தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!

கடிதம்: 74

இயற்கை கொஞ்சுகிறது!
இல்லாமை கொட்டுகிறது!!

உழைப்பும் சிக்கனமும்—‘தினமணி’யின் விளக்கம்—தமிழ்நாட்டுத் தொழில் நிலை.

தம்பி!

கடந்த ஒரு திங்களாகத் தமிழகத்தில், மாமழை பொழிந்த வண்ணமிருப்பதனால், இப்போது எங்கு பார்த்தாலும், இயற்கை கொஞ்சுகிறது—ஏரி குளங்களில் எழில் வழிகிறது—வயல் வரப்புகளிலே வண்ணம் காணப்படுகிறது—மரம் செடி கொடிகள் யாவும் பசுமை பொழிகின்றன. பாங்கான காட்சி தெரிகிறது. வரண்டுகிடந்த இடங்கள், வெடித்துக்கிடந்த வயல்கள், தூர்ந்து கிடந்த வாவிகள் வாய்க்கால்கள் எல்லாம் புதுக்கோலம் காட்டி நிற்கின்றன. எங்கள் மாவட்டத்தில், பாலாறுகூட ‘கலகலென’ச் சிரித்துவிட்டது என்றால் பாரேன்!! பத்துப் பதினைந்து ஆண்டுகளாக, ஈரம் காணாது, இருந்த ஏரிகளெல்லாம் இன்று நிரம்பி வழிகின்றன. ‘வெறிச்சென்று’ இருந்துவந்த வெளிகள் பெருமழையால் வெள்ளக்காடாயின; மழை நின்றதும், சதுப்பாகி, இப்போது ஈரம் அழகளிக்கும் தோற்றம் தெரிகிறது. வரண்ட மனதினர் போன்றிருந்து வந்த குன்றுகளே இப்போது வளமளிக்கும் வகை பெற்ற நிலையில் இருக்கின்றன! அடவிகளின் நிலையைக் கூறவா வேண்டும்! நள்ளிரவில், நான் நண்பர்களுடன் கூட்டம் முடித்துக்கொண்டு வருகிறபோது, ‘சலசல’வென்ற ஒலி சூழ்ந்து கேட்கிறது! கதிரவனின் பொன்னிறக் கதிர் கிளம்பியவுடன், இயற்கையின் கோலம் காண்கிறேன்; உண்மையிலேயே இயற்கை கொஞ்சுகிறது. துரைத்தனத்தாரின் அலட்சியப்போக்கின் காரணமாகச் சிற்சில இடங்களில் ‘உடைப்புகளும்’ ‘சேதங்களும்’ ஏற்பட்டுவிட்டன; பட்டிகள் பலவற்றிலே மக்கள் அல்லற்பட நேரிட்டது; எனினும் மொத்தத்திலே, இயற்கை எழிலுடன் காணப்படுகிறது! இந்தப் பேருண்மை தெரியாமலா, ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று மனம் கனிந்து பாடினார் இளங்கோ அடிகள்! வெண்ணிற மேகங்கள், உலவிய வண்ணம் உள்ளன—ஆடலழகிகள் நீலநிறத் திரைகொண்ட அரங்கிலே அன்னமென ஊர்ந்தும், அழகு மயிலென நடந்தும் காட்டும் பான்மைபோல! சூல் கொண்ட மங்கை புது எழில் பெறுதல்போல, மழை முத்துக்களைக் கருவிற்கொண்டு கருநிறம் பெறுகின்றன—காணக் காட்சியாகின்றன—பிறகு, முறையும் நெறியும் மறந்தோரின் பிடியிலே சிக்கிவிட்ட நாட்டவருக்கு நாமேனும் இதம் அளித்திடல் வேண்டுமே என்ற நோக்கு கொண்டதுபோல, இயற்கை தன் அன்பைச் சொரிந்திடக் காண்கிறோம்.

வாரி வாரி இறைக்கிறார்கள் தம்பி, பணத்தை, கோடிக்கணக்கில். கிராமப்புனருத்தாரணம் என்கிறார்கள், தேசீய விஸ்தரிப்புத் திட்டம் என்கிறார்கள், சீரமைப்பு என்று செப்புகிறார்கள், சமாஜப் பணி, மாணவர் சேவை, என்று ஏதேதோ பேசுகின்றனர்—எனினும் இயற்கை மழை பொழிந்தானதும், தம்பி, பல கிராமங்கள் தீவுகளாகிவிடக் காண்கிறோம்—பாதைகள் வாய்க்கால்களாகி விடுகின்றன—கிராமங்கள் சகதிக்காடாகி விடுகின்றன! அந்த இலட்சணத்திலே இருக்கிறது, துரைத்தனம் அமைத்துள்ள பாதைத் தொடர்புகள்! பாலங்கள் ஓலமிடுகின்றன! மழை நீர் ஒழுங்காகச் செல்வதற்கான வழிகால்கள் சரியாக அமைக்காததால், ஆங்காங்கு குப்பை கூள மேடுகள் கிளம்புகின்றன! இத்தனை கேடுபாடுகளையும் நாம் மறந்திடச் செய்யும் விதத்தில், இயற்கை கொஞ்சுகிறது-இன்ப வாழ்வுக்கான வழி அளித்திருக்கிறேன்—வளம் கொழித்திட வகை தந்துவிட்டேன்—மகிழ்ச்சிப் பெருக்கெடுத்திடவேண்டும் என்பதற்காக மாமழை பெய்வித்துள்ளேன், மாந்தரே! காண்மின்! என்மீது குறை ஏதுமில்லை அறிமின்! வாழ்வில் இன்பம் பெறுவதற்குத் தடையாக நான் இல்லை என்பதை உணருமின்! உமக்கு உள்ள கொற்றம், குடிமக்களின் நல்வாழ்வு காணும் குறிக்கோள் கொண்டதாக அமைந்தால், உமக்கு வாழ்வில் இடர் ஏதும் வருவதற்கில்லை. என் கடமையைக் கனிவுடன் செய்துள்ளேன், காண்மின்! அதோ அருவி! இதோ ஏரி, குளம், மடுவு, வாய்க்கால்! எங்கும் பசுமை! வளம்பெறுவதற்கான வாய்ப்புகள்!! — என்று இயற்கை பெருமிதத்துடன் பேசுகிறது!!

ஆமாம், தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, எனினும், இல்லாமை கொட்டுகிறது! என் பயணங்களில் நான் இரண்டையும் காண்கிறேன்! எல்லோரும் இன்புற்று வாழ்வதற்குத் தேவையான அளவு செல்வம் செழித்திடத்தக்க சூழ்நிலையை இயற்கை அளிப்பதும் தெரிகிறது! மிகப் பெரும்பாலான மக்கள், இல்லாமையால் இடர்ப்படுவதும் தெரிகிறது!! இயற்கையின் மீது குற்றம் காண்பதற்கில்லை. நில நடுக்கமேற்பட்டு நாசம் விளைதல், நெருப்பைக் கக்கி நாசம் ஏவுதல் போன்றதேதுமில்லை! வெள்ளச் சேதம் சிற்சில இடங்களில் காண்கிறோம். அரசுக்கு ஆற்றல் இருந்தால் தடுத்து, சேதம் ஏற்படாது செய்திருக்க முடியும் என்பதும் தெரியத்தான் செய்கிறது.

இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது! காரணம் என்ன?

வயலிலே பசுமை தெரிகிறது, உழைப்பாளியின் உடலிலே பசைகாணோம்! இயற்கையின் அழகொளி எங்கும் தெரிகிறது! ஏழையின் கண்களோ இருண்டுதான் உள்ளன, ஒளி இல்லை!

இயற்கை வளமளிப்பதாக இருந்தும், இல்லாமை இந்நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலோரைக் கொட்டுகின்ற இந்த நிலைக்குக் காரணம் யாது, இந்த நிலையினை மாற்றிட வழி என்ன, இந்த வழியினைக் கண்டறிந்து கடமையினைச் செய்து வெற்றிகாணும் பொறுப்பை ஏன் துரைத்தனம் ஏற்றுக்கொள்ளவில்லை, அங்ஙனம் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாத துரைத்தனத்தை, மக்கள் எங்ஙனம் அனுமதித்துள்ளனர், ஏன் சுமந்து கிடக்கின்றனர், என்ற இன்னபிற எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்கும், பயணத்தின் போதெல்லாம்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, சுற்றுப்புறங்களிலிருந்து, பத்து, இருபதுகல் தொலைவிலிருந்தெல்லாம், இளைஞர்கள், இருவர் மூவர் உந்து வண்டிகளில் வந்து குழுமிடக்கண்டு களித்ததுண்டு; இப்போது இலட்சிய ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமல்ல, தம்பி, உழைத்து உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள், தாய்மார்கள் வருகிறார்கள்! கண்டதும் எனக்குக் கவலை குடைகிறது! ஆமாம், கவலைதான்! அவர்கள், உழைப்பின் பெருமையை உற்சாகத்துடன் பேசி வரும் தலைவர்களின் துரைத்தனத்தினால், என்ன கதிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது, கவலை குடையாமலிருக்க முடியுமா! கவனித்தாயா, தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப இருக்கிறது, இருந்தும், இல்லாமை கொட்டுகிறது!

மானும் மயிலும் மட்டுமல்ல, பாம்பும் புலியும் பிறவும் பெறுகின்ற வாழ்க்கை வாய்ப்புகள்கூட, இந்தக் கள்ளமில்லா உள்ளம் படைத்த மக்களுக்கு, துரைத்தனம் அளித்திட மறுக்கிறது. அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது.

பட்டினியும் பசியும், வேலையில்லாக் கொடுமையும் இருந்திடல், அறமல்ல, அந்த அவல நிலையைக்கண்டும் மாற்றிட முனையாத துரைத்தனம், நாகரிகமுள்ளதென்று எவரும் கூறார். இங்கோ இயற்கை அன்பு சொரிகிறது, மக்கள் வியர்வையைக் கொட்டுகிறார்கள். எல்லாம் பதவியில் உள்ளோருக்கும் அவருக்குப் பராக்குக்கூறி வாழ்ந்திடும் செல்வர்களுக்கும் குளித்திடப் பன்னீர் ஆகிறது; உழைத்தும் வாழ்வில் சுகம்காணா மக்கள், கண்ணீர் பொழிகின்றனர்; கண்ணீர்த்துளிக் கட்சி என்று நம்மைக் கேலி செய்வதாக எண்ணிக்கொண்டு சிலர் செப்புகின்றனரல்லவா, இந்த மக்கள், கண்ணீர்த்துளி கட்சி என்றால், அது நம்கட்சி, இனம் இனத்தோடு என்றபடி கண்ணீர் கண்ணீருடன் கலந்து உறவாடலே முறை என்று எண்ணிக்கொண்டனர்போலும்; பல்லாயிரக் கணக்கிலே கூடுகின்றனர்.

ஏத்தாபூர் என்றோர் சிற்றூரில் நான் பேசிக்கொண்டிருந்தேன்—நண்பர் N. V. நடராசன், சென்ற கிழமை முழுவதும், என்னைக் ‘கிட்டி’போட்டு வேலை வாங்குவது என்பார்களே, அதுபோல வேலை வாங்கினார்; செல்லுமிடமெல்லாம், தேர்தல் நிதி திரட்டு, நன்கொடைகள், மேலும் மேலும் கேட்டு வாங்கு, பொதுச்செயலாளர் ஐந்து இலட்சம் கேட்கிறார், நிதிதிரட்டு, உடனே, இங்கேயே, பணம் திரட்டிக்கொடு என்று ‘சிமிட்டா’ கொடுத்தபடி இருந்தார்; நான்கூட குடந்தைக் கூட்டத்தில் சொல்லியும் விட்டேன். N. V. நடராசன் என்பதற்குப் பொருள் என்ன தெரியுமா நண்பர்களே! நன்கொடை வாங்கும் நடராசன் என்பது பொருள்—என்று!

ஏத்தாபூர் கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தபோது, கிராமத்து உழைப்பாளி ஒருவர்—முப்பது வயது இருக்கலாம்—அவர் மேனி உழைப்பால் கருத்து இருந்தது போலவே, அவர் கட்டியிருந்த ஆடை காலத்தால் கருப்பாகிக் கிடந்தது—மேடைக்கு வந்தார்—தேர்தல் நிதி என்றுகூறி, தொகையின் அளவு கூறாமல் பணம் கொடுத்தார்—தம்பி, ஒரு அணா!! ஆமாம்! அவ்வளவுதான் இருந்தது அந்த உத்தமனிடம். அதையேனும் கொடுத்தாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சி இருந்தது அந்தக் கண்ணியவானுக்கு. கனவான்களுக்கு உதிக்க முடியாத கடமை உணர்ச்சி அல்லவா அது! அந்த ஒரு அணாவை, நான் ஒரு இலட்சமாக மதித்து மகிழ்ந்தேன். உபசாரப்பேச்சு அல்ல! அந்த ஒரு அணாவை என்னிடம் கொடுக்கும்போது, நான் அந்த உழைப்பாளியின் முகத்தை நன்றாகக் கவனித்தேன்—இதயம் ஒரு அணுவாக வடிவெடுத்து வந்ததை உணர்ந்தேன். அன்று இரவு பசி நீக்கிக்கொள்ளப் பயன்பட்டிருக்கும், களைப்புப் போக்க தேனீர் அருந்தப் பயன்பட்டிருக்கும், ஆனால் அந்தக் கண்ணியமிக்கவன், நாடு மீளவும் கேடு மாளவும் நான் என்னாலான காணிக்கையை இதோ செலுத்துகிறேன் என்ற எண்ணத்துடன் தருகிறான் ஒரு அணா!

இத்தகைய நல்ல மனம் படைத்தோரெல்லாம், இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப தரப்படுகிறது என்ற நிலை இருந்தும், இல்லாமையால் கொட்டப்படுகிறார்கள்.

இவர்களை ஆளும் காங்கிரஸ் கட்சியினரோ, ஏழைகளை ஈடேற்ற, அவர்களுக்குத் தொழில் தந்து துயர்துடைக்க, ஏற்கனவே இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டுவிட்டார்கள், இன்னும் ஒரு ஆறு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள்!!

உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்களே! உங்களுக்கு உள்ள தரித்திரத்தைப் போக்க, துரைத்தனத்தார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். அறிவீரா? என்று நான் பொதுக்கூட்டங்களில் எடுத்துச்சொல்லிவிட்டு, இவர்களின் முகத்தைப் பார்க்கிறேன்—திகைத்துப் போகிறார்கள் இந்த மக்கள். இரண்டாயிரம் கோடியா! எமக்காகவா! ஏற்கனவே செலவிட்டாகிவிட்டதா? நிஜமாகவா? ஏனய்யா இப்படிக் கேலி செய்கிறீர்! வெந்த புண்ணிலே வெந்தழலைப் போடுகிறீர்! பகல் பட்டினி இராப் பட்டினி என்ற நிலையில் இங்கு நாங்கள் அவதிப்படுகிறோம், எங்களிடம் வந்து இரண்டாயிரம் கோடி ரூபாய் எமக்காகச் செலவிட்டாகிவிட்டதென்று சொல்கிறீர்களே என்று, கேட்பது போலிருக்கிறது அவர்கள் பார்வை!

இந்த இலட்சணத்தில் துரைத்தனத்தை நடத்தும் கட்சியினர் கல்கத்தாவில் கமிட்டி நடத்தி, மக்களுக்குப் புத்திமதி கூறுகின்றனர்! என்ன அறிவுரை அளித்துள்ளனர் அறிவாயோ, தம்பி, கேள்! கேட்டால், கைகொட்டிச் சிரிக்கத் தோன்றும்.

சிக்கனமாக வாழவேண்டும்

செலவைக் குறைத்துக்கொள்ளவேண்டும்

இதுதான், கல்கத்தாவில் சமதர்மச் சீமான்கள் கூடிக் கலந்து பேசித் தயாரித்த புத்திமதி.

வயிறாரச் சோறின்றி, மானமார ஆடையின்றி, குடியிருக்கக் குச்சிலின்றி, நோய் தீர மருந்தின்றி இருக்கிறார்களே இவர்களைப் பார்த்துத்தான் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கனம் என்ற அறிவுரை கூறுகிறார்கள். மிக மிக நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் இதற்கு! இருக்கிறது, இத்தகைய நெஞ்சழுத்தம், சீமான்களுக்கு!

“எப்போதும், உனக்கு இந்தப் பஞ்சப்பாட்டுதான்! சாமி! சாமி! பணம்! பணம்! பணம்! செச்சேச்சே! இப்படியாடா, உயிரை வாங்குவது. கையைப்பிடிப்பது, காலைப்பிடிப்பது, பணத்தை எப்படியாவது, கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்வது; பிறகு கண்ணை மூடிக்கொண்டு, வீண்செலவு செய்வது இதே உனக்கு வழக்கமாகிவிட்டது.” என்று எலும்பு உடையப் பாடுபடும் ஏழை உழவனுக்கு இதோபதேசம் செய்துகொண்டே, வெற்றிலைச் சாறைக் காரித்துப்புகிறாரே, வடபாதி மங்கலத்தார், குன்னியூரார், கோட்டையூரார், கொடிக்காலுடையார், அந்தச் சாற்றிலே, குங்குமப்பூவும் கிராம்பும், ஏலக்காயும் சாதிக்காய் ஜாபத்திரியும், இருக்கிறது, தம்பி! புளித்துப்போன கஞ்சிக்கு, உறைப்புக் குறைந்துபோன மிளகாய்த் துண்டைத் தேடித் தவிக்கும் உழைப்பாளிக்கு, வீண்செலவு செய்யாதே என்று புத்தி கூறுகிறார்கள். கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில், இதே உபதேசம் தரப்பட்டது.

தினமணிக்கே பொறுக்கவில்லை. எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருந்தால், ஆளவந்தார்களின் இருமல் உறுமலைக்கூட இன்னிசை என்று கூறி, கூடச் சேர்ந்து தாளம் தட்டும் தினமணிக்கே கோபம் ஏற்பட்டு, வீண்செலவு செய்யாதீர் என்று ஊராருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டுமய்யா ஊராள்வோரே! முதலில் உங்கள் ஊதாரித்தனத்தைச் சற்றுக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும், என்பதை எண்ணிப்பார், தம்பி.
“பொதுமக்களுக்கு உபதேசம் செய்யும் அநாவசியச் செலவுத் தவிர்ப்பையும் சிக்கனத்தையும், மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்கார்களும் முதலில் தாமே பின்பற்றி பிறருக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும்”

தினமணியின் திருவாசகத்தில் ஒரு துளி இது!

என்ன பொருள் கிடைக்கிறது இதிலிருந்து? ஊதாரித்தனமாகச் செலவிடுகிறது சர்க்கார் என்ற உண்மை. எப்படிப்பட்ட சர்க்கார் இப்படிப்பட்ட ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறது? எம்மை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை. எமக்கு நிகர் யாமே!—என்று தம்பட்டமடிக்கும் கட்சியினர். உலகத்திலேயே உத்தமர் என்று பெயரெடுத்த காந்தியாரால், மாணிக்கங்களாக்கப்பட்ட மண்ணாங்கட்டிகளெல்லாம், தம்மை இயற்கைமாமணிகள் என்று கூறிக்கொள்கின்றன! அவர்தம் ஆட்சியிலே நடைபெறும் ஊதாரித்தனம், தினமணிக்கே பிடிக்கவில்லை; குமட்டலெடுக்கிறது!!

தினமணிக்கு ஏதோ கோபம், அதனால்தான் ‘எதிர்க்கட்சி’ பேசுகிறது, என்று எவரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, மேலும் விளக்கம் அளிக்கிறது, அந்த ஏடு.

“சர்க்கார்களின் முயற்சிகளில் வீண்செலவு அம்சம் ஒரு அளவு இருக்கிறது என்பது உலகமறிந்த விஷயம். தணிக்கைக் கமிட்டிகள் இவற்றை ஒருவாறு புலப்படுத்தியுள்ளன. இவற்றிற்குமேலாக தண்டச் செலவுகளும் இருக்கக்கூடும். ஏராளமான அதிகாரிகளும், கமிட்டிகளும், கோஷ்டிகளும், ஜமாக்களும், ஆலோசனைகளும், அதிகாரிகளின் மகாநாடுகளும், நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அடிபட்டுப் போகவேண்டும். இதில் ஏற்படும் வீண்செலவும் வேலை நஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல.”

தம்பி! இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது! இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ளவர்கள், ‘ஜமாக்கள்’ அமைத்துக்கொண்டு தண்டச்செலவு செய்துகொண்டு இருக்கிறார்கள். இது உலகறிந்த விஷயம் என்று தினமணி கூறுகிறது.

ஒவ்வொரு முறை தணிக்கைக் கமிட்டி தன் கருத்துரையை வழங்கும்போதும், நடைபெற்ற ஊழல்களை இடித்துக்காட்டுகிறது! எனினும், தண்டச் செலவும், தர்பார் போக்கும் துளியும் குறைவது கிடையாது. எதற்கு எடுத்தாலும் ஒரு கமிட்டி! எந்த விஷயத்தைப் பற்றிப் பரிசீலிக்கவும் ஒரு ‘ஜமா’—ஒவ்வொன்றுக்கும் படிச்செலவு! ஒன்றை ஒன்று மிஞ்சும் விதத்தில் செலவு! ஒரு கமிட்டியின் கருத்துக்கு நேர்மாறாக மற்றோர் கமிட்டியின் கருத்து! இந்தவிதமான ஆட்சியைச் செய்துகொண்டு, பணத்தைப் பாழாக்கி வருகிறவர்கள்தான், பாட்டாளிகளுக்கு சிக்கனமாக வாழ்க்கை நடத்துங்கள்! வீண்செலவு செய்யாதீர்கள்! என்று உபதேசம் செய்கிறார்கள். இந்த அபாரமான கண்டுபிடிப்புக்காகக் கல்கத்தாவில் கூடினர்! நாடெங்கும் கொட்டமடித்துக்கிடக்கும் எந்தக் காட்டரசனுக்கும் தெரியுமே இந்த உபதேசம்.

பொதுப்படையாகப் பேசுவது போதாது—சுட்டிக்காட்டியாவது இவர்களைத் திருத்தவேண்டும் என்றுகூடத் தினமணிக்குத் தோன்றி இருக்கிறது. எனவே, துரைத்தனம், எப்படியெப்படி தண்டச் செலவு செய்கிறது என்பதைப் படம்பிடித்துக்காட்டவே முற்பட்டிருக்கிறது.

“ஒரு சிறிய பள்ளிக்கூடத்துக்கு கால்கோல் விழா, சிறிய ஓடைப்பாலத் திறப்புவிழா போன்ற சாதாரண ஸ்தல பணிகளுக்கு மந்திரிகள் அழைக்கப்படுவதும், அநேகமாக எல்லா ஜில்லா அதிகாரிகளும் வரவேண்டியிருப்பதும், சகஜமாகிவிட்டது. இதனால் ஏற்படும் செலவுகள் முற்றிலும் அநாவசியமானவை”

இவ்வளவு பச்சையாக எடுத்துக் காட்டியாவது, திருத்தலாம் என்று தினமணி கருதுகிறது.

அமைச்சர்களுக்குக்கூடச் சிறிதளவு கோபம் உண்டாகும். திண்ணைப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவும், ஓடைப்பால அமைப்பு விழாவுக்கும் நாம் சென்று வீண் செலவிடுகிறோம் என்று தினமணியே கேலிசெய்கிறதே என்று வருத்தமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற ஒவ்வோர் விழாவையும், மக்கள் காண நேரிடும்போது எத்துணை வேதனை அடைகிறார்கள் என்பதை இந்த அமைச்சர்கள் உணர்ந்தால்தானே! எத்தனை எத்தனை வீண் விழாக்கள்! தண்டச் செலவுகள்! எத்தனை கால்கோள் விழாக்கள்! கட்டடம் என்றென்றும் எழுப்பப் போவதில்லை என்பது, ஊராருக்கும் தெரியும், இவர்களும் அறிவார்கள், எனினும் அதற்கும் ஓர் விழா! மக்களைக் காணவும், மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துள்ள புதிய மதிப்பைக் காட்டிக்கொள்ளவும், மாவட்டகலெக்டர் முதற்கொண்டு, தமது ஏவலர்களாகக் கைகட்டி வாய்பொத்தி நிற்பதைக்காட்டவுமன்றே இந்த விழாக்கள் நடக்கின்றன. வீண் விழாக்கள்! தண்டச் செலவு! என்று கண்டிக்கும் இதே தினமணிகள், இந்த விழாக்களின் கோலத்தை விளக்கத் தனி நிருபர்களை அனுப்புவதும், படம்போட்டுப் பாராட்டுவதும் கொஞ்சமா! இப்போது, நாற்றம்தாளமுடியாததாகிவிட்டதால், இந்தத் தண்டச் செலவுகள் ஏன் என்று கேட்டுத்தீரவேண்டி வந்தது இந்த ஏட்டுக்குக்கூட!

“பிறர் நாலணாவில் செய்யக்கூடியதை சர்க்கார் செய்தால் எட்டணா ஆகிறது என்ற பழிச் சொல்லுக்கு இடங்கொடுக்கலாகாது. தாம் தரும் வரிப்பணம் அதிகபட்ச சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுகிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்படவேண்டும்”

என்று ‘இரத்தினச் சுருக்கமாக’ இன்றைய ஆட்சிமுறையின் யோக்யதையைத் தினமணி அம்பலப்படுத்துகிறது.

இன்றுள்ள ஆட்சிமட்டும் காங்கிரஸ் கட்சியுடையதாக இல்லாமலிருந்தால், தினமணியின் எழுத்திலே தீப்பொறி காண்போமே!

ஜஸ்டிஸ் கட்சிக் காலமாக இருந்தால், என்னென்ன எழுதத் தோன்றும், இந்தத் தேசீய ஏடுகளுக்கு!

ஏழை அழுகிறான்; அவனைக் கொள்ளை அடித்துக் கொட்டமடிக்கிறார்கள்.

கமிட்டி கமிட்டி என்று அமைத்துக்கொண்டு, ஏழையின் பணத்தைப் பகற்கொள்ளை அடிக்கிறார்கள்.

திறப்பு விழாவாம்! மூடு விழாவாம்! இதற்கு பணம், கொள்ளை போகிறது!

இந்தத் ‘தூங்குமூஞ்சிகளை’ யார் காண விரும்புகிறார்கள்! எதற்காக இதுகள் விழா நடத்த வரவேண்டும்!

நாலணா செலவுக்கு நாலு ரூபாய் எடுத்துக்கொண்டு, கொழுத்துவிட்டார்கள்!
என்று காரசாரமாக, நடையை நாராசமாக்கி எழுதுவர்! இப்போது தமது சொந்தக்கட்சியே இத்தகைய கேவலமான நடத்தையில் ஈடுபடுவதால், தினமணியால், இப்படியும் அப்படியுமாகத்தான் இடித்துக்காட்ட முடிகிறது. ஆனால், உண்மையை ஊரார் அறிந்து கொள்வதற்கு இவ்வளவே போதும். இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது. அதற்கான காரணத்தில் ஒன்று ஊராளும் பொறுப்பும் வாய்ப்பும் ஒரு ஊதாரிக் கூட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பது. இதனை உணர்ந்துகொள்ள, தினமணியின் கண்டனம் போதுமானதுதான்.

இம் முறையில் ஊதாரித்தனமாக நடந்துகொள்ள எப்படி முடிகிறது? கேட்பதற்கு நாதி இல்லை! தினமணி எழுதுவதுகூட குதிரை பறிபோன பிறகு கொட்டிலைப் பூட்டும் கதை போன்றதுதான். கமிட்டிகள், ஜமாக்கள், விழாக்கள், வீண் செலவுகள், இவை கிளம்பும் போதே, ஆட்சி மன்றத்திலே, கேள்விக் கணைகளைப்பூட்டி, தடுத்து நிறுத்த எதிர்க்கட்சி எங்கே இருக்கிறது? கடிவாளம் இல்லை, குதிரை, காடுமேடு தாவிச் செல்கிறது!! எதிர்க்கட்சி இல்லை, எனவே, ஊரார் பணம் ஊதாரிச் செலவுக்குப் பாழாக்கப்படுகிறது!!

இரண்டாயிரம் கோடி என்ன—இருபதினாயிரம் கோடி செலவானாலும், இப்படிப்பட்ட துரைத்தனம் நடத்துவோரின் தர்பாரில் நாடு சிக்கிக் கிடக்கிறவரையில், இல்லாமை கொட்டத்தான் செய்யும்—இதனைத் தம்பி! அரசியல் விளக்க ஏடுகள் படித்தவர்கள் அறிந்து கொண்டிருப்பதைவிட, நான் காட்டினேனே, ஒரு அணா கொடுத்த உழைப்பாளி, அப்படிப்பட்டவர்கள் மிக நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதானா இரகசியம்? நீங்கள், இல்லாமைக்குக் காரணமாக இருப்பவர்கள் இந்த ஊதாரித்தனமிக்க ஆட்சியாளர்கள் என்பதை எடுத்துரைக்கிறீர்களா—? இதைக் கேட்கத்தான், திரள் திரளாக மக்கள் கூடுகின்றனரா? அப்படியானால், நாங்களும் அதனையேதானே செப்புகிறோம்? உம்மைவிடச் சற்று அதிகமான வீரதீரத்துடன், காரசாரமாகவே சொல்கிறோமே......என்று கேட்கும், மற்ற மற்ற கட்சிகளைக் காண்கிறேன்.

தம்பி! இயற்கை வளமளித்தும், உழைப்பு உற்பத்தி அளித்தும்கூட, இல்லாமை கொட்டுவதற்குக் காரணம், ஆட்சியாளர்களின் ஊதாரித்தனம் மட்டுந்தான் என்று கூறவில்லை. பல காரணங்களிலே இது ஒன்று என்பதை விளங்கிவிட்டு, ஊதாரித்தனமாக நடந்துகொள்ளாதீர்கள், ஊருக்குப் பயந்து ஆட்சி நடத்துங்கள், ஏழையின் வயிறு எரியச் செய்யாதீர்கள், என்று அறிவுரை கூறித் திருத்த முற்பட்டாலும், ஆட்சிக் குழுவினரையேகூட மாற்றி அமைத்தாலும், பலன் கிடைக்காது; ஏனெனில், நந்தம் நாட்டைப் பொறுத்தமட்டில், ஆட்சியிலே வீற்றிருப்போருக்கு, அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் மிகமிகக் குறைவு; ஆட்டிப்படைத்திட டில்லியிலே ஓர் பேரரசு இருக்கிறது, இங்கு உள்ளது, பேருக்குத்தான் அரசு என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறோம்.

இதுபோது காணக்கிடைக்கும் இயற்கை அழகு ஒருபுறம் இருக்கட்டும், தம்பி, திராவிடம் முழுவதும்கூட அல்ல, தமிழகம் வரையிலேயே வேண்டுமானால், பார்க்கச் சொல்லு, பரந்த மனப்பான்மையினரை, என்ன வளம் இங்கு இல்லை? என்ன பொருள் கிடைக்கவில்லை?

தமிழ்நாடு எல்லை, சிதைக்கப்பட்டு, உரிய இடங்கள் பறிக்கப்பட்டுப் போன நிலையிலும், தனி அரசு செலுத்தி மதிப்புடன் வாழ்ந்து வரும் பல சுதந்திர நாடுகளைவிட, அளவிலும் வளத்திலும் பெரிதாகவே இருக்கிறது.

50,170 சதுர மைல் அளவுள்ளது இன்றைய தமிழகம்!

தமிழகத்து மக்கள் தொகை மூன்றுகோடி—இதில் 2,65,46,764 மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

விளைநிலம் மட்டும் 15,878,000 ஏக்கர் உள்ளன என்று புள்ளி விவரத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

விளைநிலம் ஆகத்தக்கதும், இன்று ஆட்சியாளரின் அசட்டையால் கரம்பாகிக் கிடப்பதும் மட்டும் 37 இலட்சம் ஏகருக்கு மேலிருக்கிறதாம்.

காட்டு வளத்துக்கும் குறைவு இல்லை.

விஞ்ஞானத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கனிப்பொருள்கள் ஏராளமாக உள்ளன, பூமிக்கடியிலே தூங்கிக்கிடக்கின்றன!

இன்று புதியமுறை தொழில்களுக்காக,

குரோமைட்

மோனசைட்

சில்மனைட்

கார்னெட்

என்றெல்லாம் கூறுகிறார்களே, அப்பொருள்களும், உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்கத் தக்கதான.

தோரியம்

யுரேனியம்
ஆகியவைகளும் தமிழகத்தில் ஏராளமான அளவுக்குக் கிடைக்கின்றன.

பொன்னும் மணியும் ஒரு நாட்டுக்கு வாழ்வும் வளமும் அளித்திடாது; ஆனால் எந்த நாடும் பொன்னாடு ஆகத்தக்க நிலையை ஏற்படுத்த இரும்பும் நிலக்கரியும் இருக்கவேண்டும். இந்த இரு செல்வங்களையும் தமிழகம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் பாங்கினைப் பாராட்டாத நிபுணர் இல்லை; மிக உயர்தரமானது என்கின்றனர்; கிடைக்கும் அளவும் மிகப்பிரம்மாண்டமானது; பல நூற்றாண்டுகள் கிடைக்குமாம்!

கஞ்சமலை, கோதுமலை, கொல்லிமலை, கொத்தளமலை, பச்சைமலை, பெருமாமலை, தீர்த்தமலை, சித்தேரிமலை ஆகிய இடங்களில், இரும்பு சிறைப்பட்டிருக்கிறது, விழிப்புற்று எழுச்சிபெற்ற தமிழகம் அமையுமானால், தூங்கிக் கிடக்கும் இந்தக் கருப்புத் தங்கத்தை வெட்டிக் கொணர்ந்து, தமிழகத்தைத் தொழிலகமாக்கிச் செழிப்பினைக் காணலாம். சேலம் மாவட்டத்திலே இரும்பு! தென் ஆற்காடு மாவட்டத்திலே நிலக்கரி! சேலத்து இரும்பு 30 கோடி டன் என்கிறார்கள். நெய்வேலி நிலக்கரி 100 சதுரமைல் அளவுக்கு அடைந்து கிடக்கிறதாம், 200 கோடி டன் அளவு நிலக்கரி உள்ளது என்கின்றனர்.

சேலம் சேர்வராயன் மலையில் பாக்சைட், மாக்னசைட், திருச்சி அரியலூர் வட்டாரத்தில் ஜிப்சம், குமரி முனையில் தோரியம்,—தம்பி! காவிரிப் பகுதியில் பெட்ரோலாம்! எந்தெந்தப் பொருள் கிடைக்காமல் நாடு பல திண்டாடுகின்றனவோ, அந்தப் பொருள் யாவும் இங்கு நமக்காக இயற்கை, கட்டிக் காத்து வருகிறாள்—கனிவுடன் அழைக்கிறாள் ஆனால், வெட்டி எடுக்க நமக்கு உரிமை ஏது!

கட்டித் தங்கமடா, மகனே! பலகாலமாக உனக்காக நான் காத்து வந்திருக்கிறேன், வெட்டி எடுத்துக்கொள் என்று வாஞ்சனையுடன் தாய் அழைக்கிறாள், தனயன், “அந்தோ அன்னையே! என் கரம் கட்டுண்டு கிடக்கிறதே!” என்று கண்ணீர் பொழிந்து நிற்கிறான்.

சேலத்து இரும்பு சிறைப்பட்டிருக்கிறது—டாட்டா கம்பெனிக்கு நாம் கப்பம் கட்டுகிறோம்.

நெய்வேலி நிலக்கரி வெளிவர மறுக்கிறது, இங்கு ஏழையின் கும்பி, இல்லாமையால் எரிகிறது! காடு போதும், நாட்டுக்கு செல்வமளிக்க! எனினும் இங்கு நஞ்சை கரம்பாகிறது—கரம்பு கள்ளிகாளான் படரும் இடர்மிகு இடமாகிறது. பச்சை மாமலைகளும், பளிங்கன்ன நீரோடைகளும், இங்கு இருந்தும், பசி! பசி! என்று பதறிக் கதறி, வேலை கிடைக்காததால் வேற்றுச் சீமைகள் சென்று சோற்றுக்கு அலைகிறார்கள், நேற்றுவரையில் நானிலம் போற்றிடத்தக்க நல்லாட்சியில் இருந்தவர்கள்.

கத்துங் கடலில் முத்து எடுத்து கடலகமெனத் தகும் கலம்தனில் ஏறிச்சென்று, காற்றை அடக்கி, யவனம் சென்று வாணிபம் நடத்தி, பொன்னும் புகழும் ஈட்டினர் முன்னோர்.

நாமும் தமிழரே! நாமமதில் தமிழர் என்றாரே, பாரதியார், அந்தத் தமிழர்! நாம், நமது உடன்பிறந்தாரை, மலாய்க் காட்டுக்குத் துரத்திவிட்டிருக்கிறோம்! பர்மாவில் ரப்பர் பால் எடுக்கிறார்கள்—தாயகத்தின் கோலத்தை எண்ணி அழுகின்றனர்! இங்குள்ள ஏழை எளியவர்களோ இல்லாமை கொட்டும்போது, ‘அக்கரை’ சென்றாலாவது அரை வயிறு கஞ்சி நிச்சயமாகுமே, போகலாமா, என்று எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர்.

கட்டழகி, கன்னிப் பருவத்தினள் கலகலெனச் சிரித்தபடி, மணமிகு சந்தனம் குழைத்துப் பூசி, மகிழ்தல் போல பொன்னி எனும் பேரழகி பூரிப்பை அள்ளித் தெளிக்கிறாள். காவேரி தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம், தங்கம்! என்று கவி சுரக்கிறது, அவள் எழிலை எண்ணும்போதே.

செந்நெலைக் கண்டு செங்கமலம் சிரிக்கிறாள்—அன்னம் அதுகண்டு நின்ற நிலையிலன்றோ நீ இருப்பாய், என்போல் குடைந்தாடி மகிழவல்லாயோ என்று கேட்டு, கவர்ச்சியூட்டக் காண்கிறோம்.

கன்னல் விளைகிறது, காரமிக்க மிளகுக் கொடிகள் படருகின்றன!

உலகின் தொழில்துறை பலவற்றுக்கும் தேவையான ரப்பர் விளையும் காடுகள்—மனைக்கும் மரக்கலத்துக்கும் தேவையான தேக்கு—ஓங்கி வளரும் தெங்கும், ஒயிலாகக் காட்சி தரும் கமுகும், என்னென்ன எழில், எத்துணை வளம், எல்லாம் நந்தம் இன்பத் தமிழகத்தில்!

முல்லை மணமும், காட்டிலே விளைந்துள்ள சந்தன மரத்திலே உடலைக் களிறு தேய்ப்பதினாலே எழும் நறுமணமும், தென்றலிற் கூடிக் கலந்து வந்து, தமிழகத்துக்கு என்றோர் தனிமணமல்லவா தருவதாக உளது.

எனினும், வறுமை முடை நாற்றமன்றோ அடித்திடக் காண்கிறோம்.

சந்தன மணத்தைச் சாகடிக்கும் அளவுக்குச் சஞ்சலச் சாக்கடை நாற்றமடிக்கிறது.

இத்தனை இருந்தும் இல்லாமையை விரட்டிட ஓர் மார்க்கமின்றி இடர்ப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம், உள்ளத் தெளிவற்றோர், ஊதாரிகள், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்திடுவோர் பிடியில் ஆட்சி சிக்கிவிட்டது என்பது மட்டுமல்ல, இவர்களின் அதிகாரம் என்பது செல்வர் சிலருக்குச் சுகபோகம் வழங்கிடவும், செல்லரித்துப்போன வாழ்வினர், பெருமூச்சினைச் சிறிது உரத்துக் காட்டினாலே, பிடி! அடி! சுடு! என்று அடக்குமுறை வீசவுமான அளவுக்குத்தான் அமைந்திருக்கிறது!! தமிழகத்தைத் திருநாடு ஆக்கும் திட்டம் தீட்டிச் செயல்படும் உரிமை இவரிடம் இல்லை! மக்களின் வாழ்க்கையில் உள்ள வாட்டத்தை ஓட்டிட, இயற்கை வளத்தையும் மக்களின் உழைப்பின் திறத்தையும் ஒன்று கூட்டிட, அதன் பயனாகக் கிடைக்கும் செல்வத்தைச் சமுதாய உடைமையாக்கிட இவர்கட்கு, உரிமை கிடையாது. எனவே, இயற்கை கொஞ்சியும் இல்லாமை மிஞ்சுகிறது என்றால், அதற்கான காரணங்களிலே மிக முக்கியமானது, இங்கு அமைந்துள்ளது பேருக்குத்தான் அரசு—சிலருடைய பெருமைக்குத்தான் அரசு—உண்மையில் முழு அதிகாரம் படைத்த அரசு அல்ல.

இது பிரசாரம்—தீதான பிரசாரம் என்கின்றனர் டில்லியிடம் வரம் கேட்டு வாங்கி வாழ்க்கையை நடத்தி வருவோர்.

இது குறுகிய மனப்பான்மை, குறை நெளியும் கொள்கை, தவறுள்ள தத்துவம் என்கின்றனர், அகிலமெல்லாம் கட்டி ஆளும் ஆற்றலைப் பெற்றோம் என்ற ஆசைக்குப் பலியானவர்கள்.

அமைச்சர்கள்—அதிலும் அமைச்சர் அனைவருக்கும் ‘வாய்’ அளித்திடும் நிதி அமைச்சர்—டில்லியின் ஆதிக்கம் என்பது அபத்தம் என்று அறைகிறார்.

ஆனால், இவர்களில் ஒவ்வொருவரும், தத்தமது தலையில் குட்டு, எரிச்சல் ஏற்படும் அளவுக்குப் பலமாக விழும்போது, பதறிப்பதறிக் குளற முன் வருகின்றனர்—ஆமாம்! டில்லியிடம் கேட்கவேண்டும்! எம்மிடம் இல்லை! என்று பேசுகின்றனர்.

முதலமைச்சர் காமராஜரே கூடப் பேசுகிறாரே, உயிர் நீத்த உத்தமர் சங்கரலிங்கனாரின், கோரிக்கைகள் 12ல், 10 மத்திய சர்க்காரைப் பொறுத்தது என்று.

அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, டில்லியின் தயவு இருக்கும் வரையில்தான் ‘பதவி பவிசு எல்லாம், டில்லியின் முகம் சிறிதளவு சுளித்திடும் அளவில் இவர்களின் போக்கு இருப்பினும்கூடப் போதும், காஷ்மீரச் சிங்கத்தின் கதிதான்!’

பாகிஸ்தானில் உள்ளவர்கள் உன் இனத்தவராக இருக்கலாம், பழக்க வழக்கத்தால், நடைநொடி பாவனைகளால், அங்கு உள்ளோர் நமது இனத்தவர், என்று தோன்றக் கூடும்—ஆனால் அந்தச் சபலத்துக்கு இடமளித்தால், உமது சுதந்திரம் சுக்குநூறாகும்—என்று அன்பு சொட்டச் சொட்டப் பேசி, காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவை வலையில் போட்டுக்கொண்டு, பாரதம் முழுவதும் உலாவரச்செய்து, அவரைக் கொண்டே ஜனாப் ஜின்னாவை ஏசச்செய்து, பாகிஸ்தானை எதிர்க்கச்செய்து, இவ்வளவுக்குப் பிறகு, அவர் காஷ்மீர் இந்தியாவின் நேசநாடாகமட்டும் இருக்கும், ஆனால் அடிமை நாடு ஆகாது, தனி நாடாகத்தான் இருக்கும் என்று கூறத் துணிந்ததும், அவர் வாயை அடைத்து, கைகாலைக் கட்டி, சிறையில் போட்டுப் பூட்டி, வழக்கும் போடாமல், வாட்டுகிறார்களே! சிங்கத்துக்கே இந்தக் கதி என்றால் சிறுநரிகள் கதி யாதாகும்!! இந்த அச்சம், நமது அமைச்சர்களைப் பிடித்தாட்டுகிறது.

இந்த நிலைமையைத் தம்பி, நாம் ஒவ்வோர் நாளும் கூறுகிறோம், ஒவ்வோர் துறையிலே கிளம்பிடும் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டிக் கூறுகிறோம்.

நமக்கு ஏன் இந்த வம்பு என்று இருக்கும் இயல்பினர் கூட தமக்குத் தனி அக்கரையுள்ளதென்று உள்ள பிரச்சினைகளிலே, டில்லியின் இரும்புக் கரம் அழுத்தமாக விழுகிறபோது, அலறித் துடித்துக் கிளம்புகின்றனர்.

இறக்குமதி ஏற்றுமதி சம்பந்தமாக நீதி கிடைக்கவேண்டும், டில்லியிடம் நீதி கிடைக்கவில்லை, என்று மனம் உறுத்தும்போது வாணிபத்துறையினர், வாய் திறக்கின்றனர். எல்லாம் டில்லியிடமா! ஈதென்ன முறையற்ற செயல்!!—என்று குமுறுகின்றனர்.

தொழில் துவக்குவோர், துவக்கிடும் தொழில் துவண்டிடக் காண்போர், மனம் நொந்த நிலை பெறுகிறபோது, எழுகின்றனர், எல்லா வளமும் வடக்கேதானே! தெற்கை யார் கவனிக்கிறார்கள்? என்று கேட்கின்றனர்.

அவ்வப்பொழுது அனந்தராமகிருஷ்ணன் எனும் தொழிலதிபர், பேசிடக் கேட்கிறோமல்லவா?

அமைச்சர்களேகூடச் சிலவேளைகளில், பேசிவிடுகின்றனர்—பிறகு அஞ்சி ஆமையாகிவிடுகிறார்கள்.

குமாரசாமி ராஜா அவர்கள் குமுறிய உள்ளத்தோடு பேசத் தலைப்பட்டதை, நாடு எங்ஙனம் மறந்துவிடும்! எல்லாம் மத்திய சர்க்காரில் என்று இருக்கும் நிலைமையை எதிர்த்துப் போரிடவேண்டிய காலம் விரைவில் வரும் என்றல்லவா கூறினார்.

தமிழகம், அவர் இந்தத் துறையில் முனைந்து நிற்பாரானால், வாழ்த்தி வரவேற்றிருக்கும், வணங்கி அவர் தலைமையைப் பெற்றிருக்கும்.

கோவையில் கொதித்தெழுந்தவர், பிறகு ஏனோ மெளனமாகிவிட்டார். காலம் கனியவில்லை என்று கருதுகிறாரோ—என்னவோ!

எனினும் அவரவருக்கு முக்கியமானது—உயிர்ப் பிரச்சினை என்று கருதத்தக்க கட்டம் கிளம்பும்போது, அவர்களெல்லாம், டில்லியின் ஆதிக்கம் ஆகாது, கூடாது, பெருந்தீது! என்று பேசுவது காண்கிறோம்.

இவர்களெல்லாம் தொடர்ந்து இந்தக் கருத்தை நாட்டிலே எடுத்துரைத்து, மக்களைப் பக்குவப்படுத்தலாகாதா என்று ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம். பிறகோ அவர்கள், வாய்மூடிடக் கண்டு வாடுகிறோம்; சரி, சரி, இன்னும் இவர்களே பக்குவப்படவில்லை என்றெண்ணிக்கொண்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறோம். ஒரு அணா கொடுத்தானே, உழைப்பாளி, அவன் இதை அறிவான்!! நம்மிடமிருந்து தொடர்ந்து இந்தப் பணியை எதிர்பார்க்கிறான். சோர்வடையாதீர்கள்! என்னால் ஆன உதவியை நான் அளிப்பேன் என்று சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார்கள், இத்தகைய செம்மல்கள். அவர்களை அமைச்சர்கள் அறிவதில்லை.

இந்தியாவிலிருந்து கலைத் தூதுக் குழுவினர் பலர் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்...மக்கள் போற்றி மகிழும் கலைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து தூதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை. ஊர்பேர் தெரியாத யாரோ ஒரு சிலர் தமிழ் நாட்டின் கலைஞராகப் போய்வருகிறார்கள். காரணம் என்ன? மக்களின் மனதை அறிந்து நடக்கும் ஆட்சி இல்லை. மத்திய அரசியலார், பாராளுமன்றத்தில் ஒரு சிலரைமட்டும் நம்புகிறார்கள். அவர்கள் மனம்போல் எல்லாம் நடக்கிறது. மத்திய அரசியலாரின் போக்கை மாற்றவோ திருத்தவோ இங்குள்ள அரசியலார் முன்வருவதில்லை! அச்சம் தடுக்கிறது.

தம்பி! பிரச்சினை, கலைத்துறை பற்றியது—எனினும் என்ன—எந்தத் துறையில் அநீதி காணப்பட்டாலும் அதனைக் கண்டித்துக் களைந்து எறியத்தானே வேண்டும்.

மத்திய அரசியலாரின் போக்கைக் கண்டிக்கிறார்—இதனை மாற்றாது இருக்கும் இங்குள்ள நமது பேர் அரசையும் கண்டிக்கிறார்.

அச்சம் தடுக்கிறது இவர்களை என்றார்.

பயந்தாங்கொள்ளிகள்—தொடை நடுக்கம் கொண்டோர்—கோழைகள்—என்றெல்லாம் அந்த அச்சம் என்பதற்குப் பல பொருளைப் பெறலாம். அச்சம் தடுக்கிறது! என்ன அச்சம்! அதுதான் தம்பி, ஷேக் அப்துல்லா பற்றிச் சொன்னேனே, அந்த அச்சம்தான். பதவியும் பவிசும் போய்விடுமே என்ற அச்சம் — வேறென்ன? போனால் என்ன? மானமன்றோ பெரிது! நாடல்லவா பெரிது! என்று ஒரு அணா கொடுப்போன் கேட்பான்—ஆமாம்—அவனிடம் அணாக்கள் தானே உள்ளன. பதவியில் உள்ளவர்கள், மானத்தை இழந்து விட்டாலும், இலட்சாதிபதியாகிறார்களே—அதிலே அவர்களுக்குத் திருப்தி—பெருமை—பாசம்! ஆசை ஊட்டவும் அச்ச மூட்டவும், டில்லிக்கு முடிகிறது.

டில்லிக்கு இந்த நிலை இருக்கும் வரையில், இங்கு அரசுக் கட்டிலில் அமருவோர் அடங்கி ஒடுங்கி ‘அடைப்பம்’ தாங்குமட்டும் கொலுவிருக்கலாம். ஏனென்று கேட்கத் துணிந்தால், ஷேக் அப்துல்லாவாக வேண்டும். இந்த அச்சம் தடுக்கிறது!

எனவேதான் தம்பி, ஆட்டிப்படைக்கும் டில்லியின் பிடியில் திராவிடம் சிக்கிக் கிடக்கும் நிலைமை ஒழிந்தாக வேண்டும் என்று நாம், கூறுகிறோம்.

தமிழ்நாட்டு மக்களின் பலவகைக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. எல்லைப் பிரச்சினையைத் தமிழ்மக்கள் முன் ஒரு முறை எழுப்பியபோது, “கேட்கத் துணிந்துவிட்டீர்களா? கேட்டால் உள்ளதும் போய்விடும்” என்று செங்கோட்டையை எடுத்துப் பிறருக்குத் தந்தனர். மீண்டும் ஒருமுறை கேட்டபோது “அப்படியா? இன்னும் உங்கள் துணிவு போகவில்லையா? தமிழ்நாடு என்று நாடும் இல்லாமல் செய்துவிடுவோம். தட்சிணப்பிரதேசம் என்று உங்களில் சிலரைக் கொண்டே மாற்றியமைத்துவிடுவோம். எங்களால் முடியும், தெரியுமா?” என்ற மிரட்டலே கிடைத்தது. அமைதியான கிளர்ச்சி ஒன்று நடந்தபோது “இவ்வளவா, தமிழ்நாடு என்ற பெயரும் கிடையாது, போ” என்று விரட்டலே கிடைத்தது.

தெளிவாக, நிலைமை விளக்கப்பட்டிருக்கிறதே, படம் பிடித்துக் காட்டுவது போலிருக்கிறதே, யார் இப்படி விளக்கமாகத் தந்திருப்பவர்—என்று கேட்கத் துடிக்கிறாய் அல்லவா?

தம்பி, மிரட்டல், விரட்டல், என்று கூறியிருப்பது கேட்டு ஆட்சியாளர்கள் மனம் ‘சுருக்’கெனத்தான் தைக்கும். ஆனால், நிலைமை இதுதான். அச்சத்தால், இங்குள்ள அமைச்சர்கள் காலமெலாம் வாயடைத்துத்தான் கிடக்கின்றனர்—எப்போதோ ஓர் சமயமாகிலும், பொதுமக்கள் பொங்கி எழுவது கண்ட பீதியால், எதிர்க்கட்சிகளின் ஏளனம் குத்துவதால், ஓரோர் சமயம் உள்ளமே சுடுவதால் துடித்து எழுந்து, நீதி கேட்கின்றனர். அப்போது டில்லியிடமிருந்து அவர்கட்குக் கிடைப்பது என்ன? மிரட்டல்—விரட்டல்!

ஆமாம், டில்லியின் போக்கையும் இங்குள்ள நம் அமைச்சர்களின் நிலையையும் அழகுபட எடுத்துரைத்துள்ள இவர் யார், என்றுதானே கேட்கிறாய்.

தம்பி, இவர் நமது கழகம் அல்ல. எந்தக் கழகத்தினரும் அல்ல, அரசியல்வாதியே அல்ல.

அப்படியா? அப்படியானால்...யார்......என்று கேட்கிறாய், தெரிகிறது...கேட்டுப்பார், நண்பர்களை, இப்படி, டில்லி—சென்னை நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டுபவர், யார் என்று; நீயே கூடத்தான் கண்டுபிடியேன் பார்க்கலாம். அடுத்த கிழமை நான் அவரை உனக்குக் காட்டுகிறேன்.


18—11—1956

அன்பன்,
அண்ணாதுரை