தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011
காஞ்சிக் கடிதம் : 21
கங்கா தீர்த்தம்-2
எல்லாம் எல்லாருக்கும் என்பதே சோஷியலிசம்
மாங்காய் மாலை போன்றது காங்கிரஸ் பேசும் சோஷியலிசம்
அமெரிக்க முதலாளிகளை மேத்தா அழைக்கிறார்
காங்கிரஸ் சோஷியலிசம் முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது
ஜான் நை ஹார்ட்டின் எழுச்சிக் கவிதை
தம்பி,
ஏழைக்கு இதம் செய்திடவே செல்வவானிடம் பணம் ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. செல்வவான்கள் ‘தர்மகர்த்தாக்கள்’ அவர்களிடம் சேர்ந்திடும் செல்வம் அவர்களுடைய சுகபோகத்துக்காக அல்ல என்ற கருத்தை, மெத்தக் கனிவுடன், கேட்போர் உள்ளம் உருகும் விதத்தில் எடுத்துரைத்தவர்களில் காந்தியாருக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூறலாம்.
பண்புகள் குறித்து எடுத்துரைத்த மேலோர் அனைவருமே இத்தகு கருத்தினை வலியுறுத்தி வந்தனர். இதனை மறுத்தவர் எவரும் இல்லை; அதுபோன்றே இதனை முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்டு அந்த நெறி நின்றவர்களும் இல்லை.ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம், செல்வவான் மோட்ச சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது.
என்ற அருள்மொழியை அறிந்து, ஒப்புக்கொண்டு, உள்ளம் உருக அதுபற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மேனாட்டினர்; அதன் காரணமாக அவர்கள் உடைமைகளைத் தேடிப்பெறுவது, உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுவது என்பவைகளை விட்டொழித்தனரா? இல்லை! உபதேசம் கேட்பது ஞாயிற்றுக்கிழமைகளில், உடைமைகளைப் பெற அலைவது மற்ற நாட்களில் என்று முறை வகுத்துக்கொண்டனர்!!
முற்றுந்துறத்தல், தன்னலம் மறுத்தல், பிறர் நலம் பேணுதல், ஊருக்குழைத்தல், ஈதலில் இன்பம் கண்டிடல். கூடி வாழ்தல்—இவைகளைப் போற்றிட எவரும் தவறியதுமில்லை; இவைகளின்படி ஒவ்வொருவரும் வாழ்ந்து சமூகத்தின் தன்மையை மாற்றி அமைப்பதிலே முழு வெற்றி கண்டவர்களும் இல்லை. சிலர் அந்த முயற்சிகளை மேற்கொண்டனர்; ஆனால், துவக்க காலத்தூய்மை, நாளாகவாகத் தேய்ந்து தேய்ந்து மாய்ந்தே போய்விட்டது; அருளகமாகத் துவக்கப்பட்டவைகள் பிறகு ஆதிக்க பீடங்களாக, மடாலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
இந்நிலை மேனாட்டில் மட்டுமா கீழ்நாடுகளிலுமா என்ற கேள்விக்கே இடமில்லை, எங்கும் இந்நிலை; அளவில், வேகத்தில், தரங்கள் இருக்கலாம், போக்கிலே ஒரேவிதமாகத்தான் இருந்தது.
ஏன் உபதேசங்களைப்பற்றி இப்போது கூறுகிறேன் என்று கேட்பாய் தம்பி! காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம், உபதேச பாணியில் இருக்கிறதல்லவா, அந்த உபதேசம் பலன் தராது. ஏனெனில், இன்றையக் காங்கிரஸ்காரர்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகமான தூய்மையாளர்கள், இன்று இவர்கள் செய்வதைவிட மெத்த உருக்கத்துடன் செய்த உபதேசங்கள் யாவும், பூஜாமாடத்துக்கு உரிய ஏடுகளாய், பாடல்களுக்கான கருப்பொருளாய்ப் போய்விட்டன–ஏழை–பணக்காரன் எனும் பொல்லாங்கு மூட்டிவிடும் பேதத்தைப் போக்கவில்லை; போக்கிட முடியவில்லை?அருளாளர் என்று விருது பெற்றோரின் உபதேசம் மூலம், ஏழையின் இன்னலைத் துடைத்திட முயன்று பார்த்து அது தக்கபலன் தராது போனது கண்டபிறகே, மேனாட்டு அறிவாளர்கள் சிந்தித்துச் சிந்தித்து, சோஷியலிசம் எனும் சமதர்ம முறையைக் கண்டறிந்து கூறினர்.
நல்ல இதயம், உயர்ந்த பண்பு இவைகளிலிருந்து எழுந்ததுதான் சோஷியலிச முறை என்றாலும் இதயம் நல்லதாக்கப்பட வேண்டும் என்ற நல்லுரையே, சோஷியலிசம் காணும் வழி என்று சோஷியலிசக் கருத்தளித்த வித்தகர்கள் கூறிடவில்லை.
அய்யோ பாவம்!
அவனும் மனிதன்!
ஏதோ செய்வோம்!
போகிற கதிக்கு நல்லது!
கொண்டு செல்லவா முடியும்!
கொடுத்தால் குறையாது!
ஒன்றுக்கு ஒன்பது கிடைக்கும்!
என்பன போன்ற பேச்சுகளும், அவைகளுக்கான மனப்போக்கும் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல, நெடுங்காலமாக இருந்து வருபவை.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆகும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட கதைகளும், புனையப்பட்ட புராணங்களும், கொஞ்சமா!
தம்பி! ஊருக்கு ஒரு உபகாரமும் செய்தறியாதவனாம் ஒருவன். அவன் இறந்து மேலுலகம் சென்றான்—படித்த கதையைச் சொல்லுகிறேன்; பார்த்ததை அல்ல!—அவன் இறந்தபோது, ஒருவருக்கு ஒரு உதவியும் செய்யாத இவன் நரகம்தான் செல்வான் என்று ஊரார் பேசிக் கொண்டனர்—ஆனால், அவனைத் தேவ தூதர்கள் பொன்னுலகம் கொண்டு சென்றனராம்—கணக்குப் பார்க்கப்பட்டது—“இவனுடைய ஆள் காட்டி விரலுக்கு மாலை மரியாதைகள் நடத்தி இவனைச் சிறிது காலம் பொன்னுலகில் இருந்திடச் செய்திடுக! அனைவரும் இவனுடைய ஆள்காட்டி விரலைக் காணட்டும்; மகிழட்டும்; போற்றிப் புகழட்டும்” என்று தேவதேவன் கட்டளையிட்டானாம்.காரணம் என்ன தெரியுமா, தம்பி! ஆசாமி ஒருவருக்கும் ஒருவிதமான உதவியும் செய்யாதவன் என்ற போதிலும், ஒருநாள் உச்சிப்போதில், கடுமையான பசியுடன் வந்த ஒருவன், இவனிடம் எந்த உதவியும் பெற முடியாமற்போகவே, இங்கே தர்மசத்திரம் எங்கே இருக்கிறது? அதையாவது காட்டுமே ஐயா! என்று கேட்டிட ஆள்காட்டிவிரலை நீட்டி, சத்திரம் இருக்கும் பக்கத்தைக் காட்டினானாம். அந்தப் புண்ணிய காரியத்துக்காக, அவனுடைய ஆள்காட்டி விரலுக்கு அத்தனை மரியாதை!!
இவ்விதமான கதைகளைக் கூறியாகிலும் மற்றவர்களுக்கு உதவி செய்திடவேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டவேண்டும் என்று பலர் வெகுபாடுபட்டிருக்கிறார்கள்.
- ஆனால், அத்தகைய உதவிகள், தான தருமங்கள். பாலைவனத்திலே தெளித்த பன்னீர்த் துளிகளாகிப் போயினவேயன்றி, பாலைவனத்து வெப்பத்தைப் போக்கிடவில்லை!
இதனைக் கண்ட பிறகுதான் பேரறிவாளர்,
- மனிதன் வாழப் பிறந்தவன்,
- எல்லாம், எல்லோருக்கும் என்றே உளது.
என்ற அடிப்படையை எடுத்துக் காட்டி சோஷியலிசத்தை உருவாக்கினர்.
சோஷியலிசமே போதுமான பலனைத்தரவில்லை, தத்தித் தத்தி நடக்கிறது, தடுமாறிக் கீழே விழுகிறது என்று கூறி, அடித்து நொறுக்கிப் பிறகு புது வார்ப்படம் காண்பதுபோல, புரட்சி நடாத்திப் புதுமுறை காணவேண்டும் என்று கூறுகின்றனர் பொது உடைமைவாதிகள். ஆனால், இன்றைய காங்கிரசோ, ஏழைக்கு ஏதேனும் உதவி செய்திடுக! என்ற பழைய பேச்சைப் புது முறுக்குடன் மேடைகளிலே பேசுகின்றனர்; அதனைச் சோஷியலிசத் திட்டம் என்று வேறு நம்பச் சொல்கின்றனர்.
வேலிகள் ஆயிரம் பட்டக்காரருக்கு, வாண்டையாருக்கு, மூப்பனாருக்கு, இராமநாதபுரத்தாருக்கு, நெடும்பலத்தாருக்கு, அவர் போன்றாருக்கு; அவர்களெல்லாம் நடத்திச் செல்லும் காங்கிரசிலே சோஷியலிசம் வேறு எப்படி இருக்க முடியும்?
மறைந்த மாமேதை நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நடித்துக் காட்டிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது—அதன் தொடர்பான கதை நினைவிலே இல்லை.
ஒரு இடத்தில், மாங்காய் மாலை கொடுக்க வேண்டி வருகிறது; மாங்காய் மாலை என்பது, பொன்னால் செய்யப்பட்ட மாங்காய் உருவ பில்லைகளில் கல்லிழைத்து, சரமாக்கி மாலையாகப் போட்டுக்கொள்ளும் விலை அதிகமுள்ள ஆபரணம்! இதைக் கொடுக்கவேண்டி வருகிறது; கொடுக்க வசதி இல்லை; அவ்வளவுக்குப் பணம் இல்லை!! எனவே ஒரு தந்திரம் புரிகிறார், நகைச்சுவையுடன்,
ஒரு ரோஜா மாலை, ஒரு மாங்காய் எடுத்துக்கொண்டு போய், இதோ மாங்காய், இதோ மாலை, மாங்காய் மாலை; வந்து கேட்டால் சொல்லிவிடுங்கள். மாங்காய் மாலை கொடுத்தாகிவிட்டது என்று, என்பதாகக் கூறிவிடுகிறார்.
அந்த ‘மாங்காய் மாலை’ போன்றது தம்பி! காங்கிரசார் இன்று பேசும் சோஷியலிசம்!! புரிகிறதா என்று கோபம் கொள்ளாத காங்கிரஸ்காரர்களைக் கேட்டுப்பார்.
இதனைக் கூறுவதால், உதவி செய்வது, தான தருமம் செய்வது கூடவே கூடாது என்று நான் சொல்லுவதாக எண்ணிக்கொண்டு விடக்கூடாது. சிலர் இருக்கிறார்கள். இந்த வாதத்தையே தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தவிதமான உதவிகளைச் செய்வதாலே எந்தவிதமான உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை, ஆகவே, ஒருவருக்கும் ஒருவிதமான உதவியும் செய்யத் தேவையில்லை என்ற போக்கை மேற்கொள்பவர்கள்.
நான் சொல்ல வந்தது அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்த அல்ல. உதவி செய்வது சோஷியலிசமாகாது, சோஷியலிசம் என்பது, புதிய சமூக அமைப்பு முறை, புதிய அரசியல் அமைப்பு முறை, புதிய பொருளாதார அமைப்பு முறை என்பதையும், அதனை நோக்ககாகக் கொண்டது அல்ல, காங்கிரஸ் கட்சி பேசிவரும் சோஷியலிசம் என்பதையும் கூறுகிறேன்.மண் குதிரை மீதேறிக்கொண்டு ஆற்றில் இறங்குவது என்பார்களே அது போன்றது காங்கிரஸ் பேசி வரும் சோஷியலிசம்.
காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம் தமது உடைமைகளை, ஆதாயம் தேடித்தரும் அமைப்புகளை, அதனால் கிடைத்திடும் ஆதிக்கத்தை எந்தவிதத்திலும் கெடுத்து விடாது என்று நன்றாகத் தெரிந்திருப்பதாலேயே, இன்று எல்லாப் பெரிய புள்ளிகளும் காங்கிரசிலே இருக்கின்றனர். அவர்கள் என்ன ஏமாளிகளா! ஜாண் பணத்துக்கு முழம் புத்தி என்று கிராமத்திலே பேசிக் கொள்வார்கள்!!
உள்நாட்டு முதலாளிகள் மட்டுமல்ல, காங்கிரஸ் பேசி வரும் சோஷியலிசம் தங்கள் உடைமைகளையும் பணம் தேடும் உரிமையையும் ஒரு துளியும் பாதிக்காது என்ற அழுத்தமான நம்பிக்கை வெளிநாட்டு முதலாளிகளுக்கும், நிரம்ப ஏற்பட்டிருக்கிறது; கோடி கோடியாக, முதல் போடுகிறார்கள், புதிய புதிய தொழில்களிலே!
- ஏழை எக்கேடோ கெடட்டும் என்ற போக்கில், வெள்ளைக்காரன் முதலாளித்தனத்தை வளர்த்து வந்தான் என்று கூறினோம். வெள்ளைக்கார ஆட்சி போனபிறகு, அவன் காலத்திலே ஏற்பட்டிருந்த முதலாளி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? கேட்டுப்பார், உண்மையை ஒளிக்காமல் பேசும் இயல்புள்ள காங்கிரஸ்காரர் எவரையாவது பார்த்து; எந்த அளவுக்கு வெள்ளைக்காரன் காலத்திலே அமைக்கப்பட்ட முதலாளித்தனம் ஒடுக்கப்பட்டிருக்கிறது என்று. தலையைக் கவிழ்ந்து கொள்வார்! ஏன்? ஒடுக்காதது மட்டுமல்ல, வெள்ளைக்காரன் காலத்திலே இருந்ததைவிட மூன்று மடங்கு அளவு வளர்ந்துவிட்டிருக்கிறது முதலாளித்தனம்-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்.
வெள்ளையராட்சி விலகும் போது 1947ல், இங்கு முதலாளிகள், தொழில்களில் போட்டிருந்த மூலதனம் 700 கோடி ரூபாய் என்று கணக்கெடுத்தனர்.
- சுயராஜ்யம் அமைந்து சோஷியலிசம் மலர்ந்திருப்பதாகக் கூறுகிறார்களே, அதன் காரணமாக, முதலாளி தொழிலில் போட்ட பணம் குறைந்ததா? இல்லை. நாலு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கின்படி இந்தத்தொகை 1900 கோடி ரூபாயாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
இதுபோல, முதலாளிகளின் முகாம்களை வளர வைத்துக்கொண்டே, சோஷியலிசமும் பேச முடிகிறது காங்கிரஸ் கட்சியினால்! அந்த அளவுக்கு மக்களின் மதி மங்கிக்கிடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
வெள்ளையராட்சியின் போது கிடைத்ததை விட அதிக வருவாய் இப்போது முதலாளிகளுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுத்திட முடியாது.
நான் குறிப்பிட்டேனே நாலு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கு—அதன்படி, தொழில் அதிபர்களுக்கு மத்திய சர்க்கார் வழங்கியுள்ள மானியம், சலுகை, கடன் ஆகிய வகையில் 590 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது.
- சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, முதலாளிகளை ஊட்டி வளர்க்கிறது; கொழுக்க வைக்கிறது.
அதனாலே காங்கிரசுக் கட்சிக்கு என்ன இலாபம் என்று கேட்கமாட்டாய்—உனக்குத்தான் தெரியுமே தம்பி; போன பொதுத் தேர்தலின்போது முதலாளிமார்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த நன்கொடை, 98 இலட்ச ரூபாய் என்பது!
முதலாளித்துவ முறையைக் கட்டிக் காத்துக் கொண்டும் கொழுக்க வைத்துக்கொண்டும் இருக்கும் காங்கிரஸ்கட்சி எப்படி சோஷியலிசத்தின் உண்மைக் கணக்குப்படி நடந்துகொள்ள முடியும்? முடியாது!
- காங்கிரசுக் கட்சியிலேயே சிலர் இப்போது, சோஷியலிசம் வளரத்தக்க விதத்தில் காங்கிரசாட்சி நடந்து கொள்ளவில்லை என்று பேசத் தலைப்பட்டுள்ளனர்.
- இரு திங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூடி ஒரு காங்கிரஸ் சோஷியலிச மாநாடு நடத்தி, சோஷியலிசத் திட்டத்தை அக்கறையுடனும், தீவிரமாகவும் நிறைவேற்றும்படி காங்கிரஸ் ஆட்சியை வற்புறுத்திப் பேசினர்.
காங்கிரஸ்கட்சி, உள்ளபடி சோஷியலிசத்தின் வழி நடப்பதானால், சிலர்கூடி, ஏன் வற்புறுத்த வேண்டும்! காங்கிரசுக் கட்சியிலேயே, சோஷியலிச வழி நடப்பதாகக் கூறும் ஒரு பிரிவும், சோஷியலிச வழி நடக்கவில்லை என்று குறைகாணும் ஒரு பிரிவும் இருக்கிறது; காமராஜர் இந்த இரண்டு பிரிவிலும் இருக்கிறார்!
தம்பி! சோஷியலிசத் தத்துவத்தின் அடிப்படை, தொழில்கள் உற்பத்தியைப் பெருக்கவேண்டும், அந்த உற்பத்தி மக்களின் வசதிகளை அதிகப்படுத்தப் பயன்பட வேண்டுமேயன்றி, முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்கிடப் பயன்படக் கூடாது என்பதாகும்.
அதன்படி நடந்திருக்கிறதா என்பதைக் கண்டிட, ஒரு கணக்கினை ஆராய்வோமே!
இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி தெரியுமல்லவா—காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு 20 இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்த அமைப்பு—அதனுடைய மூலதனம் 7 கோடியே 79-இலட்சமாம்.
அந்தக் கம்பெனிக்கு ஒரே வருடத்தில்—1960ல்—கிடைத்த இலாபம் 2,85,71,127 ரூபாய் என்று கணக்குத் தந்திருக்கிறார்கள். பார்த்தனையா, காங்கிரசின் சோஷியலிசம் கொண்டுள்ள கோலத்தை!!
டாட்டா கம்பெனிக்குக் கிடைத்த இலாபம் 5 கோடியே 77 இலட்சமாம்!
ஒரிசா மாநிலத்தில் இருக்கிறதே—இப்போது அதன் பெயர் ‘பாரதம்’ முழுவதும் அடிபடுகிறதே கலிங்கா கம்பெனி, அதற்கு ஒரே வருஷத்தில் கிடைத்த இலாபம் 26 இலட்சம்! இப்படி இலாபம் திரட்டிக் கொள்ள இடமளித்துவிட்டு, சோஷியலிசம் பேசுகிறது காங்கிரஸ் கட்சி!துரைத்தனமே அமைத்த ஒரு குழு, மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே வேலை கிடைக்கிறதாம்—மற்ற நேரத்தில் வேலை தேடி அலைகிறார்கள்—கிடைக்காமல் திண்டாடுகிறார்களாம் 270 இலட்சம் மக்கள்! இந்த ஒரு மணி நேர வேலையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு எப்படி வாழ முடியும்? வதைபடுகிறார்கள், அரைப்பட்டினியாக.
ஒரு நாளைக்கெல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே செய்வதற்கு வேலை கிடைக்கிறது 200 இலட்சம் மக்களுக்கு;
ஒரு நாளைக்கு ஐந்தணா மட்டுமே கூலியாகப் பெற்று வாழவேண்டிய பரிதாபம் 600 இலட்சம் மக்களுக்கு; நாலணா பெறுபவர்கள் 400 இலட்சம்; இவை சர்க்கார் நியமித்த அமைப்பு கொடுத்துள்ள கணக்கு, நான் இட்டுக் கட்டியது அல்ல.
டாட்டா, பிர்லா கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருப்பதும், குப்பனும் சுப்பனும் கூலி போதாமல் குமுறிக் கொண்டிருப்பதும், சோஷயலிசம் அல்ல!!
இத்தகைய பயங்கரமான பேதத்தைப் போக்குவதுதான் சோஷியலிசம்.
ஆனால் சோஷியலிசம் பேசும் காங்கிரசின் ஆட்சியில் மக்களிடையே காணக்கிடக்கும் பொருளாதார பேதம் விரிவாகிவிட்டிருக்கிறது; ஆழமாகியும் விட்டிருக்கிறது.
- இதனை சர்ச்காரே அமைத்த மகனாலோபிஸ் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஏழை—பணக்காரன் பேதத்தைப் பயங்கரமான அளவு வளர்த்துவிட்டவர்கள், வளர்த்துக்கொண்டு வருபவர்கள் சோஷியலிசம் எமது திட்டம் என்றும் பேசுகிறார்கள்! விந்தையை என்னென்பது?
நானும் சைவன்தான் என்று பேசினானாம், ஆட்டு இறைச்சியின்றி ஒருவேளைகூட இருக்க முடியாதவன். வியப்பாக இருக்கிறதே ! நீயா சைவன்? என்று கேட்டானாம் நண்பன்! ஆமாம்! அதிலென்ன சந்தேகம்! புல். பச்சைத்தழை இவைதானே ஆடு தின்கிறது, அதை நான் தின்கிறேன் என்றானாம். அது வேடிக்கைப் பேச்சு. காங்கிரஸ் ஆட்சியினர் முதலாளித்துவத்தை வளர்த்துக் கொண்டே சோஷியலிசம் பேசுகிறார்கள்; தங்கள் நாணயத்தை எவரும் சந்தேகிக்கக்கூடாது என்றும் கூறுகிறார்கள்—கூறுகிறார்களா!! கட்டளையிடுகிறார்கள்!
இவ்விதம் பேசுவது காங்கிரசின் எதிரிகளின் போக்கு என்று கூறித்தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
தம்பி! நான் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துரைகள் சில காங்கிரஸ்காரர்களே பேசியவை.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரர் அன்சர் ஹர்வாணி என்பவர். அவர் மனம் நொந்து பேசியிருக்கிறார்:
- சோஷியலிச வழியிலே காங்கிரஸ் அரசு செல்லவில்லையே!
- கொள்ளை இலாபமடிக்கும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் கூடிக் குலவுகிறீர்களே! இது அடுக்குமா!
- வரிகொடுக்காமல் ஏய்க்கும் வணிகக் கோமான்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பிடித்திழுத்துத் தண்டிக்காமல், அவர்களின் மாளிகைகளிலே விருந்துண்ணச் செல்கிறீர்களே! நியாயமா?
என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.
சோஷியலிசம்கூட அல்ல, காந்திய வழியிலே கூடச் செல்லவில்லையே, முறையா? கைகூப்பி, மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், காந்திய வழியிலே நடவுங்களய்யா என்று காங்கிரஸ் ஆட்சியினரைக் கேட்டுக்கொள்கிறார் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்துவந்த தேபர்.இவர்களின் மனக்குமுறலையுமா, காங்கிரசாட்சியினர் எதிர்கட்சியினரின் எரிச்சலூட்டும் பேச்சு என்று அலட்சியப்படுத்திவிடப் போகிறார்கள்!!
- சென்ற கிழமை கல்கத்தாவில் பேசிய மாளவியா எனும் காங்கிரஸ் தலைவர், நேரு மறைந்ததற்குப் பிறகு, காங்கிரசின் சோஷியலிசப் பணி பின்னுக்குச் சென்றுவிட்டது என்று நிருபர்களிடம் கூறியிருக்கிறார்.
சோஷியலிசப் பாதையில் வேகமாக நடைபோடுவதாக இங்கு காமராஜர் முழக்கமெழுப்புகிறார். சோஷியலிசத்தில் இதுவரை இருந்து வந்த ஆர்வமும் மங்கிவிட்டிருப்பதாக மாளவியா கூறுகிறார். அவரும் காங்கிரஸ்காரரே! அவரைக் கண்டிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம், காமராஜரை!! செய்யமாட்டார்!!
சோஷியலிசம் பற்றி இங்கு காமராஜர்கள் பேசும் போது, மக்கள்,
- தனி முதலாளிகளின் கொட்டம் அடக்கப்படும், வருவாய்தரத்தக்க பெரிய தொழில்கள் பொதுத் துறைக்கு ஒதுக்கப்படும்,
- பொருளாதார பேதம் ஒழிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்,
- தொழில்கள் வெறும் இலாபவேட்டைக் கூடங்களாக இனி இராமல், மக்களுக்கு வசதி தேடித்தரும் அமைப்புகளாகிவிடும்,
- ஓடப்பர் உயரப்பராகி எல்லோரும் ஒப்பப்பராகிவிடுவார்!
என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறார்கள், பாவம் அவர்கள் அறியார்கள், காங்கிரசின் சோஷியலிசம் அது அல்ல என்பதனை.
சோஷியலிசம் பேசுகிறார்களே இவர்கள் ஆட்சி செய்யும் நாட்டிலே நாம் எப்படி நம்பி, பெருந்தொகைகளை முதல் போட்டுத் தொழில் நடத்துவது என்று ஐயப்பட்ட அமெரிக்க முதலாளிகள் இங்கு உலா வந்தனர், உரையாடினர், உசாவிப் பார்த்தனர். உண்மையை உணர்ந்துகொண்டனர், உவகையுடன் ஊர் திரும்பி மற்ற முதலாளிகளைக் கூட்டிவைத்து, அஞ்சற்க! அங்கு பேசப்பட்டு வரும் சோஷியலிசம் நம்மை ஒன்றும் செய்யாது. அது குறித்து நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தியாவிலுள்ள முதலாளிகளே அதுபற்றிக் கவலைப்படவில்லை; காங்கிரஸ் பேசும் சோஷியலிசம், ஏழையின் செவிக்கு இனிப்பளிக்கத்தான், வேறு எதற்கும் அல்ல; நாம் ‘நமது’ முதல் போட்டுத் தொழில் நடத்த ஆரோக்கியமான சூழ்நிலை இந்தியாவிலே அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.
போன வாரத்திலே, ஜி. எல். மேத்தா, இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார், வாஷிங்டன் நகரில்.
இந்திய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து தொழில் நடத்தும் அமெரிக்க முதலாளிகளுக்கு மேத்தா அன்புரையும் நன்றியுரையும் வழங்கினார். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் 67 முதலாளிகளாம்.
முதலாளிகளுக்காக இல்லை காங்கிரசாட்சி, ஏழைக்காகவே இருக்கிறது; பணக்காரரின் கொட்டம் அடக்கப்படும், பாட்டாளியின் வாழ்வு உயர்த்தப்படும் என்றெல்லாம் இங்கே காமராஜர் சோஷியலிசம் பேசுகிறார். அங்கே ஜி. எல். மேத்தா அமெரிக்க முதலாளிகளைக் கூட்டி வைத்து,
- காங்கிரஸ் அரசுமீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.
- தனிப்பட்ட முதலாளிகளின் தொழில் அமைப்புகளுக்குக் காங்கிரஸ் அரசு விரோதம் காட்டவில்லை.
- காங்கிரசாட்சியில், 17 ஆண்டுகளில் தனியார் துறை விரிவடைந்திருக்கிறது. வளம் அடைந்திருக்கிறது. தனியார் துறைக்குக் காங்கிரஸ் அரசு உதவி அளித்து வருகிறது.
- உள்நாட்டு முதலாளிகளை எதிர்த்து, சமாளித்துச் சோஷியலிசத்தை நிலைநாட்டுவதே கடினமானது என்று விவரம் அறிந்தோர் கவலை கொள்கின்றனர்.
- ஆனால், சோஷியலிசம் பேசிக்கொண்டே காங்கிரஸ் அரசு, பிரிட்டிஷ்-அமெரிக்க முதலாளிகளை இங்கு ஆதிக்கம் செலுத்த அழைக்கிறது. அவர்களும் இங்கு முகாம் அமைத்துக்கொண்டால், சோஷியலிசம் வெற்றிபெறுவது எளிதாக முடியக்கூடியதா!
வெள்ளைக்காரன் காலத்திலே இருந்ததைவிடப் பலத்துடன் இன்று முதலாளி முகாம் இருக்கிறது என்பதை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுக்க முடியாது.
- தன்னை வரவேற்க வந்த காங்கிரஸ் அமைச்சரையே ஒருபுறம் போகச் சொல்லிவிட்டு, பிர்லாவுடன் மோட்டாரில் பேசிக்கொண்டே பவனி வந்தாராமே நந்தா கல்கத்தாவில் போனமாதம், அதிலிருந்தே புரியவில்லையா முதலாளிகட்குக் காங்கிரஸ் அரசிடம் உள்ள பிடிப்பு.
பச்சையாகவே பேசிவிட்டாரே காங்கிரஸ் அமைச்சர் படீல், சுயராஜ்யப் போராட்டக் காலத்தில் எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய்களைக் காங்கிரசுக்குக் கொடுத்தவர்கள் முதலாளிகள் என்று. மிரட்டும் குரலில் பிர்லாவும் பேசிவிட்டாரே, முதலாளிகளைக் காங்கிரஸ் சர்க்கார் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று.
இவைகளை எல்லாம் மக்கள் மறந்தேவிடுவார்கள் என்ற எண்ணத்தில், சோஷியலிசம் பேசிச் சுவை ஊட்டப் பார்க்கிறார்கள்.
சோஷியலிசத்தின் அடிப்படை ஒன்றைக்கூட அமைத்துக்கொள்ளாமல், சோஷியலிசத்துக்கு வெடிவைக்கும் போக்கை மாற்றாமல், சோஷியலிசம்பற்றிப் பேசுவது, எப்படிப் பொருளுள்ளதாகும்? என்ன பயனைத் தரும்?
இங்கே சோஷியலிசம் பேசுகிறார் காங்கிரஸ் தலைவர்; பிர்லா அறிவிக்கிறார் சென்றவாரம், அமெரிக்காவிலிருந்து:
- 3,00,000 டன் உற்பத்தி செய்யக்கூடிய தேன் இரும்புத் தொழிற்சாலையை 1967ல் துவக்கப்போவதாக! அமெரிக்க முதலாளியின் கூட்டுறவுடன்!!
- அலுமினியத் தொழிற்சாலையை விரிவு படுத்தப் போவதாக! அமெரிக்கக் கூட்டுறவுடன்.
- உர உற்பத்தித் தொழிற்சாலை விரிவான முறையில்! அமெரிக்கக் கூட்டுறவுடன்!!
அதேபோது, இந்தியப் பேரரசின் தொழில் அமைச்சர் சஞ்சீவய்யர்,
- தொழிலாளர்களுக்குப் போதுமான வசதிகளைத் தொழில் அமைப்புகள் செய்துதரவில்லை
என்று தெரிவிக்கிறார்.
பிர்லா புதுத்தொழில் அமைக்கிறார்; தொழிலாளி பழைய வேதனையைத் தொடர்ந்து அனுபவித்துவருகிறான்; காமராஜர் சோஷியலிசம் பேசுகிறார்; நாடு கேட்டுக்கொள்ளவேண்டி இருக்கிறது.
நாடு நம்புகிறதா என்று கேட்கிறாயா, தம்பி! நான் என்னத்தைச் சொல்ல! எதை எதையோ நம்பிக்கிடக்கும் மக்கள் இன்னமும் ஏராளமாக இருக்கிறார்களே!
அனுப்பிய மணியார்டர் வந்து சேர்ந்ததாகக் கடிதம் வருவதற்குள் துடிதுடிக்கும் அதே மக்கள், மேலுலகு சென்றுவிட்ட பெரியவர்களுக்கு, ‘திவசம்’ செய்வதன் மூலம், பண்டம் அனுப்பிவைப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்களே! எனவேதான் தம்பி! காங்கிரஸ் பேசும் சோஷியலிசம் பதர், நெல் அல்ல என்பதையும், காட்டும் கனிவு வெறும் கபடம் என்பதையும், அமைத்துள்ள முறை முதலாளியைக் கொழுக்கவைப்பது என்பதையும் விளக்கிக் காட்டவேண்டியிருக்கிறது. தெளிவு தேவைப்படும் அளவு இருந்தால், இன்றைய காங்கிரசில் நடுநாயகர்களாகக் கொலுவிருப்பவர்கள் யாரார் என்பதைப் பார்த்தாலே போதும் இந்தக் காங்கிரசினால் சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்பதைப் புரிந்து கொள்ள புள்ளிமான் குட்டிக்குப் புலி பால் தராது என்பதை நான்மட்டுமா, இன்று பூஜைசெய்து வரம் கேட்டுக் கொண்டிருக்கும் தம்பிகளும் சேர்ந்து சொன்னார்கள். விளக்கம்போதும் என்று நாம் இருந்துவிடுவதற்கில்லையே; தெளிவு அரசோச்சும்வரையில் எடுத்துக் கூறியபடி இருந்தாகவேண்டும்.
- காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம் பொருளற்றது; பயனற்றது,
- காங்கிரசின் பேச்சுக்கும் நடத்தைக்கும் பொருத்தம் இல்லை.
என்பது மேலும் மேலும் விளக்கப்பட்டாக வேண்டும்.
ஏழைக்காகப் பரிந்து பேசுவது போதும், அதனையே இந்த மக்கள் சோஷியலிசம் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.
ஏழைக்காகப் பரிந்து பேகவதும், ஏழையை வதைக்கும் செல்வவான்களுக்கு அறநெறி, அன்புவழி பற்றிக் கூறுவதும், புதிய கண்டுபிடிப்பு அல்ல, மூவர்ணச் சரக்கும் அல்ல; மிக மிகப் பழையது.
வறுமையால் தாக்குண்டு கிடப்பவர்கள், தெளிவு பெற்று, தமது நிலைமைக்கான காரணம் கண்டறிந்து, உரிமை உணர்வு பெறுகிற வரையில், தானம் தருமம், பரிவு பச்சாத்தாபம், உதவி சலுகை இவைகளைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சிகொள்வர், நன்றியும் கூறிடுவர், இது நல்ல திட்டம் என்றும் ஒப்புக்கொள்வர். ஆனால், பொருளாதார யந்திர அமைப்பின் தன்மையையும், அதனைச் சமைத்திட்ட அரசியல் அமைப்பின் போக்கையும் விளங்கிக்கொண்ட பின்னர், என்ன கூறுவர்?
- இருளது விட்டு வந்துளோம் வெளியே!
- அய்யோ பாவம்! எனு மொழி கேளோம்!
- ஐயமளித்திடும் கரமது வேண்டோம்!
1881-ம் ஆண்டு பிறந்தவர் ஜான் நைஹார்ட் எனும் கவிஞர்; அவர் அந்த நாளிலேயே பாடிவைத்தார், தெளிவு பெற்ற ஏழை, விழிப்புற்ற பாட்டாளி என்னவிதமாகப் பேசுவான் என்பதனை.
“ஆணவக் கோட்டை
அமைத்திடுவோரே!
அடிமைகள் கண்டினி
நடுங்கிடுவீரே!
உலகிடை எழுந்திடும்
போர்கள் எதிலும்
இருப்பவர் யாமே
மறுப்பவருளரோ!
மன்னர் பெற்றிடும்
வலிவனைத்தும்
அளிப்பவர் யாங்கள்
அறிந்திடுவோமே.
ஞானிகளும் மோனிகளும்
முன்பு காட்டிய வழிகண்டு
காலகாலமாயுள கடுந்தளைகளை
உடைத்தெறிந்துமே
உலக இதயமதை
எம் முரசாகக்கொண்டு
இருளது விட்டு
வந்துளோம் வெளியே
அய்யோபாவம்! எனுமொழி
கேளோம்
ஐயமளித்திடும் கரமது
வேண்டோம்
பேரூர் சமைத்தவர்க்கேன்
பிச்சைதானும்
என்றுதான் புரியுமோ
உமக்கிப் பேருண்மை.
குலப்பெருமை குடிப்பெருமை
விட்டொழிப்பீர்
வார்ப்படப் பொற்கடவுள்
வாணிபமும் விடுவீர்!
அவரவர் பெறும் தகுதி
ஆக்குந்திறன் வழியதாகும்.
உழைப்போர் நாங்கள்
உற்பத்தியாளர்
ஊமைகளாயிரோம்
இனியுந்தானே!
சுரண்டிடுவோரே!
சோம்பிக் கிடந்திடுவோரே;
பரவிப் பாய்ந்து வந்துளோம்
பாரினில்
பொழுது புலர்ந்தது
புவியெங்குமே, காண்!
இருளும் ஒழிந்தது
வாள் வெளிவந்தது.
உறையையும் வீசி
எறிந்தோம் கீழே!
இங்கோ, பதர் கொடுத்து நெல் எனக் கூறிடுவார் போல, அய்யோபாவம்! என்பதனையே சோஷியலிசம் என்று கருதிக்கொள்ளச் சொல்கிறார்கள்.
அவர்கள் கூறிடும் சோஷியலிசத்தில், பொருள் இல்லை; பயன் இல்லை!
பொருளற்றதைப் பேசிடுவதுடன், சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமற்ற முறையில் ஏழைக்காகப் பரிந்து பேசிவிட்டு, ஏழையின் அந்த நிலைமைக்குக் காரணமாக உள்ள முதலாளிகளுடன் கூடிக்குலாவுவதும், அவர்களைக் கொழுக்க வைப்பதுமான செயலில் ஈடுபடுகிறது காங்கிரஸ் கட்சி.
இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே இருந்திருக்கிறது காமராஜரின் மேடைப் பேச்சும், அவருடன் கூடிக் குலாவியவர்களின் பட்டியலின் தன்மையும். இதனை எடுத்து விளக்கிட வேண்டும். இது வெறும் கிணற்றுத் தண்ணீர்; கங்காதீர்த்தம் என்று கூறுவது ஏமாற்றுப் பேச்சு என்பதனை எடுத்துக் கூறிட வேண்டும்—தொடர்ந்து.
6-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை