை வீசுகிறீங்களே—காங்கிரசுக்கு இது ஆகாது அடுக்காது என்றெல்லாம்; அதே காங்கிரஸ்தானே புதுச்சேரியிலே அரசாளுது—அங்கே கள்ளுக்கடை கோலாகலமாக இருக்குதே...காந்திராஜ்யம் கடலூருக்கு மட்டுந்தானா, காரைக்கால் புதுச்சேரிக்குக் கிடையாதான்னு கேட்கலாமே. என்ன பதில் சொல்ல முடியும். உண்மையைச் சொல்லட்டுமா; உங்களைப்போல ஒரு பத்துப் பேர் இது போலப் பேசினா, மதுவிலக்குச் சட்டம் தன்னாலே போய்விடும்...மு. க. க:– கள்ளுக் கடையைத் திறக்கச் சொல்லிக் கள்ளுக்கடைக்காரன் சொல்கிறான் என்று கேலி பேசமாட்டாங்களா...?
மண்டலம்:– எப்படிப் பேசுவாங்க! நீங்க காங்கிரசுக்கு வெளியே இருந்துகொண்டு பேசினா, கண்டனம், கேலி, எதிர்ப்பு எல்லாம் கிளம்பும். நீங்களே காங்கிரசிலே சேர்ந்துவிட்டா! ஒரு பய நாக்கை வளைக்க முடியுமா! காங்கிரஸ்காரர்தான் அவரும் என்று நாங்க பேசமாட்டமா, உங்க பக்கம் ஆதரவு காட்டி.......
மு. க. க:– நினைக்க நினைக்க இனிக்குதப்பா......
மண்டலம்:– அதனாலேதான் சொல்றேன். இந்தத் தேர்தலிலே காங்கிரசுக்கு ஆதரவு காட்டி, வேலை செய்து காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுங்க. பிறகு பாருங்களேன், நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருது காங்கிரசு......
மு. க. க:– கள்ளுக்கடை நடத்தின ஆசாமி இப்பக் காங்கிரசிலே சேருகிறானே என்று ஊர் ஒரு மாதிரியாப் பேசாதா...
மண்டலம்:– வீணான சந்தேகம் உங்களுக்கு, உங்களைப் போன்றவங்க வேண்டியபேர் இப்பக் காங்கிரசிலே வந்து சேர்ந்திருக்காங்க......
மு. க. க:– என்னைப்பற்றி, உங்க தலைவர்களுக்கு நல்லபடி சிபார்சு சொல்லி வைக்கணும்...
மண்டலம்:– பாருங்க என்னோட வேலையை, போகப் போகப் புரியும். உங்க மனசோட போட்டு வையுங்க, இந்தத் தேர்தலிலே காங்கிரசுக்கு வெற்றி ஏற்படும்படி வேலை செய்து காட்டுங்க, உங்களையே இந்தப் பக்கத்துக்குக் காங்கிரஸ் தலைவராக்கிக் காட்டுகிறேன்...
மு. க. க:– நமக்கு எதுக்கப்பா தலைவர் வேலை...
மண்டலம்:– நம்மாலே முடியாதுன்னு பார்க்கிறிங்களா...
மு. க. க:– செச்சே! அப்படி நினைப்பேனா. எனக்குப் பலபேர் சொல்லியிருக்கிறாங்களே உன்னைப் பற்றி, உன் யோசனைப்படியே நடக்கறேன், சரிதானே. என் ஓட்டு உன்னோட காங்கிரசுக்குத்தான், திருப்திதானே...
மண்டலம்:– அதென்னங்க, உன்னோட காங்கிரசு என்று சொல்றிங்க. நம்மோட காங்கிரசு என்று சொல்லுங்க...
மு. க. க:– நான் இன்னும் கதர்கூடப் போடவில்லையேப்பா...
மண்டலம்:– அதனாலே என்ன! உடையிலே என்ன இருக்குது! எல்லாம் உள்ளத்திலே இருக்கணும்; இருக்குது,
மு. க. க:– ஏம்பா! உன் பேச்சைக் கேட்டு, காங்கிரசிலே சேர்ந்துவிடறேன். கட்டாயம் நாம் ஜெயித்தாகணும்; இல்லையானா ஊர் கேலி பேசும்,
மண்டலம்:– வெற்றியிலே இனி என்னங்க சந்தேகம். நீங்களே இனி காங்கிரஸ். வெற்றி பெற்றுக் காட்டாமலா இருப்பிங்க... இந்தப் பக்கத்து ஓட்டு மூணு ஆயிரம்...
மு. க. க:– ஆமாம்; நம்ம பேச்சுக்குக் கட்டுப்பட்டவங்க ஒரு ஆயிரம் இருக்கும், எவ்வளவு குறைச்சி மதிப்புப் போட்டாலும்.
மண்டலம்:– மற்ற இரண்டு மட்டும் என்ன! உங்களை மீறியா போய்விடும்...
மு. க. க:– எதிரி கால் அரைன்னு ஆசை காட்டினா. அதுக பல்லை இளிச்சிவிடுமேன்னு பார்க்கறேன்,
மண்டலம்:– நீங்க இருக்கிற பக்கம், ஒருவன் வந்து கால் அரைன்னு பேரம் பேசுவானா, அவ்வளவு துணிச்சலா! ரோஷம் கிளம்பிவிட்டா, ஓட்டுக்கு இரண்டு மூணுகூட எடுத்து வீசுவீங்கன்னு தெரியாதா எதிரிக்கு...
மு. க. க:– ரோஷத்தைப் பார்த்தா, செலவு அதிகமாக ஆகிவிடுமே...
மண்டலம்:– அந்தப்பயம் எதிரிக்கு இருக்குமேல்லோ.... அவன் என்ன உங்களைவிடப் பெரிய புள்ளியா,மு. க. க:– புள்ளியாவது சுள்ளியாவது; இப்பத்தான் கொஞ்சம் பசை! வரட்டும்பய, பார்த்துக் கொள்ளலாம்...
மண்டலம்:– அப்ப, நான் வரட்டுங்களா! இனி இந்த வண்டிப்பேட்டை பக்கம், என்னுடையது அல்ல, உங்களுடையது...
மு. க. க:– நீ போய், மற்ற இடத்தைக் கவனி தம்பி! வண்டிப்பேட்டை ஓட்டு, இப்பவே நம்ம பெட்டியிலேன்னு வைத்துக்கொள்ளு.
மண்டலம்:– அதிலே சந்தேகம் என்ன! ஒரு ஐம்பது எடுங்க...
மு. க. க:– ஐம்பது ரூபாயா...ஏம்பா!
மண்டலம்:– ஆமாங்க! ஒரு செட்டு கதர் உடை அனுப்பி வைக்கிறேன்...
மு. க. க:– ஆமாம்பா! அப்படியே கொடிகூட...
மண்டலம்:– பட்டுத் துணியிலே உங்க மாளிகைக்கு...மற்ற இடத்துக்கு, துணியிலே சரிதானே,
மு. க. க:– உனக்கா தெரியாது.
★
ஆலை அதிபர் ஆரிமுத்து:– மந்திரி வருகிறார் என்று சொன்னா, நாங்க என்ன மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்னு நினைப்பா, நாங்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. மந்திரி வரட்டும் மகராஜனாக. உனக்குச் சொன்ன பதில்தான் அவருக்கும். தேர்தல் செலவுக்கென்று எங்களைக் கசக்கிப் பிழிந்தால், நாங்கள் என்ன கதியாவது. நாங்கள் என்ன முன்பு போலவா இருக்கிறோம். எங்களைத் தான் வரி போட்டுப் போட்டு வாட்டி எடுக்கிறதே உங்க கட்சி சர்க்கார்...
மண்டலம்:– நான், முன்பே இதைச் சொன்னேன். டி. டி. கே. க்குத் தந்திகூடக் கொடுத்தேன்...
ஆலை:– உடனே வரியைக் குறைத்துவிட்டாராக்கும். விடப்பா அந்தப் பேச்செல்லாம். முன்பு போல எங்களுக்கு இலாபம் கிடையாது. ஏதோ ஒரு ஆயிரம் தொழிலாளிகள் பிழைக்கவேண்டுமே என்பதற்காக இதைக் கட்டிக்கொண்டு அழவேண்டி இருக்கிறது. வருவதிலே ரூபாய்க்கு 14 அணா கொட்டிக் கொடுக்கணுமாம், அதற்குப் பெயர் சமதர்மமாம்... சோஷியலிசமாம்...இதற்கு நாங்களே பணம் செலவழித்துக் காங்கிரசை ஆளச்சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டுமாம். குழியை வெட்ட வேண்டியது நாங்கள்—எங்களை அதிலே போட்டு மூடி மண்ணைப் போடுவீர்கள் நீங்கள். எதற்காகப்பா, வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்கள். சோஷியலிசம் பேசுகிற கட்சி, முதலாளிகளிடம் வரலாமா. பணம் திரட்ட...
மண்:– கோபம் அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்போதுகூட, உங்களுக்கு வரிச்சலுகை செய்தது காங்கிரஸ் அரசாங்கம் தானே...
ஆலை:– அதற்குப் பெயர் சலுகையா...வரம்னு சொல்லப்பா! உனக்கு என்ன தெரியும் பொருளாதார சாஸ்திரம். உங்களோட காங்கிரஸ் சர்க்காரின் கண்மூடித்தனமான போக்கினால், தொழில் அமைக்க மூலதனம் கிடைப்பதில்லை. தெரியுமா! மூலதனம் எங்கே இருந்து வரும்? அந்தரத்திலிருந்தா? இலாபம் கிடைக்கவேண்டும்; அந்த இலாபத்திலிருந்து தானே மூலதனம் கிடைக்க முடியும்...
மண்:– அதைக் காங்கிரஸ் சர்க்கார் ஒப்புக்கொள்கிறதே! ஒப்புக்கொள்வது மட்டுமா! கம்யூனிஸ்டுகளின் வாயை அடக்க இந்த வாதத்தைத்தானே பயன்படுத்துகிறது.
ஆலை:– பேசுவது சோஷியலிசம்; தேர்தல் நிதிக்கு, முதலாளிகள்!
மண்:– காங்கிரஸ் சொல்லும் சோஷியலிசத்தில், முதலாளிகளுக்கும் இடம் உண்டு. அதுதானே அதிலே இருக்கிற அருமையே. மற்ற நாடுகளில் சோஷியலிசம் என்றால் முதலாளிகள் இருக்கக்கூடாது என்பது திட்டம். இங்கே அப்படியா!! முதலாளிகள் கட்டாயம் இருப்பார்கள், இருந்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகப் பேசுவது காங்கிரஸ் கட்சி. அதை மறந்துவிடலாமா?
ஆலை:– முதலாளி இருக்கலாம், ஆனால், அவனிடம் இலாபம் சேரக்கூடாது, அதற்கு ஆயிரத்தெட்டுத் தடைகள், விதிகள், சட்டங்கள். ஏன் இதைச் செய்து கொண்டு எங்களிடம் பணமும் கேட்கிறீர்கள்? எதற்காகக் கொடுக்கவேண்டும்? எங்கிருந்து கொடுக்க முடியும்?
மண்:– இப்படிப் பேசினால் நான் என்னத்தைச் சொல்ல முடியும். பணம் தேவை, பெரிய அளவில். காங்கிரசு முதலாளிகளை வாழவைக்கிறது என்று பலமான பிரசாரம்; எதிர்ப்பு அதிகம். காங்கிரஸ் தேர்தலில் தோற்றுப்போனால், பிறகு சோஷியலிசத் திட்டப்படி தொழில்களைத் தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கவிட மாட்டார்கள்......
ஆலை:– அந்த இழவுக்காகத்தான் எங்களால் ஆன உதவி செய்து தொலைக்கிறோம் காங்கிரசுக்கு. போனதடவை ஒரு கோடி ரூபாய் அளவுக்குக் கொடுத்திருக்கிறோம்.
மண்:– கொடுத்ததைக் கவனத்தில் வைத்துக்கொண்டுதான், காங்கிரஸ் சர்க்கார் உங்களுக்கு உள்நாட்டுக் கடன், வெளி நாட்டுக்கடன், சலுகை எல்லாம் கிடைக்கும்படி செய்தது...
ஆலை:– செய்ததோ இல்லையோ, அதுகூட இருக்கட்டும் ஒருபுறம். எங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் மேடைமீது ஏறிக்கொண்டு, உற்பத்தியான செல்வத்தை நாங்களே உறிஞ்சிக் கொண்டோம் என்றா பேசுவது, மக்களுக்கு எங்கள் பேரிலே ஆத்திரம் வருகிறபடி. அவர்கள் சொத்து சிலரிடம் குவிந்திருப்பது ஏன் என்று கேட்டுப் புரட்சியை செய்யமாட்டார்களா!
மண்:– விடுவோமா! இருக்கிற சொத்தையும் வருவாயையும் பங்கு போட்டுக்கொள்வது சோஷியலிசம் அல்ல என்று பேசி வருவது எந்தக் கட்சி? காங்கிரசல்லவா! சோஷியலிசத்துக்கே நாங்கள் புதிய வியாக்யானம் கொடுத்திருக்கிறோம்.ஆலை:– என்ன வியாக்யானமோ! என்ன தத்துவமோ! புலியிலே புலி இது புதுப்புலி! சைவப்புலி! என்கிறீர்கள். போகட்டும், இப்போது என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?
மண்:– உங்கள் தரத்துக்குத் தக்கபடி; எங்கள் தேவைக்கு ஏற்றபடி...
ஆலை:– உங்கள் தேவை நாளுக்குநாள் வளரும்; நாங்கள் என்ன செய்வது? உங்களிடம் கண்டிப்பு இல்லை; உங்கள் கட்சியிலேயே சிலபேர் கண்டபடி பேசுகிறார்கள், முதலாளிகளின் மனம் புண்படும்படி. கொள்ளைக்காரனை நடத்துவதுபோல் நடத்துகிறீர்கள்—காட்டு கணக்கு என்கிறீர்கள்—பூட்டு கடையை என்கிறீர்கள்—நீட்டு நோட்டுகளை என்கிறீர்கள்.
மண்:– அப்படி ஒன்றும் நடக்காது. முன்பு ஏதாவது நடந்திருந்தாலும் இனி நடக்காது. இப்போதே டி. டி. கே. போட்டுள்ள புதிய திட்டத்தைப் பார்த்தீர்களல்லவா? கறுப்புப் பணத்தில் ஒரு பகுதியைச் சர்க்காருக்குக் கொடுத்துவிட்டால், மற்றதற்குக் கணக்கு வழக்கு இல்லை என்று கூறிவிட்டார்...
ஆலை:– கறுப்புப்பணம் உள்ளவர்களுக்கு அது சலுகையாக இருக்கலாம். என்னிடம் ஏது?
மண்:– நான் சொன்னேனா? சொல்லுவேனா? எதிர்க்கட்சிக்காரர்கள் தான் அப்படிப் பேசி ஏசுகிறார்கள். இந்தக் காங்கிரஸ் சர்க்கார் கள்ளமார்க்கட்காரரிடம் சரணாகதி அடைந்துவிட்டது என்கிறார்கள். இதைப் பொதுமக்கள் புரிந்துகொண்டார்கள்; அதனால் இந்தத் தடவை காங்கிரசுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று பேசுகிறார்கள். இந்தத் தடவை, காங்கிரஸ் தோற்றுவிட்டால், கள்ள மார்க்கட்டுக்காரருக் குக் காங்கிரஸ் கட்சி உடந்தையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மை என்று ஆகிவிடும் ஆகவே, அந்த விதமான பழி விழாதிருக்கவும், முதலாளிகளைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டமிடுபவர்கள் ஆதிக்கம் பெறாதபடி தடுக்கவும், காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.ஆலை:– உம்முடைய வாதம் சரியோ, தவறோ, நான் நீண்ட காலமாகக் காங்கிரஸ் பக்தன் அதனால் என்னால் ஆனது செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்போது வருகிறார் மந்திரி?
மண்:– நீங்கள் நாள் குறிப்பிட்டதும்...
ஆலை:– என் தகப்பனாரின் தலைத் திவசம் இந்தப் புதன்கிழமை...
மண்:– நினைவுநாள் கொண்டாடிவிடுவோம்..... மந்திரி தலைமையில்...
ஆலை:– அன்றைக்கே, அமெரிக்கக் கூட்டுறவுடன் நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய தொழிற்சாலைக்கான அடிப்படைக் கல்நாட்டு விழாவும்...
மண்:– நடத்திவிடுவது....இதற்கு ஒரு மந்திரி....அதற்கு ஒரு மந்திரி....
ஆலை:– மந்திரியிடம், தனியாகச் சில விஷயங்கள் பேச...
மண்:– ஒரு மணி நேரம் ஒதுக்கச் சொல்கிறேன், போதுமா?
ஆலை:– ஒரு முக்கியமான விஷயம்...மந்திரி இங்கு வருகிறபோது, என்னை மதிப்புக் குறைவாக நடத்திய அதிகாரி இருக்கிறாரே, தெரியுமே உங்களுக்கு, அவர் இருக்கக்கூடாது...
மண்:– மாற்றிவிட்டால் போகிறது, வேறு இடத்துக்கு.
ஆலை:– மகாத்மா காந்தியின் அருளால், தேர்தலில் நமக்கு ஜெயம் நிச்சயம்...
மண்:– உங்களுடைய ஆசீர்வாத பலம் உண்டு என்று தெரிந்த பிறகுதான், நான் தேர்தல் வேலையிலே ஈடுபட்டேன்.
★
மண்டலம்:– நீங்கள் நினைப்பது தவறு. கூடிக்குலவி முதலாளிகளை ஒழித்துக்கட்டும் தந்திரமான திட்டமல்லவா காங்கிரஸ் மேற்கொண்டிருப்பது.
மு:– கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது என்பார்களே, அப்படி இருக்கிறது உங்கள் போக்கு...
ம:– அப்படியானால் முதலாளிகளை அடியோடு ஒழித்து விடவேண்டும் என்கிறீர்களா? சரி, செய்வோம். அதற்குக் காங்கிரசு வெற்றி பெற்றால்தானே...
மு:– முதலாளியை ஒழிக்க, காங்கிரஸ் வேட்பாளராக ஒரு முதலாளியையே நிறுத்துவதா...வெட்கக் கேடு...
ம:– என்ன செய்வது? காங்கிரசுக்கோ எதிர்ப்பு அதிகமாகிவிட்டிருக்கிறது. பணம் நிறையத் தேவை. பணம் செலவழிக்கக்கூடிய ஆசாமியாகப் பார்த்துப் போட்டால் தானே...
மு:– தன் பணத்தால்தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்ற நினைப்பில், அந்த முதலாளி மேலும் இறுமாப்புடன் நடந்துகொள்வாரே!
ம:– எப்படி முடியும்! எத்தனை பணம் இருந்தாலும், நம் போன்றவர்களின் உதவியில்லாமல் வெற்றி கிடைக்காது என்பது தெரியாதா அவருக்கு?
மு:– அவருக்கு நம்முடைய கொள்கையில் நம்பிக்கை இல்லை; நமக்கு அவருடைய குணத்தில் வெறுப்பே இருக்கிறது. ஆனாலும் தேர்தலுக்காக ஒரு உறவு வைத்துக்கொள்கிறோம், முறையா! கூடா நட்புக் கேடாய் முடியும் என்பார்களே...
ம:– தேர்தலுக்காக இவரைப் பிடித்து இழுத்துப் போட்டு வைத்திருக்கிறோம், அவ்வளவுதானே. திட்டம் போடுவது, கொள்கை தீட்டுவது இவரா!!
மு:– கொள்கை, திட்டம் இவைகளைத் தீட்டும் நிலையில் உள்ள தலைவர்கள் மட்டும் என்ன இலட்சணத்தில் இருக்கிறார்கள்! ஒரே குளறுபடி! மொரார்ஜி வலது சாரி, மேனன் இடதுசாரி, மாளவியா தீவிரவாதி என்று இப்படித் திக்குக்கு ஒருவராக இருக்கிறார்கள். ஒருமித்த கருத்து இல்லையே...ம:– எந்தக் கருத்துக்குப் பெரிய ஆதரவு கிடைக்கும் தெரியுமோ, நம்மைப் போன்ற முற்போக்காளரின் கருத்துக்குத்தான்...!
மு:– முற்போக்காளர் முகாமில்தானா தாங்களும்......! முற்போக்கு, இனி ஒரு முழக்கயிறு தேடிக் கொள்ள வேண்டியதுதான்! துணிந்து சொல்கிறீரே, உம்மை முற்போக்காளர் என்று...ஒரு தேர்திருவிழா பாக்கி கிடையாது, ஆலமரத்தடி கிளி ஜோதிடனிலே இருந்து நாடி ஜோதிடர் வரை தேடி அலைகிறீர், முற்போக்காளர் என்று வேறு சொல்லிக் கொள்கிறீர்.
ம:– அதிலே எல்லாம் எனக்கு நம்பிக்கை இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்! அப்படித்தானே! அது தான் தவறு...!
மு:– நம்பிக்கை இல்லாமலா, ஆடி அடங்கிய சாமியாருக்கு அன்னாபிஷேகம் செய்து அவர் காலைக் கழுவி அந்தத் தண்ணீரைப் பருகினீர்—போன வாரம்...?
ம:– பைத்யம்! பைத்யம்! ஆடி அடங்கிய சாமியாருடைய அற்புதத்திலே நம்பிக்கையா எனக்கு! நான் என்ன மடையனா, அப்படிப்பட்ட மூட நம்பிக்கை கொள்ள. ஆடி அடங்கிய சாமியாரிடம் சொக்கிக் கிடக்கும் மக்கள் ஊரிலே நிறையப் பேர், தெரியுமா! சாமியார் ஒருவார்த்தை சொன்னால் போதும், அந்தப் பக்தர்கள் ஓட்டு அவ்வளவும் நமக்குத்தான். அதற்காக, அவருடைய பக்தனாக ஒரு நாள் இருந்தேன். என்னுடைய உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமல், பேசுகிறீர்...
மு:– அப்படியானால், பேய், பூதம், பிசாசு, மோட்சம், நரகம், முன்வினை, மறுஜென்மம், சடங்கு சம்பிரதாயம், மாயமந்திரம், புராணம், இதிகாசம் இவைகளைப் பற்றிய நம்பிக்கை உமக்குக் கிடையாது என்று சொல்லும்......
ம:– சொல்ல வேறு வேண்டுமா—ஐயா! என் தலைமையிலே தான் பெரியார் கூட்டம் நடந்தது. அன்றைக்கு விளாசினார் பாருங்க இராமாயணத்தைப் பற்றி, அடே அப்பா! அவ்வளவு பிரமாதம்.மு:– அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தது எனக்குத் தெரியாது. ஆனால், ஆரண்யபுரம் என்ற ஊரில் கோதண்டராமசுவாமி கோயிலில், பட்டாபிஷேகத் திருவிழாவிலே முக்கிய பங்கு உங்களுடையது என்று பேப்பர்லே பார்த்தேன்.
ம:– ஆமாம்! போட்டோ கூடப் போட்டிருந்தாங்களே. ஆனால், உம்மிடம் சொல்லிவைக்கிறேன், ஏன் போனேன் அந்தப் பட்டாபிஷேகத்துக்கு? ஆரண்யபுரம் வட்டத்திலே மட்டும் ஆறு ஆயிரம் ஓட்டு! புரியுதா! அங்கே என்னைப் பட்டாபிஷேக வைபவத்திலே கண்டதிலே எவ்வளவோ மகிழ்ச்சி, நம்பிக்கை, அந்த ஊராருக்கு...
மு:– அவர்களை ஏமாற்றினீர் என்றுதானே பொருள்?
ம:– அவ்வளவு பச்சையாகச் சொல்லலாமா...இது ஜனநாயகக் காலமாச்சே...
மு:– நான் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதற்குச் சம்மதித்தாலும் இராமாயண பாரதத்தை நம்பும் பைத்யக்காரத்தனத்தைக் கண்டிக்காமல் இருக்க மாட்டேன்...
ம:– உங்களைக் கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. அந்தப் பயமே வேண்டாம்...காங்கிரசுக்குள்ளேயே மூடநம்பிக்கை ஒழிப்புமுனை என்று ஒரு அமைப்பு வைத்துக் கொள்ளுங்கள்...யார் தடுக்க முடியும்...
மு:– அப்படியா...பகுத்தறிவுப் பாசறையும் ஏற்படுத்திக் கொள்ளலாமா...
ம:– தாராளமாக! இப்போது சமதர்மமுனை என்று ஒன்று வேலை செய்கிறதே, காங்கிரசிலே தெரியாதா...
மு:– என்ன நோக்கத்துடன்...?
ம:– காங்கிரஸ் சமதர்ம திட்டத்தைச் சரிவர, மும்முரமாக நடத்தவேண்டும் என்று வற்புறுத்த, சமீபத்திலே மகாநாடுகூட நடத்தது....
மு:– யாரார் போயிருந்தார்கள் அந்த மகாநாட்டுக்கு...
ம:– ஏன்! நம்ம காமராஜரே போயிருந்தார்...மு:– சரி! என் ஓட்டு காங்கிரசுக்குப் போடுவதாலே, என் சமதர்மக்கொள்கை, பகுத்தறிவுக்கொள்கை எதுவும் பறிமுதல் ஆகிவிடாது என்று சொல்வதாலே, காங்கிரசுக்கு வேலை செய்கிறேன். ஒரு சின்ன உதவி...
ம:– சொல்லுங்க செய்துவிடலாம்...
மு:– நான் எழுதியுள்ள கடவுள் ஒழிக! என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்குக் காமராஜரைத் தலைமைவகிக்க அழைத்துவர வேண்டும்...
ம:– அடுத்தவாரமே நடத்திவிடலாம்...
மு:– அடுத்த வாரமா...அச்சகத்தான் பழயபாக்கிக்காக நச்சரித்தபடி இருக்கிறான்; வேலையிலே சுணக்கம்...இரண்டு வாரம் ஆகும்...
ம:– அடுத்தவாரம் விழா! எப்படி என்ன என்று என்னை ஒன்றும் கேட்கவேண்டாம். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். காமராஜர் தலைவர்; அந்தக் கூட்டத்திலேயே, காங்கிரசை ஆதரித்து நீங்களும் ஒரு நாலுவார்த்தை பேசிவிட வேண்டும்; செலவு பற்றி உமக்கு ஒரு கவலையும் வேண்டாம்...
★
மண்டி மாரியப்பன்:– மண்டலமா! வாங்க, வாங்க இப்பத்தான் வழி தெரிஞ்சுதா, கண்திறந்துதா...அய்யோவ்! உன்னைப்போல ஆசாமிகளை நம்பினா, படுநாசம்தான்யா, யாருக்கும்...
மண்டலம்:– மளமளன்னு சொல்லவேண்டியது அவ்வளவையும் கொட்டிவிடுங்க சீக்கிரமா...
ம.மா:– ஆமாய்யா! கேலிதான் பேசுவே. தலைவரில்லையா... தெரியப்போகுதே பத்து நாளிலே. தீட்டிக்கிட்டுத்தான் இருக்கிறாங்க எல்லோரும்...
ம:– ஒழித்துக்கட்டத்தானே....செய்யட்டும்...நீங்களும் சேர்ந்து கொள்ளுங்க... தோற்கட்டும் காங்கிரசு, எனக்கு என்ன நஷ்டம்! ஆகிறபடி ஆகுது...
ம.மா:– என்ன மண்டலம்! முற்றுந் துறந்ததுபோலப் பேசி மிரட்டிப் பார்க்கறே.ம:– பின்னே, நீங்க எதுக்காக எறிஞ்சி விழறிங்க...
ம. மா:– நடையா நடந்தேன் உன் வீட்டுக்கு அந்த அதிகாரி கணக்குப் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு போயிட்டான்...மிரட்டிக்கிட்டு இருக்கிறான்...மானம் போகுதுன்னு...மகாநாடுன்னா பணம், மந்திரிவர்ராருன்னா பணம், மண்டலத்தேர்தல் என்றா பணம், மகாத்மா ஜெயந்தின்னா பணம்; யுத்தநிதி, கடன் பத்திரம், கூட்டத்துக்குப் பணம், இவ்வளவுக்கும் நானு! என்னை ஒரு அதிகாரி கேவலப்படுத்தறது, அதைக் கேட்க ஆள்கிடையாது. இது நியாயமா...இந்த விதமாக நீங்க நடந்து கொண்டா, எங்க உதவி எப்படிக்கிடைக்கும்...சொல்லு நீயே...
ம:– அந்த அதிகாரி விஷயமா, சொல்லவேண்டிய இடத்திலே சொல்லவேண்டியதை, சொல்லவேண்டிய நேரம் பார்த்து சொல்லி இருக்கறேன்...நான் என்ன, நன்றிகெட்டவனா! காங்கிரசுக்கு நீங்க செய்கிற உதவியை மறந்துவிடுவேனா...
ம.மா:– அதிகாரி விஷயமா நீ சொன்னது என்னத்துக்குப் பயன்பட்டுது. கல்லுப்பிள்ளையார்போல இங்கேதானே இருக்கிறான் அந்த இரும்புத்தலையன். அவனை வேறு இடம் மாற்ற முடியல்லையே...
ம:– முடியல்லே. ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஏன் முடியவில்லை என்கிற காரணம் தெரியுமா உங்களுக்கு...
ம.மா:– உன்னோட பேச்சுக்கு மேலிடத்திலே அவ்வளவு தான் மதிப்புப் போலிருக்குது...
ம:– எனக்கு உள்ள மதிப்பு எந்தவிதத்திலேயும் கெட்டுப்போகவில்லை. உங்களோட பேரைச் சொன்னதும் மேல் இடத்திலே, மேலே கீழே பார்க்கறாங்க. காங்கிரசுக்கு நீங்க விரோதியாகி விட்டதாக யாரோ கதை கட்டிவிட்டிருக்காங்க...ஏதோ சங்கக் கூட்டத்திலே பேசிவிட்டிங்களாமே, காங்கிரசுக்கு இந்தத் தடவை வெற்றி கிடைக்காது என்று...
ம.மா:– ஆமாம்! கோபம் அவ்வளவு எனக்கு. எங்களோட உதவியைப் பெற்றுக்கொண்டு எங்களையே கேவலமா நடத்தினா காங்கிரசு எப்படி ஜெயிக்கும்னு கேட்டேன்...ம:– அது காதிலே விழுந்ததும் மேல் இடத்திலே உள்ளவங்களுக்கு அதிகமான கோபம். இந்த விஷயம் தெரியாமல் நான், அந்த அதிகாரி விஷயமாச் சொன்னேன். மேல் இடம் வேணும் அந்த ஆசாமிக்கு! கணக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தால் போதாது, வழக்கே போட்டாகணும்... அப்பத்தான் ஆசாமியோட துடுக்குத்தனம் போகும்னு கூச்சலிட்டு, என்னை விரட்டிவிட்டுது...
ம.மா:– வழக்கே போடணுமாமா...என்ன அநியாயம் இது...வாரி வாரிக் கொடுத்தவனாச்சே...
ம:– வருத்தப்படவேண்டாம், கோபத்தாலே அவ்விதமாப் பேசிவிட்டாங்க...நான் ஒரு சபதம் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கறேன்.......நீங்க யார் பேச்சையோ கேட்டு வீணான பழி சுமத்தறிங்க. மாரியப்பப் பிள்ளையோட தேசபக்தி உங்களுக்குத் தெரியாது. அவருடைய உதவியாலேதான் இந்தத் தடவை காங்கிரசு ஜெயிக்கப் போகுது...அவருக்கு அவ்வளவு செல்வாக்கு...
ம.மா:– அது மேல் இடத்துக்கும் தெரியுமே. நம்மிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைத்துக்கொண்டுள்ள கிராமம் 50க்கு மேலே இருக்குமே தவிரக்குறையாதே...
ம:– சொன்னேன் விவரமா...மாந்தோப்புக் குத்தகை எடுத்து இருக்கிற விஷயம், மாரியம்மன் கோயிலுக்கு அபிஷேகம் செய்திருக்கிற விஷயம், உங்க மச்சினனுக்கு உள்ள செல்வாக்கு, எல்லாம் சொல்லி, இந்தத்தடவை முழுமூச்சாக அவர் ஈடுபட்டு, காங்கிரசுக்கு வெற்றி தேடிக்கொடுக்கப் போகிறார்......அப்புறமாவது அவருடைய செல்வாக்கையும் தேச பக்தியையும் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுங்க என்று சொன்னேன்...
ம.மா:– சொன்னயா! அதுதான் சரி...
ம:– அதிகாரியை மாற்றித்தான் ஆகணுமான்னு, கடைசியிலே கேட்டாங்க, மேலிடத்திலே...நான் சொன்னேன், இப்ப வேண்டாம், தேர்தல் முடியட்டும், மாரியப்பப் பிள்ளையோட செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டு, பிறகு அதிகாரியை மாத்துங்க என்று சொல்லி விட்டு வந்தேன். உங்களை மலைபோல நம்பி இந்தச் சபதம் செய்துவிட்டேன். அதிகாரியை மாற்றிவிடலாம் அரை நொடியிலே.... உங்களோட செல்வாக்கு எப்படிப்பட்டது என்பது மேலிடத்துக்குத் தெரிந்ததும்...
ம. மா:– பகவானோட கடாட்சத்திலே என் செல்வாக்கு எந்த விதத்திலேயும் பழுதாகிப் போகவில்லை. காங்கிரசுக்கு வெற்றிதேடிக் கொடுக்கவில்லையானா என்பேர் மண்டி மாரியப்பனில்லே...பார்த்து விடுவோம்...என்ன செலவாகிவிடப்போகுது...ஒரு நூறு மூட்டை கெட்டுப்போச்சுன்னு எண்ணிக் கொண்டாப் போகுது...
ம:– என்னத்துக்குங்க கெட்ட பேச்சு! ஒரு சிலோன் பர்மிட் கிடைச்சா கிடைக்கக்கூடியதிலே நூறிலே ஒரு பாகம் ஆகுமா. நீங்க செலவு செய்யப்போகிற தொகை...
ம. மா:– சிலோன் பர்மிட்டா? மண்டலம்! அது மட்டும் எனக்குக் கிடைக்கும் என்கிற உறுதி இருந்தா, எதிரியை ஓடஓட விரட்டி அடிக்கறேன்...பணம் பத்து ஆயிரம் ஆகும் என்றாலும் கவலை இல்லை...ம:– சிலோன் பர்மிட்டு, காங்கிரசு வெற்றிபெற்ற பத்தாம் நாள் உங்க வீடுதேடி வரும்.
★
மண்டலம்:– குமரப்பனா! ஏம்பா! என்னோட ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே... பத்தாயிரம் கடன் வேண்டும்னு மனு போட்டிருக்கிறயாமே... குமரப்பன்:– ஆமாம் புதிய தொழில் ஒன்று ஆரம்பித்து விட்டுத் தொல்லைப்பட்டுக்கிட்டு இருக்கறேன்...கடன் தேவைப்பட்டுது.
ம:– என்னிடம் சொல்லப்படாதான்னு தான் கேட்கறேன். நீ சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியாமலா போய்விடும்...கு:– அதெப்படித் தெரியாமல் போய்விடும்......அதான் ஒருத்தன் இருக்கிறானே எனக்கு மாமனாருன்னு பேர் வைத்துக்கொண்டு, அவன் சொல்லி இருப்பான்....
ம:– சேச்சே! அவரு ஒரு பேச்சும் சொல்லவில்லை பாங்க் தலைவர் இல்லே பார்த்தசாரதி, அவர் தான் சொன்னார். உன்னைப்பற்றி விசாரித்தார், ஆசாமி எப்படி? குணம் எப்படி? நிலவரம் எப்படி? என்றெல்லாம்...
கு:– எல்லா விவரமும் தெரிவித்திருக்கிறேனே...
ம:– சொன்னாரு...ஆனா அதெல்லாம் உண்மைதானான்னு கேட்டாரு. என் பேச்சிலே அவருக்கு ஒரு நம்பிக்கை......போன வருஷம் நம்ம நாராயணன் நாலாயிரம் ரூபா கடன் கேட்டிருந்தான்......அவனோட சொத்து மதிப்பு போதாதுன்னு யாரோ புகார் செய்துவிட்டாங்க. என்னைத்தான் கேட்டாரு. நான் சொன்னேன், நாராயணன் நாணயஸ்தன், அவனை நம்பி, நாலு என்ன எட்டு ஆயிரம்கூடக் கொடுக்கலாம் என்று, கொடுத்தாரு.
கு:– நம்ம விஷயமாகவும் சொல்லி ஏற்பாடு செய்யப்பா...
ம:– எனக்கு இல்லையா அதிலே அக்கறை...ஆனா எனக்கு இப்ப வேலை நெருக்கடி...தெரியுமே உங்களுக்கும். தேர்தல் வேலை. அந்த வேலையாத்தான் பாங்க் தலைவரிடம் போயிருந்தேன். அவர் ஒரு பட்டியல் கொடுத்தார் இன்னின்னாரைப் பார்த்தா நல்லது என்று...நம்ம பாங்க் தலைவருக்குக் காங்கிரசு என்றாலே, உயிர்...அவ்வளவு தேசபக்தி...கதர் போட்டவங்களை கண்ட போதும், உபசாரம் செய்வார்...காங்கிரசுடைய வெற்றியிலே அவ்வளவு அக்கறை...பாங்க் வேலையைக்கூட ஒரு பத்து நாளைக்குக் கவனிக்கப்போறதில்லைன்னு சொல்லிவிட்டாரு...
கு:– அப்படியானா, நம்மகடன் இப்பக்கிடைக்காதுன்னு சொல்லுங்க...
ம:– அவசரம் அதிகமாக இருந்தா ஒண்ணு செய்யுங்க...ஒரு நாலுநாளைக்கு நாலு இடம் சுற்றிக் காங்கிரசுக்கு ஓட்டு கேளுங்க...சேதி அவர்காதிலே விழுந்தாப் போதும், உடனே கடன் உங்க வீடுதேடி வந்து சேரும்...
கு:– உன்னோடு கூடவேவந்து வேலைசெய்கிறேன் மண்டலம்! எனக்கு சோடப்பட்டி, சொர்ணாபுரம், ஆளிப்பட்டி, அம்மானூர் இங்கே எல்லாம் சொந்தக்காரர்கள் நிறைய...
ம:– கேள்விதான் எனக்கும். ஆனா அங்கே உங்க பங்காளி ஒருத்தர் இருக்கிறாராம், அவர் எதிர்த்து வேலை செய்கிறாராம்...
கு:– என் பங்காளியா! விட்டுத்தள்ளு மண்டலம்! அவனுக்குச் செல்வாக்கா, எனக்குச் செல்வாக்கா என்பதை ஒருகை பார்த்துவிட்டாப்போகுது...
ம:– உன்பங்காளி முரட்டுப்பிடிவாதம்போல இருக்குது. கைக்காசைச் செலவழித்துக்கொண்டு வேலை பார்க்கறானாமே...
கு:– பணம் என்ன அவன்கிட்டத்தான் இருக்குதாமா! மற்றவங்களெல்லாம் என்ன பக்கிரியாமா! பார்த்துவிடுவமே அதையுந்தான். அந்த நாலு ஊரைப்பற்றின கவலையைவிடு, நான் பார்த்துக் கொள்கிறேன்...கடன்மட்டும்...
ம:– தேர்தலிலே நம்ம பக்கம் வெற்றி என்கிற செய்தி வந்த எட்டாம் நாள். கடன்தொகை வீடுதேடி வராவிட்டா, என்னை மண்டலம்னு கூப்பிடவேண்டாம், கமண்டலம்னு கூப்பிடு. வேலையைக் கவனி...புறப்படு...
★
மண்டலம்:– நமஸ்காரம்! நமஸ்காரம்! சௌக்கியந்தானுங்களே...பட்டாபிஷேக உற்சவத்திலே பார்த்தது...
தர்மகர்த்தா தாமோதரம்:– ஓ! மண்டலமா! பகவானோட கடாட்சத்திலே சௌக்கியந்தாம்பா...பத்துநாளா இலேசா பல்வலி.ம:– பல்லை எடுத்துவிடலாமே...புது டாக்டர் வந்திருக்காரு பாருங்க, ரொம்பக் கெட்டிக்காரரு...
த.தா:– உனக்குத் தெரிந்தவர்தானா...
ம:– அதென்ன அப்படிக் கேட்டுவிட்டிங்க. நம்ம ஊருக்கு ஒருநல்ல டாக்டர் வேண்டுமென்று நானே நேரிலேபோய் மந்திரியைப் பார்த்து, இவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேனே.
த.தா:– அப்படியா...ரொம்ப நல்லதாப்போச்சி...
ம:– தேர்தல்வேலை மும்முரம், தெரியுமே உங்களுக்கு...
த.தா:– ஆமாமாம்! ஆனா விலை ஏறிவிட்டுது என்கிற கோபம், வருத்தம் ஜனங்களுக்கு. காங்கிரசுமீது வெறுப்பு இருக்குது. உனக்கா தெரியாது...
ம:– கஷ்டப்படுகிற ஜனங்க அப்படித்தான், விவரம் தெரியாததாலே வெறுப்புக் காட்டுவாங்க...உங்களைப்போன்ற பெரியவங்கதான் நல்லபடி சொல்லி ஜனங்களைத் திருத்தவேணும்...
த.தா:– இந்த ஜனங்களை இந்தக் காலத்திலே திருத்தப்போனா, நீ முதலிலே திருந்திக்கொள்ளு என்று பேசுதுங்க...
ம:– ஆமாமாம்! இந்தக்காலத்து ஜனங்களோட போக்கைத்தான் பாகவதப் பிரசங்கி பன்னீர்தாஸ் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது நடத்தினாரே பக்தராமதாஸ் காலட்சேபம், அதிலே புட்டுப் புட்டுக் காட்டினாரே...
த.தா:– கேட்டயேல்லோ.....ராமா! ராமான்னு ராமதாசர் பஜித்ததும் ராமன் நேரிலேயே வந்தாராம்...அந்தக் காலத்திலே...
ம:– நம்ம காங்கிரஸ் ராஜ்யம்கூட, ராமராஜ்ஜியம்தானே...காந்தியே வைத்த பெயராச்சே...
த.தா:– அது சரி மண்டலம்! யாரோ சொன்னாங்க என்னிடம்...நீ என்னமோ ராமசாமிப் பெரியார் கூட்டத்திலே தலைமை வகித்தயாம்.....அவரு ராமனையும் சீதையையும் கண்டபடி திட்டினாராம் ...ஏம்பா! நீ கலந்து கொள்ளலாமா அந்தக் கூட்டத்திலே...
ம:– நான் காரணம் இல்லாமலா கலந்துகொண்டேன். வேறே யாராவது தலைமை வகித்திருந்தா, பெரியார் பேச்சை மறுக்க முடியாமல் திக்கித் திணறிப் போயிருப்பாங்க. நான் விட்டேனா! இவ்வளவு பேசற இவருடைய பேரே ராமசாமிதான்! என்று சொன்னேன். ஜனங்க ஒரே ஆரவாரம் செய்தாங்க அந்த ஒரு பேச்சிலே அவருடைய மூன்று மணிநேரப் பேச்சும், போச்சி...
த. தா:– பலே! பலே! சரியான பேச்சுத்தான் பேசியிருக்கறே...
ம:– அது மட்டுமா! மற்றொரு விஷயம் சொன்னேன், ஜனங்க அப்படியே அசந்து போய்விட்டாங்க. கடவுள் அவதாரமான ராமச்சந்திரமூர்த்தி, மகாலட்சுமியான சீதாபிராட்டி, இவர்களைப் பற்றியெல்லாம் கண்டித்துப் பேசுகிற பெரியாரே, நம்ம காங்கிரசு கட்சியைப் பற்றிக் கண்டிக்க முடியவில்லை; பாராட்டிப் பேசறாரு; ஆதரிக்கச் சொல்கிறார். எதையும் கண்டிக்கிற பெரியாரே காங்கிரசை ஆதரிக்கிறபோது, நாடே திரண்டு வந்து காங்கிரசுக்கு ஓட்டுப் போடும் என்பதிலே என்ன சந்தேகம் என்று கேட்டேன். பத்து நிமிஷமாச்சி, கரகோஷம் அடங்க...
த. தா:– ரொம்பச் சந்தோஷம்...வரட்டுமாப்பா...
ம:– ஒரு சின்னக்காரியம் செய்யணும்...நம்ம கோயில் நிலம் இருக்குது பாருங்க...
த.தா:– கொட்டாவூர், கோனூர், பருதூர் மூன்று இடத்திலே இருக்குது, நிலம்...
ம:– சிரமத்தைப் பார்க்காமெ ஒரு நடை நீங்க போய் வந்தா நல்லது...
த. தா:– ஓட்டுக்குத்தானே...சொல்லி அனுப்பிவிட்டால் போகுது.
ம:– நேரிலேயே போய்வந்தா நல்லது...ஏன்னா! மேல் இடத்திலே, உங்களை ஏரியா கமிட்டிக்குப் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்குது. அந்த இடத்துக்குப் பல்விளக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஆசாமி. உங்களைப் பற்றித் தப்புந்தவறுமா சொல்லி வைத்திருக்கிறான்...
த. தா:– தப்புந் தவறுமாப் பேச என்ன இருக்குது; என்னைப் பற்றி...
ம:– ஒண்ணுமில்லிங்க...அவருக்குத் தள்ளாத வயது...ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. எந்தக் காரியத்தையும் தானே நேரிலே போய்ப் பார்க்க முடிகிறதில்லே என்று கோள்மூட்டி விட்டிருக்கிறாங்க...சில பேர். அதனாலேதான். இந்தத் தேர்தல் வேலையாக நீங்களே அந்த ஊர்களுக்கு நேரிலேயே போய்வந்தா நல்லதுன்னு நினைக்கிறேன்...
த. தா:– அப்படியா விஷயம்...தள்ளாத வயதாமா எனக்கு...எல்லாம் தள்ற வயதுதான்...நடமாட முடியாதாமா...நாளைக்கே கிளம்பிப் போறேன் அந்த மூணு ஊருக்கும், அப்பத் தெரிந்து கொள்ளட்டும், தள்ளாதவனோட வேலைத் திறமையை. பல்வலி இருந்தா என்ன...கொஞ்சம் காசிகட்டித் தூளை அப்பிக் கொண்டாபோகுது வலி தன்னாலே...நாளைக்குக் கிளம்பறேன்...அந்த ஏரியா கமிட்டி விஷயம்?
ம:– அது உங்க காலடியிலே கிடக்குதுங்க. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
★
தம்பி! இத்தனைவிதமான முயற்சிகளிலும், ஆளுங்கட்சியால் ஈடுபட முடிகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் அளவுக்கு, நாம் போட்ட கணக்கினை பொய்யாக்கி விடுகிறது.
- மக்களின் இதயம் நமது பக்கம் இருக்கிறது என்பதிலே ஐயமில்லை. ஆனால், மக்கள் தமது இதயம் இடும் கட்டளைப்படி நடந்து கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி, அவர்களை இக்கட்டிலே சிக்க வைத்துவிடும் காரியம் நடந்துவிடுகிறது.
இவைகளையும் எதிர்பார்த்து, இவைகளையும் மீறி, நமக்கு ஆதரவு கிடைத்திடத்தக்க வழி கண்டறிந்து, பாடுபட வேண்டும்.
இத்தனை கொடுமைகளைச் செய்த காங்கிரசுக் கட்சியை எதிர்த்துத் தோற்கடிக்க இவ்வளவு பாடுபட வேண்டுமா, என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.
கொடுமை, உறுமிக்கொண்டு கிளம்பும் சிறுத்தை வடிவிலே மட்டும் இல்லை; பசும்புற்றரையிலே ஒளிந்து கொண்டு நெளியும் பாம்பின் உருவிலேயும் இருந்திடுவது காண்கிறோமே!
ஆகவே, காங்கிரசாட்சியின் கொடுமைகளை மேடைகளில் எடுத்துக் கூறிவிட்டால் போதும், மக்கள் தெளிவு பெற்று, காங்கிரசாட்சியை வீழ்த்துவதற்கான துணிவு பெற்று, நமக்குத் துணை நிற்பர் என்று எண்ணிவிட்டால் போதாது. கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டாக வேண்டும், தோழமை வளர்ந்தாக வேண்டும்.
ஆசைக்கு மயங்கிவிடுவது, அச்சத்துக்கு இடமளித்து விடுவது, இச்சகம் பேசுவோரின் நச்சு வலையில் வீழ்ந்து விடுவது ஆகியவற்றினை நீக்கியாக வேண்டும்.
இதற்கு ஏற்ற முறையில் உன் எதிர்காலப் பணி அமைந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே இதனை எழுதினேன்.
2-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை