பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

நலனும் மனவளமும் பல்வகைத் திறனும் எனக்குப் பாங்குடன் நல்கிய அப்பெருமான் தான் பைந்தமிழ்க் காதலனாக இருந்தும் என்னை நன்முறையில் தமிழ்ப்பணி புரியவொட்டாது தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கும் நிலையை எண்ணி ஆழ்வார் நாயகி நிலையை எய்தி யானும் அவனோடு ஊடாமல் என் செய்வது? அடிக்கடி அவன் என் மனக்கண் முன்வந்து நிற்கின்றான். “காதில் கடிப்பு (குண்டலம்) இட்டுவர வேண்டுகையாலும் அரையில் க லி ங் க ம் உடுத்துக்கொண்டு வரவேண்டுகையாலும் நல்ல தண்ணந்துழாய் அணிந்துகொண்டு வரவேண்டுகையா லும் இவற்றுக்குத் தாமதமாயிற்றேயன்றி உன்னையொழிய மற்றொ ருத்தியிடத்தே போயிருந்தேனாய்த் தாமதித்து வந்தேனல்லேன்” என்று குசிப்பிக்கின்றான். நாயகி நிலையில் 'இதுவென்? இதுவென்? இதுவென்? என்று சொல்லத் தோன்றுகின்றது. அதாவது “[இதுவென்?] வெறுங்காதே அநுபவிக்கலாம்படிப் பரமபோக்கியமாயிருக்கக் காதிலே கடிப்பு இடுவானேன்? [இதுவென்?] ‘பூணித்தொழுவினிற்’ புக்குப் புழுதியளைந்த பொன் மேனியைக் காணப் பெரிதும் உகப்பார் நாங்களிருக்கக் கலிங்கம் உடுத்து அத்திருமேனியை மறைப்பானேன்? [இதுவென்?] ‘சர்வ கந்த:’ என்கிறபடியே திருமேனிதானே பரிமளம் பொருந்தியிருக்கத் திருத்துழாய் பரிமளம் ஏறிடுவானேன்? இருந்தபடியே உகக்கிற எங்களுக்காக அலங்கரித்து வரவேண்டுமா?” என்று சொல்லத் தோன்றுகின்றது. "[எதுக்கு இது?] கொடும் பசி வேளையிற் கிடையாத சோறு ஏதுக்கு? உம்மழகை நீரே கண்டுகொண்டு உம்முடம்பையும் நீரே தொட்டுக்கொண்டு நீரே மோந்துகொண்டு நீரே கட்டிக்கொண்டு நீரே மகிழ்ந்திரும்; எங்களுக்கேதுக்கு: வேண்டா வேண்டா” என்று கதவடைக்கத் தோன்றுகின்றது.


எது எப்படியாயினும் அவன்தானே மாதா பிதா குரு தெய்வம் எல்லாம்.

          அரிசினத்தால் ஈன்றதாய்
               அகற்றிடினும் மற்றுஅவள்தன்
          அருள்நினைந்தே அழுங்குழவி;
              அதுவேபோன்று இருந்தேனே.³

3.பெருமாள் திருமொழி 5:1