தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...

கடிதம் 77

வெற்றிபுரி செல்ல...

தமிழ் நாட்டில் வறுமை—தேர்தல் கால அரசியல்.

தம்பி!

மருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன் பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர்வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப்போய்க் காட்டுவார்கள்—குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள்—எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக்கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட. வா, தம்பி, வா!

அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன் போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடிதுடிக்கிறான் இளைஞன்.

பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை. உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்!—என்று கனிவுடன் கூறிக்கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!!

உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால், இந்நேரம் ‘ஜன்னி’ பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும். இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை—என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக் கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலிவளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல—முதல் முறையாகத்தான் சந்தித்தார்!!

தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும் இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா!

இதோ! இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி!

உஸ்! பேசாதே! மெல்ல நட!—என்று உத்தரவிட்டுக்கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள்—என்னவென்று கவனிப்போம்.

“வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது. கண்றாவி”

“கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?”

“யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்”

“டாக்டர், என்ன சொல்கிறார்?”

“அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா என்று அலட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்.”

“நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?”

லிலியுடன், தம்பி, நாமும், உள்ளே எட்டிப் பார்க்கலாமா? அதோ பார்! உடலிலே பல இடங்களிலே புண்!! ஆசாமிக்கு வலி அதிகம்தான். முகத்திலே பார், சவக்களை என்பார்களே, அப்படி இருக்கிறதல்லவா?

மேலே மின்சார விசிறி இருந்தும், பக்கத்தில் நின்றபடி மயில் விசிறி கொண்டு வீசிக்கொண்டு நிற்கிறானே, அவன் பாபம், நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன்—நாய் பிழைப்புத்தான்! இருந்தாலும் என்ன செய்வது! என்று சகித்துக் கொண்டு ஊழியம் செய்கிறான்.

அதோ அந்த அலங்கார ஆசனத்தில் அமர்ந்துகொண்டு இருப்பவன், படுக்கையில் உள்ளவருக்கு மருமகன். எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தான். இப்போது அவன் கரத்தில் இருப்பது ஒரு கதைப் புத்தகம்—படத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான்.

தம்பி! இந்த ஆசாமிதான் உண்மையில், சீமான்!

முதலில் கண்டோமே அவன் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவன்—பாட்டாளியாக இருப்பதால் பராரியாகாமலிருப்பவன்! தனி அறையில் உள்ள தனவான் இரும்பு வியாபாரத்தால் கொழுத்தவர்—பெயர் தங்கப்பர். பாட்டாளியாக இருப்பவன், இரும்புப் பட்டறையில் வேலை செய்பவன், பெயர் ஆண்டியப்பன்.

ஆண்டியிடம் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்—உடன் இருப்போர், மருத்துவர், அனைவரும்.

சீமான் தங்கப்பரிடம் மருத்துவரும் மருகரும், பணியாளும் பாங்கியரும், அனைவரும் அருவருப்புக் காட்டுகின்றனர்.

தங்கப்பர், மருத்துவ விடுதிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடைகூடத் தரக்கூடும்—வசதி உண்டு.

ஆண்டிக்கு, பழவகையே டாக்டர் தம் செலவில் வாங்கிக் கொடுத்தார்.

காரணம் என்ன, நிலைமைக்கு? எண்ணிப்பார்!

இதிலென்ன சிரமம்? இந்த மருத்துவ விடுதி ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது; செல்வச் செருக்கர்களைச் சீந்துவதில்லை; சரியான முறைதான்—நல்லது...என்று மகிழ்ச்சியுடன் கூறப்போகிறாய். தம்பி! இங்கு நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது மட்டுமல்ல.

படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன், உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு—சீந்துவாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு—இந்த இரு வேறு காரணங்கள் தான், இருவேறு விதமான மனப்பான்மையை, காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது.

ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்!—என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், “சனியன்! கண்றாவி!” என்று அருவருப்புடன் பேசுகிறார்கள்.

ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்—இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது—பலர் பதறினர்—தண்ணீர் இறைத்தனர்—மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, “ஐயோ! குழந்தை, தொட்டிலில்...தொட்டிலில் குழந்தை...” என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு—உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான்—அலறல் கேட்டான்—உள்ளே, குழந்தை, தொட்டிலில்—என்ற மூன்றே வார்த்தைகள்தான்—எதிரே பெரு நெருப்பு—பாய்ந்தோடினான் உள்ளே!

ஐயோ ஐயோ! என்று அலறினர்—ஆண்டியின் காதில் மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை.

இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப் போட்டு மூடி இருந்தான்—குழந்தை பிழைத்தது, ஆண்டியின் உடலெல்லாம் தீப்புண்!!

சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக்கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்துவிட்டதே, சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம் பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச் சென்று, “சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க” என்று சமாதானம் கூறிய குப்பியை......! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக்கொண்டது—சீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான்—அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது—சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது!

ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம் மருத்துவமனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி காண்போம்.

விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம்—மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம்.

அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை—அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத்தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக ‘மூக்குத்தி’யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல் நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள்—அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன்—அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறிவிட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!!

“லட்சுமீ! எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?”

“மார்வாடி கடைக்குத்தான் மாமி”

“எதை வித்துப் போட்டு வந்தூட்டே?”

“மூக்குத்தியை......”

“அதுவும் தொலைஞ்சுதா.........”

“மூக்குத்தி போனா என்ன மாமி! மூக்கு, இருக்குதேல்லோ......”
“போடி, போக்கிரிப் பெண்ணே! மூக்கு இருக்குதாம், மூக்கு! இருக்கு, மூக்கும் முழியும், ராஜாத்திக்கு இருக்கிறது போலத்தான் இருக்கு. இருந்து? தரித்திரம் பிடுங்கித் திங்குதே...”
“அதனாலே என்ன மாமி! நகை போட்டாத்தானா...”
“உன்னோடு யார் பேசுவாங்க...அதிகமாக எதுவும் வேணாம்...மூக்குத்தி, காதுக்குக் கம்மல்...கையிலே ஒரு இரண்டு வளை......”
“கழுத்துமட்டும் என்ன குத்தம் செய்தது, மாமி. இரண்டு ‘வடம்’ செயின் போடக் கூடாதா அதுக்கு...”
“குறும்புக்காரப் பொண்ணு. அதெல்லாம் போட்டா பதினாயிரம் கண்ணுவேணும் பார்க்க, என்பாங்களே, அப்படி இருக்கும். உம்! பகவான் அழகைக் கொடுத்தாரு, அதுக்கு ஏத்த அந்தஸ்து கொடுத்தாரா......?”
“போ, மாமி! எத்தனையுன்னுதான் அவரும் கொடுப்பாரு......"

சிரித்துக்கொண்டே செல்கிறாள் செல்லாயி!

“அவலட்சணம்னா, சொல்லி முடியாது, டோய்! அட்டைக் கருப்பு! மாறுகண்ணு! உதடு, தடிம்மனா, என்னமோபோல இருக்குது. காது, துளிண்டு, எலி காது போல...செச்சே! இராத்திரி வேளையிலே, பார்த்தா, பயமே வந்துவிடும். அந்தச் சனியனுக்குக் குரல் இருக்கு பாரு, அசல் ஆந்தையேதான்.....”

செல்லாயி புருஷன், தம்பி, இதுபோலப் பேசுவது. மெகானிக் மாதவனிடம் பேசுகிறான். யாரைப்பற்றி இந்த வர்ணனை தெரியுமோ? தன் எஜமானருக்கு வந்துள்ள மருமகப் பெண்ணைப்பற்றி. செல்லாயி புருஷன் சிகப்பண்ணனுக்கு, மோடார் ஓட்டும் வேலை மோட்டூரார் வீட்டில்!!

அந்த மருமகள் அவ்வளவு அவலட்சணம் என்றானே, வா, போய்ப் பார்ப்போம்.

இதோ இதுதான், மோட்டூரார் மாளிகை!

ஊஞ்சலில் தெரிகிறதா, உருவம்... மூக்கும் முழியும், கையும் காலும், சரியாகத் தெரியவில்லையே என்கிறாயா, தம்பி, தெரியாது. எல்லாம் சேர்ந்து தான் ஒரு மாமிசப் பிண்டமாகத் தெரிகிறதல்லவா—மோட்டூரார் மருமகள் கமலாம்பிகாவைக் காண்கிறாய்.

கூடவே நீ காண்பது என்னென்ன தெரியுமா, தம்பி, அதை மறந்துவிடாதே!

காதிலே மூவாயிரம் ரூபாயில் வைரத் தோடு! தலைச் சடையில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள வைரத் திருகுபில்லை. மூக்குத்திகள் பச்சை! இரண்டாயிரம்! கழுத்திலே புரளும் தங்கமும் வைரமும், பத்தாயிரத்துக்கு மேல் பெறுமானமுள்ளது! இடுப்பில் காணப்படும், ஒட்டியாணத்தைச் செய்யும்போது ‘பத்தர்’ வீட்டிலே, ஒரே சிரிப்பு—இது என்ன இடுப்புக்கா, அல்லது நெல்கொட்டும் குதிருக்கா என்று கேட்டுக் கேலி செய்து, வீட்டார் சிரித்தார்கள்! கல் இழைத்தது! மயில் தெரிகிறதா? அருமையான வேலைப்பாடு! ஆறாயிரம் மதிப்பிடுகிறார்கள். காலில், கமலாம்பிகா அணிந்திருப்பதை, அவர்களாலும் காண முடியாது, நாமும் பார்க்கமுடியாது; ஆடை தரையிலே புரளுவதால், நகை மறைந்து கிடக்கிறது நமக்குத் தெரியவில்லை! கமலாம்பிகாவின் உடல் அமைப்பு, பாபம், குனிந்து, தன் காலில் உள்ளதைக் காணவிடவில்லை! ஆபரணச் சுமைதாங்கி, தம்பி, இந்தக் கமலாம்பிகா!

செல்லாயிக்கு மூக்குத்தியும் இல்லை—முகம் செந்தாமரையாக இருக்கிறது.

காணச் சகிக்கவில்லை இந்தக் கமலாம்பிகையை—பூட்டியிருக்கும் நகைகளின் மதிப்பு மட்டும் பலப் பல ஆயிரம்!

இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு நகை இருக்கிறது! நகைகளின் அழகே பாழாகிறது, இந்தச் சனியன் மேலே பூட்டியதும். மரத்தாலே பாவை செய்து, பூட்டி வைத்தால் கூட, இந்த நகைகளைப் பார்க்க இலட்சணமாக இருக்கும், என்றுகூடப் பேசிக்கொள்கிறார்கள்!

மூக்கும் முழியும் ராஜாத்திபோல இருக்கிறது, செல்லாயிக்கு; மூக்குத்திக்குக்கூட வழி இல்லை!

இதோ, மூலைக்கோயில் காளி உருவாரம் போலக் காணப்படும் கமலாம்பிகையின் உடேலில ஆபரணச் சுமை!!

தம்பி! செல்லாயி, கமலாம்பிகை—இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு.

ஆண்டி—தங்கப்பன் மருத்துவமனையில்!

செல்லாயி—கமலாம்பிகா அவரவர் மனையில்!!

இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா?

தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப்பட்டுவரும், ஆண்டியப்பன்!

வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும்முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்லமனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள், இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள்.

இந்தக் கருத்தை எடுத்துக்காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன்.

ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கும் அவலட்சணத்தை எடுத்துக்காட்டி அருவருப்பாகப் பேசுகிறான்—அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர்.

ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் ‘சலாமிடும்’ ஆட்சி, வெளிநாடு- களில் கடன்படும் ஆட்சி, அடக்குமுறை அவிழ்த்துவிடும் ஆட்சி.

என்று அடுக்கடுக்காக, அருவருப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றனர்; எனினும் இறுதியில், ஒரு பெருமூச்சுடன் இவ்வளவு அக்ரமம் செய்த ஆட்சிதான் என்றாலும், தேர்தலில் மக்களை வளைய வைப்பதற்குத் தேவையான பணபலத்தை மலைபோலப் பெற்றிருக்கிறதே! பாபம், திராவிட முன்னேற்றக் கழகத்தார், ஓயாது உழைக்கிறார்கள், உள்ளன்புடன் பாடுபடுகிறார்கள், ஏச்சும் இழிமொழியும் பழிச்சொல்லும் வீசப்படுகிறபோதும் தாங்கிக்கொண்டு பணியாற்றுகிறார்கள். எனினும் தேர்தலில் ஈடுபடுவதற்குத் தேவையான பணபலம் இல்லையே—ஏராளமான செலவு இருக்கிறதே, எப்படிச் சமாளிக்க முடியும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நமது கழகத் தோழர்களிடையேகூட இந்தப் பேச்சு எழக் கேட்டிருக்கிறேன்.

தம்பி! ஆண்டியப்பனைப் பார்த்தோமல்லவா! அதுபோலத்தான், நமக்குக் கையிலே போதுமான பணவசதி இல்லாதிருக்கலாம்; ஆனால் நாம், பொதுமக்களிடம் ஆற்றிவரும் பணி வீண்போகப் போவதில்லை; அவர்களிடம் பணம் இல்லை; எனவே, செலவுக்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாகாது, நம்மாலானதையெல்லாம் நாம் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்துடன், தூய தொண்டுக்கு துணை நிற்க வேண்டும் என்ற நல்ல மனம் படைத்தோரெல்லாம் முன்வரத்தான் செய்வார்கள்.

தம்பி! அரசியலில், அதிலும் தேர்தல் கால அரசியலில், பணத்துக்கு இருக்கிற செல்வாக்கையும் கண்டிருக்கிறேன்; பணபலத்தையும் சுக்கு நூறாக்கக்கூடிய மக்கள் சக்தி வீறுகொண்டெழுந்ததையும் பார்த்திருக்கிறேன். எனவே நான், நமது கழகத்துக்குப் போதுமான தேவையான பணபலம் இல்லை என்பது பற்றி எண்ணாமலுமில்லை, சில வேளைகளிலே ஏக்கம்கூட அடைகிறேன். ஆனால் உன்னிடம் சொல்லுவதிலே மகிழ்ச்சி அடைகிறேன். மனம் உடைந்து போகவில்லை—அந்த நிலை ஏற்படவிடக்கூடாது என்று நமது கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும், ஆண்டியப்பனுக்கு இலவசமாக மருத்துவமும் பார்த்து, பழம் பண்டமும் வாங்கித் தந்த டாக்டர் போல, பரிவுடன் நடந்துகொள்ளக் காண்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்ற கிழமை சென்னை மூலக்கொத்தளம் வட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நிதி 100 ரூபாய் தருவதாகச் சொன்ன நமது தோழர்கள், 50 மட்டுமே கொடுத்தனர்—எனக்கு பேச்சே எழவில்லை! அதனை நான் கூட்டத்திலேயே குறிப்பிட்டுக் கூறினேன்—பெருமையும் நம்பிக்கையும் கொள்ளச் செய்யும் சேதி கேள், தம்பி — நான் சிறிதளவு சலிப்புடன் பேசுவது கண்ட தோழர்கள் கூடிக் கலந்து பேசி, என்னிடம் தெரிவித்தனர், இந்த வட்டாரத்தின் சார்பாக நமது நண்பர் துரைராஜ் அவர்கள் ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி அளிக்க இசைந்திருக்கிறார்—என்று கூறினர். மகிழ்ந்தேன்! கூட்டத்தில் இதனை அறிவித்தேன்—அப்போது மக்கள் அந்தச் சந்தோஷச் செய்தியை எத்துணை ஆர்வத்துடன் வரவேற்றனர் என்பதைக் கண்டு நான் பூரித்துப் போனேன்! பழம் வாங்கி வந்து தந்ததும், ஆண்டியப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான்—அதுபோலானேன்!

நமது கழகத்தின் வரலாற்றிலே, மிக முக்கியமான கட்டம், இந்தத் தேர்தல்.

நம்மைச் சுற்றி நச்சு நினைப்பினர் ஏவிவரும் பொச்சரிப்புகள் கொஞ்சமல்ல. நம்மைப்பற்றி, நடமாடவிடும் நிந்தனைகளின் அளவும் அதிகம், வகையும் பலப்பல ஒரு முகாம், இருமுகாமிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு முகாம்களும் மும்முரமாக இந்தத் திருத்தொண்டில் ஈடுபட்டு, தத்தமது முழுச்சக்தியையும் பயன்படுத்துகின்றன. இதை நான் எதிர்பார்த்ததுண்டு. எளிதிலே வழிவிடுவார்கள் என்று எண்ணிடும் ஏமாளியா, நாம்; அல்லவே!!

பொது வாழ்வுத் துறையில் புதியவர்கள் என்று அலட்சியமாகப் பேசுவது மட்டுமல்ல, புகக்கூடாதவர்கள் என்று வெறுப்புடன் பேசுவோர் நிரம்பிய நிலையை நான் அறிவேன். அவர்கள், நாம் ஈடுபடும் இந்தத் தேர்தல் முயற்சியில், முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, தகர்த்து அழிக்காவிட்டால், ஒரு முறை ‘உள்ளே’ போக இடமளித்துவிட்டால், பிறகு, அந்தக் கழக வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற திகில்கொண்ட நிலையில், முதல் முயற்சியையே, முழுப்பலம் கொண்டு தாக்கி முறியடித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவர் என்பதை எதிர்பார்த்தவனே! நான் இப்போது காணும் நிலைமை, நான் எதிர்பாராததுமல்ல, என்னைத் திடுக்கிடச் செய்யக்கூடியதுமல்ல. என் நிலையே அது என்றால், தம்பி, எனக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம் ஆற்றலைத் தரும் உன் நெஞ்சு உரத்தை விளக்கவா வேண்டும்!

ஒன்று நான், காண்கிறேன்! எனக்கே, உள்ளத்தில் ஓர் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது; நமது கழக வரலாற்றின் ஒவ்வோர் கட்டம் தெரியும் போதும், நாம் அதனைக் கடந்து செல்ல முடியுமா; அல்லது பயணம் அந்த இடத்துடன் நின்று போகுமா என்ற ஐயப்பாடு—உனக்கோ உன் போன்ற எண்ணற்ற தம்பிகட்கோ அல்ல—எனக்கு ஏற்படுவதுண்டு! ஆனால், நாட்டிலே, தம்பி, நீ நற்பணியாற்றி அதன் மூலம் திரட்டித் தரும் ஆற்றல், என் ஐயப்பாட்டினைத் துரத்தி அடிக்கிறது, அச்சத்தை அயர்வைப் போக்குகிறது, வெற்றி முரசு ஒலிக்கிறது; ஒவ்வோர் கட்டத்தின் போதும்.

இதனை, நான், நமது கழகத் துவக்கத்திலிருந்து காண்கிறேன்.

பெரியாருடைய திருமணத்தால், மனதிலே பேரிடி விழுந்த நிலை பெற்று, குருசாமியார் ஓடோடி வந்து, என்னைப் பிடித்திழுத்து கச்சையை வரிந்து கட்டிவிட்ட நாளிலிருந்து, இன்று என் செயலை, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு எச்சில் துப்புகிறாரே, இந்த நாள்வரையில், ஒவ்வோர் கட்டத்திலும், நான் இந்தக் கவர்ச்சியூட்டும் உண்மையைச் சந்திக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம்—என்று பெயரிட்டுக் கொண்டு, முன்பு போலவே நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்—என்று, சென்னை முத்தியாலுப் பேட்டையில் ஓர் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, நான் சொன்ன நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிலிருந்து, பொறுமைக்கு இருப்பிடம் எனத்தகும் நமது பொதுச் செயலாளர் வரையிலே கொதித்து எழுந்து, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, நாம் ஏன் பெயர் மாற்றிக்கொண்டு போக வேண்டும், நமக்குத்தான் ஜனநாயக முறைப்படி பழைய பெயர் சொந்தம் என்று வாதாடிய காட்சி இப்போதும் நான் காண்கிறேன்.

அன்று, நாம் இந்த அளவிலும் வகையிலும் வளருவோம் பொதுவாழ்வு துறையில் இந்தவிதமான நிலை பெறுவோம், ஒரு பொதுத்தேர்தலில் ஈடுபடும் கட்டம் காண்போம் என்று எண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும் என்று எண்ணுகிறாய்!! ஆனால் அந்தக் கட்டம் காண்கிறோம். காண்பாய்! காண்பாய்! மூடா, கேள், என் ஆரூடத்தை! இதுதான் நீ காணப்போகும் கடைசிக் கட்டம் என்று மனக்கசப்பு முற்றிவிட்ட காரணத்தால் பகை பேசும் நிலைக்குச் சென்றுவிட்ட சிலர் கூறுகின்றனர். தம்பி! நான் என் வரையில் பேசுவதானால், இதனைக் கூறுவேன்; இது கடைசிக் கட்டம் ஆகிவிட்டால்கூட நான் கவலைப்பட மாட்டேன்; ஏனெனில் இவர்கள் ‘ஆரூடம்’ பலிக்கத் தக்கதானால், நான் இந்தக் கட்டத்தையேகூட எட்டிப் பார்த்திருக்கக் கூடாது. இந்தக் கட்டம் அளவுக்கு ‘ஆயுள்’—இவ்வளவு ஆரூடத்துக்குப் பிறகும் இருந்ததல்லவா என்றுகூட எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். என் சுபாவம் அப்படிப்பட்டது. ஆனால் கழகத்தின் சார்பில் பேசுகிறேன்—ஆரூடம் முன்பு பலித்ததில்லை, இம்முறையும் பலிக்காது! தம்பி! ஒவ்வொரு கட்டமாக நினைவிலே கொண்டு வந்து பார், நான் கூறுவதன் உண்மை தெரியும்! எத்தனை எத்தனை பழிச் சொற்களை, நம் வழியிலே கண்டோம்—பயணம் குந்தகப்படவில்லையே! காரணம் என்ன? ஐயப்பாடு, அச்சம், அயர்வு, எழும்போதெல்லாம், ஆர்வத்துடன், நமக்கு ஆதரவு அளித்திடப் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் முன் வருகின்றனர்! அண்ணன் அல்ல, பரிவுடன் பேசுகிறார்! தாய் அல்ல, ஆனால் பாசம் காட்டுகிறார்! டாக்டர், ஆனால் கட்டணம் வாங்கவில்லை! ஆண்டியப்பனைக் கண்டோமல்லவா—அது போலவே என்ன செய்வது என்று திகைக்கும்போதெல்லாம், என்ன நேரிடுமோ என்று கை பிசைந்து கொள்ளும்போதெல்லாம், நமக்கு உறுதுணையாக மக்கள் ஆதரவு வந்து சேருகிறது. அந்த ஆதரவே ‘அறிவகம்’—அச்சகம்—திடல் பல ஊர்களில் கழகப்பணி மனைகள்— இப்படி, உள்ளன. இரண்டு கிழமைகளுக்கு முன்புதான், குளித்தலைக்குப் பக்கத்திலே பணிக்கம்பட்டி என்ற சிற்றூரில் சிறிய அளவில் சிங்கார மாளிகை எனத்தகும் கழகக் கட்டிடம் ஒன்றினைத் திறந்துவைக்கும் வாய்ப்பினை, தோழர்கள் எனக்கு அளித்தனர். (அடுத்த கிழமை, படம் காணலாம்) அன்று நான், அந்தச் சிற்றூருக்குச் செல்வதற்கு, கடுமழையையும் கடந்து செல்லவேண்டி இருந்ததால், நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது—எனினும் பல்லாயிரவர், மழை மிரட்டியது கண்டும் மனம் கலங்காமல் திடலில் இருந்தனர். அவர்கள் காட்டிய உற்சாகத்தை நான், காலங்கடந்து சென்ற பொறுப்புக் குறைந்த போக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நானே சிறிதளவு வெட்கப்பட்டுப் போனேன். கழகப்பணி மனையைத் தோழர்கள் என்னிடம் காட்டியபோது, அவர்கள் முகம் எத்துணை பொலிவு பெற்றது.

இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக்கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!!

ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது. என்ன ஆகுமோ தெரியவில்லை—என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக் கொண்டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான்—நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான்—ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும், என்று நாம் திகைத்தும், செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம்—நமக்கு நம்பிக்கை வளருகிறது.

பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே!— என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம்.

நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப்பார்த்து, அதற்குத் தக்கபடி ‘கீர்த்தி—கித்தாப்பு’ தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது—எத்தனை விரிவான முறையில், தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி—விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி.

அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள்—ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும்.

இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள், வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது.

இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை. அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும்.

“என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்” என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே.


9—12—1956

அன்பன்,
அண்ணாதுரை