தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”
கடிதம்: 63
"மிருக ஆட்சி..."
தேர்தலும் காங்கிரசும்—
“விடுதலை”யும் காமராசரும்—
காங்கிரசாட்சியின் கொடுமை.
தம்பி !
போஸ்டர் வேண்டுமா, போஸ்டர்! கண்ணைக் கவரும், கருத்தைக் கிளறும்! காங்கிரஸ் ஒழிப்பிலே கவலைகொண்ட பெரியவர்களே! இளைஞர்களே! போஸ்டர் தயாரித்திருக்கிறோம். ‘காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று அழகாக அச்சடிக்கப்பட்ட போஸ்டர் — இலட்சக் கணக்கிலே உள்ளன—அடக்க விலை—ஆதாயம் கருதிப் போடப்பட்டதல்ல - வியாபார நோக்கத்துடன் வெளியிடப்பட்டதல்ல—நாட்டைக் கேடர்களிடமிருந்து மீட்டிட நல்லறிவுப் பிரசாரம் நடாத்துவதற்காகவே, பொருள் நட்டம், நேரக்கேடு, எதனையும் பொருட்படுத்தாது, இதனை வெளியிடுகிறோம்.
ஆயிரக் கணக்கிலே வாங்குங்கள்—விலை மலிவு - பல்லாயிரக் கணக்கிலே வாங்குங்கள்—பட்டி தொட்டிகளிலுள்ளோரும் வாங்குங்கள்—வீடுதோறும் ஒட்டிவையுங்கள்—ஓட்டு கேட்க வரும் காங்கிரசாரை ஓட்டுங்கள்.
காங்கிரசார் கண்களிலே, எந்தப்பக்கம் திரும்பினாலும் இந்தப் போஸ்டர்கள் படவேண்டும்—நாடே நமக்கு விரோதமாக இருக்கிறது—ஊரார் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள் நம்மை விரட்ட என்று கிலிகொண்டு, அவர்கள் பிடரியில் கால்பட எடுக்க வேண்டும் ஓட்டம்—அதற்கு உதவக்கூடிய போஸ்டர், வாங்குங்கள் ஒட்டுங்கள்!
ஆயிரம் ஐந்தே ரூபாய்! கருப்பு மையில் அச்சிடப்பட்டது, கண்கவரும் வனப்புள்ளது.
நாலரை அல்லது ஐந்து அங்குல அகலம் இருக்கும்—பதினெட்டு அங்குல நீளம்!
புரட்சிகரமான தோற்றம் தேடுவோர், சிகப்பு மையில் அச்சிடப்பட்ட போஸ்டர்களை வாங்கலாம்—விலை சிறிதளவுதான் கூடுதல்—ஆயிரம் 7-ரூபாய்தான்!
காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்—என்ற இந்த அறிவுரைத் தாட்களை அனைவரும் ஆயிரக் கணக்கிலே வாங்கி, ஊரெங்கும் ஒட்டி, திராவிட நாட்டுக்கு ஆபத்து வராதிருக்க நம்மாலான நல்ல தொண்டு செய்தோம் என்ற மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுங்கள். இந்தச் சிறு காரியத்தைக்கூடச் செய்யத் தவறுபவர்களை, நாம் எப்படித் திராவிட மக்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?
இழி ஜாதி மக்கள், ஈனப் பிறவிகள், காலித்தனத்தால் கூலித்தனத்தால் வயிறு கழுவும் வக்கற்ற மக்கள், என்று உலகு நாளைக்குக் கூறும். எனவே போஸ்டர் வாங்குங்கள், பொன்னான வாய்ப்பு, புனிதமான கடமை, பொறுப்பு உணர்ந்தோர் செய்து தீரவேண்டிய தொண்டு—காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்—என்ற போஸ்டர்களை வாங்கி எங்கும் ஒட்டிவைப்பதுதான்.
என்ன அண்ணா! இது! காங்கிரஸ் ஒழிப்புக்கான போஸ்டர் வெளியிடுகிறோம், விலை கொடுத்து வாங்கி ஊரெல்லாம் ஒட்டு என்றால் ஒட்டுகிறோம்—அதற்காக, வாங்காதவர்கள், ஈனப் பிறவிகள்—இழி ஜென்மங்கள் என்றெல்லாம் சுடுமொழி கூறுகிறாயே, இதென்ன; என்றைக்குமில்லாத முறையில் இருக்கிறதே என்று சிறிதளவு கோபத்துடன் கேட்க எண்ணுகிறாய் அல்லவா? தம்பி! சுடுசொல் கூறுபவனா நான்—உன்னையா நான் சுடுமொழியால் தாக்குவேன்? என் மொழியும் அவ்விதம் இராது—என் வழியும் அது அல்லவே! விஷயத்தைச் சொன்ன பிறகல்லவா உனக்கு உண்மை துலங்கும், கேள்.
சென்ற பொதுத்தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி எப்படியும் ஒழிக்கப்பட்டாகவேண்டும்; அதிலே ஒரு சில கண்ணியவான்கள், ஓமந்தூரார் போன்ற உத்தமர்கள் இருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை, அந்த ‘ஸ்தாபனம்’ ஒழிக்கப்பட்டாக வேண்டியது மிக மிக அவசரமான கடமை, அதிலிருந்தும், அணுவளவும் பிசகுவது கூடாது, அச்சம், தயை தாட்சணியம் — முன் பின் தொடர்பு எதுவும் குறுக்கிடக் கூடாது என்று வீராவேசமாகத் திராவிடர் கழகம் சீறிப் போரிட்டபோது, விடுதலைக் காரியாலயம், காங்சிரசை ஒழித்துக் கட்டுங்கள்—காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவு விளக்கம் தர, அவர்களை ஆண்மையாளர்களாக்க, கருப்பிலும் சிகப்பிலும் போஸ்டர்கள் பல இலட்சம் வெளியிட்டு, விற்பனை செய்தார்கள்—அதை நினைவூட்டுகிறேன் — உனக்கு மட்டுமல்ல — அவர்களுக்கோ என்று கேட்டு விடாதே, அவர்களுக்கு நான் தரும் கரும்பும் கசக்கும் — நாட்டவருக்கு நினைவூட்டுகிறேன்.
அன்று காங்கிரஸ், எந்த அளவுக்கு, வெறுக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய, கேடான ‘ஸ்தாபனமாக’ இருந்ததோ, அதிலே ஏதேனும் ஒரு துளி மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? நாமெல்லாம் வாழ்த்தி வரவேற்கத்தக்க, அல்லது சகித்துக்கொள்ளத்தக்க விதமான அமைப்பாக, காங்கிரஸ் மாறிவிட்டதா? பார்ப்போம்—இந்த ஒரு தடவை இருந்து தொலைக்கட்டும்—என்று கூறத்தக்க, மனநிலையை நாம் பெறுவதற்கான திட்டங்களை, காங்கிரஸ் நாட்டுக்கு அளித்திருக்கிறதா? என்பன போன்ற எண்ணங்கள் என் மனதைக் குடைகின்றன, மனமென்ற ஒன்று இருந்து தொலைப்பதால்!
சென்ற பொதுத் தேர்தலின் போது இருந்ததைவிட, எல்லாத்துறைகளிலும், காங்கிரஸ், கேடு தருவதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
சிறையிலே தள்ளிச் சித்திரவதை செய்வதிலும், தெருவில் செல்வோரைத் துரத்தித் துரத்தி அடிப்பதிலும், மிரண்டு ஓடுவோரைச் சுட்டுக் கொல்வதிலும், காங்கிரஸ் பயங்கரமான பயிற்சி பெற்றுவிட்டிருப்பது காண்கிறோம்.
இன்று எந்த இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம், ஊரடங்கு சட்டம், எந்த இடத்தில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளியிடப்பட்டிருக்கிறதோ என்ற பயத்துடன் தான், நாளிதழ்களைப் பிரித்துப் படிக்க வேண்டி இருக்கிறது.
சென்ற பொதுத் தேர்தலின் போது, காங்கிரசாட்சியினால் விழுந்த பிணங்களின் எண்ணிக்கையைக் கூறினோம்—இந்தத்தடவை கூறும்போது, முன்பு எவ்வளவோ மேல் என்று சொல்லத்தக்க விதமாகத்தான் இப்போதைய ஆட்சி அலங்கோலம் இருக்கிறது.
மக்களின் ‘வாழ்வு’ முன்பு இருந்ததைவிட, இப்போது மோசமாகி இருக்கிறது.
தொழில் வளம்—தென்னாட்டைப் பொறுத்தமட்டில், இந்த ஐந்தாண்டுகளில் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையவில்லை.
இதனைச் சிற்சில சமயங்களில் காங்கிரஸ் அமைச்சர்களே கூறி அழுகிறார்கள்.
இவை எதனையும் மறுத்திடவுமில்லை. ஆனாலும், காமராஜர் நல்லவர், அவர் மறுபடியும் ஆட்சிபுரிய வேண்டும், ஆகவே அவருடைய வெற்றிக்காகத்தான் வேலை செய்யப் போகிறோம். அவர் வெற்றிபெறுவது, தமிழர்களுக்கு ஒரு ‘வரப்பிரசாதம்’ என்று எண்ணுகிறோம் என்பதாகக் கூறுகிறார்களே, இவர்களேதான் ஆயிரம் ஐந்து ரூபாய் என்று போஸ்டர் போட்டு நாட்டவருக்குக் கொடுத்தார்கள்.
இப்போது ஒரு சமயம், காங்கிரசை மறவாதீர்கள்! ஓட்டுகளைக் குவியுங்கள்! என்று போஸ்டர் போடவேண்டிய நிலைமை வருகிறதோ, அல்லது.
நாடு வாழ மாடு வேண்டும்
மக்கள் ஓட்டு மாட்டுப் பெட்டிக்கே!
காளைமாட்டுப் பெட்டி
காமராஜர் வைக்கும் பெட்டி
என்று விதவிதமான போஸ்டர்கள், பச்சை, நீலம், ஊதா கலர்களில் வெளியிட்டு விற்பனைக்குத் தரப்படுமோ என்னமோ, யார் கண்டார்கள்!
இல்லை, அண்ணா! அப்படி எல்லாம் போடமாட்டார்கள், கூச்சமாக இருக்குமல்லவா, வேண்டுமானால், நம்மீது உள்ள வெறுப்பைக் காட்டுகிற முறையில்.
கண்ணீர்த் துளிக்கு வேட்டு
காமராஜருக்கே ஒட்டு
என்று வெளியிடக்கூடும்—அல்லது இன்னமும் இழிமொழி அழகுடன் வெளியிடக்கூடும் என்று கூறுவாய்; எவ்விதமான முறையைக் கையாண்டாலும், தம்பி நாடும் நாமும், காங்கிரஸ் குறித்து, பெரியார் கொண்டுள்ள கருத்து என்ன என்பதை எப்படி மறந்து விடமுடியும்.
அவர் என்ன, பட்டும்படாததுமாகவா, கூறியிருக்கிறார்.
பொறி பறக்கப்பறக்கப் பேசி இருக்கிறார்—பசுமரத்தாணி போலல்லவா பதிந்திருக்கிறது.
நான் கூடச் சில வேளைகளில், ஏன் வீணான தொல்லை, சஞ்சலம், சங்கடம், சிக்கல்—காங்கிரசே வந்து தொலைந்து போகட்டுமே, நமக்கென்னவென்று இருந்து விடுவோமே, நாம் எதற்கு வம்புதனை விலைகொடுத்து வாங்குவதுபோல, தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று இடர்ப்படவேண்டும், என்று சலிப்புடன் எண்ணிக் கொள்வதுண்டு. ஆனால் அடுத்த கணமே அவருடைய உருவம் தோன்றும் மனக்கண் முன்பு, “அடே அறிவிலி! எவ்வளவு இடித்திடித்துக் கூறினேன்—எத்துணை அருமையான காரணம் காட்டினேன், காங்கிரஸ், ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று; இவ்வளவும் கேட்டுவிட்டு, இனியும் இளித்தவாயனாவதா? காங்கிரசை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எவ்வளவு தந்தேன்—எங்கே போயிற்று அந்த ஆற்றல்! விழலுக்கு இறைத்த நீராயிற்றா என் அறிவுரை விளக்கம்!” என்று கேட்டுக் கேலிசெய்கிறதே, என் செய்வேன்? இதோ கேளேன், தம்பி, ஒரு விளக்கம்—அவர் அருளியது:
என்னென்ன இன்ப அலைகள் நெஞ்சில் கிளம்புகிறது, இந்த அரசியல் லிளக்கம் கேட்கும்போது.
இதைவிட ‘வெற்றி’ வேறு என்ன காணமுடியும்?
இந்த இன்ப நாள் காணக் காங்கிரஸ் ஒழியவேண்டும், என்கிறார்—காங்கிரஸ் ஒழிந்த ஒரே வருடத்திலே, இந்த இன்பநிலை ஏற்படும் என்று கூறுகிறார்.
இதை எண்ணத்தில் பதிய வைத்துக் கொண்டான பிறகு, காங்கிரசை எதிர்க்காமலிருக்க முடிகிறதோ!! உன்னாலும் என்னாலும் முடியவில்லை!! காமராஜர் நல்லவர். ஆகவே, இப்போதைக்கு, காங்கிரஸ் ஒழிப்பு வேலையை நிறுத்திவைக்கலாம் என்று வாதிட முடிகிறது அவர்களால். நமக்கோ அந்த வாதம், மயக்கமளிக்கிறது.
காரணம் காட்டும்போது, கசடனே! நீ, பழங்காலப் பேச்சையே, புட்டுப்புட்டுக் காட்டிக்கொண்டு கிடக்கிறாயே, சரியாகுமா? நல்லவர் நம்மவர் என்று பெரியாரால் பரிவுடன் அழைக்கப்படும் பேறு பெற்றவர், காமராஜர், ஆட்சி புரியக்கண்டு உளம் மகிழ்ந்தோம், அவருடைய ஆட்சித் திறமையால் ஏற்பட்ட நன்மைகள் பலப்பல, மறுபடியும் அவர் ஆட்சி ஏற்படின் இன்னும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்திடும்—எனவேதான், இப்போது ‘புதிய போர்முறை’ வகுத்திருக்கிறோம்—நீ சுத்தக ‘கர்நாடகமாக’ இருக்கிறாயே, எப்போதோ அவர் சொன்ன அந்தப் பழைய விஷயத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறாயே, இப்போது புதிய நிலைமை, புதிய காரணம், எனவே புதியமுறை, இதனைப் புரிந்துகொள் என்று சிலர் கூறிடக் கேட்டிருப்பாய்.
காரணம் என்ன கூறப்பட்டாலும், கடமையிலிருந்து துளியும் தவறாதே! துரோகம் இழைக்காதே!—என்று பெரியார் எச்சரித்திருக்கிறார்—மிகுந்த கோபத்துடன், சாபமிடுவதுபோலப் பேசியிருக்கிறார்—அது என் நினைவிலே நின்று, வாட்டுகிறது, வதைக்கிறது, தவறி நடக்காதே என்று எச்சரிக்கை செய்கிறதே, நான் என்ன செய்யமுடியும்.
நாட்டுக்குத் துரோகம் திராவிட மக்களுக்குத் துரோகம்
தகப்பன், தாய்,பெண்டு பிள்ளைக்குச் செய்யும் தீங்கு
எது? காங்கிரசுக்கு யாராவது ஒரு ஓட்டு போடுவார்களானாலும் கூட, இத்தனை ‘பாபமும்’ பற்றிக் கொள்ளும் என்று பெரியார் கூறியிருக்கிறார்.
காரணம் கூறினால், போதாது என்கிறார்.
ஒரு ஓட்டுப்போட்டாலும் கெட்டுவிடும் காரியம்—துரோகிப் பட்டியலில் உன் பெயர் இடம்பெற்றுவிடும் என்கிறார்.
அவர் கூறும் அறிவுரை முழுவதையும், கேள், தம்பி, கேள்.
- “ஒவ்வொருவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரஸ் பெட்டியில் ஓட்டுப் போடாமல் பார்த்துக் கொள்ள- வேண்டியது நமது கடமை. இதை மறந்து யாராவது ஒரு ஓட்டுக்கூட போடுவார்களானால் அது இந்த நாட்டுக்குச் செய்த துரோகம் மாத்திரமல்ல. திராவிட மக்களுக்குச் செய்கிற துரோகம் மாத்திரமல்ல, ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தன் தகப்பன் தாய், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு”
இவ்வளவு கடுமையாக அவர் எச்சரித்திருக்கும்போது, காமராஜர் நல்லவர் என்று ஒரு காரணம் காட்டி, காங்கிரசை எதிர்க்காமலிருக்க வேண்டும் என்று எப்படித் தம்பி, நான் உனக்குக் கூறமுடியும்—நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?
நாட்டு மக்களிலே, பொதுநல நோக்கமற்றோர் சிலர், காங்கிரசைச் சுயநலம் கருதி ஆதரித்து மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படவழி செய்து விடுவார்களோ என்ற கவலை கலக்கும் நிலையில், பெரியார், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது நாட்டுக்கு எத்துணை பெரிய நாசம் என்பதை எடுத்துரைத்திருக்கிறார்—தம்பி—கேட்டால் நடுக்கம் பிறக்கும் உனக்கு—காங்கிரசாட்சியை எதிர்த்திட கல்லுருவும் உயிர்பெற்று எழத்துணியும் என்றுகூட, கற்பனை அலங்காரத்துடன் பேசுவாய்.
சித்திரவதை!—காங்கிரசாட்சி மீண்டும் ஏற்படுவது, மரணத்தினும் கொடியது என்றாலும், அவர் எம்மிடம் சிரித்துப் பேசுகிறார், ஆகவே, இந்தத் தடவை சித்திரவதையைச் சகித்துக் கொள்ளும்படி செந்தமிழ் நாட்டவருக்குக் கூறுவோம் வாரீர் என்று நாட்டு மக்களை அழைத்திட என்னால் எப்படித் தம்பி முடியும்! அவர்கள் அழைக்கிறார்கள்!
நான், முன்பு பெரியார் காங்கிரஸ் குறித்துச் சொன்னதை மறவாமலிருக்கின்றேன்—மாற மறுக்கிறேன்.
"காங்கிரஸ்காரர்கள் ஆளத் தகுதியற்றவர்கள்; அவர்களுக்கு நிர்வாகத் திறமையில்லை.
காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காந்தியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கதர் வேஷம் போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறவர்கள், ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு—மக்கள் அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு பதவி வேட்டை ஆடுகிறவர்கள், மக்களுடைய கருத்தை அலட்சியம் பண்ணிவிட்டுத் தங்களுடைய விருப்பப்படி அதிகாரம் செலுத்த ஆசைப்படும் எதேச்சாதிகார வெறியர்கள்”
அந்த வெறியர்களிலே வேண்டியவர்கள்—வேண்டாதவர்கள் என்று பாகுபாடு என்ன தேவைப்படுகிறது. பெரியாரின் ‘பாஷை’யில் கேட்கிறேன், எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
காமராஜர் நல்லவர், என்கிறார்கள்—எனக்குப் பெரியார் பேசும் அந்தப் பழமொழி நினைவிற்கு வருகிறது.
நேருவுக்கு வலது கரம், பார்ப்பனப் பாதுகாவலர், முதலாளிக்கு இரும்புத்தூண், அடிதடியாட்சிக் கர்த்தா, கொலைபாதக ஆட்சிக்கு உடந்தையானவர்.
இவை, காமராஜருக்கு விடுதலை சூட்டிய பட்டங்கள்.
முன்பு தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று காமராஜர் வெற்றி பெற்றார்—அப்போது அவர் தோற்க வேண்டும் என்பதற்காகப் பட்டபாடு வீணானது கண்டு, மனம் வெதும்பி “எப்படிப்பட்ட ‘ஆசாமி’ வெற்றி பெற்றுவிட்டார், ஐயோ! தமிழகமே! உன் கதி இதுவாகவா போகவேண்டும்” என்று கொதித்தெழுந்து கேட்டு, விடுதலை தீட்டிற்று. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை—அடிதடியாட்சிக்குக் காரணமாயிருந்த தலைவரை—எதிர்க்கட்சிக்காரகளைச் சுட்டுக்கொன்ற கொலைபாதக ஆட்சிக்குக் காரணமாயிருந்த கட்சித் தலைவரை தோற்கடித்து உலகப்புகழ்பெற வேண்டுமென்று கருதியிருந்த தமிழர்கள் ஏமாந்துவிட்டனர்.
“இராவணீயம் தோற்றுவிட்டது; விபீஷணத்துவம் வெற்றி பெற்றுவிட்டது.”
தம்பி! இப்போது இந்த விபீஷணத்துவ வெற்றியிலேதான் தமிழரின் நல்வாழ்வே இருக்கிறது என்று எடுத்துக் கூறுகிறார்கள் - நியாயந்தானா?
விபீஷணன், இராவணனாகி விடவுமில்லை; விபீஷணன் இராவணன் ஆகியோர்பற்றி கொண்டுள்ள கருத்தும் மாற்றிக் கொள்ளப்படவில்லை; ஆனால் திருவில்லிபுத்தூரில் வெற்றி பெற்ற காமராஜர், விபீஷணர்; இன்று அவர் தமிழர் தலைவர்! ஏன்? ஏன்?
திருவல்லிபுத்தூரில் வெற்றி பெறுவதற்காகக் காமராஜர் ஊரூர் சுற்றி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர் எப்படிப்பட்டவர் என்பதுபற்றி விடுதலையில் ‘விமர்சனம்’ வெளிவந்தது. அதையும் கொஞ்சம் பார்—அவர்களிலே பொறுமைசாலிகள் கிடைத்தால் பார்க்கச் சொல்லு;
நாடாரின் வாய்ப்புக் குறித்து கேட்டேன், இதற்கு ஒரு குடிமகன் கூறியதாவது—
காங்கிரஸ் தலைவர் காமராஜ நாடாருக்கு இங்கு செல்வாக்கில்லை. அவர் எங்கு சென்றாலும் யாரோ என்று மக்கள் அலட்சியமாகக் கருதுகினறனர்.
அவருக்கு அரசியல்பற்றி மூலாதார அறிவே கிடையாது.
“நாடாரால் அரசியல் சூழ்ச்சிகள்தான் நாம் தெரிந்துகொள்ள முடிந்தது. போதும் அச்சூழ்ச்சிகள்”
“முதலமைச்சராயிருந்த கண்ணியமான அரசியல்வாதியான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை மேற்படி பதவியிலிருந்து நீக்கியதற்கு நாடார்தான் பொறுப்பாளி. அவ்வாறு இருக்க, நாடாருக்கு ஏன் நாங்கள் எங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்”
“நாடாரைப் போன்ற சுயசாதிப் பித்தரைப் பார்க்க முடியாது. சுய சாதியிலும் தமக்கு வேண்டிய நண்பர்களுக்கே சலுகை காட்டுவார். எனவே நாடார்களிலே பெரும்பாலோர் அவருக்கு எதிராகவே இருப்பர்”இருக்கலாம்! திருவில்லிபுத்தூர் தேர்தலின்போது காமராஜரின் குணாதிசயம் அவ்விதம் இருந்திருக்கலாம் - பிறகு அவர், படிப்படியாக, மெல்ல மெல்ல, நல்லவராகி விட்டிருக்கக்கூடாதா, என்று கேட்கத் தோன்றும் தம்பி, அந்த ஆராய்ச்சியும் சிறிதளவு செய்தே பார்த்துவிடுவோமே, அதிலென்ன கஷ்டம்.
- “காமராசர் தோற்றார் என்ற செய்தியினால், இந்த மாகாணம் மட்டுமல்ல, இந்த நாடே எவ்வளவு கிடுகிடுத்துப் போயிருக்கும். நேருவுக்கு வலது கையாகவும், பார்ப்பனர்களுக்கு நீங்காத் துணையாகவும், முதலாளிகளுக்கு இரும்புத் தூணாகவும் இருக்கின்ற ஒருவரைத் தோற்கடிக்கக்கூடிய தலைசிறந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்களே! தோழர் தங்கமணிக்குப் பயந்துகொண்டு விருதுநகரை விட்டு ஓடி, சென்னை ராஜ்ய சட்டசபையையும்விட்டு ஓடி, பார்லிமென்ட் அபேட்சகராக நின்ற ஒரு காங்கிரஸ் தலைவரைத் தோற்கடிக்கக்கூடிய தங்கமான வாய்ப்பைப் பாழாக்கிவிட்டார்களே, படுமோசக்காரர்கள்”
என்று விடுதலையில் எழுதப்பட்டது; இதை எல்லாம் கண்டு காமராஜர் திருந்திவிட்டிருக்கக் கூடாதா என்று கேட்போர் எழக்கூடும் அல்லவா? அதையும் கவனிப்போம், தவறென்ன!
காவடி தூக்கினார்
கன்னத்தில் போட்டுக்கொண்டார்
காலில் வீழ்ந்தார்.
தோள்மீது சுமந்தார்
கோவை சுப்பிரமணியத்தை அடுத்துக் கெடுத்தார்!
இவ்வளவு, திடுக்கிடக் கூடிய கேடுகளை, இழிவு என்றும் பாராமல் செய்த ஆசாமி யார்? இப்படி ஒரு தமிழ்ப் பண்பு இழந்தவரை நாடு தாங்கிக்கொண்டிருக்கிறதா? தமிழ் மண்ணிலேயா தாசர் புத்தி தலைக்கேறிய ‘ஜென்மம்’ இருக்கிறது!—என்றெல்லாம் கேட்கத் தோன்றும். ஆசாமி யார், என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு, அரசியல் சம்பவம் என்ன என்பது பற்றி அறிந்துகொள்வோம்.
பொதுத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் இளைத்து, ஈளைகட்டி எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி என்ன செய்யுமோ என்று கிலிகொண்டிருந்தது.
அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு, காமராஜர்தான் கக்கன்.
காங்கிரஸ் குலைந்துவிடாது இருக்கவும், மந்திரிசபை அமைக்கவும், ஆச்சாரியாருடைய தயவு தேவைப்பட்டது.
ஆச்சாரியாருக்கும் தனக்கும் நீண்டகாலமாக இருந்துவரும் விரோதத்தை, இந்தச் சமயம் கவனித்தால், காரியம் கெட்டுவிடும் என்று கருதிய காமராஜர், காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரிசபை அமைத்து நடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி, ஆச்சாரியாரிடம் சென்று, “பயபக்தி விசுவாசத்துடன்” பணிந்து கேட்டார்.
அந்த “அடிமைப் புத்தியை”க் கண்டித்து, காரசாரமாக விடுதலை எழுதிற்று-அதுபோது கிடைத்த மணிமொழிகள்தான் முன்னாலே உள்ளன.“திருப்பரங்குன்றத்தில் தங்களைக் குப்புறத் தள்ளியதற்காகக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். திராவிடர்களாகிய எங்களில் யாருக்கும் தலைமைப்பதவிக்கான தகுதி கிடையாது. நாங்களெல்லோரும் அடி முட்டாள்கள். நெல்லிக்காய் மூட்டைகள் உதவாக்கரையான சுரைக்காய் குடுக்கைகள். தங்கள் திருப்பாதங்களைக் கண்ணில் ஒத்திக் கொள்கிறோம். தயவு கூர்ந்து கருணை புரியுங்கள். மீண்டும் பதவியேற்று எங்களுக்கு நல்லபுத்தி கற்பியுங்கள்”
என்று கூறுவதுபோல, அவர் வீட்டுக்கு நூறுதடவை காவடி தூக்கி மண்டியிட்டு வணங்கி, தோள்மீது சுமந்துவந்து தலைமைப் பீடத்தில் அமர்த்திவிட்டனர்.
தோழர் காமராசர் கோவை சுப்ரமணியத்திடம் கூடவே இருப்பது போல நடித்து, இறுதியில் அவரைக் கவிழ்த்து விட்டு, ஆச்சாரியாரிடம் அடைக்கலம் புகப்போகிறார் என்று ஒரு வாரத்துக்கு முன்பே பல முக்கிய நண்பர்கள் பேசிக் கொண்டனர். அது தவறு என்று கருதினோம். ஆனால் இன்று உண்மையாகிவிட்டது!!
எனவே, திருவில்லிப்புத்தூரில் எந்தக் காமராஜர் தெரிந்தாரோ அவரேதான், பிறகும் தெரிகிறார்—விடுதலையின் கண்ணோட்டத்தின்படி.
காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும் செல்வாக்கையும் காப்பாற்றுவதற்காக, சொந்தத்தில் இருந்துவந்த பகையையும் மறந்தது பெருந்தன்மையல்லவா! சொந்தத்தில் ‘மானாபிமானம்’ பார்த்துக்கொண்டு, கட்சி எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அவர் இருந்துவிடவில்லை, இதிலிருந்தே அவர் எவ்வளவு நேர்மையுணர்ச்சி கொண்டவர், கட்சிப்பற்றுக் கொண்டவர் என்பது தெரியவில்லையா?
காங்கிரசுக்குள்ளேயோ பிளவு இருக்கிறது—காமராஜ் காங்கிரஸ்—ராஜாஜி காங்கிரஸ் என்று கோஷ்டிச் சண்டை இருக்கிறது, கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும் இருக்கும்; இந்தச் சமயம்தான் அந்தக் கட்சியை ஒழித்துக்கட்ட ஏற்றது என்று காங்கிரஸ் விரோதிகள் எண்ணுவார்கள், இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது, நமக்கும் இராஜகோபால ஆச்சாரியாருக்கும் சொந்தத்தில் ஆயிரத்தெட்டு விரோதம் இருக்கலாம், அதற்காகக் காங்கிரசுக்குக் கேடுவர சம்மதிக்கக் கூடாது, இப்போது நாம் எப்படியாவது ஆச்சாரியார் துணையைப் பெறவேண்டும் என்று எண்ணிக் காரியமாற்றியது மிகத்திறமையான இராஜதந்திரமல்லவா?இவ்விதமெல்லாம் கூறவில்லை,
காவடி தூக்கினார்
காலடி வீழ்ந்தார்
கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
என்று சொன்னதுடன், கோவை சுப்ரமணியத்தை அடுத்துக் கெடுத்தார் என்றுதான் கூறப்பட்டது.
காங்கிரஸ் அமைச்சு நடைபெறுகிறது—பெரியார் போர்க்கொடி உயர்த்தினார், வடநாட்டுத் துணிக்கடை, உண்டிச் சாலைகளின் முன்பு மறியல் நடத்தினார். அப்போது, காமராஜர் என்ன செய்தார்?
ஆட்சியில் உள்ளவர்கள் உண்டு, பெரியார் உண்டு, நமக்கென்ன என்று இருந்தாரா? இல்லை!
இதென்ன மறியல்! நாங்கள் செய்த மறியல், மகத்தானது தூய்மையானது — அது சத்யாக்கிரகம் — இது துராக்கிரகம்—என்று கண்டித்தார்.
அடக்குவோம், ஒடுக்குவோம் என்று ஆர்ப்பரித்தார்.
ஆட்சியாளருக்கு இவர் ‘வக்காலத்து’ வாங்கிக்கொண்டு பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், அது அவருடைய கடமை அல்லவா, என்று கேட்பர்; ஆம்! ஆம்! கடமை! அதனைக் குறைகூற அல்ல இதுபோது கூறுவது, அந்தச் சமயத்தில் காமராஜர், நல்லவர்—நம்மவர் என்று கூறத்தக்க நிலையில் இல்லை என்பதை நினைவூட்டத்தான்.
காமராஜர் அத்துடன் விடவில்லை; மறியலுக்கு எதிர் மறியல் செய்யப்போவதாகக் கூறினார். எடுத்தனர் எழுதுகோல்-தொடுத்தனர் பாணம்—காமராசர் என்றோர் தலைப்பில் தலையங்கம் வெளி வந்தது விடுதலையில் — அதிலே, காமராசரின் படப்பிடிப்பு முதல்தரமாக அமைந்திருக்கிறது-காண்போம் தம்பி, காண்போம்.
எடுத்த எடுப்பிலேயே, விடுத்தகணை ‘விர்’ரென்று பாய்கிறது பார்த்தாயா தம்பி,
- அகம்பாவம்
ஆணவம்
அதிகார வெறி
- அகம்பாவம்
எனும் கொடிய குணங்கள் குடிகொண்டவராக, சர்வாதிகாரியாக இருக்கிறார், என்று, சவுக்கடி கொடுத்த விடுதலை, மேலும் எழுதுகிறது.
காமராஜர்மீது இந்தக் கடும் தாக்குதலை நடத்தினால் மட்டும் போதாது, இதில் ஒளிவு மறைவு என்ன, மக்களிடம் வெளிப்படையாகக் கூறிவிடவேண்டியதுதான், என்று தீர்மானித்து, காமராஜரின் முகமூடியைப் பிய்த்தெறிந்து, இந்த அவலட்சணத்தை நீங்களே பாருங்கள் என்று மக்களிடம் காட்டுவதுபோல, விடுதலை, மேலால் எழுதுகிறது;
தம்பி! நீயும் நானும் காங்கிரஸ் வரலாற்றிலே பெரும் பகுதியை, படித்துத் தெரிந்து கொண்டவர்கள்—பெரியார் அப்படி அல்ல; அவர் அந்தச் சம்பவங்களிலேயே தொடர்பு கொண்டிருந்தவர். காங்கிரசின் தலைவர்களின் கொடிவழிப்பட்டி அறிந்தவர்—யாரார் என்னென்ன யோக்யதை உள்ளவர் என்பதைத் தெரிந்தவர்—எவரெவர் எப்படி எப்படிக் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்தனர் என்ற ‘கதைகள்’ அவருக்குத் தெரியும்.
அவர் கூறுகிறார், இந்தக் காமராஜர், பார்ப்பனர்கள் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து சேர்த்தவர்களிலே ஒருவர் என்று.
மூன்றாந்தரம்!! என்பதைக் கூறிவிட்டு, சந்தேகமிருப்போர்,
கல்வி
பொதுஅறிவு
ஒழுக்கம்
அனுபவம்
நேர்மைதகுதி
திறமை
என்ற இவைகளைக் கவனித்துப் பார்த்து, இந்தக் காமராஜர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்—ஆண்டு ஆறுதான் உருண்டோடியுள்ளன, அந்த அரிய கருத்துரை நாட்டுக்கு அளிக்கப்பட்ட பிறகு.
பதவியும், அதிகாரிகளை மிரட்டி வளைய வைக்கும் வாய்ப்பும் இருந்தால், அகம்பாவம் ஏற்பட்டு, எப்படிப்பட்டவர்களையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் துணிவு கிளம்பும். இது காமராஜர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாகிவிட்டது என்பதையும், விடுதலை விளக்குகிறது.
- “காமராஜருடைய பதவி காரணமாக காமராஜருக்கு சில அதிகாரிகள் அடங்கி நடக்கவேண்டியதாகவும், காமராஜர் சிபார்சின் மேல் பதவி பெறவேண்டியவர்களாகவும், பல பெரும் தப்பிதங்கள் செய்து தப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கும்படியான நிலையில் இருப்பதால், காமராஜர், உண்மையிலேயேதான் ஏதோ, பெரிய பதவியில் இருக்கும் சர்வாதிகாரி என்பதாகக் கருதிக்கொண்டு அகம்பாவ வெறியில் இருக்கிறார்”
பெரியார் பொதுமக்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, இப்போதும் நாம் சிந்தித்துப் பார்க்கிறோம். தம்பி, காமராஜர்,
கல்வி
திறமை
பொது அறிவு
அனுபவம்
எனும் அருங்குணங்களின் பெட்டகம் என்று முடிவு கட்ட, மனம் இடம் தரவில்லை. பார்ப்பனர்களின் கையாள் என்ற பேச்சும், முதலாளிகளின் பாதுகாவலர் என்ற பேச்சும், பொருளற்றுப் போய் விட்டதாகத் தெரியவில்லை; அன்று போலவே இன்றும் காமராசர் திராவிட இன உணர்ச்சிக்கு மதிப்பளிக்க மறுக்கும் மகானுபவராக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது—இந்நிலையில், என்ன காரணத்துக்காக அவர் நல்லவர்—நம்மவர் என்று கொள்வது?
இராஜ ரத்தினம்
சுந்தர வடிவேலு
என்று பட்டியல் கொடுத்தால், ஆச்சாரியார் காலத்து
சபாநாயகம்
சிங்காரவேலு
தேவ சகாயம்
ஞானசம்பந்தம்
என்றும் அடுக்கிக் கொண்டே போகலாமே!!
எனவே, விபீஷணன் என்று திருவில்லிபுத்தூரின்போது காட்டப்பட்ட காமராஜர், அதே போக்கிலேதான் இருக்கிறார். நோக்கமும் வேறு ஆகிவிடவில்லை.
காங்கிரசோ, முன்பு இருந்ததைவிட, மக்களுக்கு, குறிப்பாக தென்னகத்து மக்களுக்குக் கேடு விளைவிக்கும் பாசீச அமைப்பாக மாறிக்கொண்டு வருகிறது.இதைக் கண்டும், தம்பி! நம்மீது உள்ள கோபத்தைக் காரணமாகக் கொண்டு, காமராஜரை ஆதரித்து, அதன் தொடர்பாகக் காங்கிரசை ஆதரித்து, மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படுத்தி விட்டால், ஏற்பட உடந்தையாக இருந்தால், நாட்டு நிலைமை எப்படி ஆகும்? தம்பி! நான் கூறினால், பொறி பறக்காது; முன்பு பெரியார் சொன்னதை ‘இரவலாக’க் கொண்டு உனக்கும், உன் மூலம், நாட்டுக்கும் தருகிறேன்.
அப்படிப்பட்ட ‘மிருக ஆட்சி’ ஏற்படக்கூடாது எச்சரிக்கையாக இருங்கள், காங்கிரஸ் கட்சியைப் பாசீச ஸ்தாபனமாக்கி விடாதீர்கள் என்று மக்களிடம் இந்தத் தேர்தலின்போது எடுத்துக் கூறுவோம், தம்பி. நம்மாலே, காங்கிரசின் கேடுபாடு குறித்தும், காமராசரின் திருக்கலியாணகுணம் பற்றியும், ஆணித்திறமாக எடுத்துக்கூற முடியாதபோது, காமராஜர் குறித்தும், காங்கிரஸ் பற்றியும், ‘விடுதலை’ நாட்டுக்குத் தந்துள்ள விளக்க உரைகளைத் தொகுத்து அளித்தாலே போதும், சூடும் சுவையும் நிரம்ப உண்டு.
குரங்குகைப் பூமாலைபோல, காங்கிரசு சர்க்கார் வரிப்பணம்போல.
யானை உண்ட முலாம் பழம்போல! காங்கிரசு நிதிக்குக் கொடுத்த பணம்போல!
பெருச்சாளி புகுந்த வீடுபோல! காங்கிரஸ் சர்க்கார் ஆண்ட நாடுபோல!
இப்படிப்பட்ட அரசியல் பழமொழிகள்—படப்பிடிப்புகள்—கண்டனங்கள்—விளக்கங்கள்—ஏராளம்—ஏராளம்!!
பேரகராதி நமக்குப் பெருந்துணை புரியும்!!
2–9–1956
அன்பன்,
அண்ணாதுரை