தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...
கடிதம்: 80
ஓட்டுச்சாவடி போகுமுன்பு...
- பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு—
தமிழர் தாழ்ந்த நிலை—வடக்கின் வளர்ச்சி.
தம்பி!
புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொராஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார்—ஞாயிறன்று!
இந்தத் திருநாளுக்குத் துணை நின்றனர். ஓ. வி. அழகேசன், போன்றோர்.
உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர்.
ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!!
முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது, யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப் பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கள ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல, பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு, மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக்கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்துவந்தார்கள்!பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.
பேச வந்தார் இந்தப் பெரியவர்; ஆமதாபாத்திலே, ஆத்திரமிகுந்த மக்கள், இவர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், மக்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மகானுபாவரே! போதும் உமது பேச்சு! நிறுத்திக்கொள்ளும்! என்று பெருங்கூச்சலிட்டு, இவரைப் பேச விடாமலே தடுத்து விட்டனர். பெரிய கலகம் நேரிட்டது. பல நாள் பட்டினி கிடந்து, பரிதாபத்தை ஊட்டிப்பார்த்தார்; பிறகாவது பேசவிடுவார்கள் என்று, அப்போதும் மக்கள், நீ என்ன மாயா ஜாலம், மகேந்திர ஜாலம் செய்தாலும், அதற்கெல்லாம் மயங்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பேச, மேடை ஏறினார், கலகம்தான் மீண்டும்!
எந்த மாகாணத்தில் இவர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்திலே, வீரர் என்றும் தீரர் என்றும் தியாகி என்றும் கர்மயோகி என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டாரோ, அங்கு இவருடைய பேச்சு, செல்லாக்காசு ஆகிவிட்டது—இவர் வருகிறார் பூவிருந்தவல்லிக்கு!!
பாரததேசம் என்பது ஒன்று—இதிலே வடக்கு என்றும், தெற்கு என்றும், மத்திய சர்க்கார் என்றும், மாநில சர்க்கார் என்றும், இந்த மொழி என்றும், அந்த மொழி என்றும் பேசிப் பிளவு உண்டாக்கக்கூடாது என்று மொரார்ஜி ‘தேசீய மாமந்திரம்’ உபதேசித்தார்; அவருடைய மாகாணத்திலே, அவரை இந்த உபதேசத்தைப் பேசக்கூட விடவில்லை; விரட்டி அடித்தனர், வீறுகொண்ட மக்கள்! அங்கு அல்லற்பட்டவரை அழைத்து வந்து இங்கு விழா நடத்திக் காட்டினார் அமைச்சர் பக்தவத்சலம்!! பரிதாபம்! ஆரம்பமே அழுது வடிவதாக அமைந்தது பற்றி அவருடைய ‘ஆப்த’ நண்பர்களேகூட ஆயாசப்பட்டுக் கொண்டார்களாம்!!
முதலமைச்சருடன் சேர்ந்து மொத்தம் நான்கு மந்திரிகள், தம்பி! டில்லி மந்திரி ஒருவர்—அவர்தான் மொரார்ஜி—குட்டி மந்திரி ஒருவர்—அரியலூர் அழகேசன் அவர்கள்!
எல்லோருமே அன்று வெளுத்து வாங்கிவிட்டார்களாம் போயேன், நமது கழகத்தை,
“கூட்டம் கூடும் அவர்களுக்கு—கும்பகோணம் மாமாங்கத்துக்குக் கூடத்தான் கூடுகிறது”—என்றாராம், ஒரு மேதை!! இவர்களுக்குக் கூட்டம் வராததாலே, இந்தப் பேச்சுப் பேசுகிறார்கள், வெட்கமின்றி; பிறருக்குப் பெரிய கூட்டம் கூடினால், ‘மாமாங்கக் கூட்டம்’ என்று கேலி பேசுகிறார்களே, இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!!—என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.
நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் ‘வாந்தி’ போலத்தான்- நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், “கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது” என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்து கிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி ஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!
மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி—வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்-அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சாவன் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை!
- சம்யுத்த மராட்டியம் வேண்டும்!
சாவன், திரும்பிப்போ!
என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று!
- இது சரியா?
இது முறையா?
இது தேசீயம் ஆகுமா?
என்றெல்லாம் சாவன், இறைஞ்சுகிறார்-மராட்டிய மக்களோ,
- எமது உரிமையை இழக்கமாட்டோம்!
எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்!
என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால், போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர்களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சாவன் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை!
இந்த ‘பம்பாய்’ மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான் பூவிருந்தவல்லியிலே ‘ஒற்றுமை’- ‘தேசீயம்’ என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார்,—ஆங்கிலத்தில்; அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார்.
வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப்பற்று, ஏதுமற்று ‘பாரதம்’ என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம் நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோ வேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர்.
எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! ‘கண் கண்ட கடவுள்’ என்றும் ‘பார் புகழ் தலைவர்’ என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள்.
அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில், அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20-நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை!
- எங்கள் உரிமை
எங்கள் குஜராத்!
வங்கமும்—பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசீய — இதுவன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசிகூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன?
கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர்—டாக்டர் ராய்மீது! அவர் ‘தேசீய ஒற்றுமை’ பேசித்தான் பார்த்தார்! “நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!” என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது! எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், ‘இணைப்பு’ எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர்—டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்—“தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?” என்றார். ‘எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம்’, என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை, அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு. இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர்.
இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசீயக் காலட்சேபம் செய்கிறார்கள்!
விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு,
- வாழ்வாவது மாயம்
செல்வம் ஒரு பிசாசு
என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள்—வேறென்ன!
தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில்,
- வெறுக்கத்தக்க பலாத்காரத்தை,
கண்டிக்கத்தக்க காலித்தனத்தை,
புகுத்துகிறார்கள்!
இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்கவில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்!
நேருபண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம், அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது!
இந்த இலட்சணத்திலே, மொரார்ஜிபாயை அழைத்துக்கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு ‘தேசீய’ பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது?
நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், ‘இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர்களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திவிட முடியாது’ என்பதனை. காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ ‘தேசீய ஒற்றுமை’ என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் எண்ணிக்கொண்டு வேதனைப்படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்றுவிடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! ‘தேசீயம்’ பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களேயன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள்.
எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன் என்ற ஓர் உணர்ச்சி இன்றும் மகிழத்தக்க அளவுக்கும், நம்பிக்கை தரத்தக்க வகையிலும், மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால், தம்பி! இந்த உணர்ச்சியைப் பெற, எத்தனை எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு பெரும் பெரும் அறிவாளர்கள், என்னென்ன வகையினாலே பணியாற்றினர், தெரியுமா! அவ்வளவையும் அரை நூற்றாண்டில் அழித்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டனரே, அதிலேதான் தவறு இருக்கிறதே தவிர, நம்மீது என்ன குற்றம்?
‘சிலம்பு ஒலிக்கவில்லை, சிந்தாமணி மின்னிடவில்லை, அகம் இல்லை, புறம் இல்லை, தொல்காப்பியம் ஏதுமில்லை’ எனினும், குஜராத்தி தன் மொழிக்கு ஏற்றமும், உரிய இடமும், தனித்தன்மையும், இவைதமைக் கெடுத்திடாத தனிக் கொற்றமும் தேவை என்று கேட்கலாமாம், கேட்பதுடன் கேடுபல நேரிடுமே என்றுகூட எண்ணிடாமல், அமைச்சர்களை விரட்டலாமாம், அமளி பலவற்றினை மூட்டிவிடலாமாம், இங்கு நாம் மட்டும், அருந்தமிழ் மரபு காத்திட ‘உம்’மென்றாலும் ‘இம்’மென்றாலும் தேசீயம் கெடுமாம், பாரதீயம் பாழ்படுமாம், நாடு நலியுமாம்! என்ன அறிவீனம்!! என்று சீறிக் கேட்பதா? என்னே உமது ஓரவஞ்சனை? என்று, துக்கத்துடன் கேட்பதா? நம்மை எவ்வளவு, ஏதுமறியாதார், இனப்பற்று இல்லாதார், மரபு காத்திடும் வழி அறியாதார், என்று எண்ணிக் கொண்டிருந்தால், மொரார்ஜிகளைக் கொண்டுவந்து இங்கு பேசச் சொல்வார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி, எண்ணச் சொல்லிப் பார், காங்கிரஸ் நண்பர்களை.
பூவிருந்தவல்லியிலே மொரார்ஜி வந்து பேசிவிட்டுச் சென்றார்; என் மாநிலத்திலேகூட இந்த அளவுக்கு எனக்கு மதிப்பளிப்பார் இல்லை, இங்கு என் புகழ்க்கொடி சிறப்புறப் பறக்கிறது என்றுகூட மகிழ்ந்திருக்கக்கூடும்; ஆனால் இங்கு அவர்—“தமிழ், என் மொழி! தாய் மொழி! தமிழ் நாடு! தனி நாடு என்றெல்லாம் பேசுவது தீது, தவறு, தேசீயமாகாது” என்றெல்லாம் பேசினாரே, அதுபோல, பக்தவத்சலனாரை குஜராத்திலே சென்று பேசச் சொல்லு, பார்ப்போம்; அழகேசரை ஆமதாபாத் போகச் சொல்லு; காமராஜரை பூனா போய், “மராட்டிய மக்களே! ஏன் உங்கள் மதி இப்படிக் கெட்டுவிட்டது!” என்று கேட்கச் சொல்லு. பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், இவர்கள் தலைதப்புவது கஷ்டமாகிவிடும்! ஆமாம். தம்பி, அந்த அளவுக்கு அங்கெல்லாம் உரிமை உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது! இங்குதான், அபிசீனிய மன்னர் வரலாம், அகவல் எதுக்கு, ஆங்கிலப் பாடல் போதாதோ என்று பேசலாம், தலாய்லாமா வரலாம், திருவாசகம் எதுக்கு எமது திருப்பாதம் வீழ்ந்து வணங்கினால் போதாதோ என்று வினவலாம், தாழ்ந்து கிடக்கும் இந்தத் தமிழகத்திலேதான், தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தமிழகத்திலேதான், உலகின் எந்தக் கோடியிலிருந்தும் எந்த வகையான தலைவரும் வரலாம், தமிழரின் மரபினை இகழலாம், தமிழரைக் கண்டித்துரைக்கலாம்; அதற்கு அவர் தமக்கு மாலையிட்டு மகிழ்விக்க, போற்றிப் புகழ்ந்திட, இங்கு பக்தவத்சலனார் படை வரிசை இருக்கிறது! வேறெங்கும் இந்நிலை வரவிடமாட்டார்கள்! ஏதுமற்ற நிலையைக்கூடப் பொறுத்துக்கொள்வர், எவர் வேண்டுமாயினும் எதைவேண்டுமானாலும் கூறிடும் இழிநிலைக்கு மட்டும் இடமளிக்கமாட்டார்கள்! பிச்சை எடுப்போன்கூடத் தம்பி, இல்லை போ! என்றால் ஏக்கத்துடன் சென்றிடுவான். மச்சு வீடுடையோனாயினும் அவனைப் பார்த்து, “ஏ! பிச்சைக்காரப் பயலே!” என்று பேசினால், எச்சிற் பண்டத்தைப் போட்டு வைத்திருக்கும் குவளையால் அடித்துவிட்டுக் கூறுவான், “மச்சு வீடு என்றுமே உனக்கு நிலை என்ற எண்ணமோ, நானும் எனக்கென்று ஓர் ‘குச்சி’ இருந்து அதிலே வாழ்ந்தவன் தான்! ஏன் உனக்கு இந்த வாய்த்துடுக்கு?” என்று கோபத்துடன் கேட்பான். போலீஸ் சுற்றியபடி இருப்பதால், இன்று மச்சு வீட்டுக்காரனுக்கு இது நேரிடாதிருக்கிறது!! தம்பி! அதனினும் இழிந்த நிலையிலன்றோ நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். சர்க்கசில் காண்கிறோமே, காட்டரசனாம் சிங்கத்தைக் கூட்டிலே நிற்கச் செய்து, அதன் முதுகின்மீது ஆட்டுக்குட்டியைச் ‘சவாரி’ செய்ய வைக்கிறானல்லவா, கரத்திலே துப்பாக்கி வைத்திருக்கும் ‘கரடி’ வித்தைக்காரன்! அதுபோலத்தான் தமிழக நிலைமை இருந்திடக் காண்கிறோம்!! அதுபோன்ற நிலைமை என்றால்கூடப் போதாது; இங்கு ‘ஆடு’ வீரம் பேசிட, அரிமா அடக்க ஒடுக்கமாக அதனைக் கேட்டுத் தீரவேண்டி இருக்கிறது.
மொரார்ஜிகள் பேசும்போது, மரபு மறவாத தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற எண்ணம்தானே ஏற்பட்டிருக்கமுடியும்!! தேர்தலுக்கு எப்படி இது பயன்படப் போகிறது!!
‘இந்தியா’ ஒன்று, என்று நமக்காகப் பேசிடும், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட, குட்டும், குத்தும் வலி தருமளவுக்கு ஏற்படுகிறபோது, என்ன பேசுகிறார்கள் என்பதை நாடு மறந்தா போய்விட்டது! எத்தனை எத்தனை முறை குமுறி இருக்கிறார்கள், இவர்கள் தம் நாத்தழும்பேறப் பேசுகிறார்களே ‘தேசியம்’, அது, அப்போதெல்லாம் ஏன் மறைந்துபடுகிறது?’
டில்லி பாராளுமன்றத்திலேயே டாக்டர் லங்காசுந்தரம் என்பார், “அரசியல் அதிகாரம் அனைத்தும் வடநாட்டிலேயே குவிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசுகிறார்; 1955 டிசம்பர் 14-ல்!
பொருள் என்ன இதற்கு? இத்தனைக்கும் இந்த டாக்டர்கள், நம்மை எல்லாம், நாட்டைப் பிடித்தாட்டும் ‘நோய்’ என்று கூசாது பேசுபவர்கள்! அவர் போன்றாருக்கே பொறுக்கவில்லை, வடக்கே எல்லா அதிகாரங்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை.
‘சென்னை சர்க்கார் அமைத்த ஆலோசனைக் குழுவே’ 1955 மே 30-ல்,
- “பெரும் தொழில்களைப் பொறுத்த மட்டில் சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது”
என்று அறிவித்தது. ஏன், இந்த அழுகுரல்?
- புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
என்ற உண்மையையும் கூறுகிறது அந்தக் குழு; அதனால் நாடு வருந்துகிறது, வருந்தவேண்டும், என்ற எண்ணத்தையும், விளக்கிட,
- வருந்தத்தக்க
என்றும், எழுதுகிறது! ‘தேசியம்’ எங்கே ஓடிவிட்டது, இதுபோலக் கேட்கும்போது? இங்கே பெரிய தொழில்கள் இல்லையே என்ற கவலை குடைவானேன்? வருத்தம் பிறப்பானேன்? எங்கே இருந்தால் என்ன என்ற வேதாந்தம் ஏன் பிறக்கவில்லை! ஏன், புறக்கணிக்கப்பட்டு விட்டதே என்ற துக்கம் துளைக்கிறது! அந்த உணர்ச்சி உங்கள் உள்ளத்திலே சுரக்கும் போதெல்லாம், அருமைக் காங்கிரஸ் அன்பர்களே! நீவிர் அனைவரும், தி. மு. க. ஆகிறீர்கள்! பிறகு, பதவி, வேறு பக்கம் அழைக்கிறது, மோசம் போகிறீர்கள், மொரார்ஜீயை அழைக்கிறீர்கள்.
சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் 1955-ல் கூறிவிட்டு, இப்போது தேர்தலில் ஓட்டு பறிப்பதற்காக, நீங்களே, தாரை தப்பட்டையுடன் கிளம்பி, தமிழாவது தெலுங்காவது, வடக்காவது தெற்காவது எல்லாம் அபத்தம், தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்யுரை, என்று பேசுகிறீர்களே, எதையும் ஆய்ந்தறியும் திறனும், முன்பின் பேச்சுகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணும் போக்கும் கொண்ட மக்கள், உமது புரட்டினைக் கண்டுகொள்ள மாட்டார்களா? என்று கேட்டால், காங்கிரசின் பெருந்தலைவர்கள் கூறும் பதில், “அவ்வளவு அறிவுத் தெளிவு உள்ளவர்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள்” என்பதுதான்.
தம்பி! நம் நாட்டுப் பாமர மக்களைக் காங்கிரசார், எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம், எதைச் சொல்லியும் நம்பவைக்கலாம், என்று மனப்பால் குடிக்கிறார்கள். மக்கள் இதோ, நான் புட்டுப் புட்டுக் காட்டுவதுபோலப் பிரச்சினைகளை அலசி ஆராயாமலிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையை ஒரு நொடியில் உணர்ந்துகொள்ளும் திறன் இருக்கிறது; காங்கிரஸ் தலைவர்களின் புரட்டினை, மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; நமது பிரசாரம் இதனைப் பலப்படுத்துகிறது!! மொரார்ஜீக்கள் வருவதாலே, இந்த நம் பணி குந்தகப்பட்டுவிடாது!!
வடநாட்டிலிருந்து இங்கு மொரார்ஜிகள், அடிக்கடி வந்தபடி இருப்பதையும், அவர்கள் வருகிற போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், வணங்கி வரவேற்று, வரம் கேட்டுப் பெறுவதையும் காணும் தமிழக மக்கள், அந்த நாட்களில் இங்குவந்த வெலிங்டன், கோஷன், எர்ஸ்கின் போன்ற துரைமார்களிடம் எப்படி இளித்துப்பேசி இனிப்புப் பண்டம் பெற்றார்களோ சீமான்கள், சிற்றரசர்கள், மிட்டா மிராசுகள், அதே செயலைத்தான், இப்போது பக்தவத்சலங்கள், மொரார்ஜிகள் வருகிறபோது செய்கிறார்கள், முறை மாறவில்லை, ஆள்மட்டும்தான் மாறியிருக்கிறது என்பதையா தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.
‘ஓட்டு’ வாங்குவதற்காக, தம்பி, காங்கிரஸ் பிரசாரகர்கள், ஐந்தாண்டுத் திட்டச் சாதனைகளைப் பேசுகிறார்களல்லவா! எல்லாப் பேச்சாளர்களுமல்ல, மிகச் சிலரே, அந்தச் சிரமத்தை எடுத்துக்கொள்வர்—பெரும்பாலானவர், நம்மை ஏசிவிட்டாலே போதும், என்று எண்ணிக்கொள்கிறார்கள்—உண்மையிலேயே சிலருக்கு, மிகக் காரமாக நம்மை ஏசுவதால் ஏற்படும் நாக்கெரிச்சலே வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச இடமளிக்காது—நான் இந்தப் போக்குக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடத்தக்க இரண்டொருவரைக் கூறுகிறேன்—அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்திலே பெற்ற அரிய வெற்றிகளைக் கூறி, ஓட்டு கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள். மக்கள், அதைக் கேட்கும்போது உள்ளபடி திகைக்கிறார்கள். பெருமைப்படத்தக்க, மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன; நாடு, நலிவு போக்கிக் கொண்டது; எல்லோருக்கும் இன்பவாழ்வுக்கு வழி ஏற்பட்டுவிட்டது; என்றெல்லாம் பேசும்போது, மக்கள் தம்மைச் சூழ இருக்கிற வறுமையைப் பார்க்கிறார்கள்; தமது சொந்த வாழ்விலே கப்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப் பார்க்கிறார்கள்; என்ன அதிசயம், இது! ஐந்தாண்டுத் திட்டத்தின் அரிய வெற்றியாலே பாலும் தேனும் ஓடுவதாகச் சொல்கிறார், இந்தப் பாழும் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; நாம் பார்க்கும்போது, பழங்கலமும் அதிலே உள்ள பழஞ்சோறும், அதிலே நெளியும் பூச்சிப் புழுவும் தெரிகிறது! இவர், ஏதோ, இங்கு வளம் கொஞ்சுவதாகக் கூறுகிறாரே! எங்கே அந்த வளம்? யாருக்குப் பயன்படுகிறது அந்த வளம்! என்றுதான், எண்ணித் திகைக்கிறார்கள்.
ஐந்தாண்டுத் திட்டத்திலே அரிய வெற்றிகள் ஏற்படவே இல்லையா? என்று கேட்டால், ஏற்பட்டது! எப்படி ஏற்படாமலிருக்கும், இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கும்போது! ஆனால், நமது கேள்வி, நாட்டு மக்களின் கேள்வி, அதனால் ஏற்பட்ட பலன், யாரை வாழ வைத்திருக்கிறது என்பதுதான்! இதற்கு மொரார்ஜிகள் தரக்கூடிய பதில் என்ன? இதோ என்னிடம் உள்ள பட்டியல்! நீயும் படித்துப் பார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்
- 1. நந்திகொண்டா
2. கோசி
3. காக்ராபர்
4. ஹரிகே
5. துங்கபத்ரா
6. (டி. வி. சி.) தாமோதர்
7. கோய்னா
8. ஹிராகூட்
9. பக்ரா—நங்கல்
10. ரீகண்டு
11. மயூராட்சி
12. சாம்பால்
13. பத்ரா
14. கட்டபிரபா
15. தூத்வா
16. கீழ் பவானி
17. மச்சகந்த் - 18. சாரதா
19. ஜோக்
20. மாஹி
21. காந்தி சாகர்.
- 1. நந்திகொண்டா
இவைகளெல்லாம் முதல் ஐந்தாண்டுத் திட்ட வெற்றிகள்.
இவைகளில், இங்கு பலன் தந்திருப்பது, எத்தனை என்று கேட்டுப் பார், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கணக்கு கேள், வடக்கே உள்ளவை எத்தனை? செலவிடப்பட்ட தொகை எத்தனை? என்று கணக்குக் காட்டச் சொல்லு. பிறகு ஓட்டுச்சாவடிக்குப் போகட்டும் மக்கள்!
“நீயும் நானும் ஒற்றுமையாக இருக்கலாம்! உன் கைக் கடியாரத்தை என்னிடம் கொடுத்துவை! உனக்குத் தேவைப்படும்போது, நான் மணி பார்த்துச் சொல்லுகிறேன்”—என்று பாரிஸ் பட்டினத்து எத்தன் ஒருவன் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மொரார்ஜிகளும், அவர்களின் அடிதாங்கி, அரசியலில் இலாபம் தேடுவோரும், பேசும் ‘ஒற்றுமை’ இதுபோன்றதுதான், வேறில்லை!
நாடு இதனை, மெள்ள மெள்ள அறிந்துகொண்டு வருகிறது; தேர்லின்போது மேலும் தெளிவு ஏற்படப்போகிறது! நிச்சயமாக!!
- தொழில் வளர்ச்சித் திட்டங்களில் தென்னிந்தியா இந்தியப் பேரரசால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.
என்று, சென்ற ஆண்டு ஜூலையில் மைசூர் சட்டசபையில், மைசூர் தொழில் மந்திரி, சென்ன பாசப்பா பேசி இருக்கிறார்.
இவர் என்ன, ஓட்டுக்கேட்க வரும், தி. மு. கழகமா? அல்லவே!!
நாடு, எண்ணிப்பார்த்திடவே செய்யாதா? எண்ணிப் பார்த்திடும்படி செய்யும் பணியினைத்தானே நாம், மேற்கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தேர்தலில் நாம் வெற்றி பெறுவது இருக்கிறது.
நாடெங்கும், வீடெங்கும், இந்தப் பேச்சு எழவேண்டும்; அதை ஆக்கித் தரும் பணிதான், தம்பி, உன்னிடம் நான் எதிர்பார்க்கிறேன்.தாயும் மகனும்
மகன் : எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாயே, ஏனம்மா?
தாய் : மகனே! என்னடா செய்வது, உன் அப்பாவுக்கு இன்னமும் ஒரு வேலை கிடைக்கவில்லையே! அந்த வேதனைதான்!
மகன் : அப்பா, ஏனம்மா வேலைக்குப் போகாமலிருக்கிறார்?
தாய் : வேலை கிடைக்கவில்லையடா மகனே!
மகன் : போம்மா! அப்பா ஏமாற்றுகிறார்! வேலைதான் நிறைய கிடைக்கிறதாமே!
தாய் : யாரடா அப்பா, சொன்னது?
மகன் : நேற்று, கூட்டத்திலே ஒரு மந்திரி சொன்னார், அம்மா! ஐந்தாண்டுத் திட்டம் போட்டார்களாம்—நாடு சுபிட்சமாகிவிட்டதாம்—வேலை எல்லோருக்கும் கிடைக்கிறதாம்.
தாய் : காங்கிரஸ் கூட்டமாடா மகனே!
மகன் : ஆமம்மா!
தாய் : அங்கு அப்படித்தான் மகனே! பொய்யை மளமளவென்று கொட்டுவார்கள்...சுபிட்சமாகிவிட்டதாமா, நாடு...நம் வீட்டைப் பார்த்தால் தெரியவில்லையா இலட்சணம்! வேலையா கிடைக்கிறது, வேலை! யாருக்கு? இந்தக் காங்கிரசுக்குப் பக்கமேளம் அடிக்கிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது! அதுவும் என்ன வேலை? இவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற வேலை! வயிற்றெரிச்சலை ஏண்டா மகனே, கிளப்புகிறாய்...
மகன் : ஏம்மா, அப்படியானா, பொய்யா பேசறாங்க...
தாய் : எலக்ஷன் வருதடா, மகனே! அதனாலே, மக்களை ஏமாளியாக்கி ஓட்டு வாங்க அதுபோலப் பேசுகிறார்கள்.
மகன் : நான் ஒரு சின்னப் பொய் பேசினா, காதைப் பிடித்துக் கிள்ளி, கன்னத்திலே அறைகிறே...!
தாய் : போடா, குறும்புக்காரா!...
மகன் : காங்கிரஸ்காரர், நாடு சீர்பட்டுவிட்டது, எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டது என்று பொய்யை வாரி வாரி வீசறாங்க...அவங்களை, என்ன செய்தே...?தாய் : என்ன செய்தேனா...தேர்தல் வருது...மகனே! அப்போதுதானே, அவங்களுக்குப் புத்தி புகட்ட வேணும்...பார், அப்போது...
மகன் : ஆமாம்மா! பெரிய மனுஷருங்க பொய் பேசுகிற போது, புத்தி சொல்லாமே விட்டுவிட்டா என்னைப்போல சின்னப் பசங்கக்கூடக் கெட்டுப் போயிடுவாங்கம்மா...
தாய் : ஆமாண்டா, மகனே! இப்படிப் பொய்யைப் பேசி ஜனங்களை ஏமாத்துகிற காங்கிரசுக்கு மறுபடியும் ஓட்டுப் போட்டா, நாடே கெட்டுப்போகும். நான் மட்டுமில்லடா, நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம், எதிர் வீட்டுத் தாத்தா, கோடிவீட்டுக் குப்பி, நம்ம மாமன் வீடு, எல்லோருமே இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறோம்...
மகன் : நான்கூட அம்மா, யாராரைப் பார்க்கிறேனோ, அவங்களிடமெல்லாம், இதைத்தான் சொல்லப்போகிறேன்.
தம்பி! எண்ணற்ற இல்லங்களிலே, இதுபோன்ற உரையாடல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.
எது பற்றியும் கவலைகொள்ளாத இல்லங்கள், நம்மால் என்ன ஆகும் என்று எண்ணும் இல்லங்கள், இவைகளில் எல்லாம்கூட, இதுபோன்ற உரையாடல்கள் எழச் செய்யவேண்டிய பொறுப்பு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஓட்டுச் சாவடி போகுமுன்பு, நாட்டு மக்கள், எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்திடக்தக்க முறையிலே, ஏசுவோருக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே இடமேற்படாத முறையில், இனிய எளிய, பிறரிடம் பகை காட்டாத தன்மையில், தம்பி, நீ அறிந்துள்ள உண்மைகளை, மக்களுக்கு எடுத்துக் கூறு, அதுபோதும்; ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் முகாமிட்டுள்ள காங்கிரஸ் நம்மை ஒன்றும் செய்துவிடாது! நாட்டு மக்கள், மீண்டும் ஓர் முறை, கேட்டினை மூட்டிவிடும் காங்கிரசைக் கட்டி அணைத்திட மாட்டார்கள்! அவர்கள், பட்டது போதும் என்ற நிலையில் உள்ளனர். ஓட்டுச்சாவடி போகுமுன்பு நாட்டு மக்களிடம் நிலைமையைக் கவனப்படுத்தினால், போதும்; நாம் மகிழத்தக்க பலன், நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு!!
30—12—1956.
அன்பன்,
அண்ணாதுரை
அறிஞர்
அண்ணாவின் நூல்கள்
- தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்—(முதற் பகுதி)
- தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்—(இரண்டாம் பகுதி)
- தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்—(மூன்றாம் பகுதி)
- தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்—(நான்காம் பகுதி)
- கைதி எண் — 6 3 4 2
- பார்வதி பி.ஏ.
- ரங்கோன் ராதா
- மாஜிக் கடவுள்கள்
- காதல் ஜோதி
- ஓர் இரவு
- அண்ணாவின் சொற் செல்வம்
★
பாரி நிலையம்
184, பிராட்வே :: சென்னை - 1
Jacket Printed at Neo Art Press, Madras-14