திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/130.நெஞ்சொடுபுலத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, காரணம் உண்டாயவழியும் புலக்கக்கருதாது புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகன் புலத்தலுமாம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1291 ( அவர்நெஞ்)

தொகு
(தலைமகன்கண் தவறு உண்டாயவழியும், புலவிகருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. )

அவர்நெஞ் சவர்க்காதற் கண்டு மெவனெஞ்சே ( ) அவர் நெஞ்சு அவர்குக ஆதல் கண்டும் எவன் நெஞ்சே

நீயெமக் காகா தது. (01) நீ எமக்கு ஆகாதது.

[தொடரமைப்பு: நெஞ்சே, அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், நீ எமக்கு ஆகாதது எவன்? ]

இதன்பொருள்
நெஞ்சே= நெஞ்சே;
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும்= அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய்நிற்றல் கண்டு வைத்தும்;
நீ எமக்கு ஆகாதது எவன்= நீ எமக்காய் நில்லாது அவரை நினைத்தற்காரணம் யாது, எ-று.
உரைவிளக்கம்
'அவர்க்காதல்'- அவர் கருதியதற்கு உடம்படுதல். 'எமக்கு ஆகாதது' என்றது, புலவிக்கு உடம்படாமையை. ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர், நீ அதுவும் செய்கின்றிலை என்பதாம்.

குறள் 1292 ( உறாஅதவர்க்)

தொகு
(இதுவுமது )

உறாஅதவர்க் கண்ட கண்ணு மவரைச் ( ) உறாஅதவர்க் கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் னெஞ்சு. (02) செறாஅர் எனச் சேறி என் நெஞ்சு.

[தொடரமைப்பு: என் நெஞ்சு, உறாஅதவர்க் கண்ட கண்ணும், செறாஅர் என அவரைச் சேறி.]

இதன்பொருள்
என் நெஞ்சு= என் நெஞ்சே;
உறாஅதவர்க் கண்ட கண்ணும்= மேலும் நாம்மாட்டு அன்புடையர் ஆகாதவரை உள்ளவாறு அறிந்தவிடத்தும்;
செறாஅர் எனச் அவரைச் சேறி= நாம் சென்றால் வெகுளார் என்பதுபற்றி நீ அவர் மாட்டுச் செல்லா நின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமை உண்டோ, எ-று
உரை விளக்கம்
அவரை என்பது, வேற்றுமை மயக்கம். பழங்கண்ணோட்டம் பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ, எ-று.

குறள் 1293 ( கெட்டார்க்கு )

தொகு
( இதுவுமது)

கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ ( ) கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ

பெட்டாங் கவர்பின் செலல். (03) பெட்டாங்கு அவர்பின் செலல்.

[தொடரமைப்பு: நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல், கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ.]

இதன்பொருள்
நெஞ்சே= நெஞ்சே;
நீ பெட்டாங்கு அவர்பின் செலல்= என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர் மாட்டுச் செல்லுதற்குக் காரணம்;
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ= கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ, நின்னியல்போ, கூறுவாயாக, எ-று.
உரை விளக்கம்
என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல், நீ பண்டே பயின்றது என்பாள் 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானம் இலள் ஆகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப்பொருட்டு, செலவு என்பது ஆகுபெயர். "ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தோடர்பு" ஆயிற்று (கலித்தொகை, பாலைக்கலி- 25.) நின்தொடர்பு என்பதாம்.

குறள் 1294 ( இனியன்ன)

தொகு
(இதுவுமது )

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே ( ) இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (04) துனி செய்து துவ்வாய்காண் மற்று.

[தொடரமைப்பு: நெஞ்சே, துனி செய்து மற்றுத் துவ்வாய்கா்ண், இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார்.]

இதன்பொருள்
நெஞ்சே= நெஞ்சே;
துனி செய்து மற்றுத் துவ்வாய்காண்= நீ அவரைக் கண்டபொழுதே இன்பம் நுகரக் கருதுவது அல்லது, அவர் தவறுநோக்கி முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்;
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார்= ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னோடு எ்ண்ணுவார் யார், யானது செய்யேன், எ-று.
உரை விளக்கம்
அப்பெற்றிப்பட்டன- புலக்கும்திறங்கள். 'காண்' என்பது, உரையசை. 'மற்று'- வினைமாற்றின்கண் வந்தது. முன் எல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.

குறள் 1295 ( பெறாஅமை)

தொகு
(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது. )

பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு () பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்

மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு. (05) அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு.

[தொடரமைப்பு: பெறாஅமை அஞ்சும், பெறின் பிரிவு அஞ்சும், என் நெஞ்சு அறாஅ இடும்பைத்து.]

இதன்பொருள்
பெறாமை அஞ்சும்= காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது;
பெறின் பிரிவு அஞ்சும்= பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது;
என்னெஞ்சு அறாஅ இடும்பைத்து= ஆகலான், என்னெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று, எ-று.
உரை விளக்கம்
காதலரைப் பெற்றுவைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான், வாயில் நேர்கின்றாள் ஆகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும், கலவியாராமையின் இன்னும் இவர் பிரிவராயின், யாது செய்தும் என்பது நிகழ்தலின் 'பெறிற் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டும் அல்லது பிறிதின்மையின் 'எஞ்ஞான்றும் அறாஅ இடும்பைத்து' என்றும் கூறினாள்.

குறள் 1296 ( தனியே)

தொகு
( இதுவுமது )

தனியே விருந்து நினைத்தக்கா லென்னைத் ( ) தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய விருந்ததென் னெஞ்சு. (06) தினிய இருந்தது என் நெஞ்சு.

[தொடரமைப்பு: என் நெஞ்சு இருந்தது, தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் தினிய.]

இதன்பொருள்
என்னெஞ்சு இருந்தது= என்னெஞ்சு ஈண்டு இருந்தது;
தனியே இருந்து நினைத்தக்கால்= காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்;
என்னைத் தினிய= அவ்வளவறிந்து என்னைத் தின்பதுபோன்று துன்பம் செய்தற்கே எ-று.
உரை விளக்கம்
எ்ம்மாட்டு இருந்தது அன்று, அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவைநோக்கி அவரொடு புலத்தற்கு அன்று என்பதாம்.

குறள் 1297 ( நாணுமறந்)

தொகு
( இதுவுமது )

நாணுமறந்தே னவர்மறக் கல்லாவென் ( ) நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்

மாணா மடநெஞ்சிற் பட்டு. (07) மாணா மட நெஞ்சிற் பட்டு.

[தொடரமைப்பு: அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு, நாணும் மறந்தேன்.]

இதன்பொருள்
அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு= தன்னைமறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமை இல்லாதமட நெஞ்சுடனே கூடி;
நாணும் மறந்தேன்= என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும், மறந்துவிட்டேன், எ-று.
உரை விளக்கம்
மாணாமை- ஒருநிலையின் நில்லாமை. மடமை- கண்டவழி நினைந்து, காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண்- எஞ்ஞான்றும் கூடி ஒழுகினும், அஞ்ஞான்று கண்டார்போன்று ஒடுங்குதல். கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன் என்றாள்.

குறள் 1298 (எள்ளினிளி)

தொகு
( இதுவுமது )

எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற ( ) எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி அவர் திறம்

முள்ளு முயிர்க்காத னெஞ்சு. (08) உள்ளும் உயி்ர்க் காதல் நெஞ்சு.

[தொடரமைப்பு: உயிர்க்காதல் நெஞ்சு, எள்ளின் இளிவாம் என்று எண்ணி, அவர் திறம் உள்ளும்.]

இதன்பொருள்
உயிர்க்காதல்நெஞ்சு= உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு;
எள்ளின் இளிவு ஆம் என்று எ்ண்ணி= நம்மை எள்ளிச்சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின், பின் நமக்கு இளிவாம் என்று கருதி;
அவர்திறம் உள்ளும்= அவர் திறத்தினையே நினையாநின்றது, எ-று.
உரை விளக்கம்
எள்ளுதல்- வாயின்மறுத்தல். இளிவு- வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும், நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம்- வாயில்நேர்தலும், வருதலும், கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும், இறந்துபட மாட்டாமையானும், கூடக் கருதாநின்றது என்பதாம்.

குறள் 1299 (துன்பத்திற் )

தொகு
( உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. )

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய ( ) துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய

னெஞ்சந் துணையல் வழி. (09) நெஞ்சம் துணை அல்வழி.

[தொடரமைப்பு: துன்பத்திற்கு, தாம் உடைய நெஞ்சம் துணை அல்வழி, துணையாவார் யாரே.]

இதன்பொருள்
துன்பத்திற்கு= ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு;
தாம் உடைய நெஞ்சம் துணையல்வழி= தாம் உரித்தாகப்பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி;
துணையாவார் யாரே= வேறுதுணையாவார் ஒருவரும் இல்லை, எ-று.
உரை விளக்கம்
ஈண்டுத் துன்பமாவது, ஊடல் உணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்று ஒழியாது கூடற்கண்ணே விதும்பல். ஒருதுணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது என்பதாம்.

குறள் 1300 (தஞ்சந் )

தொகு
( இதுவுமது )

தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய () தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய

நெஞ்சந் தமரல் வழி. (10) நெஞ்சம் தமர் அல்வழி.

[தொடரமைப்பு: தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி, ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்.]

இதன்பொருள்
தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி= தாம் உரித்தாகவுடைய நெஞ்சம், ஒருவர்க்குத் தமர் அல்லாவழி;
ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்= அயலார் தமர் அல்லராதல் சொல்லவேண்டுமோ, எ-று.
உரை விளக்கம்
பிறள் ஒருத்தியைக் காதலி என்று கருதி, என்நெஞ்சே என்னை வருத்தாநின்றபின், அப்பிறள் புலக்கின்றது எளிது என்பதாம்.