பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழியிற் கூட்ட மரபுகள் 143


வகைப்படும் என்று கூறுவர். இறையனார் களவியலுரையாசிரியர்.' குறிப்பாவது, தோழி தலைமகனை நோக்கி, 'எம் அன்னை தலைமகளது வேறுபாடு கண்டு, இஃது இவட்கு எதனால் வந்தது என்று ஆராய்வாளாயினள்' எனப் பொய் பெய்தல் கூறுதல் போல்வது. இதனால் தலைவியைத் தம் அன்னை இற்செறிக்கக் கூடும் எனவும், இதற்கு முன்பு வரைந்து கொள்ளலே சால்புடைத்து எனவும் குறிப்பாகத் தோழி வரைவு கடாவுவாள். இற்செறிப்பு என்பது, தலைவனைச் சந்திக்க இடமின்றிப் பெற்றோர் தலைவியை அவள் வயது முதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துகையாகும்.

ஈவிளை யாட நறவிளை

வோர்ந்தெமர் மால்பியற்றும்

வேய்விளை யாடும்வெற் பாவுற்று

நோக்கியெம் மெல்லியலைப்

போய்விளை யாடலென் றாள் அன்னை

அம்பலத் தான்புரத்தில்

தீவிளையாடநின் றேவிளை

யாடி திருமலைக்கே’’’

(ஈ- தேனீக்கள், நறவிளைவு - தேனினது விளைவை: மால்பு - கண்ணேணி; உற்றுநோக்கி - குறித்துநோக்கி)

என்று விளக்குவர். தேனீக்கள் பறந்து விளையாடுவதைக் கொண்டே தேனினது விளைவை ஓர்ந்தறியும் எம்முடைய தமரைப் போலவே, எம்முடைய அன்னையும் எம் தலைவியை உற்று நோக்கி (அவள் உடல் வேறுபாட்டினைக் கண்டு) இனி திருமலைக்கண் புறம்போய் விளையாடற்க என்றாள்' என்று தோழி தலைவியின் இச்செறிப்பைக் குறிப்பாற் புலப்படுத்துவதைக் காண்க.

   இனி வெளிப்பட வரைவு கடாதல் என்பது என்ன என்பதைக் காண்போம். தோழி தலைவனிடம் அவர்கள் களவொழுக்கம் ஊராரால்   அறியப்பெற்று, முதலில் அம்பலாக முளைத்துப் பின் அலராக வளர்ந்தது என்று கூறி இனி வரைந்து கொள்வதில் காலம் தாழ்த்தல் கூடாது என்று வெளிப்படையாகவே கூறுவாள்.
_____________________________

  127. இறை.கள. 18 இன்உரை.
  128. திருக்கோவை - 133