தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008
காஞ்சிக் கடிதம்: 18
மனிதனும் மிருகமும்
- மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்
- இராகுல சங்கிருத்தியாயனின் படப்பிடிப்பு
- விஞ்ஞான விற்பன்னர்களின் கருத்துரைகள்
- வெள்ளைப்பாண்டி கவிதையால் எழுந்த எண்ணங்கள்
தம்பி,
அடவியிலே அலைந்துகொண்டும், குகைகளிலே பதுங்கிக்கொண்டும், கல்லையும் கட்டையையும் கருவிகளாகக் கொண்டு மிருகங்களுடன் போரிட்டுக்கொண்டும் காயோ, கனியோ, கிழங்கோ, மிருகத்தின் இறைச்சியோ, பசித்தீயைப் போக்கிக்கொள்ள எதனையோ உண்டு, கதிரவன் கக்கிடும் வெப்பத்தாலும், கடுங்குளிராலும், பெருமழையாலும், பேய்க் காற்றாலும், நிலநடுக்கத்தாலும், காட்டுத் தீயினாலும் அலைக்கழிக்கப்பட்டு, கொல்வது கொல்லப்படுவது, துரத்துவது துரத்தப்படுவது என்ற நிலையில், இருந்துவந்த மனிதகுலம் இன்று விண்ணகத்து விந்தைகளைக் கண்டறிந்திட, முனைந்திடும் காலகட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. எத்தனை நெடிய பயணம்! எத்தனை ஆபத்துக்களையும் அழிவுகளையும் எதிர்த்து நடாத்தப்பட்ட பயணம்! எங்கு இருந்தான்! எங்குச் செல்கிறான்!! எவ்விதம் இருந்து வந்தான், எவ்விதமான மாறுதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறான்! குகைகளில், மொழி அறியாது, தாய்க்கும் தாரத்துக்கும், உடன் பிறந்தாளுக்கும் உள்ளத்தை வென்றாளுக்கும் வித்தியாசம் தெரியாது, மிருக இச்சையை எப்படியோ தீர்த்துக் கொண்டு, உறுமிக் கிடந்தவன், இன்று சமூகக் கட்டுக்கோப்பும் சட்ட திட்டங்களும் பெற்று, இந்த அவனியைத் தனது விருப்பத்தின்படி உருமாறச் செய்ததுடன் நில்லாது, மேலே மேலே செல்கிறான்; சென்றபடி இருக்கிறான்; வேகவேகமாக; விதவிதமான முறைகளைத் துணைகொண்டு; ஒளி ஒலி இவற்றின் வேகத்துடன் போட்டியிட்டபடி!! பெற்ற வெற்றிகள் பெறவேண்டிய வெற்றிகளைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகின்றன! சென்ற இடம். இனியும் செல்லவேண்டிய இடத்துக்கு தூண்டுதலைத் தருகிறது! பயணம் முடிவு பெறவில்லை! பயணத்தின் முடிவு தெரியவுமில்லை! எங்கே செல்கிறான்? அறிந்திட நேரமில்லை; நினைப்பும் எழவில்லை! பயணம் செய்திடவே காலமெல்லாம் செலவாகிறது! எங்கே செல்கிறான்? காற்று எங்கே செல்கிறது? ஒலியும் ஒளியும் எங்கே செல்கின்றன? விடை உண்டா இவ்வினாக்களுக்கு? உண்டு எனில், அஃதே, மனிதகுலம் மேற்கொண்டுள்ள பயணத்தின் பொருளையும் அறிந்திடத் துணைசெய்யும். செல்லும் இடமும், செல்வதன் நோக்கமும் அறிந்த பிறகு பயணத்தைத் தொடரலாம் என்று மனிதன் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. சென்றுகொண்டே இருக்கிறான்! புதிது புதிதாகப் பலவற்றினைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு, சென்றவண்ணம் இருக்கிறான். எதனாலோ ஈர்க்கப்பட்ட நிலையில், சென்றபடி இருக்கிறான். சந்திரமண்டலத்துடன் அந்தப் பயணம் நின்றுவிடப் போவதில்லை! செவ்வாய் மண்டலம் அழைக்கிறது!! காணவேண்டிய மண்டலங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன! எல்லாம் புரிந்துவிட்டது. எல்லாம் கிடைத்துவிட்டது, இனிப் பயணம் தேவையில்லை என்று கூறிடும் கட்டம் இல்லவே இல்லை! சென்றுகொண்டே இருப்பது மனிதகுலத்தின், பொழுது போக்குமல்ல, தொழிலும் அல்ல; இயல்பு! இயங்கும் நிலை உள்ளமட்டும் இந்த இயல்பு இருந்தே தீரும், சுற்றிடும் பம்பரம் கண்டு வியந்திடும் குழவிபோல, பறந்திடும் விமானம் கண்டு மகிழ்ந்திடும் இளைஞன் போல, இன்று மனிதகுலப் பயணத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து, ஒரு விந்தையிலிருந்து மற்றோர் விந்தைக்கு அழைப்பு விடுத்திடும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் செயல்முறைகளையும் கண்டு, நாம் பெருவியப்படைகிறோம்.
உண்டு உறங்கி, உறவாடி இனம் பெருக்கி, மாண்டு மடிந்துபோவது மனித குலத்தின் செயலின் அடிப்படை. கிடைத்ததை உண்டு, அலுப்பினால் வீழ்ந்து உறங்கி, வலிவு காட்டி உறவாடி இனம் பெருக்கி, அழிவு தன்னை நோக்கி வரும்போது எதிர்த்துப் பார்த்து, இயலாத போது மாண்டுபோவது, மனிதகுலத்தின் பாலபருவ நிலையாக இருந்தது. இந்த நிலையிலிருந்து, தேவைப்படுவதை உண்பது, உண்பனவற்றை உண்டாக்கிக்கொள்வது வேலை செய்வதால் அலுப்படைவது, அதனால் இழந்துவிட்ட வலிவினைத் திரும்பப்பெற உறங்குவது, உடல் உணர்ச்சிக்காக மட்டுமின்றி உள்ளத்தில் எழுந்திடும் பற்று பாசம் காதல் எனும் உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி உறவு முறையினை வகுத்துக்கொண்டு அதன்படி ஒழுகுவது, சாவு வந்திடும் என்று தோன்றிடும் போது, தடுப்பு முறைகள் தேடுவது, இறுதியில் மடிந்து போவது எனும் கட்டம் வருவதற்குள் மனிதன் பலப்பல நூறாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டான்; ஆண்டுகள் என்ற காலக் கணக்குக்கூடத் தெரியாத நிலையிலேயே, எத்தனை எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டான். மனிதன், உருப்பெற்று உலவத்தொடங்கி ஐந்து இலட்சம் ஆண்டுகளாகின்றன என்று விஞ்ஞான விற்பன்னர்கள் கூறுகின்றனர். மிருக நிலையிலேயே, மனிதன் நீண்ட நெடுங்காலத்தைக் கழித்து விட்டிருக்கிறான். எனினும், துவக்க முதலே, மனிதன் சில தனித்தன்மைகளையும் தனிச் சிறப்பினையும் பெற்றிருந்ததால், மிருக நிலையினை மாற்றிக்கொள்ளும் முயற்சியிலே ஈடுபட்டு, மெள்ள மெள்ள வெற்றி கண்டான். மிருகங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ற இயல்பைப் பெறுகின்றன; அந்த இயல்பு, மாற்ற முடியாததாகி விடுகிறது. உறுமிக் கொண்டிருந்த புலியும், சீறிக்கொண்டிருந்த பாம்பும், கொத்திக்கொண்டிருந்த வல்லூறும் இன்றும் அதே இயல்புடனேயே இருந்திடக் காண்கிறோம். மனிதனைவிட மிருகங்கள், எத்தனையோ காலத்துக்கு முன்பிருந்தே உள்ளன; எனினும், இயல்பு மாறவில்லை; மாற்றிக்கொள்ளும் திறமை மிருகங்களுக்கு அமையவில்லை.இயல்பு, சுற்றுச்சார்பினாலே உருப்பெறுகிறது, வளருகிறது; எனவே, இயல்பு மாறவேண்டுமெனில் சுற்றுச்சார்பு மாறவேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்; அதற்கான தனித்திறமை மிருகங்களிடம் இல்லை; எனவேதான் இயல்பு, அன்று இருந்தது போன்றே இன்றும்—மிகப் பெரும் அளவுக்கு—இருந்திடக் காண்கிறோம்.
மிருகங்களின் உருவ அமைப்பு, நடமாட்ட முறை இவற்றிலே ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள்கூட, தாமாக விரும்பி, முயன்று ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் அல்ல. இருந்துவந்த சுற்றுச்சார்பு தானாக மாற்றமாகி, அதன் காரணமாக, மிருகங்களின் நிலையிலேயும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்படுத்திக் கொள்ளவில்லை!! இதிலேதான், மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் அடங்கி இருக்கிறது.
யானை முதல் பூனைவரை, பாம்பு பறவை பூச்சி புழு என்பவைகள் ஈறாக, வடிவமாற்றம் நிரம்ப ஏற்பட்டுள்ளன என்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.
இன்று காணப்படும் யானைக்கும், பண்டு இருந்து வந்ததற்கும், உள்ள வித்தியாசத்தைக் காணும்போது, திடுக்கிட்டுப் போய்விடுவோம். நீர் வாழ்வன, நிலம் வாழ்வன, ஊர்வன, பறப்பன, எனும் எவற்றிலும், பெரிய மாறுதல் வடிவத்திலே ஏற்பட்டுவிட்டன. குதிரை காட்டுக் குதிரையாக இருந்த காலத்திலிருந்து வெகுவாக முன்னேறி, இன்றைய நிலையினைப் பெற்றது. நகரக்கூட முடியாதபடியான மாமிச மலையாக இருந்துவந்த பல மிருகங்கள் அழிந்தே போய்விட்டன. இன்று உள்ள மிருகங்கள் நமது முன்னோர்கள் எவ்விதம் இருந்தனர் என்று கண்டறியுமானால், வெட்கித் தலைகுனியும். மிருகங்களைச் சொல்கிறோமே! நமது இலட்சணம் மட்டும் என்ன! நமது மூல மூதாதை குரங்கு!! பெருமைப்படத்தக்கது என்றா கூற மனம் வரும்.
சுற்றுச் சார்பினை மாற்றி அமைத்து இயல்பையும் வடிவினையும் அதற்கு ஏற்ப, மிருகங்கள் பெற்றிடவில்லை; மனிதன் மட்டுமே, சுற்றுச் சார்பினைத் தனக்கு ஏற்றதாக, வசதி அளிப்பதாக, அமைத்துக் கொண்டான்.மிருகங்கள் போலவே, புதர்களில் பதுங்கிக் கிடந்தவன். குகைகளைக் கண்டான்; அதிலே இருந்துவந்த மிருகங்களை விரட்டிவிட்டோ கொன்றுவிட்டோ, குகைகளைத் தனதாக்கிக் கொண்டான். குகைகளைக் கண்டறிந்தது மட்டுமல்ல, சில காலத்துக்குப் பிறகு, மலைகளைக் குடைந்து குகைகளை உண்டாக்கிக் கொண்டான். சுற்றுச் சார்பினை மாற்றி அமைத்திட அமைத்திட, அதற்கு ஏற்றவிதமாக இயல்பு மாறிக்கொண்டு வரலாயிற்று.
சுற்றுச் சார்பினைத் தனக்குச் சாதகமான முறையில் மாற்றி அமைத்துக் கொள்ளும் திறமை பெற்றிருக்கும் காரணத்தினாலேயே, மனிதன் எந்த இடத்திலும் இருந்திடும் வகை கண்டறிந்து வாழ்ந்திட முடிகிறது.
வெப்பம் தீயெனத் தாக்கும் சகாரா பாலைவனத்திலும் மனிதன் இருக்கிறான், பனி மலை மிகுந்த அயிஸ்லாந்திலும் இருக்கிறான்; கடலோரமும் அவனைக் காணலாம். மலைமுகட்டிலும் அவன் இருக்கிறான்; ஆற்றோரமும் இருக்கிறான்; அடவியிலும் இருக்கிறான்; பெருமழை பொழிந்தபடி உள்ள இடத்திலும் இருக்கிறான்; வறட்சி மிகுந்த இடத்திலும் இருக்கிறான்.
மிருகங்களின் நிலை அவ்விதமில்லை. பனிப் பிரதேசத்து மிருகங்களை பாலைவனத்தில் கொண்டு சேர்த்தால் செத்துப் போகின்றன; நீர்வாழ்வனவற்றை நிலத்தில் கிடத்தினால் உயிர் போய்விடுகிறது. சில சுற்றுச் சார்பிலே வாழ்ந்திடும் வகையினுள்ளவைகள், மாறான சுற்றுச் சார்பிலே கொண்டு சேர்க்கப்பட்டாலோ, தாமாகச் செல்ல நேரிட்டாலோ மடிந்து விடுகின்றன.
மிருகக் காட்சிச் சாலைகளில் இதனை உணர்ந்தே, எந்தெந்த மிருகத்துக்கு என்னென்ன விதமான சுற்றுச் சார்பு தேவையோ அதனை அமைத்துத் தருகிறார்கள்.
மனிதன், எவ்விதமான சுற்றுச் சார்புள்ள இடத்திலும் இருக்கிறான்; காரணம், அதனைத் தனக்கு ஏற்றதாக்கிக்கொள்ளும் முறைகளைக் கண்டறிந்துகொள்ள முடிவதால்.
கடுங்குளிர் மிக்க இடமானால் கம்பளிச் சட்டை அணிந்து கொள்வதன் மூலம், கொடுமை நேரிட்டு விடாதபடி தடுத்துக் கொள்கிறானல்லவா! மானோ மாடோ கடுங்குளிரிடத்தில் கொண்டு செல்லப்பட்டால் என்ன செய்திட முடியும்! விறைத்து இறந்துவிடுகின்றன.
மிருகங்கள், தமக்கென்று அமைந்துவிட்ட உடலமைப்பு, இயல்பு இவற்றினை மட்டுமே கொண்டு செயல்பட வேண்டியிருக்கிறது; வேறு துணை—வேறு கருவி—வேறு முறை—பெற்றிடவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை. நகர்ந்து செல்லும் உடலமைப்பும் இயல்பும் பெற்ற ஆமை, வேகமாகப் பாய்ந்தோடும் குதிரையின் துணைபெற்று, விரைந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்றிட முடியுமா! ஆமை, அந்த நாளிலிருந்து நகர்ந்துகொண்டுதான் இருந்திடுகிறது—வேகம் பெறமுடியவில்லை! குதிரை. எப்போதும் வேகமான ஓட்டத்தைப் பெற்றிருந்திருக்கிறது.
மனிதன், தனக்கு உள்ள உடலமைப்பு, இயல்பு, என்பவைகளினால் மட்டும் கிடைத்திடும் நடவடிக்கைகளோடு நின்றுவிடவில்லை: வேறு துணை பெறுகிறான்; வேறு கருவிகளைத் தேடுகிறான்.
பறந்திடும் உடலமைப்பு மனிதனுக்கு இல்லை! ஆனால், பறந்து செல்கிறான், பறவைகள் வியந்திடத்தக்க விதத்தில்.
நீருக்கடியிலே இருந்திடத்தக்கதான உடலமைப்பு மனிதனுக்கு இல்லை; ஆனால், நீர்மூழ்கிக் கப்பல் அமைத்து, அதன் துணைகொண்டு, நீருக்கடியில் இருந்திடும் வழி பெற்றுவிட்டான்.
கிடைத்ததைக் கிடைத்தபடியே தின்றிடும் மிருக முறையிலிருந்து வந்தான் மனிதன்; இன்று கிடைப்பதை அல்ல, உற்பத்தி செய்வதை; அதே முறையிலே அல்ல, தன் சுவைக்கு ஏற்பப் பக்குவப்படுத்தியும், மற்றப் பொருளுடன் கலந்தும் உண்ணத் தலைப்பட்டுவிட்டான்.
மிருகங்கள், நடமாடுகின்றன, மனிதன் வாழுகின்றான் என்று கூறிடுவதற்கான காரணத்திலே இது முக்கியமானது; மனிதன் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்; மிருகங்களுக்கு அமைந்து விடுகிறது.மக்களுக்கும் மாக்களுக்கும் இயல்பிலேயும் நடவடிக்கைகளிலேயும் வேறுபாடு காணமுடியாதிருந்த காலத்தை இன்று ஆராய்ச்சியாளர்கள், எடுத்துக் காட்டுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மாக்களை வேட்டையாடுவதும், மாக்கள் மக்களைப் பிய்த்துத் தின்பதும் மாறி மாறி நடைபெற்றுவந்த நிகழ்ச்சிகளாக இருந்திருக்கின்றன.
இராகுல சங்கீத்ராயன் எனும் ஆராய்ச்சியாளர், கி.மு. 6000-ல், இருந்த நிலைமை பற்றி எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, எந்தவிதமான வாழ்க்கை முறையிலிருந்து மனித குலம் இன்றைய புதுமை வாழ்க்கை முறைக்கு வந்திருக்கிறது என்பது புரிகிறது; புரியும்போது வியப்பு, திகைப்பூட்டும் அளவுக்கு ஏற்படுகிறது.
பனிப்படலம் மிகுந்த வால்கா நதிப் பிரதேசத்தைக் காட்டுகிறார் ஆராய்ச்சியாளர். நீலநிற வானம் மேலே! கீழே பனி கப்பிக் கொண்டுள்ள நிலப்பரப்பு. பெரிய பெரிய மரங்கள்—கிளைகளிலே பனிக் கட்டிகள். மிருகங்களின் உறுமல், பட்சிகளின் கலகல ஒலி, வண்டுகளின் ரீங்காரம் எதுவும் இல்லை. திகைப்பூட்டும் அமைதி.
மலைகளிலே இயற்கையாக அமைந்துள்ள குகைகளே வீடுகள்!
ஒரு கிழவி—ஆடை இல்லை—கற்றை கற்றையாக ரோமம் அடர்ந்திருக்கும் நிலையில்—கண்களில் ஒளி இல்லை—ஒரு வெறிச்சிட்ட பார்வை.
எலும்பைச் சுவைத்தபடி சில பெண்கள்.
அதிலே ஒரு துண்டு வீசப்படுகிறது அழுகுரலெழுப்பும் குழந்தையிடம்.
குகையிலே பதுங்கிக் கிடக்கும் மனிதமிருகங்கள்!
நெருப்பு மூட்டிட விறகு தேடி, கட்டுகளாக்கித் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் இளம் பெண்கள்.
ரோமம் நீக்கப்படாத தோலால் ஆடை, அவர்களுக்கு.
நீண்ட கூர்மையுள்ள கம்பு, நன்றாகத் தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட கல் அம்பு!குடும்பத் தலைவி முன்னே செல்ல, மற்றவர்கள் பின்னால் செல்கிறார்கள்.
ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள கரடிகளைத் தாக்கிக் கொல்கிறார்கள்—உணவுக்காக.
குகைக்கு வருகிறார்கள்—வழியிலே ஓநாய்கள் சூழ்ந்து கொள்கின்றன. போர்!
ஓநாய் கொல்லப்படுகிறது, அதன் பச்சை இரத்தத்தை இவர்கள் குடிக்கிறார்கள்-சதையைப் பிய்த்துத் தின்கிறார்கள்.
இவர்களிலே சிலரை ஓநாய்கள் கொன்று, சதையைப் பிய்த்துத் தின்கின்றன.
இது ஒவ்வொரு நாளும்—கொல்வது கொல்லப்படுவது—குருதி கொட்டுவது குருதி குடிப்பது—நாலு கால் மிருகங்களுக்கும் இரண்டுகால் மிருகங்களுக்கும் ஓயாத போர்! இது வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறார் ஆராய்ச்சியாளர்.
இவ்விதமான முறையிலா மனிதகுலம் இருந்து வந்தது என்று எண்ணும்போதும், இவ்விதமாக இருந்து வந்த மனிதகுலத்தில், வழிவழி வந்தவர்களே நாம் என்பதை எண்ணும்போதும், எல்லாவகையாலும் மனிதன் உயர்ந்தவன, சிறந்தவன் என்ற எண்ணமே ஒரு விதமான கேலிக்கூத்தாகத் தென்படும்.
மாக்களுக்கும் நமக்கும் மாறுபாடு தெரியமுடியாத நிலையிலே இருந்து, வெகுதூரம் முன்னேறிவிட்டோம் என்ற எண்ணம் ஒரு விதமான மன நிம்மதியைக் கூடத்தரும் என்பதில் ஐயமில்லை.
கூர்ந்து பார்த்தால், முறையிலே வியக்கத்கக்க மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அடிப்படை அலுவல்கள், இயல்புகள், உணர்வுகள், வெகுவாக மாறிவிடவில்லை என்பது புலனாகும்; புலனாகும்போது, மாக்களைவிட நாம் மிக அதிகமாக முன்னேறிவிட்டோம் என்று கூறிக்கொள்வதற்கில்லையே என்ற எண்ணம் நம்மைப் பிடித்து வாட்டி வதைத்திடும்.
கல்லைத் தீட்டிக் கருவியாக்கி, காட்டுமிருகங்களை வேட்டையாடிக் கொன்றுதின்று உடற்பசியைப் போக்கிக் கொள்வதிலே வரம்புவகை, முறைநெறி என்பவைகளைப் பார்க்காமல் நடந்துகொண்டு வந்த நாட்களிலே, உண்பது உறங்குவது, உறவாடுவது, போராடுவது. பெறுவது தருவது, என்பவைகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்த அதே உணர்வுகள், இன்றும் அதே விதத்திலே கிளம்பி, மனிதக் குலத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதை அறிகிறோம்; அறியும்போது, முன்னேறிவிட்டோம் என்று கூறிக் கொள்ளும் முழு உரிமையை மனிதகுலம் பெறவில்லை என்பது தெளிவாகிறது.
இன்றும், எனக்கு, உனக்கு என்பதற்காகவும், என்னுடையது உன்னுடையது என்பதற்காகவும் அன்று போலவே அமளி நடந்தபடி இருக்கிறது! கருவிகள் மாறிவிட்டன, கருத்து மாறிவிடவில்லை, போர் முறைகள் மாறிவிட்டன, போர் உணர்வு மாறவில்லை.
கோபம் கொந்தளிப்பு, தாக்குதல் தப்பித்தல், பாய்வது பதுங்குவது—எல்லாம் அன்று போலவே இருந்திடக் காண்கிறோம்.
மலைமுகடுகளில், அடவிகளில், அருவிக்கரைகளில் அமளிகள் நடைபெற்றன முன்பு; இப்போது நவநாகரிக நகர்களில், மின்னிடும் மாளிகைகளில், அமளி! முன்பு கல்லாலான கருவிகள்! இன்று அணு ஆயுதம்!
அழிக்கும் உணர்வும், அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் உணர்வும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ள போராட்டமும், அன்று போலவே இன்றும் இருந்திடக் காண்கிறோம்.
முன்பு, வாழ்நாளில் மிகப் பெரும்பகுதி, போராட்டமாகவே இருந்துவந்தது என்று கூறலாம்; இன்று வாழ்நாளில் ஒரு போராட்டத்துக்கும் மற்றொரு போராட்டத்துக்கும் இடையிலே, ‘அமைதி நாட்கள்’ இருக்கின்றன. இந்த அளவுதான் மனிதகுலம் முன்னேற்றம் காணமுடிந்திருக்கிறது.
அரசு இல்லை ஆகவே அமைதி இல்லை! மார்க்கம் இல்லை ஆகவே ஒழுக்கம் இல்லை! சட்டம் இல்லை ஆகவே சாந்தி இல்லை! அறநூல் இல்லை ஆகவே அறம் இல்லை! அறிவாளர் இல்லை ஆகவே அறிவுத் தெளிவு இல்லை!—அன்று, மாக்களுக்கும் மக்களுக்கும் அதிக அளவு மாறுபாடு இல்லாத காலத்தில்.இன்றோ! அரசு இருந்தும் அமைதி இல்லை; மார்க்கம் இருந்தும் ஒழுக்கம் இல்லை; அறநெறி காட்டப்பட்டும் அறம் நிலைத்து நிற்கவில்லை; அறிவாளர் முயன்றும் அறிவுத் தெளிவு ஏற்படவில்லை!
ஆனால், எழிலூர்கள் பலப்பல, தொழிலின் ஏற்றம் மிகப்பல! மாடமாளிகை, கண்ணைப் பறிக்கத்தக்க விதமாக! கலை கவர்ச்சி தருவதாக! இவைகளுக்குக் குறைவு இல்லை.
இவைகளைக் காட்டிலும் மிக முக்கியமானது என்று கூறத்தக்கதான விஞ்ஞான அறிவுப்பெருக்கத்துக்கோ ஒரு அளவு இல்லை! மேலே மேலே செல்கிறது மனிதகுலம், விண்ணிலே உள்ள கிரகங்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவர.
புறத்தோற்றத்தைக் காணும்போது. மனிதகுலம் வெகுதூரம், வேகவேகமாக முன்னேறி, உன்னதமான கட்டத்தில் வந்திருப்பது தெரிகிறது.
அகத்தில் நெளியும் உணர்வுகளையும், அந்த உணர்வுகள் ஆட்டிப் படைத்திடுவதற்கேற்ற வண்ணம் மனிதகுலம் ஆடித் தொலைப்பதையும் பார்க்கும்போது முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்பதிலேயே பலமானதோர் சந்தேகம் ஏற்படத்தான் செய்யும்.
வாழப் போரிட்டுத் தீரவேண்டியுள்ள நிலையும், வலிவைக் காட்டிப் பகையைத் தீர்த்துகட்டும் முறையும், காடு மிகுதியாக இருந்த நாட்களில் இருந்துவந்தது போலவே காடு குறைந்து நாடு எழில்பெற்ற நாட்களிலேயும் இருக்கிறது; இதைப் பார்க்கும்போது, மனிதகுலம் பெற்றுவிட்ட முன்னேற்றம், அடிப்படையை மாற்றுவதாக இல்லை என்பது புரிகிறது; கவலை மிகுந்திடுகிறது.
காட்டுக் குணத்தைப் போக்கிக்கொள்வதிலே பெருமைப்படத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மனிதகுலத்திடம் விஞ்ஞானம் புதிய புதிய மிகுதியும் வலிவுள்ள கருவிகளை, முறைகளைக் கொடுத்து விட்டிருக்கிறதே என்பதனை எண்ணி இன்று பெருத்த கவலைக்குள்ளாகிவிட்டுள்ளனர் பேரறிவாளர் பலர். உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதிலே மனிதகுலம் வெற்றி பெறாத நிலையில், உணர்வுகளின் அடிப்படையிலே அமைந்துவிடும் நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டுவிடும் விதமாக, இன்றைய விஞ்ஞான அறிவு பல புதிய கண்டிபிடிப்புகளைக் கொடுத்துவிட்டிருப்பது, குருடன் கையில் சிக்கிவிட்ட தீப்பந்தம் போன்ற நிலையை உண்டாக்கிவிட்டிருக்கிறது.
இதனை எண்ணும்போதுதான் இன்றைய நிலையில் ஒரு பெரும்போர் மூண்டுவிடுமானால், உலகமே அழிந்துபடும் என்ற அச்சம் எழுகிறது. மனிதகுலம் அழிந்துபடாமல் காப்பாற்றப்படவும். உலகம் மீண்டும் காடு ஆகிடாமல் தடுத்திடவும் வேண்டும் என்ற தூய்மை மிக்க பொறுப்புமிக்க கருத்தினைக் கொண்டவர்கள், உலகப் பெரும்போர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உருக்கத்துடன் எடுத்துரைத்து வருகின்றனர்.
அனேகமாக எல்லா நாட்டுத் தலைவர்களும் உலகப் பெரும்போர் மூண்டுவிடக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை காட்டிப் பேசி வருகின்றனர்.
ஒரே ஒரு நாட்டின் தலைவர் மட்டுமே, பெரும்போர் மூளட்டுமே! உலகிலே அழிவு நடமிடட்டுமே! அழிந்தது போக, மிகுந்திருப்பதிலிருந்து மீண்டும் ஒரு புதிய வளர்ச்சி துளிர்க்கும் என்று பேசுகிறார். கூசாது இத்தகைய கொடிய கருத்தினைக் கூறிவருவது மக்கள் கொல்லப்பட்டு மலைமலையாகக் குவிக்கப்பட்டாலும் என்ன என்ற விதமான இரக்கமற்ற இயல்பு கொண்டுள்ள சீனத்துத் தலைவன் மாசே-துங் எனும் வெறியன் மட்டுமே.
மனிதகுலம் மெத்தப் பாடுபட்டு, பலப்பல ஆயிரம் ஆண்டுகளாக நடத்திய பயணத்தின் பலன் அனைத்தையும் ஒரு நொடியில் பாழாக்கி, மறுபடியும் கற்காலத்துக்குச் சென்றிடும் நிலை பிறந்திடும், ஒரு பெரும்போர் மூண்டிடின் என்ற அச்சமும் பொறுப்புணர்ச்சியும், ஓரளவுக்கு, இன்று அரசோச்சுகிறது. இந்த நல்லியல்பையும் நாசமாக்கிடும் விதத்தில், சீனத்துப் போர் வெறியர்களும் அவர்களின் உறவிலே உவகை கொள்ளும் பாகிஸ்தான் தலைவர்களும், நடந்து கொண்டு வருவது, மனித குலத்துக்கே இழைக்கப்படும் மாபெருந்துரோகமாகும்.
இருப்பது போதாது மேலும் வேண்டும் என்ற நினைப்பும், நமக்கு மட்டுமே இருக்கவேண்டும் அதனைப் பெற எம்முறையையும் மேற்கொள்ளலாம் என்ற துணிவும், காட்டிலும்சரி நாட்டிலும்சரி, கொடிய செயல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.
எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத்தக்க, ஒருவரை ஒருவர் வஞ்சித்தும் அழித்தும் கொள்ளத் தேவையற்ற முறைபெற, விஞ்ஞானம் வழிகாட்டுகிறது. ஆனால், இதற்கு அந்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்வதைக் காட்டிலும், அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதற்காகவே விஞ்ஞானத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பல விஞ்ஞான விற்பன்னர்கள் இது குறித்துத் தமது கவலையையும் தெரிவித்துள்ளனர்.
பொருளை மிகுதியாக்கிக்கொள்ளவும் வளத்தைப் பெருக்கிக்கொள்ளவும், விஞ்ஞானம் வழிகாட்டத் தயாராக இருக்கிறது; ஆனால், அதனிடமிருந்து வெடிகுண்டுகளையும் அணுகுண்டுகளையுமே அரசுகள் கேட்டுப்பெற்று இறுமாந்து கிடக்கின்றன.
பஞ்சம் பசி போக்கிடும் வழிகாட்டப் பயன்பட வேண்டிய விஞ்ஞானம், இன்று பகை மூட்டிட, அழிவை ஏவிடப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மனிதனுடைய வாழ்க்கை முறையையே செம்மைப் படுத்தவும், மேம்பாட்டையச் செய்யவும் பயன்பட வேண்டிய விஞ்ஞானத்தை, மனிதகுலத்தின் நாசத்துக்குக் கருவிகளைச் செய்திடும் காரியத்துக்குப் பயன்படுத்துவது கொடுமையினுங் கொடுமை. எனினும் இந்தக் கொடுமை நடந்தபடி இருந்திடக் காண்கின்றோம்.
இன்றுள்ள மனிதகுலம், தனக்குக் கிடைத்துள்ள விஞ்ஞானத்தை இத்தகைய கொடுமைக்குப் பயன்படுத்தினதுபோல, மாக்கள் நிலையிலிருந்து விடுபடாதிருந்த மக்கள், தமக்குக் கிடைத்த கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களில்லை. அவர்களுக்கு விஞ்ஞானம் நகர் அமைப்பு, பாதை அமைப்பு, பாசன வசதி, பயிரிடும் முறை, கல்விக்கூடம், மருத்துவக்கூடம் என்பவைகளைத் தரவில்லை — இன்றைய மனித குலத்துக்கு விஞ்ஞானம் தந்துள்ள வசதிசள் மிகப்பல; எனினும், கிளியைக் கொன்று காக்கைக்கு விருந்திடுவதுபோல, விஞ்ஞான அறிவைக்கொண்டு மனிதகுல அழிவுக்கு வழி கண்டு பிடிக்கும் கொடுஞ்செயலில் இன்றைய மனிதகுலம் ஈடுபட்டிருக்கிறது.
டாக்டர் எட்வர்டு டெல்லர் எனும் விஞ்ஞான விற்பன்னர், சென்ற திங்கள், விஞ்ஞானத் துறையை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படும்விதமாகக் கட்டுப்படுத்தும் உரிமை விஞ்ஞானிகளிடம் இல்லாமலிருப்பது குறித்தும், அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கக் கூசிடும் கேடான காரியங்களுக்கு விஞ்ஞான அறிவு ஆக்கித்தரும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும் மிகுந்த கவலையைத் தெரிவித்திருக்கிறார்.
விஞ்ஞானி, பொருள்களைப் படைத்திட விரும்பும் பேரறிவாளன்—அழிவு கண்டு உள்ளம் வெதும்பிடத்தான் செய்வான். தூங்கும் பனிநீர் தங்கிடும் மூங்கில் இலையெனினும் அதனிடம் காணக்கிடக்கும் கவர்ச்சி அதனிடம் உள்ள உயிர்ப்பு, இதனை மேலும் மேலும் வலிவுள்ளதாக்கிட பொலிவுள்ளதாக்கிட விரும்பும் விஞ்ஞான விற்பன்னர்கள், மனிதர்கள் மாக்களைப் போல ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதற்கு, விஞ்ஞானம் பயன்படுத்தப்படுவதுகண்டு, உள்ளம்நொந்து போகின்றனர்.
பசியாலும் பஞ்சத்தாலும் தாக்கப்பட்டோ, இயற்கை விளைவிக்கும் கொடுமைகளால் கொட்டப்பட்டோ, நோயூட்டும் கிருமிகளால் அரிக்கப்பட்டோ, கூனிக் குறுகி, குற்றுயிராகிடும் மக்களை, நிமிர்ந்து நின்றிடச் செய்திட நிம்மதியான வாழ்வு பெற்றிட வழி காண இரவு பகல் விழித்திருந்து, பொருள்களின் தன்மையினை ஆய்ந்தறிந்து, புது முறைகளைக் கணடுபிடித்துத் தந்திடும் விஞ்ஞானிகள், அவர்கள் பெற்றளித்திடும் பேருண்மைகளே மனித குல அழிவுக்குப் பயன்படுத்தப் படுவதனைக் காணும்போது, ஏன் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தந்தோம் என்று எண்ணி வேதனைப்படத்தான் செய்கிறார்கள்.
இதனால்தான் டாக்டர் எட்வர்டு டெல்லர் எனும் விஞ்ஞான விற்பன்னர் மனித குலத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இன்ப வாழ்வு அளித்திடும் வழிகள் காணவே, விஞ்ஞானம் உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.டாக்டர் ராபாட் ஒப்பன் ஈமர் எனும் மற்றோர் விஞ்ஞான விற்பன்னரும் இதுபோன்றே கூறியுள்ளார். விஞ்ஞானம் இதுவரை பெற்றளித்துள்ள பெரு வெற்றிகளால், மனித குலம் எந்த வகையிலும் அளவிலும் பயன் பெற்றிருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுத்தாக வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகமொன்றில் பார்த்துவந்த வேலையைக்கூட உதறித்தள்ளிவிட்டார் இந்த விஞ்ஞானத்துறைப் பெருமகன்.
விஞ்ஞானத் துறையின் வளர்ச்சிக்காகப் பெரும் பொருள் செலவிடப்பட்டு வருகிறது; காலத்தையும் கருவூலத்தையும் கணக்கற்ற அளவு செலவிட்டுத்தான் பேருண்மைகளைக் கண்டறிந்து, புதிய கண்டுபிடிப்புகளைத் தருகின்றனர் விஞ்ஞான விற்பன்னர்கள்.
மின்னிடும் விண்மீன்களின் இயல்புகளைக் கண்டறியவும், விண்வெளியில் உலவிடவும், ஆங்கு உள்ள கிரகங்களைக் காணவும், எத்தனை எத்தனைக் கருவிகள்! என்னென்ன முறைகள்! விண்வெளியிலே நடந்தே காட்டிவிட்டான் சோவியத் நாட்டு மாவீரனொருவன், விஞ்ஞானத்தின் துணைகொண்டு.
இவை எவரையும் வியப்பில் ஆழ்த்தும்; ஐயமில்லை. எனினும் மறைந்த மாமேதை ஆல்டேன் என்பார், விண்வெளியின் ஆராய்ச்சிக்காகப் பெரும் பணம் செலவிடுவது தேவைதானா! இப்போது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைதானா விண்வெளி விஷயம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தார்.
இப்போது விண்வெளி ஆராய்ச்சிக்காகப் பல்வேறு நாடுகளும் செலவிடும் தொகை, கேட்போருக்கு மயக்க மூட்டும் அளவினதாக இருக்கிறது.
- விண்வெளித்துறை பற்றிய ஆராய்ச்சிக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்கின்றனர்.
மக்களின் இயல்புகளே பெரும்பாலும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்குக் காரணம்; அவர்களின் நடவடிக்கைகளைச் செம்மையாக்கிட வேண்டுமானால், இயல்புகளை மாற்றிட, அல்லது கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; விஞ்ஞானம் அதற்குப் பயன்பட வேண்டும் என்ற கருத்து இன்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள உண்மைகளில் ஒன்றாகும்.
- குற்றவாளி ஒரு நோயாளி. குற்றவாளியைத் தண்டிப்பதனால் மட்டும் அவனைத் திருத்திவிட முடிவதில்லை.
- ஒருவர் இருவரைத் திருத்திவிட்டாலும் குற்றம் எழாதபடி தடுத்துவிட முடிவதில்லை.
குற்றவாளி, ஒரு நோயாளி! ஆகவே அவனுக்கு உள்ள நோயைப் போக்கவேண்டும்; போக்க முடியும். இந்தக் கருத்துகளை இன்று அறிவாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
- ஆனால், இதனைத் தொடர்ந்து, இயல்பினைக் கெடுத்திடும் நோயை நீக்கிட வழி கண்டறிந்திடும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு, புதிய முறைகளைச் சமைத்து அளித்திடப் போதுமான தொகை செலவிடப்படுவதில்லை.
- நிலவிலே காணப்படும் ‘கறை’யின் தன்மையைக் கண்டறியச் செலவிடுவது உடனடியாகத் தேவையா, அல்லது மக்களுடைய மனத்திலே மூண்டிடும், அழுக்குகளைப்போக்கிட வழி கண்டிடச் செலவிடுவது உடனடித்தேவையா என்ற கேள்வி பிறந்துவிட்டிருக்கிறது.
குடல் வெந்து கிடப்பவன் வாய் நாற்றமடிப்பதும், நீர் கொண்டவன் தும்மியபடி இருப்பதும், வெப்ப நோயாளன் இருமிக்கிடப்பதும் காண்கிறோம். அவர்களின் நோயைப் போக்கிட மருந்தளிக்காமல், வாய் நாற்றக்காரனுக்கு நாற்பது ரூபாய் அபராதம், தும்மலொன்றுக்கு எட்டணா கட்டவேண்டும், இருமலுக்கு இரண்டு ரூபாய் அபராதம் என்று முறை கூறினால் எப்படி இருக்கும்; முறையாகுமா? ஆகாது. அதுபோலத்தான், ஒருவனுக்கு அமைந்து விட்ட உறுப்புகளின் தன்மைக் கோளாறு காரணமாக ஏற்பட்டுவிடும் நடவடிக்கைகளுக்காகத் தண்டனை விதித்திடும் முறை என்று கூறுகின்றனர்.
- உடற்கூறு பற்றிய அறிவுத் துறையிலே கண்டறிய வேண்டுவன நிரம்ப உள்ளன. அந்தத் துறையிலே நல்ல வெற்றி கிட்டக்கிட்ட, குற்றவாளிகளாகப் பலரை ஆக்கிவிடும் அந்த நோயையே போக்கிவிடலாம்; பெருமளவு குறைத்துவிடலாம் என்கின்றனர்.
மக்கள் தொகை எத்தனை வேகமாகவும் அளவினதாகவும் பெருகினாலும் கூடக் கவலையில்லை. விவசாயத் துறையிலும், பொருள் ஆக்கத் துறையிலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைப் பெற்று அனைவருக்கும் ‘வாழ்வு’ அளித்திட இயலும் என்கின்றனர்.
நோயினால் மக்கள் மடிந்து போவது மட்டுமல்ல, பிழைத்துக் கொள்பவர்கள்கூட வலிவிழந்து போய்விடுவதன் காரணமாக, அவர்களின் உழைப்புத்திறன் கெட்டுப் போகிறது; அதன் காரணமாக உற்பத்தித்திறன் உருக்குலைந்து விடுகிறது. எனவே, நோய்களை நீக்கிட வழி காண வேண்டும்; காணமுடியும் என்கின்றனர்.
இந்தத் துறைகளில் செலவிடப்படும் பணம், மனித குலத்தின் இன்னலைத் துடைத்து இதம் தந்திட உடனடியாகப் பயன் தந்திடும். ஆனால், இந்தத் துறைகளுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகத் தொகையை வெறி என்று கூறத்தக்க ஆர்வ உணர்ச்சியுடன் அழிவுக் கருவிகளைக் காண்பதற்கான துறைகளுக்கு வல்லரசுகள் செலவிட்டு வருகின்றன!
மனிதனை, மிருக நிலையிலிருந்து விடுவித்து முன்னேற்றமடையச் செய்யப் பயன்பட வேண்டிய விஞ்ஞானம், அதனை முறைப்படுத்திக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தவறிவிட்டதன் காரணமாக, மீண்டும் மனிதனை மிருக நிலைக்கே கொண்டுபோய்ச் சேர்க்கப் பயன்பட்டு வருகிறது என்ற கருத்து இன்று பரவிக் கொண்டு வருகிறது.
- இந்தக் கருத்தின் வெற்றியைப் பொறுத்திருக்கிறது, மனித குலத்தின் எதிர்காலம்.
கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்று பேசிடும் நிலை மாறி, இவையே இனி மனிதகுலத்தின் வாழ்வுமுறைகள் என்றாக வேண்டும். அதிலே எந்த அளவு வெற்றி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு மறையும்.
தம்பி! இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்படக் காரணம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்புகிறாயல்லவா! நான் ஏதும் பெரிய தத்துவ நூலைப் புதிதாகப் படித்து அதனால் ஏற்பட்ட எண்ணக் கொத்தளிப்புக் காரணமாக இதனை எழுதவில்லை. த. வெள்ளைப்பாண்டி, (பி.எஸ்.ஸி. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்) செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி இதழில் தீட்டிய கவிதை ஒன்றைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அதனைப் படித்ததால் இத்தனை, எண்ணங்கள் எழுந்தன; உன்னிடம் சொல்லி வைத்தேன்.
இதோ அந்தக் கவிதையையும் தந்திருக்கிறேன்; படித்துப் பயன் பெற!
எண்ணில்லாப் பொறிகளினை விசைகள் தம்மை
இருள்போக்கும் மின்னொளியை நிறைத்து வைத்தாய்
மண்ணுக்குட் புகுந்தாய்நற் கனியைக் கண்டாய்
மனமெட்டாத் தொலைவினையும் கைக்குள் கொண்டாய்
கண்ணுக்குத் தெரியாத பொருளை எல்லாம்
கண்டறியும் நுண்கருவி பலவும் செய்தாய்
விண்ணினையும் காற்றினையும் அளந்தெடுத்தாய்
வியக்கின்றேன்; வியக்கின்றேன்; வியக்கின்றேனே;
பிணியெல்லாம் போக்குதற்கு மருந்தைக் கண்டாய்
பிறநாட்டில் பேசுவதை இங்குக் கேட்டாய்
அணுவையும்நின் ஏவலனாய் ஆக்கிக் கொண்டே
அகலுலகைப் புதுமையினால் நிறைத்து விடடாய்
இணையில்லாச் செயற்கைக்கோள் பறக்க விட்டாய்
இயற்கைதனை வென்றேனென் றலறு கின்றாய்
திணிசெருக்கால் உன்னைநீ அழித்தல் கண்டு
சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள் இயற்கை அன்னை!
ஆதிக்க வெறிகொண்டிவ் வண்ட மெல்லாம்
அழித்திடுவேன் நொடியில்என் றறிவிக் கின்றாய்
சோதித்துப் பார்ப்பாயாம் குண்டை வானில்;
தொல்லையினை யோரவில்லை: வருங்காலத்தில்
காதற்றும் காலற்றும் பார்வை யற்றும்
கருப்பையுள் குழவியதும் நலிதல் உண்டாம்
போதித்துப் பார்க்கின்றார் பெரியோ ரெல்லாம்
புழுதியிலே கொட்டியநெய் போலா யிற்றே!
ஏற்றங்கள் பலகண்ட மனிதன் இந்நாள்
இறங்கிவிட்டான் அழிவென்னும் புதைகுழிக்குள்;
காற்றெல்லாம் நஞ்சாக மாறக் கூடும்
கழனியெலாம் கருவற்றுப் போகக் கூடும்
ஊற்றுக்கள் நச்சாறாய் ஓடக் கூடும்
உண்ணுகின்ற மக்கள்உயிர் இழத்தல் கூடும்
கூற்றிங்குத் தலையைவிரித் தாட்டம் போடும்
குவலயமே வெற்றிடமாய்க் காட்சி கொள்ளும்!
பயனுள்ள வாள்தூக்கிப் பகையை வெல்லார்
பதடிகளாய்த் தம்முடலை யரிவார் போலும்
வயலுக்குக் களைநீக்கும் கருவி கொண்டு
வளர்பயிரைத் துண்டாக்க முனைவார் போலும்
கயமைக்கு நல்லறிவை உகுத்தல் போலும்
கருதிவிட்டாய் அணுவாலே யுலகைத் தாக்க
நயமான வேலைக்கே அணுவைக் கொண்டால்
நலமென்பேன் இல்லையேல் அழிவே மிஞ்சும்!
16-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை