தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!
கடிதம்: 64
சந்தனம் அரைத்த கரம்!
விருந்தும் வரவேற்பும்—திட்ட ஊழல்—ஏழை துயரம்.
தம்பி!
ஒரு ஓலைக்கொத்துக் குடிசைக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கும், அவலச் சுவைமிக்க சம்பவம் கூறுகிறேன், கேள். மாட மாளிகைகளிலே நடைபெறும் சம்பவமாக இருந்தால், கேட்கத் தித்திக்கும், இது...? என்று எண்ணி, அலட்சியமாக இருந்து விடாதே, பலப்பல ஆயிரம் குடிசைகள் பாடுபட்டால்தான் ஒரு மாளிகை; கவனமிருக்கட்டும்.
“கையைத் தூக்கவே முடியவில்லை. ஒரே குத்தல், குடைச்சல். நானும் எப்படி எப்படியோ சமாளித்துப் பார்க்கிறேன், முடியல்லே...பிராணனை வாட்டுது...”
“பாரடி அம்மா, உங்க அப்பன், சுளுக்குக்கு இந்தக் கூச்சல் போடறதை! கை சுளுக்கிக்கிட்டுதாம், அதுக்கு உசிரு போகுது, தாளமுடியல்லேன்னு ஒரே அமக்களம் பண்ணுற கூத்தைப் பாரு...”
“பெரிய கிராதகிடி, நீ. நான் என்ன, துடியாத் துடிக்கறேன். மூணுநாளா நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு, நோவை பொறுத்துக்கிட்டு இருந்தேன்—என்னாலேயும் வலி தாளமுடியாததாலே கூச்சல் போடறனே தவிர, வேணும்னு வேஷமாப் போடறேன்...”
“இருக்கும்மா! அப்பா எப்பவும், எப்படிப்பட்ட வலியையும் பொறுத்துக்கிட்டு இருப்பவராச்சே. பாவம்! என்னமா வலிக்குதோ என்னமோ...”
“அவ மனம், துளியாவது பதறுதான்னு பாரேன் பொண்ணு, இவளுக்கு மண்டைக்குத்தல் வந்துவிட்டா, போடற கூச்சலிலே, ஊரே திரண்டு வந்தூடும்...”
“சும்மா இருங்க...எந்தக் கை வலிக்குது...சோத்துக் கையா...? எந்த இடத்திலே...? தோள்பட்டையாண்டையா? முதுகுப்பக்கமாகக்கூட வலிக்குதா...? சுளுக்குத்தான்...வேறே ஒண்ணும் இல்லை...”
“எலும்பு கிலும்பு முறிஞ்சி போயிருக்குமா, இம்மாம் வலி இருக்குதே!...”
“ஏம்பா! பச்சிலை வைத்யரண்டை போய்க் காட்டினா, நல்லதாச்சே...”
“அடி ஏண்டி, பச்சிலையும் உலர்ந்த இலையும்...நீ போயி நம்ம கொல்லைமேட்டுக் கொளத்தாங்கரையிலே, களிமண்ணு இருக்கு பாரு, அது ஒரு நாலு கை கொண்டா...”
“களிமண்ணு, சஞ்சீவியாச்சே! சுளுக்கு, பிடிப்பு, வீக்கம், இதுக்கெல்லாம், களிமண்ணை குழைச்சி வலிக்கிற இடத்திலே தடவினா, அது உலர உலர, வலி இருக்கற இடம் தெரியாமேப் போயிடும்...”
“வெறும் களிமண்ணா?”
“ஆமாம்; நீ போடி; உங்க அப்பாவுக்கு எதுலேயும் நம்பிக்கை இருக்காது. களிமண்ணு போட்டுகிட்டு வலியைக் கொஞ்சம் பல்லைக்கடிச்சிகிட்டு பொறுத்துகிட்டு, ராப்பொழுது ஓட்டிவிட்டா, பொழுது விடிஞ்சதும் சுளுக்கு சொல்லாமே கொள்ளாமே ஓடிப்போயிடும்...”
“எம் புள்ளே! நெஜமாத்தான் சொல்றியா? இல்லை, என்னைச் சும்மா அலங்கோலம் பண்ணவேணும்னு எண்ணமா?”
“அம்மா! விளையாட்டுத்தனமா எதாச்சும் செய்துட்டு வலி, அதிகமாயிடப்போகுது...”“ஆமாம், எனக்கு வயசு அஞ்சு, நான் விளையாடறேன். ...அடி, ஏண்டி! அந்த ஆகாவழியோட கூடிகிட்டு, கதை பேசறே, போயி களிமண்ணு கொண்டுவா...வரவழிலே, எருக்கம் செடி இருக்கும், பத்து இலையும் கிள்ளிகிட்டுவா...”
“எருக்கம் பால் தடவினா புண்ணாயிடும்னு சொல்லுவாங்களே...”
“கொழந்தைப் புள்ளெக்குக் கூடத் தடவலாம். புண்ணு ஏன் ஆவுது? போடி, இருட்டிவிட்டா, அந்தப் பக்கம், கன்னிம்மா கோயில் சர்ப்பம் உலாத்தும்...”
“ஆமாம் பொண்ணு, பார்த்துப்போ...”
“அது என்ன பண்ணும்? கன்னிம்மா! கன்னிம்மான்னு மூணு தடவை சொன்னா, மாயமா மறைஞ்சிடும்...”
“எதுக்கும் ஜாக்கிரதை வேணும். போயிட்டு சுருக்கா, வாம்மா. என்ன இழவெடுத்த சுளுக்கோ தெரியல்லே, உசிரை வாட்டுது...”
களிமண் தடவி, நோய், நொடியிலே போய்விடும் என்று உபசாரம் பேசி, அவனை அன்றிரவு உறங்கவைக்க, தாயும் மகளும் வெகுபாடு பட்டனர். காலையில் எழுந்ததும், வலி அதிகமாயிற்றே தவிர குறையவில்லை.
‘அப்ப இது, நோய் அல்ல; கன்னியம்மா குத்தம்’ என்று தீர்ப்பளித்துவிட்டு, கோயில் சுற்றக் கிளம்பிவிட்டாள் கோவிந்தம்மா. கந்தப்பன், வேலைக்குப் போகமுடியாதே, என்ன கோபம் செய்துகொள்வார்களோ, வேறு ஆளை வைத்து விடுவார்களோ என்று பயந்தான். ஆனால் என்ன செய்வது, இப்படிப் பயந்து பயந்துதான், வலி இருக்கும்போதே அதைப் பொருட்படுத்தாமல், மூன்று நாட்களாக வேலைக்குச் சென்று, வலியை அதிகமாக்கிக்கொண்டான்.
என்று ஒரு குரலும், அதற்கு ஆதரவாக,
சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவைகளுக்குப் பச்சிலைத் தைலம் தடவிக் குணப்படுத்தும் பரம்பரை ராஜ வைத்யர் ராமண்ணா வீட்டில் இல்லை. அன்று செந்திலாண்டவன் கோயிலில் முருகனுக்குச் ‘சந்தனக் காப்பு’ உற்சவம், பிரமாதம், அதைத் தரிசிக்கப்போயிருந்தார் வைத்தியர்.
முருகனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் தடபுடலாக நடைபெற்றது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்டுகளித்தனர்.
மேளம், வாணவேடிக்கை எல்லாம், செலவு பற்றிய கவலையற்ற முறையில், ஏற்பாடாகி இருந்தது.
‘சந்தனக்காப்பு’ சேவை முடிந்ததும், சந்தனம் பக்தர்களுக்குத் தரப்பட்டது—விலைகொடுத்து அல்ல, காணிக்கை செலுத்தி, சந்தனம் பெற்றுக்கொண்டனர்.
அத்தரும் பன்னீரும், அரகஜாவும் பிறவும் கலந்துதான் பார், என் செந்திலாண்டவன்மீது அப்பப்பட்ட சந்தனத்துக்கு உள்ள மணம், இருக்கிறதா என்று பார்! இருக்கவே இருக்காது! சந்தனக் காப்பு முடிந்ததும், தனியாக ஒரு தெய்வீக மணம், சந்தனத்துக்கு ஏற்பட்டுவிடுகிறது! மல்லிகை முல்லை, மருவு மருக்கொழுந்து, ரோஜா மகிழம்பூ, மனோரஞ்சிதம், எனும் புஷ்பங்களிலே எல்லாம் கிடைக்கும் ‘வாசனை’ அவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டது போலிருக்கும். செந்திலாண்டவன் கோயில் சந்தனக்காப்பு உற்சவம் என்றால், தேசமுழுவதும் தெரியும்—என்றெல்லாம் பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
எலுமிச்சை அளவு, விளாங்காய் அளவு, குண்டுமணி அளவு, உருத்திராட்சைக் கொட்டை அளவு, இப்படிப் பக்தர்கள் அவரவர் செலுத்தும் காணிக்கைக்குத் தக்கபடி, சந்தனப் பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
தெய்வீக மணம் பொருந்தியது என்று நம்பப்பட்ட இந்தச் சந்தனம் முழுவதும், குடிசையிலே குமுறிக்கொண்டிருக்கிறானே கந்தப்பன், அவன் அரைத்தெடுத்துக் கொடுத்தது!
செந்திலாண்டவன் கோயிலில், சந்தனம் அரைத்துக் கொடுக்கும் ‘ஊழியக்காரன்’ இந்தக் கந்தப்பன்.
பல ஊர்களிலிருந்தும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், பகவத் பிரசாதம் என்று பயபக்தியுடன் காணிக்கை செலுத்திப் பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட சந்தனம், இந்தக் கந்தப்பன், கைவலிக்க வலிக்க அரைத்தெடுத்துக் கொடுத்தது.
சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு, கந்தப்பன், இரவு பகலாகச் சந்தனம் அரைத்தெடுத்துக் கொடுத்துத்தான், கை சுளுக்கிக்கொண்டுவிட்டது.
மார்பில் பூசிக்கொண்டும், நெற்றியில் பொட்டாக வைத்துக்கொண்டும், சந்தனம் ‘கமகம வென்று இருப்பது குறித்துக் களிப்புடன் பேகிறார்கள், பக்தர்கள்!’
கன்னத்தில் தடவி மகிழ்பவரும், மார்பிலே பூசிக்கொண்டு மந்தகாசமாக இருப்போரும், மாளிகைகளிலே உள்ளனர்.
உண்ட ருசியான பண்டம் ‘ஜீரணம்’ ஆவதற்காகப் பூசிச்கொண்டு முருகா! கடம்பா! கந்தா! வடிவேலா!—என்று கூறிப் புரண்டுகொண்டிருக்கிறார்கள், சில பக்தர்கள். கோயில் அர்ச்சகர், தனக்கு வேண்டியவாளுக்காகப் பிரத்யேகமாக, வெள்ளி வட்டிலில் சந்தனத்தை வழித்தெடுத்துவைத்திருக்கிறார்; வத்சலாவோ சபலாவோ, அபரஞ்சிதமோ அம்சாவோ, அதன் மணம் பெற்று மகிழப் போகிறார்கள்.
காட்டில் கிடைக்கும் மரம்—அதிலே கவர்ச்சியூட்டும் மணம்!—அரைத்தெடுத்திட உழைப்பாளிக்கு முடிகிறது. சீமான்களின் மாளிகையாக இருந்தால்கூட கந்தப்பன், இவ்வளவு கடினமாக உழைத்திருக்கமாட்டான்; கைசுளுக்கு ஏற்பட்டிருந்திராது. செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அரைத்துக் கொடுப்பது என்பது ‘புண்ய காரியம்’ என்பது அவனுக்குக் கூறப்பட்டது.
“கேவலம் கூலிக்காக, சோற்றுக்காகவாடா, கந்தப்பா நீ வேலை செய்கிறாய்? சகல சித்திகளையும் அருளவல்ல, முருகப்பெருமானுக்கு நீ செய்யும் கைங்கரியம் இது—ஊழியக்காரனல்ல நீ. பக்தன்! தெரிகிறதா! எனவே, கஷ்டத்தைப் பாராதே, காசு எவ்வளவு தருவார்கள் என்று கேளாதே, பகவானுக்கு நாம் சேவை செய்கிறோம் என்ற எண்ணத்தோடு வேலை செய், வேல்முருகன், உனக்குத் தக்க சமயத்தில் தக்க விதமாக அருள்பாலிப்பார், என்று திருப்புகழ் பஜனைக் கூடத்தாரும், கோயில் தர்மகர்த்தாவும் கூறினர்; அவர்களெல்லாம் மெத்தப்படித்தவர்கள், அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை கந்தப்பனுக்கு. எனவேதான், கை தழும்பேறியதைக் கவனியாமல், சுளுக்கு ஏற்பட்டு உயிர் துடிக்கும் விதமான வலி உண்டாகும் அளவுக்கு, சந்தன அரைப்பு வேலையைச் செய்திருக்கிறான்.
முருகனுக்குச் சந்தனக் காப்பு நடைபெற்றது, சன்னதியே நறுமணம் பெற்றது.
பக்தர்கள் சந்தனப் பிரசாதம் பெற்றனர்—மகிழ்ந்தனர். கோயில் நிருவாகத்தினர், வரவு செலவு கணக்குப் பார்த்தனர். நல்ல ஆதாயம், எனவே, மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு. அவர்களின் இல்லங்களிலெல்லாம் சந்தன மணம் கமழ்ந்தது! கந்தப்பன் வீட்டிலேயோ, எருக்கம்பால் வாடை மூக்கைத் துளைத்தது. கந்தப்பன் அரைத்துக் கொடுத்த கலவைச் சந்தனம், பலருடைய உடலுக்கு அழகும் மணமும் அளித்தது கந்தப்பன் உடலில், களிமண் பூசப்பட்டிருக்கிறது. எருக்கம்பால், தடவி இருக்கிறார்கள்; மூதாட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள், “இதெல்லாம் எதுக்கு? பசுமாட்டுச் சாணியைக் கொதிக்கவைத்துத் தடவு, நோய் பட்டுன்னு விட்டுப்போகுது” பாரு என்று.
இந்திய சர்க்காருக்கும் தம்பி, மக்கள், கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, கைசுளுக்குக்கு எருக்கம்பால் தேடிடும் கந்தப்பன் போல, தங்கள் வாழ்க்கை வசதிக்கு, தகுந்த அளவும் வகையும் பொருள் கிடைக்காமல், திண்டாடித் தேம்புகிறார்கள்.
சந்தனம் அரைத்துக் கொடுத்ததால் உண்டான வலி தீர்ந்தால் போதும் என்ற நிலையில், கந்தப்பன் இருப்பதுபோல, நாளுக்கு நாள் ஏறிப் பாரமாகிக்கொண்டு வரும் வரித்தொல்லையைத் தாங்குவதற்காவது வலிவு வேண்டுமே, அதை எப்படிப் பெறுவது என்று, ஏழை மக்கள் ஏங்கித் தவித்துக் கிடக்கிறார்கள்.
சந்தனக் காப்பு உற்சவம், பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும் என்று பக்தர்கள் பரவசத்துடன் கூறுவதுபோல, இந்திய சர்க்கார், மந்திரிகளின் கௌரவம் உயர்த்தப்படுவதற்கும், மதிப்பு பெருகுவதற்கும் செலவிடும் தொகையையும் வகையையும் கண்டால், சுயராஜ்யத்தின் ‘சுந்தர சொரூபம்’ தெரிகிறது என்று தெந்தினம் பாடிடப் பலர் உளர்.
“கேவலம் கூலிக்காகப் பாடுபடுவதாக எண்ணிக்கொள்ளாதே, இது பகவத் கைங்கரியம், எனவே ‘விசுவாசத்துடன்’ சேவை செய்ய வேண்டும்” என்று கந்தப்பனுக்கு உபதேசிக்கப்படுவது போலவே, “அன்னிய ஆட்சியின்போது, வரி கொடுக்க, உங்கட்கு, மனக்கசப்பும் கொதிப்பும் இருப்பது சகஜம்; இப்போது அப்படி இருக்கக் கூடாது; இது சுயராஜ்யம்; எனவே முகத்தைச் சுளிக்காமல் பாரம் என்று குமுறாமல், முடியவில்லையே என்று கூறிக் கண் கசக்கிக்கொள்ளாமல், கேட்கும் வரிப்பணத்தைக் கொடுக்கவேண்டும்; அதுதான் தர்மம் தேசபக்தி” என்று உபதேசிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், உரத்த குரலில் பேசுகிறார்கள்.
களிமண் தடவினால் வலிபோகுமா, எருக்கம் பாலடித்தால் சுளுக்கு நீங்குமா என்று கந்தப்பன் பரதவிப்பது போலவே, என்னென்ன பாடுபட்டால் பிழைக்கலாம், எந்தெந்தத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம், என்னென்ன துணைத் தொழில்கள் தேடிடலாம், கூடை முடைவோமா, கோழி வளர்ப்போமா, கொல்லன் பட்டரையில் வேலை செய்வோமா, என்ன செய்தால், நமக்கு இன்னும் ஒரு கவளம் கிடைக்கும் என்று ஏக்கத்துடன் எண்ணி எண்ணி, ‘போதாமை’யால் தாக்குண்டு கிடக்கிறான், ஏழை! அவனுக்குப் போதிக்கப்படும் தேசீயமோ, குமுறாமல் கொடு, குறை கூறாமல் கொடு, வரியாகக் கொடு, கடனாகக்கொடு, நகைக்குச் செலவிடாதே, ‘நல்லது பொல்லதுக்கு’ என்று பணத்தை வீணாக்காதே, நாங்கள் அடிக்கடி கடன் கேட்போம், உன் கடமை என்று எண்ணிக்கொண்டு கழுத்துத் தாலியில் உள்ள குண்டுமணிப் பொன்னாக இருந்தாலும், எடுத்துக் கொடு, தேசபக்தன் என்ற கீர்த்தி உனக்குக்கிட்டும்—என்று பிரசாரகர்கள் பேசுகிறார்கள்.
கந்தப்பன், கையைத் தூக்கமுடியவில்லையே, என்று கதறிக் கிடக்கிறான்.
வாழ்வு சுமையாகிவிட்டது, தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
செந்திலாண்டவனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் ‘சம்பிரமமாக’ நடைபெறுகிறது; சவுதி அரேபியா சுற்றுப் பயணத்துக்காக நேரு பெருமகனார் தம் ‘ஜமா’வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறார். அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்து ஒரு திங்கள் ஆகிறது, இதற்குமேல் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. சவுதி அரேபிய மன்னரின் விருந்தினராகிறார்! அன்றலர்ந்தரோஜா தினமும் விமானமூலம் நேருவுக்குக் கொண்டு வந்து தர ஏற்பாடாம். சவுதி அரேபிய மன்னரின் இரம்மியமான ஒரு அரண்மனையில் நேரு துரை மகனார் தங்கி இருக்க ஏற்பாடு! நேருவுக்குப் பிரியமான உணவு வகைகளைச் சமைத்திட, இங்கிருந்தே திறமையான சமயற்காரர்கள்! சவுதி அரேபிய மன்னர், கோடீஸ்வரர்! அவருடைய விருந்தினராகத் தங்கி இருக்கும் நாட்களில், ரோஜாவின் மணமும் ராஜோபசாரமும், சலாமிட்டு நிற்கும் பணியாட்களின் குழைவும், சர்வதேச நிலைமை பற்றிய பேச்சும், நேருவுக்கு மனச் சந்துஷ்டி அளிக்கும்; மகனைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கிவிட்டு மாரடித்து அழுதுகொண்டிருக்கும், தாய்மார்களின் கதறல் அல்லவா அவருக்கு இங்கு காது குடையும் அளவுக்குக் கிடைக்கிறது! கண்ணீர்க்குண்டு வீச்சினால் கிளம்பும் புகையும், பிணவாடையும், நாள் தவறாமல் இங்கு! எப்படி நேரு பெருமகனார் இந்தக் ‘கண்றா’விக் காட்சியைக் காண்பது! நிம்மதி இராதே! இதற்கோ அவர் இந்தியாவின் முடிசூடா மன்னரானார்! மோதிலாலின் திருக்குமாரன், தங்கத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாமே!
கண்ணே! கண்வளராய்
கட்டிக்கரும்பே! கண்வளராய்
என்று தாலாட்டுப்பாடித் தாதியர் தொட்டிலாட்டியிருப்பர். அப்படி வளர்ந்த ஆனந்த பவனத்தாருக்கு, இங்கு, ஐயோ! அப்பா! அம்மவோ! என்ற அலறலும் கதறலும், எப்படி இனிப்பளிக்கும்? எனவே சவுதி அரேபியா செல்கிறார்! பன்னீரில் குளிக்கலாம், பரிமளகந்தம் பூசலாம், சிரித்திடும் ரோஜாவையும் புன்னகை பூத்திடும் இராஜதந்திரிகளையும் கண்டுகளிக்கலாம். தேன் பாகிலே பதமாக்கப்பட்ட பேரீச்சம்பழமும், கனிச்சாறும் அவருக்கு, மொழி வழி அரசு, எல்லைத் தொல்லை என்பன போன்றவைகளால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்க உதவக்கூடும்.
மறந்தே போனேனே தம்பி, இந்தியாவின் மதிப்பு உயரும்!!
இதனாலா? இங்கு மக்கள் இல்லாமையில் இடர்ப்பட்டுக்கொண்டு கிடக்கும்போது, இவர் சவுதி அரேபியா சென்று இராஜோபசாரம் பெறுவதாலா இந்தியாவின் மதிப்பு உயரும்? என்று—உனக்குக் கேட்கத் தோன்றும்! அப்படித்தான் அவர்கள் சொல்லுகிறார்கள், நம்பாதவனைத் தேசத் துரோகி என்று ஏசுகிறார்கள்.
“என்ன சந்தனக் காப்பு உற்சவமோ! கைசுளுக்கு என் பிராணனை வாட்டுது இப்படி வலி எடுக்கும் அளவுக்கு நான் அரைத்தெடுத்த சந்தனந்தானய்யா அது” என்று செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அரைத்திடும் கந்தப்பன் சொன்னால், சும்மா விடுவார்களா! செந்திலாண்டவன்கூட அல்ல, அங்கு வரும் காவடி தூக்கியும், காவிகட்டியும், மொட்டையும் பிறவுமன்றோ, கந்தப்பன்மீது வசைபொழியும்!
சவுதி அரேபியாவோடு நின்று விடுவதா, நேரு பவனி.
நேருபவனி ஒரு நீண்ட தொடர்கதை...
அமெரிக்கா அழைக்கிறது, ஆஸ்திரேலியாவில் அலுவல் இருக்கிறது, எங்குதான் செல்லக்கூடாது! செல்கிறார்!!
இதற்காகச் செலவாகும் தொகையை எமக்குச் செலவிட்டால்கூடப் போதுமே, புளித்தகூழுக்கு ஒரு துண்டு காரமிளகாயாவது கிடைக்குமே! என்று கேட்பர் இந்தப் பஞ்சைகள்.
பஞ்சைகள் எப்போதும் எந்த நாட்டிலும் இப்படித்தான் கேட்பது வாடிக்கை; பவனிவரும் ஆட்சியாளர் குறுநகை புரிந்தபடி, “குறைமதியினரே! வீணாக ஏதேதோ கூறிக் கிடக்கின்றீரே! பவனியால், எமக்கா இன்பம்? நாட்டின் மதிப்பன்றோ உயருகிறது” என்று பேசுவதும் வழக்கம்!
பொறுமையின் எல்லைக்குப் பஞ்சைகள் சென்று முகட்டின் மீது நிற்பர். மேலால் செல்ல வழி இருக்காது. பிறகுதான் திரும்பிப்பார்த்திடுவர். தம்பி! அப்படித் திரும்பிப் பார்த்திடும் போதுதான், ‘பஞ்சடைந்த கண்களிலே கனல் கக்கும், புழுவும் போரிடும்’ என்ற நிலைபிறக்கும்.
அது, இப்போது, உடனடியாக நடைபெறக் கூடியதா, என்ன? எனவே, வீண் பீதிக்கு இடமளிக்காமல், நேரு பெருமகனார், சந்தனக் காப்பு உற்சவத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
தம்பி! எப்படிப்பட்ட எழில் மிக்க நாட்டிலே இருக்கிறாய் தெரியுமா என்று, எந்த ஏழையைக் கேட்டாலும், அவன் ஒரு விளக்கமற்ற பார்வையால் நம்மைத் திகைக்கவைப்பான்.
இமயப் பனிமலையின் எழிலும் கங்கை புரண்டோடும் கவர்ச்சியும், காதல் மாளிகையாம் தாஜ்மஹாலின் தகத்தகாயமும், குதுப்மினாரின் கெம்பீரமும் அஜந்தா சித்திரமும், விஜயநகர சாம்ராஜ்யச் சேதக்குவியலும், மாமல்லபுரத்துச் சிற்பங்களும், குமரிமுனைக் கோலமும் அவன் எங்கே கண்டான்? எங்ஙனம் காண்பான்? இதோ வருகிறார்கள். இந்த எழில் கண்டு மகிழவும், இவை தம் ஏற்றத்தை எடுத்துரைக்கும் பிரமுகர்களுடன் அளவளாவவும், இந்த நாட்டுக் கலை கல்லிலே வடித்துக்காட்டப்பட்டது மட்டுமல்ல, காவலர்களே! கல்லிலே நீவிர்கண்ட குமரியை, அஜந்தா சித்திரத்திலே உங்களை வசீகரித்துக்கொண்ட அந்த வளைவு, குழைவு, நெளிவுகளை, இதோ உங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடச்செய்யும் வகையில் எடுத்துக்காட்டும், மாலாக்களையும் பாலாக்களையும் குமரிகளையும் தேவிகளையும் காணீர். அவர்கள் கரத்தால் கமலம் காட்டுவர், கண்ணால் கடலைக் காட்டுவர், வெறும் ஆடலல்ல அன்பரீர்! கேவலம் இச்சையைக் கிளறும் அங்க அசைவுகளல்ல! இவை ஆன்ம சுத்திக்காகவே எமது ஆன்றோர் அளித்துச் சென்ற ‘கலோபாசனை’—கலைமூலம் கடவுளைப் பூஜிப்பதாகும்!—என்று கூறுவர்.
இந்த உபசாரம், உலா, பெறுவதற்கு இப்போது தூர இருக்கும் தலைவர்களின் பட்டியல், தற்காலிகமானது, தருகிறேன், பார், கந்தப்பன் கரத்திலே சுளுக்கு இருந்தால் என்ன, சந்தனக்காப்பு சம்பிரமாக நடைபெறுகிறதே அந்தச் சம்பவம் நினைவிற்கு வரும்.
எதியோபிய சக்கிரவர்த்தி
இந்தோனேசியத் தலைவர் டாக்டர் சுகர்ணோ
போலந்து முதலமைச்சர்
தாய்லந்து முதலமைச்சர்
சிரியா நாட்டுத் தலைவர்
இலங்கை முதலமைச்சர்
நேபாள நாட்டு முதலமைச்சர்
இவர்களெல்லாம் ‘விஜயம்’ செய்ய இருக்கிறார்கள்!
விருந்து, வேட்டை, கேளிக்கை, கண்காட்சி, இடையிடையே சர்வதேச நிலைமை பற்றியும் பேசுவர்!
ஒவ்வொருவருக்கும், குடியரசுத் தலைவர் விருந்தளிப்பார். குடியரசுத் தலைவருக்கு அவர்கள் ஒவ்வொருவரும் விருந்தளிப்பர்! முதலமைச்சர் ஒவ்வொருவருக்கும் விருந்தளிப்பார், ஒவ்வொருவரும் முதலமைச்சருக்கு விருந்தளிப்பர்; எல்லா விருந்துகளிலும் நளினிகளின் நடனம் உண்டு! எல்லாம் கந்தப்பன் அரைத்தெடுத்த கலவைச் சந்தனம் தம்பி, அவன் கைக்கு எருக்கம்பாலடித்து, களிமண் பூச்சுத் தடவிவிடப்பட்டிருக்கிறது!
ஒரே அடியாக உன் அண்ணன், எரிந்து விழுகிறான், நாங்களெல்லாங்கூட வருத்தப்படக்கூடிய விதமாகப் பெரும் பொருள் இப்படிப்பட்ட விருந்து, உபசாரம், உலா, உற்சவம், ஆகியவற்றுக்குச் செலவாகி விரயமாகிறது. ஆனால் எல்லாப் பணமும் இதற்கே பாழாகிவிடுவதுபோல எடுத்துக் கூறுவது, சரியல்ல; வாழ்வும் வளமும் தரத்தக்க எத்துணையோ நல்ல திட்டங்களுக்குப் பணம் செலவிடப்படுகிறது, என்று தம்பி! காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும்.
அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது என்பதையும், அந்தப் பொல்லாத மனிதர், கவர்னர் குமாரசாமிராஜா சென்ற கிழமை எடுத்துக் காட்டிவிட்டார்.
பிரம்மாண்டமான பணவிரயம்—வீண்செலவு!—என்று குமாரசாமிராஜா கூறுகிறார்.
‘பத்துக்கோடி ரூபாய் செலவில் இங்கு கட்டப்படுகிறது, பவானிசாகர்! மிகப் பிரமாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வரும் தாமோதர் திட்டத்தை நான் பார்த்தேன்-அங்கு பிரம்மாண்டமான பண விரயம் நடந்துகொண்டிருக்கிறது’-என்று, சென்ற கிழமை கோவையில் கூறினார்.
அஞ்சா நெஞ்சும், நேர்மைத் திறனும் கொண்டிருந்தாலொழிய, இவ்வளவு வெளிப்படையாக, இந்திய சர்க்காரின் திறமைக் குறைவை, ஊதாரித்தனத்தை, கண்டித்திருக்க முடியாது.
இந்திய சர்க்காரின் நிர்வாகத்தைக் கண்டிப்பது என்றால் நேருவைக் கண்டிப்பது என்று பொருள்! நேருவுக்கோ யாராவது ஒரு சிறுசொல் கூறிவிட்டாலும் கண் சிவந்துவிடும். நேரு புருவத்தை நெரித்தால், எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும் எதிர்காலம் இருண்டுவிடும்!
இவை தெரிந்தும், உள்ள நிலையை எடுத்துக் கூறத்தான் வேண்டும் என்ற வீரத்தைக் காட்டிய, குமாரசாமிராஜாவைப் பாராட்டாதவர்கள், பண்பற்றோரே!கவர்னர் பதவி என்பது காந்திகோயிலில் பஜனை செய்வதற்கும் கலா பவனத்தில் காட்சி காண்பதற்கும் மட்டுமே உள்ள ‘பொழுதுபோக்கு’ என்று கருதாமல், நாட்டவருக்கு உண்மையை நடுக்கமின்றி எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பும் கவர்னருக்கு உண்டு என்ற தூய நோக்குடன், குமாரசாமிராஜா பேசினார்.
எங்கள் பக்கம் அணைகட்டுவதற்கு, செலவு சற்று அதிகம்தான் பிடிக்கும்—உங்கள் பகுதியில் கிடைப்பதுபோன்ற கற்கள் இங்கு கிடைப்பதில்லை, எனவே இங்கு சிறிது பணம் அதிகமாகச் செலவாகிறது என்று, திட்ட அலுவலக அதிகாரி சமாதானம் கூறுகிறார். குமாரசாமிராஜா அவர்கள் பல உண்மைகளைத் தமது ‘இரத்னச் சுருக்கமான’ பேச்சிலே வெளியிட்டிருக்கிறார்; முப்பது ஆண்டுகள் இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி இதமாக எடுத்துச் சொன்னாலும், இதுபோன்ற அஞ்சா நெஞ்சுடன் நம்ம காமராஜர் பெரிய இடத்தின் போக்கைக் கண்டித்துப் பேசும் அஞ்சாமையைப் பெறுவாரா என்பதும் சந்தேகமே!
1. இங்கு செலவாவதைவிட வடக்கே, பணம் அதிகம் செலவாகிறது.
2. செலவு செய்யப்படும் முறை, வீண் விரயத்துக்கு இடமளிக்கிறது.
3. அனாவசியமாக அதிகமான அளவு மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவை, திட்டம் அமுல் செய்யப்படுவதுபற்றி, நேரில் கண்டறிந்தவர், பொறுப்பான பதவியில் அமர்ந்திருப்பவர், கூறுவன.
வடக்கு என்பதற்காகவே, ஏதாவது வம்பும் தும்பும் பேசும் வட்டாரமல்ல.
தேர்தல் ஆசை பிடித்துக்கொண்டதால், பேசும் பேர்வழியுமல்ல!!
பணம் விரயம் ஆவதை மட்டுமல்ல, அவர் சுட்டிக்காட்டி இருப்பது.
தாமோதர் திட்டத்தில் தேவையைவிட அதிகத் தொகை செலவிடப்படுகிறது என்பது மட்டுந்தான் ராஜாவின் மனக்குறை என்றால், உயரிடத்தில் அமர்ந்துள்ள அவர், இதனை, நேருவிடம் ஜாடை மாடையாகக் கூறினாலே போதும். ஆனால் ‘ராஜா’—கோவைப் பொதுக்கூட்டத்தில் தொழிலதிபர்களும், துரைத்தனத்தாரும் கூடியிருந்த மன்றத்தில் எடுத்துப்பேசி இருக்கிறார்.
திட்டங்களைச் சிக்கனமாகச் செலவிட்டு முடிக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகப் பேசினதாக யாராவது கருதிக்கொண்டு, தமது பேச்சின் சூட்சமத்தை அறியாது போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தினால் உந்தப்பட்ட நிலையில், ராஜா மேலும் சில உண்மைகளை எடுத்துக்காட்டினார்.
இந்தக் ‘கேலி’க்கு ஈடாகச் சமீப காலத்தில், எந்தத் தலைவரும் வட நாட்டுப் போக்கைக் கண்டித்ததில்லை என்று கூறலாம்.
கட்டுவது காவி
தொட்டு இழுக்கிறான் பாவி!
என்று காரிகை கதறக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுபோல, பேசுவது சர்வோதயம், வரவழைப்பதோ அமெரிக்க நவீன யந்திரம்—என்று குட்டுகிறார் ராஜா!!
சர்வோதயம்—ஒரு இலட்சியம், உத்தமரொருவர் ஊருக்கும் உலகுக்கும் காட்டும் பாதை! இதற்கு உதட்டுபசாரம் அளித்துவிட்டு, தமது தேவைக்கு, வசதிக்கு, அமெரிக்காவிலிருந்து நவீன யந்திரங்களை வரவழைத்துப் பயன் பெறுகிறார்கள் வடக்கே!
சர்வோதயம் பேசப்படுகிறது—செயலோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
இந்தக் கபடத்தைக் காட்டமட்டும் ராஜா இதைக் கூறினதாக நான் எண்ணவில்லை, தம்பி, இதற்கு உள்ளே மிகப்பெரிய உண்மை உறங்கிக்கொண்டிருக்கக் காண்கிறேன்.
ஓ! என் நாட்டவரே! உரத்த குரலில், சர்வோதயம் பற்றிய உபதேசம் நடக்கிறது; வடக்கே இருக்கும் தலைவர்களெல்லாம், அந்த இலட்சியத்தை வாழ்த்திப் பேசுவது கேட்டு, மயங்கிவிடாதீர்கள்! சர்வோதயம் பேசும் அந்த வடக்கத்தித் தலைவர்கள், இனிக்க இனிக்க, நெஞ்சு நெக்குருகப் பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்களுக்கு சர்வோதயத்திலே நம்பிக்கை கிடையாது; சர்வோதயம் பேசிக்கொண்டு அவர்கள் அங்கே சர்க்கரை ஆலை வேண்டாம் கருப்பட்டி போதும், நூலாலை வேண்டாம் சர்க்கா போதும், காகித ஆலை வேண்டாம் பனை ஓலை போதும், மோட்டார் தொழில் வேண்டாம், கட்டை வண்டி போதும், டிராக்டர் வேண்டாம் ஏர் எருது போதும், என்றெல்லாம் இருந்துவிடுகிறார்கள் போலும் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். நாமும் இங்கு சர்வோதயம் காண்போம் என்று மனதார நம்பி வளர்ச்சியைக் குலைத்துக்கொள்ளாதீர்கள்; வடக்கே உள்ளவர்கள் பேச்சிலேதான் சர்வோதயம்; ஆனால் நடைமுறையிலோ, நவீன அமெரிக்க யந்திரங்களைத்தான் வரவழைக்கிறார்கள்.
அவர்களுடைய இந்தக் கபடத்தை நான் கண்ணால் கண்டேன்—ஏமாறாதீர், என் நாட்டவரே! அவர்களின் சொல்வேறு, செயல் வேறு! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்!
குமாரசாமிராஜாவின் பேச்சிலே இவ்வளவும், எண்ணிப் பார்க்கப் பார்க்க, இதனினும் அதிகமாகவும், பொருள் பொதிந்திருக்கக் காண்கிறேன்.
சர்வோதயம் பேசுகிறீர்களே! இப்படி நவீன யந்திர மோகம் கொண்டு அலைகிறீர்களே! - என்று ராஜா, வடக்கே இடித்துக் கூறவில்லை, தம்பி, இங்கு நமக்கு எச்சரிக்கை செய்கிறார், சர்வோதயம் பேசும் வடநாட்டார் தங்கள் தொழிலில் பழைமையின் சாயலைக்கூட வைத்துக்கொண்டில்லை, எல்லாம் அமெரிக்க யந்திர மயமாக இருக்கிறது; உண்மையை அறியாமல், அவர்கள் உதட்டசைவு கேட்டு, மயங்கிவிடாதீர்கள்; சர்வோதயம், பேச்சு; செயல், நவீனம், நவயுகம் அமெரிக்க முறை!—என்று எடுத்துக் கூறுகிறார்.
தம்பி! பலமுறை பார்த்து, மிகவும் மனம் புழுங்கி, நீண்ட காலம் மறைத்துப் பார்த்து, கடைசியில் இனியும் நாமறிந்த இந்த உண்மையை நமது மக்களுக்கு எடுத்துக்கூறாமலிருப்பது, மக்களுக்கு நாம் மனதறிந்து செய்யும் துரோகமாகும் என்று உணர்ந்து, என்ன நேரிட்டாலும் கவலை இல்லை, நேருவுக்கு கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து, பேசின பேச்சு என்றே நான் இதனைக் கொள்கிறேன்.தம்பி! வடக்கு வளருகிறது தெற்கு தேய்கிறது என்று நாம், கூறும்போது, அலங்காரப் பேச்சு அடுக்குமொழி என்று கேலி பேசினரே, அவர்கள், ராஜா அம்பலப்படுத்தியிருக்கும் உண்மையைக் கண்ட பிறகேனும், சிந்திப்பார்களா என்று கேட்டுப்பார்.
அவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ, குமாரசாமிராஜா அவர்கள் நிரம்பச் சிந்தித்திருக்கிறார் என்பதும், செயல்படக் கூட விரும்புகிறார் என்பதும் விளங்கும் வகையில், மேலும் சில உண்மைகளை அவர் கூறுகிறார்.
மத்ய சர்க்கார் ஆதிக்கம் செய்கிறது, மாகாண சர்க்காருக்கு முழு உரிமை கிடையாது என்று நாம் பேசும்போது, முகம் சுளித்துக் கொள்கிறார்களே காங்கிரசார், அவர்கள் இந்தக் ‘குற்றச்சாட்டு’ ஒரு கவர்னர் மூலம் பதிவு செய்யப்படுவது கண்டு ஆச்சரியத்தால் வாய் பிளந்து நிற்பார்கள் என்று எண்ணுகிறேன். எவ்வளவு திறமையாக, அப்பழுக்கற்ற முறையில் மாகாண சர்க்கார் ஒரு திட்டம் தயாரித்தாலும், தங்கள் அதிகாரமும் அமுலும் இருக்க வேண்டும் என்பதற்காகவென்றே, மத்ய சர்க்கார், அதிலே அங்கொரு மாற்றமும் இங்கொரு மாற்றமும் செய்து, திட்டத்தைத் திருத்துகிறது என்று கூறுகிறார், ஒரிசாவில் கவர்னராக வேலைபார்க்கும் ராஜா.
கூறினதுடன் அவர் அமைதி கொள்ளவில்லை; மத்ய சர்க்கார் இனியும் இந்தப் போக்கிலே இருக்கக் கூடாது என்று புத்திமதி கூறலாமா என்றுகூட அவர் எண்ணிக் கொள்ளவில்லை.
புத்திமதி கூறும் கட்டம்போய் விட்டது; பிறர் கூறும் அறிவுரையைக் கேட்கும் நிலையிலும் மத்ய சார்க்கார் இல்லை என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. எனவே குமாரசாமிராஜா, போர்க்கொடி உயர்த்துவது போலவே பேசுகிறார்.
என்று கூறியிருக்கிறார்.
தம்பி! பொறுமை உணர்ச்சியும் பொதுப் பிரச்சினைகளிலே அக்கரையும் கொண்ட காங்கிரஸ் நண்பர் யாராவது உனக்குத் தெரிந்திருந்தால், அவரை, குமாரசாமிராஜாவின் பேச்சிலே பொதிந்து கிடக்கும் உண்மைகளைப்பற்றி விளக்கும்படி கேள்; கேட்டுக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தால் நீ விளக்கிக் காட்டு.
வடக்குவேறு
தெற்குவேறு
வடக்கு வஞ்சனையுடன் நடந்துவருகிறது.
வடக்கே, பணம் விரயமாகிறது.
தெற்கு ராஜ்ய அலுவலில் வடக்கு, அனாவசியமாகக் குறுக்கிடுகிறது.
வடக்கு குறுக்கிடும் போக்கை, தெற்கு எதிர்த்துப் போரிடவேண்டும்.
அந்தக் காலம் விரைவில் வருகிறது.இவ்வளவும், சுரங்கத்துள் தூங்கும் தங்கம் போலவோ, கடலுக்குள் உறங்கும் முத்துபோலவோ கூட அல்ல, தோலுக்குள் இருக்கும் சுளை போலவோ, நெல்லுக்குள் இருக்கும் அரிசி போலவோ, இருக்கிறதா இல்லையா என்று கேட்டுப்பார்.
குமாரசாமிராஜா இந்த அளவு எடுத்துக் கூறியது எனக்கென்னமோ, கை சுளுக்குடன் கஷ்டப்படும் கந்தப்பனுக்கு வலி போக்கிக் கொள்ளக் கிடைக்கும் பச்சிலைத் தைலம் போலத் தோன்றுகிறது. இதுவாவது கிடைக்கிறதே என்று மகிழக்கூடத் தோன்றுகிறது.
கவர்னர் பதவியிலிருந்து விலகியதும், இது குறித்து, மேலும் பல உண்மைகளை, விஷயங்களை நான் கூறுகிறேன்—என்று குமாரசாமி ராஜா கூறுகிறார்.
இதற்குள், தூதும், சமரசப் பேச்சும், ஆகாது கூடாது, அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள், இவர்கள் ஏளனம் செய்வார்கள் என்றெல்லாம் எடுத்துக் கூறும் பாசவலையும் வீசப்பட்டிருக்கும்.
அத்தனைக்கும் தப்பி வந்து, ஆற்றலுடன், குமாரசாமிராஜா அவர்கள், வடக்கு கொண்டுள்ள கோலத்யுைம் போக்கினையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, வடக்கு செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்து, ஏன் என்று கேட்கும் வீரத் தலைவராக வெளிவர வேண்டும்.முடிகிறதோ இல்லையோ, இப்போதைக்கு இந்த அளவுக்கேனும் அஞ்சா நெஞ்சுடன் உண்மையை எடுத்துரைத்த நேர்மையைப் பாராட்டத்தானே வேண்டும்.
செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அறைத்திடும் கந்தப்பனுக்கு, கை சுளுக்குப் போக, எருக்கம் பாலும் களிமண் பூச்சும் மட்டுமல்ல, பச்சிலைத் தைலமும் சிறிதளவு கிடைக்கிறதென்றால், கொஞ்சம் நிம்மதிதானே!
அந்தவிதமான மகிழ்ச்சி நமக்கு, ராஜாவின் பேச்சு கேட்டதில். வாழ்க அவர்தம் வாய்மைப் பற்று, வாழ்க அவர்தம் அஞ்சாமை என்று நீயும் நானும் வாழ்த்துவோம், தம்பி! வேறு என்ன இருக்கிறது நம்மிடம், அவருக்கு அளித்திட.
9–9–1956
அன்பன்,
அண்ணாதுரை