தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/அமெரிக்கா சென்ற தொழில் பிரமுகர்;

9. அமெரிக்கா சென்ற தொழில் பிரமுகர்
பொறியியல் மேதையாகத் திரும்பினார்!

தமிழ் நாட்டின் தொழில் பிரமுகர் என்று புகழ்பெற்றவர் ஜி.டி. நாயுடு. ஏற்கனவே, இரண்டு முறை உலகம் சுற்றும் வல்லுநராக வலம் வந்த அவர், தற்போது மூன்றாம் முறையாக உலகைச் சுற்றிடப் புறப்பட்டார் ஜி.டி. நாயுடு.

சிறுவனாக இருந்தபோதும் சரி, வாலிபனாக அவர் இருந்த போதும் சரி, ஊர் சுற்றிச் சுற்றிப் பழக்கப்பட்ட துரைசாமி, ஜி.டி.நாயுடுவாக மாறியபோது, உலகையே முருகப் பெருமான் மாங்கனிக்காகச் சுற்றி வந்த புராணக் கதை போல, நாயுடு அவர்கள் மூன்றாவது முறையாக, 1939-ஆம் ஆண்டில் மீண்டும் உலகை வலம் வரப் புறப்பட்டார்.

ஊரார் பணத்தில்
உலகைச் சுற்றாதவர்!

உலகை வலம் வந்தார் என்றால், ஏதோ ஊரார் பணத்தில் ஜி.டி. நாயுடு படாடோபமாகப் பவனி வந்தார் என்பதல்ல பொருள். தனது சொந்தப் பணத்தைச் செலவழித்துக் கொண்டு அறிவியல் அறிவைச் சேகரிக்க உலகைச் சுற்றி வந்தார்.

ஒரு முறைக்கு மும்முறை, அடுத்தடுத்து உலகைச் சுற்றுவதென்பது மிக மிகச் சாதாரண செயலல்ல. பணம் இருந்தால் கூட மன வலிமையும், உடல் வளமையும், அறிவு செறிவும் தேவை அல்லவா? மூன்றையும் ஒருங்கே பெற்றிருந்த தொழிற் பிரமுகரான ஜி.டி. நாயுடு அவர்கள் - முதன் முதலாக ஐரோப்பா சுற்றுப் பயணத்தைத் துவக்கிச் சென்றார். இங்கிலாந்து நாட்டின் எல்லையை அவர் தொடும்போது, இரண்டாவது உலகப் பெரும் போர் துவங்கிவிட்டது. செர்மன் நாஜிப் படைகள் போலந்து நாட்டுக்குள் கொள்ளையர்களைப் போல புகுந்துவிட்டன. இங்கிலாந்து நாடு தனது தொழில் வளத்தை நிறுத்திக் கொண்டு, போர்க் கருவிகளைச் செய்யத் தீவிரமானது.

அந்த நேரத்தில் ஜி.டி.நாயுடு இலண்டன் மாநகர் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கினார். சில தொழிற்சாலைகளுக்குள் புகுந்து, அங்கு செய்யப்படும் போர்த் துறை தளவாடக் கருவிகளைக் கண்டு வியந்தார்!

அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சென்றார்! இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க நேச நாடுகள் அணியைச் சார்ந்தது அல்லவா? அதனால், அவருக்குச் சுலபமாக அனுமதி கிடைத்தது அமெரிக்கா சென்றிட!

நியூயார்க் நகரில்
உலகக் கண் காட்சி!

1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அமெரிக்காவில் உலகக் கண்காட்சி நியூயார்க் என்ற நகரில் நடைபெற்றதால், ஜி.டி. நாயுடு அந்த கண்காட்சிக்குச் சென்றார்!

தினந்தோறும் உலகக் கண் காட்சிக்கு நாயுடு செல்வார். அவர் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், “நான் நாள்தோறும் தவறாமல் கண்காட்சிக்குப் போவேன். நான் தான் கண்காட்சியில் நுழையும் முதல் மனிதனும், முடிந்த பின்பு வெளிவரும் கடைசி மனிதனும் ஆனேன். நாள்தோறும் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டதும் காட்சி சாலைக்குள் போவேன். மாலை வரை எதையும் உண்ணமாட்டேன். ஒவ்வொரு இயந்திரமாகப் பார்த்துவிட்டு, வீடு திரும்புவேன்” என்று எழுதியுள்ளார். ஜி.டி. நாயுடு.

உலகக் கண் காட்சியை ஒவ்வொரு பிரிவாக 4 ஆயிரம் அடிகள் படம் எடுத்தேன். அந்தக் கண் காட்சியிலே ஒவ்வொரு இயந்திரமும் தொழில் அறிவு வளர்க்கும் துணையாக எனக்கு இருந்தது. நானும் ஒவ்வொரு இயந்திரத்தையும் பலமுறைப் பார்த்துப் பார்த்து. நுணுகி நுணுகி ஆராய்ந்து பார்ப்பேன். அதற்கான நேரமும் இருந்தது எனக்கு என்றும் தனது மற்றொரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சாலைகளில்
Level Cross-கள் இல்லை!

அமெரிக்க மக்கள் பழகும் பண்பும், பழக்க வழக்கங்களும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை வேறொரு நண்பருக்கு எழுதிய அஞ்சலில் கூறும்போது, "அமெரிக்கர்கள் அறிவிற் சிறந்தவர்கள். புகை வண்டி புறப்படும் நேரமும் - அது வந்து சேரும் நேரமும் எல்லார்க்கும் தெரிந்திருக்கின்றன. ஆதலால், இங்கே சாலைகளும், இருப்புப் பாதைகளும் சந்திக்கும் இடங்களில் போக்கு வரவைத் தடுக்கும் கதவுகள், Level Cross இல்லை. அமெரிக்கப் புகை வண்டிகளில் ஆயிரம் கல் தொலைவுகள் பயணம் செய்தாலும், ஆடைகளில் அழுக்கு ஒட்டுவதில்லை. அமெரிக்காவில் ஓடும் இரயில் வண்டிகள் மிகவும் அழகாகவும், தூய்மையாகவும் இருக்கின்றன” என்ற ஜி.டி. நாயுடு அவர்கள் கூறுகிறார்கள்.

நாற்பத்தேழாவது வயதிலும்
மாணவராகக் கற்றார்!

நியூயார்க் நகரில் நடைபெற்ற உலகக் கண்காட்சி, பொருட் காட்சி நடந்து முடிந்த பின்பு, மேலும் சில தொழிற்சாலைகளை அந்த நகரிலே சென்று ஜி.டி.நாயுடு பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து சிகாகோ நகர் சென்றார். அங்கும் சில அறிவியல் பயிற்சிக் கூடங் களைப் பார்வையிட்ட பின்னர், செயிண்ட் லூயி என்ற நகரத்திற்குச் சென்று நாயுடு தங்கினார்.

அந்த நகரில் தொழிலியல் சாலைகள் மட்டுமல்ல, தொழில் பயிற்சிப் பள்ளிகளும் இருப்பதை அறிந்ததால், அங்கே நிரந்தரமாக சில மாதங்கள் தங்கிட ஜி.டி. நாயுடு தக்க இட வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டார்.

செயிண்ட் லூயி என்ற நகரில், கார்ட்டர் கார்புரேட்டர் பள்ளி, Carter Carburator School என்ற ஒரு புகழ்பெற்ற கைத் தொழில் பயிற்சிப் பள்ளி இருந்தது. அதை அவர் பார்வையிட்டார்.

பிறகு, அதே பள்ளியில் ஜி.டி. நாயுடு கைத் தொழில் கற்கும் மாணவராக 1940-ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்றார். அப்போது என்ன வயது தெரியுமா அவருக்கு? நாற்பத்தேழு. இப்போது எவனாவது - ஏதாவது ஒரு பள்ளியில் 47 வயதில் மாணவனாகப் போய் சேருவானா? சேர்ந்தாரே நாயுடு!

அந்த பள்ளி நிருவாகம், ஒரு மாணவனுக்கு 200 டாலர் பணம் கொடுத்து கைத் தொழில் கல்வியைக் கற்பித்துக் கொண்டிருந்தது. அதில் 40 மாணவர்கள் தொழிற் கல்வி கற்று வந்தார்கள். 40க்கு மேலாடையாக நாயுடு அப் பள்ளியிலே, அதாவது 41-வது மாணவராகச் சேர்ந்துக் கற்றார் தொழிற் கல்வியை! அந்த பள்ளியில் கைத் தொழில் மாணவராகச் சேர்ந்த முதல் இந்திய மாணவர் ஜி.டி. நாயுடுதான்!

அந்தக் கைத் தொழிற் கல்விப் பள்ளியில் ஜி.டி.நாயுடு அவர்கள், ஓய்வு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் வேலை பார்ப்பார். அதற்காக வாரந்தோறும் 16 டாலர் பணத் தொகையை பள்ளி நிர்வாகம் நாயுடுவுக்குக் கொடுத்து வந்தது.

அமெரிக்காவிலும் உடை
வேட்டி சட்டைதான்!

செயிண்ட் லூயி நகர், குளிர் காலத்தில் தாங்கமுடியாத குளிர் நகராக இருக்கும் ஊர். அதாவது மைனஸ் 11 டிகிரியில் அமைந்துள்ள நகர். அந்தக் குளிர் தட்பத்தை ஐரோப்பிய மக்களாலேயே தாங்கிக் கொள்ளமுடியாது. ஆனால், நாயுடு வெப்பம் மிகுந்த நாட்டிலே இருந்து சென்றவராக இருந்தாலும், ஐரோப்பிய பேண்ட், ஷர்ட், ஹேட், பூட் போன்றவற்றை அணிந்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பாடுக்கு ஏற்பவே, 4 முழம் வேட்டி, சட்டை, மேல் துண்டோடே காலம் தள்ளினார். இதைக் கண்ட செயிண்ட் லூயி வெள்ளையர்கள் நாயுடுவின் எளிய தோற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

எந்த ஆடைகளை எப்படி அணிந்திருந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தோற்றத்தைக் கண்டு வியவாமல், எளிய தனது உடைகளோடு, கல்வியிலும் மிக மிகக் கவனமாகக் கற்று வந்தார். உணவு, உறையுள், உறக்கம் எதிலும் நாட்டமற்றவராய், அவற்றை அளவோடு ஏற்றுப் படித்து வந்தார் என்பதற்கு, இதோ இந்தக் கடிதமே ஒரு சான்று ஆகும்.

“ஒரு நாள் ஒரு வேலையை நான் காலை 9.00 மணிக்குத் துவக்கினேன். மறுநாள் பகல் 12 மணி வரையில், ஊண், உறக்கம் இல்லாமல், தண்ணி கூடப் பருகாமல் பணி செய்தேன்” என்று கோவை நண்பர் ஒருவருக்கு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.

நாற்பத்தேழு வயதில் நாயுடு தொழிற் கல்வியில் சேர்ந்திருந்தாலும், அதன் நிருவாகமும், ஆசிர்யர்களும் மற்ற மாணவர்களும் அவரை ஒரு மாணவராகவே எண்ணவில்லை. எல்லாரும் நாயுடுவிடம் அன்பாகப் பேசி, மரியாதையுடனும், மதிப்புடனும் நடந்து கொண்டார்கள் என்றால், என்ன காரணம் அதற்கு?

ஜி.டி.நாயுடு அவர்களது நெடிய உயரமும், நிமிர்ந்த நடை யும், சிவந்த உடல் தோற்றமும், எளிமையாக ஆடை அணிவதும், தெளிவான பேச்சும், நுண்மாண் நுழைபுல அறிவும், ஆய்வும். ஒழுக்கமான பழக்க வழக்கங்களும், கடமையைக் கண்ணாகவும், கல்வியே மூச்சாகவும் - பேச்சாகவும் - எதற்கும் அஞ்சா நேர் கொண்ட நெஞ்சுறுதியும் - அப் பள்ளியின் ஆசிரியர்களை, மாணவர்களைக் கவர்ந்து விட்டதுதான் காரணமாகும்.

நாயுடு ஏறாத உரை
மேடைகள் இல்லை!

பள்ளி சார்பாக நடைபெறும் கருத்தரங்கங்களில் நாயுடுவைக் கலந்து கொள்ள வைப்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள் அவர் ஓர் இந்திய மாணவன் என்ற தகுதியில் அவரைப் பேட்டி கண்டு ஏடுகளில் செய்திகளை வெளியிடுவார்கள்.

பொது இடங்கள், கூட்டங்கள், தொழிற் கருத்தரங்குகள், சமையக் கூட்டங்கள், ஆன்மிக மன்றங்கள், சமுதாய சீர்த்திருத்தங் கள், சமத்துவ நோக்கங்கள், மனித உரிமைகள், வெள்ளை - கருப்பு இன கலை நிகழ்ச்சிகள், கலை, இலக்கிய விழாக்கள், அறிவியல் ஆய்வுப் பொழிவுகள், தொழிலியல் புதுமைகள் போன்ற நிகழ்ச்சி களில் விரிவாகவே நாயுடுவைப் பேச வைப்பார்கள் - செயிண்ட் லூயி மக்களும் - பள்ளி நிருவாகமும்.

பள்ளியில் கல்வி கற்கும் பிற மாணவர்கள், ஜி.டி. நாயுடு அவர்களைவிட வயதில் குறைவானவர்களே. அதனால் அந்த மாணவ - மணிகளுக்குத் தக்க அறிவுரைகளை வழங்கும் நோக்கத்தில் அவரது பேச்சுக்கள் அமையும்.

எடுத்துக்காட்டாக, “ஏமாறாதே, பிறரை ஏமாற்றாதே! மற்றவர்கள் பொருட்கள் மேல் பற்றாடாதே! உன் பொருளையும் இழந்து விடாதே சாராயம் போன்ற மது வகைகளை ஏறெடுத்தும் பார்க்காதே! உனக்குள்ள உடற் சக்தியை வீணாக்காதே; உடலை வளமாக, நலமாகக் காப்பாற்றிக் கொள்; ஏழ்மையை இகழாதே; பணக்காரரை புகழ்ந்து அடிமையாகாதே ஒழுக்கமாக இரு, இயற்கை அழகுடன் இரு என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் தனது பேச்சில் உலாவ விடுவார் ஜி.டி. நாயுடு.

அமெரிக்கப் பெண்களுக்கு
நாயுடு கூறிய அறிவுரை

ஒரு முறை ஜி.டி. நாயுடுவை மாதர் சங்கத்தில் உரையாற்ற அழைத்தார்கள், அங்கே அவர் பேசும்போது, பெண்களே! மயிர் அலங்காரத்தில் நேரத்தை வீணாக்காதீர், ஆடம்பர ஆடைகளுக்குப் பணத்தை விரயமாக்காதீர்; முகத்திற்கு பவுடர் வகைகளைப் பூசாதீர்; வாசனைப் பொருட்களால் உடலை மணக்க வைக்க முயற்சிக்காதீர், இயற்கை அழகே உங்களுக்கு இயற்கையாக இருந்தால் போதும்; உதடுகளைச் சாயம் பூசி கெடுக்காதீர்; ஒழுக்கமும், உண்மையும்தான் உங்களை முன்னேற்றும் கருவிகள் என்று அமைதியாகவும் - அன்பாகவும், அவர் கூறியதைக் கேட்ட மாதர் சங்கத்து மங்கையர், தங்கள் பூ போன்ற கைகளால் எழுப்பிய ஒலிகளில் ஒசை எழவில்லை; நசைதான் நாட்டியமாடியது.

அமெரிக்க - இங்கர்சாலும்;
தமிழ்நாட்டு அண்ணாவும்!

தமிழ் நாட்டில் எந்தச் சொற்பொழிவுகளை ஆற்றிட எவரை அழைத்தாலும், அறிவுக்குக் கூலி வழங்கும் வழக்கம் உண்டு. அவர்கள் அரசியல்வாதிகளானாலும் சரி, ஆன்மிகவாதிகளானாலும் சரி, ஆசிரியன்மார்களானாலும் சரி, அறிஞர் அணிகளானாலும் சரி, எவரை அழைத்தாலும் அவர்களது உரை தரம், திறம்கட்கு ஏற்ப போக்கு வரத்து செலவு என்ற பெயரில் கூட்டம் நடத்துவோரது அறிவுக் கரம் நீளும் - குறையும்.

ஆனால், அமெரிக்காவிலே அறிஞர்கள் பேசும் அரங்கங்களில் உரை கேட்க வருவோர் கட்டணம் கொடுத்து கூட்டம் கேட்கும் பழக்கமும் இருந்தது.

அறிவாற்றல் மிக்கவர்களது 'நா' நய உரைகளுக்குக் கட்டணம் கொடுத்துப் பேசுவோரை அழைக்கும் கட்டாயத்தை, அமெரிக்க நாட்டில் இராபர்ட் க்ரீன் இங்கர்சால் என்ற நாவலன் தான் உடைத்தெறிந்தான்!

சிரம் பழுத்த அறிஞர்களின் பொழிவுகளைக் கேட்க வரும் அறிவு வேட்கையாளரிடம் - சுவைஞர்களிடம் காசு வசூலிக்கும் காலத்தை உருவாக்கியவர் நாவுக்கரசன் இங்கர்சால்.

அதாவது, பணம் கொடுத்து - அறிஞனை, உரைளுனை அழைக்கும் நாகரிகத்தை மாற்றி, பேசும் அறிஞரின் பேச்சை, உரைஞனுடைய உணர்ச்சிகளை, நாவலர்களின் 'நா' நயத்தை, 'நா' நடன எழில்கள் தவழும் நாவாடல் வகைகளைக் காசு கொடுத்துக் கேட்கும் தகுதி இருந்தால் வா - அரங்கத்துக்குள்ளே என்ற - அறிவு நாகரிகத்தை நிலை நாட்டியவர் அமெரிக்க நாட்டின் 'நா' வேந்தன் இங்கர்சால்.

அதே ‘நா’ பரதமாடும் சொல் ஆட்சிகளை, 'நா' நடன எழிற் காட்சிகளை, அவரது நா பாடும் இராகமாலிகா நய ஓசை தென்றல் சுகங்களை, ‘நா’ உதிர்க்கும் மாணிக்க மதிப்புள்ள வாசக மாண்புரைகள், செம்மொழி ஆட்சியின் அடுக்கல்களை, உவமை அணிகளை, அலங்காரத் தமிழ் அழகுகளை வரலாறா? இலக்கியமா? மேல் நாட்டார் கண்டு நம்மை மேம்படுத்தும் புதுமைகளா? அனைத்தையும் அவாவோடு கேட்க - வாருங்கள், பணம் கொடுத்துக் கேளுங்கள் என்று; தமிழ்நாட்டில் முதன் முதல் அழைத்தவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவின் அற்புத உரைகளை அறிவாளிகள் செவிமடுக்கச் சாரி சாரியாக வந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோகலே மன்றத்துக்கும், செய்யிண்ட் மேரிஸ் மண்டபத்துக்கும், திருச்சி தேவர் அரங்கத்துக்கும், தஞ்சை, மதுரை நகர்களிலே உள்ள அரங்கங்களுக்கும் வந்தார்கள்!

இந்த நாவரங்க அறிவு நாகரிகத்தை இங்கர்சால் போல தமிழ் நாட்டில், ஏன், இந்தியாவிலேயே முதன் முதல் உருவாக்கிப் பழக்கப்படுத்திய திருநாவுக்கரசராக விளங்கியவர் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்தான் அவருக்கு முன்பு மேடை கட்டணம் போட்டு பேசிய மேதை எவருமே தமிழ் நாட்டில் இலர்!

திரு. நாயுடுவின் ‘நா’ அறமா!
‘நா’ கொடை , மடமா?

மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் போலவே, அறிவியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு அவர்கள், அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் இந்திய வேதாந்த கேசரி என்று புகழ்பெற்ற நாவலர் பெருமான் விவேகானந்தரைப் போல, அமெரிக்க நாட்டு இங்கர்சால் போல, தமிழ் நாட்டு நாவரசர் அறிஞர் அண்ணாவைப் போலவே, சிகாகோ நகருக்கடுத்த செயிண்ட் லூயி நகரில், வேதாந்தம், சமையம் சமுதாயம், சமத்துவம், மாதர் சங்கம், ஆன்மிக மன்றம், தொழிலியல் அரங்கம், அறிவியல் மன்றங்கள் ஆகிய மன்றங்களில் தனது ஓய்வு நேரங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்குரிய கட்டணங்களை சுவைஞர்களிடம் பெற்றார் என்று எண்ணும்போது - நமது அறிவெலாம், சிந்தையெலாம் பூரிக்கின்றது அட டா வோ... என்று!

அதனால்தான், ஜி.டி. நாயுடு அவர்கள் தாம் பேசிய ஒவ்வொரு அறிவாற்றல் உரைகளுக்கும் “மன்றம் நடத்துவோரிடம் நான் கட்டணம் வாங்க மாட்டேன்” என்று மறுத்துவிட்டார். இது எத்தகைய ‘நா’வறக் கொடை பார்த்தீர்களா? ‘நா’ வறம் என்பதை விட, ‘நா’ கொடை மடம் எனலாம் அல்லவா?

செயிண்ட் லூயி பள்ளியில் நாயுடு கற்ற படிப்பின் காலம் முடிந்தது. ஜி.டி. நாயுடு அப் பள்ளி நிர்வாகத்துக்கும், பேராசிரியர்களுக்கும் தனது அன்பிற்கு அடையாளமாக, நன்றி உணர்ச்சியுடன் தமிழில் ஓர் அழகான வாழ்த்து மடலை வாசித்துக் கொடுத்தார் - பிரிவு உபசார விழாவன்று. இந்த வாழ்த்து மடல் கருத்துக்களை அமெரிக்கப் பத்திரிக்கைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டன.

செயிண்ட் லூயி நகரை விட்டு டேவன் போர்ட் Devan Port என்ற நகருக்கு ஜி.டி.நாயுடு சென்றார். அந் நகரிலே இருந்த Film Projector Factory என்ற திரைப் படச் சுருள் திட்டத் தொழிற் சாலைக்குச் சென்று பார்த்தார். அங்கேயும், அதே தொழிற்சாலை மாணவனாக பத்து நாட்கள் தங்கி திரைப் படச் சுருள் விவரங்களைக் கற்றறிந்தார்.

திரைப்படச் சுருள்
மாணவரானார்!

அமெரிக்காவில் இருக்கும் வரை அவரால் தனது நண்பர்களுக்குரிய கடிதங்களை எழுத முடியவில்லை. அதனால் ஊதியத்துக்கு ஊழியரை அமர்த்திக் கடிதங்களை எழுதி வந்தார். அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற விஞ்ஞானிகளை, தொழிலியல் மேதைகளை பொறியியல் வித்தகர்களை, தொழில் நிறுவன முதலாளிகளை, வணிகர் பெருமக்களில் புகழ்பெற்ற நிபுணர்களை நேரிலேயே சந்தித்து அவரவர் தொழில்களின் அடிப்படை வளர்ச்சிகளைப் பற்றி அறிந்து உணர்ந்தார் ஜி.டி. நாயுடு.

இயந்திரங்களை வாங்கி
தமிழ்நாட்டுக்கு அனுப்பினார்!

அமெரிக்காவில் தங்கியிருந்தக் காலத்தில் எந்தெந்த இயந்திரங்கள் தனது தொழிலுக்குத் தேவை என்று ஜி.டி. நாயுடு உணர்ந்தாரோ, அவற்றை எல்லாம் ஏறக்குறைய பத்தாயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்குரிய பண அளவின் விலைக்கு வாங்கி கோவை நகரில் உள்ள தனது யு.எம்.எஸ். மோட்டார் நிறுவனத் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தார்.

இறுதியாக ஜி.டி. நாயுடு அவர்கள், தனது மூன்றாவது உலகம் சுற்றும் பயணத்தை முடித்துக் கொண்டு 1940-ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில், ஜப்பான், சீனா வழியாக இந்தியா புறப்பட்டு, கோவை மா நகரைச் சேர்ந்தார்.

தமிழ் நாட்டிலே இருந்து ஒரு சாதாரண தொழில் பிரமுகராக உலகம் சுற்றச் சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள், அமெரிக்காவில் பயிற்சி பெற்ற பொறியியல் வல்லுநராகி அறிவியல் மேதையாக கொச்சி துறைமுகம் வழியாக தமிழ்நாடு வந்தார்!