பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர்ந்த பெரும் பழனையிலிருக்கும் நல்லையப் புலவர் மகன் பொன்னையன் நெடுந்தொகை’ எனக் காணப்பட்ட குறிப்பும், இதனைப் பேணிக்காத்த தென்பாண்டித் தமிழரின் தமிழன்பைக் காட்டுவதாகும். அதன்கண் காணப்பெற்ற ‘கொல்லம் 460’ என்னும் குறிப்பு, அந்த ஏட்டுப் பிரதி படி செய்யப்பெற்ற காலத்தையே இற்றைக்கு ஏழு நூற்றாண்டுகட்கும் முற்பட்ட தென்று காட்டி, இந்நூலின் பழைமையை வலியுறுத்தும்.

அகநானூற்றின் முதற்பகுதியாக இக் களிற்றியானை நிரை அமைந்து விளங்குகின்றது. இது 1 முதல் 120 முடியவுள்ள செய்யுட்களின் தொகையாகும். மும்மதக் களிறுகள் நிரையாகச் செம்மாந்து செல்லும் செவ்விபோலச் சொற்கள் செம்மாப்புடன் செறிந்து, பொருள் நிறைவோடு முறையாக அமைந்த செய்யுட்கள் இவை என்றும் கூறலாம்.

நயமிக மலிந்த இச் செய்யுட்களைப் பாடிய சான்றோரினைப் பற்றியும், அவர்களாற் பாடப்பெற்ற தலைவர்களைப் பற்றியும், பிற்சேர்க்கையாக விளங்கும் பகுதிகளிற் சில செய்திகள் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. அதனைக் காணின், மேலும் எண்ணிறந்த நயங்கள் மலிந்தன. இந்நூல் என்னும் பெருமித வுணர்வு, ஆழ்ந்து கற்றும், எண்ணித் திளைத்தும், சிந்தித்து மகிழ்ந்தும் இன்புறும் தமிழன்பர்களுக்கு எல்லாம் தமிழூற்றாகச் சுரந்து பெருகி, அவர்களை மென்மேலும் ஆழ்ந்து கற்கத் தூண்டிக் களிப்பிலும், அறிவு நுட்பத்திலும் ஆழ்த்தும் எனலாம். செய்யுட்களின் மேலோட்டமான கருத்துவளத்தைத் தொட்டுக் காட்டிச் சென்று, அதன்மூலம், அகநானூற்றை ஆழ்ந்து நுட்பமாகக் கற்று மகிழ்வதற்கான ஆர்வத்தை எழுப்புதல் வேண்டும் என்பதே, இந்தத் தெளிவுரை அமைப்பின் நோக்கமாகும். அந்த அளவிலேயே, கருத்தைத் தெளிவுபடுத்தும் அளவில் இத் தெளிவுரை அமைந்து செல்கின்றது.

இந் நெடுந்தொகை என்னும் அகநானூற்றை, முற்றவும் தேடியெடுத்து ஆராய்ந்து, செம்மையாக வெளியிட்ட தமிழ்ப் பெரும்பணியினாலே, என்றும் தமிழன்பரின் உளங்களில் நிலைபெற்ற புகழைத் தமதாக்கிக் கொண்டுள்ளவர், கம்பர் விலாசம் திருமிகு இராஜகோபால அய்யங்கார் அவர்களாவர். இந்நூல் முழுவதற்கும் நல்லுரை அமைத்து அடுத்து வழங்கியவர்கள், கரந்தைக் கவியரசு எனப் பெரும் புகழ்பெற்றுள்ள பெரியார் திரு. ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும், நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் ஆவர்.

சங்க இலக்கியச் செய்யுட்களை எல்லாம் புலவர்களின் வரிசையாக ஒழுங்குபடுத்தி, அவர்களின் புலமைச் சிறப்பைப் புரிந்து போற்றுவதற்கேற்ற வகையிலே பேராசிரியர் திரு.