தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!!

கடிதம்: 66

அறைகூவுகிறார் அமைச்சர்!!

நிதி அமைச்சர் மொழிகள்—
ஐஸ்டிஸ் கட்சியும் காங்கிரசும்—
ஆயிரம் கோடி திட்டம்

தம்பி !

நிதியமைச்சர் சுப்ரமணியனார் போர்க்கோலத்துடன் வந்து நிற்கிறார்.

மெத்தக் கோபத்துடன் அவர் இருக்கிறார் என்பதும் தெரிகிறது. கோபம் ஏன் அவ்வளவு கொந்தளிக்கிறது என்பதும் புரிகிறது.

செல்லுமிடமெல்லாம் அவருக்குச் சொல்லுகிறார்கள் ‘ஊழியர்கள்’ — நமது கழகம் வளாச்சி அடைந்திருப்பதனை!

“கூட்டம் குறைவுதான்.”

“பரவாயில்லையே! சென்ற மாதம் காமராஜர் வந்தபோது இதிலே கால்வாசிதான் இருக்கும்.”

“அப்படியா... இந்த ஊரில் மக்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி இல்லை... பொதுக்கூட்டத்திற்கு வருவதில் ஆவல் எழாததற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்...”

“அப்படிச் சொல்லிவிடுவதற்கில்லை...”

“ஏன்?...என்ன...!”

“முன்னேற்றக் கழகத்தார் கூட்டம் போட்டால்...!”

“முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியா?... அடுக்கு மொழி பேசிடும் ஆள் மயக்கிக் கூட்டம், அதுகளுக்கு அரசியல் என்ன தெரியும்...?”

“அதுசரி, அதுசரி......ஆனால் இந்த ஜனங்கள்...”

“குப்பையில் தள்ளுங்கள்......பெரிய கூட்டமா அவர்கள் வந்தபோது?”

“ஆமாம்......பிரமாண்டம்......அதைப் பார்த்த பிறகுதான் நம்ம பேச்சிமுத்து, தேர்தலில் இறங்கவே தயங்குகிறார்.”

“அப்படியா! இன்று வெளுத்து வாங்கிவிடுகிறேன், முன்னேற்றக் கழகத்தை...”

இப்படி உரையாடல் நடந்தான பிறகு, பொதுக்கூட்டம் சென்றிடவும், ‘பிரமுகர்கள்’ அவரை வரவேற்கவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாமலிருக்கவும் கண்டவுடன், நிதி அமைச்சருக்குக் கோபம் கோபமாக வருகிறது, கொக்கரிக்கிறார்.

இந்தக் கிழமை, தம்பி, சென்ற இடமெல்லாம், எங்கே அந்த அண்ணாத்துரை? பிடித்திழுத்து வாருங்கள்!—என்று கேட்பது போலவே, சீற்றத்துடன் பேசியிருக்கிறார். நான் வருத்தமடைகிறேன், மெத்தவும் அவருக்கு ‘வேலை’ கொடுத்துவிட்டதற்காக.

திட்டம் எங்கே? திட்டம் எங்கே? காட்டட்டும்! நீட்டட்டும்! பார்க்கிறேன்! நிபுணர்களை, அழைக்கிறேன்! அவர்கள் அளித்திடும் தீர்ப்பை ஏற்கிறேன்! என் பதவியைக் கூடத் துறக்கிறேன்!—என்று ஒரே வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.

தேர்தல் நேரமல்லவா — தீ பறக்க வேண்டுமே — அப்போதுதானே ஐம்பது ஆயிரமானாலும் இலட்சமானாலும் பரவாயில்லை என்று வீசி எறிந்து தேர்தல் வேட்டையில் ஈடுபட ‘ஆட்கள்’ தைரியம் பெறமுடியும். அதற்காகப் பாபம், அமைச்சர் ஆலாய்ப் பறக்கிறார், ‘ஆலகாலம்’ கக்கப்பார்க்கிறார். அவர் உதிர்த்துள்ள ‘முத்துகளை’ சிந்தாமல் சிதறாமலெடுத்து ஏடுகள் வெளியிட்டுத் தமது தேசியத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளன! தேசீயத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் அந்த ஏடுகள், மக்களுக்குத் தெளிவும் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கவனித்து நடப்பதானால், நான் எடுத்துக் கூறும் பேச்சையும், குலைக்காமல் வெளியிட வேண்டும். அந்தப் பண்பு ஏது? இருந்தால் ஜனநாயகம் ஏன் இன்று கேலிக்கூத்தாகிக் கிடக்கிறது! அது கிடக்கட்டும். நீண்டகால வியாதி, உடம்போடு ஒட்டிக் கொண்டது!

என் மீது இத்துணை எரிச்சல் கொள்ள என்ன காரணம் நிதி அமைச்சருக்கு?

சாதாரணமாக, நிதி அமைச்சர், நம் பிரச்னைகளை — பேச்சுகளைத் தமது மேலான கவனத்துக்கு உரியன என்றே கருதுவது கிடையாது. நிதியும் மந்திரியும், ஒருசேரத் தம்மிடம் சிறைப்பட்டிருப்பதால், அவர் பண்டைக்காலப் பாதுஷாக்கள்போல, ஊர்ப் பிரமுகர்கள் தரும் உக்காவைப் பிடித்துக்கொண்டு, ஊஹும்...ஆஹாம்...பேசிக் கொண்டு உலா வந்தால் போதும், கழகத்தார் பற்றிக் கவனிப்பதே, தமது மேலான நிலைக்கு ஏற்றதாகாது என்று எண்ணிக்கொள்பவர், எனினும், இந்தக் கிழமை, முழுவதும் அவர், கரூரிலும், மதுரையிலும், திருச்சியிலும் செல்லுமிடமெங்கணும், பொதுவாக முன்னேற்றக் கழகத்தையும், குறிப்பாக என்னையும் ‘போடு போடு’ என்று போட்டுவிட்டதாகக் கருதிக் கொண்டு தம்முடைய பலவீனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

1. திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில் அமைந்த எதிர்க்கட்சி அல்ல.

2. திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு அரசியலே தெரியாது.

3. அடுக்குமொழி பேசுவார்கள் — அனாவசியமாக எதிர்ப்பார்கள்.

4. அவர்களுக்கு நாட்டிலே ஆதரவே கிடையாது.

இவை நிதியமைச்சரின் மொழிகள் — மதிமிகு மொழிகள் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார் — அவராவது அவ்விதம் எண்ணிக்கொள்ளாவிட்டால், வேறு யார் துணைவரப்போகிறார்கள்.

எதிர்க்கட்சி என்பதற்கு என்ன இலக்கணம் காண்கிறார் நிதி அமைச்சர் — அவர் படித்துள்ள அரசியலில்—படித்திருந்தால்!—என்று அறிய யான் மிகவும் ஆவல் கொண்டுள்ளேன்.

அவர் பேசுவதிலிருந்து; நான் யூகித்துக்கொள்ள என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்டு கட்சி கெட்டது.

சோஷலிஸ்டுகள் கெட்டவர்கள்.

முன்னேற்றக் கழகம் மிகமிகக் கெட்ட கட்சி.

இப்படி எல்லாவற்றையும் கண்டித்துவிட்டு, எதை எதிர்க்கட்சி என்று இவர் கூறுகிறார்? ஒரு சமயம், உண்மையான எதிர்க்கட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே, காங்கிரசிலே இருந்தே சிலரை இவர் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பி, எதிர்க் கட்சியாக்கி, அரசியல் ‘சேவை, செய்யப் போகிறாரோ என்னவோ? யார் கண்டார்கள்!’

ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தைக் கண்டிப்பது.

ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது.

ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லலை, அவதியை எடுத்துக் காட்டுவது.

ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது.

ஆளும் கட்சி, என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது. உரிமையையும் உடைமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது, கண்டிப்பது எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவது.

இவைபோன்றவைதாம், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இலட்சணங்கள் என்று நான் படித்த—அதிக அளவு படிக்கவில்லை, ஆனால் படித்தவரையில் கவனத்துடன் படித்திருக்கிறேன்—அரசியல் விளக்க ஏடுகளில் காணப்படுகின்றன.

எதிர்க் கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இலட்சணங்கள், யாரிடம், எந்த வகையிலே இல்லை என்பதை எடுத்து விளக்கிட இந்த வீராதி வீரர் முன்வரவில்லை—அதை விட்டு விட்டு ‘ஓஹோ! இவைகளெல்லாம் கட்சிகளே அல்ல’ என்று கூறிவிடுகிறார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற கதை உண்டல்லவா, அதுபோல, திராவிடமுன்னேற்றக் கழகத்தின் நோக்கத்தில் இன்ன தவறு, போக்கிலே இந்தவிதமான கோளாறு இருக்கிறது என்று எடுத்துக்காட்ட வக்கற்ற இந்த வக்கீல், இந்தக் கழகத்தார், முன்பு வெள்ளையர் ஆட்சியிலே வெண்சாமரம் வீசினவர்கள் என்று குதர்க்கம் பேசிவருகிறார்.

இன்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களில்—முக்கியஸ்தர்களில்—யார் வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசினவர்கள்—யார் பதவியில் இருந்தவர்கள்—யார் வெள்ளையனிடம் பணம் வாங்கி வேலைபார்த்தவர்கள், என்பதை எடுத்துக் காட்டும்படி, ‘சூரசம்ஹார’க் கோலம் பூண்டு சுற்றி வரும் இந்தச் சுப்பரமணியனாரைக் கேட்கிறேன்.

எப்போது ஜஸ்டிஸ் கட்சி, சேலத்தில் திராவிடர் கழகமாக மாறிற்றோ, அன்றே, களங்கம் துடைக்கப்பட்டது. ‘கழுவிவிட்டதை’க் காங்கிரஸ் தங்கக் கலசத்தில் அல்லவா ஏந்திக்கொண்டது?

நாமறியோமா, நாடு அறியாதா, இந்தச் சேதியை?

வெள்ளையனிடம் சுளைசுளையாகப் பணம் பெற்றுக்கொண்டு, அவன் காலைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டவர்களை, கட்டி அணைத்துக்கொண்டது காங்கிரஸ் என்பதை விளக்க எத்தனை எடுத்துக்காட்டு வேண்டும்! மந்த மதியினரும் இதனை அறிந்துகொள்ள முடியுமே!

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் யார்? அலிபுரம் சிறையில் அவதிப்பட்ட தேசியத் தொண்டரோ!! வெள்ளையர் ஆட்சியை ஒழித்திட வீரப்போரிட்ட சிதம்பரனாருடன் கூடிச் செக்கிழுத்தவரோ! அன்னிய ஆட்சிக்கு அடங்கிக் கிடக்க மாட்டேன் என்று ஆர்த்தெழுந்த வைக்கம் வீரருக்கு வலதுகரமோ? தேசத்தை அடிமை கொண்டவனுடன் உறவு கொள்ளமாட்டேன் என்று கூறி, ‘உத்யோகத்தை’ உதறி எறிந்த தியாகியோ? நாடு கேட்காதா, நாப்பறை அறையும் இந்த அமைச்சரை? ஐயா! அமைச்சரே! அண்ணாத்துரையும் அவன் சார்ந்துள்ள கழகத்தினரும், வெள்ளையரை ஒழித்திடும் வீரப்போர் புரிந்தவர்களல்லர், எனவே அவர்கள், எமது ஆட்சியிலுள்ள அலங்கோலத்தை எடுத்துக் கூறினால், கேளேன், எவரும்கேளார் என்று விசித்திர வாதம் புரிகிறீரே, இந்த அல்லாடி யார், கூறும் கேட்போம், என்றால், பதில் ஏது கூறுவார்! நான் கூறுகிறேன், தம்பி, நாடறிந்த உண்மையை, அதை மறுத்திடவாவது முன்வருகிறாரா, கேள் இந்த மந்திரியை!

அல்லாடி—ஒரு, சர்! ஆங்கில அரசு தந்த பட்டம், அட்வகேட் ஜெனரல் பதவி—ஆங்கில அரசு வீசிய எலும்புத்துண்டு என்றுரைக்கவேண்டும் அமைச்சரின் பாஷையில்! அவரை அல்லவா, அடிபணிந்து அழைத்து, இவர்கள், அரசியல் சட்டம் தீட்டும் வேலையைத் தந்தனர்!

தேசத்துரோகி—இவர் தீண்டக்கூடாது எமது விடுதலைச்சாசனத்தை என்றா கூறினர்.

தேடித் தேடிப் பிடித்திழுத்து வந்தனர், தேசியத் தலைவர்கள், அவர் திருவடி சரணம் என்று கிடந்தனர்.

அமைச்சரின் அறிவாற்றல் என்ன செய்துகொண்டிருந்தது? அல்லாடியை அழைக்காதே! அவமானத்தைத் தேடாதே! என்றா இவர் ஆர்ப்பரித்தார்!

அல்லாடி, அரசியல் சட்டத்தைத் தீட்டிக்கொண்டிருந்தபோது, இந்த அமைச்சர் இருந்த திக்கும் தெரியாது நாட்டு மக்களுக்கு! இன்று இளித்து நிற்கவும், இனிப்பாகப் பேசவும் பதவியின் காரணமாக நாலுபேர் நத்திக்கிடக்கக் கிடைத்துவிட்டார்கள் என்பதனால் உண்டான போதையில், போதகாசிரியராகிறார்—வெள்ளையன் காலத்தில் இந்தக் கழகத்தார் என்ன செய்தார்கள் தெரியுமா என்று விண்ணாரம் பேசுகிறார்.

கலெக்டர் வேலையில் காலடி வைத்து, காஷ்மீர் திவான் வேலை வரையில் உயர்ந்து, உள்ளே நுழையாதே! என்று உத்திரவிட்டு, நேரு பண்டிதரின் மார்புக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிடும் துணிவுடன் துரைத்தனம் நடத்திய கோபாலசாமி ஐயங்காரல்லவா, மந்திரியானார்! அப்போது. மானமும் ரோஷமும் எங்கேபோய்க் குடிபுகுந்தது? வெள்ளை ஏகாதி பத்யத்தின் செல்லப் பிள்ளையாயிற்றே இந்த கோபாலசாமியார்! இவரைக் காங்கிரசாட்சியிலே காராக்கிரகத்தில் தள்ளுவார்கள், கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவார்கள், எந்தத் துப்பாக்கி முனையை நேரு பண்டிதரின் மார்பிலே வைத்தாரோ, அதே துப்பாக்கி முனையை இவருடைய முதுகிலே குத்தி விரட்டுவார்கள் என்றெல்லாம் முழக்கமிட்டனரே காங்கிரஸ் பேச்சாளர்கள். வெட்கமின்றி அவரை அழைத்து ‘சோடசோபசாரம்’ நடாத்தி, ‘சுபசோபனம்’ பாடி, பாதுகாப்பு இலாகா, மந்திரியாக்கிக் கொள்கிறோமே, உலகு கைகொட்டிச் சிரிக்காதா, என்று, அன்று எண்ணிய தன்மானத் தலைவர் யார்? காட்டச் சொல்லுங்கள்! இன்று துள்ளி வருகுதுவேல்! தூர விலகி நில்! என்று துந்துபி முழக்கிடும் இந்தத் தூயவராவது, வாய் திறந்தாரோ! இவர் இருப்பதையே நாடு கவனிக்கவில்லை அந்த நாட்களில்!! இன்று, வீரம் சொட்டுகிறது பேச்சில் — அன்று அசடு வழிந்தது இவர் போன்றார் முகத்தில்! ஆங்கில ஆட்சியின்போது எத்துணை ஜொலிப்புடன் இருந்தாரோ, அதே பளபளப்புடன், கொலு வீற்றிருந்தார் கோபாலசாமி ஐயங்கார்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்திடும் வீரப்போருக்கு முத்துராமலிங்கத் தேவர் தேவைப்பட்டார்—இன்று பசும்பொன் இருக்கவேண்டிய இடத்தில், பரங்கியருக்குப் பல்லக்குத் தூக்கிய சிற்றரசர் கூட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் ராஜா அல்லவா வீற்றிருக்கிறார்! வெட்கங்கெட்ட நிலைக்கு, வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும்.

ஏழைகள் ஈடேற்றப்படுவதற்கான திட்டம் வேண்டும்.

ஆட்சியாளர்கள் இதைச் செய்கிறவரையில் உண்ணாவிரதமிருக்கிறேன், என்று சங்கரலிங்க நாடார் எனும் காங்கிரஸ் தியாகி, அல்லற்படுகிறார்; அமைச்சர் அவையில் அமர்ந்துகொண்டு, என்ன ரகளை? என்ன கூச்சல்? என்று கேட்டிட, இராமசாமி படையாச்சியும் மாணிக்கவேலரும் இருக்கிறார்கள். இது வேதனையைக் கிளறவில்லை, வெட்கத்தை மூட்டவில்லை, இந்த அமைச்சருக்கு! நாம் ஒரு காலத்திலே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தோமாம், ஆகவே நம்மை மக்கள் ஆதரிக்கக் கூடாதாம்!!

யாரார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்று மக்களால் சுட்டிக் காட்டப்பட முடியுமோ, அவர்களிலே பசை கொண்டோரிடமெல்லாம் நேசம் கொண்டு சுவைத்து, இன்புறுவதுதான் இன்றைய காங்கிரஸ் என்பதை யார்தான் அறிந்து கொள்ளவில்லை! ஊர் முழுவதையுமா ஒரு அமைச்சர் தமது அதிகாரப் பேச்சினாலே உண்மையை மறந்துவிடச் செய்யமுடியும்?

எனவே தம்பி, சொத்தை வாதத்தை மெத்தச் சிரமப்பட்டு, மெச்சுவதற்கு யார் கிடைக்கா விட்டாலும், அடுத்த தோலுக்கு மனு போட்டிருக்கும் மகானுபாவர்களாவது பாராட்டுவர் என்ற எண்ணத்தில் அமைச்சர் பேசுகிறார், அந்தமகானுபாவர்களிலே பலரும், ஜஸ்டிசில் இருந்தவர்கள்!!

மற்றோர் பெரிய தவறு நாம் செய்கிறோமாம்—தேமதுரத்தமிழோசை அவர் செவியைத் துளைக்கிறதாம்! ஏனடா, தம்பி, தமிழின் எழில் விளங்கப் பேசுகிறாய்? பார்! அமைச்சருக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது; அமைதி அழிகிறது; அழுதுவிடுவார் போலிருக்கிறது. நானே கூடச் சொல்லாலாமென்று இருக்கிறேன்—நீயும் சொல்லு—மலையினின்றும் கிளம்பும் சிற்றாரின் ஒலியோ, மங்கை நல்லாள் மதலைக்கு முத்தமிட்டுக் கொஞ்சும் போதும், மணவாளனிடம் பேசி மகிழ்ந்திருக்கும் வேளையிலும் கேட்கக் கிடைக்கும் சிரிப்பொலியோ, வாட்போரின்போது கேட்கும் ஓசையோ, தென்றலோ, புயலோ, தேனோ, என்றெல்லாம் பலரும் பலப்பட எண்ணி மகிழத்தக்க விதமாக, இனிப் பேசி, இந்த அமைச்சரின் இதயத்தை வாட்டாமலிருக்கும்படி, நமது நாவலருக்கும், மற்றையோருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும்.

சீவிச் சிங்காரித்துக்கொண்டு, முல்லை சூடி, முறுவலுடன் இடுப்பில் குழந்தையுடன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளமங்கை செல்லக் கண்டால், பதியை இழந்ததால் பசுமை உலர்ந்து போன பரிதாபத்துக்குரிய ‘மொட்டை’க்குக் கோபமும் சோகமும் பீறிட்டுக் கொண்டுதானே வரும்! அமைச்சருக்கு நாம் ஏன் அந்த அல்லல் தரவேண்டும்!!

அவர் நமது கழகத் தோழர்கள் பேசும் மொழியில் ஏற்றமும் எழிலும் இருந்திடக் காண்கிறார்—எரிச்சல் பிறக்கிறது—அதை மறைத்துக்கொள்ளும் ஆற்றலும் அற்றுப்போய், அழகாகப் பேசி, அடுக்குமொழி பேசி, மயக்கிவிடுகிறார்கள் என்று கூறி மாரடித்து அழுகிறார்! நாம் என்ன செய்வது, தம்பி, வேண்டுமென்றே, தமிழின் இனிமையைத் தேடிப் பிடித்திழுத்தா வருகிறோம். தமிழ் உள்ளம் நமக்குத் தமிழ் இனிமையைத் தருகிறது; அமைச்சரின் நிலை அது அல்லவே!

உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசவேண்டிய நிர்ப்பந்தம் தாக்குகிறது.

உண்மை தெரிகிறது, அதை மறைத்தால்தான் பதவி என்பது குடைகிறது.

எந்தத் துறையிலே பார்த்தாலும் வடவர் வளம் பெறுவதையும், தென்னவர் திகைப்புண்டு கிடப்பதையும் அறிகிறார் உள்ளத்தில் சோக அலை கிளம்புகிறது கோபப்புயல் வீசுகிறது. ஆனால் அந்த வெல்வெட்டு மெத்தையில் அமர்ந்து எண்ணிப் பார்க்கும்போது, தெற்குத் தேய்ந்தாலென்ன, காய்ந்தாலென்ன, என்ன சுகம்! என்ன சுவை, இந்தப் பதவி! என்று சபலம் பிறக்கிறது; அமைச்சரின் பேச்சு, உள்ளத்தில் உள்ளதை மறைத்திடப் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே பேச்சிலே சூடு இருந்தால் சுவை இல்லை, சுத்தம் இல்லை! சூட்சமம் அதுவே தவிர அவருக்கென்ன அகமும் புறமும் படித்திட, தமிழின் அருமையும் இனிமையும் அறிந்திட, எதுகை மோனையை அழைத்திட, எழிலும் சுவையும் பெற்றிடவா இயலாது! நம்மைவிட அதிகம் முடியும்!! ஆனால், உள்ளத் தூய்மை வேண்டுமே! கொள்கை ஆர்வம் தேவையாயிற்றே! தெளிவும் துணிவும் நிரம்ப வேண்டுமே! அதை எங்ஙனம் அவர் பெறுதல் இயலும்—அமைச்சராயிற்றே!

அமைச்சர் பேசியதாக ‘தினமணி’ கூறுகிறது, நான் ஓர் மாபாதகம் செய்துவிட்டிருப்பதாக அவர் மனச்சங்கடம் அடைந்திருக்கிறார் என்று தெரிகிறது என்ன என்கிறாயா? கேள், தம்பி, நான் ரோமாபுரி ராணிகள்—ஓர் இரவு—என்றெல்லாம் ஏடுகள் எழுதினேனாம்—எனவே, இதுதான் இவர்கட்குத் தெரியும், வேறென்ன தெரியும்—என்று ஏளனம் செய்ய முற்படுகிறார், அமைச்சர் பெருமான்!

அமைச்சர் பெருமானுடைய கவனத்தை ஓர் இரவும் ரோமாபுரி ராணிகளும் ஈர்த்திருக்கும் உண்மை எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறதல்லவா—மகிழ்ச்சி—மெத்த மகிழ்ச்சி. நரைதிரை மூப்பு என்பவைகளுக்கு ஆளான தொண்டு கிழங்களே, ரோமாபுரி ராணிகளிடம் சிக்கிக்கொண்டனர் என்றால், வாலிப முறுக்குக் குறையாத அமைச்சர், அவர்களிடம் சொக்கிப் போனதிலே ஆச்சரியமில்லை. ஆனால் இதிலே ஆச்சரியம் என்ன தெரியுமா தம்பி, கயல்விழி, மையல் மொழி, காட்டியும் ஊட்டியும் கட்டழகிகள் கருத்தைக் கெடுப்பர், காரியம் குலைப்பர், ரோம் சாம்ராஜ்யம் அழிந்துபட்டதற்கு வேல்விழி மாதரிடம் வாள் ஏந்திய வீரர்கள் அடிமைப்பட்டது ஒரு காரணம் என்று எச்சரிக்கை செய்ய, நான் அந்த ஏடு எழுதினேன். அமைச்சர், பாவம், அதைப் படித்து, பெறவேண்டிய பாடம் பெறாமல், வேறு ஏதேதோ எண்ணங்களைப் பெற்று, மெத்தச் சிரமப்பட்டிருக்கிறார்போலும். அதனாலேதான், அவர் அத்துணை கோபத்துடன், ரோமாபுரி ராணி புத்தகம் எழுதியதைக் கூறியிருக்கிறார்.

அமைச்சரே! அலைமோதும், அடக்கிக்கொள்க! ஆசை வந்து உந்தும், ஆட்பட்டுவிட வேண்டாம். அந்த ஏடு, சுவையூட்டுச் சூறாவளியை மூட்டிவிடும் சுந்தராங்கிகளிடம், அரசியல் உலகத்து அதிபர்கள், ஆழ்வார்கள், அடிவருடிகள் எனும் எவரும் சர்வஜாக்ரதையாக இருக்கவேண்டும், ஏனெனில், ரோம் சீரழிந்ததே, கோலமயிலனையார் கண்டரரைக் கொல்லும் விழியால் தாக்கியதனால்தான் என்று எடுத்துக் கூறவே எழுதப்பட்டது அந்த ஏடு.

இது, சபலம் எழும்போதெல்லாம், அமைச்சர்போன்று பெரிய நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் படித்துப் பாடம் பெற்று, பதமும் பக்குவமும் கெடாதபடி தம்மையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டது.

படித்துவிட்டு, பாடம் பெறாமல், பெருமூச்சு விடுவதும், ஆஹா! அந்தக் காலம், எப்படிப்பட்ட அருமையான காலம்! என்று ஏங்குவதும், இது அதுபோலவா? கண்டால் புன்னகை மலருகிறது, கைபட்டால் முகம் சுளித்துக்கொளவதும் தெரிகிறது. தொட்டால் துவளும் போக்கு அல்லபோலும், கனியவைத்திடக் காலம் அதிகம் தேவைபோலும் என்றெல்லாம் எண்ணமிடுவதும் சிலருக்கு ஏற்படுகிறது எனின் குற்றம் என்னுடையதல்ல. கிடைத்த பாலை குழந்தைக்குத் தந்து மகிழ்ந்திடும் மதியூகியும் உண்டு, பாம்புப் புற்றுக்கு வார்த்து விட்டு பரமபதத்துப் பேரேட்டிலே பெயர் பதிவாகிவிட்டது என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளியும் உண்டு! குற்றம், பாலில் இல்லை!!

அமைச்சர் இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலே இடறிவிழுந்தால், ஓர் இரவு எனும் ஏட்டிலே நான் காட்டி இருக்கும் ஜெகவீரர் மீது தான் விழ வேண்டும். அத்தகையோரின் கெடுமதியைக் கண்டிக்க ஏடு எழுதுவது, எந்த வகையான குற்றமோ-எனக்குத் தெரியவில்லை—காலஞ்சென்ற ‘கல்கி’யும் வ.ரா.வும் அவ்விதம் கூறவில்லை! அவர்கள் ஏதேனும் குறை காட்டியிருந்தால், நான் திருத்திக் கொண்டிருப்பேன். அமைச்சர் போன்றவர்கள் அந்த ஏடுகள் குறித்து ஏதேதோ பேசும்போது, எனக்கு அவர்கள் அந்த ஏடுகளிலிருந்து பெறவேண்டிய பாடத்தைப் பெறவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களை எல்லாம் திருத்தும் ஆற்றலையா நான் பெற்றிருக்கிறேன்! நாட்டு மக்கள்தான் அவர்களைத் திருத்தவேண்டும். சீதையை இராவணன் சிறை பிடித்ததைக் கூறிடும் சம்பவத்தைக் கவி கூறுவது எதற்கு? அதுபோல ஒன்று கிடைக்காதா, இராவணன்போல கெஞ்சிக் கிடக்காமல், வஞ்சியைப் பஞ்சணை விருந்தாக்கிக் கொள்ளலாமே என்ற கெடுமதி பெறுவதற்கா?

ஒர் இரவு,—ரோமாபுரி ராணிகள்—மேலிடத்தில் உள்ளவர்கள் ஒழுக்கத்தைத் துணைகொண்டால்தான், நாடு உருப்படும் என்ற உண்மையை உணர்த்தும் ஏடுகள்!

துரோபதை துகில் உரியப்படும் சம்பவத்தைப் படிக்கக்கேட்டு, பரிதாபப் படவேண்டும், அக்ரமம் இந்த அளவுக்கா போவது என்று கொதித்தெழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறை - துகிலா உரிந்தார்கள்...ஆஹா...பலே! பலே!...சொல்லு சொல்லு...எப்படி எப்படி உரிந்தார்கள்...என்று ரசித்துக் கேட்டபடி, எதை எதையோ எண்ணிக்கொண்டு, உதட்டை மடக்கிக் கடித்துக்கொள்ளும் உலுத்தர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! அதற்கென்ன செய்யலாம்.

கிடக்கட்டும், நான் வகை கெட்டவன், ஓர் இரவும், ரோமாபுரி ராணியும் குறித்து மட்டுமே எழுதினேன்; இதனை ஏளனம் செய்து எரிச்சல்பட்டுப் பேசுகிறாரே, இவர் தீட்டி, நாட்டவருக்குத் தந்துள்ள கேடு நீக்கிடும் ஏடுகள், யாவை?

இவர் தீட்டிய ஓர் அரசியல் விளக்க ஏடு வெளிவந்தபிறகுதான், உலகப் பெரும் தலைவர்கள் ஒன்று கூடி, உண்மையை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையையே அமைத்ததுபோலவும், இவர் அளித்த விஞ்ஞான விளக்க ஏட்டினைப் படித்த பிறகே ஈன்ஸ்டின் தத்துவத்தையே உலகு பெற்றதுபோலவும், இவர் கீதைக்குப் புது வியாக்யானம் தீட்டிடக் கண்டு, கண்ணனே ஆச்சாரியார் கனவில் தோன்றி, கண்ணன் காட்டிய வழி என்று நீர் வெளியிட்ட ஏடு சரியில்லை, நமது பக்தன் பண்டித சிகாமணி சுப்ரமணியம் தீட்டியுள்ள ஏடுதான் சரியானதாகும் என்று எடுத்துரைத்தது போலவும், ‘உலகப் பேருண்மைகள்’ என்று இவர் ஓர் ஏடு தீட்டிட, அதிலே உள்ள கருத்துரையைக்காணவே, நேரு பண்டிதர் ரஷியாவுக்கும் கிரீசுக்கும், சவுதி அரேபியாவுக்கும், பிரான்சுக்கும் இப்படித் தேசம் தேசமாகச் சுற்றி அலைந்து தேடிக்கொண்டிருப்பது போலவும், நோபல் பரிசு வருஷா வருஷம் எனக்கே தருகிறீர்களே, மற்றவர்களும் பிழைத்துப் போகட்டும் பாவம் என்று இவராகப் பார்த்து நிறுத்திக்கொண்டது போலவும், பேசுகிறாரே, தம்பி, இவர் தீட்டி நாட்டுக்கு நீட்டிய ஏடு எத்தனை?

இன்றுவரையில், சொத்தையோ சோடையோ இவர் பார்க்க, படிக்க, கண்டிக்க, வெறுக்க, நான், ஏடு தந்ததாகத் தெரிகிறதே தவிர, நான் படித்திட இவர் ஒரு ஏடும் தந்ததாகத் தெரியவில்லையே! இந்த மலடியா என் படைப்புகளை நையாண்டி செய்வது? பரிசீலனை நடத்தும் உரிமையே உண்டா என்பது சந்தேகம்!

வடநாட்டவர் பொருளாதாரத் துறையிலே படுத்தும் பாடுகளை விளக்குவது பணத்தோட்டம்-ரோமாபுரி ராணிகள் மட்டும் படித்ததாகக் காட்டிக்கொள்ளும் இந்தக் ‘கனம்’ இதைப் படித்ததுண்டா? நாடு, படித்ததுண்டா? நாடு, படித்தது.

தமிழன் ‘கலிங்கம்’ வென்ற தீர இனத்தவன் என்பதைக் கதை வடிவமாக்கியது கலிங்கராணி—அமைச்சர் கண்சிமிட்டிக் கருத்தழித்த ரோமாபுரி ராணிகளைக் கண்டு, சொக்கிப்போய் நின்றுவிட்டார். கலிங்கராணியைக் காண முடியவில்லை, பாபம்!

பொது வாழ்க்கைத் துறையிலே உள்ள போலிகளை அம்பலப்படுத்துவது பார்வதி B. A. பார்த்ததில்லை அமைச்சர்—மற்றும் பல. ரோமாபுரி ராணிகள்—ஓர் இரவு—இந்த இரு ஏடுகள்தான் இவருக்குச் சுவை தந்தனபோலும்.

பேசத் தெரியும், இதுபோன்ற ஏடுகள் தீட்டத் தெரியும் என்று கூறிவிட்டதோடு, நிற்கவில்லை அமைச்சர். ‘நான் செய்யவேண்டிய வேலை’ என்ன என்பதுபற்றியும் கூறுகிறார்.

தம்பி! தேர்தலில் ஈடுபட, நாம் முனைகிறோமல்லவா—பலருக்கு இது பலத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

நமது பலம் பெரிது என்பதற்காக அல்ல, அவர்களுடைய பலக்குறைவு அவ்வளவு அதிகம்; அதனால்.

பதவி ஆசை பிடித்துக்கொண்டது, அதனால்தான் தேர்தலுக்கு வருகிறார்கள் என்று பதவியில் பிசின்போல் ஒட்டிக்கொண்டுள்ள இந்த உத்தமர்கள் பேசினர்.

அச்சம் காரணமாகவோ, அல்லற்பட வேண்டிவருமே, என்ற சங்கடம் காரணமாகவோ, இவர்கள் இவ்விதம் பேசக்கூடும் என்று எண்ணிக்கொண்ட நான், இரண்டோர் திங்களுக்கு முன்பு மதுரையில் பேசினேன், “ஐயா காங்கிரஸ் நண்பர்களே! ஆயாசப்படாதீர்கள்! எமக்குப் பதவியும் வேண்டாம், இடமும் தேவையில்லை; தேர்தலில் போட்டியிடாதபடி எம்மைத் தடுத்திடும் வாய்ப்புக்கூட நான் தருகிறேன்; இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆறு ஆயிரம் கோடி செலவழிக்கப்படும் என்கிறீர்கள்; முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேதான் தென்னாடு ஏமாற்றப்பட்டது. இப்போதாவது, முன்னாலே வஞ்சகம் செய்யப்பட்டதற்குப் பரிகாரம் தேடும் முறையிலும் இப்போதைக்கு நீதி வழங்கும் தன்மையிலும், தென்னாடடுக்கு 2000-கோடி ரூபாய் ஒதுக்குவதாக, நேருபண்டிதரை வாக்களிக்கச் சொல்லுங்கள்; அந்த வாக்குறுதி கிடைத்தால், நாட்டுக்கு 2000 கோடியும் அதன் பயனாகப் பல நற்பயனும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடனும், நாம் முயற்சி எடுத்ததால், இந்தப்பலன் நாட்டுக்குக் கிடைக்கிறது என்ற திருப்தியுடனும், நாங்கள் தேர்தலில் நிற்பதைக்கூட விட்டுவிடுகிறோம், என்றேன்.”

இது சில நாட்கள், கவனிப்பாரற்றதாக இருந்துவந்தது.

நாட்டுமக்கள், இதனைக் கவனிக்கும்படியான அரிய தொண்டாற்ற முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டது; நான் சொன்ன யோசனையை ஆதரிப்பதன் மூலமாக அல்ல; நையாண்டி செய்வதன் மூலமாக.

திராவிடநாடு கூட வேண்டாம் போலிருக்கிறது, 2000-கோடி ரூபாய் கொடுத்தால் போதுமாம்—அண்ணாத்துரையின் அரசியலைப் பார்த்தீர்களா—2000-கோடி கிடைத்துவிட்டால், தேர்தலில் கூட ஈடுபடாமல் விலகிக்கொள்வர்களாம்—இப்படி இருக்கிறது ‘இதுகளோட’ அரசியல்—என்று கம்யூனிஸ்டுகள் கேலிபேசினர்.

இது மக்களிடம் நமக்கு இருந்த ‘மதிப்பை’ உயர்த்தியதை, அவர்கள் அறியவில்லை.

இதுவா அரசியல்? என்று கம்யூனிஸ்டுகள் கேட்டுக் கேலி செய்ததிலிருந்தே, மக்களுக்கு ஒன்று புரிந்தது; மற்ற மற்ற கட்சிகளைப்போல அல்லாமல், முன்னேற்றக் கழகத்தார், நாட்டுக்கு நன்மை கிடைப்பதானால் நாங்கள் தேர்தலைக்கூட மறந்துவிடுகிறோம் என்றல்லவா தெரிவிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபட்டுத் தமது கட்சிக்குப் புதிய அந்தஸ்து தேடிக்கொள்வதுதான் குறிக்கோள் என்று இல்லாமல், நாட்டுக்கு 2000-கோடி ரூபாய் ஒதுக்கினால், தேர்தல் வாய்ப்பும் வேண்டாம் என்றல்லவா கூறுகிறர்கள்—கட்சியைவிட, நாடு பெரிது என்று கருதும் இவர்களல்லவா, உண்மை ஊழியர்கள், என்று மகிழ்நதனர்.

இப்போது, கம்யூனிஸ்டுகள் செய்த ‘தொண்டு’ மேலும் திருத்தமாக, சுப்ரமணியனார்மூலம், செய்யப்படடிருக்கிறது.

இவர், கம்யூனைஸ்டுகளைவிட பலபடி தாவிச் சென்று ‘ஆக்ரோஷத்துடன்’ பேசியிருக்கிறார் என்பது எல்லா ஏடுகளாலும் தெரிகிறது.

“அண்ணாத்துரை 2000-கோடி ரூபாய் தரப்படவேண்டும் என்று கூறுகிறார்; சரி; 2000-கோடிக்கு, நல்ல திட்டம் தீட்டட்டும், அதை ஒரு அயல் நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்வாரானால் நான் என் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிடுகிறேன்—என்று பேசியிருக்கிறார்.”

படித்ததும், தம்பி, எனக்கு முதலில் பரிதாபமாக இருந்தது.

திட்டம் தீட்டினதும், முதலில் களப்பலிபோல, இவருக்குப் பதவி போய்விடுமாமே! அந்தோ, பரிதாபமே, எவ்வளவு சிரமப்பட்டுப் பெற்றார், எத்துணை இராஜதந்திரத்தைக்கொண்டு, ஆபத்தினின்றும் தப்பிப் பிழைத்தார்! கடைசீயில் நம்மாலா இவருடைய பதவிக்கு ‘முடிவு’ ஏற்பட வேண்டும், என்றெல்லாம் எண்ணத் தோன்றிற்று.

நான் 2000 கோடி தென்னாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டது, இவருடைய ‘பதவி’க்கு முடிவு காண அல்ல! அது சாதாரணமாகவே, காலாவதி ஆகிவிடக்கூடியது! இவர், ஏன், பதவியை, இதற்காக இழக்க வேண்டும்! தாராளமாக இருக்கட்டும். அதிலும், எப்போது இவர் திட்டம் திட்டச் சொல்லி என்னை அறைகூவி அழைக்கிறாரோ, இவரேதானே இருந்து அதை நிறைவேற்றித்தரவேண்டும்! ஏன், ஓடிவிடப் பார்க்கிறார்!

ஆனால் உண்மையில் அப்படி ஓடிவிடக் கூடியவரா? செச்சே! அதற்கு வேறு ஆளைப்பாருங்கள்! ஆச்சாரியார் ஆட்சியின்போது, குலக்கல்வித் திட்டத்தை முழு மூச்சாக ஆதரித்தவர், பிறகு அது காமராஜர் ஆட்சியின்போது, குழிதோண்டிப் புதைக்கப்பட்டது கண்டும், கண்ணீர் வடித்துக்துக்கொண்டு, நான் பெற்ற செல்வம் மடிந்ததே என்று ‘மந்திரி’ வேலையை இராஜிநாமாச் செய்வார் என்று பலரும் கூறினர். அவரா இதற்கெல்லாம் இடம் கொடுப்பவர்! ஒட்டிக்கொண்டார்! அவர் புகுத்திய கல்வித் திட்டத்தை ஓட்டினர்—இவர் மட்டும், ஓட்டினவருடன் ஒட்டிக்கொண்டார்; ஓடிவிடவில்லை. பிசின் அவ்வளவு பலம்!!

தேவிகுளம் பீர்மேடு பெறாவிட்டால்...! என்று முழக்கமிட்டார்; நேரு பண்டிதர், ‘மையமைய’ அரைத்தெடுத்த கரியை முகத்தில் பூசினார்; செ! இதுவும் ஒரு பிழைப்பா? சட்ட சபையிலும் மக்களிடமும் மார்தட்டித் தட்டிப் பேசினோம், நமது வார்த்தைக்கு மதிப்பளிக்கவில்லையே டில்லி தர்பார், இந்த அவமானத்தைத் துடைத்துக்கொள்ளவாவது அமைச்சர் பதவியை இராஜிநாமாச் செய்வோம் என்று ‘ரோஷம்’ காட்டினாரா? அவரா!! காட்டியிருந்தால் இன்று கரூரிலும் மதுரையிலும் பிற இடங்களிலும், ‘பிரமுகர்கள்’ தரும் வரவேற்புக் கிடைத்திருக்காதே!

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 400 கோடி தரவேண்டுமென்று, டில்லி சென்று ‘இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி’க் கேட்டார். நேரு பண்டிதரோ, ஆடினார் ஆடி சாடினார் ஓடோட! எனை செய்தார், வேண்டமய்யா இந்தப் பதவி என்று கூறி இராஜிநாமாச் செய்தாரா? செய்வாரா? சுவை சாமான்யமா?

எனவே, திட்டம் தந்தால் இராஜிநாமாச் செய்கிறேன் என்று பேசுவது, உண்மையல்ல; விளையாடுகிறார்!

திட்டம் தீட்ட எனக்குக் தெரியுமா, தெரியாதா, என்பதா, இன்று அரசியல் பிரச்சினை?

இதிலேயும், பார் தம்பி, அடிமைப் புத்தியை.

நம்மைப்போய் நையாண்டி செய்கிறார், அன்னிய மோகம் என்று; இவர் இலட்சணத்தைக் கவனித்தாயா? நான் திட்டம் தீட்டவேண்டுமாம், அதை ஒரு அயல்நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்ள வேண்டுமாம்!

அயல்நாட்டு நிபுணர்!! ஏன் இந்த அடிமை மனப்பான்மை?

சரி, இனிப் பிரச்சினையைப் பார்த்திடுவோம்.

நான், அயல்நாட்டு நிபுணர் கண்டு மெச்சி ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை நிறைவேற்ற 2000 கோடி தருக! என்று கேட்கவில்லை.

நான் கேட்டது, நீங்கள் தீட்டியுள்ள இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2000 கோடிரூபாய் தென்னகத்துக்கு ஒதுக்குங்கள், என்றுதான் கேட்டேன்—கேட்கிறேன்—ஒவ்வொரு வாக்காளரிடமும் கூறி இதைக் கேட்கச் சொல்லப் போகிறேன்.

இப்போது, இந்த அமைச்சர் கொலுவிருக்கும் சென்னை ராஜ்யத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 170 கோடி!

இவர் கேட்டது 400 கோடி! கிடைத்தது 170!

இந்த வெட்கக் கேட்டைப் போக்கிக்கொள்ள இவர் முனையாமலிருக்கலாம்; பதவி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே வஞ்சிக்கப்பட்ட தென்னகம், இப்போது 2000 கோடி கேட்க உரிமை பெற்றிருக்கிறது.

நான், 2000 கோடி என்று கேட்டபோது, என்னிலும் மிகமிகப் பெரிய தலைவர்கள் சார்பில் கேட்கிறேன். அமைச்சர் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகாமலிருக்கவேண்டும். நான் அவர் சார்பிலும்தான் கேட்கிறேன்!

தென்னாடு தொழில்துறையில் பின்னடைந்திருக்கிறது என்று இவரே கோவையில் இரண்டோர் திங்களுக்கு முன்பு கதறவில்லையா!

சிந்தாமணி தேஷ்முக், இது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளவில்லையா?

தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதுபற்றி அனுமந்தய்யா ஆயாசப்படவில்லையா? தென்னேட்டி விசுவநாதம் தேம்பவில்லையா? வல்லத்தரசு கண்டிக்கவில்லையா? புன்னூஸ் புலம்பவில்லையா? அன்னா மஸ்கரினிஸ் கேட்கவில்லையா? இங்குள்ள தேசீய ஏடுகளேகூட அவ்வப்போது கண்டிக்கவில்லையா? இவ்வளவு மலையெனக் குவிந்திருக்கும் மனக்குமுறலின்பேரால், கேட்டேன்; என் ‘மேதாவிலாசத்தை’க் காட்டிக்கொள்ள அல்ல.

திட்டம் தீட்டித் தர நான்மட்டும்தான் என்ற ‘அகம்பாவம் புகத்தக்க விதமாக நான் பயிற்சி பெற்றவனுமல்ல’ பதவி எனக்குத் தலைக்கனம் தரவில்லை.

திட்டம் தீட்ட நாட்டிலே உள்ள எல்லாக் கட்சித் தலைவர்களும் உட்காரலாம்—எனக்கும் இடமளித்தால் இருக்கிறேன்—தொழில்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளனர், விஞ்ஞான வித்தகர்கள் உளர், பேராசிரியர்களின் அணிவகுப்பே இருக்கிறது, பாரெங்கும் உள்ள பல்வேறு முறைகளைப் பாங்குடன் அறிந்த பத்திரிகை ஆசிரியர்கள் பலர் உளர், அனைவரும் அமரலாம், அற்புதமான திட்டம் தீட்டலாம்—எந்த அயல்நாட்டு நிபுணரும் மெச்சத்தக்கவகையில்.

இது முறை—இது நெறி.

‘திட்டம் தீட்டு பார்ப்போம்’ என்று எனக்கு அறைகூவல் விடுவதா முறை? ஒருவகையில் இதனை எனக்கு அளிக்கப்படும் பெருமை என்றுகூட நான் எடுத்துக்கொள்ளலாம்—ஆனால் அகம்பாவம் என்னைப் பிடித்துக்கொண்டில்லை—எனவே, அருமையான திட்டம் தீட்டத்தக்க அறிஞர் பெருமக்கள் அனேகர் உள்ளனர் என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

அதெல்லாம் முடியாது, உன்னால் முடியுமா என்றே அமைச்சர் பிடிவாதமாகக் கேட்பதானால், அந்த அறிஞர் பெருமக்களின் உதவியை நான் கேட்டுப் பெற்று, திட்டம் தருகிறேன் என்று உறுதி அளிக்கிறேன்.

அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன் — ஆனால் அந்த 2000 கோடி ஒதுக்கும் அதிகாரம் இருக்கிறதே, அது என்னிடம் வீரதீரமாகப் பேசிடும் இந்த வித்தகரிடம் இல்லையே, என்ன செய்வது?

ஐந்தாண்டுத் திட்டம் தீட்டவும், தொகை ஒதுக்கவும் அதிகாரம் படைத்தவர் நேரு! இவர், கையேந்தி நின்று, கிடைத்தால் மகிழ்ந்து, இல்லையென்றால் கண்கசக்கிக்கொண்டு வரும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும், ‘பொம்மை’ தானே!

இவர் எனக்கு அறைகூவல் விடுப்பதும், நான் அதனை ஏற்றுக்கொள்வதும் என்ன பலன் அளிக்கும்?

நேரு பண்டிதர், இவ்விதம் கேட்பாரானால், அழைக்கக்கூடத் தேவையில்லை, தென்னாட்டின் அறிஞர் பெருமக்களேகூடி, அருமையான திட்டம் தீட்டுவர். அவர்களில் பலர் ‘தனிநாடு’ என்று பிரிவது தேவையில்லை, என்று எண்ணுபவர்களாக இருக்கலாம்; ஆனால், வடநாடு மிக மிக அதிகமாகத் தொழில்துறையில் முன்னேறிவிட்டது—தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து வேதனை அடைந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே, என்மீது சுடுசொல் வீசியோ, கேலி பேசியோ, அமைச்சர் தமக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலைக் காட்டிக்கொள்ளலாமே தவிர, நாட்டு மக்கள் உள்ளத்திலே கொதித்துக் குழம்பிக்கொண்டுள்ள அதிர்ப்தியை அடக்கிவிட முடியாது.

இந்தச் சூழ்நிலையில், ஆவேசமாகப் பேசுகிறார் என்று நம்பி, யாரார் பாவம் எப்படி எப்படியோ குவித்த பணத்தை இலட்ச இலட்சமாக, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர்களாக நின்று, இழந்துவிட்டு ஏங்கப் போகிறார்களோ!

அப்படிப்பட்ட பணப் பெட்டிகளைத் தேடிச் செல்லும் வேளை இது; எனவேதான் அமைச்சர் ஆர்ப்பரிக்கிறார்; அறைகூவல் விடுகிறார்!

மதுரையில் நான் பேசினபோது; இவ்வளவு எளிதில் முளைவிடும் என்று எண்ணவில்லை; இதோ அமைச்சர் ஆர்ப்பரிக்க வேண்டிய நிலைமை வேகமாக வளர்ந்துவிட்டது.

எனவே தம்பி,

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மோசம் போய்விட்டோம் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலாவது நாம் சரியான, நியாயம் பெறவேண்டும்.

தி. மு. க. 2000 கோடி ரூபாய் தென்னாட்டுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று கேட்கிறது.

நாட்டு மக்களே! இதற்கு உங்கள் ஆதரவு தாருங்கள், என்று இல்லந்தோறும் எடுத்துச் சொல்ல, நாள் தவறாமல் பணியாற்று; பார், பதைக்கிறார், கதைக்கிறார், ‘கனம்’. பலன் அளிக்கிறது நமது பிரசாரம் என்பது தெளிவாகிறது, எனவே, புதிய உற்சாகத்துடன் பணிபுரியலாம், தம்பி, அமைச்சரின் ஆவேசப் பேச்சு அதற்கே பயன்பட வேண்டும்.


23–9–1956

அன்பன்,
அண்ணாதுரை